கிட்காட்-9

கிட்காட்-9
கிட்காட்-9
சின்மயி வீட்டின் அறையிலிருந்து தனியாக தாத்தாவிடமும் ரமணாவிடமும்
பேசிவிட்டு வெளியே வந்த சித்தார்த்தின் முகம் பாறையாக இருந்தது.
அனைவரும் சித்தார்த் என்ன சொல்லப்போகிறானோ என்று மனதை அலட்டிக் கொண்டிருக்க, சித்தார்த் வர்ஷினியைப் பார்த்தான். வர்ஷினிக்கு சித்தார்த்தின் பார்வையிலேயே புரிந்தது.
வெளியே வந்து மகளைக் காணவில்லையென அழுத மனைவியிடம் “நல்லா தேடிப்பாரு தேவி” என்று கேசவன் பல்லைக் கடிக்க,
“அப்பா. அம்மா சொல்றது உண்மைதான். அக்கா வீட்டுல இல்ல” என்றாள் சித்தாரா மனதில் நடுக்கத்துடன். அங்கு இருப்பவர்கள் ஏதாவது சகோதரியைப் பேசிவிடுவார்களோ என்று அவளுக்குப் பதறியது.
மனதில் ஏறிய கனத்துடன் கேசவன் திரும்ப அனைவரும் நின்றிருந்தனர். அனைவரின் முகத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி என்றால் சித்தார்த்தோ இறுகியிருந்தான். “எங்களை மன்னிச்சிடுங்க” கேசவன் இருகைகளையும் கூப்பிச் சொல்ல,
“அந்த ரூமை நான் யூஸ் பண்ணிக்கலாமா?” சித்தார்த் வினவினான். கேசவன் புரியாமல் பார்க்க, “நான் என் தாத்தா கூட தனியா பேசணும். சொல்லுங்க?” என்று அவன் கேட்க, அங்கிருந்த தனியறையை காட்டினார் கேசவன்.
“ரமணா, நீயும் வா” என்று இருவரையும் இறுகிய முகத்துடன் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றவன், கதவை அவன் முகத்தைப் போலவே இறுக தாளிட்டான்.
இறுகிய முகத்துடன் இருவரிடமும் திரும்பியவன் அவர்களைப் பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது. அவனைப் பார்த்த இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது. மூவருக்கும் சிரிப்பில் முதுகு குலுங்க சிரிப்பு சத்தம் வெளியே வராமல் வாயை மூடியிருந்தனர்.
சித்தார்த்தின் ஃபோன் வைப்பரேட் ஆக எடுத்துப் பார்த்தான். “ரீச்ட். அன்ட் சேஃப்
ஹியர்” என்று அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
“தாத்தா. சின்மயிகிட்ட இருந்து மெசேஜ்” சித்தார்த் ஃபோனைக் காட்ட,
“ஹம். சரி சந்தோஷம். இது நடந்திடும்னு தெரியும் பேரா. ஆனா, இப்ப நடக்கப்போறதை என்ன பண்ணப்போற?” என்று வினவினார்.
“என்னோட பெர்மாமன்ஸை மட்டும் பாருங்க” என்று தனது காலரைத் தூக்கி
கண்களை சிமிட்டியவன், வெளியேவர அவன் முகம் மீண்டும் இறுகியிருந்தது.
வெளியே வந்தவன் வர்ஷினியைப் பார்க்க நடக்கப்போவதை முன் கூட்டியே
அறிந்தவள் மலங்க மலங்க விழித்தாள். சித்தார்த், நேற்று அவள் ஊட்டி வந்தடைந்த போது சொன்னது இப்போது சரியா என்று தோன்றியது. ரமணாவை
வர்ஷினி பார்க்க அவனோ கண்களாலே அவளிடம் எதையோ உணர்த்தினான்.
நவீன், நந்திதா, வர்ஷினி, அருண், அகல்யா எல்லோரும் ஒரு திகிலுடனே
சித்தார்த்தைப் பார்த்தனர்.
கேசவனிடம் திரும்பியவன், “அங்கிள்! நான் சுத்தி வளச்சு பேச விரும்பல. உங்க
இரண்டாவது பொண்ணு சித்தாராவை எனக்குக் கல்யாணம் பண்ணித்தாங்க”
என்று சித்தார்த் நேரிடையாக பட்டென்று கேட்க, சித்தாரா அந்த ஊட்டியின் குளிர்
மைனஸிற்கு சென்றதைப் போல உறைந்து நின்றாள்.
‘இவனையா? இவனை நானா? இவனுடன் வாழ்க்கையா? இவனுடன் எப்படி?’ மனதில் பல கேள்விகள் எழ சித்தார்த்தை வெறித்தாள்.
தந்தை என்ன சொல்லப்போகிறார் என்று அவரைப் பார்க்க அவரோ தலை
குனிந்தபடி நின்றிருந்தார். அவரின் மனமோ சித்தார்த் இளைய மகளைக் கேட்கும் முன்பே அதைத்தான் யோசித்தது. ஆனால், “மூத்த மகளைப் பேசிவிட்டு
இரண்டாவது மகளை கொடுக்க நினைக்கிறீர்களா?” என்று கேட்டு விட்டால் என்று நினைத்தார்.
தந்தையின் நிலையே அவரின் மனதை சொல்லிவிட்டது சித்தாராவிற்கு. இரு நொடி கழித்து நிமிர்ந்தவர் சித்தாராவைப் பார்க்க அவரது விழியைப் பார்த்தவளுக்கு பெருமூச்சு வெளிப்பட்டது.
“சித்தார்த்…” என்று ரவிக்குமார் ஏதோ சொல்ல வர,
“எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லைபா. எனக்கு சித்தாராவைப் பிடிச்சிருக்கு”
என்றான்.
சித்தாரா ஏதோ சொல்ல வர, “நான் சித்தாராவை புடவைக்கு மாத்தி கூட்டிட்டு
வரேன்” என்று மகளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றார் தேவி.
உள்ளே சென்றவர் கதவை மூடிவிட்டுத் திரும்ப, “அம்மா! நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” என்றாள் சித்தாரா பிடிவாதமாக.
“உன் அக்கா எங்களை தலையைக் குனிய வச்சது பத்தாதுன்னு நீயும் பண்ணப் போறீயா?” தேவி கேட்க,
“அதுக்கு என்னை எப்படிமா நீங்க உள்ளே இழுக்கலாம். அதுவும் இல்லாம இது
பொண்ணு பாக்க வந்த சம்பிரதாயம் தானே. நிறுத்திடுங்க இதை” என்றாள்
சித்தாரா.
“சரி அம்மு. உன் இஷ்டம் போல இரு. நானும் உன் அப்பாவும் இரண்டும் பெத்து
எதுவும் எங்க பேச்சு கேக்கலனு நினைச்சுக்கறோம். எங்க விதி அவ்வளவுதான்” தேவி கண்களில் கண்ணீருடன் சொல்ல,
“ம்மா!” என்று பல்லைக் கடித்தவள் ஒரு பெருமூச்சை இழுத்து தன்னை அமைதி
ஆக்கினாள். கண்களைத் திறந்தவள், “அழதேம்மா. நான் அந்த அவதார் பயலை
கல்யாணம் பண்ணிக்கறேன்” என்று முகம் கடுக்க சொன்னவள், “அந்த சேலை
எதாவதை எடு” என்றாள் கைகளைக் கட்டிக்கொண்டு.
வெளியே அனைவரும் அமர்ந்திருக்க வெளியே வந்த தேவி, “தலையை பின்னிட்டு வரச் சொல்லி இருக்கேன்” என்றார் அனைவரிடமும்.
ஒரு முழு நீள லாவண்டர் லாவ் கலியுடன் இடைவரை இருந்த கூந்தலை க்ளிப்
மட்டும் போட்டிருந்து உள்ளே சென்றவள், வெளியே வர அனைவரும் வாயைப்
பிளந்தனர். க்ரீம் நிறமும் பிங்க் நிறமும் சேர்ந்த அந்தப் பட்டுப்புடவை, போட்டி
போட்டு அந்த சந்தன நிற மேனியை அழகூட்ட, ஏற்கனவே அவள் வைத்திருந்த
கண்மையும் லிப்க்ளாஸும் அவளின் கூர்விழியையும் துடிப்பான இதழையும்
எடுத்துக்காட்ட, அந்த மூக்கின் நுனியில் சிறிய சிவப்பு. மாயவனின் மனதை
கொள்ளை கொள்ளப்போகும் மங்கைக்கு கோபமா என்று தேவலோக நாரதர்
சிரித்தார்.
இதுவரை சுடிதார், ஜீன் டாப்பில் பார்த்திருந்த பெண்ணை இப்போது புடவையில் பார்த்த சொர்ணாம்பாள் ரேணுகா மனதில் கூட சின்மயின் ஞாபகம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சித்தார்த்தின் நண்பர்கள் அனைவரின் மனதில் கூட சித்தாராவின் அழகும் குணமும் கவரப்பட்டது. அவர்கள் வந்தபோது ரமணா சொல்லி, சித்தார்த் சித்தாரா வம்பைப் பற்றி அவர்கள் ஓரளவு கேள்விபட்டது தான்.
அப்படியிருக்க சித்தார்த் சித்தாராவை திருமணம் செய்து தரும்படி கேட்டபோது, சித்தாரா நண்பனை தவிர்த்து அவனை ஒதுக்கிவிடுவாள் என்றுதான் அவர்கள்
நினைத்தது. ஆனால், அவள் சூழ்நிலையை புரிந்து இப்போது எல்லோரின் மனதில் சற்றுமுன் எழுந்த சூழலை மாற்றியது அவளின் மேல் அவர்களுக்கு நன்மதிப்பை அளித்தது.
ஆனால், சம்மந்தப்பட்டவனின் விழிகளில் எதையும் காணமுடியவில்லை.
நிச்சியதார்த்தம் அடுத்த வாரத்தில் என்று முடிவு செய்யப்பட திருமணத்தை இரண்டு மாதம் கழித்து வைத்திருந்தனர். ரேணுகா மருமகளுக்கு பூவைச் சூட அங்கிருந்த அனைவருக்கும் ஒருவித நிம்மதிதான். ரேணுகா உட்பட.
முதலில் சித்தாராவைப் பிடிக்காதுதான். ஆனால், தற்போது சின்மயி மேல் எழுந்த
கோபமும், சித்தாரா எதுவும் பேசாமல் மகனைத் திருமணம் செய்ய ஒற்றுக்கொண்டதும் அவரின் மனதை சித்தாராவின் பக்கம் சாயவைத்தது.
“நான் சித்தாரா கிட்ட தனியா பேசணும்” எல்லாம் முடிவு செய்யப்பட்ட பின்
சித்தார்த் சொல்ல, சித்தாரா அவனை நோக்கினாள். அவளும் அதற்காக அல்லவா காத்திருப்பது.
“இரண்டு பேரும் வேணா நம்ம வீட்டுக்குப் போய் பேசிட்டு வாங்கப்பா” என்றார்
ராஜகோபாலன். ரவிக்குமாருக்கோ பற்றிக்கொண்டு வந்தது. ‘என்னை பொண்ணு பாத்த அப்புறம் கூட பொண்டாட்டி கூடப் பேசவிடல. ஆனா, இங்க பேரனுக்கு குடுக்கிற சலுகையைப் பார்’ என்று.
இருவரும் சித்தாராவின் வீட்டைவிட்டு வந்து சித்தார்த்தின் வீட்டை அடைந்தனர்.
வீட்டின் வரவேற்பறையில் இருவரும் நிற்க, சித்தார்த் இடுப்பில் இருபக்கமும்
கை வைத்து அவளை தன் பார்வையால் ஊடுருவிக் கொண்டிருந்தான். அவளோ
கைகளைக் கட்டிக்கொண்டு வேறு திசையை நோக்கிக் கொண்டிருந்தாள்.
சித்தார்த்திற்கு ஞாபகம் பின் சென்றது. சின்மயிடம் தனியாகச் சென்று பேசியது.
சின்மயைப் பார்த்து புன்னகைத்தபடி அவன் இயற்கை அன்னை அள்ளித் தந்த
செல்வத்தை ரசித்துக்கொண்டே அவளை நோக்கிச் சென்றான்.
கருவறைக்கு முன்னிருந்த இடத்தில் சின்மயி நிற்க அவளிடம் சென்றவன், “ஹாய்! ஸாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றான்.
“பரவாயில்லை சித்து” என்றாள் அவளோ.
“எதுக்கு சின்மயி வரச்சொன்ன? என்ன சொல்லணும்” ஆர்வமாய் சித்தார்த் கேட்க,
சின்மயோ மென்று விழுங்கினாள். இருவரும் கிழக்கே பார்த்திருந்த விநாயகர் முன் எதிர்எதிரே நின்றிருந்தனர்.
“அது வந்து… சித்து” என்றவள் இடதுபக்கம் பார்க்க, சித்தார்த்தும் விநாயகர் முதலிலேயே பார்த்து சிரித்துக்கொண்டிருந்த இடத்திற்கு கண்களைத் திருப்ப அதிர்ந்தான்.
“இது கிஷோர் தானே?” அங்கு கொஞ்சம் தூரத்தில் ஃபோன் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து சித்தார்த் கேட்க, “ம்ம்” என்றாள் சின்மயி கிஷோரைப் பார்த்தபடி.
அவளின் கண்களைக் கண்ட சித்தார்த்திற்கு அதிர்ச்சி. அவளின் கண்களில் கிஷோரைக் காணும்போது வழிந்ததைக் கண்டவனுக்குப் புரிந்துவிட்டது. ஏதோ தாத்தாவும் ரமணாவும், ‘ஔட்’ என்று தங்களது ஆள்காட்டி விரலை உயர்த்தி வெள்ளை உடையோடு, கிரிக்கெட் அம்ப்பையர் ஆடுவதுபோல அவன் கண்முன்
தோன்றியது.
ஃபோனைப் பேசி முடித்த கிஷோர் வர, சித்தார்த் எதையும் காட்டிக்கொள்ளாமல்
நின்றான். கிஷோர் சித்தார்த்தை விட இரண்டு வயது மூத்தவன். அவனுடைய
ஸ்கூல் சீனியரும் கூட.
“ஹாய்! சித்தார்த்” என்று வந்த கிஷோரிடம்,
“ஹாய் ப்ரோ” என்றான்.
“சித்து. நானும் கிஷோரும் நைன் இயர்ஸா லவ் பண்றோம்” என்று சின்மயி சொல்ல சித்தார்த்தின் நெஞ்சில் ‘டப்’ என்று ஏதோ வெடித்தது.
‘சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி
முடிச்சிரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே
முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போல
கண்களும் இங்கே நீராட’ என்று மயில்சாமி பாடுவது போலக்கேட்டது அவனிற்கு. ரமணா இப்போது இருந்திருந்தால் கண்டிப்பாக பாடியிருப்பான் என்றும் தோன்றியது அவனிற்கு.
“என்ன சித்து… எதுவுமே பேச மாட்டிறே” சின்மயி கேட்க,
“இல்ல. கொஞ்சம் ஷாக் அதான்” என்று சமாளித்தான்.
கிஷோர் பேச ஆரம்பித்தான். “ஆக்சுவலி சித்தார்த். எங்க லவ் டென்த்லையே
இவங்க வீட்டுல தெரிஞ்சிடுச்சு. சின்மயி அப்பா அதுக்கு அப்புறம் ஊரைக் காலி
பண்ணிக் இவளை கூட்டிட்டு போயிட்டாரு. பட் எங்க லவ் ஸ்ட்ராங்னு அவருக்குத்
தெரியல” என்று கிஷோர் பேச, கண்ணில் ரத்தம் வராத குறைதான் சித்தார்த்திற்கு. அவனிற்கு அவன் மனதில் கட்டியிருந்த மாளிகை இடிந்தது போல உணர்வு.
‘யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக’ என்று அவன் மனம் தள்ளாட அவனின் மூளையோ,
‘என்ன சித்தார்த் ஆப்பு ரொம்ப பெருசோ’ என்று கேள்வி கேட்டு சிரித்தது.
“நாங்க அப்பப்ப ஃபேஸ்புக்ல கான்டாக்ல இருந்தோம். சித்தாராவும் ஹெல்ப்
பண்ணுனா. இவளுக்கு கல்யாணம் பேச்சு வீட்டுல எடுத்தப்ப எனக்காக இவளும் மேல படிச்சு கல்யாணத்தை தள்ளிப்போட்டுட்டா. எங்களுக்குள்ள எல்லாம்
முடிஞ்சிருச்சுன்னு நினைச்சு இவங்க அப்பா இங்க வர முடிவு பண்ணாரு” என்றான்.
“நான் அவருகிட்ட இவங்க வந்த அன்னிக்கே முறைப்படி சின்மயைக் கேட்டேன்… ஆனா” என்றிழுத்தான் கிஷோர்.
ஏனென்றால், கிஷோரின் குடும்பக் கதை அப்படி. எல்லோரும் தங்கள் பெண்ணை
நல்ல இடத்தில் திருமணம் செய்து தர நினைப்பார்கள். வசதி இல்லை என்றாலும் குடும்பப் பின்னணி மிகவும் முக்கியம். நல்ல இடம் தேவை தான். ஆனால், அதைவிட அவர்களுக்கு அக்குடும்பத்தின் பின்னணி முக்கியம். அதுதான் கிஷோரிடம் இல்லை. செல்வம் படைத்திருந்த போதும் கிஷோரின் குடும்பப் பின்னணியைத் தோண்டினால் ஊட்டியில் எந்தப் பக்கமும் அதில் நல்ல செய்தி வராது. கிஷோர் ஐந்தாவது படிக்கும்போது திடீரென அவனின் தாய், தந்தை இறந்துவிட்டதாக செய்தி வர, பள்ளியில் இருந்தவனை அவனது தாத்தா வந்து கூட்டிப்போனார்.
கிஷோரின் தாயாருக்கு யாருடனோ தவறான உறவு இருந்ததை அறிந்த அவனின் தந்தை, அவரைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டுக்கொண்டார். மனைவியை
கோபத்தில் அவர் தன்னை அறியாமல் கொடூரமாய் கொன்றுவிட்டு, அவரையும்
கொன்ற செய்தி பதினேழு வருடத்திற்கு முன்பு ஊட்டியையே உலுக்கிவிட்டது.
அந்தக் கோரத்தாண்டவத்தை அந்த வயதில் புரிந்துகொள்ள முடியவில்லை
கிஷோரால். அவனின் தாத்தாவே அவனை வளர்த்தது. அப்போது தான் அவனிற்கும் சின்மயிற்கும் சித்தாரா மூலம் பழக்கம் ஏற்பட்டது.
நான்காவது படிக்கும்போது சின்மயின் தோழியைப் பார்த்த சித்தாரா பாட்மிட்டன் கற்றுக்கொள்ள ஆசைப்பட, அவளை பாட்மிட்டன் க்ளப்பிற்கு அனுப்பினார் கேசவன். சின்மயி துணையோடு. அங்குதான் கிஷோருக்கும் சின்மயிக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக ஆரம்பித்தது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவருடப் பழக்கத்திற்குப் பிறகு சின்மயி தான் முதலில் காதலை சொன்னது. அப்போது அவள் ஒன்பதாவது கிஷோர் பதினொன்றாவது.
அந்த வயது அவன் தாய் தந்தை இறந்ததை நன்கு உணர்ந்த வயது. அதுவும் அன்னை செய்த தவறும் தந்தை செய்த செயலும் அவனுள் புழுங்கிக்
கொண்டிருந்தது. யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்
விவரம் தெரிந்த வயதில்.
அந்த நேரத்தில் சின்மயி காதலைச் சொல்ல அவனிற்கு கோபம்தான் வந்தது.
பதினொன்றாவதில் இருந்தவன், “நீ இப்பதான் நைன்த் சரியா. இதெல்லாம்
அட்ராக்ஷன்தான்” என்று அறிவுரை தர, சின்மயிக்கு எதுவும் ஏற மறுத்தது.
ஒருவாரம் சரியாகச் சாப்பிடாமல் இருந்த சகோதரியைக் காணமுடியாமல் சித்தாரா கிஷோரிடம் சண்டைக்குச் சென்றாள். சகோதரி செயலை அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் சித்தாரா. அந்த வயதில் எதையும் புரிந்துகொள்ளும் கெட்டிக்காரி.
அன்று மாலை பாட்மிட்டன் க்ளாஸ் முடிந்து கிஷோர் கிளம்ப, “நில்லுங்க” என்றாள் வழியை மறைத்துக்கொண்டு.
“ஹாய் அம்மு” என்று புன்னகைத்தான். ஊட்டியில் சித்தாராவைத் தெரிந்த
முக்கால்வாசி மனிதர்களுக்கு அவள் அம்முதான். உதட்டை லேசாக குவித்து
கண்களை சுருக்கி முறைத்தவள்,
“என் அக்காவை வேணாம்னு சொன்னீங்களா?” என்று கேட்டாள். அக்காவிற்காக வந்து சண்டைக்கு நிற்பவளைக் கண்டு சிரிப்புதான் வந்தது அவனிற்கு.
“ஆமா அம்மு. அக்கா சின்னப்பொண்ணுல” என்று அவன் தன்மையாகச் சொல்லிவிட்டு அவனது கியர் சைக்கிளில் நகர,
“அக்கா சரியாவே சாப்பிட மாட்டிறா” என்றொலித்த சித்தாராவின் குரலில் அவன் நின்றான். திரும்பிப் பார்த்தவனிடம், “அக்கா இனிமேல் இங்க வரவேமாட்டேன்னு சொல்லிட்டா” என்றாள் சித்தாரா.
“உன் அக்காவை ஒழுங்கா சாப்பிடச் சொல்லு அம்மு. உன்கூட வரச்சொன்னேன்னு சொல்லு” என்றவன் கிளம்பிவிட்டான்.
அடுத்தநாள் தங்கையோடு வந்த சின்மயை கிஷோர் கவனித்தான். அவள் இவனை கவனிக்கவில்லை. ஆனால், வாடியகொடி போல இருந்தவளைக் கண்டவனுக்கு மனம் ‘சுருக்’கென்றது. அம்மு ‘அவள் சாப்பிடவில்லை’ என்று
சொன்னதில் ஏற்கனவே சலனப்பட்டிருந்தது அவன் மனம். அவளை இப்படிப் பார்த்த பிறகு அவன் மனம் சிதறியது. அன்று பாட்மிட்டனிலும் கவனம் சிதறியது.
அம்மு விளையாட்டை முடித்தபிறகு கிளம்ப சின்மயும் கிளம்பினாள் அவள்
தோழியுடன். மூவரும் கிளம்புவதைக் கவனித்த கிஷோர், “ஸாரி ராகுல். நாட்
இன் குட் மூட்” என்று நண்பனிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவர்களுக்கு முன்னே குறுக்கு வழியில் சென்று, சின்மயி வீட்டுவழி ஒற்றை அடிப்
பாதையில் நின்றவன் அவளுக்காக காத்திருந்தான். தன் யோசனையிலேயே
வந்த சின்மயி இவனை கவனிக்கவில்லை. ஆனால், அம்முவும் சின்மயி தோழியும் கவனித்துவிட்டனர்.
“அக்கா” என்று சித்தாரா சின்மயின் விரலை சுரண்ட தங்கையின் கண் ஜாடையில் கிஷோரைக் கண்டாள். அவர்கள் அருகில் வர தங்கையையும்
தோழியையும் முன்னே அனுப்பிவிட்டு அவன்முன் நின்றாள்.
அவன் முன் நின்றவள் எதையும் பேசவில்லை. கண்களில் மட்டும் நீர் திரையிட்டது. “சின்மயி, நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்” கிஷோர்.
“ம்ம்” சின்மயி.
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. ஆனா மை பாஸ்ட் இஸ் பேட்” என்றவன், “நான்
சொல்றேன் எல்லாத்தையும் கேட்டுட்டு உனக்கு ஒகேனா சொல்லு” என்றவன்
அனைத்தையும் மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான்.
“இப்ப சொல்லு சின்மயி. என்னைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான். அவள்
பின்வாங்கி விடுவாள் என்று நினைத்தான்.
“எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும் கிஷோர்” என்றாள் தலையைக்
குனிந்தபடி. “எனக்கு இது அட்ராக்ஷன் மாதிரி தோணலை” என்றாள் உதட்டைக்
கடித்து கண்ணீரை அடக்கியபடி.
“சரி. அப்ப என்ன ஆனாலும், யாருக்காவும், எதுக்காகவும் என்னை விட்டுப்போக மாட்டீல?” கிஷோர் கேட்க, சின்மயோ நிமிர்ந்தாள். அவனிற்கு அன்னை தந்தையைப் போல் இவளும் பாதியில் போய்விடுவாளோ என்ற பயம்.
“மாட்டேன்” என்றாள் அவனைப் பார்த்தபடி.
“ஐ லவ் யூ சின்மயி” என்று அவன் புன்னகைத்தபடி அவன் சொல்ல சின்மயோ அவனருகில் வர, “ஐய்… நோ… நோ… நீ பர்ஸ்ட் ஸ்கூல் முடி” என்று புன்னகைத்தபடியே நகர்ந்துவிட்டான். வயதில் சிறியவனாக இருந்தாலும் தன்
கடந்தகாலம் சொல்லித் தந்த பாடத்தில் அவன் மிகவும் முதிர்ந்திருந்தான்.
அதனாலேயே சின்மயை எல்லையில் நிறுத்தியது அவன்.
இங்கு நடந்து கொண்டிருந்ததை பார்த்த சித்தாராவும் சின்மயி தோழியும் அங்கு
வந்துசேர அவர்களைப் பார்த்த கிஷோர், “என்ன அம்மு… இப்பவாது என்கிட்ட
சிரிப்பியா?” என்று கேட்க,
“எஸ் மாமா” என்றாள். எல்லோரும் அவளைப் பார்க்க, “இல்ல… என் அம்மா
பெரியப்பாவை மாமா தான் சொல்லுவாங்க. அப்ப நீங்க மாமா தானே எனக்கு” என்று சித்தாரா வினவ,
“ஆமா… மாமா தான்” என்று கிஷோர் சொல்ல இருவரும், ‘ஹைபை’ அடித்துக்
கொண்டனர். அதற்குப் பிறகுதான் பாட்மிட்டன் க்ளாஸில் இருந்த யாரோ சொல்லி கேசவன் ஊரை காலி செய்தது. கொஞ்ச நாளில் கிஷோரின் தாத்தாவும் இயற்கை எய்தினார். அதன் பிறகும் ஃபேஸ்புக், கல்லூரியில் இருக்கும்போது ஃபோன் என்று சின்மயி தொடர்பு கொண்டாள். அவர்களை பிரிக்க நினைத்து கேசவன் செய்த விஷயம் இருவரின் காதலையும் பலப்படுத்திவிட்டது.
மறுபடியும் ஊட்டி வந்த பின் முறைப்படி வந்து பெண் கேட்டவனை, “அனாதைக்கு
எல்லாம் என் பெண்ணைத் தரமுடியாது” என்று அவமானப்படுத்தி அனுப்பினார்.
சின்மயி வீட்டில் தந்தையை சம்மதிக்க வைக்கப் போராடி அடியும் வாங்கி
இருந்தாள். மனம் சோர்ந்த போதுதான் அவள் சித்தார்த்தை மீண்டும் பார்த்தது.
அவனிடம் உதவி கேட்கத் தான் அவள் நினைத்து அவனிடம் சென்று கேட்கப் போனது. அப்படி கோயிலில் பேசப்போன போதுதான் பேச்சை மாற்றி சிறிய
வயதில் நடந்ததை எல்லாம் சித்தார்த் நினைவு படுத்தியது.
கிஷோர் சொன்னதைக் கேட்டவன், “இதுல நான் என்ன ஹெல்ப் பண்ணனும்”
நேராக விஷயத்திற்கு வந்தான்.
“எங்களுக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்துக்கு கையெழுத்து போட மட்டும் ஆள் ரெடி பண்ணு சித்தார்த். எனக்கு யாரும் இல்லை” என்றான் கிஷோர்.
“கிஷோர்! பழசு எதுவும் நான் மறக்கலை. பெரிய தாத்தாக்கும் என் தாத்தாக்கும்
என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியல. பட் நீ எப்போமே என் அண்ணன்தான்”
என்று அவனை அணைத்துக்கொண்டான் சித்தார்த். ஆம், சித்தார்த்தின் தாத்தாவும் கிஷோரின் தாத்தாவும் உடன்பிறந்த சகோதரர்கள். ராஜகோபாலன் காதல் திருமணம் செய்தபோது அவரை ஒதுக்கிய குடும்பம் அவரை ஏற்றுக் கொள்ளவே இல்லை. கிஷோரின் பெற்றோர் இறந்த போதும் துக்கம் கேட்க
சென்றவரிடம் கிஷோரின் தாத்தா பேசவில்லை. வீம்புடனே கடைசி வரை
இருந்துவிட்டு சென்றுவிட்டார்.
“தாங்க்ஸ் டா” என்று தம்பியை அணைத்த கிஷோர், “நீதான் சைன் பண்ணனும்”
என்று சொல்ல சித்தார்த்திற்கு தாத்தாவிடம் சொல்லிவிட்டு வந்தது. உடனேயே மூளையில் கணக்கிட்டவன், “சின்மயி. எனக்கும் உனக்கும் வீட்டுல கல்யாணம் பேசப்போற முடிவுல இருக்கு” என்று சித்தார்த் சொல்ல பதறியவள்,
“இருஇரு. நான் பாத்துக்கறேன். நீ வீட்டுல இப்பக் கேட்டா ஓகே சொல்லிடு. நான்
அடுத்த ப்ளானை உன்கிட்ட சொல்லிடறேன்” என்றான். அப்போது தான் ரமணா இவர்களை பார்த்துவிட்டு அருகில் வந்தது.
“சித்து, உன்னை நம்பிதான் இருக்கேன்… விட்ற மாட்டில சித்து” அவள் சித்தார்த்தின் கைகளைப் பிடித்தபடிக் கேட்க,
“நான் பாத்துக்கறேன் சின்மயி” சித்தார்த்.
“ஆனா சித்து இந்த விஷயம்…” சின்மயி ஆரம்பிக்க, அவள் மனநிலை அவனிற்கு
புரிந்தது. என்னதான் திருமணம் முடித்தாலும் தந்தை தன்னை ஏற்றுக் கொள்வாரா என்று?
“என்னை நம்பு சின்மயி… நான் இருக்கேன் சரியா… நான் உடனே தாத்தாகிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்… நோ வொரிஸ்… நீ பர்ஸ்ட் அழுகறத நிறுத்து” என்றான். அதாவது அவர்கள் கல்யாணத்திற்கான ஏற்பாட்டை
சொன்னான்.
“அப்ப எங்க வீட்டுல…” சின்மயி ஆரம்பிக்க,
“எல்லாம் தாத்தா பாத்துக்குவாரு” என்றான் உறுதியாக. அதாவது அவர்கள்
இருவரையும் ஏற்றுக்கொள்ள வைப்பது தாத்தாவின் பொறுப்பு என்று வாக்களித்தான். அதன்பிறகு சின்மயை கலாய்த்து சிரிக்க வைக்க, கிஷோரும்
சின்மயும் தனியே ஏதோ பேச முன் சென்றனர்.
“மச்சா என்ன ஆச்சு… யாரு அவன்?” அவர்கள் முன்னே சென்றபின் ரமணா
கேட்க,
“மச்சா இன்னுமாடா புரியல. அது சின்மயோட ஆள். அதவாது என் அண்ணன் கிஷோர்” என்றவன் அனைத்தையும் சொல்லி முடித்தான்.
அனைத்தையும் சொன்னவன் நண்பனை சோகமாகப் பார்க்க, அவனோ ஒற்றை
விரலை வாயின் மேல் வைத்து குலுங்கிக் கொண்டிருந்தான்.
“டேய்!” என்று சித்தார்த் பல்லைக் கடிக்க,
“மச்சா அங்க பாரேன். உன் ஆளு ஆளுன்னு சொன்ன சின்மயி அவ ஆளோட போகுது” என்று சிரித்தவனை சித்தார்த் முறைக்க,
“ஸாரி! ஸாரி! மச்சான் முறைக்காதே. உன் ஆள் இல்லை. உன்னோட அண்ணி”
என்றவனை சித்தார்த் அடிக்கத் துரத்த, அவனிடமிருந்து தப்பித்தவனோ, “அது
எப்படி எப்படி… சித்து… சித்துவா… ஹாஹாஹா” என்று சத்தமாகவே சிரித்து
விட்டான்.
“சித்துக் கண்ணா… என்ன ஆச்சு… ஆப்பு சொருகிடாங்களா உனக்கு” என்று கொஞ்சம் தூரமாக நின்று குழந்தையைக் கொஞ்சுவது போலக் கேட்டவன்,
“அஹ்அஹ்ஹாஹாஹாஹா” என்று நெஞ்சை நீவி நீவி சிரித்தான்.
சித்தார்த்திற்கோ நண்பன் செய்யும் செயலில் மன வருத்தமோ எதுவுமே
இல்லை. அவனிற்கே தெரியவில்லை ஏன் தனக்கு கோபம், ஏமாற்றம் எதுவுமே
தோன்றவில்லை என்று. மாறாக ஏதோ தெளிவான உணர்வு. இதற்கும் மேல்
நண்பன் கேலி செய்து சிரிப்பது வேறு அவனிற்கும் சிரிப்பு வந்தது.
உதட்டை சுருக்கி நண்பனை சிரிப்பை அடக்கியபடி சித்தார்த் பார்க்க ரமணாவோ, “ஸாரி மச்சா. ஸாரி மச்சா”, “ஒரு ஆம்பிளையோட மனசு ஒரு
ஆம்பிளைக்குத் தான் புரியும். எனக்கு நல்லாவே புரியுது” என்று அவன் சீரியஸாக ஆரம்பிக்க சித்தார்த்திற்கு சிரிப்பு வந்தது.
“டேய்” என்று ஆரம்பிக்க சிரித்துவிட்டான். இருவரும் வயிறு வலிக்க சிரித்து
முடித்தனர்.
“எனக்கு சோகமாவே ஃபீல் ஆகல மச்சான்… அதான் ஏன்னு தெரியல” என்றான் சித்தார்த்.
“மச்சான் நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே” ரமணா கேட்க,
“சொல்லுடா” என்றான்.
“உனக்கு சின்மயி மேல இருந்தது அட்ராக்ஷன் அன்ட் ஒரு ப்ரண்ட்ஷிப் தான்… இரு இரு நான் பேசி முடிச்சிடறேன் அப்புறம் பேசு. சப்போஸ், நீ சின்மயை லவ் பண்ணியிருந்தா இப்ப கிஷோருக்கு கண்டிப்பா விட்டுக்கொடுத்து இருக்கமாட்ட. அதுவும் உன் கேரக்டருக்கு அது உன் அண்ணனா இருந்தாலும் சரி எவனா இருந்தாலும் சரினு ஒரு கை பாத்திருப்ப. ஒரு அளவு கடந்த பிரண்ட்லி அப்பெக்ஷன்னு நினைக்கறேன் உனக்கு சின்மயி மேல. அதுனால தான் பூவே
உனக்காக விஜய் மாதிரி சின்மயையும் கிஷோரையும் சேத்தி வைக்கப்போற நீ”
என்று ரமணா சொல்ல, தனது நெஞ்சின் மேல் கை வைத்து, “ஹம்ம்ம்” என்று
வாரணம் ஆயிரம் சூரியா போல சித்தார்த் செய்ய,
அவனது கையை பிடித்து கீழே இறக்கிய ரமணா, “மச்சி… உண்மையை சொல்லு
ஃபீல் பண்றியா” என்று வினவினான்.
“நானும் சோகமா இருந்து பாக்கலாம்னு தான் நினைக்கறேன். ஆனா முடியல”
என்று சித்தார்த் சிரிக்க, “த்தூ” என்றான் ரமணா.
“ஹம்! ஹம்!” என்று சட்டையைத் துடைத்த சித்தார்த், “போங்க தம்பி. சண்டைல
கிழயாத சட்டை எங்க இருக்கு” என்று நடக்க ஆரம்பிக்க முன்னால் சின்மயோடு
நின்று பேசிக் கொண்டிருந்த கிஷோரும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
அடுத்து தாத்தாவிடம் அனைத்தையும் சொன்னான். அவரும் பேரனிற்காக
பெருமைப்பட்டார். சித்தார்த்தே வருத்தப்படவில்லை என்ற போது தாத்தாவும் வருத்தம் கொள்ளவில்லை. அவரும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்.
“ஆனா, உனக்கு கல்யாணம்னு கூட்டிட்டு அங்க போய் அது நின்னா கிழவி ஒப்பாரி வச்சிடுவாளே… உன் அம்மா அப்பா சங்கடப்படுவாங்களே சித்தார்த்” என்று தாத்தா மனதில் நெருடலுடன் சொல்ல,
“தாத்தா! கிஷோரும் உங்க பேரன் தானே” என்று சொல்ல, “கண்டிப்பா சித்தார்த்.
அவனும் என் பேரன்தான். ஆனா ஒருத்தனுக்கு நடந்து ஒருத்தனுக்கு நின்னா அது எனக்கும் சங்கடம் தானே” என்றார்.
“தாத்தா. நான் என்ன சன்னியாசியாவா நிக்கப்போறேன். கூல் தாத்தா” என்று
அவரை சமாதானம் செய்தான். பிறகு, இரு நாட்கள் கழித்து வந்தவன், “தாத்தா,
நான் சித்தாராவைக் கல்யாணம் பண்ணிக்கறேன்” என்று சித்தார்த் சொல்ல,
ரமணாவோ, “வாட்” என்றதிர, தாத்தாவோ, “அது சின்னப் பொண்ணுடா” என்றார்.
“எது நம்ம கடைல ஜாப் கிடைச்சவ சின்னப்பொண்ணா. தாத்தா நான் நல்லா
யோசிச்சுதான் சொல்றேன். அவ இருந்தா எனக்கு கடைக்கும் ஹெல்பா இருக்கம்ல” என்றவன், “எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கிறதுல அப்ஜக்ஷன் இல்ல. சின்மயி போற அன்னிக்கு சித்தாராவை பேசி முடிச்சிடலாம்” என்றான்.
“டேய், அவ போனா உனக்கு சித்தாராவை கல்யாணம் பண்ணித் தருவாங்களா?”
ரமணா கேட்க,
“எத்தனை படம் பாத்திருப்போம் சின்ன வயசுல. அக்கா போயிட்டா தங்கச்சியை
தாண்டா கல்யாணம் பண்ணி வைப்பாங்க” என்று இரண்டு கையை மேலே தூக்கிச் சொல்ல, “எதுவா இருந்தாலும் நல்லதே நடக்கும்” கடவுள் மேல் பாரத்தைப் போட்டபடி தாத்தா சொல்ல அடுத்த வேலைகளை தயார் செய்தான்.
இருநிமிடத்தில் மனக்கண் முன் எல்லாம் வந்துபோக தன் முன் நின்ற சித்தாராவைப் பார்த்தான் சித்தார்த். அவளோ சித்தார்த் தன்னைப் பார்ப்பதை
உணர்ந்தாலும் பார்வையை அவனிடம் திருப்பவில்லை.
முன்னே ஓர் எட்டு சித்தார்த் எடுத்து வைத்து அவளருகில் செல்ல திடுக்கிட்ட
சித்தாராவோ, பின் நகர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். இல்லை இல்லை
முறைத்தாள். சித்தார்த் மீண்டும் தயங்காமல் எட்டுக்களை எடுத்து வைத்து
அவளை நெருங்க நெருங்க தன் பாதங்களை பின் நகர்த்தியவள் இறுதியில் சுவற்றில் இடித்து நின்றாள்.
அவளை இடிக்காமல் ஒரு இன்ச் இடைவெளியில் அவன் நிற்க அவளின் பார்வையோ மாறவில்லை. அதாவது அவளின் முறைப்பு மாறவில்லை. ஒரு கையை சுவற்றில் ஊன்றி சாய்ந்து மற்றொரு கையை வேண்டுமென்ற அவள் இடையிடம் கொண்டு சென்றவன், அதன் பின் இருக்கும் சுவற்றில் கையை வைத்து அவளை நகரவிடாமல் தடுத்தான். அவன் நெருக்கமாக நிற்க, அவளோ
அசையக்கூட முடியாதபடி நின்றிருந்தாள் சிறைபட்டவள் போல.
அவளை நோக்கி சித்தார்த் குனிய சித்தாராவோ தன் இருகைகளால் முகத்தை மூடினாள் சிறிது பயத்தில். ‘கடவுளே கிஸ் அடிக்கப்போறானா’ என்று அவள் கடவுளிடம் கேட்க, மூடிய முகத்தினுள் கண்கள் இறுக அவள் உதடுகள் துடித்து கோபத்தில் மூக்கும் சிவந்தது. அவள் காதின் அருகில் அவனது மூச்சுக்காற்றை
உணர்ந்தவளுக்கு அடுத்து அவன் பேசிய வார்த்தை சிலையாக உறைய வைத்தது.
“இனிமேல் இந்த உதவாக்கரையோட தான் உன் வாழ்க்கை” என்று சித்தார்த்
கிசுகிசுப்பாக அழுத்தம் திருத்தமாகச் சொல்ல முகத்தில் வைத்திருந்த கையை
இறக்கி கண்களுக்குக் கீழ் வைத்து அவனை முறைத்தவள் அவனை தன் பலம் கொண்டு அவனைத் தள்ளிவிட்டாள்.