அத்தியாயம் 23
நான் உன்னை இருக்க கட்டிப் புடிச்சுகிட்டா சாவு கூட உன் கிட்ட இருந்து என்னைப் பிரிக்க முடியாதுல
நீ என்னை உன் கூடவே வச்சிருப்ப இல்ல
நீ என்ன காப்பாத்துவ இல்ல
சாகவிடமாட்டல்ல
(கிரிஜா – இதயத்தை திருடாதே)
“ரோஜா!” பயம் கலந்த பாசத்துடன் கூப்பிட்டான் வேந்தன்.
“என்ன ரோஜா? ரோஜாவுக்கு என்ன வச்சிருக்க?” கத்தினாள் அவள்.
“ஏன்டா இவ்வளவு கோபம்?”
“கோபப்படாம உன்னை மடியில் வச்சு கொஞ்சுவாங்களா?” பறந்து வந்தது அவளது பெரிய சீப்பு.
அதைக் கையில் பிடித்தவன்,
“ரோஜா குட்டி, நோ வயலன்ஸ். பேச்சு பேச்சா இருக்கும் போது, அடிதடி வேணாமே.”
“யாரு உனக்கு குட்டி? நானா? பாசமா கொஞ்சுற! உன் குட்டி வாழ்க்கையில இன்னிக்கு என்ன நாளுன்னு தெரியுமா?” இப்பொழுது கத்தவில்லை. குரல் கூர்மையாக வந்தது.
“அது வந்து…”
‘பிறந்த நாளா இருக்குமோ? இல்லையே அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே. வேலண்டைன்ஸ் டேவா? இல்லையே! ஹ்ம்ம் பிரன்ட்ஷிப் டே? காபி டே? பஸ் டே? எய்ட்ஸ் டே? எந்த டே டீ?’
“இத்தாலி நேஷனல் டேவா ரோஜா?”
வந்தது பார் அவளுக்குக் கோபம். இத்தாலி பாஷையில் வண்ண வண்ணமாகத் திட்டினாள். வேந்தனுக்கு ஒன்றும் புரியாததால் ஒரு அசட்டு சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். வாய் வலிக்கத் திட்டியவள் பவுடர் டப்பாவை விட்டடித்தாள். அவனைத் தாண்டி பின்னால் விழுந்தது அது.
“என்னன்னு சொல்லும்மா”
அவனின் ஆழ்ந்த பாசமான குரலில் உடைந்து அழ ஆரம்பித்தாள். பதறிவிட்டான் வேந்தன். அவள் அருகே சென்றவன்,
“அழாதே ரோஜா! நீ அழுதா என்னால தாங்க முடியலை” என கைகளைப் பற்றிக் கொண்டான்.
கையை உதறியவள்,
“இன்னிக்கு என்னோட மாம் இறந்த நாள். நேத்து நைட்டுல இருந்து உன் கிட்ட பாசமா ஒரு பார்வை, ஒரு அணைப்பு, ஒரு ஆறுதல் வார்த்தைன்னு எதிர்ப்பார்த்து நான் ஏமாந்துட்டேன். உனக்கு என் மேல துளி கூட அக்கறை இல்லை மலர்” தேம்பி தேம்பி அழுதாள்.
வேந்தனுக்கே பாவமாக ஆகிவிட்டது. கிட்டே போனாலும் தள்ளி விடுகிறாள். செய்வதறியாமல் அவள் அழுவதை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உன் அப்பா எப்ப இறந்தாரு, எப்படி இறந்தாரு எல்லாம் எனக்கு தெரியும் மலர். உங்க அம்மாவுக்கு என்ன சீக் இருக்கு, என்ன மெடிசன் எடுக்கறாங்க, உன் தங்கைங்க ஹெல்த், அவங்க பேர்த் டேட் இப்படி உன் சம்பந்தபட்ட எல்லா விஷயமும் எனக்கு தெரியும். பாசம் இருந்தா, அவங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க தோணும். உனக்குத் தான் என் மேல அப்படி எதுவும் இல்லையே.” அழுதபடியே பேசினாள்.
“அப்படி எல்லாம் இல்ல ரோஜாம்மா. முதல்ல எப்படியோ இப்ப உன் மேல என் உயிரையே வச்சிருக்கேன்”
“போடா! கல்யாணம் பண்ண கடமைக்கு ஒன் டே என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்ட. அப்புறம் யூஸ் அன்ட் த்ரோ மாதிரி என்னை கண்டுக்கிறதே இல்ல. நீ என் மேல உயிரை வச்சிருக்கியா? நான் தான் நீ நழுவ நழுவ, உன்னை இழுத்து இழுத்துப் பிடிக்கறேன். என்னால முடியலைடா. போதும்! நான் புடிச்சதெல்லாம் போதும். போடா! உன்னை விட்டுட்டேன். நீ தாராளமா போ. எனக்கு என் மனசுள உள்ள டேமோன்ஸ் கூடவே போராட சக்தி இல்ல, இதுல உன் கூடயும் சேர்ந்து போராட முடியல. நான் தோத்துட்டேன், உன் விஷயத்துல தோத்துட்டேன்” அழுது கொண்டே பேசியவள் போக போக ஆக்ரோஷமானாள்.
“நீ வேணா! எனக்கு யாரும் வேணா !” திரும்ப திரும்ப கத்தியவள், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் விட்டடிக்க ஆரம்பித்தாள்.
“ரோஜாம்மா, ரோஜா! கால்ம் டவுன். ரோஜா!” அவளைப் பிடித்து தடுத்தான் வேந்தன். கண் மண் தெரியாத ஆத்திரத்தில் அவன் கையைப் பிடித்துக் கடித்தாள். அவளை அணைத்தவாறே அவள் கோபம் தீர கடிக்க விட்டான் வேந்தன். வலியில் கண் கலங்கியது, அப்பொழுதும் வாய் திறக்காமல் பொறுத்துக் கொண்டான்.
அதற்குள் பொருட்கள் உடைந்த சத்தத்தில் கார்த்திக் ஓடி வந்திருந்தான். கதவின் வெளியே நின்று கொண்டு,
“மச்சி, நான் உள்ள வரவா? என்னடா ஆச்சு? சொல்லுடா” என பதறினான்.
“ஒன்னும் இல்ல நான் பார்த்துக்கறேன். நீ போ!” என்றான் வேந்தன்.
அவன் குரலிலேயே எதுவோ சரியில்லை என அனுமானித்தவன்,
“டேய்! நான் உள்ள வரப் போறேன். ஸ்பேர் கீ என் கிட்ட இருக்கு. நீங்க ரெண்டு பேரும் டீசன்டா இருக்கீங்களா?”
“வந்து தொலைடா!”
கதவைத் திறந்து கொண்டு இறைந்திருந்த பொருட்களை தாண்டி அவர்கள் அருகில் வந்தான் கார்த்திக். அங்கே கையில் ரத்தம் சொட்ட நின்று கொண்டிருந்த வேந்தனையும், இன்னும் அவன் கையைக் கடித்துக் கொண்டிருந்த தேவியையும் பார்த்து அதிர்ந்தான். வேறு வழி தெரியாமல் தேவியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான் கார்த்திக்.
அதிர்ச்சியில் வேந்தனின் கையைத் தானாக விடுவித்தாள் அவள். கன்னத்தைப் பிடித்தபடி விழித்துக் கொண்டிருந்த தேவியை அணைத்துக் கொண்ட வேந்தன்,
“ஏன்டா என் பொண்டாட்டிய அடிச்ச?” என கேட்டு கார்த்திக்குக்கு விட்டான் ஒரு அறை. இப்பொழுது கன்னத்தைப் பிடித்தப் படி விழிப்பது கார்த்திக்கின் முறையாகியது.
கார்த்திக்கைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த தேவி அப்படியே மயங்கி சரிந்தாள். அவள் விழுவதற்குள் வேந்தனும், கார்த்திக்கும் தாங்கி பிடித்தனர். வேந்தன் பிடித்ததைப் பார்த்து மெல்ல தன் பிடியை தளர்த்திக் கொண்ட கார்த்திக்,
“தூக்கி போய் படுக்க வைடா மேடத்தை!” என கூறிவிட்டு பாத்ரூம் சென்றான்.
அவன் திரும்பி வரும் போது கையில் ஈர டவல் இருந்தது.
“இந்தாடா! துடைச்சி விடு முகமெல்லாம். நான் கீழ போய் பால் எடுத்துட்டு வரேன். துடைச்சிட்டு உன் கைய கழுவி துண்டு வச்சு கட்டிக்க. இவங்கள செட்டல் பண்ணிட்டு ஹாஸ்பிட்டல் போகலாம்”
கார்த்திக் வெளியேறியவுடன், டவலால் மெல்ல அவள் முகம், கழுத்து, கை, கால்கள் என ஒற்றி எடுத்தான் வேந்தன். கார்த்திக் சொன்ன மாதிரி ரத்தம் வந்த கையை சுத்தம் செய்து கட்டியவன், மீண்டும் கட்டிலருகில் வந்து அமர்ந்தான். அவள், தான் மனம் மாறி வரும் போது, தன்னை வேண்டாம் என சொன்னது அவனை ரொம்ப பாதித்தது. சோகமாக
“ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே” என பாடினான்.
மெல்ல கை நீட்டி வேந்தனின் கையைப் பற்றிய ரோஜா,
“மலர்! இந்த சைக்கோவ விட்டுட்டுப் போயிற மாட்டியே? உன்னைத் தவிர எனக்கு யாருமே இல்லை. நீயும் என்னை விட்டுட்டுப் போயிட்டா, நான் உயிரோட இருப்பேன், ஆனா உயிர்ப்பா இருக்க மாட்டேன். ஐ எம் சாரி மலர். “
“நீயே விரட்டனாலும், நான் உன்னை விட்டு போக மாட்டேன் ரோஜா.”
“கை வலிக்குதா மலர்?”
“இல்லைடா, வலிக்கல. நீ கவலைப்படாதே”
தேவியை அமரவைத்து கார்த்திக் கொடுத்தப் பாலை மெல்ல புகட்டினான் வேந்தன். பின் படுக்க வைத்து
“இப்போ தூங்குடா.” என தட்டிக் கொடுத்தான். அவள் உறங்கியதும், இவர்கள் இருவரும் ரூமை சுத்தம் செய்தனர். பின் முனிம்மாவை அவளுக்குக் காவலாக வைத்து விட்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினர்.
“கை வலிக்குதாடா?”
“இல்லடா, குளு குளுன்னு சுகமா இருக்கு”
“இந்த நக்கல் தானே வேணாங்கறது”
“அப்புறம் என்னடா கேள்வி? ரத்தம் வர அளவுக்கு பல் பதிஞ்சிருக்கு. வலிக்காம இருக்குமா?”
“ஹ்ம்ம். வேந்தா, மேடம் இப்படி நடந்துகிட்டது உனக்கு பயமா இருக்கா?”
“எப்படி நடந்துகிட்டது?”
“அதான்டா, சைக்கோ மாதிரி பிஹேவ் பண்ணது?”
“சைக்கோன்னு ஏன்டா சொல்லுற? மன தளர்ச்சி, மன அழுத்தம் இப்படின்னு சொல்லு.”
“ஏதோ ஒன்னு. நிஜமா சொல்லு அவங்க நடந்துகிட்டத பார்த்து உனக்கு பயம் வரல?”
“நம்புடா. பயம் எல்லாம் இல்ல”
சந்தேகமாக கார்த்திக் பார்க்கவும்,
“நம்புனாத்தான் எம்.ஜி.ஆர். நம்பலைனா நம்பியார். நீ எம்.ஜி.ஆரா, நம்பியாரா?” என சிரித்தான் வேந்தன்.
“போடா! மேடம் கையில கடிச்சதுக்கு பதிலா வாயில கடிச்சிருக்கனும்”
“சிவந்த கண்ணோட கத்த ஆரம்பிச்சப்போ முதல்ல பயமா இருந்துச்சு மச்சி. அவ பேச ஆரம்பிச்சவுடனே அவ மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சது. என் மேல தப்புன்னும் தெரிஞ்சது. என் மனச அவளுக்கு உணர்த்திருக்கனும். இப்படி லேட் பண்ணிட்டேன். இனிமே ரோஜாவ காக்குற முள் போல, நான் பக்குவமா என் ரோஜாவ பார்த்துக்குவேன்.”
“ரொம்ப தேங்க்ஸ்டா மச்சி”
“என் பொண்டாட்டிய நான் பார்த்துக்கறதுக்கு நீ ஏன் தேங்க்ஸ் சொல்லனும்?”
“அது, அவங்க நம்ம மேடமாச்சே. அவங்க நல்லா இருந்தா தானே நாம நல்லா இருக்க முடியும். அதனால சொன்னேன்”
‘நல்லா சமாளிக்கறடா! நீ சொல்லலைனா நான் கண்டுபிடிக்க மாட்டனா? அவ ரூம் சாவி வரைக்கும் ஸ்பேர் வச்சிருக்க. இன்னிக்கு என்னவோ நடக்கப் போகுதுன்னு அனுமானிச்சு இங்கயே தங்கியிருக்க. என்னப் பார்த்தா மாக்கான் மாதிரியா இருக்கா நீ சொல்லுறத நம்புறதுக்கு. உன் போக்குலயே போய் கண்டுப்பிடிக்கறேன்டா என் வென்ட்ரு’
“ஏன் கார்த்திக், நம்ம மேடம் இப்படி சாமி ஆடறப்போ என்ன பாட்டு பாடி நான் அவங்கள அடக்கட்டும்? மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மாவா ?
இல்ல
மேரியம்மா மேரியம்மா
ஐ அம் சாரியம்மா சாரியம்மா” ன்னு படிக்கட்டா? இல்ல இத்தாலி ரிட்டன் ஆச்சே மாரியாத்தா சாங்க்கு அடங்கலனா? அதான் இந்த சந்தேகம்”
“போடாங்” என திட்ட ஆரம்பித்த கார்த்திக் விழுந்து விழுந்து சிரித்தான். நண்பர்கள் இருவரும் சிரித்த முகமாகவே ஹாஸ்பிட்டல் சென்றார்கள்.
அவர்கள் குல தெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது. ஒரு வேனில் எல்லோரும் கிளம்பினார்கள். வேந்தன் அப்பாவின் கிராமத்தில் தான் குழந்தையம்மன் கோயில் இருந்தது. சொத்து தகறாரில் அவர் மட்டும் ஊரை விட்டு வந்துவிட்டார். அவரது சொந்த பந்தமெல்லாம் அங்கு தான் இன்னும் இருந்தார்கள். அவரின் திருமணத்திற்கு கூட யாரும் ஊரிலிருந்து வரவில்லை. இறப்புக்கு மட்டும் தலை காட்டி விட்டு அன்றே கிளம்பிவிட்டார்கள். அதனால் இந்து யாருக்கும் இவர்கள் வருகையைப் பற்றி தெரிவிக்கவில்லை. பொங்கல் வைத்து வழிபட்டுவிட்டு அன்றே திரும்பிவிடலாம் என்பது தான் அவர்களின் பிளான்.
கார்த்திக் வேனை ஓட்ட, அவன் பக்கத்தில் வீரா அமர்ந்து வந்தான். மற்றவர்கள் எல்லாரும் பின்னே அமர்ந்திருந்தார்கள்.
வேந்தனின் கை கட்டைப் பார்த்த இந்து,
“என்னப்பா ஆச்சு? கையில கட்டு போட்டுருக்க?” என கேட்டார்.
“எங்க வீட்டு செல்லக்குட்டி நாய் கடிச்சிருச்சும்மா” என தேவியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னான் வேந்தன்.
என்ன நக்கலா என்பது போல் பார்த்தாள் அவள்.
“எப்படா நாய் வாங்குன? சொல்லவே இல்ல. நாய் வளர்க்கறதெல்லாம் ஒரு கலைடா. அப்படியே கட்டிப் பிடிச்சு, தடவிக் கொடுத்து, முதுகுல சொரிஞ்சு விட்டு பாசமா பார்த்துக்கனும்டா”
“ஹ்ம்ம் எனக்கும் ஆசைதான். ஆனா விட்டாதானம்மா. ரொம்ப அடம் பண்ணுது வர வர.”
அவனை நேராகவே முறைத்தாள் தேவி. கடி நாளுக்கு அப்புறம் இவள் வேந்தனிடம் பேசுவதே இல்லை. அவன் கண்ணாமூச்சி ஆடியது போல் இப்பொழுது இவள் ஆடிக் கொண்டிருந்தாள். அன்று மயக்கத்தில் மன்னிப்பு கேட்டதோடு சரி. இவனுக்கு பேசவே வாய்ப்பு கொடுக்காமல் அவளுக்கு சொந்தமான இன்னொரு அபார்ட்மென்டில் தங்கி இருந்தாள். இன்று காலைதான் வந்திருந்தாள் கோயிலுக்கு செல்வதற்காக. அவனிடம் பேசுவதெல்லாம் கார்த்திக் வழியாகத்தான். வேந்தன் கூட கார்த்திக்கிடம் எரிந்து விழுந்தான் நீ என் பொண்டாட்டியா அவ என் பொண்டாட்டியா என. கார்த்திக் பந்து, இந்த கோல் போஸ்டுக்கும் அந்த கோல் போஸ்டுக்கும் மாற்றி மாற்றி எத்தப்பட்டது.
வேன் ஓட்டிக் கொண்டிருந்த கார்த்திக் லட்டுவை மறைமுகமாக சைட் அடித்தப் படியே காதல் பாடல்களாக பிளேயரில் ஓட விட்டுக் கொண்டிருந்தான்.
“ஏன்டாப்பா கார்த்திக், இப்ப நாம எங்க போறோம்?”
“கோயிலுக்குத்தான்மா”
“அட! நான் கூட நீ போட்ட பாட்டெல்லாம் கேட்டு உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண தான் போறோமோன்னு நினைச்சிட்டேன்”
இந்து அப்படி சொன்ன நேரம் கார்த்திக்குக்கு நல்ல நேரமோ?
“ஏன்மா எனக்கு கல்யாண வயசு ஆகலியா?” ஆதங்கமாக கேட்டான் கார்த்திக்.
“கவலைய உடை, கண்ணீரை தொடை. நாம் போகுறோம்ல ஊரு அங்க நம்ம சொந்தங்க நிறைய பேரு இருக்காங்கப்பா. உனக்கு நல்ல பொண்ணா பார்த்து நான் கட்டி வைக்கிறேன்”
கார்த்திக் முகம் போன போக்கைப் பார்த்து லட்டுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதற்கு மேல் கார்த்திக் பேசவில்லை. பிளேயர் தான் பாடியது.
“ஆடதடா ஆடாதடா மனிதா!
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா” நொந்து போனான் அவன்.
சைட் டிராக்கில் வீராவும், அனுவும் கண்களாலேயே காதல் கவிதைப் படித்தார்கள். ரியர்வியூ கண்ணாடி வழியே அனுவை அணுஅணுவாய் ரசித்து கண்ணடித்தான் வீரா. நேற்று இரவே இருவருக்கும் ஜில் ஜில் ஜகா ஜகா நடந்திருந்தது. அவர்களின் காதல் காவியத்தைப் பார்த்த கார்த்திக் கடுப்பானான்.
‘இவனுங்களுக்கு முன்னே பிட்ட போட்டு ரோட்டப் போட்டவன் நானு. ஆனா இன்னும் சிங்களா சுத்தறேன். இந்த ஜென்மத்துக்கு என் மூஞ்சிபுக்குல ஸ்டேட்டஸ் சிங்களா தான் இருக்குமோ. மிங்கிள் ஆகி நமக்கு சிங்கங்கள் பொறக்காதோ’ கிலியடித்தது அவனுக்கு. கண்ணாடி வழியாக பாவமாக லட்டுவைப் பார்த்தான். அவளோ பட்டேன பார்வையைத் திருப்பி கொண்டாள்.
ஊர்க்கோயிலில் இறங்கி பொங்கல் வைக்க ஏற்பாடு செய்தனர். திருமணமான இரு பெண்களும் பொங்கல் வைக்க அவர்களின் கணவன்மார்கள் உதவி செய்தனர்.
தேவி எப்படி செய்வது என முழிக்க, அவளை கைப்பிடித்து அமர்த்தி எல்லாவற்றையும் வேந்தனே செய்தான். வேர்த்து விறுவிறுத்தவளுக்கு தன் வேட்டியை லேசாக தூக்கி துடைத்துவிட்டான். பொங்கலை இலையில் போட்டு அனைவரும் பகிர்ந்து உண்டார்கள். அதோடு புளியோதரையும் சிப்சும் செய்து எடுத்து வந்திருந்தார் இந்து.
உணவை கார்த்திக்கிடம் நீட்டினாள் லட்டு.
“நாம எப்ப இப்படி ஒன்னா பொங்கல் வைக்கப் போறோம் லட்டுமா” என கிசுகிசுப்பாகக் கேட்டான் அவன்.
“எங்க அண்ணன் கிட்ட சொன்னா உன்னை பொங்க வச்சிருவான். ஓகேவா?”
“வேட்டி கட்டிருந்தா உங்கண்ணா பெரிய மல்லு வேட்டி மைனரோ? சரிதான் போடி”
“நீயும் தான் வேட்டி கட்டிருக்கே. அப்படினா நீ என்ன மல்லு வேட்டி மேஜரா? போடா பன்னி மூஞ்சு வாயா”
இவர்கள் இங்கே சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கம்போடும், கட்டையோடும் அவர்களை சுற்றி வளைத்திருந்தனர் ஊர் இளைஞர்கள்.
வீரா மட்டும் பட்டென எழுந்திருந்தான். அவனின் பதட்டத்தில் தான் சுற்றி நின்றிருந்தவர்களை கவனித்தனர் மற்றவர்கள்.
“என்ன அய்த்தை, ஊர் பக்கம் கப்புசிப்புன்னு வந்துட்டு ஓட பார்த்தீங்களோ?” சிரித்தான் முன்னே நின்றிருந்த வாட்டசாட்டமான ஒருத்தன். அவன் ஒரு கையில் கம்பும் மறு கையில் மஞ்சள் தாலியும் பளபளத்தது.
“யாருப்பா நீ?” நிதானமாகக் கேட்டார் இந்து.
“உங்க மருமகன் அய்த்தை” அவன் கண்கள் அங்கே தாலி இல்லாத கழுத்துடன் இருந்த லட்டுவின் மேல் தான் இருந்தது.
‘என்னங்கடா வம்பா போச்சு. கடவுள் என் வாழ்க்கைய மட்டும் இப்படி அழிச்சு கிழிச்சு எழுதறாரே’ புலம்பியது யாரேன்று நான் சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.
உயிரை வாங்குவாள்….