சரணாலயம் – 3

சரணாலயம் – 3

சரணாலயம் – 3

மழையின் பருத்த துளிகள், தனது அயராத பணியில் பூமியை நனைத்துக் கொண்டிருந்தன. நடுநிசியும் தாண்டிய இரவில் மனமெல்லாம் படபடக்க, சரண்யாவின் பேச்சை ஆவலுடன் கேட்க தயாரானான் சசிசேகரன்.

மனைவியின் ஆதங்கத்தை கேட்டறிந்து, அவளது மனபாரத்தை சற்றேனும் குறைத்திட வேண்டுமென்ற தவிப்பு கணவனின் மனதில் தோன்றிய நொடியில் பொறுமையில்லாமல் அவளை பேசவைக்க முயன்று கொண்டிருந்தான்.

“சரண்! நான் கேள்வி கேட்டு எவ்வளவு நேரம் ஆகுது? லச்சு அக்கா என்ன சொன்னாங்கன்னு சொல்லு! இப்படி தூங்காம நடுராத்திரியில பேய் மாதிரி ஏன் முழிச்சிட்டு இருக்க?”

கண்டிப்பாய் கேட்க ஆரம்பித்து கேலியுடன் முடித்தவனின் கேள்வியில், தன்னை மறந்து சிரித்தாள் சரண்யா. தனது தவிப்பான நேரத்தில் அவனும் உடனிருப்பது மனதிற்கு இதமாக இருந்தது. இவ்வளவு நேரம் தனியாக புரண்டு புரண்டு படுத்திருந்த வேதனை முடிவுக்கு வந்ததை போல ஆசுவாசம் கொண்டாள்.

“சரண்…” என மீண்டும் உலுக்க, அவன் கைகளோடு கைகோர்த்து கொண்டே வாயசைக்க தொடங்கினாள்.

“எப்டி சொல்றதுன்னு தெரியல சசி?”

“என்னடி இது… செலான் இல்லன்னு கைவிரிக்கிற பாங்க் ஆபிசர் மாதிரி, நடுராத்திரியில பேசத் தெரியலன்னு சொல்ற?” சசிசேகரன் கிண்டலில் இறங்க,

“ஐயோ… இப்போ உங்க கடியதான் தாங்க முடியல… கொஞ்சமாவது ஃபீல் பண்ண விடுறீங்களா?” சட்டென்று மூண்ட கோபத்தில் வெடிக்க ஆரம்பித்தாள் சரண்யா.

“அப்படியென்ன பொல்லாத கவலை உனக்கு வந்தது?” குறையாத கேலியுடன் இவனும் கேட்க,

“அப்பா… லயா அக்காவோட தனிக்குடித்தனம் நடத்துறாராம்” வேக மூச்சில் ஒரெடியாக போட்டுடைத்தாள். 

“என்னது..!” கணவனும் தன்னைப்போலவே புரிபடாமல் கேட்டதில், சரண்யாவும் நொடிநேரம் பேச்சிழந்தாள்.

“என்னாச்சு… ஏன் இப்படி நடந்தது?” சேகரின் கேள்வியில் அளவில்லா வருத்தம் தோய்ந்து ஒலித்தது.

அறுபத்திஎட்டு வயதான, மூன்று வளர்ந்த பிள்ளைகளுக்கு தந்தையான தனது மாமனார், முதிர்கன்னி பெண்ணைத் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது?

ஜீரணிக்க முடியாத நெருடலான விசயம்தான் மனைவி கூறியது. தன் மனதில் இன்றளவும் போற்றிக் கொண்டாடும் மாமனிதரின் செயலை விமர்சிக்கும் அளவிற்கு இவன் மனம் தரம் தாழ்ந்து விடவில்லை.

ஆனால் செய்தியை சுமந்து வந்த இடமும், சொல்லிய நபரும் தங்களின் நம்பிக்கையானவராய் இருக்கும்போது, இதை பொய், புரளி என்று ஒதுக்கித் தள்ளவும் இயலவில்லை.

ஊரே மரியாதையுடன் நடத்தும் கௌரவமான பெரிய மனிதர்… தனது மாணவர்களுக்கு எப்பொழுதும் வழிகாட்டியாகவும், அவர்களின் முன்மாதிரியாகவும் விளங்கும் ஆசிரியர்… இப்படி ஒரு காரியத்தை செய்தாரா? அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் நடந்து விட்டது. இனி அதன் சாதகபாதகத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டுமென அப்போதிலிருந்தே யோசிக்க தொடங்கி விட்டான்.

“கொஞ்சம் வெளங்குற மாதிரி சொல்லேன் சரண்!”

“எனக்குமே ஒன்னும் புரியலங்க… லச்சு அக்காவும் விவரமா எதுவும் சொல்லல… இங்கே நிலவரம் சரியில்ல, ஊருக்கு வரச் சொல்லி ஃபோன் வந்தா, மறுக்காம வான்னு சொல்லிட்டு வச்சுட்டாங்க…” தங்களுக்குள் நடந்த உரையாடல்களை விவரித்தாள் சரண்யா.

சிறிது நேரம் அமைதியாக இருந்த சசிசேகரன், “உங்கப்பா ஒரு காரியம் பண்ணினா, அதுக்கு மாற்று கருத்து இருக்க முடியாது. ஏதாவது அசைக்க முடியாத காரணம் இருக்கும். இப்போ எதைப் பத்தியும் யோசிக்காம தூங்கு சரண்! ஊர்ல இருந்து ஃபோன் வந்தா பார்த்துக்கலாம்” தனது அனுமானங்களை கூறி மனைவியை சமாதானப்படுத்தினான்.

கணவனின் வார்த்தைகளில் மழைச்சாரலின் குளிர்ச்சியை மனதிற்குள் அனுபவித்தாள் மனைவி. அதோடு கணவனுக்கும் ஊருக்கு செல்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை போலவும் அவளுக்கு தோன்றியது.

கிராமத்தில் ஒரு பெண்ணை எந்தவொரு உறவும் இல்லாமல் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டிருக்கும் மாமனாரின் செயலை எளிதாக கடந்து விட்டான் சசிசேகரன்.

நம்மை புரிந்து கொள்ளாமல் துரத்தியவர்தானே… இப்போது இவர் செய்திருக்கும் காரியத்திற்கு என்ன பெயரை சூட்டுவது என கணவன் மனதளவில் நினைத்திருந்தாலும் சரண்யாவின் உணர்வுகள் மரணித்துதான் போயிருக்கும்.

தன் தந்தையின் மீதான அவளின் அபிமானம் அப்படியானது. அவளுக்கு மட்டுமல்ல சசிசேகரனுக்கும் அப்படியே! இன்றளவும் அவன் மனதின் நாயகன் சரண்யாவின் தந்தையே… என்றும் அவர் மட்டுந்தான்…

ஆனாலும் அவரை இன்னமும் மாமனார் என்ற உறவுமுறையில் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவன். மறந்துபோயும் மனைவியிடமும் கூட ‘மாமா’ என்று அவரை விளிக்க மாட்டான்.

ஏன் என்று காரணம் கேட்டால், முதலில் அவர் தன்னை மருமகனாக ஏற்றுக் கொள்ளட்டும், அதற்கடுத்து பாசப்பயிரை உறவுமுறையோடு பதியம் போட்டு வளர்த்துக் கொள்ளலாமென நழுவி விடுவான்.

இப்படி பட்டும் படாமல் இருக்கும் கணவன், தனக்கு ஆதரவாக பேசி, சூழ்நிலைக்கு தகுந்தபடி யோசிக்கலாமென்று சொன்னதுதான் சரண்யாவிற்கு மிகுந்த ஆச்சரியமாகிப் போயிற்று.

இப்பொழுது உடன் பிறந்தவன் அழைத்தால் எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கம் சரண்யாவிற்கு மிகுதியாகிப் போனது. இதற்கு முன்பு அண்ணன் எப்பொழுது பேசினான் என தனது நினைவடுக்குகளில் தேடிபார்த்து அமிழ்ந்து போனாள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால், அவர்களின் அம்மா இறந்த பொழுது பேசியது. அதுவும் அவளிடம் நேரடியாகப் பேசவில்லை. அந்த சமயத்தில் கணவனுடன் கப்பல் பயணம் மேற்கொண்டிருந்தாள் சரண்யா.

தொலைதொடர்பு அலைவரிசை கிடைக்காமல் போனதில் அன்னை இறந்து, ஒருவாரம் கழித்துதான் இவளுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தொடர்பில் இருந்த ஒரு நண்பரின் மூலம் இவர்களுக்கு தெரிய வர, இறந்த செய்தியை எந்தவொரு உணர்வுமின்றி சசிசேகரனும் கேட்டுக் கொண்டான். ஆண்களுக்கே உண்டான அழுத்தம் இருக்கும் என்பது இவள் அறிந்ததுதான்…

இவளும் இரண்டு நாட்கள் ஓயாமல் அழுது, பிறகு தன்னை முயன்று சமாதானப்படுத்திக் கொண்டாள். திரும்ப முடியாத பயணம் மற்றும் வேலையின் நிமித்தம் அப்போது செல்லத் தோது படவில்லை.

ஊருக்கு வந்த பிறகு போய் வரலாமென்றால், காரியங்கள் முடிந்த பிறகு விசாரிக்க செல்வதற்கும் உறவுமுறை அத்தனை இலகுவாக இல்லை.

அழுதழுது புரண்டாலும் மாண்டவர் மீள முடியாது என்ற உண்மை சுட, இனி சென்று என்ன பயன்? என்ற மனச்சோர்வில் இவளும் அப்படியே இருந்து விட்டாள்.  

தனது வாழ்வின் கடைசி மூச்சு வரை தங்களை நேசித்த ஒரு ஜீவன் தன் அம்மா… இவர்களுக்காகவே அப்பாவிடம் வார்த்தைப் போராட்டம் நடத்தியே மரணித்து போயிருப்பார். மகளின் நினைவுகள் அவரை அரித்திருக்கும் என்பதை நினைக்கும் போதெல்லாம் அவளின் மனம் கனத்துப் போய்விடும்.

அன்னை இல்லாத வீட்டிற்குள் செல்லும் மனவலிமை அப்பொழுது சரண்யாவிற்கும் இல்லை. அம்மாவை இழந்த அப்பாவை தேற்றும் இடத்திலும் அவள் இல்லை. அந்த நேரத்தில் இருவருக்குமான உறவு தொடர்பற்ற அலைவரிசையாய் பயனற்று போயிருந்தது.

வேலாயுதம் மாமா அதாவது லட்சுமி அக்காவின் அப்பாவிடம் பேசி அவரைப் பார்த்துக் கொள்ள சொன்னதுதான் அவளின் நினைவில் இன்றும் நிழலாடும்.

வீடு, கணவன், மகன் என ஒரு நேர்கோட்டில் மட்டுமே பயணித்து வந்தவளின் நினைவுகள், பிறந்த வீட்டினரைப் பற்றியே சூழல, அன்றைய இரவு நெருக்கிக் கொட்டிய சாரல்களுடன் கழிந்தது. 

*************************

மழையின் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்க, சோட்டு, டிட்டு இருவருக்கும் கொண்டாட்டம்தான். காலைநேரத்தில் பூஜா வீட்டில் பாக்ஸிங் செய்து கொண்டிருந்தவர்களை ஒரு வழியாக பிரித்து, சோட்டுவை தன்னுடன் அழைத்து வந்திருந்தாள் சரண்யா.

நீ சொல்லி நான் கேட்பதா என்ற வீம்பில் சோட்டு, தன் வீட்டில் மீண்டும் சேட்டைகளை அரங்கேற்ற, இவளின் ரத்த அழுத்தமும் ஏறத் தொடங்கியது.

“சசி…!” தாங்கவியலாத ஆத்திரத்துடன் அழைத்தவளின் குரலில், ராக்கெட் பற்ற வைக்காமல் சீறிச் செல்ல,

“என்ன சரண்?” கேட்டபடியே சாவகாசமாக உள்ளறையில் இருந்து வந்தான் சசிசேகரன்.

“என்ன… என்ன? உங்க பையன கேளுங்க இந்த கேள்விய…” என்றவளின் குரலில் சோர்வுடன் கூடிய அலறலே மிஞ்சியிருந்தது.

சிவப்பு பாண்ட், கருப்பு பைஜாமாவில் அலட்டிக் கொண்டிருந்த மனைவியை கண்களால் அளந்து,

“உன்னோட ஹவுஸ் கீப்பிங் யூனிபார்ம் செம்ம க்யூட்!” விசிலடித்து ரசித்தவன், கழுத்தில் டை கட்டியபடி, ஏறக்குறைய பணிக்கு செல்ல தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான்.

“சைட் அடிக்க கூப்பிடல… மிஸ்டர்! உங்க பையனோட திருவிளையாடலை பார்க்கதான் கூப்பிட்டேன்” குரலில் ஞஙனநமண இசைக்க, மனைவி படும் அவஸ்தை நன்றாகவே புரிந்தது சசிசேகரனுக்கு.

இரவில் சரியான உறக்கமின்மை மற்றும் குளிரால் ஏற்பட்ட சைனஸ் பிரச்சனையில், தலைவலியோடு காலைநேர வேலைகளை அவசரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா.

டிட்டுவுடன் சேர்ந்து ஆட்டம் போட்டவனை வீட்டிற்கு இழுத்து வரவும், அம்மாவிற்கு உதவி செய்கிற பேர்வழியென மாப் எடுத்து வீடு துடைக்க ஆரம்பித்து விட்டான் சோட்டு. பத்து நிமிடம் ஒழுங்காக செய்ய, இவளும் சமலயறையில் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.

மகனை தனியாக விட்டு வந்த பதினைந்தாவது நிமிடத்தில், ஈர தரையில் வழுக்கி கொண்டு சர்க்கஸ் செய்ய அவன் முற்பட, வாளியில் இருந்த அழுக்கு நீர், அறை முழுவதும் கொட்டி அழுக்காகியது.

சத்தம் கேட்டு அடுப்பில் உள்ளதை அப்படியே போட்டு வந்தவள், இழுத்து வைத்த பொறுமையுடன் அந்த நீரை ஒற்றி எடுத்து, மீண்டும் துடைக்கும் வேலையை செய்யத் தொடங்கி விட்டாள் சரண்யா.

“ஐ யாம் சாரி மாம்… ஐ டூ திஸ். நீ குக் பண்ணு!” மகன் பொறுப்பானவனாக கெஞ்ச,

“ஒழுங்கா ஷோஃபால போய் உக்காரு தர்ஷூ… திரும்பவும் வேற வேலைய இழுத்து வைக்காதே!” கடுகடுப்புடன் மகனை அப்புறப்படுத்த முயற்சித்தாள்.

அவனோ மீண்டும் தானே செய்வேன் என்று பிடிவாதம் பிடித்து மாப்பை இழுக்கும்போது இரண்டாம் முறையாக அழுக்குநீர் கீழே கொட்டி அறையை பாடாவதியாக்கி விட்டது.   

“ஏண்டா சீரியல் வில்லனாட்டம் நான்-ஸ்டாப்பா ஏழரைய கூட்டுற… எனக்கு ஆப்பு வைக்கனும்னே ஸ்பெஷல் பிரெய்ன் வச்சுட்டு வந்துருக்கியா?” பொறுமலோடு பல்லைக் கடித்துக் கொண்டே மகனை அதட்டியவள், இவனது அடாவடியை காண்பிக்க, கணவனை சத்தம் போட்டு அழைத்து விட்டாள். 

இவளின் அலறலில் முன்னறைக்கு வந்தவன், அவளை ரசனையாக பார்க்க, அவனுடனும் வாய்சண்டைக்கு தயாரானாள்.

“இந்த தலைவலியோட, இவனை வைச்சுட்டு என்னால வேலை பார்க்க முடியாது. சைட் அடிக்கிறத விட்டுட்டு ஒழுங்கா இவன் வாலை இழுத்து புடிங்க”

“என்னடி இது? இவனை விட்டுட்டு என்னை கடிக்க ஆரம்பிச்சுட்ட?” பேசும்போதே, ஏதோ ஒருநெடி மூக்கில் ஏறி,  

“என்ன கருகுற வாசனை வருது?” என்று மனைவிடம் கேட்க,

“ஆ… ஆ… ஐயோ!” அலறிக்கொண்டே அடுப்பின் பக்கம் திரும்பியவள் அவசரமாக அடுப்பை அணைத்தாள்.

பிரட் ஒரு பக்கம் கருகிப் போய்கிடக்க, முட்டை ஆம்லெட்டும் மறுபக்கம் சிடுசிடுத்து ஓட்டிக் கொண்டிருந்தது. உடனடியாக எக்சாஸ்டர் ஓடவிட்டு, நெடியை வெளியேற்றினாள் சரண்யா.

“ஊப்ப்… எல்லாமே சொதப்பிடுச்சு சசி!” பெருமூச்சோடு திரும்பி கணவனைப் பார்த்தாள்.

“சரி நீ போய்ப் அவனைப் பாரு… நான் பிரேக் பாஸ்ட் பண்ணிக்கிறேன்…”

சமையலறைக்குள் நுழைய முற்பட்ட கணவனை, ஒரு கையால் அவனது நெஞ்சில் வைத்து தடுத்து, அங்கேயே நிறுத்தியவள்,

“உங்களுக்கு வகை வகையா பொங்கல் வடை, பூரி கிழங்கு, கேசரின்னு செஞ்சு தரேன். ஆனா இவனை மட்டும் என்னால மேய்க்க முடியாது. சமையல், வீட்டுவேலை முடியுற வரை இவனை முதுகுல கட்டிக்கோங்க…” சோட்டுவை கை காட்டி அழுகுரலில் தனது இயலாமையை வெளிப்படுத்தினாள் சரண்யா.

“எனக்கு டைம் ஆச்சு… உன்னோட பஞ்சாயத்த கேட்க இப்போ நேரம் இல்ல சரண்…”

“என்னது பஞ்சாயத்து வைக்கிறேனா? புள்ளைய பார்த்துக்க சொன்னேனே! அது கேட்டுச்சா, இல்லையா? இவனை சத்தம் போட்டு உக்கார வைப்பீங்கன்னு பார்த்தா, என்மேலேயே குத்தம் சொல்றீங்களா சசி?” கோபம் முழுக்க இப்பொழுது கணவனின் மேல் திரும்பிவிட,

“ஹாஹா… விதை ஒன்னு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும் சரண்? நீ எப்படியோ அப்படியே உன் மகனும்…” சசிசேகரன் நையாண்டியில் இறங்கினான்.

“அடப்பாவிகளா… எங்கே இருந்துடா வர்றீங்க? என்னை வெறுப்பேத்த… இதுக்குதான் சின்ன வயசு ஃப்ரெண்டை எல்லாம் லைஃப் பாட்னர் ஆக்கிக்க கூடாதுன்னு சொல்றது” சரண்யா வேகமூச்சில் நொடித்துக் கொள்ள,

“அலுங்காம தோசைய திருப்பி போடுறது இதுதான் போல… கொஞ்சம் உன்னோட வாழ்க்கை வரலாற திரும்பிப் பாரு சரண்குட்டி… உன்னை கம்பேர் பண்றப்போ என் பையன் ரொம்ப சாதுபுள்ள தெரியுமா?” பேச்சோடு பேச்சாக மனைவியை வாரிவிட்ட நேரத்தில், சரண்யாவின் அலைபேசி அவளது அண்ணனின் அழைப்பை தாங்கி வந்தது.

ஒருநொடி கணவனைப் பார்த்து, அழைப்பினை ஏற்கவா, வேண்டாமா என்கிற பாவனையில் இவள் நிற்க, மகனை தூக்கிக் கொண்டு அமைதியாக குளியலறைக்குள் சென்று விட்டான் சசிசேகரன்.  

லச்சு அக்கா சொன்னது போல பெரிய அண்ணன் வெற்றிவேல்தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

அம்மாவின் மறைவிற்கு பிறகு இப்பொழுதுதான், தனது பிறந்த வீட்டில் இருந்து அழைப்பு வருகிறது.

“சொல்லுண்ணா!” விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த உறவுமுறைதானே இவளுக்கு. அதனாலயே பல்லைக் கடித்து அண்ணாவென்று அழைத்தாள்.

“எப்படி இருக்க சரண்யா?” மிக சகஜமாகவே பேசினான் பெரிய அண்ணனான வெற்றிவேல்.

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவனது சுபாவம் அப்படிதான். தனக்கு காரியம் ஆகவேண்டுமென்றால் எந்தளவிற்கும் செல்வான் என்பதும் இவள் அறிந்ததுதான்.

“நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?”

“எங்களுக்கு என்ன கேடு? இந்த அப்பாதான்…” பூசி மெழுகாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டான்.

“அப்பாவுக்கு என்ன?” பதட்டமில்லாமல் கேட்டாள் சரண்யா.

அவளது வார்த்தைகளில் இருந்த சலனமில்லா உணர்வுகளே தனக்கும் விசயம் தெரியும் என்பதை அவனுக்கு உணர்த்தினாலும் தங்கையிடம் கேட்டான்.

“லச்சு ஃபோன் பண்ணினாளா?”

“ம்ம்ம்… ஆமா”

“அப்பா செஞ்ச காரியத்தை பார்த்தியா? வெளியே தலைகாட்ட முடியல… இவரை கேக்க ஆள் இல்லைன்னு நினைச்சுட்டரா?”

சரண்யா பதில் எதுவும் பேசாமல் அமைதி காக்க…

“என்ன சரணி? ஒன்னும் சொல்லாம இருக்க…”

“என்ன சொல்லணும்?”

“இந்த வயசுல இதெல்லாம் தேவையா? அதுவும் அவளைப் போய்…” கமலாலயாவை குறிப்பிட்டு பேச, இவளின் மனம் வெகுவாய் கொதித்து விட்டது.

தன் அண்ணன் கூறிய விசயங்களில் இவளுக்கு உடன்பாடில்லை. இரண்டு பேரைப் பற்றியும் இவளுக்கு நன்றாகத் தெரியும். தன் தந்தையை பற்றி கூறுவதற்கு இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி உள்ளுக்குள் ஓடினாலும் மீண்டும் பேசாமல் இருந்தாள். 

“இதெல்லாம் சரிவராது சரணி! இவர் இஷ்டப்படி நடக்கிறதுக்கு நாம அனுமதிக்க கூடாது. இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும். நீ ஊருக்கு கிளம்பி வா!” தயங்காமல் உத்தரவிட்டவனை சுட்டுப் பொசுக்கி விடும் ஆத்திரம்தான் வந்தது.

இறுதியில் நன்றி காட்டும் நான்குகால் பிராணியைவிட கேவலமானவனாய் மாறிவிட்டான் உடன் பிறந்தவன் என மனதிற்குள் காறித் துப்பிக் கொண்டாள்.

அண்ணன் கூறிய வார்த்தைகளில் ஒருபுறம் வருத்தம் தோன்றினாலும் மறுபுறம் கோபம் குமுழியிட்டது.

கடந்த பத்து வருடங்களில் என்னென்னவோ நடந்திருக்கும். அதற்கெல்லாம் நான் அவசியமில்லை. இப்பொழுது மட்டும் என்ன? சரண்யாவின் மனதிற்குள் தோன்றினாலும் வாய்விட்டு கேட்கவில்லை.

இது அப்பா சம்மந்தபட்டது. அவரின் உணர்வுகளோடு தொடர்புடையது. அவரின் மனதிற்கு பிடித்தமானதை செய்த மிக நுண்ணியமான செயல். இதில் முடிவெடுக்கவோ அபிப்பிராயம் சொல்லவோ தாங்கள் யார்?

சட்டென்று எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசிவிடக்கூடாது என்று முனைந்து பொறுமை காத்தாள். எந்த விதத்திலும் தன் தந்தை காயப்படுவதை அவள் விரும்பவில்லை.

இதுவரை தன்னால், அவர் பட்ட துன்பங்களே போதும் என மனதிற்குள் முடிவெடுத்து,

“சரிண்ணா… நான் அவர்கிட்ட கேட்டு சொல்றேன்!”

“இதுக்கெல்லாம் நேரம் காலம் பார்க்க முடியாது. முடிஞ்சா  உடனே வா!” பிடிவாதத்தில் உடன்பிறந்தவன் நிற்க,

“அவரில்லாம நான் மட்டும் வரமுடியாது. தம்பிக்கும் அவருக்கும் லீவ் கேட்டுத்தான் வர முடியும்” உறுதியாய் இவள் நிறுத்த,

“எதையோ செஞ்சு வந்து சேரப் பாரு! நீ வந்தாதான் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும்” அசிரத்தையாய் பேசிவிட்டு வைத்து விட்டான்.

கணவன் பிள்ளை என்று தானாகவே இவள், தன் குடும்பத்தை பற்றிச் சொல்லியும், அவர்களைப் பற்றி எந்த ஒரு கேள்வியும் இல்லை.

அப்படி ஒன்றும் கொஞ்சிப் பேசி பாசமலரை வளர்ப்பவனல்ல என்றாலும் ஒரு சம்பிரதாய விசாரிப்பும் கேட்காமல் போனதில், பெரிதும் மனமுடைந்து போனாள் சரண்யா.

மகனை குளிக்க வைக்க சென்ற சேகரன், மனைவி பேசி முடித்த நேரத்தில் வெளியே வந்திருந்தான். அலைபேசியை வைத்தவுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவனின் முகத்தில் கலவையான உணர்வுகள் தென்பட்டன.

மகிழ்ச்சியா, கோபமா, இயலாமையா அல்லது எல்லாம் சேர்ந்ததா? எந்த ஒன்றையும் அவளால் அனுமானிக்க முடியவில்லை. ஒன்றும் பேசாமல் மீண்டும் மகனை கவனிக்க சென்று விட்டான்.

இவ்வளவிற்கும் முன்தின இரவில் அத்தனை நேரம் நடந்த எல்லாவற்றையும் சொல்லியவள்தான். ஆனாலும் அவன் முறுக்கி கொண்டு போனதில் இவளுக்குதான் ஒன்றும் புரியவில்லை.

ஒருவேளை இவனது அனுமதி இல்லாமல் வருகிறேன் என்று கூறியதை குற்றமாய் பார்க்கிறானோ? இத்தனைக்கும் அவனுடன்தானே வருவேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். பின்பும் ஏன் ஒன்றும் கூறாமல் சென்று விட்டான்.

ஒரு கணவனாக மனைவியை அடக்கி ஆள்வதை எல்லாம் விரும்பாதவன். இப்பொழுது தன்பேச்சை கேட்டு முறைத்து கொண்டு போனதில் தவித்து போனாள் சரண்யா.

கணவன் மௌனவிரதம் கொண்டு அலைந்த அரைமணி நேரத்தில், பொல்லாத பல எண்ணங்கள் அவளை அலைகழிக்க, அவனின் பின்னோடு வந்து நின்றாள்.

“என்ன சசி எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க!” அவனது மௌனத்தை உடைக்க முயன்றாள்.

“சொல்ல என்ன இருக்கு?”

“ஏன் ஒண்ணுமே இல்லையா? ஊருக்கு போகணும். நீங்க சொல்றத வச்சுதான் நான் முடிவெடுக்க முடியும்.”

“நான் வேண்டாம்னு சொன்னா, போகமா இருந்துடுவியா?” கூர்மையாய் கேட்க, பெருமூச்செறிந்தவள்,

“உங்ககூடதான் வருவேன்னு சொல்லி இருக்கேன். எனக்கு மட்டுமில்ல… உங்களுக்கும் அதுதான் சொந்த ஊர்.” கணவனின் மனநிலையை மாற்றும் விதமாய் இவள் அமைதியாகப் பேச,

“ஆனா கூப்பிடத்தான் ஆள் இல்ல…” சட்டென்று வலியாய் சொல்லி முடித்தான்.

“இந்த நெனைப்பு இன்னும் உங்க மனச விட்டு போகலையா சசி? அண்ணன் கூட, பேசினதுலதான் உங்களுக்கு கோபமா?”

“எனக்கென்ன கோபம்! உன் அண்ணன்… நீ பேசின… உங்க வீட்டு ஆட்களுக்கு நான் யாரோதானே?”

“நீங்க பேசுறதுலயே உங்க கோபம் தெரியுது. நியாயமா உங்ககிட்டதான் அவர் பேசியிருக்கனும். இன்னும் நீங்க பழசையெல்லாம் மறக்காமதான் இருக்கீங்களா?” கேட்டவளின் வார்த்தைகளில் சட்டென்று திரும்பியவனின் பார்வை,

‘அத்தனை சுலபமாய் மறந்து விடக் சொல்கிறாயா’ என குத்திக் கேட்டது.

பொங்கி வந்த உள்ளக் கொதிப்பை நீர் ஊற்றி அணைத்தவன் “எப்போ கெளம்பனும்?” வெறுமையாக கேட்டான்.

“உங்களுக்கு லீவ் கிடைக்குறது அனுசரிச்சு போவோம்…”

“ம்ம்… இப்போ லீவ் கிடைக்குமான்னு தெரியல… மழை வேற அதிகமா இருக்கு. என்னோட ஷிஃப்ட் மாத்தி விட ஏற்பாடு பண்ணனும்” என அடுக்கிகொண்டே போக,

“இதுவரைக்கும் நீங்க லீவ் எடுத்ததில்லைன்னு சொல்லி கேட்டுப் பார்க்கலாமே சசி?” பிறந்த வீட்டினரை பார்க்கப் போகும் உற்சாகம் அவளையுமறியாமல் தொற்றிக் கொள்ள, விடுப்பு கிடைக்கும் உபாயத்தை எல்லாம் யோசித்து கூறினாள் சரண்யா.

மனைவியின் கூற்றில் மெலிதாய் முறுவலித்தவன், “கௌஷிக்கிட்ட என் ஷிஃப்ட் பார்க்க முடியுமான்னு கேட்டுட்டு ஆபிஸ்ல பேசுறேன் என் ஆர்வக்கோளாரே!” செல்லமாய் மூக்கினைத் திருக,

“இதுதான் சசி, நீங்க!” என்றவாறே மூக்கினை திருகிய கைகளுக்கு முத்தப் பரிசுகளை கொடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

ஊருக்கு செல்வதென்று முடிவெடுத்து விட்டாள்தான். ஆனால் அங்கு போய் எங்கு தங்குவது, யாரை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனையே மனச்சோர்வினை கொடுத்து, அவளை தடுமாற வைத்தது.

தங்களை கொண்டாடிக் கொள்ளும் நட்புறவுகள் ஊரில் இருந்தாலும், இதுவரையில் குடும்பமாக அங்கே சென்று தங்கியதில்லை.

உரிமை உள்ள இடமாய் பிறந்த வீடு இருக்கும் ஊரில், வெளிஉறவுகளின் வீட்டில் சென்று இறங்குவது, பிறந்த வீட்டினருடன் பெரிய மனக் கசப்பிற்கும், வீண் வாதத்திற்கும் வழிவகுக்கும் என்ற உண்மை உரைக்க, சரண்யாவின் யோசனைகள் நீண்டு கொண்டே இருந்தன. 

கணவனும் மாமனார் வீட்டிற்கு செல்ல அடியோடு விரும்பமாட்டான். அதோடு தன்னை அழைத்த அண்ணனும், வீட்டு மாப்பிள்ளையாக சசிசேகரனை முறையோடு அழைப்பானா என சந்தேகமும் வலுப்பெற, அடங்காமல் வளரும் காட்டுச்செடி போன்றே சரண்யாவின் எண்ணங்களும் கட்டுப்பாடில்லாமல் நிலையற்று சென்றன.

இந்த பயணம் பெண்ணிற்கு மனநிறைவை அளிக்குமா? வேதனைகளை பரிசாய் வழங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!