சரணாலயம் – 4

சரணாலயம் – 4

சரணாலயம் – 4

சரண்யா சொன்னதுபோல், சசிசேகரனின் வேலை நாட்களை ஒப்பிட்டே எளிதாக விடுப்பும் கிடைத்தது.

இதுவரையில் சேர்ந்தாற்போல வாரக்கணக்கில் கூட விடுப்பு எடுக்காதவன், இருபதுநாள் விடுப்பிற்கு விண்ணப்பித்ததும் இவனது மேலதிகாரிக்கும் சற்று ஆச்சரியம்தான்.

மகன் பிறந்த பொழுது கூட தொடர்ந்து பத்து நாட்கள்தான் விடுப்பு எடுத்திருப்பான். அந்த நேரத்தில் லட்சுமி வருவதாக எவ்வளவோ சொல்லியும் சரண்யாதான் மறுத்து விட்டாள்.

பூஜாவின் சமையலோடு, கணவனின் கவனிப்பில் தனது பிரசவத்தின் பத்திய காலத்தை கடக்க தன்னை தயார்படுத்திக் கொண்டாள் சரண்யா.

“நம்மால் லச்சு அக்கா பலரிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். நம்முடன் பழகுவதால் அவளுக்கு அங்கிருப்போரின் உறவில் விரிசல் நேர்ந்து விடக்கூடாது”  என பிடிவாதமாய் நின்று தன்னைத்தானே பார்த்துக் கொண்டாள். 

“ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுடி… உங்க அப்பா வீம்பு அப்படியே உனக்கும் இருக்கு… இங்கே உங்கம்மா, என்னை போயிட்டுவான்னு வண்டி ஏத்தி விடாத குறையா அழுது அடம் பிடிக்கிறாங்க… பார்த்து முடியல, எங்களுக்கு” கண்ணீருடன் லச்சு அக்கா போனை வைத்ததும், அழுகையில் கரைந்தவள் சரண்யாதான்.

எப்பொழுதும் ஆரவாரமில்லாமல் அமைதியாக இருக்கும் சாந்தமான அம்மா, அழுகையில் கரைகிறாள் என்று கேட்ட நேரத்தில் இவளுக்கும் மனம் கலங்கிப் போனது. பெற்றவளின் நெஞ்சம் தன்னை நினைத்தே வெதும்பி போகின்றதே என சரண்யாவின் மனமும் குமுறிப் போய்விடும்.

“இப்படி அழுது பிடிவாதம் பிடிச்சே ஆகணுமா சரண்?” ஆதரவாய் சசிசேகரன் தோள் தட்டிக் கொடுக்க, வேகவேகமாய் முகத்தை துடைத்துக் கொண்டு அது அப்படிதான் என்றவாறு எழுந்து சென்றவள், இன்றுவரை அவள் நிலையிலேயே நின்று குழந்தையை வளர்த்து வருகிறாள்.

நண்பன் கெளஷிக்கிடம், ஊரிலிருந்து அழைப்பு வந்துள்ளது, விடுப்பு எடுக்கப் வேண்டுமென விஷயத்தை கூறி, அவனது உதவி தேவை என்று சொன்னதும்,

“அரே பாய்! அச்சி பாத் ஹை… (நல்ல விஷயம் சொல்ற) லட்டு காவோ!(சாப்பிடு)” என்று இனிப்பு உபசரித்து கொண்டாடினான் கௌஷிக்.

இத்தனை நாட்களாக இரு குடும்பத்தின் சுக துக்கங்களும் ஒன்றாக பகிரப்பட்டு, தோள் கொடுத்து உதவிய உண்மையான நட்பு, தன் ஆதரவை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தியது.

பலமுறை ஊருக்கு போய் வா என்று கட்டாயபடுத்திய கௌஷிக்கின் வார்த்தைகளை இதுவரை சசிசேகரனோ, சரண்யாவோ காதில் போட்டுக் கொண்டதே இல்லை. இப்பொழுது அவர்களாக செல்வதில் நண்பனுக்கு மிகவும் மகிழ்ச்சியே…

எதற்காக சொந்த ஊர் பயணம் என்கிற விஷயத்தை மட்டும் அவனிடம் சொல்லவில்லை. மச்சானிடம் இருந்து அழைப்பு வந்தது என்றதோடு முடித்துக் கொண்டான் சசிசேகரன்.

டிட்டுவும் சோட்டுவும் ஏன், எதற்கு செல்ல வேண்டும்? திரும்பி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? அங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்று கேள்விகளால் துளைத்தெடுத்து பெற்றவர்களை விழி பிதுங்க வைத்தனர்.

“முஜே கபி நஹி பூலோனா (என்னை மறக்க மாட்டதானே) சோட்டு? இன்ட்ரடியூஸ் மீ டு யுவர் நியூ ஃப்ரெண்ட்ஸ்!” அழுது ஆர்பாட்டம் செய்வது மட்டுமே குறையாக இருக்க, டிட்டு, சோட்டுவின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தான். 

“எவ்ரி டே ஐ வில் டாக் ஆன் வீடியோ கால்… டோன்ட் வொர்ரி டிட்டு!” இரு பிள்ளைகளும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் சமாதானங்களை கூறிக் கொள்ள,

இறுதியில் டிட்டு சோகமாகவும், சோட்டு அவனை ஆறுதல் படுத்திவிட,

“கௌஷிக் குடும்பமும், மும்பையும் உங்களை இருபது நாட்களுக்கு மிஸ் செய்யும்” நெகிழ்வுடன் அவர்களை  வழியனுப்பி வைத்தனர். 

சசிசேகரனுக்கு விடுப்பு உறுதியானதும், குழந்தைக்கு விடுப்பு சொல்ல பள்ளிக்கு சென்றனர். அத்தனை எளிதில் பள்ளியில் இருபது நாட்கள் விடுப்பிற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இறுதியில், தினமும் பாடங்களை, அந்தந்த ஆசிரியரிடம் கேட்டு, அங்கிருந்தே கற்றுத் தருகிறோம் என உறுதியளித்த பிறகே, அரை மனதுடன் ஒத்துக் கொண்டனர். ஒருவழியாக அனைத்தையும் முடித்துவிட்டு சுமூகமாக சொந்த ஊருக்கு கிளம்பினர்.

வானமும் இவர்களுக்காக, தன்னை தெளிவாக்கி கொண்டாலும், சோட்டுவின் கேள்விகள் அடைமழையாக பொழியத் துவங்கின.

“பாபா எங்க போறோம்?” என்று சசிசேகரனிடம் கேட்க ஆரம்பித்தான் சோட்டு என்கிற சிவதர்ஷன்.

“நம்ம ஊருக்குடா…”

“அப்படின்னா என்ன? அது எங்க இருக்கு? இதுக்கு முன்னாடி நாம போயிருக்கோமா? அங்கேயும் இதே மாதிரி மழை பெய்யுமா?” சிறுவனின் கேள்விக் கணைகளை நிறுத்த முடியவில்லை.

“நம்ம ஊரு தமிழ்நாட்டுல இருக்குடா கண்ணா!”

“எல்லாரும் அப்ராடுன்னு சொல்றாங்களே அதுவா பாபா?” மீண்டும் கேள்வி கேட்டதும் சரண்யா க்ளுகென்று சிரித்தாள்.

“சோட்டா பீம்… காளிங்… எல்லாம் வருவாங்களே அந்த ஊரா?” மகன் கேட்டதில் அடக்க முடியாமல் சசிசேகரனும் சேர்ந்து புன்னைகைத்தான்.

“அடேய் வாலு… அவங்க எல்லாம் டோலக் பூர்ல இருப்பாங்கடா… நாம தமிழ்நாட்டுக்கு போறோம்!” சரண்யா விளக்கம் சொல்ல முற்பட,

“அப்போ ஏலியன்ஸ் இருப்பாங்களா பாபா?” அசராமல் கேட்டவனின் கேள்வியில் நொந்து விட்டான் சசிசேகரன்.

“என்ன சிரிப்பு? இதெல்லாம் கொஞ்சம் சொல்லி வைக்க கூடாதா சரண்?” சசிசேகரன் அலுப்புடன் கேட்க,

“என்னன்னு சொல்றது சசி? தாத்தா பாட்டின்னா யாருன்னு விளக்கம் சொல்லி முடிக்கிறதுக்குள்ளயே ஆயிரம் கேள்வி கேட்டு முடிக்கிறான். கடைசியா நாணா(தாத்தா) வீடுன்னு சொல்லி வைச்சுருக்கேன். இதுல நான் லோகேஷன் எல்லாம் சொன்னா அவ்வளவுதான்… இந்த கிராண்ட் மாஸ்டருக்கு பதில் சொல்லி முடியாது” கூறி முடித்த சரண்யா நமட்டுச் சிரிப்பை மீண்டும் உதிர்க்க, சேகரனால் முறைக்க மட்டுமே முடிந்தது. அதுவும் பொய்யாய்…

“யாரையும் குறை சொல்ல முடியாது சசி… புதுசா பார்க்கிற எல்லா விசயத்துக்கும் நமக்கும் கேள்விகள் வருதுதானே… அங்கே போயி அவனா தெரிஞ்சுக்கட்டும்” என்றவள் மகனிடம் திரும்பி,

“தர்ஷூகுட்டிக்கு அங்கே போனதும் எல்லாமே தெரிஞ்சுடுமாம். அதுவரைக்கும் என் சோட்டு கேள்வி கேட்காம சமத்தா வருவானாம்” கொஞ்சிப்பேசி மகனை சமாளித்தாள். 

ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் பிறந்த வீட்டிற்கு செல்கிறோம் என்ற எண்ணமே பெண்களை உற்சாகபடுத்தி விடுகிறது. இதில் சரண்யா மட்டும் விதிவிலக்கல்ல.

மதுரை வரை விமானத்தில் சென்று, அதன் பிறகு கம்பம் வரை ஆம்னி பேருந்தில் பயணம் செய்து, அடுத்ததாய் ராயப்பன்பட்டிக்கு டாக்சியில் செல்வதாக முடிவெடுத்து பயணத்தை தொடங்கியும் ஆகிவிட்டது.

மகனை சமாதானப்படுத்தி உறங்க வைத்தவளின் நினைவுகள், பிறந்து வளர்ந்த கிராமத்தை நோக்கி பயணித்தது. விமானத்தில் உடல் பயணிக்க, மனதளவில் கிராமத்திற்கு சென்று விட்டாள் சரண்யா.

அவள் பிறந்து வளர்ந்த ஊர் இன்று எப்படி இருக்கும்? கால மாற்றத்திற்கு ஏற்ப மாறி இருக்குமா? லச்சு அக்காவின் கண்களின் வழியாக அவ்வப்பொழுது காண்பதுதான். ஆனால் நேரில் கண்டு களிப்பது போலாகுமா?

எத்தனையோ இரவுகள் ஏக்கத்தோடு கற்பனையில் கண்டு மகிழ்ந்த மண். அதன் மேலுள்ள பற்றால்தான் அதனை விட்டு விலகி வர நேர்ந்ததோ…

சரண்யாவின் அம்மா, அப்பா, அண்ணன்களான வெற்றிவேல், சக்திவேல் மற்றும் லட்சுமி அக்கா, அவளின் அப்பா வேலாயுதம் மாமா, லச்சுவின் அம்மா கோதாவரி அத்தை, இறுதியாக கமலாலயா அக்கா என எல்லோரும் அவளின் முன்னால் வந்து போனார்கள்.

அங்கே சென்றதும் லயா அக்காவை எப்படி எதிர்கொள்வது? தன் தந்தையுடன் எந்த உறவுமுறையில் தங்கியுள்ளாய் என எவ்வாறு வெளிப்படையாக கேட்க முடியும்?

லச்சு அக்காவை விட பெரியவள் இவள். தனது வளர்பருவம் இவளின் தயவுடன்தான் கழிந்தது என்பதில் எள்ளளவும் மறுப்பதற்கு இல்லை. சிறு வயதில் இவள் இடுப்பில் பயணித்ததுதான் அதிகம் என்று அம்மா சொல்லி சரண்யா கேட்டிருக்கிறாள். 

பணம் பகட்டிற்கு ஆசைப்படும் ரகத்தவள் அல்ல லயா. ஆனால் அந்த காரணத்தை வைத்தே அவளை சந்திக்க வேண்டுமென்று நினைக்கும்போதே பிறந்த வீட்டுப் பயணம் அலுப்பை தட்டியது.

உண்மையில் என்ன நடந்தது என்று அலைபேசியில் அண்ணனும் சொல்லவில்லை. ஒன்றாய் வளர்ந்த பழக்கம் கூடவா இவர்களின் கண்ணை மறைத்து விடும்.

எவ்வாறு நா கூசாமல் பழி போட முடிகிறது? நரம்பில்லா நாக்கு, மனதை வெட்ட வெளிச்சமாக்க பயன்படுவதிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது.

அங்கே சென்றுதான் தீர விசாரிக்க வேண்டும். யாரிடம் எப்படி ஆரம்பிப்பது என்ற இமாலய கேள்வி முளைக்க, பதில் கொடுக்க முன்வரும் பிம்பமாய் சிவபூஷணம் மனதில் வந்தார்.

**********************************

சரண்யாவின் அப்பா சிவபூஷணம், அம்மா சௌந்திரவல்லி… தேனி மாவட்டத்தை சேர்ந்த கம்பம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயப்பன்பட்டி இவளின் சொந்த ஊர்.

இயற்கை அன்னையின் மொத்த வனப்பையும் தன்னுள் மறைத்துக் கொண்டு அமைதியாய் இயங்கி வரும் தமிழகத்தின் சொர்க்கபூமி… மண்ணில் விதைத்த விதையெல்லாம் பொன்னாகும் புண்ணியபூமி அது.

ராயப்பன்பட்டி சரண்யா பிறந்து வளர்ந்து, மனம் நிறைந்து வாழ்ந்த ஊர். சிறு வயதில் அந்த ஊர்தான் அவளது உலகமாக இருந்த அவளின் சொர்க்கம்.

அவளின் தந்தைக்கு அந்த ஊரின் மீது எல்லையற்ற பற்றுதல் இருந்தது. ஊரின் மொத்த நிலத்தில் நான்கில் ஒரு பாகத்திற்கு சொந்தக்காரரான சிவபூஷணம் மீது, அந்த ஊரில் இருக்கும் அனவைருக்கும் தனி மரியாதை இருந்தது.

ராயப்பன் பட்டியில் தென்னை, வாழை, திராட்சையை பிரதானமாக பயிரிட்டு வரும் விவசாய குடும்பம் இவர்களுடையது. அருகருகே உள்ள ஊர்களில் நெல் சாகுபடியும் செய்து பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருந்தனர்.

இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வேதநாயகம் – அகிலாண்டம் தம்பதியரின் ஒற்றை மைந்தன் சிவபூஷணம்.

கணவர் சிறை சென்ற நேரத்தில், நடவு, அறுவடை, நெல் கொள்முதல் என எல்லாவற்றையும் அந்த நாட்களிலேயே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டவர் அகிலாண்டம். கணவரின் சுதந்திர வேட்கையையும், சமூக அக்கறைகளையும் தனது லட்சியமாகவே கொண்டு பயணித்த பெண்மணி.

சிவபூஷணம், விவாசாயத்தில் நாட்டம் கொண்டாலும் தனது கவனத்தை எல்லாம் கல்வியில் திசை திருப்ப, பெற்றோரின் வழிகாட்டுதலே காரணமாக அமைந்தது. ராயப்பன்பட்டி கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த காலம் அது.

அதன் பொருட்டு விவாசயம் குடும்பத் தொழிலாக இருந்தாலும், ஆசிரியர் பயிற்சிக்கு முயன்று படித்து அந்த ஊரின் அரசுப் பள்ளியிலேயே கணித ஆசிரியராய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவரின் கல்வி தாகத்திற்கு பக்கபலமாக இருந்து, விருப்பத்தை நிறைவேற்றுவதில், அகிலாண்டம் உற்ற துணையாக இருந்தார். கணவர் இல்லாத காலத்தில் தொழில் சார்ந்த பொறுப்புகளை எல்லாம் நிர்வகிக்க தொடங்கியவருக்கு மகனின் காலத்திலும் செய்வது எளிதாக இருந்தது.

தந்தையின் கண்டிப்பிலும் தாயின் நல்லொழுக்கப் போதனையிலும் பண்பட்ட ஆண்மகனாய் வளர்ந்தவர் சிவபூஷணம். பெற்றவர்கள் தனக்களித்த நற்பண்புகளையும், தான் கற்ற கல்வியையும், இளைய சமுதாயத்திற்கு கற்பிப்பதில் மிக கண்டிப்புடனும் நேர்த்தியுடனும் செய்து வந்தார்.

கணித ஆசிரியர் சிவபூஷணம்… நீதியும் நேர்மையும், கடமையும் நேரந்தவறாமையும், செய்வதை திருந்தச் செய்யும் நேர்த்தியும் அவரது இயல்புகள். கணிதம் இவரின் விருப்பப் பாடமாக இருந்தாலும், தமிழ்பற்றை உயிர் மூச்சாய் கொண்டவர்.

பணியில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு தமிழ் பாடத்தை கற்பிப்பதை மட்டுமே தொடரப் போவதாக தனது இளமைக் காலம் தொட்டே சொல்லி வருபவர். எந்த ஒரு சன்மானமும் எதிர்பாராமல் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசானாக அந்த ஊரில் வலம் வந்தார்.  

தினசரி காலையில் இவர் கற்றுக் கொடுக்கும் தமிழ் வகுப்பில் இவரின் கண்டிப்பும் கறாரும் அதீதமாய் வெளிப்படும். தனது கற்பித்தலின் குண இயல்புகளை வீட்டில் உள்ளவர்களோடும், வெளியாட்களோடும் மாறாமல்  கடைபிடித்தார். இவையெல்லாம் இவரின் பிறப்போடு வந்தவை என்றே இவரை புரிந்து கொண்டவர்கள் சொல்வதுண்டு.

சம அந்தஸ்தில் தங்களது இனத்திலேயே பெண்ணெடுத்து மருமகளாக்கி இருந்தார் அகிலாண்டம். சௌந்திரவல்லி மிக அருமையான மருமகள். பெயருக்கு ஏற்ப அமைதியும் அழகும் கொண்ட மென்மையான மனுஷி.

மனம் கோணாமல் குடும்பத்தை கையாள்வதில் அவருக்கு நிகர் அவரே. தன் குடும்பத்தினர்களுக்கு மட்டுமல்லாது தங்களை நம்பி ஜீவனம் நடத்தும் ஏழை விவசாயிகளுக்கும் இன்முகத்துடன் அன்னம் வழங்குவதிலேயே தனது ஆயுள் முழுவதையும் செலவிட்டவர்.

கிராமத்து வீதிகளில் எப்பொழுதும் வரைமுறையற்ற பேச்சால் சண்டையிடும் கணவன் மனைவிகள்தான் அதிகம். பல சமயங்களில் அவர்களின் பஞ்சாயத்து இவர்களின் வீடு தேடித்தான் வரும்.

கணவன் மனைவியாக ஒரே கருத்தை ஆமோதித்து தீர்த்தும் வைத்து விடுவர் சிவபூஷணம் தம்பதி. இது போன்ற சமயங்களில் அகிலாண்டம் பாட்டி, மகன் மருகளை ஜோடியாக நிற்க வைத்து திருஷ்டி கழித்து போடுவதும் உண்டு.

மனைவியின் கனிவான பார்வை ஒன்றே சிவபூஷணத்தை கட்டுப்படுத்தும் மாயச்சாவியாக எப்பொழுதும் இருக்கும். இவர்களின் ஆத்மார்த்தமான வாழ்க்கைக்கு அடையாளமாக வெற்றிவேலும் சக்திவேலும் திருமணமான மூன்று ஆண்டுகளில் பிறக்க, அதற்கடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து அந்த குடும்பத்தின் செல்லப் பெண்ணாக பிறந்தவள் சரண்யா.

ஊரின் மையத்தில் உள்ள பெரிய வீடு இவர்களுடையது. இவர்களின் வீட்டிற்கு பின்புறம் வேலை செய்பவர்கள் தங்குவதற்கு வசதியாக மூன்று அறைகளைக் கொண்ட முற்றத்துடன் கூடிய ஓட்டுவீடு ஒன்றும் உள்ளது.

பணிபுரிபவர்களின் வீடு என்றாலும் அதிலும் வசதிக்கு குறைவிருக்காது. எங்கும் எப்பொழுதும் சமத்துவம் பேணும் அகிலாண்டத்தின் வேலையாட்களுக்கான வீடு இப்படி இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை.

அந்த பின்கட்டு வீட்டில் ராமசாமி தனது மனைவி காமாட்சி மற்றும் இரு குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வந்தார். வெளியூரில், வேற்று இனத்து பெண்ணை காதல் மணம் செய்து கொண்டு வந்தவரை, சிவபூஷணம் குடும்பம் அடைக்கலம் தந்து காத்துக் கொண்டது.

முதலாளி குடும்பத்தின் பாச அரவணைப்பில் எந்தவொரு குறையுமின்றி வாழ்ந்து வந்த ராமசாமியின் காதல் வாழ்க்கைக்கு சசிசேகரனும், துளசியும் சாட்சியாக பிறந்தனர்.

காமாட்சி வீட்டினரின் கௌரவப் பிரச்னை, சாதிப் பாகுபாடு போன்ற பல இன்னல்கள் வந்த பொழுது சிவபூஷணம் ஆதரவு தந்து, ராமசாமி குடும்பத்தை அரணாக பாதுகாத்தார்.

ராமசாமியும் முதாலாளி வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் தன் தலையில் ஏற்றிக் கொண்டு விசுவாசத்திற்கு எடுத்துகாட்டாய் விளங்கினார்.

சிவபூஷணம், தன்கவனத்தை கல்வியை வளர்ப்பதில் செலுத்த, அகிலாண்டத்தின் வலது கையாக இருந்து உழவுத் தொழிலுக்கு பெரிதும் உறுதுணையாக பயணித்து வந்தார் ராமசாமி.

.தனது மகன் சசிசேகரனின் கல்வியை மட்டுமல்லாது அவனது வளர்ப்பை கூட சிவபூஷணத்தின் மேற்பார்வையில் விட்டவர் ராமசாமி. சசிசேகரனும் தந்தையின் ஆசைப்படியே நடந்து சிவபூஷணத்தின் மனதிற்கு பிடித்த மாணவன் ஆகிப்போனான்.

“சேகரா…” என்ற சிவபூஷணத்தின் அழைப்பு முடியும் முன்பே, “அய்யா…” என்றழைத்தவாறு பவ்யாமாக நிற்பான் சசிசேகரன். இவனது பணிவும் அடக்கமும் இவரிடம் மட்டுமே! மற்றவர்களிடம் இவன் காட்டிய கடுத்த முகமே பிற்காலத்தில் பல இன்னல்களை சம்பாதித்து கொடுத்தது.

தான் கனவு கண்ட ஒழுக்க சீலனாக, சசிசேகரனை காண்பதில் மன மகிழ்ந்து போவார் சிவபூஷணம். அவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சேகரனும் படிப்பு மற்றும் இதர விஷயங்களில் மிகப் பொறுப்புள்ளவனாக வளர்ந்து வந்தான்.

ராமசாமியின் பின்வீட்டை ஒட்டிய வீடாக வேலாயுதத்தின் வீடு அமைந்திருந்தது. சிவபூஷணத்தின் ஆருயிர் நண்பராகவும், உடன் பணிபுரியும் வராலாற்று ஆசிரியராகவும் இருப்பவர் வேலாயுதம். அவரின் மனைவி கோதாவரி, மகள் மகாலட்சுமி என்ற லச்சு உடன் இவர்களின் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்தார்.

லச்சுவின் தாயும், சரண்யாவின் தாயும் ஒரே வயதினர். நெருக்கம் இல்லையென்றாலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தோழமை உண்டு அவர்களிடத்தில்…

சிவபூஷணம் வீட்டின் இடப்பக்கத்தில் வேலாயுதம் குடும்பம் குடியிருக்க, வலப்பக்கம் வசித்து வந்தது மங்களாம்பிகை குடும்பம். இவர் அகிலாண்டத்தின் உயிர்த்தோழி. சிறுவயது முதற்கொண்டே தொடங்கிய நட்பு, கணவர்மார்களின் காலத்தை தாண்டியும் பயணித்தது.  

அகிலாண்டத்திற்கு இணையாக மங்களாம்பிகைக்கும் விவசாய நிலபுலன்கள் இருக்க, இரு குடும்பங்களின் வேளாண்மைகளும் ஒன்றாக மேற்பார்வை பார்க்கப்பட்டன.

அறுவடை, உழவு, மடை மாற்றுதல் போன்ற எந்தவொரு முன்னேற்பாடும் இரு குடும்பத்தாரின் நிலங்களுக்கும் பொதுவான முறையில் செய்யப்பட, சிவபூஷணம் அவற்றை மேற்பார்வை பார்த்து வந்தார்.    

மங்களாம்பிகையின் கணவர் காசநோய் தாக்கி இறக்க, அப்பொழுது அவரின் ஒற்றை பெண்ணான பரிமளத்திற்கு ஐந்து வயது மட்டுமே. வீட்டில் ஆண்பிள்ளை இல்லாத சூழ்நிலையில் தனது கடமையை முடிக்க வேண்டுமென்ற உந்துதலில், மகளை மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார் மங்களாம்பிகை.

பதினைந்து வயதில் பூப்பெய்தியவுடன் பரிமளத்தை, திருவாரூர் கணேசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். பதினெட்டு வயதில் பிள்ளை பிறப்பின் போது பிரசவம் கடினமாகி விட, பேத்தி பிறந்த ஒருவாரத்தில் மகளை பறி கொடுத்திருந்தார் மங்களாம்பிகை.

திருவாரூர் கோவிலின் மேலுள்ள பிடித்தத்தில், அந்த கோவில் குளத்தின் பெயரான ‘கமலாலயம்’ என்பதையே பேத்திக்கும் நாமகரணம் சூட்டி அழகு பார்த்தார் மங்களம் பாட்டி. கமலாலயா என்பது சுருங்கி கமலி என்றும் லயா எனவும் அழைக்க, அந்த பெண்ணும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாள்.

பெண் பிள்ளை வந்த நேரம் தாயை முழுங்கி விட்டது என்ற பழிச் சொல்லுடன், பிறந்த குழந்தையை மறுத்து சென்றிருந்தனர் பரிமளத்தின் கணவன் வீட்டார். அன்றிலிருந்து பாட்டியும் பேத்தியும் ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து வருகின்றனர்.

மூன்று வீடுகளின் பின்கட்டின் வழியாக ஒருவர் வீட்டில் இருந்து மற்றவர் வீட்டிற்கு மிக எளிதில் சென்று விடலாம். சிறிய மதில் சுவரும், மிகச் சிறிய கதவும் மட்டுமே வீடுகளை பிரித்திருந்தது.

அகிலாண்டம்-மங்களாம்பிகை; சௌந்திரவல்லி-கோதாவரி; சிவபூஷணம்-வேலாயுதம் என மூன்று குடும்பமும் நெருங்கிய நட்பிழைகளால் இறுக்கமாய் கோர்க்கப் பட்டிருந்தது.

ராமாசாமியின் குடும்ப முன்னேற்றத்தில் இந்த மூன்று குடும்பமும் தங்களது பங்களிப்பை அளித்து இவரின் பிள்ளைகளை வளர்க்க உறுதுணையாய் இருந்து வந்தனர்.

பெரியவர்களின் குணாதிசயங்கள் எதுவும் இவர்களின் அடுத்த தலைமுறைக்கு பதியவில்லை. வெற்றிவேல், சக்திவேல் இருவருக்கும் சசிசேகரன் மீது எப்போதும் ஒரு வேண்டா வெறுப்பு பார்வை படர்ந்து கொண்டே இருக்கும்.

சிவபூஷணம் தனது பிள்ளைகளையும், மாணவர்களாகவே பாவித்திட, அதனால் ஏற்பட்ட கோபம் சசிசேகரன் மீது அகலாத பிடித்தமின்மையை உருவாக்கி விட்டிருந்தது. தந்தையின் எந்த அறிவுரையும் வேலுச் சகோதரர்களுக்கு வேப்பங்காய்தான்.

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து தமிழ் வகுப்பிற்கு வருவது, அவரின் வீட்டில் எழுதப்படாத சட்டமாக இருக்க, அதை சிறுவயது முதற்கொண்டு கடைபிடித்தவன் சசிசேகரன். அவன் பின்பற்றினான் என்பதைவிட, அவனது தந்தை ராமசாமியால் செயல்படுத்தப் பட்டான் என்பதே பொருந்தும். 

என்ன நடந்தாலும், தனது உத்தரவு நடந்தே தீரவேண்டும் என்ற கட்டளையிடப்பட, சிவபூஷணத்தின் பிள்ளைகள் ஒருமணிநேரம் தாமதமாக ஆறுமணிக்கும் வர யோசித்தனர்.

பாட்டி அகிலாண்டத்தின் அரவணைப்பில் பிள்ளைகள் வளர்ந்து வந்த காலத்தில், ஒரு ஆசிரியராக, மகன்களை அவரால் இறுக்கிப் பிடிக்க முடியாமல் போனது.

அந்த நாட்களில் சொல்வதை எல்லாம் தட்டாமல் கேட்கும் சிறு பிள்ளையாக சசிசேகரன் இருக்க, சிவபூஷணத்தின் மனதிற்கு மிகவும் பிடித்தவனாகிப் போனான்.

அவரின் எண்ணத்திற்கு மாறாக பிள்ளைகள் நடக்க, காலப் போக்கில் மகன்கள் எழுவதே பள்ளிக்கு கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் என்றானதில், இளம் பிராயத்திலேயே மகன்களைப் பற்றிய சிவபூஷணத்தின் கணிப்பு தவறாகிப் போனது.  

இவரது அனைத்து பண்புகளையும் ஒப்பீடு செய்யும் போது, இவரின் புதல்வர்களின் கீழ்படியாமையில் அவை வெகுவாய் பின்தங்கி விடும். அவருக்குள் இருக்கும் எந்த இயல்புகளும் அவரின் மகன்களுக்கு இல்லை.

எட்டுவயது வரைக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல், பாட்டியின் ஆதிக்கத்தில் பேரன்கள் வளர்ந்த காலம் அது. இரண்டு மகன்களுக்கு அடுத்து பிறந்த சரண்யாவின் மீது பெரியவர்கள் எல்லோருக்கும் கொள்ளை பிரியம்.

ராஜாவீட்டு கன்றுகுட்டியாக, கண்டிக்க ஆளில்லாமல் வலம் வந்து கொண்டிருந்த சரண்யாவின் அண்ணன்களுக்கு இதில் கொஞ்சம் மனத்தாங்கல்தான்.

வீட்டிலுள்ளோர் மட்டுமல்லாது, உற்றார் உறவினர், நண்பர்கள் கூட பெண் குழந்தையை மட்டுமே தூக்கி வைத்து கொஞ்சியதில் சகோதரர்களுக்கு மனம் சுணங்கிப் போய்விடும்.

இதன் விளைவாக வீட்டிற்கு வெளியே அதிகம் நடமாடத் தொடங்கினர் சிறுவர்கள். எந்தநேரமும் பாட்டியின் கண்கள் பேரன்களின் நடமாட்டத்தை மட்டுமே கணக்கெடுத்து கொண்டிருக்கும்.

“வரவர பொம்பள பிள்ளைக்கு இருக்குற கவனிப்பு, சுதந்திரம் கூட நமக்கு இல்லடா சக்தி…” என வெற்றிவேல் புலம்பி பலமுறை அந்த வீட்டில் எதிரொலித்ததும் உண்டு.

அண்ணனுக்கு தப்பாத இளையவனாக சக்திவேலும் மூத்தவன் பேச்சை மந்திரமாக எடுத்துக் கொள்வான்.

இருவரும் தங்களின் மனத் தாங்கலை சிறுமியான சரண்யாவின் மீது ஏதாவது ஒருவகையில் வெளிப்படுத்தி விடுவர். சகோதரர்களின் மறைமுக தாக்குதலுக்கு பயந்தே, சிறுமி சரண்யா, தனது குடும்பத்தாரை விட்டு வெகுவாக விலகி நின்று, லயாவிடமும் லச்சுவிடமும் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.

“பட்டுகுட்டிக்கு ஊட்டி விடனும், நீயும் தம்பியுமா உக்காந்து சாப்பிடுங்க, பெரியவனே!” சௌந்திரவல்லி வெற்றிவேலிடம் கூற,

வேண்டாவெறுப்பாக நான்கு கவளத்தை மட்டுமே அள்ளிப் போட்டு, உண்டு முடித்தேன் எனப் பேர் பண்ணிக் கொள்வான் வெற்றிவேல்.

“என்ன ஆச்சு பெரியவனே? வளர்ற புள்ள இப்படியா அரைகுறையா சாப்பிடறது!” பாட்டி அகிலாண்டம் கேட்க,

“அதென்ன பாப்பாக்கு மட்டுமா ஊட்டி விடறது? நாங்களும் சின்ன பசங்கதானே!” என்று சக்திவேல் அந்த வயதிலும் பேதம் பார்க்க ஆரம்பிக்க,

“நம்ம பட்டுகுட்டிடா… இப்படியெல்லாம் போட்டிபோடகூடாது சின்னவனே!” அகிலாண்டம் எடுத்துக் கூறினாலும், அவையெல்லாம் சிறுவர்களின் மனதில் ஒட்டவில்லை.

வீட்டுப் பெரியவர்கள் தங்கையை முன்னிட்டே தங்களை ஒதுக்கி வைக்கின்றனர் என வாய்விட்டே குறைபட்டுக் கொள்ள, சௌந்திரவல்லி மைந்தர்களின் மேல் கூடுதல் கவனம் வைக்க தொடங்கினார்.

வீட்டுச் சூழ்நிலை, சிறுவர்களின் வளர்ப்பு என அனைத்தையும் அனுசரித்து, கைக்குழந்தையான சரண்யாவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை மங்களாம்பிகை பாட்டி ஏற்றுக் கொண்டு விட, அன்றிலிருந்து சரண்யாவின் பொழுதுகள் முழுவதும் கமலாலயா உடன்  என்றானது.

வீட்டில் ஒற்றை பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்த லச்சுவும் அந்த சமயத்தில் தோழமை மற்றும் விளையாட்டிற்கென அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். சரண்யாவின் இளம் பருவம் குறும்பும் சிரிப்புமாக இவர்களுடன் மட்டுமே கழிந்தது.

நட்புறவாடிய குடும்பங்களின் பெண் பிள்ளைகள் ஒன்றாக வளர, ஆண் பிள்ளைகள் முறைத்துக் கொண்டு நின்றனர்.

வருங்காலத்தில் இவர்களின் மாற்றங்கள் யார் யாருக்கு எந்த மாதிரியான வாழ்வை பரிசாகக் கொடுத்தன என்பதை வரும் பதிவுகளில் காண்போம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!