கிட்காட்-12

IMG-20210429-WA0013-b10c4bfe

கிட்காட்-12

கிட்காட்-12

அடுத்தநாள் காலை கண்விழித்த சித்தார்த் மணியைப் பார்க்க அது ஐந்தேகாலைக் காட்டியது. வெளியே வந்தவன் பக்கத்தில் சலசலத்துக் கொண்டிருந்த ஓடைக்கு நடந்துசென்று முகத்தைக் கழுவி பல்லைக் துலக்கிவிட்டு
காலைக் கடன்களை முடித்தான்.

அவன் திரும்பி வர சித்தாரா இவனைக் கண்டு ஓடிவருவது தெரிந்தது அவனிற்கு.
அவள் ஓடி வந்த வேகத்திலும் விதத்திலுமே அவளுடைய எமர்ஜென்சி புரிந்த அவனிற்கு சிரிப்பு வந்தது. வந்தவள், “சித்தார்த், இங்க பாத்ரூம் எங்க இருக்கு?” என்று வினவினாள்.

“அதோ அந்த பக்கமா போனினா உன் அப்பன் கட்டி வச்சிருக்கான்” என்று சித்தார்த் கேலி செய்ய, “டேய்! என் அப்பாவை பத்திப் பேசுன” என்று விரலை நீட்டி அவள் எச்சரித்தாள்.

“என்னடி பண்ணுவ?” என்று கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டான்.

“போடா பரதேசி” என்று திட்டியவள் அவன் காட்டிய இடத்தை நோக்கிச் சென்றாள். அவள் திட்டிய பிறகு இளித்துக்கொண்டே வந்தவன் சூரியன் உதிக்கத் தயாராக இருப்பதைக் கண்டான். மணி ஐந்தே முக்கால் ஆகியிருக்க பனி மூட்டங்களை தன் கதிர்களால் விலக்கிக் கொண்டு மேல் எழுந்து நிலவுப் பெண்ணை விரட்டிக் கொண்டிருந்தது கதிரவன். நிலவு மகளோ அவனை
முறைத்துக்கொண்டே செல்ல கதிரவனோ உல்லாசமாய் எல்லோருக்கும் விடியலைத் தந்து கொண்டிருந்தான்.

சித்தார்த் சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டிருக்க, “செம அழகா இருக்கு” என்று முணுமுணுத்தக் குரலில் சித்தார்த் திரும்ப, சித்தாராவைக் கண்டவனின் கண்கள் ஆணி அடித்தாற்போல அவளிடமே இருந்தது.

“ஆமா அழகுதான்” என்று அவளின் மேல் வைத்த கண்களை எடுக்க முடியாமல்
அவன் சொல்ல சித்தாரா அவனை கவனிக்கவில்லை. அவளது பார்வை கதிரவன் மேலேயே இருந்தது.

சூரியனின் கதிர்கள் அவளது சந்தன மேனியில் படர்ந்து அவளின் மேனியைத்
தங்கமாய் ஜொலிக்க வைக்க தங்கப் பதுமையாய் நின்றிருந்தாள் அவள். அவளைக் கண்ட கதிரவன் கூட தனது நிலவுப் பெண்ணிற்கு போட்டியாக
வந்தவளோ இவள் என்று யோசித்தான். அவளிற்கு சொந்தக்காரனான
சித்தார்த்தின் மேல் அவனுக்கு பொறாமையும் எழுந்தது. ‘சில அழகுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப நின்றிருந்தாள் சித்தாரா.

தனது டென்ட்டுக்குள் சென்று தனது டிஎஸ்எல்ஆர் கேமராவை எடுத்து வந்தவன் சித்தாராவை அந்த அழகிய காலைப் பொழுதில் விட மனமில்லாமல் தனது கேமராவில் பிடித்துக்கொண்டான். அவன் கேமராவுடன் நிற்பதைக் கண்டவள், “உன்னோட கேமராவா?” என்று கேட்டாள்.

சித்தார்த் க்யூட்டாக தனது கேசம் ஆட தலையாட்ட, “என்னை பிக்ஸ் எடுத்து
தர்றீயா?” என்று கேட்க, அவனிற்கோ கும்பிடப் போன தெய்வம் குறுக்கே
வந்ததுபோல ஆனது.

தனது ஒரு கையைத் தூக்கி ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் நீட்டி,
தலையை சாய்த்து, உடலை லேசாக சாய்த்து நின்று கண்ணடித்து சிரித்தவளை சித்தார்த் மெய்மறந்து தனது கேமராவில் பதிவு செய்தான். அடுத்து தனது உதட்டைக் குவித்து அவள் ‘பௌட்’ வைத்து போஸ் தர அவளின் ஒவ்வொரு அசைவையும் அவன் தனது கேமராவில் படம் பிடித்து தன் மனதில் நிரப்பிக் கொண்டிருந்தான்.

“நீயும் வா. சன் ரைஸ் நல்லா இருக்கு. டைமர் வச்சிட்டுவா” சித்தாரா எதார்த்தமாகச் சொல்ல, “ம்ம்” என்றவன் டைமர் வைப்பதற்குள் ரமணா எழுந்து
கொட்டாவியை விட்டபடியே வந்தான். சித்தார்த்திற்கு சிரிப்பு வந்தாலும், “மச்சா
இங்க வாயேன்” என்றழைத்தான்.

நண்பன் தன்னை ஃபோட்டோ எடுக்க அழைக்கிறானோ என்று அந்தப் பாவப்பட்ட ஜீவன் வர, கேமராவை அவன் கையில் திணித்தவன், “எங்க இரண்டு பேரையும் ஒரு ஃபோட்டோ எடுத்துத் தா” என்றுவிட்டு அவன் சித்தாராவிடம் சென்று அவளின் பின்னால் அவன் நிற்க, நண்பனை முறைத்தவன் புகைப்படத்தை ஃபோக்கஸ் செய்ய சித்தார்த் சித்தாராவின் மேல் சாய்ந்து நிற்பதைப் போல தெரிந்தது கேமிராவில். ஆனால், இடைவெளி விட்டுத்தான் நின்றிருந்தான்.

நண்பனை ஒருநிமிடம் ரமணா பார்க்க, “சீக்கிரம் எடு மச்சி” என்றான் சித்தார்த்.
“உங்க போதைக்கு நானாடா ஊறுகாய்?” என்று முணுமுணுத்தவன் ஃபோட்டோவை அழகாகப் பிடித்துத் தர தவறவில்லை.

பின் அனைவரும் எழ காலை தேனீருக்கு டீ டிப்பை தந்தான் சித்தார்த். அனைவரும் காலை வேலைகளை முடிக்க, “எல்லாரு கிளம்புங்க” என்றான்.

“எங்கே?” என்று அனைவரும் கேட்க, “சும்மா உள்ள சுத்தி பாத்துட்டு வரலாம்”
என்று அவன் சொல்ல, “உனக்கு உள்ள இடம் தெரியுமா சித்தார்த்?” என்று
வினவினாள் நந்திதா.

“ம்ம்” என்றவன், “வாங்க… போயிட்டு வந்துட்டு. சீக்கிரம் கிளம்பலாம்” என்று
சித்தார்த் சொல்ல அனைவரும் டென்ட்டை பிரிக்க ஆரம்பித்தனர். தனது டென்ட்டை பிரிக்க ஆரம்பித்த சித்தாரா, உள்ளே இருக்கும் வர்ஷினியின்
பொருட்களைப் பார்த்துவிட்டு, ‘எங்கே இவள்?’ என்று தேட, வர்ஷினியும்
சித்தார்த்தும் பேசிக்கொண்டு நிற்பது அவளுக்குத் தெரிந்தது. அவளை அவன்
ஏதோ சொல்லி சமாதானம் செய்வது பார்த்தாலே நன்கு புரிந்தது சித்தாராவிற்கு.

“ப்ரோ. என்ன ஆச்சு?” என்று ரமணாவை அழைத்து சித்தாரா வினவ, “அ… அ… அது
லவ் ப்ராப்ளம்” என்று அவன் சமாளித்துவிட்டு போக அது புரியாதா சித்தாராவிற்கு.

வர்ஷினியின் பொருட்களை எடுத்து வெளியே வைத்தவள் டென்ட்டை பிரித்து
அவளது பையில் வைத்து தனது ட்ரெக்கிங் பேக்கையும் எடுத்து வைத்தாள்.
அனைவரும் காட்டிற்குள் 8 மணிபோல நடக்க ஆரம்பிக்க அந்த இடமே
அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. எல்லாம் நன்றாக போக திடீரென்று சித்தார்த், “ஷ்ஷ்” என்றான் அனைவரிடமும்.

பொதுவாக காட்டிற்குள் சிறிது பழக்கமுள்ள கிஷோருக்கும் என்னவென்று புரிய, “சித்தார்த், அதுதான்” என்றவன், “எல்லாரும் எதாச்சு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கங்க” என்று சொன்னவன் சின்மயை அழைத்துக்கொண்டு அங்கிருந்த
சாலப்பெரிய மரத்தின் பின் ஒளிந்தான். எல்லோரும் அதுபோலவே ஒளிய
சித்தாராவோ என்னவென்று தெரியாமல் விழிக்க, அடுத்து கேட்ட சத்தத்தில்
அவளது ஈரக்குலை எல்லாம் நடுங்கிவிட்டது. சித்தார்த் எட்டிப் பார்க்க ஒரு 16அடி யானை ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தது. அது மறுபடியும் ஆக்ரோஷமாகப் பிளிற காதுகளை அடைத்த சித்தாரா… சித்தார்த்தின் நெஞ்சில் பயத்தில் புதைந்தாள். யானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. யானையின் தோல் தடிமனாக இருந்தாலும், தன் மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட உணர்ந்து கொள்ளும். சுற்றிஇருக்கும் வாசனை அதிர்வுகளை உணர்வது என்பது அவர்களுக்கு அத்துப்படி. அப்படியிருக்க சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது யாரும் இருக்காமல் இருக்க ஒரு மரத்தை ஒரே இடியால் கோபத்தில் இடித்து சாய்த்தது. எல்லோரும் மூச்சுக்கூட விடாமல் இருக்க யானையை கவனித்துக் கொண்டிருந்த ரமணா சித்தார்த்தைப் பார்த்தான்.
எல்லோரும் நடந்து கொண்டிருந்த கலவரத்தில் இருந்தால் அவனோ தன் மேல் சாய்ந்திருந்த சித்தாராவை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு சிறிய கல்லை எடுத்து சித்தார்த்தின் மேல் எறிந்த ரமணா, “மரியாதையா
வெளியில கூட்டிட்டு போயிடு. இல்லினா நான் செத்திடுவேன்” என்று மிரட்டுவது
போலக் கெஞ்ச, ‘பக்’ என்று அமைதியாக சிரித்த சித்தார்த், ‘பொறு பொறு’ என்று
சைகை செய்தான்.

அவனின் மேல் சாய்ந்திருந்த சித்தாராவோ இதை எதையும் உணரும் நிலையில் இல்லை. சித்தார்த் அவளை அணைத்திருப்பதைக் கூட அவள் உணரவில்லை. இப்படி ஒரு அணைப்பு கிடைக்கும் என்றால் அவனிற்கு தினமும் இங்கு வரவே ஆசை. அவள் அவன் மேல் புதைந்திருந்த அந்த பதினைந்து நிமிடங்கள், அவனைக் கண்டு பொறாமை கொண்ட சூரியன் மேகத்தை வைத்து தன் கண்களை மூடிக்கொண்டது.

யானை சென்ற பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்த சித்தார்த் வயிறு குலுங்க சிரித்து, “எப்படி காட்டு யானை சூப்பரா?” என்று கேட்டான். “நல்லவேளைடா முன்னாடியே தெரிஞ்சுது இல்லினா இன்னிக்கு சட்னிதான்” என்றான் அருணோ.

“தெரிஞ்சுதான் கூட்டிட்டு போனேன்” என்றான் சித்தார்த்தோ. அனைவருக்கும்
அதிர்ச்சி என்றாலும் அந்த ஃபைவ் ஸ்டார் கும்பலுக்கு அவனது குணம் ஏற்கனவே
தெரிந்திருந்ததால்… அதிர்ச்சி மற்றவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கம்மிதான்.

“அப்போ வேணும்னே தான் கூட்டிட்டு போனியா?” சித்தாரா வினவ, “ஆமா. அங்க தான் எப்பவுமே யானை தண்ணீர் குடிச்சிட்டு போகும். நான் கூட்டமா வரும்னு தான் நினைச்சேன். ஆனா அதுவும் ரமணா மாதிரி சிங்கிளா வரும்னு நினைக்கலை” என்று அவன் சொல்ல,

“டேய் நீயெல்லாம்…” என்று வந்த சித்தாரா முதுகில் சாத்து சாத்து என்று
சாத்திவிட்டாள் அவனை. “ஏய் விடுடி ராட்சசி வலிக்குது” என்று சித்தார்த் அவளைத் தடுக்க,

“அது கையில மாட்டியிருந்தா… எல்லாரும் செத்திருப்போம்டா” என்றாள் கோபமாக. “பட் இந்த ட்ரிப் யாரும் மறக்க மாட்டீங்க தானே” என்று அனைவரையும் பார்த்து சித்தார்த் கேட்க அனைவரும் கையைத் தூக்கினர்.

“மாமா நீங்க கூடவா” என்று சித்தாரா கிஷோரிடம் கோபப்பட, “ஒரு பக்கம்
நினைச்சா சித்தார்த் மேல கோபம் வருது. ஆனா, பணம் எவ்வளவு குடுத்துப்
போனாலும் இனி இந்த மாதிரி அட்வென்ச்சர் கிடைக்காதுங்கிறது உண்மை” என்றான் கிஷோர்.

ஆனாலும், அவளுக்கு மட்டும் கோபம் போகவில்லை. “ம்கூம்” என்றவள் அவனைத் தாண்டி சென்றுவிட்டாள்.

“மச்சா நான் மறந்துட்டேன் பாரு… எப்படி அந்த ஃபோட்டோல இருக்கிறது சித்தாரா தான்னு கண்டுபிடிச்ச” என்றபடி ரமணா அவனருகில் வர,

“சித்தார்த்…” என்ற சித்தாரா அலறிய அலறலில் சித்தார்த் திரும்பினான். அவள்
காலைப் பிடித்துக்கொண்டு கீழே விழ எல்லோரும் ஓடினர். நேரே அவளிடம்
ஓடிய சித்தார்த் அவளது காலை ஆராய அவளது காலின் கட்டைவிரல் மேல்
இரத்தம் உரியும் அட்டை ஏறி இருந்தது. அது மேல் ஏறினால் நமக்கு வலி என்பதோ எதுவும் இருக்காது. ஏறிய இடத்தில் சிறிது அரிப்பு ஏற்படும் அவ்வளவே. ஆனால், ஏற்கனவே அவளிற்கு ஊர்வன மீது அருவருப்பு அதிகம். அதைப் பார்த்தாலே அவளிற்கு உடல் ரோமங்கள் சிலிர்த்துவிடும். அப்படி ஒரு வெறுப்பு சித்தாராவிற்கு.

தனது பாக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்தவன், “கொஞ்சம் சூடா இருக்கும்
பொறுத்துக்க” என்றவன் லைட்டரை அவளது காலில் வைக்க அது சுருண்டு
கீழே விழுந்தது. “அருண், என்னோட பேக் முன்னாடி ஜிப்ல மருந்து இருக்கும் பாரு.
எடுத்திட்டுவா” என்று நண்பனை எடுத்து வரச் சொன்னவன், “இதுக்குத் தான்
இப்படி கத்துனியாடி” என்று வினவினான் அவளது பாதத்தைத் தன் காலில் தூக்கி
வைத்தபடியே.

“பின்னே… எனக்கு இந்த புழு இதெல்லாம் பிடிக்காது… ஐ ஹேட் இட்… யக்… இஇஇ”
என்று முகத்தை அருவருப்பில் சித்தாரா சுழிக்க, “ஆங்… எங்களுக்கெல்லாம் அது
ரொம்ப பிடிக்கும். நாங்க அதை லவ் பண்றோம் பாரு” என்று சிரித்தபடியே நக்கல் செய்ய, “அப்படியே எட்டி உதச்சிடுவேன்” என்றாள் சித்தாரா.

“இவ்வளவு வாய் பேசறீல… செருப்பு போட்டுட்டு எதுக்குடி காட்டுக்குள்ள வந்தே.
நான் வரும்போதே என்ன சொன்னேன்?” என்று கேட்டவனுக்கு அவள் பதிலளிக்காமல் உதட்டை சுழித்தாள்.

“எதுவும் இல்ல. ஒரு 15மினிட்ஸ் கழிச்சு ஹூ போட்டுக்க” என்று மருந்தை போட்டுவிட்டு அவளது காலை கீழே அலுங்காமல் சித்தார்த் வைக்க, “மெல்ல
மெல்ல தரைக்கு வலிக்க போகுது” என்று நவீன் கலாய்க்க அனைவருக்கும் சிரிப்பு
வந்தது.

அனைவரும் தங்களது ட்ரெக்கிங் பேக்கை எடுத்துக்கொண்டு திரும்பி வீடு நோக்கி பயணிக்க குப்பிட்டோ தனது குட்டித் தொப்பையை பிடித்துக்கொண்டு
சிரித்தான். பதினொரு மணிக்குக் கிளம்பியவர்கள் ஒருமணி அளவுபோல
ஒரு அருவியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

“கிஷோர் உனக்கு இதுக்கு மேல வழி தெரியும் தானே?” என்று கேட்டான்.

“ம்ம் தெரியும். ஏன் கேக்கறே சித்தார்த்?” என்று அவன் வினவ,

“நான் இந்தப் ப்ளேஸ்ல கொஞ்சம் நேரம் இருந்துட்டு வரேன்” என்றான்.

“சித்தார்த். உன்ன மட்டும் எப்படி தனியா விட்டுட்டு நாங்க போகமுடியும்” என்று
நந்திதா வினவ, “எனக்கு இந்த ப்ளேஸ் ரொம்ப பழக்கம். அதான் சொல்றேன்.
நீங்க எல்லாரும் போங்க நான் வந்திடுவேன்” என்றான் சித்தார்த்.

“ஆனா…” என்று வர்ஷினி ஆரம்பிக்க, “அவன் தான் சொல்றான்ல. நாம போன
இரண்டு மணி நேரத்துல அவன் வந்திடுவான்” என்று ரமணா சொல்ல,

“இல்ல மச்சான். நாளைக்குக் கூட ஆகும். இங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு மறுபடியும் நம்ம டென்ட் போட்ட இடத்துக்கு போவேன்” என்றவன், “நீங்க போங்க”
என்றான்.

“அப்ப நாங்களும் இருக்கோம்” என்றான் அருண். “எனக்கு தனியா இருக்கணும்.
அதான் சொல்றேன்” என்று சித்தார்த் சொல்ல… அவன் சொன்னால் கேட்கமாட்டான் என்று தெரிந்தவர்களோ அரைமனதோடே நடக்க ஆரம்பித்தனர்.

சிறிதுதூரம் அதாவது ஒரு 100 மீட்டர் அவர்களுடன் வந்த சித்தாரா, “நான் வரல” என்று சொல்ல முன்னே சென்று கொண்டிருந்த அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

“நான் சித்தார்த் கிட்ட போறேன். அவன் கூட வரேன்” என்று சித்தாரா சொல்ல
அனைவரும் அதிர்ந்தனர்.

“சித்தாரா. பேசமா வா” சின்மயி லேசாக அதட்ட, “இல்ல நான் வரல. நீங்க போங்க” என்றவளின் அருகில் வந்த சின்மயி,

“அம்மா கேட்டா நாங்க என்ன சொல்றது?” சின்மயி கேட்க, “நான் உன் கூட உங்க
வீட்டுக்கு வந்திருக்கேன். நாளைக்கு தான் வருவேன்னு சொல்லு” என்று சித்தாரா
அசராமல் பேச,

“உன்னைத் தனியா விட்டுட்டு போகச் சொல்றியா?” சின்மயி கேட்க,

“அப்போ சித்தார்த்தை தனியா விட்டுட்டு வர சொல்றியாக்கா?” என்று கேட்டாள்.
சித்தாராவின் பதிலில் சின்மயி தவிர அனைவருக்கும் முகத்தில் புன்முறுவலே
வந்தது.

“சின்மயி. லெட் ஹெர் கோ. அவ சித்தார்த் கிட்ட தானே போறா. அவ போகட்டும் விடு” என்றான் கிஷோர்.

“தேங்க்ஸ் மாமா” என்றவள் திரும்பி நடக்க, “நான் வந்து விடட்டா” என்று கிஷோர் கேட்க, “வேணாம் மாமா. இங்க தானே நான் போயிப்பேன்” என்றவள் ஓடினாள்.

அனைவரும் நடக்க ஆரம்பிக்க, “அவங்களுக்கு நிச்சியம் ஆயிருக்கு. இப்படி தனியா விடக்கூடாது” என்று சின்மயி சொல்ல, “அவங்க இரண்டு பேரும் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை சின்மயி. ஒரு பொண்ணும் பையனும் தனியா இருந்தாவே தப்பு பண்ணிடுவாங்க அப்படிங்கறது மித்(myth). அதாவது அந்தக் காலத்துப் பெருசுக சொன்ன கட்டுக்கதை. ஒரு ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி அந்த மாதிரி ஃபீலிங் இருக்கும். பட் அதை தன்னோட கன்ட்ரோல்ல வச்சிருக்கவங்க எப்பவும் தப்பு பண்ணமாட்டாங்க. அதுவும் இல்லாம சித்தார்த் சித்தாரா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று அவன் சொல்ல கணவனின் பேச்சை கேட்டுக் கொண்டே வந்த சின்மயி, ‘ப்ச்’ என்ற சத்தத்தோடு அவனது கன்னத்தில் இதழைப் பதித்துவிட முன்னே சென்றுகொண்டிருந்த ரமணாவோ சத்தம் கேட்டு விருட்டென்று திரும்பினான்.

“எலே ஏம்லே இப்படி பண்ணி என்னை எல்லாரும் சாவடிக்கறீங்க கிறுக்கு
மென்டல் பயலுவளா” என்று ஜிபி முத்து டயலாக்கை அவன் சொல்ல மூவரும்
சிரித்தனர்.

இங்கே சித்தார்த்தைத் தேடி வந்த சித்தாரா அவனை விட்டுவிட்டு வந்த இடத்திற்கு வர அவனைக் காணவில்லை. அவனது பேக் மட்டும் இருந்தது, அருவி
வழிந்து வந்து விழும் இடத்தில். த்ரீ போர்த் ஜீன்ஸையும் ஃபுல் ஹேன்ட் டி சர்ட்டையும் அணிந்திருந்தவள் தனது பேக்கை கழற்றி அவனது பேக் அருகில்
வைத்துவிட்டு, அவனைத் தேடி அருகில் கொஞ்சம் நடக்க தண்ணீரில் ஏதோ
சலசலப்பு கேட்கத் திரும்பினாள்.

கத்தி போன்று இருகையையும் வைத்து தண்ணீர் உள்ளிருந்து வெளியே வந்த
சித்தார்த் மேலே கரைக்கு நீந்தி வந்து எழ, அவனை பார்த்தவுடன் வந்து கொண்டிருந்தவளோ அப்படியே நின்றுவிட்டாள். சருகுகளின் சத்தத்தைக்
கேட்டவன் நேர்எதிரே பார்க்க சித்தாராதான் நின்றுகொண்டிருந்தாள். யாருமில்லை என்று பாக்சருடன் இறங்கியவன் இப்போது அதிர்ச்சியில் உறைந்தான். “ஐயோ” என்று அவன் முகத்தை மூடிக்கொள்ள, சித்தாராவோ
படக்கென்று திரும்பி நின்றுவிட்டாள்.

“ச்சை. எப்படி கும்பமேளா சாமியார் மாதிரி அப்படியே எந்திரிச்சு வரான் பாரு.
இதுல மூஞ்சிய வேற மூடிக்கறான்” என்று அவள் முணுமுணுக்க, சித்தார்த்தோ
தனது டவலை எடுத்து அவசரமாக சுற்றினான்.

“ஏய் என்னடி. வசனமாடா முக்கியம் படத்த பாருடாங்கிற மாதிரி வாயைப் பொளந்து பாத்துட்டு. ஒரு பையனை இப்படி பாக்க வெட்கமா இல்ல. உனக்கு எல்லாம் அண்ணன் தம்பி இல்ல” என்று சித்தார்த் பொரிய,

“அசிங்கமா கேப்பேன் உன்னை” என்று திரும்பி ஆரம்பித்தவள், மூச்சை கண் மூடி
இழுத்துவிட்டு, “சரி விடு. இட்ஸ் ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட்” என்றாள்.

“ஒரு ஆம்பிளை சொல்ல வேண்டியது எல்லாம் இங்க தலைகீழ நடந்துட்டு இருக்கு” என்று முணுமுணுத்தவன், “சரி இங்க வந்து பேக்கை பாத்துக்க. நான் அந்த மறைவுல போய் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வந்திடறேன்” என்று சித்தார்த் நகர, ‘நல்லவேளை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தே’ என்று அவளது மூளை சொல்ல, ‘ஷட் அப்’ என்றது அவள் மனம்.

சிறிது நேரத்தில் வைட் டிசர்ட் மற்றும் ப்ளாக் நிற ட்ராக்குடன் தலையை துவட்டிக்கொண்டு வந்தவனை பார்த்தவளின் மனம் ஸதம்பித்தது. உயரமாக நேரான நடையுடன் சிற்பி செதுக்கிய முகமும் திமிரும் நக்கலும் கலந்து உருவான அந்தத் தாடையையும் கண்டவள் தன்னை மறந்துதான் நின்றாள்.

அவளருகில் வந்தவன் தனது டவலை பையில் வைத்துவிட்டு, “வீட்டுக்கு போனவுடனே பாட்டிகிட்ட சொல்லி சுத்தி போடணும். ஒருத்தி சைட் அடிச்சதுல நான் ஆவியாகி பறந்திடுவேன் போல” என்றான் சித்தாராவை ஓரக்கண்ணால்
பார்த்தபடி.

“அப்பப்பா… ரொம்பத்தான்” என்றவள், “ம்கூம்” என்று தன் பையை எடுத்தாள்.

“சரிசரி. ரொம்பத் திருப்பாதே. சீக்கிரம்… டைம் ஆச்சு போலாம்” என்று சொல்ல,
இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

மறுபடியும் இருவரும் வந்து டென்ட் அமைக்க எல்லாம் ஆறரை ஆகி இருட்டியேவிட்டது. வர்ஷினியின் பையில் ஒரு டென்ட் செட்டை வைத்ததால் ஒன்று மட்டுமே இருந்தது. இருவரும் நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்க, “பசிக்குது” என்றாள்.

“பேசாம அவங்க கூட போயிருக்கலாம்ல” என்றான் அதட்டலாக. “பின்ன உன்னை
விட்டுட்டு போகச் சொல்றியா?” என்று கோபமாக அவள் கேட்க, சித்தார்த்திற்கோ
அவளின் அந்தப் பேச்சு இதமாக உள்ளே இறங்கியது.

“என் பேக்ல ஒரு சின்ன பிஸ்கட் பாக்கெட் ஒண்ணு இருக்கும் பாரு. எடுத்து சாப்பிடு” என்றான். எடுத்து கவரைப் பிரித்துக்கொண்டு வந்து அவனருகில்
உட்கார்ந்தவள் அவனிடம் கவரை நீட்ட, “பசியில்லை” என்றுவிட்டான்.

அந்த நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்த சில மலைவாழ் பெண்கள் சித்தார்த்தைக் கண்டவுடன் பேச சித்தார்த்தும் நலம் விசாரித்தான். ராஜகோபாலன் சின்னச் சின்ன கிராமங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். அதனால், அவர்களுக்கு இவர்கள் குடும்பத்தையே நன்கு தெரியும்.

சித்தாராவைக் கண்டவர்கள் யாரென்று கேட்க, “நான் கல்யாணம் பண்ணிக்கப்
போற பொண்ணு” என்றான். சித்தாராவைக் கண்டவர்கள் புன்னகைக்க இவளும் பதிலிற்கு புன்னகைத்து சித்தார்த்தின் பக்கம் வந்து நின்றாள்.

“சாப்பிட்டிங்களா சின்னய்யா” என்று அவர்கள் விசாரிக்க, “ம்ம் ஆச்சு” என்றான்.
“குயிலி அந்த பழத்தை எடு” என்று ஒருநடுத்தர வயதுப் பெண்மணி சொல்ல,
காட்டில் பறித்த பழங்களை அந்த பதினாறு வயதுப்பெண் தங்கள் கூடையில் இருந்து எடுத்துத் தர சித்தார்த்திடம் தந்தார் அவர்.

“இதெல்லாம் காட்டுல பறிச்ச பழங்கள் சின்னய்யா. நல்லா இருக்கும்” என்றுத் தர,
“அட அதெல்லாம் எதுக்கு நீங்க வீட்டுக்கு கொண்டு போங்க” என்று அவன் சொல்ல,

“இல்லீங்கய்யா. கூடைல நிறையா இருக்கு” என்றவர், “இந்தாங்கம்மா. நீங்க
வாங்கிக்கங்க” என்று சித்தாராவிடம் அவர் பழத்தைக் நீட்ட, அவளோ சித்தார்த்தைப் பார்த்தாள்.

“வாங்கிக்க” என்று அவன் சொல்ல, “தேங்க்ஸ்” என்றவள் அவர்களிடம் இருந்து பழத்தை வாங்கினாள்.

அவர்கள் போனபின் “எப்படித் தெரியும் அவங்களை உனக்கு” என்று வினவினாள்.
அதன் கதையைச் சொன்னவன், “இந்த டைம்ல எப்படி தைரியமா போறாங்க பாரு. அவங்களுக்கு எல்லாம் இந்தக் காடு வீடு மாதிரி” என்றவனிடம் பழத்தை நீட்ட பேசாமல் வாங்கினான்.

சாப்பிட்டு முடித்தவன் நெருப்பை பார்த்தபடி அமைதியாய் அமர்ந்திருக்க
சித்தாராவோ, “ஏதாவது பேசு” என்றாள்.

“ஹம்ம்” என்று மூச்சை வெளியிட்டவன், “என்ன பேசறது. நீ பேசு… நான் வேணா
கேக்கறேன்” என்றான்.

“என்கிட்ட உன்கிட்ட கேக்கறதுக்கு கேள்வி தான் இருக்கு” என்று அவள் சொல்ல,
“கேளு” என்றான்.

“உனக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது அப்புறம் ஏன் என்னை என் அப்பாகிட்ட
பொண்ணு கேட்ட?” என்று அவள் கேட்க அவனோ மௌனமாய் அமர்ந்திருந்தான்.
அவளோ அடுத்த கேள்வியை வீசினாள். “அக்காவை லவ் பண்ண தானே நீ.
அவ்வளவு ஈசியா அவளை எப்படி மறக்க முடிஞ்சுது உன்னால?” என்று கேட்க
அதற்கும் மௌனமே.

திடீரென எங்கையோ ஏதோ கத்தும் சத்தம் கேட்க, “என்ன சத்தம் இது?” என்று
அவள் வினவ, “புலியா இருக்கும்” என்றான்.

“வாட்” என்றவள் தான் உட்கார்ந்திருந்த கல்லில் இருந்து எழுந்து சித்தார்த்தின்
அருகில் போட்டு அமர்ந்தாள். “ஏன் என் பக்கத்துல இருந்தா எதுவும் வராதா?” என்று அவன் கேலி செய்ய அவனை முறைத்தாள்.

“என்ன சொன்னாலும் நம்பிடுவியா. நம்ம ஊட்டில புலி எல்லாம் இல்லை. இது
உன்ன மாதிரி கொரங்கோ கரடியோ கத்தது” என்று அவன் ஒரு சுள்ளியை
நெருப்பிற்குள் வைத்தபடி சிரிக்க அவனது கையில் சரமாரியாக அடித்தாள்.

அடித்து முடித்தவள், “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை சித்தார்த்”
என்றாள்.

“சொல்லியே ஆகணுமா?” என்று கேட்டவனிடம், பொம்மையைப் போல தலையை ஆட்டினாள்.

“அப்ப ஒரு பாட்டு பாடு” என்றாள்.

“இதெல்லாம் கேட்டவுடனே வருமாடா?” என்று அவள் கேட்க, “சரி கொஞ்ச நேரம்
அமைதியா இருக்கலாம். அப்புறம் கண்டிப்பா தோணும். என்ன தோணுதோ பாடு” என்றான். நேற்று அவள் பாடியதிலேயே அவன் சிறிய வயதில் கேட்ட குரல் அவளுடையது தான் என்று யூகித்திருந்தான். அவளின் குரலின் மயக்கத்திலும் இருந்தான்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ சித்தார்த் அவளைக் கவனித்தான். த்ரீ ஃபோர்த் ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற டி சர்ட்டில் இருந்தவள் முடியை ஒரு பக்கமாக முன்னே தூக்கி போட்டிருந்தாள். அந்த இரவின் பனியும் குளிர் காற்றும் லேசாக சுழல இருவரின் முகத்திலும் அடித்தது. அழகின் பிறப்பிடத்தில் அழகே உருவாய் உட்கார்ந்திருந்தவளை சித்தார்த் அவ்வப்போது ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டு இருந்தான்.

கண்ணழகா… காலழகா…
பொன் அழகா… பெண் அழகா…
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம்
அழகா…
உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி…
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி…
எங்கேயோ பார்க்கிறாய் என்னெனென்ன
சொல்கிறாய்…
எல்லைகள் தாண்டிட மாயங்கள்
செய்கிறாய்…
உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை
சொல்கிறேன்…
உன் உயிர் சேர்ந்திட நான் வழி
பார்க்கிறேன்…

“இதழும் இதழும் இணையட்டுமே” என்ற வரிகளை அவள் பாடி முடிக்கும் முன்
அவளின் மகிழம்பூவிழை சித்தார்த் சிறை செய்திருந்தான். ராகம் பாடிய இதழ்களில் சித்தார்த் சப்தமில்லா ஸ்வரங்கள் இயற்ற சித்தாராவின் இதயம் தாளமிட்டது. முதலில் மறுத்துவள் அவன் விடாக்கண்டனாய் கொடுத்த முத்தங்களில் மொத்தமாய் தன்னை இழந்தாள்.

அன்று பௌர்ணமி இரவின் நிலவொளியில் அவன் இட்ட முத்தங்களைக் கண்டு விண்மீன்கள் நிலவு மகளின் பின் ஒளிந்துகொண்டது. முதல் முத்தத்தில் தடுமாறி தயக்கத்தோடு ஆரம்பித்தவனும் மொத்தமாய் அவள் இதழில் மூழ்கி, தித்திக்கும் முத்தங்களை அவளிற்குத் தர நிலவு மகளும் மேகத் திரையை சிறிது நேரம் தன் முன் இழுத்து அவர்களுக்கு தனிமை அளித்தாள். இன்னும் இன்னும் என்று கேட்டவன் அவளை இடையோடு சேர்த்து இன்னும் அணைத்து இறுக்க, அவளது கைகளோ அவனது தோளைப் பற்றியது. நொடிகள் நிமிடங்களாகக் கழிய கண்களை திறந்த சித்தாராவிற்கு இருக்கும் நிலை புரிய தன் பலம் கொண்டு அவனைத் தள்ளிவிட்டு எழ, அவளின் கைகளைப் பற்றிய சித்தார்த்,

“ஐ லவ் யூ தாரா” என்றான்.

Leave a Reply

error: Content is protected !!