தீங்கனியோ தீஞ்சுவையோ-5

தீங்கனியோ தீஞ்சுவையோ-5

 

அவன் போனையும் நாட்காட்டியையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.நல்ல நேரம் கெட்ட நேரம் ராசி ஜாதகம் என எதையும் நம்பாமல் இருந்தவனுக்குள் காதல் என்று ஒன்று வந்தவுடன் அத்தனை சகுனங்களும் வந்துவிட்டது.

சகுனம் என்பது என்ன?

துவங்கும் செயல் நன்றாக முடியும் என்ற நம்பிக்கை தானே. அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் பயம் துளிர்விடும் தானே. இந்த பயம் தானே காதலின் ஆதார சக்தியே.  எங்கே தன் மனதுக்குறியவர்களை இழந்துவிட போகிறோமோ என பயம் வந்து ஒட்டிக் கொள்வது இயல்பு தானே. இப்போது அதே பயம் தான் அவனை ஆட்கொண்டு இருந்தது.

இன்னும் அடுத்த நாள் துவங்க இருபது நிமிடம் இருக்கிறது.

இதோ இப்போது போனையும் காலண்டரையும் கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு இருக்கின்றானே அதேப் போல தான் அங்கேயும் ஒருத்தி  செய்துக் கொண்டு இருக்கிறாள் என்பதை எப்போது தான் உணரத் தொடங்குவானோ?

இங்கே இவளோ அவன் தன் அழைப்பை துண்டித்துவிட்டான் என்பதை ஜீரணிக்க முடியாமல் திகைத்து அமர்ந்து இருந்தாள்.

இன்று ஏனோ தன் காதலை சொல்லியே தீர வேண்டும் என மனம் உந்தி தள்ளியது. ஏதோ ஒற்றை ஆளாய் இந்த காதலின் கணத்தை சுமக்க அந்த மெல்லிய மனதால் முடியவில்லை ஆதலால் காதலை சொல்லி அவன் மனதிலும் பாதி காதல் பாரத்தை இறக்கி வைப்போமே என போனை எடுத்தாள்.

ஆனால் என்னவோ தெரியவில்லை போனை எடுக்கும் முன்னரே காலண்டர் கண்ணுக்கு அகப்பட்டது.கிட்டே சென்று ராசிப் பலனை பார்த்தாள்.

கன்னி  வெற்றி

என்று குண்டு குண்டு எழுத்துக்களில் போட்டு  இருந்தது. மனம் இறக்கைக் கட்டி பறக்க அவனுக்கு அழைத்தாள். அவள் எதிர்பார்த்தது போல நன்றாக தான் போய் கொண்டு இருந்தது. ஆனால் ஏன் காதலை சொல்ல வந்த தருணம் அலைபேசியை துண்டித்தான். என்னை பிடிக்கவில்லையா என்று நினைத்த மாத்திரத்தில் கண்ணில் கண்ணீர் அரும்பியது. அந்த விழிநீரை துடைக்க சென்ற நேரம் அவள் அலைபேசி அவளை அழைத்தது.அவன் தான்… இந்த கண்ணீருக்கு சொந்தமான அவன் தான் அழைத்து இருந்தான்.

என் அழைப்பை துண்டித்தானே என்னை பேச விடாமல் தவிக்க விட்டானே என்ன திமிர் இருக்கும் அவனுக்கு? நான் அனுபவித்த அனுபவிக்கிற இதே வலியை நீயும் அனுபவி என அவன் அழைப்பை அவள் ஏற்கவே  இல்லை.

தனக்கு கொடுத்த அதே வலியை அவனுக்கும் கொடுத்துவிட்ட திருப்தியில் இதயத்தில் மெல்லியதாய் ஒரு சுகம் பரவியது. அவனை துடிக்கவிட்டு தன் மனதை சுகப்படுத்தும் இந்த போதை அவளுக்கும் பிடித்தே இருந்தது.

போனை டேபிளில் வைத்துவிட்டு நிம்மதியாக பெட்ஷீட்டை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள். தன் வேதனையை அவனுக்கு கடத்திவிட்ட நிம்மதியில் ஆழ்ந்த உறக்கத்திற்கு தன்னைத் தத்துக் கொடுத்து விட்டாள்.

நல்ல உறக்கத்தில் ஏதோ தன்னை பிராண்டுவது போல தோன்ற  கண்களை திறவாமலே சட்டென்று அதை தள்ளிவிட முயன்றவளின் கைகள் அப்படியே தடைப்பட்டு நின்றது.

அவளது காதுகளில் ” ஐயோ உத்ரா வேணாம்டி அந்தரத்துல தொங்கிட்டு இருக்கேன். அப்புறம் பரலோகம் தான் போகணும்” என்ற ப்ரணவ்வின் குரல் ஒலிக்க பட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள். கண்களை கசக்கிக் கொண்டு பார்க்க அவள் விழி வட்டத்தில் இப்போது அவனது உருவம் தெரிந்தது.

திகைத்துப் போய் எழுந்து ஜன்னலருகே வந்தவள் கண்களை கசக்கி மீண்டும் மீண்டும் பார்த்தாள்.

அவன் உருவமே தான் தெரிந்தது. இது கனவல்ல என்பதை உறுதிப்படுத்தி கொள்ள இன்னும் கொஞ்சம் ஆதாரம் தேவைப்பட்டது.ஆதலால் கைகளை நறுக்கென்று கிள்ளிப் பார்த்தாள்.

“அடியே கொலைகாரி ஏன் டி என் கையைப் பிடிச்சு இப்படி கிள்ளி வைச்ச???”

“அதுவா ப்ரணவ்…. இது கனவா இல்லை நனவானு confirm பண்ணிக்க தான் கிள்ளி பார்த்தேன். “

“அதுக்கு உன் கையை கிள்ள வேண்டியது தானே…. எதுக்கு என் கையை கிள்ளுன.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும் பரலோகம் போய் இருப்பேன் டி.. “

“ஆமாம் ப்ரணவ் நீ ஏன்டா பைத்தியம் மாதிரி ஜன்னல் கம்பியை பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருக்க… “

“சொல்லுவ டி சொல்லுவ… எங்கே என்னை மாதிரி நீயும் தூங்காம கஷ்டப்பட்டுட்டு இருப்பியோனு நினைச்சு உன்னை வந்து  பார்த்தா….  நல்லா இழுத்துப் போத்திக்கிட்டு  நிமிர தூங்கிட்டு இருக்கிற நீ….  சரி உன்னை எழுப்பலாம்னு நினைச்சு நானும் எவ்வளவு வாட்டி கூப்பிடுவேன்டி…. கும்ப கர்ணி… அதான் பக்கத்துல இருந்த மரத்துல இருந்து கிளையை உடைச்சு உன்னை எழுப்புனேன்…. பாதகி அந்த கிளையை தட்டிவிட்டு என்னை கொல்ல பார்த்துட்டியேடி.”

“திடீர்னு தூக்கத்துல வந்து ஏதாவது பிராண்டுனா அப்படி தான் தட்டிவிடுவாங்க. சரி சரி என்ன அப்படியே ஜன்னல் கம்பியை பிடிச்சுட்டே பிரசங்கம் பண்ணிட்டு இருக்க போறீயா??”

“அடிங்க ஒழுங்கா கீழே இறங்கி வாடி… நான் இறங்கி கீழே உனக்காக வெயிட் பண்றேன். “

“ஐயோ அதெல்லாம் முடியாது… வீட்டுல அம்மா  நல்லா தூங்குறாங்க…. நான் எழுந்து வர சவுண்ட் கேட்டு அவங்க முழிச்சுக்கிட்டாங்கனா… போ போ நான் வர மாட்டேன்…. “

“அடியே உன்னை பூனை மாதிரி எல்லாத்தையும் உருட்டி அவங்களை எழுப்பிட்டு வர சொல்லல…. அமைதியா யாருக்கும் தெரியாத எலி மாதிரி கிடைக்கிற சந்து பொந்துலலாம் பூந்து வா…. “

“சரி சரி வந்து தொலைக்கிறேன்…. நீ கீழே வெயிட் பண்ணு ” என்றவள் கதவை திறந்து அம்மாவிற்கு தெரியாமல் வெளியே வருவதற்குள் பத்து நிமிடங்களே ஆகிவிட்டது…. அவள் அவனை நோக்கி நடந்து செல்ல அவனோ

“இவ்வளவு நேரம் வராததைப் பார்த்துட்டு எங்கே என்னை கீழே அனுப்பிட்டு மறுபடியும் குறட்டை விட்டு தூங்க ஆரம்பிச்சுட்டியோனு நினைச்சேன்…. நல்ல வேளை வந்துட்ட டி…. “

” ஓய் அம்மாவுக்கு தெரியாம வரதுனாலே மெதுவா பதுங்கி பதுங்கி வந்தேன்… அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு…. “

” கொஞ்சம் இல்லை ரொம்ப… “

” சரி சரி ரொம்ப தான்… ஆமாம் எதுக்காக இந்த நேரத்துல வந்த??”

” இல்லை நீ என் மேலே கோபமா இருப்பியோனு நினைச்சு வந்தேன்…. “

” ஆமாம் நான் எதுக்கு உன் மேலே கோபமா இருக்கணும்” னு கேட்டவளின் மனதில் பட்டென்று நேற்றைய நியாபகங்கள் விழ அதிர்ந்து போய் நின்றாள்…. அவன் மீது நான் பயங்கர கோபத்தில் தானே இருந்தேன்…. அவனிடம் பேசக்கூடாது என நினைத்து இருந்தேன் தானே…  பிறகு எப்படி அவன் என் கண்முன் வந்து நின்றதும் அந்த கோபம் எல்லாம் கண்மண் தெரியாமல் பறந்து போனது….

அவன் என் மனதில் அந்த அளவுக்கு வியாபித்து இருக்கிறானா???…. அவன் மேல் கொண்ட கோபம் முழுதாய் ஒரு நாள் கூட தாக்குபிடிக்கவில்லையே என யோசித்துக் கொண்டு இருந்தவளின் கைகளைப் பற்றி ” சாரி டி ” என்றான்…

அவள் விழி விரித்து அவனை நோக்க அந்த விழிகளுக்குள் தன் விழிகளை கலக்க விட்டாறே மீண்டும் பேசத் தொடங்கினான்….

” உன்னை மாதிரி தான் டி நானும் நேத்து உன் கிட்டே சொல்லலாம்ணு நினைச்சேன்…. ஆனால் காலண்டர் எடுத்து உன் ராசி ரிஷபத்தை பார்த்தா தோல்வினு இருந்தது…. அதான் நீ சொல்ல வரும் போது நான் வேணாம்னு சொல்லி தடுத்துட்டேன்…. நான் வேணும்னு அப்படி பண்ணலடி புரிஞ்சுக்கோ… ஆமாம் உனக்கு எப்படி என்னைக்கும் இல்லாம நேத்து என் கிட்டே சொல்லணும்னு தோணுச்சு…. “

” அதுவா ப்ரணவ் எனக்கும் இதுக்கும் மேலே சொல்லாம நாள் கடத்துறது சரினு படல… அதான் உன் கிட்டே சொல்லலாம்ணு நினைச்சேன்… சொல்றதுக்கு முன்னாடி உன் ராசி கன்னியைப் பார்த்தனா வெற்றினு இருந்ததுதா அதான் தைரியமா போன் பண்ணேன்… ஆனால் நீ கட் பண்ணிட்ட… “

” அச்சோ சாரி டி… உன் ராசியைப் பார்த்த நான் என் ராசியைப் பார்க்காம விட்டுட்டேன்…. “

” நானும் தான் உன் ராசியைப் பார்த்துட்டு என் ராசியை பார்க்கல…. ஆமாம் இந்த நேரத்திலே வந்து சொல்றியே அப்போனா நம்ம ரெண்டு பேரு ராசிக்கும் பாசிட்டிவா ஏதாவது போட்டு இருக்கா??…. “

” யாரு பார்த்தா… அதெல்லாம் நான் பார்க்கல…. உன்னை கஷ்டப்பட வெச்சுட்டு நாள் கிழமை பார்த்து தான் சொல்லுவேனு இருக்கிறது எல்லாம் எனக்கு சரியா படல… இப்போ நாள் கிழமை மேல லாம் நம்பிக்கை இல்லை என் லவ் மேலே மட்டும் தான் நம்பிக்கை…. “

” அது எல்லாம் சரி ப்ரணவ்… ஆனால்  சார் ஏன் சீக்கிரமா கிளம்பி வராம ஒரு நாள் முடியட்டும்னு காத்து 12 மணிக்கு வந்தீங்க…. “

” அது அதான் நேத்து பாசிட்டிவா இல்லைனாலும் நெகட்டிவ்வா வந்துது இல்லை…. அதனாலே தான் லைட்டா பயமா இருந்தது…சரினு இன்னைக்கு கிளம்பி வந்தேன்…. “

” அப்புறம் எந்த இதுக்குடா நாள் கிழமைலாம் முக்கியம் இல்லைனு சொன்ன??”

” அது லைட்டா பயம் இருக்க தானே செய்யும் டி…. “

” அடச்சீ தூதூதூ…. “

” ஹே துப்பாத டி…”

” சரி சரி துப்பல துடைச்சுக்கோ…. “

” துடைச்சுக்கிட்டேன்…. ” என்று அவன் சொன்ன பிறகு இருவரிடத்திலும் ஆழ்கடலைப் போல பேரமைதி நிலவியது…. இருவர் முகத்தை மாறி மாறி பார்ப்பதும் சுற்றும் முற்றி செடி கொடியை பார்ப்பதும் மேலும் கீழே வானத்தையும் பூமியையும் பார்ப்பதும் பிறகு மீண்டும் இருவர் முகத்தை பார்ப்பதும் என தொடர அந்த நீடித்த மௌனம் இருவராலும் தாங்கவே முடியவில்லை…. இருவரும் ஒரே சமயத்தில் மௌனத்தை கலைத்தனர்….

” ஆமாம் நீ இன்னும் அந்த வார்த்தையை சொல்லவே இல்லையே ” என இருவரும் ஒரே தொனியில் ஒரே நேரத்தில் பேச இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது….

” ப்ளீஸ் டா ப்ரணவ் நீ அந்த வார்த்தையை சொல்லேன்…. “

” இல்லைடி நான் சொல்ல மாட்டேன்… சொல்லாமயே நமக்கு நம்ம மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுடுச்சு இல்லையா?? அதனாலே சொல்லி தான் அதை உறுதிப்படுத்திக்கணும்னு இல்லை… சொல்லாம இருக்கிறதும் ஒரு ஃபீலா தான் டி இருக்கு…. “

” அப்போ நீ சொல்ல மாட்டே அப்படி தானே “

” ஆமாம் டி சொல்ல மாட்டேன்…. “

” அது எப்படி சொல்லாம போறேனு நானும் பார்த்துடுறான்… ” என்றவள் அவன் கையை பிடித்துக் கிள்ள அவனோ ஐயோ விடுடி விடுடி என்று அலறினான்…

“அப்போ ஐ லவ் யூ சொல்லு டா”

” ஹே இதெல்லாம் அநியாயம் டி…. இப்படியாடி ஐ லவ் யூ வை கேட்டு வாங்குவ…. “

” ஆமாம் அப்படி தான் வாங்குவேன்… ஒழுங்கா ஐ லவ் யூ சொல்லடா…. “

” ஐயோ கிள்ளாதடி குரங்கே… சரி சரி சொல்லி தொலையுறேன்… ஐ லவ் யூ டி என் குட்டி சாத்தானே…. “

” மீ டு டா குரங்கே…. “

💐💐💐💐💐💐💐💐💐💐💐

“அம்மு”

“சொல்லு டா… “

” மணி 1.30 “

“அதுக்கு??”

“தூக்கம் வருது டி”

“சரி டா தூங்கு”

“சரி டி குட் நைட்…  அப்போ போனை கட் பண்ணட்டுமா?”

“போனை கட் பண்ணியே ஆகணுமா?” என்றவளின் குரலில் இருந்த ஏக்கம் அவனை மறுக்க வைத்தது.

“இல்லை இல்லை கட் பண்ண வேணாம்… நீ பேசு”

(சில மணி நேரத்திற்கு பிறகு)

“ப்ரணவ்..  “

“சொல்லு டி”

” மணி 3.30.. தூக்கம் வருது போனை கட் பண்ணலாமா?”

“போனை கட் பண்ணியே ஆகணுமா டி??”

“இல்லை இல்லை கட் பண்ண வேணாம் டா.. நீ பேசு…”

(பல மணி நேரத்திற்கு பிறகு)

“அம்மு.. மணி 5.30.. தூக்கம் வருது.. போனை கட் பண்ணலாமா?.. “

“ம் டா… குட் நைட்.. “

“ஓகே டி..  குட் நைட்.. டாடா”

” ப்ரணவ்… ” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க

“கொன்னுடுவேன் டி உன்னையை.. நிஜமாவே குட் நைட்.. வா போய் தூங்குவோம்.. “

“சரி சரி நிஜமா குட் நைட்.. டாடா” என்று இருவரும் அலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு படுத்தனர்.

ஆனால் ஏனோ தூக்கம் வரவில்லை. அந்த உரையாடல் முழுமைப் பெறாதது போலத் தோன்றியது. ஆனால் இந்த முழுமையும் வேண்டாம் முழுமைப் பெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என மனம் விரும்பியது. அவளை மீண்டும் அழைக்கலாம் என்று அவன் அலைபேசியை எடுத்த அடுத்த நொடி அவளிடம் இருந்து அழைப்பு வந்தது. உதடுகளில் புன்னகை மிளிர்ந்தது. சந்தோஷத்துடன் எடுத்து காதில் வைத்தான்.

“டேய் எனக்கு என்னவோ உன் கிட்டே பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு டா.. “

“எனக்கும் டி.. “

“நல்லா சாப்பிட்டு நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்த என்னை ஏன்டா இப்படி மாத்துன?.. “

“நான் எங்கடி மாத்துனேன் நீ தான் மாறிட்ட.. “

“அது என்னவோ உண்மை தான் இப்போலாம் உன் கிட்டே ஒரு நிமிஷம் கூட பேசாம இருக்க முடியல.. ஏன்.. “

“ஏன்னு தெரியாதா மேடம்க்கு.. “

“ம் தெரியுது தெரியுது.. எல்லாம் இந்த காதல் கத்திரிக்காயால தான்.. ஆனால் இந்த ஃபீலிங் கூட  நல்லா தான் இருக்கு ப்ரணவ்… தூக்கம் வருது…  ஆனால் தூக்கம் வராம ஏதோ ஒன்னு தடுக்குது.. இந்த  அவஸ்தை கூட ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு” என்று அவள் சொல்ல அவன் எதுவும் பேசவில்லை..

” ஹே என்னடா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்.நீ எதுவும் பேசாம இருக்கே. ஹலோ நான் பேசுறதை கேட்குறீயா” என்று அவள் எவ்வளவு கத்தியும் மறுமுனையில் இருந்து பதிலே இல்லை.. அலைபேசியை காதில் வைத்து கொண்டு அப்படியே  உறங்கிவிட்டான் போல. அவள் குரலை மறுபடியும் கேட்பதற்காக  ஏங்கி தூங்காமல் தவித்து இருந்த மனம் அவளது குரலை கேட்டவுடன் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று இருந்தது.

அவன் உறக்கம் கலைந்து  கண்விழித்து அலைபேசியைப் பார்க்க அழைப்பு துண்டிக்கப்படாமலே இருந்தது. அவசர அவசரமாக எடுத்து காதில் வைத்தவன் ” உத்ரா ” என்று அழைத்தான்.

“ஏன்டா எருமைமாடு தூங்கப் போறேனு சொல்லிட்டு போக மாட்டியா?. ” என்றாள் கோபமாக

“ஹே அம்மு நீ தூங்கவே இல்லையா டி.. இன்னும் முழிச்சுக்கிட்டா இருக்க?” என்றான் பதற்றமான குரலில்.

“ஆமாம் டா நீ எழுந்ததும் உன்னை திட்டுட்டு போனை வைக்கலாம்னு தான் இவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருந்தேன்.”

“பைத்தியம் பைத்தியம் எனக்கு காலைல போன் பண்ணி திட்டி இருக்கலாம்ல.. இப்படி எதுவும் பேச்சுக்குரல் கேட்காத போனை வெச்சுக்கிட்டா இவ்வளவு நேரம் உட்கார்ந்து இருப்ப??..  பைத்தியம் டி நீ.. “

“ப்ரணவ் எனக்கு உன் பேச்சுக்குரல் கேட்கலனா என்ன??.. அதான் உன் மூச்சுக்குரல் கேட்டுச்சே.. அதுவே நீ என் கூட இருந்த ஃபீலை தந்துது.. ” என சொல்ல அவள் கொண்ட காதலின் ஆழம் கண்டு உடம்பு சிலிர்த்தது. இந்த ஆத்மார்த்தமான காதலுக்கு நான் என்ன பதிலாக தர முடியும்.. ஐ லவ் யூ என்ற வார்த்தையை தவிர்த்து…

” ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..ஐ லவ் யூ” என்று ஆயிரம் முறை இவன் சொல்ல அவளிடம் இருந்து பதில் இல்லை.

  அவனைத் திட்டிவிட்ட திருப்தியில் உறங்கிவிட்டாள் போல… கையில் இருந்த போனை சிரித்தபடியே தலையில் அடித்துக் கொண்டு அலுவலத்திற்கு கிளம்பினான்.

சரியான உறக்கம் இல்லை என்றாலும் சோர்வு இல்லாமல் அவன் உள்ளம் உற்சாகமாய் இருந்தது..  உறக்கம் மட்டும் தான் சோர்வை நீக்குமா??.. என்னவள் வார்த்தைகள் கூட சோர்வை நீக்கும் ஊட்டமருந்து தான்… சிரித்தபடி வேலையைத் தொடர்ந்தான். மதியம் இரண்டு மணிக்கு அவளிடம் இருந்து மீண்டும் அழைப்பு. இப்போது தான் உறங்கிவிட்டு எழுந்து இருக்கிறாள் போல.

“என்னங்க மேடம் தூக்கத்துல இருந்து எழுந்தாச்சா??.. சாப்பிட்டியா டி?”

“அதெல்லாம் எழுந்த உடனே சாப்பிட்டாச்சு.. ஆமாம் நான் போன் பண்ணா தான் நீ பேசுவியோ.. நீயா போன் பண்ண மாட்டியோ.. ரொம்ப தான் சார் சீன் போடுறா மாதிரி இருக்கு… “

“ஏன்டி நீ நைட்டு முழுக்க தூங்கலேயே.. சரி போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு எழுப்பாம இருந்தா ஓவரா தான் பேசுற… இரு இனி உன்னை தூங்கவிடாம காலையிலே ஆறு மணிக்கே போன் பண்ணி நான் சீன் போடலனு காமிக்கிறேன்.. “

“ஐயோ ஐயோ வேணாம் ப்ரணவ்.. ப்ளீஸ் அப்படி பண்ணிடாதே.. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் லொல்ல லாய்க்கு… “

“ம் அப்படி வா வழிக்கு.. சரி டி.. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு… நான் ஈவினிங் பேசுறேன்.. டாடா”

“ஹே ப்ரணவ் ப்ரணவ் கட் பண்ணிடாதே.. நாளைக்கு உன் ஆபிஸ் முடிஞ்சதும் என்னை ஆபிஸ்ல இருந்து பிக்கப் பண்ணிக்கிறியா??.. “

“இல்லை டி.. பைக்கை சர்வீஸ் விட்டு இருக்கேனே.. “

“சரி டா பரவாயில்லை… உன் ஆபிஸ்க்கு பக்கத்துல தானே என் ஆபிஸீம் முடிஞ்சதும் வரீயா.. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்… “

“சரி டி வரேன்… ” என்று சொல்லிவிட்டு வைத்தவன் அடுத்த நாள் செய்ய வேண்டிய எல்லா வேலையையும்  முடித்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு சென்றான்.

அலுவலகத்தின் முகப்பில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு இருந்தாள். அங்கே எரிந்து கொண்டு இருந்த விளக்கின் வெளிச்சம் அவள் மீது விழுந்து அவளை இன்னும் பிரகாசமாய் காட்டியது.  இமைக்க மறந்து  அவளைப் பார்த்தான்.

பூமிக்கு வந்த தேவதைப் பெண் இவளோ?? என்னை ஆசிர்வாதிக்க படைக்கப்பட்ட பெண் தேவதையா??.. இந்த தேவதை இப்போது எனக்கே எனக்கானவள். அயர்ந்துப் போனான் அவள் அழகில்.

மெல்லிய அடி எடுத்து வைத்து அவளை நோக்கி நடக்க இவனை கண்ட அவளோ வேக வேகமாய் நடந்து வந்தாள். அந்த ஒரு நிமிட நேர இடைவெளியை பொறுக்காதவளாய்.

“இப்போ தான் மீட்டிங் முடிஞ்சுதுடா… ஏதாவது சாப்பிட்டியா வா கேன்டீன்க்கு போய் சாப்பிடலாம்” என்று அவன் பதிலை எதிர்பாராமல் கைப்பிடித்து இழுத்துச் சென்ளாள்.

சாப்பிடுறீயா என்று கேட்பவளிடம் மறுக்க முடியும் சாப்பிடு என்று கட்டளையிடும் இவள் சொல்லை எப்படி தட்ட முடியும். பசிக்கவில்லை என்றாலும் அவளுக்காக சாப்பிட சென்றான்.

அவள் இவனுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து விட்டு அவனைப் பார்த்தாள். இவன் அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்துவிட்டு அவளை பார்த்தான்.

“என்ன டி திடீர்னு வர சொல்லி இருக்க.. என்ன விஷயம்??” என்று அவன் கேட்க இவள் தன் கைப்பையை துழாவி கிப்ட் ரேப்பரால் சுற்றப்பட்ட ஒன்றை எடுத்து வைத்தாள்.

அதைக் கண்டு சிரித்தவன் தன் லேட்டாப் பையில் கைவிட்டு அதே மாதிரி கிப்ட் ரேப் செய்யப்பட்ட இன்னோரு பரிசுப் பொருளை எடுத்து வைத்தான்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவரைப் பார்த்து அதிர்ந்து பின்னர் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

“பார்ரா செம வேவ் லென்த்ல… ” என்று சொல்லியவன் அவளது பரிசை திறந்துப் பார்க்க அதில் ஒரு கைக்கடிகாரம் இருந்தது.. அவள் அவன் கொடுத்த பரிசுப் பொருளைப் பார்க்க அதில் ஒரு மோதிரம் இருந்தது.

இவன் அந்த வாட்சை எடுத்து நீயே கட்டிவிடு டி என கைநீட்ட புன்னகையுடன் கட்டியவள் பின்பு கண்டிப்பான குரலில்

“இனி உனக்கான நேரம் எல்லாம் எனக்காக மட்டும் தான்.. எனக்கு மட்டும் தான்”

“அப்படியே ஆகட்டும் மேடம்.. ” என்று சொல்லியவன் அவளது கையில் மோதிரத்தை அணிவித்து அவள் கைகளைப் பற்றியவாறே

“ஐ லவ் யூ அம்மு மா” என்றான்..

” ஐ லவ் யூ டு டா” என்று அவள் சொன்ன நேரம் அவர்கள் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்து இருந்தது.. இருவர் வாயும் உணவை விழுங்க இருவரது கண்களும் ஒருவரை ஒருவர் விழுங்கியது.

உண்டு முடித்தவர்கள் எழுந்து வெளியே வந்தனர்.தோள்கள் மெல்லியதாய் உரசிய படி எவ்வளவு மெதுவாக நடக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக நடந்தனர்.

ஆனாலும் இந்த பேருந்து நிறுத்தம் சீக்கிரமாக வந்து விட்டது. அவள் ஏற வேண்டிய பேருந்தும் வந்து நின்றுவிட்டது. ஏறச் சென்றவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவனது கண்களில் பிரிவின் வேதனை தெளிவாக தெரிந்தது.  பேருந்து ஏறாமல் திரும்பி அவன் அருகில் வந்து நின்று கொண்டாள்..அவன் கேள்வியாய் நோக்க

“இல்லை பஸ் கூட்டமா இருக்கு” என்றாள்..

“ஏது இந்த பத்து பேர் இருக்கிற பஸ் உனக்கு கூட்டமா இருக்கா” என்று நினைத்தவனின் இதழ்களில் மௌனச் சிரிப்பு.

அடுத்து வந்த பேருந்தின் கதவு சரியாக திறக்கவில்லையாம்.. அதற்கடுத்து வந்த பேருந்தின் கன்டெக்டர் நன்றாக இல்லையாம்.. அதற்கடுத்து வந்த பஸ்ஸின் முகப்பு விளக்கு ஒழுங்காக எரியவில்லையாம் இப்படி பல நொண்டி சாக்கு சொல்லி பிரிய மனம் இல்லாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தவளின் காதை செல்லமாக பிடித்து திருகியவன்

“உத்ரா  அதோ வருதுல அந்த பஸ்ல ஒழுங்கா ஏறு.. ஏற்கனவே லேட் ஆகிடுச்சு… ” என்று சொல்ல வேறு வழியில்லாமல்

பேருந்து படிக்கட்டு வரை ஏறியவள் மீண்டும் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவன் சிரித்துக் கொண்டே அவளை வழியனுப்பி வைக்க கோபத்தில் முனுமுனுத்துக் கொண்டே இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

“கொஞ்சமாவது என்னை மிஸ் பண்றானா பாரு.. ” என்று அவள் சொல்லியபடி  நிமிர அங்கே அவளருகில் அவன் அமர்ந்து கொண்டு இருந்தான். ஆனந்த அதிர்ச்சியில் விழி விரித்துப் பார்த்தாள்.

அவன் ஆயுளுக்கும் நினைவில் இருக்கும் அந்த நொடியை அவளின் முகத்தில் எழும் மாற்றங்களை தன் மனப் பெட்டகத்தில் சேமித்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!