சூரியநிலவு 12

அத்தியாயம் 12

பெற்றோர்களின் சிறு நிராகரிப்பு கூட,  ஒரு குழந்தையின் மனதை பலமாக பாதிக்கும், என்பதற்கு மதுவே சிறந்த உதாரணம்.

‘தாய்! தன்னிடம் சிறிதளவாவது கவனத்தை செலுத்துவாரா’  என ஏங்கிய மது, சிறு சிறு தவறுகள் செய்ய ஆரம்பித்தாள்.

  • ஏதாவது பொருளை ஒளித்து வைத்துக்கொண்டு,  தேடித் தர சொல்லி அடம்பிடிப்பது.
  • இரவு உணவை தவிர்த்து சாப்பிடாமல்  படுப்பது.
  • சாப்பிடும் உணவை தன் மேல் சிந்திக்கொள்வது.
  • வேண்டுமென்றே கீழே விழுந்துவிட்டு, சத்தம்போட்டு அழுவது.
  • வீட்டுப்பாடம் ஒழுங்காக முடிக்காமல், ஆசிரியரிடம் புகார் வாங்குவது,  என அன்னையின் கவனத்தை, தன் புறம் திருப்ப பல வழிகளில் முயல்வாள்.

சில மணித்துளிகள் மட்டுமே,  அவளின் மேலிருக்கும் சுமியின் கவனம், மீண்டும் ஓவியாவின் புறம் திரும்பிவிடும். ஒரு கட்டத்தில், மனம் விட்டுப் போன நிலைக்கு வந்துவிட்டாள் மதுநிலா.

இப்படியே காலங்கள் யாருக்கும் காத்திருக்காமல் பறந்தது.

மதுவின் பதிமூன்றாம் வயதில் பருவம் எய்தினாள். சுமிக்கு தன் சகோதரன் தாய்மாமன் ஸ்தானத்திலிருந்து, மதுவிற்கு சடங்கு செய்ய இல்லாமல் போன வருத்தத்தில், மதுவை கவனிக்க மறந்தார்.  அப்போதும் மதுவிற்குத் தேவையான அனைத்தையும் பார்த்து, பார்த்து செய்தது கற்பகம் மட்டுமே.

பருவமெய்திய பெண்ணின் உடலிற்கு, பலம் சேர்க்கும் சத்தான உணவுகளை அவளிற்கு தருவதிலிருந்து,’ஆண்களால் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளை, எப்படி கடந்து செல்ல வேண்டும்’ என்ற அறிவுரையை வழங்கியது வரை, அனைத்தும் கற்பகம் தான் மதுநிலாவிற்கு செய்தார்.

மொத்தத்தில் மதுவிற்கும் சுமியிற்குமான, தாய் சேய் உறவு சான்றிதழில் மட்டுமே என்றானது.

வீட்டில் இவ்வாறு என்றால்.  தனக்கு கணவனாக, கற்பகத்தால் அறிமுக படுத்தப்பட்ட வெற்றியிடம் அன்பை எதிர் பார்த்தாள்.

தாய்க்கு பின் தாரம், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நீதி ஒன்றே.

வெற்றி அதற்கும் மேல், அவன் பொழுதுகள் முழுவதும் ஓவியாவுடனே கழிந்தது.  அவனின் பேச்சு, சிரிப்பு, விளையாட்டு, குறும்பு என அனைத்திற்கும் ஓவியா வேண்டும். ஓவியாவும் வெற்றியின் பின்னே சுற்றிக்கொண்டிருப்பாள். ஓவியாவிற்கு வெற்றி ஒரு கதாநாயகன்.

வெற்றியையே சுற்றிவரும் ஓவியாவிற்கு,  வெற்றியின் நண்பர்கள் வைத்த பெயர் “சில்வண்டு” 

சில்வண்டு என ஓவியாவை யாரும் அழைத்தால், வெற்றி அவர்களை அடிக்கத் துரத்துவான்.

ஓவியாவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்யும் வெற்றி, மதுவை மறந்தான். ஓவியாவும் அனைத்திற்கும் வெற்றியையே தேடுவாள்.

மலர், மலர்ந்து மனம் வீசுவது போல், பருவம் எய்திய பெண்ணின் மாற்றங்கள், மதுவிற்கும் நடந்தது. அவள் உடலின் மாற்றங்கள், பெண்மையின் இலக்கணமாக அவளை மாற்றியது. நாளுக்கு நாள் அவள் அழகு பெருகியது.

வெற்றியின் நண்பர்கள், மதுவின் அழகில் மயங்கி அவளை ரசனையாக வர்ணித்தாலும், வெற்றி அதை சிறு புன்னகையுடன் கடந்து சென்று விடுவான். மதுவிற்கு இது தெரிந்து தானிருந்தது. 

தன்னவள் அழகை,  தான் மட்டுமே ரசிக்க வேண்டுமென்ற பொறாமை, ஒரு போதும் வெற்றிக்கு மதுவிடம் வந்ததில்லை. 

ஆனால் ஓவியாவை, யாராவது விளையாட்டாக கிண்டல் அடித்தாலே,  அவனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்துவிடும்.  அது ஏனென்ற ஆராய்ச்சி செய்திருக்கலாம்!? 

கொஞ்சம் கொஞ்சமாக, மது வெறுமை நிலைக்கு சென்றாள்.  எதிலும் பிடிப்பற்று நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.  அதன் எதிரொலி, அவளின் பத்தாம் வகுப்பு, அரையாண்டு தேர்வு முடிவில் பிரதிபலித்தது . அனைத்து பாடங்களிலும், குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாள்.

பள்ளியிலிருந்து பெற்றோர்களை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

“இங்க பாருங்க சார், உங்க பொண்ணு வாங்கியிருக்க மார்க். எல்லா பாடத்திலயும் பாடர்ல பாஸ் ஆகிருக்கா. இப்படியே போனா அவ டென்த்ல பாஸ் ஆகமாட்டா.”

“அப்பிடி சொல்லாதீங்க மேடம். மதுக்கிட்ட பேசி புரிய வைக்கிறோம்.” என்றார் சுந்தர் தன்மையாக.

“ஆமா சார் பேசுங்க. மது ரொம்ப புத்திசாலி பெண். இப்போ கொஞ்ச நாளா அவ ஏதோ டிஸ்ட்டர்ப்டா இருக்கா. கிளாஸ்ல ஒழுங்கா கவனிக்கறதில்ல. அவளோட பிரச்சனை என்னனு பார்த்து சரி பண்ணுங்க. மறுபடியும் மார்க் கம்மியாச்சு, நாங்க பொதுத்தேர்வை எழுத விடமாட்டோம், இல்ல டீசி குடுத்திடுவோம்.”

“ரொம்ப தாங்க்ஸ் மேடம். நான் மதுக்கு சொல்லி புரியவைக்கிறேன்” என விடை பெற்றனர்.

வீட்டிற்கு வந்து மதுவை நிற்கவைத்து கேள்வி கேட்டால்,”அந்த மேம் சும்மா சொல்றாங்க. நான் கிளாஸ ஒழுங்கா தான் கவனிக்கிறேன்.”

“அப்பறம் ஏன் மார்க் கம்மியாச்சு?” என கேள்வி கேட்டால்,

“அந்த சப்ஜெக்ட் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.” என்றாள் அசட்டையாக.

அவள் நடவடிக்கையில் நிறைய மாற்றங்களை, இப்போது தான் உணர்ந்தனர். இனி உணர்ந்து பயன் என்ன? அவள் தான் மனதளவில், அவர்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டாளே.

அவள் யாருடனும் சரியாக பேசுவதில்லை. கண்களில் புன்னகை இல்லாமல்,  உதட்டில் மட்டும் ஒட்டவைத்த புன்னகையுடன் வலம்வருகிறாள். எப்போதும் அவள் அறையில், தனிமையை துனையாக கொண்டு அடைந்து கொள்கிறாள்.

அவள் ஏன் இப்படி நடந்துகொள்கிறாள்? என்ற ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த விடை,”வயது கோளாறு.” இதில் கொடுமை என்னவென்றால், பெற்றோர்கள் அவர்கள் தவறை உணரவே இல்லை. 

இதில் ஒரே நல்ல விஷயம், தன்னை தனிமை படுத்து கொள்ளும் மது, யாரையும் மனம் நோகும்படி பேசமாட்டாள். அவள் வெறுமை நிலைக்கு சென்றாளேயொழிய யாரையும் வெறுத்ததில்லை. 

 மதுவை கண்டித்தும் சரியாகவில்லை. பள்ளியில் கெஞ்சி கேட்டு, அவள் பொதுத்தேர்வை எழுத அனுமதிவாங்கினர்.

பொதுதேர்விலும் அவள் குறைந்த மதிப்பெண்களையே பெற்றாள். விளைவு அவளை விடுதியில் விட முடிவெடுத்தனர்.

கற்பகமும் ராஜாராமும் எவ்வளவோ மன்றாடியும், மதுவை வீட்டில் நிறுத்தி வைக்க முடியவில்லை.

“மது கொஞ்ச நாள் ஹாஸ்டல்ல இருந்தா நல்லா படிப்பா ராஜா.  இது ஊட்டியிலேயே பெஸ்ட் கான்வென்ட், நல்ல பழக்க வழக்கங்களை கத்துக்கொடுப்பாங்க. படிப்புலயும் அக்கறை காட்டுவாங்க.” 

“அண்ணா மது சின்ன பொண்ணு, அவ எப்படி நம்மள விட்டு அங்க இருப்பா?  இனி நல்லா படிப்பா” என கற்பகம், மதுவிற்கு ஆதரவு குடுதார். 

“இல்லமா, மதுகிட்ட எவ்வளவோ சொல்லியாச்சு. ஸ்கூல்ல கூப்பிட்டு டீசி கொடுத்துட்டாங்க.”

இதற்கு பிறகும் கற்பகத்தால், மதுவை தன்னுடன் இருத்திக்கொள்ள முடியவில்லை.

மது மறுத்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. ‘பெற்றோர்களுடன் இருக்க வேண்டும் என்ற அசையிருந்தால் அல்லவா?’ மறுப்பு கூற. அவள் தான்  மனம் வெறுத்து, அந்த ஆசையை துறந்து வெகு காலம் ஆகிற்றே.

கற்பகத்தின் கண்ணீரோடும், இரண்டு பக்க அறிவுரைகளுடனும், மதுவின் பயணம் குடும்பத்தை பிரிந்து ஆரம்பித்தது. அதன் பிறகு அவளின் பயணம் குடும்பத்திலிருந்து பிரிந்தே சென்றது.

உடைந்த கண்ணாடியை ஒட்டவைக்க முடியாது. இவர்கள் உறவும் இந்த நிலைக்கு சென்று கொண்டிருந்தது.

மது விடுதி செல்வது, வெற்றிக்கு வருத்தமாக இருந்தாலும்,’அவள் ஒழுங்கா படிக்காததால் தான ஹாஸ்டெல்ல விடுறாங்க’ என அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஓவியா தான் பெற்றோர்களுடன் சந்தோசமாக இருக்கிறாளே. வேறென்ன வேண்டும் அவனுக்கு?

ஓவியாவிடம் சொல்லிவிட்டான்,”நீ ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கிடு அம்மு. இல்ல உன்னையும் ஹாஸ்டல்ல விட்டுடுவாங்க.”

தான் திருமணம் செய்ய இருக்கும் பெண், மனம் வெறுத்து போய், குறைந்த மதிப்பெண் பெற்று விடுதி செல்கிறாள். அவள் மனதில் என்ன உள்ளது? ஏன் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறாள்? அதை துளிகூட உணராத வெற்றி,  ஓவியாவின் மகிழ்ச்சியை மட்டுமே பெரிதாக நினைத்தான்.

கல்லூரியில்,  முதலாம் ஆண்டு கல்வியை முடித்திருந்த வெற்றி,  இப்போதாவது அதை உணர்ந்திருக்க வேண்டாமா? தன் காதலும் அக்கறையும் யாருக்கு என்று.  இது யார் செய்த குற்றம்?

“நான் தான் கிளாஸ் ஃபர்ஸ்ட்.” என பெருமை பேசிக்கொண்டாள் ஓவியசெல்வி.  மதுவின் இந்த நிலைக்குத் தான் தான் மறைமுக காரணம் என உணராமல்.

மதுநிலாவின் பதினொன்றாம் வகுப்பு, விடுதியில் ஆரம்பித்தது.  அங்கே அறிமுகமாகிய பெண் ஆராதனா.

வசதி படைத்த குடும்பதை சேர்ந்த பெண்.  வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவி. ஆரா தன்னை அழகுபடுத்திக்கொள்ளத் தெரிந்த பெண்.  தான் அழகு என்ற கர்வம் அதிகம் உள்ள பெண். பணக்கார வீட்டு பிள்ளைகளை, தேர்ந்தெடுத்து பழகும் மிகவும் நல்லவள்.

கடந்த மூன்று ஆண்டுகள்,  இதே பள்ளியில் படித்து வரும் ஆரா, இப்போது மதுவின் வகுப்பில். பார்த்தவுடன் மனதை ஈர்க்கும் அழகுடன் இருக்கும் மதுவை, தன் நட்பு வட்டத்தில் இணைக்க முயற்சித்தாள்.

மது அமர்ந்திருந்த அதே பெஞ்சில்,  அவளருகில் அமர்ந்த ஆரா,

“ஹாய் நான் ஆராதனா, ஆரானு கூப்பிடுவாங்க. மூணு வருசமா இங்க தான் படிக்கிறேன்” என வலது கரத்தை நீட்டி நட்பு பாராட்டினாள்.

“ஹாய் நான் மதுநிலா.” என்றாள் அவள் கரத்தைப் பற்றிக்கொண்டு.

“நான் டேய்ஸ்காலர் (day scholar) நீ” பேச்சை வளர்த்தாள்.

“நான் ஹாஸ்டல்”  என முடித்தாள்.

“ஓ! உன் சொந்த ஊர் எது.”

“மதுரை” மீண்டும் வெட்டு பதில்.

மதுவின் ஒட்டாத பேச்சில் எரிச்சலடைந்த ஆரா,’இவள் சரியான சிடுமூஞ்சி போல. என் ரேஞ்சுக்கு இவ கூட எல்லாம் பிரண்ட்ஷிப் வச்சுக்க மாட்டேன்.’ என வேறு இருக்கைக்கு, தன் ஜாகையை மற்றிக்கொண்டாள்.

“ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற நரி கதை தான்.

மது படிப்பது கிறிஸ்டியன் பள்ளி. கன்னிகாஸ்திரிகளால் நடத்தப்படுவது.  அவர்களின் பொறுமை, அன்பு, சாந்தம் என அனைத்தும் மதுவின் மனதை அமைதி படுத்தியது.

இயற்கையிலே நல்ல குணத்துடன் இருந்த மதுவால், எளிதாக அவர்கள் அறிவுரையை பின் பற்ற முடிந்தது. அன்பை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்காமல், தன்னிடமிருந்த அன்பை கிள்ளி கொடுக்காமல், அள்ளி அள்ளி கொடுத்தாள்.

மற்றவர்களுக்கு தானாகவே சென்று உதவும் குணம் வந்தது. அவளின் பதினாறு வயதில், நாற்பது வயதிற்குரிய மன முதிர்ச்சியோடு இருந்தாள்.

இப்போது கண்களிலிருந்த வெறுமை மறைந்தது. உதட்டில் இருக்கும் புன்னகை வசீகர புன்னகையானது. மனம் விட்டுப் பேசுவது மட்டும் அவளால் முடியவில்லை.  அவளின் மனதிற்கு நெருக்கமாக, யாரையும் அனுமதிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

வெற்றி, ஓவியாவின் உறவு அதே நிலையில். மது தன் பெற்றோரிடம், எந்த எதிர்பார்ப்பும் வைத்து கொள்ளவில்லை. அதனால் ஏமாற்றமும் இல்லை.

 மது தற்போது பதினொன்றாம் வகுப்பின் இறுதி தேர்வை முடித்திருந்தாள். பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை ஆரம்பித்திருந்தனர்.

அந்த வருடம் மதுரை செல்வதைத் தவிர்த்து, அங்கயே தங்கிவிட்டாள். ஊட்டியில் மலர் கண்காட்சியை,  காணவேண்டும் என்ற ஆசையும் ஒருபுறம் இருந்தது.

ஒரு விடுமுறை தினத்தில்,  தன் விடுதி தோழிகளுடன் ரோஜா தோட்டம் சென்றாள்.

அங்கே ரோஜாக்களுடன் ரோஜா மலராக காட்சியளித்த மதுநிலாவை, ஒரு ஜோடி விழிகள் அங்குலம், அங்குலமாக ரசித்ததை, பாவம் அவள் அறியவில்லை.

அவள் ரோஜா தோட்டத்தில் நுழைந்ததிலிருந்து, அந்த விழிகளுக்கு சொந்தமான கால்கள், அவளை தொடர ஆரம்பித்திருந்தது. 

அவளின் அமைதியான புன்னகை முகம், ஏனோ அந்த விழிகளின் சொந்தக்காரணை மிகவும் கவர்ந்தது. அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து மனதில் சேமித்து கொண்டான்.

அவளிடம் பேச முயலவில்லை, அமைதியாக அவளை பின் தொடர்ந்தான்.

மறுநாள், பொட்டானிக்கல் கார்டெனில் நடைபெரும் மலர் கண்காட்சியை காண, நண்பனுடன்  ஊட்டியிற்கு வந்திருக்கிறான். ஆட்டம் பாட்டம் என எப்போதும், கலகலப்பாக பொழுதை கழிக்கும் இவன், ஒரே அறையில் அடைந்து கிடைக்க மனமற்று, உறங்கும் நண்பனை விட்டுவிட்டு தான் மட்டும் ரோஜா தோட்டம் வந்திருந்தான். 

ரோஜா தோட்டம், வந்த அவனது விழிகளுக்கு, பிங்க் நிற ரோஜாவாக காட்சியளித்த, மதுவை தவிர வேற எதுவும் அவன் கண்களுக்கு தெரியவில்லை. 

நேரம் போவது தெரியாமல் அவளை பின் தொடர்ந்தான். வெகுநேரம் சுற்றியலைந்த தோழிகள், தங்கள் விடுதியை நோக்கி பயணித்தனர்.  இவன் கால்களும் அவளின் பாத சுவடு தேடி பயணித்தது. 

அப்போது வழிதவறிய மூன்று வயது குழந்தை, நடுரோட்டில் நின்று அழுதுகொண்டிருந்தது. குழந்தையை நோக்கி அதிவேகமாக ஒரு கார் வந்துகொண்டிருந்தது. 

காரை கவனித்த மது, ஓடிச்சென்று குழந்தையை தூக்கி இருந்தாள். தன்னை காக்க மறந்தாள்.

அவளது விழிகள், சென்ற திசையை நோக்கிய அவன், அவளது அடுத்த அடி என்ன என்பதை உணர்ந்து, கண்ணிமைக்கும் நொடியில் அவளை குழந்தையுடன் அள்ளி, தன் மார்போடு புதைத்து மறுபக்கத்தை அடைந்தான்.

அதிர்ச்சியில் மது மயங்கி இருந்தாள். அதற்குள் இவர்களை அடைந்திருந்த, அவள் தோழிகள் பதறினர்.

அவள் கன்னத்தை தட்டி,”மது, மது கண்ணை திற.” என்று அவளை எழுப்ப, அவள் விழிக்கவில்லை என்றவுடன்,

அவனை நோக்கி,”அவளுக்கு என்ன ஆச்சு அண்ணா? ஏன் இப்படி கண்ணை திறக்கமாட்டேங்கறா?” 

மீதி நேரமாக இருந்தால்,’நான் உனக்கு அண்ணனா?’ என எகிறியிருப்பான். இப்போது தான் ‘மலரில் மயங்கி நிற்கும் வண்டு ஆச்சே’ ஒழுங்காக பதிலளித்தான்.

“அவங்களுக்கு ஒண்ணுமில்லை. அதிர்ச்சியில மயங்கிட்டாங்க.”

“என்ன மயங்கிட்டாளா? இப்போ ஹாஸ்டல்ல என்ன சொல்லுறது?” என பயந்தனர்.

அவர்களின் பள்ளியின் பெயர், எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என தெரிந்துகொண்டு,  அவளின் பெயரை மனதில் பதிந்துகொண்டு,

“அவங்களுக்கு ஒன்னும் இல்லை. தண்ணி தெளிச்சா எந்திரிச்சிடுவாங்க.” என சொல்லி முடிக்கும் முன், ஒரு தண்ணீர் பாட்டில் அவன் முன் நீண்டிருந்தது.

அதை வாங்கி அவளிற்கு முதலுதவி செய்து, அவள் மயக்கம் தெளியும் முன்னே, அவளின் அழகை ஒருமுறை கண்களில் நிரப்பிக்கொண்டு, அந்த இடத்தை விட்டு சென்றிருந்தான். 

ஏன் அவளை தொடர்கிறோம்? ஏன் அவளுக்கு ஆபத்து என்ற உடன் தன் மனம் துடிக்கிறது? என அவளை ரசித்த அந்த விழிகளின் சொந்தகாரனுக்கு தெரியவில்லை. ஆனால் மனம் அவளின் பின் சென்றது. இது தான் ரத்த பந்தத்தின் ஈர்ப்பு என்பதா?

ஆம் அவளை தொடரும் விழிகளுக்கு சொந்தக்காரன்; அவளை சொந்தம் கொண்டாட வந்த உரிமைக்காரன்; அவளையும் அவள் மனதையும் மயக்க போகும் மாயக்காரன்; அவளை ஆளப்போகும் ஆட்சிக்காரன்; அவளின் காதல் முழுவதையும் அனுபவிக்கபோகும் அதிர்ஷ்டக்காரன்; அவளது கரம் பற்ற முழு உரிமையும் உடையவன்; அவன் அவளின் சொந்த தாய்மாமா மகன் சூரியா. 

****************

பள்ளி விடுதியில் ஒரு வருடம் கடந்தது, மது கல்லூரியில் நுழையும் நேரம்.

அவர்கள் சென்ற விமானம் தரையிறங்கி லண்டனை அடைந்தது.

மது தன் கடந்த காலத்திலிருந்து வெளியே வந்தாள்.

அவர்களின் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு, சென்ற பின் பிரதாப், மதுவின் கழுத்தில் ஒரு சங்கிலியை அணிவித்து,”அதை கழட்ட கூடாது” என ஆணை பிறப்பித்தான்.

*****************

மதுவின் உணர்வுகள், சிறிதாவது வெளிப்படுவது என்றால் கற்பகம், ராஜாவிடம் மட்டும்.

அதன்பின் கல்லூரியில் மேகவர்ஷினியிடம்.

அவள் அவளாக வாழும் இடம். அவளின் சின்ன சின்ன ஆசைகள், கனவு, லட்சியம் என அனைத்தும் வெளிப்படுவது பிரதாப்,  ஆகாஷிடம் மட்டுமே.

தாயை இழந்த ஆகாஷிற்கு, மது அன்னையானாள்.

பெற்றோரை இழந்த பிரதாப்பிற்கு, மது உலகமானாள்.

பெற்றோரின் அன்பு கிடைக்காத மதுவிற்கு, பிரதாப், ஆகாஷ் அனைத்துமாகினர்.

ஒருவருக்கு ஒருவர் அன்பால் உறுதுணையாகினர்.