சில்லென்ற தீப்பொறி – 9

சில்லென்ற தீப்பொறி – 9

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே

மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே

எள்துணை யானும் இரவாது தான்ஈதல்

எத்துணையும் ஆற்ற இனிது.

விளக்கம்

கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களை துணையாகக் கொள்ளுதல் இனிது. எவ்வளவு சிறிதாயினும் தான் இரவாது பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும் விட இனிதாகும்.

 

சில்லென்ற தீப்பொறி – 9

இருவரும் தங்களது பிடிவாத தராசில் ஏறி, இறங்காமல் நிலையாய் நிற்க, இவர்களின் வீம்புக் கரைசலில் மனம் சலித்து ஊருக்கு நடையைக் கட்டினார் நடேசன்.

தன்னை அடிமையாக்கி ஆட்டுவிக்கவே பெண்ணை கட்டிக் கொடுத்துள்ளார் என்னும் நினைவில் நேருக்கு நேராய் விவாதித்துக் கொள்ளாமல், மாமனாரை விரோதியாக்கி அவர் மீது வெறுப்பினை வளர்த்துக் கொண்டான் அமிர்தசாகர்.

கணவனை சமாதானபடுத்தும் வழியும் தெரியாமல் தந்தையை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவித்தாள் லக்கீஸ்வரி.

ஒருபெண் தந்தையை கவனித்துக் கொண்டு கணவனோடு நிரந்தரமாக பிறந்த வீட்டில் வாழ விரும்புவது அத்தனை பெரிய பாதகமான செயலா? அதுவும் ஆணுக்கு பெண் சமமாக விளங்கும் இந்த காலத்தில் பழங்கால கோட்பாடுகளும், விவாதங்களும் தேவைதானா?

இன்னும் ஏதேதோ எண்ணவோட்டங்கள் மனதில் தோன்றி லக்கீஸ்வரியை மூச்சு மூட்ட வைத்தது. கணவனின் குற்றம் சாட்டும் பேச்சும் கடினமான சுபாவமும் அவளை இன்னுமின்னும் சோர்ந்து போகச் செய்தன.

ஒருவார மணவாழ்க்கை இத்தனை அலுப்பினை கொடுக்குமென்று யாரேனும் கூறியிருந்தால் தந்தை சொல்லிற்கு கட்டுப்பட்டு திருமண பந்தத்தில் நுழைந்திருக்க மாட்டாள்.

அனைத்தும் முடிந்த பிறகு விதியை நோவதும் அதற்கு காரணமானவர்களை குற்றம் சொல்வதும் பண்பற்ற செயல் என்னும் மனோநிலை அவளுக்கு வந்திருந்தது. பொறுமையுடன் சூழ்நிலையை கையாண்டே ஆகவேண்டியதின் அவசியத்தை மனம் ஆணித்தரமாக எடுத்துரைக்க சுதாரித்துக் கொண்டாள் லக்கி.

எதுவரை போகுமோ போகட்டுமென்று அடுத்து வந்த நாட்களில் அமைதியாக நடமாடினாள். பதிலுக்கு அமிரின் நடவடிக்கைகள் தான் முற்றிலும் மாறிப் போயிருந்தன. எந்நேரமும் மனைவியை கரித்துக் கொட்ட ஆரம்பித்தான். பெரியவர் என்றும் பாராமல் ரெங்கேஸ்வரனை பழித்துக் கொண்டிருந்தான்.

“உங்க கௌரவத்துக்கு இந்த பேச்செல்லாம் அழகில்லை சாகர்.” லக்கி தன்மையாக எடுத்துக் கூறினாலும்,

“அப்பாவுக்கு நல்லாவே சப்போர்ட் பண்றே… அதுல பாதியாவது புருஷனுக்கு கிடைக்குமா?” நையாண்டியுடன் பதிலளித்து அவளின் வாயை அடைத்தான். 

‘இவனை மட்டுமே நம்பி பெண்ணை கொடுக்கவில்லை என்று இன்னும் என்னென்ன பேசுவானோ?’ சோர்வுற்ற லக்கியின் மனம் அங்கலாய்த்தது.

சற்றே பொறுமையாக யோசித்தால் இவனது பண்பினையும். காரியமாற்றும் வேகத்தை, நேர்த்தியையும் பார்த்துதான் பெண்ணை மட்டுமல்ல, தனது தொழிலையே இவனிடம் ரெங்கேஸ்வரன் ஒப்படைக்க முன்வந்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.

இதையெல்லாம் யோசிப்பானா இவன்? அல்லது இவனுக்கு புரிய வைக்கும் வாய்ப்பினையாவது பிறருக்கு வழங்குவானா?

கல்லும் கரைந்து விடும்… இவன் கரையவே மாட்டேன் என்கிறான். இனி ரெங்கேஸ்வரன் மட்டுமே இதற்கான மாற்று தீர்வினை காண முடியுமென்ற நம்பிக்கையுடன் நடேசன், அவரை சந்தித்து பேசத் திட்டமிட்டார்.

அமிரின் கோபத்திற்கான முதல்படியே, தான்அவனிடம் முன்கூட்டியே அனைத்தையும் தெளிவுபடுத்தாததே என்ற குற்றசாட்டு நடேசன் மீது இருக்க, அதை நேர் செய்தே ஆகவேண்டிய கடமை அவரை எந்த மாற்று யோசனையையும் செய்யவிடாமல் தடுத்தது.

நான்குநாள் அதிகப்படியான விடுப்பும் சடுதியில் கரைய அடுத்தநாள் அமிர் பணி நிமித்தமாக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை. அதுவும் பதினைந்து நாள் பயணமாக பெரிய தொழில் நகரங்களுக்கு சென்று வரும் வேலை.

அப்படியான இடங்களுக்கு சென்றால் நேரம் காலம் பார்க்காமல் மொத்தக் கொள்முதலீட்டாளர்களை சந்தித்து பேசியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் மனைவியையும் உடனழைத்துச் சென்றால், ஹோட்டல் அறைக்குள்ளேயே இவளை விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்கிற நிதர்சனம் புரிய, முதன் முறையாக அமிரின் மனதில் தயக்கமும் பின்னடைவும் ஏற்பட்டது.  

பலத்த யோசனையுடன் மனைவியை தனியே விட்டுச் செல்வதற்கான பல ஏற்பாடுகளை செய்பவனை பார்த்து லக்கியின் மனம் கோபம் பாதி, ஆற்றாமை மீதியாக பரிதாபப்பட்டது.

‘இத்தனை மனஉளைச்சல் இவனுக்கு தேவைதானா? இவன் வரும் நேரத்தில் இங்கிருக்கிறேன் என சத்தியமே செய்தாலும் பிறந்த வீட்டிற்கு செல்லக்கூடாதென்று கிடுக்கிப்பிடி போடுகிறானே’ மனதிற்குள் கோபப்பட்டவள்,  

‘திருமண வாழ்க்கை தனக்குள் பாரத்தை ஏற்றி வைத்ததை போல இவனுக்கும் கனத்துப் போனதா? சுதந்திரமாய் திரிந்தவன் என் பொருட்டு சங்கடங்களில் உழல்கின்றானா?’ என பாவமாய் பார்த்தாள்.

மொத்தத்தில் பிரிவின் ஆற்றாமை இருவருக்குள்ளும் அலையடித்து இம்சித்தது. கணவன் மனைவிக்குள் சகஜமான உரையாடல்கள் நடந்தாலும் இருவரிடையே ஏதோவொரு நெருடல் புகுந்து விட்டது என்பதுதான் உண்மை. 

சீரிய சிந்தனையில் மூழ்கியிருந்த அமிரிடம், “அப்படியென்ன மும்முரமா யோசனை பண்ணிட்டு இருக்கீங்க?” கேள்வியுடன் லக்கி, அவன் அருகே அமர்வதற்கு வர, அவளை இழுத்து தன் மடிமீது அமர வைத்துக் கொண்டான்.

“நான் யோசிக்கிறது அவ்ளோ நல்லாவா தெரியுது?” கண்களில் கூர்மை மாறாமல் அமிர் கேட்க,

“நல்லா, நல்லா… நல்லாவேன்னு சொல்றதுக்கு கொஞ்சம் கம்மியா தெரியுது.” கிளுக்கிச் சிரித்தவளின் கன்னத்தை கடித்தான் கணவன்.

“இது ஒரு தொல்லை, உங்க பக்கத்துல வந்தா…” சிணுங்கிக் கொண்டவளின் கன்னத்தை மென்மையாக தேய்த்து விட்டவன்,

“இன்னைக்கு ஒருநாள் மட்டும் சகிச்சுக்கோ! அப்புறம் உன் சாச்சு வீடியோல மட்டும்தான்.” நெற்றி முட்டிச் சொன்னவனின் முகம் மீண்டும் யோசனைக்கு தாவியது.

“என்னை தனியா இருந்து பழகிக்க சொல்றவருக்கு, என்னை விட்டுப் போக தைரியம் வரலையா?” கிடைத்த இடைவெளியில் அவன் மடியிலிருந்து விலகி அருகில் அமர்ந்தாள் லக்கி.

“ம்ம்… பக்கத்துல பார்த்துப்பாங்க தான். ஆனாலும் மனசு இப்பவே படபடன்னு அடிச்சுக்குது மின்னி. உன் நினைப்புல வேலைய சொதப்பிடுவேன் போலிருக்கு.” மனதில் இருப்பதை மறைக்காமல் கூற, மனைவியின் மனம் தன்னால் இளகிப் போனது.

“இவ்ளோ கவலை வேண்டாமே சாச்சு! இந்த ஒருதடவை மட்டும் அப்பா வீட்டுக்கு போறேன். நெக்ஸ்ட் டைம் நீங்க ஊருக்கு போகும்போது சித்தப்பா குடும்பத்தை இங்கே வர வைச்சுக்கலாம்.” புதியதாய் இவள் யோசனை கூற, அதையும் மனதில் ஓட்டிப் பார்த்தான் அமிர்.

“அவருக்கும் வேலை இருக்குமே மின்னி?”

“சித்தி, ஹரிணி இருக்காங்க… இவங்கள்ல ஒருத்தர் என் கூட இருந்தாலும் நான் சமாளிச்சிடுவேன். ப்ளீஸ், இந்த ஒரு தடவ மட்டும் சரின்னு சொல்லுங்க… என் திங்க்ஸ், புக்ஸ் எல்லாமே அங்கேயிருந்து கொண்டு வர வேண்டியிருக்கு. அதையும் மெதுவா பேக் பண்ணிடுவேன், ப்ளீஸ்…” ஏகத்துக்கும் குழைந்து பேசியதில் மனைவியின் கைகள் தன்போக்கில் கணவனின் கழுத்தில் மாலையாகிப் போனது.

கன்னங்கள் உரசிக் கொண்டதில் அவன் முகத்தில் புன்னகை மலர, உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் காதல் பிசாசு விழித்துக் கொண்டது.

எந்த நிலையில் கணவன் இருக்கிறான் என்பது புரியாத லக்கி, சற்றே எம்பி அவன் கன்னத்தை கடித்ததின் எதிர்வினை, அவனது அதிரடி ஆக்கிரமிப்பில் முடிந்தது.

அவனிடமிருந்து, ‘ஓகே, எஸ்’ என்ற பதில் வரும் வரை அவன் முகம் பார்த்த வண்ணமே இருக்க, முடிவில் கணவனிடமிருந்து சம்மதம் கிடைத்தே விட்டது.

“என்னமோ பண்ணி காரியத்தை சாதிச்சுட்ட டி நீ!” பொய் முறைப்பில் பயணம் முழுவதும் மனைவியை கடிந்து கொண்டே வந்தவன், நடேசன் வீட்டில் அவளை விட்டுச் சென்றான்.

பலமுறை வருந்தி அழைத்தும் மாமனார் வீட்டிற்கு வரமாட்டேன் என மீண்டும் முகம் திருப்பி கொள்ள, பயணம் மேற்கொள்ளும் சமயத்தில் விவாதங்கள் வேண்டாமென்று நடேசனும் கோமதியும் அமைதி காத்தனர்.

“பெரியவங்க பேச்சை எப்போதான் மதிக்க கத்துக்கப் போறானோ?” கோமதி ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

“அண்ணன் எப்பவும் இப்படிதான் அண்ணி… எங்க வீட்டுக்கு கூட ஒரு மனசு இருந்தா வருவாரு, இல்லன்னா வாசலோட பேசிட்டு போயிடுவாரு.” குறைபாட்டு படித்த ஹரிணியுடன் அன்றைய பொழுதினை கழித்தாள் லக்கி.

அமிரின் முடிவினை இன்னும் ரெங்கேஸ்வரனிடத்தில், நடேசன் தெரியபடுத்தவில்லை என்று குடும்பத்தார் கூற லக்கிக்கு மேலும் பாரமேறிப் போனது

“உடனே பார்த்து பேசுறேன்னு சொன்னீங்களே அங்கிள்?” லக்கி கேள்வியில்,

“இங்கே ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு உடம்பு முடியாம போச்சும்மா. அதோட உங்க அப்பாவும் ஊருல இல்ல… இன்னைக்குதான் வர்றேன்னு தகவல் கொடுத்திருக்காரு.” நடேசன் காரணங்களை அடுக்க, அவளால் என்ன சொல்ல முடியும்?

இப்பொழுது நடேசனின் வேலை இவளின் தலையில் ஏறிக் கொள்ள, உள்ளுக்குள் தானாய் ஒரு சுணக்கம் வந்து நின்றது.  

அன்று மாலையில் அனைவரும் சேர்ந்து ரெங்கேஸ்வரனின் வீட்டிற்கு செல்ல, மகளைப் பார்த்து மகிழ்ந்த அதே நேரம், அமிர் வராததில் அவரின் மனம் கவலை கொண்டது.

“என்னடா பாப்பா, நீ மட்டும் தனியா வந்திருக்க… மாப்பிள்ளை எங்கே?” அதிர்ச்சியை உள்ளடக்கிக் கொண்டே மகளை வரவேற்றார் தந்தை.

உள்ளுக்குள் இருந்த கலக்கம் கண்களில் படரவிடாமல் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டாள் லக்கி.

“அவருக்கு மந்த்லி ட்ரிப் ஸ்டார்ட் ஆகிடுச்சு டாடி. அதான், நான் மட்டும் வந்தேன்.” புன்னகை முகமாய் பதிலளித்த மகளின் முகத்தினை உற்றுப் பார்த்தார் தந்தை.

இத்தனை நாள் கணவனுடன் வாழ்ந்த வாழ்வின் நிறைவு மகளின் முகத்தில் தென்பட, அவரின் மனதிற்குள் தானாய் நிம்மதி வந்தமர்ந்து கொண்டது.  

“அவசரம் இருந்தாலும் உன்னை கொண்டு வந்து விட்டுட்டு அவர் போயிருக்கலாமே டா? புதுசா கல்யாணமானவங்க… எல்லாருடைய பார்வையும் உங்க மேலதானே இருக்கும்.” ஆதங்கத்துடன் கூறி, அவளது அறைக்கு அனுப்பி வைத்தார்.

பயணக் களைப்பும், மகளைப் பார்த்த ஆவலும் சேர்ந்து மற்றவர்களிடம் பேசுவதை ரெங்கேஸ்வரன் குறைத்துக் கொள்ள, எதுவும் சொல்லாமல் கிளம்பினார் நடேசன்.

“மாப்பிள்ளை ஃபோன் பண்ணி பேசினராம்மா?” தந்தை கேட்டபோது மிகமிகச் சந்தோசமாக இருப்பதுபோல் தலையாட்டி வைத்தாள்.

காணொளி அழைப்பில் தினமும் அமிர் அழைத்து பேச நாட்கள் தெளிந்த நீரோடையாகவே சென்றது. அமிரின் முடிவினை தந்தையிடம் எப்படி சொல்வதெனும் உபாயம் லக்கிக்கு பிடிபடவில்லை.

அவருக்கு தெரியாமல் தனது பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வதும் பெரிய தலைவேதனையாக இருந்தது. அதோடு சமையலில் எப்படி என்னவென்று கமலம்மாவிடம் எந்நேரமும் சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருக்க, ரெங்கேஸ்வரன் விஷயத்தை ஓரளவிற்கு கிரஹித்து விட்டார்.

தனிமையில் மகளை அழைத்து, “உனக்கும் மாப்பிள்ளைக்கும் இடையில என்ன பிரச்சனை லக்கிமா?” வாஞ்சையுடன் கேட்க அதற்குமேல் மகளால் மூடி மறைக்க முடியவில்லை.

நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற, அவருக்கும் வருத்தமே மேலிட்டது. சந்தோசத்தை மட்டுமே சுவாசிக்க வேண்டுமென்று நினைத்த மகள் ஒருவார திருமண வாழ்க்கையில் சங்கடங்களை எதிர்கொண்டிருப்பதை அறிந்து பெரிதும் துக்கப்பட்டு போனார்.

நடேசனை அழைத்துப் பேசினார். ஆனாலும் அவரை கடிந்து கொள்ள முடியவில்லை. அண்ணனின் ஆசையை நிறைவேற்றிய தம்பியாக மட்டுமே அவரைப் பார்த்தார்.

அமிர்தசாகரிடம் பேச வெகுவாக முயற்சிகளை மேற்கொண்டார். அவனோ மாமனாரின் ‘ஹலோ’ என்ற அழைப்பிற்கு கூட செவி சாய்க்காமல் அழைப்பினை துண்டிக்க ஆரம்பித்தான்.

இப்படி சென்ற நாட்களில் அமிரின் பயணம் முடிந்து ஊருக்கு திரும்பும் நாளும் வந்தது. தான் வரும் நேரம் மனைவியை வீட்டில் வந்து இருந்துகொள் என அமிர் கட்டளையாக கூற, மகளும் தந்தையும் சேர்ந்தே வயநாட்டிற்கு பயணப்பட்டனர்.

“உங்க கூட பேசுவாரோ மாட்டாரோன்னு தோணுது. அவரோட பிடிவாதம் உங்களுக்கு தெரியாதுப்பா… யார் சொல்றதையும் கேட்டுக்க மாட்டார்.” வழி முழுவதும் கணவனின் பெருமை பேசியபடி லக்கி வர, ரெங்கேஸ்வரனின் மனம் கலங்கிப் போனது.

இவையெல்லாம் தன் ஒருவனின் பிடிவாத முடிவால், தனது விருப்பத்தால் மட்டுமே என்பது தெளிவாகப் புரிய, அதனை சரிசெய்யும் வழி முறையையும் ஆராயத் தொடங்கினர்.

மருமகனின் விருப்பத்திற்கே விட்டுக் கொடுத்து, சில வருடங்கள் சென்ற பிறகு மாற்றங்களை தகுந்தாற்போல் செய்து கொள்ளலாம் என்ற முடிவையும் மனதோடு எடுத்த நேரத்தில் அமிரின் வீடும் வந்து சேர்ந்தது. 

இவர்கள் மாலை நேரத்தில் வந்து சேர்ந்திருக்க, அமிர் பின்னிரவில் வந்து சேர்ந்தான். இரவு வேளையில் மாமனாரை பார்த்தவனுக்கு ஆச்சரியம் எல்லாம் இல்லை. கண்ணுக்குள் பெண்ணை வைத்து தாங்குபவர் இந்தளவிற்கு கூட உடன்வராமல் இருக்க மாட்டார் என்பதில் அமிருக்கு எள்ளளவும் சந்தேகமும் இல்லை.

“வாங்க” என்ற ஒற்றை சொல்லோடு வரவேற்பினை முடித்துக் கொண்டு மனைவியோடு தனதறைக்குள் முடங்கிக் கொண்டான். மறுநாள் காலையில் நேரம் சென்றே கண்விழித்தவன் கோவிலுக்கு செல்ல வேண்டுமென்று மனைவியை அதட்டி அவசரபடுத்திக் கொண்டிருந்தான்.

இரவில் களைப்போடு வந்தவனிடத்தில், தந்தை வந்ததின் நோக்கத்தை கூறாமல் இருந்தவள், இப்பொழுது சொல்லியே ஆகவேண்டுமென்று தோன்ற,

“அப்பா உங்க கூட பேச வந்திருக்காரு சாச்சு!” மெதுவாக கூற,

“அவர் கூட பேச எனக்கு நேரமும் இல்ல, விசயமும் இல்லை. இப்ப நீ வர்றியா, இல்லை நான் மட்டும் கிளம்பவா?” முறுக்கிக் கொண்டு நின்றான் அமிர்.

அவனது அலட்டல் பேச்சில், அவனையும் இழுத்துக் கொண்டு கிணற்றில் குதித்து விடலாமா என்றே தோன்றியது லக்கிக்கு. ஆனாலும் முடியாதே… தங்களை அரவணைத்துக் கொள்ளும் பெற்றோர், பெரியவர்களுக்கு மனதில் நினைத்தே பல்லைக் கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“சரி போயிட்டு வாங்க, ஈவ்னிங் பேசலாம்.” இவள் மாற்று யோசனை கூற,

“இதென்னடி கடுப்பை கிளப்பிகிட்டு? பேச பிடிக்கலன்னு சொல்றேன், விட்டுத் தள்ளேன்… எதுக்கு பிடிச்சு தொங்குற? பொண்டாட்டிய அழைச்சிட்டு வெளியே போக கூட இவர்கிட்ட பெர்மிசன் வாங்கணுமா?” சற்றே உரத்த குரலில் அமிர் வார்த்தையை விட, அது வெளியில் அமர்ந்திருந்த ரெங்கேஸ்வரனின் செவிகளில் ஸ்பஷ்டமாக விழுந்தது.

‘சரிதான், கோபத்தில் மலை ஏறியவன் இன்னும் இறங்கவில்லை போல… கொஞ்சநாள் போகட்டும் அமைதியாக அமர வைத்து பேசுவோம்’ மனதிற்குள் கணித்து, தனது முடிவினை மாற்றிக் கொண்ட ரெங்கேஸ்வரன், அடுத்த அரைமணி நேரத்தில் மகளின் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

மனம் வலித்தாலும் வெளியில் புன்னகையுடன் விடைபெற்றுச் செல்லும் தந்தையை பார்த்துபடியே நின்ற மகளுக்கு மனமெல்லாம் வலித்தது.

‘சோதனை இவ்வளவு தானா? இன்னமும் என்னென்ன எதிர்கொள்ள வேண்டி வருமோ’ லக்கியின் உள்ளம் வேதனையில் தவிக்க, அதை பற்றிய கவலை சிறிதும் கொள்ளாது, தனது பின்னால் அவளை அலைகழித்துக் கொண்டிருந்தான் அமிர்.

அவன் அருகில் இருக்கும் வரையில் மனைவியை ராணியாகவே பார்த்துக் கொண்டான். அதிலொன்றும் குறைவில்லை. ஆனால் மாமனாரின் பேச்சினை எடுத்தால் மட்டுமே ரௌத்திரமாகிப் போவான்.

அவனது வழக்கப்படி நான்குநாள் விடுப்பு முடிந்து மறுமுறை வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நாளில் ஹரிணியும் சித்தி கோமதியும் அங்கே வந்து சேர்ந்தனர்.

மனைவிக்கு தக்க துணை இருக்கிறார்கள் என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே பயணமானான் அமிர். அவன் சென்றதில் இருந்து இரண்டாம் நாள் நடேசனுக்கு மீண்டும் உடல் சுகவீனம் கண்டுவிட, தாயும் மகளும் கோவைக்கு அவசரமாக கிளம்பி விட்டனர்.

மகள் தனியாக இருப்பதை அறிந்து ரெங்கேஸ்வரன் மனம் பதைத்து விட்டார்.

“வண்டி அனுப்புறேன், நம்ம வீட்டுக்கு வந்துடு பாப்பா!” கெஞ்சலுடன் கூற,

“இல்லப்பா… அவருக்கு பிடிக்காது, கோவம் வரும்.” மகள் மென்று முழுங்கினாள்.

“அப்பா, அங்கே வர்றேன் டா! உனக்கு தனியா இருந்து பழக்கமில்ல…” பாசத்துடன் வற்புறுத்தினார் தந்தை.

“உங்களுக்கு வீண் அலைச்சல் வேணாம் ப்பா… பக்கத்து வீட்டு ஆண்ட்டி துணைக்கு இருக்கேன்னு சொல்லி இருக்காங்க, நான் சமாளிச்சுடுவேன்.” தெம்பாக பேசி தந்தைக்கு சமாதானம் கூறினாள் லக்கீஸ்வரி.

நான்கு நாட்கள் அமைதியாக கடந்து செல்ல, ரெங்கனின் மனமும் சற்றே நிம்மதி அடைந்தது. அந்த நேரத்தில் லக்கியின் மாதவிலக்கு நாளும் தள்ளிப் போக, அதை கவனத்தில் கொள்ளவும் மறந்து போனாள். 

கால நேரங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவாரம் கழித்து துணைக்கு உறங்குவதற்கு வந்த நீலு ஆண்ட்டி வராமல் போக, இரவின் தனிமை பயத்தில் நடுங்கிப் போனாள் லக்கி.

பெரிய வீடு, புதிய சூழ்நிலை அவளை முற்றிலும் புரட்டிப் போட்டது. காலைநேரம் அழகாகத் தெரியும் இயற்கை இரவில் அவளை மிரட்டியது.

அந்த நடுக்கம் மறுநாள் கடுமையான காய்ச்சலை பரிசாக கொடுத்து விட, விஷயம் கேள்விப்பட்டு விரைந்து வந்தார் ரெங்கேஸ்வரன். உடன் வந்த நடேசனுக்கும் லக்கியின் பலவீனத்தை பார்த்து மனதிற்குள் அமிரை திட்டித் தீர்த்தார்.

பயம், காய்ச்சலின் தீவிரம் சேர்ந்து கருவாக உருவான உயிர் முளை விடும் போதே கரைந்து போய் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

மனைவியை பார்க்க ஓடோடி வந்த அமிரை கன்னம் கன்னமாக அறைய வேண்டுமென்ற ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார் ரெங்கன். அந்த நேரத்தில் இருந்தே இனம் காணமுடியாத வெறுப்பினை மருமகன் மீது படரவிட்டுக் கொண்டார்.

மாப்பிள்ளையிடம் பேச விரும்பியவர், அந்த விசயத்தையே  மறந்து போனவராய், அவனை வெறுப்பாக பார்த்துக் கொண்டே நடேசனிடம் பேசினார்.

“அமிரை நிலையா ஒரே ஊர்ல இருந்து பாக்கற வேலையை தேடிக்க சொல்லுங்க நடேசன். இல்லன்னா, என் தொழிலை எடுத்து நடத்தச் சொல்லுங்க. எதுவும் செய்யாம இப்படி ஊர் ஊரா அலைஞ்சுதான் சம்பாதிப்பான்னா, என் பொண்ணு என் வீட்டுல பத்திரமா இருக்கட்டும்.

அவனுக்கு நேரம் காலம் தோது படுறப்போ வந்து பார்த்துட்டு போகட்டும். என் பொண்ணை உசுரோட காவு கொடுக்கறதுக்கு அவளை, நான் கல்யாணம் பண்ணிக் கொடுக்கல.” வேதனையோடு கடுமையான குரலில் எச்சரித்து விட, அமிர்தசாகர் முதன்முதலாக அவரின் முன் தலைகுனிந்து நின்றான்.

வெளிமனிதர்கள் இடத்தில் பாராட்டு பத்திரத்தை பெற்றவனுக்கு சொந்த மாமனாரின் கண்டிப்பு பெருத்த அவமானமாகவே பட்டது. ஏற்கனவே ஈகோவில் பொருமிக் கொண்டிருந்தவன் முழுதாகவே அவரை தவிர்க்க முடிவெடுத்துக் கொண்டான்.

பெண்ணைப் பெற்றவர் தனது குமுறலை கொட்டுகிறார் என மனதளவில் கூட அவனால் சமாதானம் அடைய முடியவில்லை. மனைவியின் உடல் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய வேண்டிய கட்டாயம் அந்த சமயத்தில் அவனை ஊமையாக்கியது.

அந்த மனச்சோர்வில் மனைவியை விட்டு விலகியிருக்க ஆரம்பித்தான் அமிர். எக்காரணம் கொண்டும் மாமனாரின் கோரிக்கையை ஏற்க அவனுக்கு மனம் வரவில்லை.

தன் போக்கில் பணிநிமித்தம் பொருட்டு மீண்டும் பயணப்பட்டான். காணொளி அழைப்பிலும் அலைபேசி குறுஞ்செய்தியிலும் இல்லறம் நாட்களை நகர்த்தியது.

“எப்போ வரப்போறீங்க சாகர்?” லக்கி ஆர்வத்துடன் கேட்டால்,

“உங்கப்பா தான் என்னை நம்பி தனியா உன்னை அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டாரே? நீயும் சுகமா அப்பா வீட்டுல போயி உக்காந்துட்ட… அவர் பேச்சை கேட்டுட்டு அங்கே வந்து என்னை தங்கச் சொல்றியா?” குதர்க்க பேச்சினை ஆரம்பித்தான் அமிர்.  

“நான் உங்க கூட இருக்கமாட்டேன்னு சொல்லலையே சாகர்?”

“அப்போ என்கூட ஊர் ஊரா சுத்த வர்றியா? அதுக்கு உங்கப்பா ஒத்துப்பாரா… அவரை எதிர்த்து உன்னால என்கூட வரமுடியுமா?” அமிரிடம் இருந்து வரைமுறையில்லாத பேச்சுகள் வரம்பின்றி வெளிவர ஆரம்பித்தது.

‘நாய் வாலை நிமித்த முடியாது… இவனையும் மாற்ற முடியாது’ மனத்திற்குள் கடுகடுத்தவள்,

“எல்லாத்துக்கும் உங்க மனசுதான் காரணம். அப்புறம் உங்க இஷ்டம்” சலிப்புடன் கூறிவிட்டு, அவனை அழைப்பதையும் விட்டு விட்டாள்.

இரண்டு வார ஓய்விற்கு பிறகு தந்தையின் தொழிலில் லக்கியும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். நிர்வாகத்தில் தனக்கென்று சில பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படவும் தொடங்கினாள்.

சரியாக மனைவியை விட்டு விலகியிருந்த இரண்டு மாத தனிமை அமிருக்கு ஒவ்வா முள்ளாக தைக்க ஆரம்பித்தது. இந்த தனிமைக்கு பயந்து தானே ஊர்ஊராக சுற்றி வலம் வந்தது.

மீண்டும் அதே இடத்தில் வந்து நின்ற உண்மை உரைக்க, மனைவியை தன்னுடன் வலுக்கட்டாயமாக தங்க வைத்துக் கொள்ள தீர்மானித்துக் கொண்டான். அப்பொழுதும் தன் வேலையை மாற்றிக் கொள்ளும் முடிவிற்கு அவன் வரவே இல்லை.

‘என் மனைவி, என் சொத்து’ என்ற ஆளுமைப் பண்பு முன்பை விட கூடிப்போக முரட்டு கணவனாக வன்மையான ஆண்மகனாக லக்கியை தேடி வந்தான் அமிர்தசாகர்.

 

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்

ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே

பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்

மெய்த்துணையுஞ் சேரல் இனிது.

விளக்கம்

நண்பர்களுக்கு இனியவற்றைச் செய்தல் இனிது. அதனைவிட எள் அளவும் நட்பு இல்லாதவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது அதனைவிட இனியது. எல்லாவகைப் பொருட்களை உடையவராய் சமயத்தில் உதவும் நண்பர்களைத் துணையாக வைத்துக் கொள்வது இனிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!