Nee Enaku Uyiramma–EPI 3

189613085_863389437581725_4803627891963141566_n-42950cc7

Nee Enaku Uyiramma–EPI 3

அத்தியாயம் 3

அன்று ஞாயிற்றுக் கிழமை. வேணி கபே வைத்திருக்கும் இடத்தில் பெரும்பாலான ஆபிஸ்கள் மூடப்பட்டிருக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுப்பயணிகள் கொடுக்கும் வியாபாரம் இருந்தாலும், வார நாட்கள் மற்றும் சனிக்கிழமை மாதிரி எல்லாம் விற்றுத் தீர்வதில்லை.

அதனாலேயே ஞாயிற்றுக் கிழமையை இவளும் கபே அடைப்பு நாளாக்கி இருந்தாள். இவளுக்கு டோனாட், மஃபின், கேக் வகைகளையும், வாழை இலையில் சிறிதாய் மடித்து விற்கப்படும் மலேசியாவின் தேசிய உணவான நாசி லெமாவையும்(தேங்காய் பால் ஊற்றி ஆக்கப்பட்ட சாதம், கடலை, நெத்திலி, உறைப்பான சம்பல், முட்டை, வெள்ளரி என கலந்து வரும் உணவு) சப்ளை செய்பவர்களும் அன்று விடுமுறையில் இருப்பார்கள். அதனாலேயே அந்த நாளை ஓய்வு நாளாக தேர்ந்தெடுத்திருந்தாள்.

பானங்களையும், சாண்ட்விச் வகையறாக்களையும் இவளே தயாரிப்பாள். அதற்கான காய்கறிகளை ஞாயிறு ஒரு முறையும் புதன் ஒரு முறையும் வாங்கி பெரிய ப்ரிட்ஜில் ஸ்டோர் செய்திடுவாள் வேணி. அந்த ஞாயிறும் காலை ஐந்துக்கே எழுந்தவள், பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது பத்து மாத மகனை ஆசையாய் பார்த்திருந்தாள்.

“அழகன்டா எங்க கேஷவ் குட்டி!” என கருத்தக் குட்டியாய் இருக்கும் தன் மகனைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டவள்,

“ஐயயோ! தூங்கற புள்ளயே ரசிக்கக் கூடாதுன்னு சொல்வாங்களே! மன்னிச்சிருங்க கடவுளே! இனிமே இப்படி ரசிக்க மாட்டேன்! என் புள்ளய என் கண்ணாருல இருந்து காப்பாத்துங்க!” என கன்னத்தில் தப்பு தப்பு என போட்டுக் கொண்டாள்.

தனது போர்வையை மடித்து வைத்தவள், மகனை சுற்றி அணையாக பல தலையணைகளை அடுக்கி விட்டு எழுந்தாள். காலைக் கடன்களை முடித்தவள், இன்னும் சுகமாய் உறங்கிக் கொண்டிருக்கும் மகனை உசுப்பி எழுப்பினாள்.

“கேஷ்! ராஜாக்குட்டி! எழுந்திரிடா செல்லம்! இன்னிக்கு நாம பசாருக்கு(பசார்—மலாயில் மார்க்கேட்) போகனும்ல! வாடாம்மா, எழுந்துக்குங்க!”

தூக்கத்துக்கு சிணுங்கினான் சின்னவன். இவளுக்கு மனம் பாரமாகிப் போனது. இவளுக்கும், இவளோடு இருப்பதால் சின்னவனுக்கும் நிம்மதியான காலைத் தூக்கம் இருந்ததே இல்லை. வார நாட்களில் பேபி சிட்டரிடம் விடுவதற்காக காலையிலே எழுப்பி கிளப்புவாள். வார இறுதியில் இவளே குழந்தையைப் பார்க்க வேண்டி இருப்பதால், வெளியே தன்னோடே அழைத்துப் போய் விடுவாள்.

சுடுநீரில் உடலை துடைத்து மட்டும் விட்டவள், பவுடர் போட்டு தன் கருத்தக் குட்டியை வெள்ளைக் குட்டி ஆக்கி வைத்தாள். பின் பம்பேர்ஸ் போட்டு பால் கலக்கிக் கொடுத்தவள், அவனுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு இவளும் கிளம்பினாள்.

முக்கால் கால் ஜீன்ஸ் ஒன்றை மாட்டிக் கொண்டு கருப்பு ப்ளவுஸ் ஒன்றை அணிந்துக் கொண்டவள், தலை வாரி சின்னதாய் பொட்டு வைத்து, பவுடரையும் லேசாய் ஒற்றிக் கொண்டாள்.

மகனைத் தூக்கி ப்ராமில் உட்கார வைத்தவள், அவர்களின் குட்டி அப்பார்ட்மெண்டின் கதவைப் பூட்டினாள். பக்கத்து வீட்டு சீன ஆண்ட்டி கேஷைப் பார்த்து கையாட்ட, அவனும் கையாட்டினான். இவளும் அவருக்கு ஒரு வணக்கம் சொல்லி விட்டு, தனது கார் பார்க் செய்திருக்கும் இடத்துக்கு ப்ராமைத் தள்ளிக் கொண்டே நடந்தாள். அது ஒரு நீல வர்ண மைவி(மலேசிய கார்). இவளது பெரிய தம்பி முன் பணம் போட்டு வாங்கிக் கொடுத்திருந்தான். பணம் வந்ததும் அதை திருப்பிக் கொடுத்திருந்தாள். மாத தவணையை இவளே கட்டிக் கொள்கிறாள்.

மகனைத் தூக்கி பேபி சீட்டில் அமர வைத்தவள், ப்ராமை மடித்து கார் டிக்கியில் போட்டாள். மகனுக்கு பால் கொடுத்திருந்தவள், லேட்டாகி இருக்க தான் ஒன்றும் கலக்கிக் குடித்திருக்கவில்லை. என்னவோ இப்பொழுதெல்லாம் அதிக வேலை செய்தால் மூச்சு வாங்குகிறது அவளுக்கு. ஆழ மூச்செடுத்து விட்டவள், காரின் ட்ரைவர் சீட்டில் அமர்ந்தாள்.

“ரெடி ஜூட் போலாமா கேஷ்?” என மகனைப் பார்த்து கேட்க,

“ஜூஜூ” என ஆர்ப்பரித்தான் அவன்.

மகனின் உற்சாகம் வேணியையும் தொற்றிக் கொண்டது.

“அடிச்சுத் தூக்கு அடிச்சுச் தூக்கு

அட்சித் தூக்கு” என ரேடியோவோடு சேர்ந்து இவள் கத்திப் பாட மகனோ,

“கூக்கூ, கூக்கூ” என கோரஸ் கொடுத்தான்.

பத்து மாத குழந்தைத்தானே, இன்னும் பேச வரவில்லை அவனுக்கு. அம்மா பால் மட்டும் வாயில் நன்றாக வரும். அதற்கு மேல், வேணா, மண்டி(குளிப்பது மலாயில்), சூச்சூ என சில வார்த்தைகள் பேசுவான்.

மார்க்கேட் வளாகத்தை அடைந்ததும் காரை பார்க் செய்தாள் வேணி. மகனைக் கையில் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். குப்பென கலவையான மணங்கள் மூக்கை வந்து மோதியது. காய்கறிகளைத் தவிர கோழி, மீன், ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி என எல்லா அசைவ வகைகளும் இங்கே கிடைக்கும். அந்த மார்க்கேட்டில் பொருட்களை வாங்கி அடுக்கிக் கொள்வதற்காக ட்ராலி கொடுப்பார்கள். ஒரு ரிங்கிட் காய்ன் போட்டு அந்த ட்ராலியை எடுத்துக் கொண்டு, பயன்படுத்தி முடித்ததும் உரிய இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் அந்த காய்னை எடுத்துக் கொள்ளலாம். அதில் குழந்தையை அமர்த்திக் கொள்ளவும் வசதி இருக்கும்.

ட்ராலியை எடுத்துக் கொண்டவள், மகனை இடுப்பில் வைத்துக் கொண்டே உட்காரும் இடத்தை வெட் டிஷூவால் துடைத்தாள். அதன் பிறகே மகனை அதில் அமர்த்திக் கொண்டு ட்ராலியைத் தள்ளிக் கொண்டுப் போனாள். டிஷூவைப் பயன்படுத்தும் போதே அவனின் ஞாபகமும் அழையாமல் வந்து நின்றது.

முதல் நாள் காபி வாங்க வந்தவன் தான். அதன் பிறகு அவனைக் காணவில்லை வேணி.

‘அன்றைக்கு ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கவும் ஒரு மரியாதைக்குப் பேசியிருப்பான். என்னை மாதிரி லாஸ்ட் கிளாஸ் அறந்தவாலுங்க கிட்டலாம் பேசிப் பழக அவனுக்கு என்ன பைத்தியமா! ஸ்கூல் டைமிலேயே என்னைலாம் கேவலமா பார்ப்பான், இப்போ பெரிய முதலாளி மாதிரி இருக்கான். என் கூட பேசறது என்ன, என்னைலாம் கண்ணால பார்க்கறது கூட பாவம்னு நெனைப்பான்! போடா போடா சீனா! இங்கயும் யாரும் உன் ப்ரண்ட்ஷிப் இல்லைன்னு ஏங்கிக் கிடக்கல’ என மனதில் நினைத்துக் கொண்டவள் மகனிடம்,

“ஆமாத்தானே கேஷ்?” என கேட்டாள்.

அவனும் வாயின் ஓரம் எச்சிலை ஒழுக விட்டு ஈயென இளித்தான். யாரும் பார்க்கிறார்களா என சுற்றி முற்றிப் பார்த்தவள், தனது ப்ளவுசைத் தூக்கி அவன் வாயைத் துடைத்து விட்டாள்.

“நல்லா ஜொள்ளு ஒழுகுதுடா உனக்கு! பெரிய வாயாடியா வருவ என்னைப் போலவே!” என மகனைக் கொஞ்சிக் கொண்டவள் வழமையாக காய் வாங்கும் இடத்துக்கு வந்தாள்.

அந்தக் கடையின் பங்களாதேஷ் பணியாளர்களுக்கு இவளையும் கேஷவையும் நன்றாகவேத் தெரியும்.

“வணக்கம் அக்கா!” என சிரித்த முகமாக வரவேற்றான் அவர்களில் ஒருவன்.

நாடு கடந்து வந்திருந்தாலும், வந்த சில மாதங்களிலேயே தமிழ், மலாய், சீனம் என எல்லா மொழிகளையும் ஓரளவு சரளமாகப் பேசும் இவர்களைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது வேணியால். இந்த நாட்டுப் பிரஜையாய் இருந்தாலும் மலாய்(கட்டாயமாய் தெரிந்திருக்க வேண்டும்), தமிழ், ஆங்கிலம் தெரியுமே தவிர சீன மொழியைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வந்ததில்லை வேணிக்கு. நேதனை வம்பிழுக்க என சில பல கெட்ட வார்த்தைகளை மட்டும் கற்று, அவனைப் போக விட்டு சத்தமாய் திட்டி இருக்கிறாள் பள்ளி நாட்களில். அவன் கோபமாய் திரும்பி வருவதற்குள் இவளும் இவள் சகாக்களும் எடுத்து விடுவார்கள் ஓட்டம்.

சாண்ட்விச் செய்வதற்கான காரட், சாலட் இலை, முட்டைக்கோஸ், குடைமிளகாய் என ப்ரேஷாக இருந்தவைகளைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள் வேணி. தனியாக மகனை ட்ரோலியில் விடாமல், தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டே காய்கறி வாங்கும் வேலையையும் பார்த்தாள். குட்டியோ இடுப்பில் இருக்க மாட்டேன் என அட்டகாசம். கொஞ்சம் கொளுகொளுவென இருப்பவனை ரொம்ப நேரமும் தூக்க முடியவில்லை இவளால். அப்படி இப்படி என சமாளித்து வேகமாய் வேலையை முடித்தாள். பணம் கொடுத்ததும், அந்த பங்களா பையனே காய்கறி அடங்கிய பைகளை கொண்டு வந்து ட்ராலியில் வைத்தான். சிரித்த முகமாக அவனுக்கு ஒரு நன்றியை உரைத்தவள், அடுத்து மாமிசம் விற்கும் இடத்துக்குப் போனாள்.

அங்கே சாண்ட்விச் உள்ளே வைப்பதற்கான கோழியை ஸ்லைசாக போட சொல்லி வாங்கிக் கொண்டவள், வீட்டு உபயோகத்திற்கும் கொஞ்சமாக வாங்கிக் கொண்டாள். அதன் பிறகு பழங்கள், வெங்காயம், பூண்டு போன்றவைகளையும் வாங்கிக் கொண்டு காரை நோக்கிப் போனாள்.

மகனை பேபி சீட்டில் அமர்த்தி, வாங்கிய பொருட்களை கார் பின்னால் வைத்திருக்கும் கூலர் பெட்டியில் அடுக்கினாள். அதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது வேணிக்கு.

ட்ராலியைத் திருப்பிக் கொண்டு போய் வைக்காமல், அங்கே ஒரு ஓரமாகவே நிறுத்தி விட்டு காரில் ஏறி அமர்ந்தாள் வேணி. ஒரு ரிங்கிட்டுக்காக ட்ராலி நிறுத்தும் இடத்துக்கு மறுபடி லொங்கு லொங்கு என நடக்க சக்தியில்லை அவளுக்கு.

“ஷப்பா!” என்றபடியே ஏசியை ஆன் செய்தவள் வியர்வை அடங்கும் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாள்.

மகனோ ஏசி முகத்தில் பட்ட நிமிடம் தூங்கிப் போயிருந்தான். அவன் தூக்கம் கலையாத வகையில் மெல்லிய சத்தத்தில் பாடலை ஓட விட்டவள், காரை செலுத்த ஆரம்பித்தாள். மார்க்கேட்டிங் முடிந்து அம்மாவும் மகனும் ஒரு சீனக் கடையில் காலை உணவை உட்கொள்ளுவார்கள். அதன் பிறகு வீட்டுக்குப் போய் அடைந்துக் கொள்வார்கள். சிம்பிளான மதிய உணவு, அதன் பிறகு மகனை அணைத்தப்படி ஒரு தூக்கம், சாயங்காலம் டீ, இரவு உணவு, கார்ட்டுன், ஓடிப் பிடித்து விளையாட்டு, பெரிய பக்கேட்டில் பொம்மை தவளை, வாத்து எல்லாம் உலா வர குளியல் என அன்றைய பொழுது அழகாய் போகும் இருவருக்கும்.    

சீன கடையை அடைந்ததும், காரை பார்க் செய்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள். மகன் பாவமாய் தூங்கிக் கொண்டிருக்க, அவனை எழுப்பவே மனம் வரவில்லை வேணிக்கு. இவள் வயிறு வேறு கடமுடாவென சத்தம் போட்டது.

“இன்னும் பத்து நிமிஷம் தூங்கட்டும். அப்புறம் எழுப்பிக்கலாம்” என சொல்லிக் கொண்டவள், போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

கபேவுக்காக முகநூல் ஆரம்பித்துக் கொடுத்திருந்தான் இவளின் இன்னொரு தம்பி. அதில் எப்படி படங்கள் போட வேண்டும், எப்படி மேசேஜ் வந்தால் ரிப்ளை செய்ய வேண்டும் என இவளை அமர்த்தி தம்பிகள் இருவரும் மூன்று மணி நேரம் டியூசன் எடுத்திருந்தார்கள். அவர்கள் இருவரையும் நினைக்கும் போது மெல்லிய சிரிப்பு வந்தது இவளுக்கு. ஓரளவு பாசக்காரர்கள்தான் இருவரும். ஆனாலும் அவர்களுக்கும் குடும்பம் குட்டியென ஆகி விட, இவள் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டாள்.

‘சோல் கபே’யின் பக்கத்தில் பல மேசேஜ்கள் வந்திருந்தன. ஒவ்வொன்றாக பார்த்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அனுப்பினாள் இவள். போன் செய்தால் ஆபிசுக்கு டெலிவரி செய்வீர்களா, இந்த ஐட்டத்தை மெனுவில் சேர்த்துக் கொள்ளலாமே, அன்று வாங்கிய காபியில் சூடு இருக்கவில்லை என பல மேசேஜ்கள். அதில் ஒரு மேசேஜ் நேதன் லிம் பெயரில் வந்திருக்க, அதை அவசரமாகத் திறந்துப் பார்த்தாள் வேணி.

“வேணி, கிவ் மீ யுவர் நம்பர்!”

ஹாய், பாய் என எந்த முகாந்திரமும் இல்லாமல் நேரிடையாகக் கேட்டிருந்தான் அவன்.

“பார்டா உலக அதிசயத்த! இந்த அப்பாட்டக்கரு நம்ம நம்பர்லாம் கூட கேப்பானா!” என அதிசயித்துக் கொண்டவள், கொஞ்சம் கூட தயங்காமல் உடனே தனது நம்பரை டைப் செய்து அனுப்பி இருந்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் அவள் போனுக்கு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது. போன் சத்தத்தில் மகன் விழித்து விடுவானோ என அவசரமாக அட்டேண்ட் செய்தாள் வேணி.

“ஹலோ!”

“ஹாய் வேணி”

“நேதன்?” என சந்தேகமாய் கேட்டாள் இவள்.

எங்கோ சிக்னல் இல்லாத இடத்தில் இருந்து பேசுவது போல விட்டு விட்டுக் கேட்டது குரல்.

“நான் தான். வேலை விஷயமா அவசரமா தாய்லண்ட் வந்துருக்கேன். அதான் கபேவுக்கு வரல. போன தடவை உன்னோட நம்பர் கூட வாங்கிக்கல நான். இந்த கபே பேஜ்ல மூனு நாளுக்கு முன்னமே மேசேஜ் போட்டுட்டு எப்போ ரிப்ளை வரும்னு வேய்ட் செஞ்சிட்டு இருக்கேன். இப்போத்தான் ரிலேக்‌ஷா ரிப்ளை போடற நீ” என மெலிதாக கடிந்துக் கொண்டான் நேதன்.

“உன்னை மாதிரி பேஸ்புக்க நோண்டிட்டு வெட்டியா ஒக்காந்துருக்கற வேலையா செய்யறேன் நான்!” என இவளும் திருப்பிக் கொடுத்தாள்.

“ஓகே ஓகே சாரி!”

“என்னடா பொசுக்குன்னு சாரிலாம் கேக்கற! எனக்கு அட்டாக் கிட்டேக் வந்துட போகுது” என அதற்கும் அவனை வாரினாள் இவள்.

அங்கே அவன் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“நாம பார்த்துக்கிட்டு இருபது வருஷத்துக்கு மேல ஆகுது மேடம்! அப்போ உள்ள ஸ்கூல் பையனுக்கும் இப்போ இருக்கற ஐ.டி மேனுக்கும் நெறைய வித்தியாசங்கள் இருக்கு! காலம் நெறைய கத்துக் குடுத்துருக்கு எனக்கு”

“நெறைய வித்தியாசம் இருக்குன்றத சத்தியமா நான் ஒத்துக்கறேன்! மண்டை மேல கொண்டைய காணோமே” என அவன் மொட்டைத் தலையைக் கிண்டல் செய்தாள் வேணி.

“ம்ப்ச் வேணி! என் முடிய பத்தி மட்டும் பேசுன, நமக்குள்ள வரப் போற ப்ரேன்ஷிப்ப நான் இப்பவே கேன்சல் பண்ண வேண்டி வரும்” என மிரட்டினான் அவன்.

“பண்ணிக்கோ!” என அசால்ட்டாய் சொன்னாள் இவள்.

அவளது டோண்ட் கேர் அட்டிடீயூட்டில் மெல்லிய புன்னகை வந்தது இவனுக்கு.

“ஓ அப்படியா, சரி விடு! அடுத்த முறை உன் வீட்டுக்கு வந்து நீ ஸ்கூல்ல பேசன கெட்டப் பேச்சு, பண்ண அட்டகாசம் எல்லாத்தையும் உன் ஹஸ்பேண்ட் கிட்ட போட்டுக் குடுக்கறேன்” என்றான் இவன்.

சற்று நேரம் அந்தப் பக்கம் அமைதியாகிப் போனது.

“ஹே வேணி! நான் சும்மா சொன்னேன், பயப்படாதே”

“அவர்கிட்ட பேசனும்னா நீ மேலோகத்துக்குத்தான் டிக்கட் வாங்கனும்!” என்ற பதிலில் வாயடைத்துப் போனான் நேதன் லிம்.

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!