கிட்காட்-11

IMG-20210429-WA0013-38339587

கிட்காட்-11

கிட்காட்-11

“பியூட்டி, டீ” என்றபடி வந்தமர்ந்தான் சித்தார்த். கூடவே ரமணாவும். பேக்டரியை லீஸிற்கு எடுக்க எல்லா வேலைகளும் ஆரம்பித்திருந்தது.

“என்னப்பா வேலை ஜாஸ்தியா?” தாத்தா கேட்க, “கொஞ்சம் தாத்தா” என்றான்
சித்தார்த். அலுப்பாக இருந்தபோதும் அவனது புன்னகை மாறவில்லை.

டீ ட்ரேவுடன் வந்த சொர்ணாம்பாள், “கொஞ்சம் வெளில உட்காரலாம் வாங்க. நல்லா இருக்கும்” என்று அவர் அழைக்க நால்வரும் வெளியே வந்தனர்.

தாத்தாவும் பேரனும் ஊஞ்சலில் அமர பாட்டியும் ரமணாவும் அங்கிருந்த மர
நாற்காலியில் அமர்ந்தனர். பக்கத்தில் சலசலப்பாக சத்தம் கேட்க, “இதோ அங்க
ஒருத்தி ஆரம்பிச்சுட்டா” என்றான் சித்தார்த் சிரிப்பும் கடுப்புமாக.

“அந்தப் பொண்ணு விளையாடுது. வேணும்னா நீயும் போய் விளையாடு” என்று தாத்தா சொல்ல, “தாத்தா வரவர எனக்கு சப்போர்ட் கம்மி ஆகுது. அப்புறம்”
என்றிழுத்தவன் தட்டிலிருந்த பட்டர் பிஸ்கட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு நக்கலாகச் சிரிக்க,

“என்ன அப்புறம். என்ன ரகசியம் இரண்டு பேருக்குள்ள” சொர்ணாம்பாள் வினவ,
“சும்மா பசங்க கதை கட்டுவாங்க” என்று தாத்தா சாமளிக்க நேராக வந்த ஒரு
கிரிக்கெட் பந்து சித்தார்த்தின் மூக்கின் நுனியை உரசிக்கொண்டு சென்று அந்தப் புல் தரையில் விழுந்தது.

“இவளை!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சென்று பந்தை எடுத்த சித்தார்த் திரும்ப, “பந்தைக் குடு” என்று காம்பவுண்ட் சுவற்றிற்கு அந்தப்பக்கம் நின்றபடி சித்தாரா கேட்க, “தரமுடியாது” என்றான்.

“சித்து அண்ணா, ப்ளீஸ்” என்று வாண்டுகள் கத்த அவனோ அசையவில்லை. தாத்தா பாட்டி சொல்லியும் அவன் கேட்காது போக சித்தாரா அவனை முறைத்துவிட்டு நகர்ந்தாள். “ஏன்பா ஏன் வம்பு இழுத்துட்டே இருக்கிற குட்டியை” என்று தாத்தா வினவ,

“எது குட்டியா. ஆமா, சரியான குரங்கு குட்டி அவ. அவளுக்கு எல்லாம் சப்போர்ட்
பண்ணாதீங்க தாத்தா. போய் கடைக்கு டிசைன் பண்ணி அனுப்ப சொல்லுங்க”
என்று சித்தார்த் சொல்ல, “அதெல்லாம் முடிச்சு மெயில் அனுப்பி. உன் அப்பன்
ஓகேவும் பண்ணிட்டான்” என்று அவர் ஆரம்பிக்க,

“போதும் போதும் உங்க பெருமை” என்றவன் முறுக்கிக்கொண்டு பாட்டியின்
அருகிலுள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். கோபமாம் தாத்தாவின்
மேல்.

“அக்கா என்னோட கிரிக்கெட் பால் வேணும்க்கா” என்றான் சிறுவன் க்ரிஷ். “டேய்! அவன் தர மாட்டிறான்டா. நான் என்ன பண்ண” என்று தன் பெருவிரலால் மற்ற விரல்களில் சொடக்கிட்டபடி அவள் சொல்ல,

“அக்கா அவ்வளவு தானா உங்க பவர்” என்று க்ரிஷ் கேட்க, “நீங்க இருக்கிறதுக்கு
அந்த அண்ணாவை மிரட்டியே வாங்கிஇருக்கணும்” என்று இன்னொருவன்
தூண்ட… சித்தாரா அந்தக் குட்டி ராஜாக்கள் தூண்டிவிட்டதில் பொங்கி எழுந்தாள். அவள் மனதில் அடுத்தடுத்து யோசனை வந்து ‘ப்ளான்’ ரெடியானது.

இரண்டு சிறு வாண்டுகளை அனுப்பிவிட்டு ஒன்பது வயதான க்ரிஷ் மற்றும் சுதனுடன் அந்த சண்டிராணி மரத்தின் அடியில் உட்கார்ந்து திட்டத்தை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

“இங்க பாருங்க க்ரிஷ், சுதன். நம்ம பாட்டி தாத்தாகிட்ட பேசற மாதிரி தான்
போறோம் சரியா. இங்க எங்க வீட்டுல ரோஸ் மில்க் ரெடி பண்ணி கொண்டு
போய் எல்லாருக்கும் தரலாம். சித்தார்த்துக்கு தரப்போறதுல இந்த டேப்லெட் கலக்கறோம்” என்று கையில் வைத்திருந்த இரண்டு மாத்திரையை அவள் காண்பிக்க,

“அக்கா புருஷனையே கொல்லப் போறீயா?” சுதன் வாயைப் பிளந்தபடிக் கேட்க,

“ச்சீ… இது பேதி மாத்திரைடா” என்றாள். “சூப்பர் க்கா… அப்புறம்” என்று க்ரிஷ்
குஷியாகி ஆர்வமாகக் கேட்க,

“அவன் எப்போமே வந்து அவன் ரூம்ல ஒரு சேர்ல உட்கார்ந்து தான் லேப்டாப்
பார்க்கிறான். அந்த சேர்ல வார்னிஷ் தடவிடலாம். அவன் உட்காந்து ஐந்து
நிமிசம் கழிச்சு ரோஸ்மில்க் நீங்க கொண்டு போய் தாங்க. அப்புறம் எந்திரிக்க முடியாது. எப்படி பாத்ரூம் போறான்னு பாக்கறேன்” என்று சித்தாரா கருவ,

“அக்கா! அப்படியே பாத்ரூம்ல சோப் தண்ணி ஊத்திடலாம்” என்று சுதன் சொல்ல,

“டேய் வேணாம்டா. அவசரத்துல போய் விழுந்த வேகத்துல அங்கையே
வந்துடுச்சுன்னா” என்று க்ரிஷ் எதிர்ப்பு தெரிவிக்க,

“ச்சீ! ச்சீ! கருமம். வாயை க்ளோஸ் பண்ணுங்கடா” என்றவள் உள்ளே சென்று
ரோஸ் மில்கை தயார் செய்ய ஆரம்பித்தாள்.

சித்தார்த் எப்போதும் ஆறு மணிக்கு பேக்டரி வரை மீண்டும் சென்று வருவான்.
வரும்போதும் ஏழு ஏழரை ஆகிவிடும். அந்த சமயம் பார்த்து ரோஸ்மில்க்
பாட்டிலுடன் சென்றவள் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“பாட்டி ரோஸ் மில்க் குடிக்கறீங்களா. நானே பண்ணேன்” என்று கேட்க, “குடு
குடிச்சுதான் பாப்போம்” என்று பருகியவர் அவளை பாராட்டிவிட்டு கணவருக்கும் தர அன்று சித்தாராவின் காட்டில் புகழ்ச்சி மழைதான்.

ஒரு 6:50 போல பாட்டி பாத்ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன் என்று சென்றவள் தனது நைட் ட்ரெஸின் பாக்கெட்டில் வைத்திருந்த வார்னிஷ் குட்டி டப்பாவை எடுத்தாள். அதை மரநாற்காலியின் உட்காரும் இடத்திலும் முதுகை சாய்க்கும் இடத்திலும் கொட்டி ப்ரஷில் பரப்பிவிட்டவள், அங்கு சித்தார்த் வைத்திருந்த ரூம் ஸ்பரேயையும் அதன் மேல் அடித்து, அதன் நெடி போக ஜன்னல் அனைத்தையும் திறந்துவிட்டாள்.

அவள் அனைத்தையும் முடித்துக்கொண்டு வர சரியாக சித்தார்த்தும் ரமணாவும்
உள்ளே நுழைத்தனர். “ஹாய்” என்று ரமணா சொல்ல, “ஹாய் ப்ரோ” என்றாள்
பதிலுக்கு. சித்தார்த் அவளைப் பார்த்து ஒரு நக்கல் பார்வையை வீசிவிட்டு நகர,
“உனக்கு இருக்குடா” என்று உள்ளுக்குள் கருவினாள்.

“சுதன் போ. போய் குடுத்துட்டு வா” என்று இரண்டு க்ளாஸை எடுத்து வைத்தவள்
இரண்டிலும் ரோஸ் மில்க்கை ஊற்றிவிட்டு ஒன்றில் மாத்திரையை போட்டு நன்றாக கலந்து அனுப்பினாள்.

சுதன் ட்ரேவுடன் உள்ளே செல்ல க்ரிஷும் அவளும் உள்ளே எட்டிப் பார்க்க இருவரும் அதிர, முன்னே சென்று கொண்டிருந்த சுதனும் அதிர்ந்தான். காரணம் ரமணா வார்னிஷ் தடவிய நாற்காலியில் அமர்ந்திருந்தான். அதுவும் நாற்காலியில்
முதுகை சாய்க்கும் பக்கம் திரும்பி தாடைக்கு கையைக் குடுத்து அமர்ந்திருந்தான்.

“அச்சச்சோ அக்கா” என்று க்ரிஷ் இருகையை உதறியபடி ஆரம்பிக்க, “ஷ்” என்றாள் வாயில் விரலை வைத்தபடி. அவளிற்கு ரோஸ் மில்க்கையாவது சித்தார்த் குடிக்க வேண்டும் என்றிருந்தது. கடவுளோ சித்தார்த்திற்கு நல்ல நேரத்தை விதித்து ரமணாவிற்கு அப்போது கெட்ட நேரத்தை விதித்திருந்தார்.

சுதன் கொஞ்சம் நடுங்கியபடியே சித்தார்த் அருகில் செல்ல, “டேய் இங்க வா” என்றழைத்த ரமணா சரியாக தவறான டம்ளரை எடுத்து ஒரே மூச்சில் ரோஸ் மில்க்கை குடித்து முடிக்க, சுதனோ பேயறைந்தார் போல வாயைப் பிளந்து
நின்றான்.

“ஏன்டா இப்படி பாக்கறே?” ரமணா வினவ, “ஒண்ணுமில்ல அண்ணா” என்று
சமாளித்தவன் திரும்ப,

“என்ன… சித்தார்த் அண்ணாவுக்குத் தரமா போறே?” என்று ரமணா வினவ அவனோ பயத்தில திருதிருவென்று விழித்தான்.

“அண்ணா…” என்றவன் பயத்தில் முகத்தில் பல்வேறு பாவனைகள் தர சித்தார்த்தோ தற்செயலாக அவனருகில் வர, வெளியே நின்றிருந்த சித்தாராவையும் க்ரிஷையும் பார்த்துவிட்டான்.

“அண்ணா! நான் இல்லை அக்காதான் பேதி மாத்திரை கலந்தாங்க” என்றுவிட்டு
சுதன் ஓட க்ரிஷும் அவனுடன் ஓடிவிட்டான்.

“என்னது பேதி மாத்திரையா?” என்று ரமணா அவசரமாக எழ அவனுடன் சேரும்
சேர்ந்து எழுந்தது.

உட்கார்ந்திருந்த இடம் சாய்ந்திருந்த இடம் என அனைத்தும் ஒட்டிவிட்டது. சித்தாரா ரமணா அலறியதில் அருகில் வந்து, “ப்ரோ ஒண்ணும் பிரச்சனை இல்ல
ரிலாக்ஸ்” என்று சொல்ல,

“எது ஒண்ணுமில்லையா. சீக்கிரம் எடுத்துவிடுங்க” என்றான் அவனோ.

மொத்தமாக சித்தார்த் அவனை இழுக்கப் பார்க்க, “மச்சா… வேற ஏதாவது
பண்ணுடா… இப்படி வேணாம்” என்று அவன் கெஞ்ச, “ஏன்டா?” என்றான் சித்தார்த்.

“இப்படி புடிச்சு இழுத்து தக்காளி சாஸ் வந்திடபோதுடா” என்று அவன் பதற, அதற்குள் அந்த அறையின் கதவு காற்று அடித்ததில் மூடியது. வெளியே சாவியோடு சித்தார்த் வைத்திருக்க அந்த அறை ஆட்டோமேடிக் லாக் ஆனது.

ஒரு ப்ளேடை சித்தார்த் எடுத்துவர, “என்னடா பண்ணப் போறே?” ரமணா அலற, “முன்னாடி ட்ரெஸை கிழிச்சுதான் ஆகணும். உன்னோட லிவிஸ் சர்ட் அன்ட்
பாண்ட் ஓகையா” என்று சொன்ன சித்தார்த், “ஏய் திரும்பி நில்லு” என்று சித்தாராவிடம் சொல்ல அவளோ சிரிப்பை அடக்கியபடி திரும்பி நின்றாள்.

முதலில் சட்டையை முன்னால் சித்தார்த் கிழிக்க, “மச்சா! சீக்கிரம் கிழிடா வயிறு
வேற கலக்குது” என்று அவன் ஒரு பக்க இடுப்பில் கையை வைத்துக்கொண்டு
சொல்ல சித்தார்த்திற்கே சிரிப்பு வந்தது.

“அதுக்குள்ள வயிறு கலக்கிடுச்சா” என்று சித்தாரா திரும்பிய நிலையிலேயே,
திடீரென்று குரலை ஆர்வத்தில் உயர்த்தி கேட்க,

“ஆமா! நீ மறுபடியும் இப்படி திடீர் திடீர்னு பேசுனா,,, எனக்கு பயத்துலயே வந்திடும் போல… கொஞ்சம் சும்மா நில்லுமா” என்று காய்ந்தான் ரமணா.

“இருடா டக்குன்னு பண்ணிடறேன்” என்று சித்தார்த் சொல்ல, “மச்சா அவசரத்துல
எதாச்சும் கண்ட பக்கம் ப்ளேடை வச்சிடாதேடா” என்றான் அந்த அவசரத்திலும்.

சித்தார்த் கவனமாக அவனது பாண்ட்டை கிழிக்க பாதி முடிந்தவுடன் அவசரம்
தாளாமல், “மச்சா முடியலடா” என்று வாயை இறுக மூடி, ‘உப்ப்ப்ப்’ என்று அவன் மூச்சைவிட,

“ஏன்டா! டெலிவரிக்கு வந்த மாதிரி பண்ற” என்று சித்தார்த் கடிய, “டேய் நின்னு
பாருடா தெரியும்… டெலிவரியா விட மோசமான நிலைமையா இருக்கு… அங்கயாவது வெளிய வரலைன்னா பிரச்சனை… ஆனா, இங்க…” என்றவனுக்கு மூச்சுதான் வாங்கி ஊட்டி குளிரிலும் லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

திரும்பி நின்றிருந்த சித்தாராவிற்கு ஓடும் சத்தம் கேட்டு இறுதியில் பாத்ரூம் கதவை படாரென அடைக்கும் சத்தமும் கேட்டது. சிரித்தபடி அவள் திரும்ப அவள் அருகில் நின்றிருந்தான் சித்தார்த்.

அவன் அருகில் வந்ததும் அன்றுபோலவே பின்னால் நகர்ந்தவள் தைரியமாக
அவனை முறைத்தாள். “என்ன எனக்கு போட்ட ப்ளானா இது?” என்று சித்தார்த்
கேட்க,

“ரொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சுட்ட போல” என்றவள் நகரப் பார்க்க அவளின்
முழங்கையை பிடித்து இழுத்தவன் அவளைக் கூர்ந்து பார்க்க… கடவுள் வரைந்து வைத்த அந்த புருவமும் கவிதையாய் அவன் இயற்றிய அந்த திராட்சைக் கண்களும் அவனை முறைக்க சித்தார்த்தோ புன்னகைத்தான்.

“பரவாயில்லடி. சைட் அடிக்கிற அளவுக்காவது வொர்த்தா தான் இருக்க நீ” என்று அவன் பேச அதற்கு அவள் பதில் பேசும் முன்,

“வெயிய வந்தேன்னா பச்ச பச்சையா கேப்பேன்டா உன்ன” என்று உள்ளிருந்து
ரமணா குரல்தர சித்தாராவோ சிரித்தாள்.

“எப்படிடா இருக்கு நிலவரம்” சித்தார்த் வினவ, “ஒரே கலவரமா இருக்குடா” என்று
பதில் வந்தது ரமணாவிடம் இருந்து.

சித்தாரா அதற்கும் சிரிக்க அவளின் சிறிய பூவிழையும் அதன் மேல் இருந்த சிறிய மச்சத்தையும் கண்டவனுக்கு எண்ணங்கள் தடம் புரண்டது. இறுதியில் அவளது கன்னத்தைப் பார்த்தவன், உப்பலாகவும் இல்லாமல் ஒடுங்கியும் இல்லாமல் இருந்த குட்டி பன்னைப் பார்த்தவனுக்கு அதில் கவிதை எழுதத் தோன்ற ‘இச்’ என்ற சத்தத்தோடு அழுத்தமாக அவள் கன்னத்தில் இதழைப் பதித்துவிட்டான்.

கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவள் பேயறைந்தது போல நிற்க, “மச்சா என்னடாடா….. சத்தம்” என்று உள்ளிருந்து தனக்கு கேட்ட சத்தம் உண்மைதானா என்று ரமணா இழுத்து வினவ, “நானும் அதே கேள்வியா கேக்கட்டா” என்று சித்தார்த் வினவ ரமணாவோ அடுத்து கேள்வியை கேட்கவில்லை.

சித்தாராவோ அவனை முறைக்க கதவை வெளியே யாரோ திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் பிரிந்து நின்றனர். அவனை முறைத்துக்கொண்டு அவள் செல்ல குப்பிட்டோ(cupid), ‘இதுக்கு இப்படினா அடுத்து நடக்கப் போறதுக்கு என்ன
பண்ணப்போறையோ’ என்று சிரித்தது.

“நாளைக்கு மார்னிங் பீ ரெடி. நான் சொன்னதை எல்லாம் எடுத்து வச்சுக்கங்க” என்று வாட்ஸ் அப்பில் அன்று இரவு குறுஞ்செய்தி அனுப்பியவன் மனம் லேசாக இருக்க பெட்டில் விழுந்தான் ஹெட்செட்டுடன். கார்த்திக் நேத்தா தன் வரிகள் என்னும் நதியை… கோவிந்த் வசந்த் இசையின் கடலுடன் இணைக்க, சின்மயின் குரலில் அழகான சங்கமமாய் அந்தப் பாடல் ஒலித்தது.

‘கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ணம் பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி
காதலே காதலே
தனிப்பெரும் துணையே
கூட வா கூட வா
போதும் போதும்
காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ…’
மெய்சிலிர்க்கும் இசையிலும் குரலிலும் நனைந்தவன்… இசையின் பொன்மடியில்
கண்கள் அயர்ந்தான்.

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கே கோவை படை எல்லோரும் வந்துவிட, தனது வுட்லேண்ட் ஹைக்கிங் ஷூவின் லேசைக் கட்டிய சித்தார்த் எழுந்து தனது
ட்ரெக்கிங் பேக்கை எடுத்து மாட்டினான். அவர்கள் படையே வெளியில் வர சித்தாராவும் வந்தாள்… தனது ட்ராக் சூட் மற்றும் டி சர்ட் அணிந்து அதன் மேல்
ஒரு ஹாஃப் ஹூட்டிஸை அணிந்துகொண்டு.

இடைவரை இருந்த கூந்தலை ஹேர் பன் போட்டிருந்தவள் அவனைக் கண்டு கொள்ளாமல் மற்றவருடன் கலந்துகொள்ள சித்தார்த்திற்கோ மனது, ‘அவாய்ட் பண்றாங்களாமா’ என்று கேலித்தது.

வெண்பஞ்சுகளாக மேகங்கள் வானில் மிதக்க வானின் நீலம் சிறுவன் ஓவியம்
வரையும் போது தீட்டும் நீலத்திற்கே போட்டிபோட்டு இதத்தை அளிக்க மலையின் ராணியோ வானவனின் பார்வையில் வெட்கம் கொண்டாள். பனி என்னும் குழந்தை பச்சை இலைகளின் மார்பில் தூங்க இயற்கையோ கண் சிமிட்டிக் கொண்டிருந்தாள்.

மந்திர வாசனையும் குளிரின் மென்மையும் அனைவரையும் தீண்ட போகும் வழியெல்லாம் கண்கொள்ளாக் காட்சியாக நிரம்பி வழிய, மஞ்சள் முகத்தான் அள்ளித் தந்த கதிரொளியில் அனைவரும் சென்றனர்.

சிறிதுதூரம் நடக்க, “சித்தார்த் முடியலடா” என்றாள் வர்ஷின். அனைவரும் அதையே சொல்ல எல்லோரும் ஒரு இடத்தில் அமர்ந்தனர். சித்தார்த் மணியைப் பார்க்க 2.00 ஆகியிருந்தது. இயற்கையை ரசித்துக்கொண்டு வந்ததில் அவனிற்கு
நேரம் போனதே தெரியவில்லை.

“பேசாம சாப்பிடலாம்” என்றவன், “ரமணா, உன் பேக்ல சப்பாத்திரோல் பாட்டி
வச்சதை எடு” என்று சொல்ல சப்பாத்தி ரோல் வைத்திருந்ததை எடுத்துப் பிரித்தான் ரமணா. அனைவருக்கும் மூன்று மூன்றை பாட்டி வைத்து தந்திருக்க
அனைவரும் உண்டனர்.

“தண்ணி இருக்கா?” என்று வர்ஷினி வினவ, தன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்த சித்தாரா அவளிற்கு பாஸ் பண்ணினாள். எல்லோரும் குடித்தது போக சித்தாரா மீண்டும் தண்ணீர் பாட்டிலை வாங்கவர, ‘குறுக்க இந்த கௌசிக் வந்தா’ என்பதுபோல புகுந்த சித்தார்த் தண்ணீர் பாட்டிலை வாங்கி அனைத்தையும் குடித்து முடித்தான்.

சித்தார்த் தவிர அனைவரும் எழுந்து ஓடையில் கை கழுவச்செல்ல, சித்தாரா
அப்போதுதான் தனது மூன்றாவது சப்பாத்தியை எடுத்தாள். பாட்டி முழுதாகப்
போட்ட ஒரே ஒரு பச்சைமிளகாயும் அவளுக்கு கடைசி வாயில் சிக்கிவிட, “ஆ…
ஹுப்ப்ப்” என்று உதட்டை குவித்து காரம் தாங்காமல், அவள் வாயின் முன் கையை விசிற சித்தார்த்தோ தண்ணீர் பாட்டிலைத் தேடினான்.

அதற்குள் சித்தாராவும் வாயை இறுக மூடி கண்களை மூடி கட்டுப்படுத்த
சித்தார்த்திற்கும் தண்ணீர் பாட்டில் கிடைக்கவில்லை. “ஓய். நான் வேணா சம்திங் சம்திங் படத்துல வர மாதிரி உன்னோட காரம் போறதுக்கு ட்ரீட்மெண்ட் தரட்டா” என்று அவன் குறும்பான பார்வையில் வினவ,

“நீ ஆணியே புடுங்க வேணாம்” என்றவள் ஓடையை நோக்கிப் போனாள். எல்லோரும் ஓடையின் அழகை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, தன் பாட்டிலை எடுத்துக் கொண்டு போனவள், அங்கிருந்து மலையில் வழிந்துகொண்டிருந்த நீரைப் பிடித்துக் குடித்தாள்.

“சீக்கிரம் கிளம்புங்க. ஐந்து மணிக்குள்ள அங்க இருக்கணும் நாம. இல்லைனா
இருட்டிரும்” என்றான் அவன்.

ஒருவழியாக மலையின் உச்சிக்கு வந்தவர்கள் சுற்றிலும் கண்களை ஓட்ட, எங்கும் பச்சை விரிப்பாக பனியின் மூட்டமும் அலையலையாக இருந்து அழகின் பரிமாணமாக இருந்தது.

சித்தார்த்தும் ரமணாவும் டோம் வடிவ ஐந்து டென்ட்டுகளை அமைக்க ஆரம்பித்தனர். இவர்கள் அமைப்பதைக் கண்ட நவீனும் கிஷோரும் அவர்கள்
செய்வதைப் போல அமைக்க தொடங்க, அருண் சில சுள்ளிகளை எடுத்துவரச் சென்றான். முதலில் க்ரௌன்ட் ட்ராப்பை ரமணா தரையில் விரிக்க அடுத்து டென்ட்டின் பாடியை அதன்மேல் சித்தார்த் விரித்தான். அடுத்து டென்ட் போல்ஸை எடுத்து சித்தார்த் டென்ட்டின் பாடியுடன் இணைத்து போல்களை வளைக்க அது கூடாரமாக நின்றது. அடுத்து அதன் மேல் ரெயின் ஃப்ளையை கூடாரத்தின் மேல் முழுதாகப் போட்டவன், ஸ்டேக்ஸை எடுத்து ஒவ்வொரு மூலையிலும் சொருகி வேலையை முடித்தான். பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, ஆரஞ்ச் என ஐந்து வண்ணங்களில் டென்ட் இருக்க அடுத்து அருண் எடுத்து வந்த சுள்ளிகளை வைத்து தீயை மூட்ட அதை தயாராக வைத்துவிட்டு நிமிர்ந்த சித்தார்த் சித்தாரா தொலைவில் நிற்பதைக் கண்டான்.

எல்லோரும் இங்கு ஃபோட்டோஸ் செல்பி என்று எடுத்துக் கொண்டிருக்க மலையின் உச்சிக்கு வந்த சித்தாராவோ அதன் அழகில் மயங்கி மலைத்திருந்தாள். இயற்கையின் அழகு ஏகமாக பரவிக்கிடக்க அந்த பரந்த வெளியின் எழில் கொஞ்சும் அழகில் அவளது மனம் சொக்கி நின்றது. அவளது ஹாஃப் ஹூட்டிஸை அவள் கழற்றி கையில் வைத்திருக்க, பஞ்சமில்லாமல் வீசிய
காற்றும் பனியும் அவளைத் தீண்டி அவளது உடையையும் தீண்ட… அவளது க்ராப் டி-ச்ர்ட்டோ காற்றில் ஆடி அவளது மெல்லிய இடையை தாரளமாகத் தழுவி, பின்னே வந்துகொண்டிருந்த சித்தார்த்திற்கு எந்தத் தடாவும் போடாமல்
வாரிவழங்கிக் கொண்டிருந்தது அவளது வனப்பை.

“என்ன பாத்துட்டு இருக்க தாரா?” என்று சித்தார்த் அவள் பின் நின்று கேட்க, “இந்த
மாதிரி ஒரு ப்ளேஸ் ஊட்டில இருக்கிறதே இப்பதான் பாக்கறேன்” இயற்கையின்
அழகோடு ஒன்றியவள் தன்னை மறந்து அவனிற்கு பதில் அளித்தாள்.

“பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்க, “ம்ம்” என்றாள்.

“இந்த ப்ளேஸ் எப்படி உனக்குத் தெரியும்” என்று அவள் இயற்கையின் மேல் வைத்த கண்ணை அகற்றாமல் கேட்க அவள் பின்னாலே நின்றிருந்தவன், “டூரிஸ்ட்
கைட் கூட வந்திருக்கேன்” என்றான் அவள் மேல் வைத்த கண்ணை எடுக்காமல்.

“இங்கையே இருந்திடலாமா?” சித்தார்த் வினவ சுயநினைவிற்கு வந்தவள், அவனைத் திரும்பிப் பார்க்க அவனோ மந்தகாசப் புன்னகையை உதிர்த்தான்.

முன்னே திரும்பியவளின் டி-ச்ர்ட்டோ காற்றில் லேசாக பறக்க சித்தார்த்தின்
மனமும் பறந்தது. அவனது பார்வை சென்ற இடம் புரிந்து டி-சர்ட்டை பிடித்தவள், “சரியான…” என்று ஆரம்பித்தவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“ம்ம்… ம்ம்… கம்மான்” என்று சித்தார்த் வேண்டுமென்றே நக்கலடிக்க, “போடா”
என்றுவிட்டு அவள் அவனைக் கடக்க அவளின் பின்னேயே இவனும் நடந்தான்.

முன்னால் சென்றவளை பின்னால் வந்த சித்தார்த் சைட் அடித்துக்கொண்டே வர,
முன்னால் சென்றவளுக்கு அவனின் பார்வையை உணரமுடிந்தது. அது சென்று மீண்ட இடங்களையும் உணர முடிந்தது. ப்ரேக்போட்டு நின்றவள், “நீ முன்னாடி போ” என்றாள் அவனைப் பார்த்து.

“இனிமேல் க்ராப் டாப் என் முன்னால போடாத. ரொம்ப டிஸ்ட்ராக்ட் பண்ணுது”
என்று அவன் கூலாக சொல்லிவிட்டு முன் செல்ல, ‘பன்னாடை, பரதேசி. கண்ணும்
முழியும்’ என்று மனதிற்குள் வசை பாடியவள் தனது ஹாஃப் ஹூட்டிஸை
அணிந்தாள் முதல் வேலையாக.

நேரம் ஆகஆக நிலவுப் பெண் மேலே எழுந்து அந்த கும்மிருட்டின் தாக்கத்தைப்
போக்க தன்னால் முடிந்த அளவு வெளிச்சத்தை அவர்களுக்கு தந்து கொண்டிருந்தாள். தண்ணீரை சூடு செய்து எல்லோரும் அவரவர் கப் நூடுல்ஸை உண்ண, சித்தார்த் சுள்ளிகளை பற்ற வைக்க அதன் முன் குளிருக்கு இதமாக அமர்ந்தனர்.

“ஷல் வீ ப்ளே எ கேம்” என்று வர்ஷினி ஆரம்பிக்க, “எஸ்! எஸ்” என்றனர் அனைவரும்.

தண்ணீரை பாட்டிலை நடுவில் வைத்த வர்ஷினி “பாட்டில் யாரு பக்கம் நிக்குதோ.
அவங்க பாட்டு பாடணும்” என்று சுற்றிவிட அது சொல்லி வைத்தது போல
சித்தாராவின் முன் நின்றது.

“ஹோ!” என்று கூச்சலோடு அனைவரும் “பாடு சித்தாரா” என்றனர். “நோ. எனக்கு
ஷையா இருக்கு வேணாம்” என்று சித்தாரா சொல்ல யாரும் அவளை விடவில்லை.

ஒருவழியாக அவள் சம்மதித்து கண்களை மூடி பாட ஆரம்பித்தாள்.

‘புது வெள்ளை மழை இங்கு
பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல்
நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக்
குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
புது வெள்ளை மழை இங்கு
பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக்
குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
நதியே… நீயானால் கரை நானே
சிறுபறவை… நீயானால் உன் வானம்
நானே…’

என்று இசைப்புயலின் இசையில் சுஜாதா பாடிய வரிகளை மயிலிறகான தன்
குரலில் சித்தாரா பாட, மலைமகள் அவளது குரலில் லயித்திருக்க, அங்கிருந்த அனைவரும் அதில் கரைந்திருக்க, சித்தார்த்திற்கோ அவளது குரல் சுவசமாய் அவனது ஜீவனோடு கலந்தது. பாடலை முடித்துவிட்டு அவள் கண்களைத் திறக்க சித்தார்த்தைத் தான் அவள் முதலில் பார்த்தது.

இரு புருவத்தையும் தன்னையறியாமல் தூக்கி அவனிடம் அவள் விருப்பம் கேட்க, அவனோ கண்களாலேயே ஒற்றை புருவத்தைத் தூக்கி அவளை மெச்சினான். ஏனோ அவனிடமிருந்து வாங்கிய ஒற்றை மெச்சுதல் அவளின் உயிர்வரை சென்று அவளை குளிர்வித்தது. அதன் தாக்கத்தை தன் முகத்தில் காட்டாமல் அவள் உதட்டை கடித்து கட்டுப்படுத்த, சித்தார்த்தோ அவளின் சிறிய இதழ் அவளின் முத்துப் பற்களால் சிக்கியதற்கு உள்ளுக்குள் உருகினான்.

எல்லா விளையாட்டுகளும் முடிய ஜோடிகள் எல்லாம் தங்களது டென்ட்டுக்குள் நுழைய, “மச்சா நீ வா. நம்ம ஒரு டென்ட்டுக்குள்ள போவோம்” என்றான் ரமணா சித்தார்த்தின் கையை இழுத்தபடி.

“என்னது?” சித்தார்த் அதிர,

“எரியுது, வயிறு எரியுது. எல்லாம் நான் சொன்ன ஐடியா வச்சு கமிட் ஆகி கல்யாணம் பண்ணவங்க. இப்பப் பாரு. என்னை மாதிரி மொரட்டு சிங்கிளை
வச்சிட்டு ஈவ்னிங் வந்ததுல இருந்து கண்ணுல பேசறது காதுல பேசறது மூக்குல பேசறது எல்லாம் பண்ணி, இந்த கன்னிப் பையன் மனசை புண்படுத்திட்டாங்கடா” என்றான் வராத கண்ணீரை வர வைத்து.

சிரித்த சித்தாரா, “அப்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க ப்ரோ” என்றாள்.

“எங்கத்த… நான் போய் கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்டா என் அப்பாவே
என்னைய மேலிருந்து கீழ பாப்பாரு. இந்த 90ஸ் கிட்ஸ் கொடுமை எல்லாம்
யாருக்கும் வரக்கூடாது” என்று ரமணா சொல்ல அங்கிருந்த சித்தார்த், சித்தாரா,
வர்ஷினி அனைவரும் சிரித்தனர்.

சித்தார்த்தும் ரமணாவும் ஒரு டென்ட்டுக்குள் நுழைய, சித்தாராவும் வர்ஷினியும் ஒரு டென்ட்டிற்குள் வந்து படுத்தனர்.

அடுத்த நாள் நடக்கப்போவதை சித்தார்த்தும் சித்தாராவும் அறியாமல் மலையேற்றம் வந்த அயர்வில் கண்களை மூடி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றனர்.

Leave a Reply

error: Content is protected !!