சில்லென்ற தீப்பொறி – 17

சில்லென்ற தீப்பொறி – 17

ஆற்றாமை யாற்றேன் றலையாமை முன்இனிதே

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே

ஆக்க மழியினும் அல்லவை கூறாத

தேர்சசியின் தேர்வினியது இல்.

விளக்கம்

ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

சில்லென்ற தீப்பொறி – 17

‘ஈஸ்வர் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்.’ கட்டிடத்தை சுற்றிப் பார்த்தவாறே யோசனையுடன் நடந்து கொண்டிருந்தாள் லக்கீஸ்வரி. வணிகப் பொருட்கள் அடுக்கப்பட்டிருக்கும் அந்தப் பெரிய அறை ஒரு ஒழுங்கின்றி பரபரத்துக் கிடந்தது.

ஏறக்குறைய 2500 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தை மொத்தமாக வளைத்துப் போட்டிருந்தார் ரெங்கேஸ்வரன். ஆனால் கட்டிடத்தை அவரது தொழிலுக்கு ஏற்ப மாற்றி எழுப்பிக் கட்டினாரா என்று கேட்டால் இல்லையென்று அடித்துச் சொல்வாள் லக்கி.

மிகப் பழமையான கட்டிடம் அது. நுழைவு வாயிலைத் தாண்டி இருபதுக்கு இருபது அறையை மட்டும் அலுவலக உபயோகத்திற்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டு, மீதமுள்ள இடத்தை அப்படியே விட்டு விட்டார்.

சரக்குகள் வந்தவுடன் விற்பனைக்காக அடுத்தடுத்த இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விடுவதால், எதற்காக மெனக்கெட வேண்டுமென்று காலியிடமாக விட்டு பெரிய குடவுனைப் போல வைத்திருந்தார்.

மொத்தத்தில் அது பெரிய கான்கிரிட் கட்டிடம் மட்டுமே. மேலே மொட்டை மாடியில் குளியலறையுடன் கூடிய ஓய்வறை மட்டுமே இருக்கின்றது. மீதமுள்ள இடங்கள் சீந்துவாரின்றி தூசியும் குப்பையுமாய் கவனிப்பாரற்று கிடக்கின்றது.  

“பில்டிங் எக்ஸ்டென்ட் பண்ணி செக்சன்ஸ் பிரிச்சு மாத்தலாம் டாடி… பாக்க அழகா நீட்டா இருக்கும். வேலை பார்க்கிறவங்களுக்கும் ஈசியா இருக்கும்.” பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே தந்தையிடத்தில் லக்கி தன் யோசனையை முன்வைத்தாள்.

“நீ படிப்பு முடிச்சதும் செய்யலாம் பாப்பா!” புன்னகையுடன் கூறி மகளின் வாயை அடைத்து விட்டார் ரெங்கேஸ்வரன்.

இளங்கலை மூன்று ஆண்டுகள் முடித்ததும், “கட்டிடத்தை ஏற்றிக் கட்டி மேலே வாடகைக்கு விடலாம் பா!” என அவள் மீண்டும் தன் யோசனையைச் சொல்ல,

“எல்லாம் நீ பொறுப்பு எடுத்துக்கும் போது, உனக்கு பிடிச்ச மாதிரி பண்ணிக்கலாம் லக்கிமா!” சமாதானம் கூறி மகளின் கருத்திற்கு மூடுவிழா நடத்தினார் ரெங்கன்.

இப்பொழுதும் இரண்டு நாட்களுக்கு முன் இதே யோசனையைக் கூறியதற்கு, “மாப்பிள்ளைகிட்ட யோசனை கேட்டு, அவர் சம்மதத்தோட நீ எதுனாலும் செய்!” அலட்சியத்துடன் தட்டிக் கழித்து விட்டார்.

இதற்கு மட்டுமா… மகள் ஜெர்மனில் இருந்து தனியாக வந்த பொழுதில் இருந்தே முகத்தை திருப்பிக் கொண்டு பதிலளிக்கிறார் ரெங்கன். இவருக்கு மட்டுமல்ல நடேசன் குடும்பத்திற்கும் லக்கியின் முடிவில் சற்றும் விருப்பமில்லை.

இருவரும் மனமொத்து பேசித்தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம் என எசப்பாட்டு பாடாத குறையாக, அனைவரிடமும் விளக்கம் கூறி முடிப்பதற்குள், மீண்டும் கணவனின் வீட்டுச் சிறைக்கே சென்று விடலாமா என்றெல்லாம் எண்ணி விட்டாள் லக்கீஸ்வரி.

யாருக்கும் இவர்களின் முடிவில் மனம் ஒப்பவில்லை. சுவற்றில் அடித்த பந்தாக மகள் மீண்டும் தன்னோடு வந்து விட்டதை நினைத்து பெரிதும் மனம் வருந்திப் போனார் ரெங்கேஸ்வரன்.

இவர்களுக்காக எடுத்த நல்முயற்சிகள் யாவும் வீணாகிப் போனதாக நடேசனிடம் வெளிப்படையாக ஆதங்கப்பட்டுக் கொண்டார். இதன் காரணமாக மகளிடம் பேச்சையும் பழக்கத்தையும் வெகுவாக குறைத்துக் கொண்டு தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்தப் பாசமிகு தந்தை.

இதில் பெரிதும் அடிபட்டுப் போனது லக்கி மட்டுமே. தனிமையும் நிம்மதியும் தேடி, இங்கு வந்து இறங்கிய இந்த பத்து நாட்களில் இவளுக்கு கிட்டியது எல்லாம் வெறுமையும் இயலாமையும் மட்டுமே.

தான் எந்த ஒன்றைச் சொன்னாலும் மறுத்துக் கூறி தடை விதிக்கும் அப்பா… அவரைப் பின்பற்றியே பேசும் நடேசன் குடும்பம் என, இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் மனதோடு உள்ளமும் சோர்ந்து போய் விடுகிறது இவளுக்கு.

“பொறுப்பான மருமகளாய் எங்கள் வீட்டுப் பிள்ளையுடன் குடும்பம் நடத்துவதில் பாகுபாடு பார்க்கின்றாள்.” மனத்தாங்கலோடு கோமதி குற்றச்சாட்டு வைக்க, அதற்கு ஹரிணியுமே ஒத்து ஊதினாள். இறுதியில் இவள்தான் பேசாமடந்தையாக ஊமையாகிப் போனாள்.

எதுவும் வேண்டாம் தொழிலில் கவனம் செலுத்துவோம் என்று சொந்த நிறுவனத்தில் வந்து அமர்ந்தால், அந்த இருப்பிடத்தின் அமைப்பே அவளுக்குப் பிடித்தமற்றதாகிப் போகிறது.

அதற்கு தகுந்த ஒரு மாற்று யோசனையைக் கூறினால், ‘கணவனின் ஆலோசனையை கேட்டுச் செய்!’ என கண்டிப்புடன் சொல்லிச் சென்று விட்டார் தந்தை.

அவனிடம் இப்படி என்று யோசனை கேட்டால் போதும், கழுத்தோடு தன் சங்கை நெறித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். ‘அந்த அக்கப்போருக்கு இந்த குடவுன் அப்படியே இருக்கட்டும்.’ என தலையில் கைவைத்து நொந்து கொண்டிருந்தாள் லக்கி.

பிறந்த வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், “அரைவ்டு சேப்லி.” என்று இவள் அனுப்பிய வாட்ஸ்-அப் செய்திக்கு, ஹார்டின் எமொஜியும், ‘டேக்கேர்’ வார்த்தையும் போட்டு விட்டுப் போனதோடு தனது கடமையை முடித்திருந்தான் அமிர்தசாகர்.

அதன் பிறகு அவனாக அழைக்கவும் இல்லை. இவள் இரண்டு முறை பேசுவதற்கு முயற்சித்தாலும் அவன் அழைப்பினை எடுக்கவில்லை.

‘தன் நினைவில் கரைந்து, பிரிவில் உருகி, தன்னுள் ஈர்க்கப்பட்ட காந்தமாய், தன்னுடன் கொஞ்சிப் பேசிக் குலாவுவான் கணவன்.’ என ஆசையுடன் பெரிதும் எதிர்பார்த்திருந்தாள் லக்கி.  

அவளுடைய கணிப்புக்கு முற்றிலும் மாறாக அவன் கிணற்றில் போட்ட கல்லாக அமைதியாக இருந்தான். ‘தினமும் அழைத்துப் பேச வேண்டாம், ஹாய், ஹௌவ் ஆர் யூ? என்று வாட்ஸ்-அப்பில் விசாரித்து கேட்பதற்குக் கூடவா நேரமில்லை இவனுக்கு?  

லக்கீஸ்வரி என்ற ஒருத்தி கடந்த இருபது நாட்களாக அவனையே சுற்றிச் சுற்றிச் வந்தாள் என்பதாவது அவன் நினைவில் இருக்குமா? எப்பொழுதுதான் மனைவியின் மனம் மகிழும்படி இவன் நடந்து கொள்வான்?’ சோர்வுடன் எண்ணிய லக்கியின் மனம் முழுவதும் ஆற்றாமைகளே ஆர்ப்பரிக்க, அவளின் அன்றாடங்கள் எல்லாம் பெரும் அவஸ்தையாகிப் போனது.

இரண்டு நாட்கள் தொடர்ந்து கணவனுடன் பேச முயற்சித்து பின் இவளும் ரோசத்துடன் விட்டு விட்டாள். அவனுக்குக் குறையாத வீம்பாக எதிர்வினை ஆற்றுகிறாள். அழைத்துப் பேசவேண்டும் என்று இவளும் நினைக்கவில்லை. அவனும் அழைக்கவில்லை.

தந்தை வீட்டிற்கு வந்து இறங்கிய பொழுதில் இருந்த நிமிர்வும் தைரியமும் அவளிடம் மெல்ல மெல்ல வலுவிழக்கத் தொடங்கியதில், கரைகடந்த புயலால் சேதமடைந்த நிலத்தைப் போல லக்கியின் மனம் சேதாரம் கொண்டது.

உள்ளுக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் பயத்தை கண்களில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அடுத்த கவலை. தெரிந்தால் உடனே மூட்டையை கட்டி கிளப்பி விட்டு விடுவார் தந்தை.

தற்போதைய பிரிவின் காரணங்கள் இந்த தலைமுறைக்கு ஏற்புடையதாக இருந்தாலும் பெரியவர்களின் எதிர்ப்பில் பலவீனப்பட்டு போகின்றது. உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனமும் உடலும் இதனை தாங்கிக் கொள்ளுமா?

நிச்சயம் லக்கியின் அகமும் புறமும், தந்தை, கணவன் என இருவரின் நிராகரிப்பையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

தனக்குள் அலைபாய்ந்த உணர்வுடன் நிறுவனத்தின் மாடியில் உள்ள ஓய்வறையில் சோர்வாய் வந்து அமர்ந்து விட்டாள். மதிய உணவு நேரம் தாண்டியும் சாப்பாட்டிற்காக வீட்டுற்குச் செல்லவும் மறந்து போயிருந்தாள்.

தினப்படி ரெங்கேஸ்வரன் அந்த அறையில் மதியம் உணவருந்தி விட்டு ஓய்வெடுப்பது வழக்கம். இன்று அவரும் ஒரு கூட்டத்திற்கு சென்றுவிட்டு அங்கேயே உணவை முடித்துக் கொள்வதாக கூறிவிட, இவளோ அந்த நினைவே இல்லாமல் அறையில் வந்து அமர்ந்து விட்டாள்.

மூன்று மணியைத் தாண்டிய வேளையில் அரக்க பறக்க வேக மூச்செடுத்துக் கொண்டு வீட்டில் வேலை செய்யும் கமலாம்மா இவளுக்கான உணவுடன் வந்து விட்டார்.

“நீங்க எதுக்கு கமலாம்மா வந்தீங்க?” புரியாமல் லக்கி கேட்க,

“நீ சாப்பாட்டுக்கு வரவே இல்லையே பாப்பா? இவ்வளவு நேரம் பார்த்துட்டுதான் உனக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்.” என்றபடியே அவள் சாப்பிடுவதற்கு அனைத்தையும் வெளியே எடுத்து வைத்தார் கமலாம்மா.

அவருக்கு லக்கியின் மேல் இருக்கும் அன்பும் கனிவும் அளவு கடந்தது. வயது முதிர்ந்த தாயாருடன் இளம் விதவையாக ரெங்க பவனத்தில் வீட்டு வேலைக்காக இவர் வந்து சேர்ந்து போது லக்கியின் வயது ஆறு.

வெறுமையாகிப் போன தன் வாழ்வின் விடிவெள்ளியாகவே சிறுமி லக்கியை அரவணைத்துக் கொண்டார் கமலாம்மா. கஷ்டஜீவனத்தில் வசிக்கும் பெற்றோருக்கு ஒற்றை மகளாகப் பிறந்து, குடிகாரனுக்கு மனைவியாக வாழ்ந்து, விபத்தொன்றில் கணவனை இழந்து போனவர் கமலாம்மா.

நிம்மதியைத் தேடி அலைந்தவரை ரெங்கேஸ்வரனின் தாயார் கோவைக்கு வரவழைத்துக் கொண்டார். நடமாட முடியாமல் இருக்கும் தன்னைப் பராமரிப்பதற்கும், குழந்தை லக்கியை வளர்ப்பதற்கும் என கமலத்தை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.

தனது வேலையை அர்ப்பணிப்புடன் செய்தே அந்த குடும்பத்தில் ஒருவராகிப் போனார் கமலம். தங்களின் பங்களாவோடு ஒட்டிய சிறிய குடியிருப்பை தந்து அங்கேயே தங்க வைத்திருந்தார் ரெங்கேஸ்வரன்.

லக்கியின் பாட்டி காலம் சென்ற பிறகும் பெண் பிள்ளைக்கு துணை மற்றும் பாதுகாப்பு கருதியே கமலாம்மாவை வற்புறுத்தி, வேலையில் நிலையாக பிடித்து வைத்துக் கொண்டார் ரெங்கன். காலப்போக்கில் கமலத்தின் தாயாரும் தவறிப் போன நிலையில் லக்கியின் பாசமான கவனிப்பு அவருக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.

முதலாளி விசுவாசமும் கமலாம்மா என்றழைக்கும் லக்கியின் அன்பும் அவரை அங்கேயே கட்டிப் போட்டு வைக்க, இருவருக்கும் இடையேயான பந்தம் அம்மா மகள் உறவில் அழகாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

லக்கியின் மீதான கனிவும் அக்கறையும் என்றும் அவருக்கு குறைந்ததே இல்லை. இப்பொழுதும் அந்த அன்பிலேயே பதைபதைத்து உணவுடன் வந்தவரை செல்லமாய் கடிந்து கொண்டாள் லக்கி.

“எதுக்கு நீங்க சிரமம் படுறீங்க? ஃபோன் பண்ணியிருந்தா நானே வந்துருப்பேனே கமலம்மா… பீபீ வச்சுட்டு இந்த வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக்கணுமா?” அக்கறையுடன் கேட்டாள் லக்கி.

“நீ இங்கே வந்ததுல இருந்து சரியாவே ஆகாரம் எடுத்துகிறதில்ல பாப்பா… எதுனா உடம்புக்கு முடியலையான்னு கேட்டா இல்லன்னு மழுப்பலா முழுங்குற!” அவளின் மாற்றத்தை கண்டு கொண்டவராக பேசினார் கமலம்.

‘கடவுளே! நான் குழம்பிப் போயி நிக்கிறது இவ்வளவு வெளிப்படையாவா தெரியுது? இனி கவனமா இருக்கணும்.’ மனதோடு பேசிக் கொண்டவளை இழுத்து பிடித்து அமர வைத்தார்.

“காலை டிபனே நீ சரியா சாப்பிடாம வந்துட்ட டா! இப்பவும் நீ வராம இருக்கவும் தான், மனசு கேக்காம நானே வந்துட்டேன். ஊருல இருந்து வரும்போதே மெலிஞ்சு போயி வந்த… இப்ப அதை விட வாடிப் போயி தெரியுற! ஏன் இப்பிடி இருக்க?” வாஞ்சையுடன் கேட்டபடி இவளுக்கு சாதம் சாம்பார், கூட்டு என தட்டில் வைத்து பரிமாறவும், அந்த உணவைப் பார்த்தே அவளுக்கு வெறுத்துப் போனது.

“ம்ப்ச்… என்ன கமலாம்மா? சாம்பார் கூட்டு தவிர, வேற எதுவும் நீங்க செய்ய மாட்டீங்களா?” மனதின் வெறுமையை அவரின் மீது இறக்கி வைக்கும் நேரத்தில் அறைக்குள்  ரெங்கேஸ்வரனும் வந்து சேர்ந்தார்.

லக்கியின் பாவனையும் அவளது வார்த்தையும் அவருக்கு கடுப்பினைக் கிளப்ப, மகளை நேரடியாகவே கடிந்து கொண்டார்.

“பெரியவங்க பேச்சுக்குதான் மதிப்பு கொடுக்கத் தெரியலன்னா… அவங்க செய்யுற வேலைக்குமா மரியாதை கொடுக்கத் தெரியாது? இதுதானான்னு சலிச்சுக்குற ஆளு, முன்கூட்டியே இதுதான் வேணும்னு சொல்றதுக்கென்ன? அவங்க செய்ய மாட்டேன்னா சொல்லப் போறாங்க?” உஷ்ணமாய் வந்து விழுந்த தந்தையின் வார்த்தைகளில் லக்கியின் மனம் வெகுவாகப் புண்பட்டுப் போனது.   

“ஐயா… பாப்பா என்கிட்டே உரிமையா கேட்குது, அதை நீங்க ஏன் தப்பா நினைக்கிறீங்க? அவளுக்கு, மாப்பிள்ளை தம்பி அங்கே என்ன பண்றாரோ, என்னவோன்னு யோசனையா இருக்கலாம். அவ கோவிச்சுக்கவும் கேக்கவும், நம்மளை விட்டா வேற யார் இருக்கா?” கமலாம்மா கூறும்போதே,

‘இந்தக் கனிவும் அன்பும் தந்தையிடம் இருந்து வராமல் போனது ஏனோ?’ என மகளின் மனம் முட்டிக் கொண்டு உள்ளுக்குள் அழுதது.

அப்பாவின் கண்டிப்பில் மறுவார்த்தை பேசாமல் சாப்பிட ஆரம்பித்த லக்கிக்கு நாலு கவளம் உணவு உள்ளே செல்லும் போதே குமட்டிக் கொண்டு வர, விரைந்து வெளியே சென்றாள்.

பின்னோடு வந்த கமலாம்மாவும் உணவை வெளியே எடுத்து ஓய்ந்த அவளின் முதுகை தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி விட்டார்.

“என்ன பண்ணுது பாப்பா? ஒழுங்கா சாப்பாடும் எடுத்துக்க மாட்டேங்குற! சரியா பேச்சுக் குடுக்காம, அமைதியாவும் இருக்க… என்ன ஆகுது உனக்கு?” மனம் பதைத்துக் கேட்டவர், கழுத்து நெற்றி என தடவி அவளின் உடல் வெப்பத்தை ஆராய்ந்தார்.

“எனக்கென்ன… நான் நல்லாத்தான் இருக்கேன்! ஆனா, ஏன் இருக்கேன்னுதான் எனக்கேத் தெரியல?” விட்டேற்றியாகக் கூறியவளின் குரல் சட்டென்று கரகரப்பிற்கு மாறிவிட, கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

“என்ன பாப்பா இது? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுடா…” கண்டிப்புடன் கேட்க, உள்ளத்தில் இருப்பதை வெளியே கொட்டிவிடும் வேகம் வந்தது லக்கிக்கு.

“என்னன்னு தெரியல? எனக்கு எங்கே இருந்தாலும் மூச்சு முட்டுது, கமலாம்மா! அங்கே அவர்கூட இருந்தப்பவும் சரி… இங்கே அப்பா கூட இருக்கும் போதும் சரி, என் மனசு நெருடிக்கிட்டே இருக்கு. ஒருவேளை நான்தான் சரியில்லையோன்னு அடிக்கடி தோணுது.

எனக்காக யாருமே இல்லைங்கிற நினைப்பு அடிக்கடி வருது. ஒருவேள என் மனசு, என் அம்மாவை தேடுதோன்னு நினைக்கிறேன் கமலாம்மா!” வேதனையுடன் கூறிக்கொண்டே, முகத்தில் தண்ணீர் அடித்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் லக்கி.

அவளின் வேதனையை காணச் சகித்தவராய் தனது சேலைத் தலைப்பில் அவளின் முகம் துடைத்து தோளில் சாய்த்துக் கொண்ட கமலாம்மாவின் மனமும் தளர்ந்து போனது.

‘கள்ளம் கபடம் அறியாத இந்த குழந்தைக்கு திருமண வாழ்க்கை ஏன் இத்தனை துன்பத்தை தருகின்றது? என்ன குறை இவளுக்கு?’ மனதிற்குள் மருகிக் கொண்டார்.

“இங்கே அங்கேன்னு ஒரு இடத்துல நிலையா இல்லாம நீ அலைஞ்சுட்டு இருக்கடா தங்கம். அதான், உனக்கு இப்படி வேண்டாதது எல்லாம் நினைக்கத் தோணுது. வீட்டுல உக்காந்து நல்லா ரெஸ்ட் எடு! மனசும் தெளிவாகும் உடம்பும் தெம்பாகும். மனசுல எதையும் போட்டு அழுத்திக்காதே!” கமலாம்மா, லக்கிக்கு ஆறுதல் கூறி சாமதானப்படுத்திய வேளையில் வெளியே வந்திருந்த ரெங்கேஸ்வரனும் அவர்கள் அறியாமல் அறைக்குள் சென்று விட்டார்.

மகளை சட்டென்று கடிந்து கொண்டு விட்டோமே என வருத்தப்பட்டவர், அவள் வேகமாக எழுந்து சென்றதும் மனம் கேளாமல் பின்னால் வந்து விட்டார்.

மகள் வாந்தி எடுப்பதை பார்த்து, சற்று தூரமாய் அவளின் முதுகைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டார்.  கமலாம்மாவிடம் லக்கி உரைத்த வேதனையான வார்த்தைகள் முழுவதையும் ஒளிவு மறைவின்றி கேட்டு, அதிர்வுடன் உள்ளே வந்து விட்டார்.

ஏனோ அந்த நேரத்தில் மகளிடம், ‘நான் இருக்கிறேன் உனக்கு.’ என ஆறுதல் அளிக்கவும் மறந்து போனவராக தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டார் ரெங்கன்.

‘என் மனம் அம்மாவை தேடுகிறதோ?’ வருத்தப்பட்டவளின் வார்த்தைகளைக் கேட்டு அவரால் தலை நிமிர்ந்து மகளை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.

‘இரண்டு வயதில் இருந்தே மகளை நெஞ்சில் சுமந்து வளர்த்ததில், எங்கே நான் தவறிப் போனேன்?’ என்ற தவிப்பில் மனம் குமைந்து போனார்.

இந்த அளவிற்கு மனம் வெறுத்துப் போகும்படியாகவா இவளின் திருமண வாழ்க்கை சீர் குலைந்து நிற்கிறது? மகளின் இந்த வேதனைக்கு காரணம் நான்தானே!’ குற்ற உணர்வில் பெரிதும் கலங்கிப் போனார்.

உள்ளுக்குள் வேண்டாத எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து அலைகழிக்க, ஊமையாகி ஓய்வெடுப்பவரைப் போல் கண்களை மூடி படுத்துக் கொண்டார்.

விழிநீரை வெளியில் காட்டிடாத தந்தையின் வேதனைகளை மகள்கள் என்றும் அறிந்து கொள்வதில்லை. லக்கீஸ்வரியும் அப்படித்தானோ?

 

கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே

உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே

எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி

ஒளிபட வாழ்தல் இனிது.

விளக்கம்

கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!