சில்லென்ற தீப்பொறி – 2

சில்லென்ற தீப்பொறி – 2

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்

மனைவாழ்க்கை முன் இனிது, மாணாதா மாயின்

நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்

தலையாகத் தான்இனிது நன்கு.

சில்லென்ற தீப்பொறி – 2

ரெங்கபவனத்தின் பெரிய ஹாலில் அமர்ந்திருந்த உறவுத் தலைகள் அனைவைரும் தங்களுக்கு தெரிந்த நியாய தர்மங்களை அலசிக் கொண்டிருந்தனர்.

விடாக்கண்டனாக தனது முடிவில் திடமாய் எகிறி நின்ற மருமகனை அடக்கும் வழி தெரியாமல், உறவுப் பெரியவர்களை அழைத்து பஞ்சாயத்தை கூட்டிவிட்டார் ரெங்கேஸ்வரன்.

அன்போடும் கனிவோடும் தனக்கு புத்திமதி கூறிய பெரியவர்களை அலட்சியப் பார்வையில் தவிர்த்தான் அமிர்தசாகர். இதுவே இறுதியான முடிவு என்றான பிறகு, அதை பட்டிமன்றம் போட்டு பேசுவதில் எந்தவித பயனுமில்லை என்பதில் அவனுள் அத்தனை உறுதி.

தனது ஐந்துநாள் கடமையை முடித்துக்கொண்டு புறப்படுபவனின் கோரிக்கை நிறைவேறாமல் இருக்க, தனது மனைவிக்கு பிரியும் விடையை அளிக்கும் முடிவிற்கே வந்திருந்தான் அமிர்தசாகர்.

முடிவு என்னவோ மிகக் கடுமையானதுதான். ஆனால் முடிவெடுத்தவனின் சுபாவத்தில் இவன் இப்படி பேசுவது புதிதில்லையே என்ற மனோநிலை மனைவிக்கு வந்திருந்தது.

கணவனது விருப்பத்திற்கு செவி சாய்க்காமலும் அவனை எதிர்த்துக் கேட்காமலும் வெறுமையாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் லக்கீஸ்வரி.

புரிதல் இருக்குமிடத்தில் பிரிதலின் சிந்தனை தேவையே இல்லை. இவனது அகராதி இப்படித்தான், தன்னுடைய பாதை அப்படித்தான் என தெளிந்து கொண்டபிறகு பிரிந்து சென்றேதான் சாதிக்க வேண்டுமா? ஒருவரின் பாதையில் மற்றவரின் குறுக்கீடு இல்லாமல் வாழ்நாட்களை கடந்து சென்றால் போதாதா என்பது மனைவியாக லக்கீஸ்வரியின் எண்ணம்.

கணவனுக்கோ என் மனைவி, எனக்கானவள், முற்றிலும் என்னைச் சார்ந்தே வாழ வேண்டுமென்பது ஆண்மகனான அமிரின் எண்ணம். கோபத்தை புருசலட்சணமாகவும், பெண்ணை தனக்குள் அடக்கி ஆள்வதை ஆண்மையாகவும் மனதில் நிறுத்திக் கொண்ட ஆணாதிக்க வர்க்கத்தின் சொந்தக்காரனிடம் சமரசங்களும் அறிவுரைகளும் செல்லாக்காசாய் போனது.

“நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ் மின்னி! இப்ப நீ, என்கூட வந்தால் மட்டுமே, நம்ம பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும். இதுதான் ஃபைனல் டிசிஷன்” வெகு கறாராய் தனது முடிவினை மனைவியின் மீது திணித்தான் அமிர்தசாகர்.

“என் முடிவுலயும் மாற்றமில்ல. உங்க பின்னாடியே நானும் வருவேன்னு எதிர்பார்க்க வேணாம்” லக்கீஸ்வரியின் பிடிவாதத்தில் பொறுமை இழந்தவன், தன் உடைமைகளை சேகரித்துக் கொண்டு தனியாக புறப்பட்டு விட்டான்.

கணவன் செல்வதை வெறுப்புடன் பார்த்தாலே ஒழிய, அவனை தடுத்து நிறுத்தாமல், அவனது முடிவிற்கு வருத்தமும் கொள்ளாமல் சிலையாய் நின்றிருந்தாள் லக்கி. போதும் போதுமென்ற அளவிற்கு பேசியாகி விட்டது இனியும் இறங்கிச் சென்று விளக்கம் கொடுக்க மனதில் தெம்பும் இல்லை விருப்பமும் இல்லை. வெறுத்து சலித்த மனைவியின் மனம் மிரட்டலுக்கோ அதிகாரத்திற்கோ அஞ்சவில்லை.

“புறப்படும் போதாவது வீட்டுக்காரிகிட்ட சொல்லிட்டு போ, அமிர்!” அவனது முடிவினை மாற்றும் கடைசி முயற்சியாக அறிவுறுத்தினார் பெரியவர் ஒருவர்.

“இவ்வளவு நேரம் என்னென்ன சொல்லி புரிய வைக்கணுமோ, அதையெல்லாம் சொல்லி முடிச்சாச்சு! இன்னும் தனியா கூப்பிட்டு பேசுறதுக்கு என்ன இருக்கு? இங்கே வெட்டியா உட்கார்ந்திருக்கற நேரம், நான் ஏர்போர்ட் கெளம்புறது இட் வில் பி பெட்டர்!” அனைவரின் முன்னிலையில் கடுகடுத்தான் அமிர்தசாகர்.

“இப்படி பேசினா எப்படி அமிர்? முடிவா என்னதான் சொல்ல வர்ற?” குறையாத கடுப்புடன் அவனது சித்தப்பா நடேசன் கேட்க,

“திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பிக்க விரும்பல… நான் விலகிக்கிறேன். அதுக்கு உண்டான ஏற்பாடுகளை நானே செய்றேன். இனியும் எனக்கு பொறுமை இல்லை” தன் முடிவிலேயே நின்றான் அந்த பிடிவாதக்காரன்.

“குடும்ப வாழ்க்கை உனக்கு விளையாட்டா போச்சா அமிர்? தோள்ல இருக்குற துண்டை உதறிட்டு போற மாதிரி, உறவை முறிச்சுட்டு கிளம்புறேன்னு சொல்ற? அவ்வளவு ஈசியா உன்னை விடமாட்டேன். என் பொண்ணை விட்டு நீ, எப்படி விலகிப் போறேன்னு நானும் பார்க்கறேன்!” அடக்கப்பட்ட கோபத்தில் பல்லைக் கடித்தார் அவனது மாமனார் ரெங்கேஸ்வரன்.

தன் வீட்டிலிருந்து கொண்டே தன்னை எதிர்த்து பேசும் மருமகனின் மேலிருக்கும் கோபத்தை ஓரளவிற்கு மேல் அவரால் வெளிக்காட்ட முடியவில்லை.

தன்வீட்டு இராஜகுமாரிக்கு எந்த குறையுமில்லாத பரிபூரண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர். அவளின் நல்வாழ்விற்காகவே, தனது நிலையிலிருந்தும் இறங்கி வந்து பேசிக் கொண்டிருக்கிறார். தந்தை இவ்வாறு மனமுடைந்து நின்றதில் வெகுவாக துவண்டு போனாள் மகள்.

“ஒஹ்! நீங்க நினைக்கிற எல்லாத்தையும் செய்யுறது தப்பில்ல… அதுவே, என்னோட விருப்பபடி, நான் இருக்க ஆசைபட்டா அது தப்பா? எந்த காலத்திலயும் என்னை, உங்க இஷ்டத்துக்கு வளைக்க முடியாது.”

மாமனாரின் வயதிற்கோ உறவிற்கோ சற்றும் மரியாதை தரவில்லை. உதட்டுச் சுளிப்புடன் அலட்சிய பாவனையில் பதிலளித்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டான்.

ஏற்கனவே கணவனின் அகம்பாவப் பேச்சில் கொந்தளித்த லக்கியின் மனம், தந்தையிடம் பேசிய உதாசீன பேச்சில் மேலும் கொதிப்படைந்தே போனது. இளம் வயதில் மனைவியை இழந்தும் தனக்காகவே தனிமரமாய் நின்றவர்.

அன்பையும் ஆசையையும் கொட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்த அன்பு மனிதர். அவளைப் பொறுத்தவரை அவரே, அவளின் மிகச் சிறந்த நண்பர், குரு, வழிகாட்டி என எல்லாமும்.

தந்தையின் அன்பும் பாசமும் எந்த பெண்ணுக்குமே ஆயுள் முழுக்க திகட்டாத உறவாயிற்றே! அப்படிப்பட்டவரை நிந்திக்கும் ஒருவன் மகளுக்கு ஜென்ம விரோதிதான். அது கணவனாக இருந்தாலும் விதி விலக்கில்லை.

தனது இருபத்திமூன்று வருட பந்தத்தை, பாசத்தை துச்சமாக நினைப்பவன் தனக்கு தேவையே இல்லை என்கிற தீர்மானத்தில் இறுக்கம் கொண்டாள் லக்கீஸ்வரி.

ஆழ்கடலின் அமைதியைத் தொலைத்த மனம் கரையோர ஆர்பரிப்பாய் அலை வீசுவதும், உள்வாங்குவதுமாய் தந்தையா கணவனா என இத்தனை நேரமாய் சுழன்று கொண்டிருந்தது.

இறுதியில் தந்தையிடம் கொட்டிய கணவனது ஆணவப் பேச்சிலும் பார்வையிலும், மகளின் மனம் தந்தையின் பக்கம் முழுதாகச் சாய்ந்து பிரிவுக் குடையின் கீழ் நின்று கொண்டது.

தனது கோபத்தை, தள்ளிக் கொண்டு வரும் டிராலியின்  வேகத்தில் காண்பித்து, மனைவியை ஏறெடுத்தும்  பார்க்காமல் போர்டிகோவுக்கு செல்லும் அமிர்தசாகரை ஒருவித இயலாமையுடன் பார்த்து அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

அவனது சித்தப்பா நடேசன், சித்தி கோமதி, மாமனார் ரெங்கேஸ்வரன் மற்றும் இருபக்க வீட்டுப் பெரியவர்களாக அங்கே அமர்ந்திருந்த ஐந்துபேர் என ஒரு கூட்டமே அவனது பேச்சிற்கு மனதிற்குள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தனர்.

“உனக்காக நாங்க வந்து உட்கார்ந்திருக்கோம். எங்களையும் மதிக்க மாட்டியா நீ?” பெரியவர் ஒருவர் அவனைப் பார்த்துக் கேட்க,

“நானா உங்களை வரச் சொன்னேன்?” அலட்சியமாய் கூறி தோள்களை குலுக்கியவன், திமிராக தன் மாமனாரை நோக்கி புருவம் உயர்த்தினான்.

‘யாரை அழைத்து பேச வைத்தாலும் நான் மசியமாட்டேன்’ என்னும் எகத்தாளம் கொட்டிக் கிடந்தது அவனது பார்வையில்.

“இது உங்கப்பாவோட முடிவு அமிர். அவர் ஆசைப்படிதானே உன்னை இருக்க சொல்றோம்” மற்றொரு பெரியவர் சமாதானமாகப் பேச முன்வர, அவரை இடைமறித்து,

“உங்க பிரசங்கத்தை நிறுத்துறீங்களா? யாரோட ஆசைக்காகவும் என்னை மாத்திக்கவோ, காலம் முழுக்க பல்லைக் கடிச்சிட்டு வாழவோ நான் விரும்பல” இழுத்து வைத்த பொறுமையுடன் பேசினான்.

“பொண்ணு குடுத்து, கையோட சொத்தும் கொடுத்து, தொழிலை கையில எடுத்து நடத்துன்னு சொல்றாங்க! இதைவிடவா நீ சாதிச்சிடப் போற?” பெரியவரின் நியாயபேச்சிற்கு வெளிப்படையாக உதட்டை சுளித்தான் அமிர்தசாகர்.

“நான் அமிர்! மத்தவங்க சொல்றதை செய்யுற கிளிப்பிள்ளை நான் இல்ல! என் சொந்த முயற்சியில திடமா முன்னேறி நிக்க எனக்கு தெரியும். கஷ்டப்பட்டு இதே சொத்து, பணத்தை தானே சேர்க்கப் போறேன்னு நீங்க கேட்டாலும், என்னோட பதில் நோ தான்!

நான் செலவு பண்ற ஒவ்வொரு பணத்துலயும் என்பேர் மட்டுமே இருக்கணும். என்கூட வாழப்போறவளோட ஒவ்வொரு நொடியும் என்னை மட்டுமே சார்ந்திருக்கணும் இத்தனை நாள் கெஞ்சியும் மிஞ்சியும் சொல்லிப் பார்த்தாச்சு. இனி நோ யூஸ்!” என்றவனின் விளக்கமும் நியாயமானதோ என வந்திருந்த பெரியவர்களை சிந்திக்க வைத்தது.  

“பதிலுக்கு பதில் பேசாதடா! நாளைக்கு உனக்காக பேச நாங்கதான் வரணும். கொஞ்சம் வார்த்தைகளை அளந்து பேசு!” நடேசன் சித்தப்பா பலமாய் ஆட்சேபணைகள் தெரிவிக்க,

“ஆல் ஆஃப் யூ ஜஸ்ட் ஸ்டாப்-இட்! எனக்கு யாரும் வேணாம், எதுவும் வேணாம். என்னையும் யாரும் தேடாதீங்க!” அகங்காரத்தில் கொதித்தவன், மிதமிஞ்சிய கோபத்தோடு சென்று விட்டான்.

வரவேற்பறையின் ஓரத்தில் சுவரில் சாய்ந்து கொண்டு, கணவனின் நடவடிக்கைகளை பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த லக்கீஸ்வரிக்கு, பெரிதாக பதட்டமோ, கண்ணீரோ வரவில்லை.

கணவன் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் செல்வது இன்று நேற்றா நடக்கிறது! இவன் இப்படி கோபம் கொண்டு அவளை விட்டு விலகிச் செல்வது ஒன்றும் புதிதல்ல.

வாழ்க்கை பயணத்தை பொருளாதார மதிப்பீடுகளிலும் அதிகார பற்றுதலிலும் நிர்ணயித்துக் கொள்ளும் தன் கணவனின் மனோபாவத்தை அறிந்து வைத்திருந்த விரக்தியான மனநிலை மனைவியை வெகுவாக பதப்படுத்தி இருந்தது.

தனது பொறுமைக்கும் ஒரு அளவுகோலை வைத்து இன்று தன்னிலையில் மட்டுமே நின்று கணவனின் செயல்களை எடை போட்டபடி இருந்தாள் லக்கி.

சண்டையிட்டாலும் சமாதானமாகப் பேசினாலும், அதிகாரத்துடன் தனது கைபொம்மையாக, மனைவியை ஆட்டிவைப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டவன் அமிர்தசாகர்.

கணவனின் சுபாவத்தை நினைத்து பெருமைபட்டுக் கொள்ளும் பெண்ணாக அவள் இல்லாமல் போனதுதான் இங்கே இன்றைய பிரிவினைக்கே காரணமாகிப் போயிற்று.

இவனை கைபிடித்த நாள் முதற்கொண்டே, இப்படியான ஆணவப் பேச்சுகளையும், அலட்டல்களையும் பார்த்து வருகிறவள் தான் லக்கீஸ்வரி.

அகம்பாவத்தின் உச்சாணிக் கொம்பில், சற்றும் அடக்கமில்லாமல் பேசுபவனை எதைக் கொண்டு யார் அடக்கிட முடியும்?

என்ன சொன்னாலும் தனது வீம்பை மாற்றிக் கொள்ளாத ஆணவக்காரனிடம், எந்த காலத்திலும் மனைவியின் கெஞ்சல் மொழிகளோ, கொஞ்சும் பாவனைகளோ என்றைக்கும் பயனளிப்பதில்லை.

அந்தப் பெரிய ஹாலில் அமர்ந்திருந்த ஒவ்வொவரும் தங்களது அனுமானங்களை கூறி அமிரை பழித்துப் பேச ஆரம்பிக்க, அக்மார்க் மனைவியாக அந்த வார்த்தைகளை கேட்கவும் விரும்பாமல் மனம் சுணங்கிப் போனாள்.

அங்கிருந்து தப்பிக்கும் வழிமுறையை யோசிக்க அவள் கண்ணில் பட்டது அந்த வீட்டின் பெரிய சமையலறை. அதைப் பார்த்ததும் கணவனின் கோபத்தை தூக்கி தூரமாக வைத்து விட்டு, வேகமாக அங்கே செல்லத் தொடங்கினாள்.

கணவனின் கோபத்திற்கு, பொங்கிக் கொண்டிருக்கும் அனைவரின் மனதையும் பழச்சாறு கொடுத்தாவது குளிர்விப்போம் என்றெண்ணி உள்ளே செல்ல, அந்த சமயம் அலைபேசியில் அழைத்து விட்டான் அமிர்தசாகர்.

ஆறாம் விரலாக கையில் அடக்கி வைத்திருந்த அலைபேசி இசைத்து அதன் இருப்பினைக் காட்டிட, ‘சாச்சு’ என்று கணவனின் செல்பேசி எண்ணைத் தாங்கிக்கொண்டு, அவனது கொஞ்சமே கொஞ்சம் சிரித்த முகம் திரையில் தோன்றியபடி அழைப்பு வந்து கொண்டிருந்தது.

‘அதானே, என்னை கடிச்சு காறித் துப்பாம வெளியே போனா, இந்த துரைக்கு போற காரியம் உருப்படாதே! பேருதான் பெருசா லக்கீஸ்வரி! ஆனா, எனக்கு வாய்ச்சதெல்லாம் அன்லக்கியா இருக்கு’ மனதிற்குள் புழுங்கியவாறு அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க, அது முழுதாய் அடித்து ஒய்ந்து மீண்டும் அழைக்கும் பணியை தொடர்ந்தது.

‘கொஞ்சமாவது கேப் விடுறாரா? அப்படி என்னை திட்டாம போனா, கரைஞ்சு போயிடுவாரோ! போனா போகட்டுமே… விலகிக்கிறேன்னு சொல்றவர்தானே! இவர்கூட நான் பேசியே ஆகணுமா?’ உள்ளுக்குள் ஊடுருவி இருந்த வீம்புக்குணம், கணவனை சடைத்து பாடிக் கொண்டிருக்க, அலைபேசியின் ஓசையை அங்கிருந்த பெரியவர் ஒருவர் கவனித்து,

“அம்மாடி லக்கி! உன் கையில இருக்குற ஃபோனுதான் அடிக்குது, எடுத்து பேசுடா!” கனிவாக அவளுக்கு கூறிவிட்டு,

“பாவம் சின்ன பொண்ணு, புருஷனோட கோபத்த எப்படி, சமாளிக்கிறதுன்னு தெரியாம தவிச்சுட்டு நிக்குது!” எனப் பிறரிடம் கவலையும் பட்டுக்கொண்டார்.

‘அடப்பாவிகளா! என்னே ஒரு கண்டுபிடிப்பு உங்களுக்கு? இந்த நெனைப்பு அந்த சாகசக்காரன் கையில என்னை பிடிச்சுக் கொடுக்கும் போது தோணலையா? அப்போ மட்டும் நான் நூத்துக் கிழவியா உங்க கண்ணுக்கு தெரிஞ்சேனா?’ அவர்களையும் விடாமல் மனதிற்குள் வசைப்பாடிக் கொண்டவள், அலைபேசியில் மின்னிய கணவனின் முகத்தை பார்த்து,

‘அட இருயா! உன்னை திட்ட முடியாது. இவங்களையாவது ஒழுங்கா திட்டி முடிச்சிட்டு, உன்கிட்ட மண்டகப்படி வாங்க வர்றேன்’ மனதோடு அலுத்துக் கொண்டாள்.

அவளின் கடுப்பினை சிறிதும் கண்டு கொள்ளாமல் அலைபேசி அழைத்துக் கொண்டே இருக்க, இனி முடியாது என்ற தெளிவான எண்ணத்தில் சமையலறையில் தனியாக ஒதுங்கி அழைப்பினை ஏற்று,

“என்ன?” எடுத்த எடுப்பிலேயே சற்று வேகமாக கேட்டாள்.

அந்த ஒற்றை கேள்வியைத் தவிர வேறொன்றையும் அவள் கேட்டு விடவில்லை. ஆனால், அதையே மனைவியின் அசட்டையான திமிரான பதிலென நினைத்து கணவனின் மனசாட்சி தூபம் போட, அப்பக்கம் அவனுக்கு கோபம் இன்னும் எகிறிப் போனது.

“என்ன மின்னி, பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு. ஒழுங்கா பேசத் தெரியாதா?” காரில் சென்று கொண்டே அதட்டல் போட,

‘இந்தா ஆரம்பிச்சுட்டாருல்ல… யாராவது கேட்டாலும் செல்லமா வெல்லமா கூப்பிட்டு திட்டுறாருன்னு நெனைப்பாங்க! எவ்வளவு கோபமா சண்டை போட்டாலும் இவருக்கு மரியாதை குறைஞ்சிடக் கூடாது’ உள்ளுக்குள் பல்லைக் கடித்தாலும் வெளியில் குரலை தழைத்துக் கொண்டவள்,

“சொல்லுங்க சாகர்?” கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக கேட்டாள்.

“ஹாங்… என் பேரை சொல்லவும் உனக்கு அவ்வளவு யோசனையா? ஏண்டி ஒவ்வொரு தடவையும் உனக்கு, நான் யாருன்னு பாடம் எடுத்துட்டே இருக்கணுமா? சொல்றத மனசுல பதிய வைச்சுக்க மாட்டியா?” காட்டமான குரலில் குற்றம் சாட்டிக் கொண்டே போக,

‘ம்க்கும்… விரோதின்னு முறைச்சிட்டு போயி ஒரு மணிநேரம் ஆகல! அதுக்குள்ள என்கூட சண்டை போட புது காரணத்தை தேடி அலையுறாரு! இந்த சாகசத்துக்கு மரியாதை கொடுத்து கையில செங்கோல் குடுத்திட வேண்டியதுதான்’ நொடிக்குநொடி மனம் கணவனை வசை பாடுவதை குறைத்துக் கொள்ளவில்லை.

“இப்போ எதுக்கு கூப்பிட்டீங்க? அத சொல்லுங்க…” கடுப்பான அமைதியுடன் பதிலளித்தாள். 

தான்அமைதியாக பேசினாலாவது, இவன் கோபத்தை விட்டு விடமாட்டானா என்கிற நப்பாசையில் தன்னில் இருந்து இறங்கியே பேசினாள் லக்கீஸ்வரி. இறுக்கங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், பெண்ணின் இயல்பு அவனிடம் பணிந்து போக வைத்தது.

“என்ன சொல்லச் சொல்ற? நம்ம விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது, எல்லாம் முடிஞ்ச பிறகு சொல்லிக்கலாம்னு சொன்னேனா, இல்லையா? அத நீ ஃபாலோ பண்ண மாட்டியா?”

“நீங்க மூடி மறைக்கச் சொன்னது சின்ன விஷயமா சாகர்! இல்ல, இது சினிமா, டிராமவா? எது நடந்தாலும் யாருக்கும் தெரியாம இருக்கறதுக்கு… எப்படியும் ஒருநாள் எல்லாருக்கும் தெரிஞ்சு இந்த பஞ்சாயத்து நடக்கத்தானே போகுது. அது இப்போ நடந்ததா நினைச்சுக்கோங்க…” எதார்த்தத்தை இவள் எடுத்துக் கூற,

“ஓ… அப்போ இதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணினதே நீ தானா?” மனைவியின் மீதான குற்றங்களை சொல்வதில்  மட்டுமே கவனம் கொண்டவன், அவள் கூறியதை யோசித்துப் பார்க்கவும் முன்வரவில்லை.

“எனக்காக பார்த்து பார்த்துச் செய்ய, எங்கப்பா இருக்கும்போது, இந்த தலைவலியை நான் ஏன் கையில எடுக்கப் போறேன்? அப்படி கூப்பிட்டு வைச்சு பேசினதும் நீங்க, உங்க முடிவை மாத்திட்டீங்களா என்ன? உங்களுக்கு எது தேவையோ அதை சொல்லி சாதிச்சிட்டு தானே வெளியே போனீங்க!” பொருமலுடன் வார்த்தைகளை கொட்டினாள் லக்கி.

“மின்னி! சும்மா பேசிப்பேசி மைண்ட டைவேர்ட் பண்ணாதே! நான் சொன்னா சொன்னதுதான். இனியும் உன் பேச்ச, உங்கப்பாவோட அட்வைஸ் எல்லாம் சகிச்சிட்டு வாழுற பொறுமை எனக்கு இல்லவே இல்ல. விசா ரெடியா இருக்கு. இப்பவே புறப்பட்டு வா! இல்லன்னா, வக்கீலை அனுப்பி வைக்கிறேன். மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு சைன் பண்ணிடு!” சர்வ சாதாரணமாய் பேச்சினை முடித்தான்.

கடையில் வாங்கிய பொருள் பிடிக்கவில்லையெனில் தயங்காமல் திருப்பிவிடு எனும் விதமாய், கணவனின் ஆணையிட்ட பேச்சு லக்கியின் மனதை வெகுவாக பதம் பார்த்தது.

பிடித்தம் உண்டோ இல்லையோ இவனுடன் வாழ்ந்தது உண்மைதானே? அதை எளிதாக மறந்து விடச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனமெங்கும் இப்பொழுது தன்னிரக்கமே மேலோங்கி நிற்க,

“என்னை அந்தளவுக்கு வெறுத்திட்டீங்களா? உங்களுக்கு பிடிக்கலன்னா பிரிஞ்சு போயிடணும். அதுவே எனக்கு பிடிக்கலைன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கணுமா?” மூக்குநுனி சிவக்க தனக்கான நியாயத்தை கேட்க ஆரம்பித்தாள்.

“இதுவே ரெண்டு பேரோட மனசும் ஒத்துப்போன லவ் மேரேஜா இருந்திருந்தா, இப்படி பிரிஞ்சு போகணும்னு நினைப்பீங்களா? என்னை அவ்வளவு ஈசியா விட்டுக் கொடுத்திடுவீங்களா?” என்றவளின் ஆற்றாமைக் கேள்விகளுக்கு இடையிட்டவன்,

“இப்படி பேசுறதுதான்டி பிடிக்கல… சின்னபிள்ளைத்தனமா லவ் அது இதுன்னு செண்டிமென்டா பேசி என்னை டார்ச்சர் பண்றே மின்னி!” கணவன் கோபத்தில் வெடிக்க ஆரம்பிக்க,  இப்பக்கத்தில் இவளுக்கும் கோபம் கூடிக் கொண்டது.

“என்னோட டார்ச்சரை பொறுத்துட்டு நீங்க வாழவேணாம். நானும் உங்களுக்கு பாரமா இருக்கவும் வேணாம். உங்க லாயரை அனுப்பி வைங்க. எப்போனாலும் நான் சைன் பண்ண ரெடியா இருக்கேன்.”

“ஒஹ்! உண்மைய சொன்னா, ரோஷம் வருதா உனக்கு?”

“ஆமா, நீங்க மட்டும்தான் சொல்வீங்களா? நானும் சொல்றேன். உங்களை விட்டு விலகுற முடிவுக்கு நானும் வந்துட்டேன்! எங்கப்பாவ சமாளிக்கிறது என்னோட வேலை. இனி உங்க வழிக்கு வர விரும்பல சாகர்…” பதிலுக்குபதில் இவள் வெடிக்க,

“இதுதான் என் மின்னிக்கு அழகு! நவ் ஐ’யாம் கூல்!” என்றவாறே கோபம் அடங்கிய குரலில் இவனும் பேசிமுடிக்க, பெரும் கொதிப்புடன் அழைப்பினை முடித்தாள் லக்கீஸ்வரி.

அவளுடைய தலைவிதியை இனி அவள் தீர்மானிக்க முடியாது. ஏற்கனவே முடிவினை எழுதி உறையில் போட்டு, ‘ஏற்றுக்கொள் இதை’ என கழுத்தில் கத்தி வைக்காத குறையாக விவாகரத்து கேட்பவனிடம், யாசகமாய் வாழ்க்கையைப் பெற அவளின் சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை.

பிரிவிற்கான அச்சாரத்தை போட்டுவிட்ட ஆயாசத்தில் இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டனர். எதற்காக பிரிய வேண்டும்? எந்த நிர்பந்தம் இவர்களை விலகி நிற்க வைக்கிறது என்றெல்லாம் யோசிக்கும் நிலையில் இருவரும் இல்லை.

தங்கள் இயல்பினை பாதிக்கும் எந்தவொரு விசயத்தையும் ஏற்றுக் கொள்ள விரும்பாத மனம், முற்றிலுமாக அதனிலிருந்து விடுபட்டு விடு என அறிவுறுத்தி விட அதனை இருவருமே தவறாது செய்தனர்.

காற்றில் கரைந்து போகும் பஞ்சுமிட்டாயாக மட்டுமே இன்றைய திருமணங்கள் இருக்கின்றன. வெளிப்பார்வைக்கு கண்ணைக் கவர்ந்து சுவையில் இனித்தாலும், அடுத்த நிமிடமே இரண்டும் மறைந்து, மறந்தே போவதைப் போல, திருமண வாழ்க்கையும் குறுகிய காலத்தில் தகுதியில்லாத காரணங்களை மட்டுமே ஸ்திரமாக்கிக் கொண்டு பிரிவினைக்கான அடித்தளத்தை மட்டும் பலமாக அமைத்துக் கொள்கின்றன.

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே

நாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே

ஏருடையான் வேளாண்மை தானினிது, ஆங்கினிதே,

தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!