EVA21

ELS_Cover3-9f6fa094

21

ஈவா, ராபின் ஃபைலை ஹேக் செய்ய முயன்று கொண்டிருக்க, கம்பியூட்டர் டேபிளின் அருகே சுவரில் சாய்ந்தபடி கார்பெட் தரையில் அமர்ந்திருந்தான் ஆதன். 

ஏழு வருடங்களுக்கு முன்பு இதே நாள், அவன் ராபினை கடைசியாகச் சந்தித்தது.  

யூனிகார்ன் புதிய மைல் கல்லை எட்டியதையொட்டி ராபின் தன் டீமுடன், ப்ராஜெக்டின் அடுத்தகட்ட அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். குழுவினர் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்க விஹானின் முறை வந்தபோது,   

அவன், யூனிகார்னின் திறனை ஆயுதமாகவோ, எதிரி நாடுகளை உளவு பார்க்கவும், மறைந்திருந்து தாக்கவும் அவர்கள் தகவல் தொடர்புகளை தாக்கவும் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்றும், லாபகரமானதென்றும் பெருமையாக தெரிவித்தவன். 

யூனிகார்னை ஆயுதமாக்குதலின் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து அடுத்தகட்ட கண்டுபிடிப்புகளுக்கான முதலீட்டையும் எளிதில் ஈட்டி கொள்ளலாம் எனவும் விரிவாகப் பேசத்துவங்க, ராபின் மிகவும் உறுதியாக தனது மறுப்பை தெரிவித்தார். 

இதனால் இருவருக்குமிடையே வாதம் விவாதமாக மருவி வாக்குவாதமாக உருவெடுக்க,  

“நீங்க எல்லாருமே முட்டாள்கள்!” என்று கத்திவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டான் விஹான். ஆதன் அவனை சமாதானம் செய்ய செல்ல, கோவத்தின் உச்சியிலிருந்த ப்ரொபெஸர் ராபினோ கலந்தாய்வை பாதியிலேயே நிறுத்தினார்.  

விஹானுக்கும் ராபினுக்கும் முட்டிக்கொள்ளுவது வழக்கம் என்பதால் மற்ற யாரும் அதை பெரிது படுத்தவில்லை, மறுநாளே ராபின் லேபிற்குள் யாரையும் அனுமதிக்க பார்த்துவிட்டார்! 

ராபின் பேரில் கொண்ட மரியாதை காரணமாக அவரே அனுமதிக்கும் வரை காத்திருப்பதென அனைவரும் முடிவு செய்ய, விஹானோ யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். 

அமெரிக்காவின் அம்மாகாணத்தில் வழக்கத்தைவிட அந்த வருடம் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சாலைகளைப் பனிக்குவியல் ஆக்கிரமித்திருக்க,  தனது இறுதி செமெஸ்டரின் ரிசர்ச் பேப்பர் (ஆய்வுக் கட்டுரை) தயாரிக்க, அந்நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆதன் தன் அறையிலேயே முடங்கி இருந்தான்.  

கிறிஸ்த்மஸ் கொண்டாட்டங்கள் முடிந்தும், ஆங்காங்கே வீடுகளை வண்ண விளக்குகள் அலங்கரித்திருக்க, அதை ரசிக்க நேரமோ மனமோயின்றி அவன் குடியிருப்பை அடைந்த ப்ரொபெஸர் ராபின் கதவைத் தட்டினார். 

முழுவதும் மூடியிருந்த குளிர்கால உடையினூடே தெரியும் முகத்தின் முன்னே, வாயிலிருந்து வெளியேறும் மூச்சுக்காற்று வெள்ளை மேகம்போல் காட்சியளிக்க, “காட் பியூ மினிட்ஸ்?” என்று இயல்புக்கு மாறான நடுக்கத்துடன் நின்றிருந்த ராபினை, ஆதன் சத்தியமாக அங்கே எதிர்பார்க்கவில்லை!

அவரை உள்ளே அழைத்தவன், “பெப்பெர்மிண்ட் டீ?” என்று கெட்டிலை அடுப்பில் வைக்க, 

“ஒயின் ஆர் ரம்?” கை உறையைக் கழற்றியவர், புன்னகையுடன், “சாரி நீ குடிக்க மாட்டேல? மறந்துட்டேன்” என்று குளிர் காய எரிந்து கொண்டிருந்த சிம்னிக்கு அருகே உள்ள சோஃபாவில் அமர்ந்து, நெருப்பின் அருகே உள்ளங்கைகளைக் காட்டி கன்னங்களில் வைத்துக்கொள்ள,  

“காலின்ஸ் ரூம்ல இருக்கும் ஐ கெஸ்” என்ற ஆதன், சென்று பாட்டிலுடன் வந்தான். 

பாட்டிலைத் திறந்து அருகே கோப்பையுடன் ராபினிடம் தந்தவன் தனக்கான பெப்பர்மின்ட் டீயுடன் அமர்ந்தான். 

ரம்மை மிகவும் ரசித்து ருசித்த ராபின், ஏக்கம் கலந்தக்குரலில் “ஏன் என்னை பார்க்க வரலை நீ?”  குற்றம் சாட்ட, 

“நீங்க டிஸ்டர்ப்ட்டா இருந்தீங்க அதான் நீங்க கம்ஃபர்ட்டபிள் ஆகுரவரை வெயிட் பண்ணேன் பிளஸ் என்னோட ‘ஆன்டி ஜாமர்’  பேப்பர் ரெடி பண்ணவேண்டி இருக்கு…”

அவர் தயக்கத்தை  முழுவதுமாக நீட்டப்படாத கை வெளிப்படுத்த, ஆதனும் சற்று தயக்கத்துடனே அதை வாங்கி, திருப்பி திருப்பி பார்த்து,

“என்ன இது? லேட் கிறிஸ்த்மஸ் ப்ரெசெண்ட்டா இல்லை, ஏர்லி நியூஇயர் கிஃப்ட்டா?” புன்னகையுடன் கேட்டுக்கொண்டே அதைத் திறந்தவன் விழிகள் அதிர்ச்சியில் குடைபோல் விரிய, தனது ஆதர்ச ஆசிரியரைக் கேள்வியாகப் பார்த்தான். 

“என் கனவு! என் ஒரே சொத்து! இனி உனக்கு!” என்றவர்  மீண்டும் ரம்மை கையிலெடுக்க, 

“பட் ராபின்! இது…எதுக்கு…என்கிட்டே எதுக்கு…புரியல…”ஆதன் கை நடுங்க வேகமாகப் பெட்டியை மூடி அவரிடம் திருப்பித்தர, மறுப்பாகத் தலையசைத்தவர், 

“நோ! என்கிட்ட கொடுக்காத. ஒருவாரமா இதை எப்படியாவது அழிச்சுடணும்னு முயற்சி பண்றேன் ஆனா… நான் தொலைச்ச வாலிபத்தோட வித்து…மனசு வரல…”

“என்ன? அழிக்க முயற்சி பண்ணீங்களா!” ஆதன் மின்னல் வெட்டியதுபோல் விறைத்து நிமிர்ந்தான்.  

அலட்டிக்கொள்ளாமல் ஆமென்று தலையசைத்தவர் கண்களைக் கவலை ஆக்கிரமித்திருந்தது. 

“மனிதக்குலத்துக்கே வரப்பிரசாதம்னு நினைச்சேன்…அணுசக்திக்கு அடுத்தபடியான ஆயுதமாகிடுமோன்னு பயமா இருக்கு!” கோப்பையை வெறித்தவர், “இதை பாதுகாக்கவோ அழிக்கவோ இனி எனக்கு தெம்பும் நேரமும் இல்ல…”  

ராபினின் தோற்றமும் பேச்சும் ஆதன் மனதை அழுத்த, “விஹானோட வாக்குவாதத்தை தப்பா புரிஞ்சுகிட்டு கவலைப் படுறீங்களா?” நேரடியாகக் கேட்டுவிட்டான். 

வலி சுமந்த பார்வையுடன் நெருப்பை வெறித்தவர் வெளிர் முகத்தில், தீயின் வர்ணங்கள் நடனமாட “எந்த கேள்வியும் கேட்காம இதை எடுத்துக்கோ ப்ளீஸ்” என்றார்.

“நோ நெவர்! விளையாடுறீங்களா ராபின்? எனக்கு என்ன தகுதி இருக்குன்னு…உங்க அனுபவம் என் வயசைவிட பெரிசு! நான் இதுக்கு ரெடியாகலை எந்த விதத்துலயும்”  

அவனை அடிபட்ட பார்வை பார்த்தவர், “என்னால இதை எடுத்துட்டு போக முடியாது! இதை நீ மெருகேற்றி பாதுகாத்தாலும் சரி இல்ல அழிச்சாலும் சரி!” மீதி மதுவை வேகமாகக் குடித்துவிட்டு மொட்டென மேஜைமீது கோப்பையை வைத்துவிட்டு எழுந்தார். 

“ப்ளீஸ் ராபின்! டோன்ட் டூ திஸ்! இதுனால நீங்க இப்படி செய்யுறீங்கன்னு புரியலை. எல்லா பிரச்சனைக்கும் எதிர்வினையா விடையும் இருக்கும்னு சொல்வீங்களே, இதுக்கும் இருக்கும்.  ப்ளீஸ் ப்ரொபெஸர் இது உங்க உழைப்பு உங்க கனவு…” ஆதன் பெட்டியை எடுத்து அவர் கையில் திணிக்க முயன்றான். அவரோ கைகளை இழுத்துக்கொண்டார்.  

“நோ நோ நோ!” பின்னோக்கி நடந்தவர், “கனவுதான்! கனவுதான்…அதைவிட பெரிய கனவு உலகத்துடைய பாதுகாப்பான செழிப்பான எதிர்காலம். ஏவுகணையைவிட மோசமான ஆயுதமா இதை பயன்படுத்துறதை…காட்! யோசிக்கவே முடியாது! என்னால அப்புறம் என்னை மன்னிக்கவே முடியாது ஆதன்!”  

“நீங்க எதுக்காக இப்படி பயப்படறீங்கன்னே புரியல. நீங்க அங்கீகரிக்காம யாருமே இதை உபயோகிக்கவோ காப்பி பண்ணவோ முடியாதே?” 

“ஏன் என் பேச்சை கேட்க மாட்டேங்குற!” ராபினின் கண்கள் தீக்குப் போட்டியாகத் தகிக்க, “என் உயிருக்கே பாதுகாப்பில்லைன்னும் போது நான் எப்படி இதை காப்பாத்துவேன்?” கத்திவிட்டார். 

“ராபின்! என்னாச்சு? நீங்க இப்பவே வாங்க நாம போலீஸ்கிட்ட போகலாம், மேலதிகாரிகளை பார்க்கலாம், பாதுகாப்பு கேட்கலாம்! நீங்க யாரை சந்தேகப்படுறீங்க! நாங்க இருக்கோம்…”

“காட் ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற? யாரையும் நம்ப முடியாது ஆதன். இது அதிகார வெறி பிடிச்ச உலகம்…வீண் பேச்சு வேண்டாம் இதை நீ எடுத்துக்கோ, பாத்துக்கோ! பை!” அவர் கதவை நோக்கி நடக்க, 

“என்னால முடியாது! நீங்க என்கிட்டே ரொம்ப எதிர்பார்க்கறீங்க! என்னால இது முடியாது முடியவே முடியாது!” ஆதன் உறுதியாக உறக்கவே மறுக்க, 

திரும்பாமலே மெல்லிய குரலில்“முடியாதா இல்ல இஷ்டம் இல்லையா?”

“ஆம் நாட் ரெடி ப்ரோபெஸ்ஸர்! இது என் திறமைக்கு அப்பாற்பட்டது!” அவன் தரையை பார்க்க, 

“ரப்பிஷ்!” என்று திரும்பியவர், “உன்னை பத்தி தெரியாம இதை கொடுக்க நான் என்ன முட்டாளா?” கத்திவிட்டவர் தாழ்ந்த குரலில், “திறமை என்ன திறமை? தான வளர்த்துக்கலாம், அதைவிட சுயமா வரவேண்டிய நல்ல எண்ணம் எல்லாரைவிடவும் உன்கிட்ட மட்டுமே இருக்கு நான் பார்த்தவரை” 

“லின்சி?” 

“நல்லவ தான், தைரியம் போதாது, கெட்டவனோட போராடறது ஈஸி ஆதன். ஆனா துரோகியோட போராட நிறைய தைரியமும், சாமர்த்தியமும் வேணும். வேண்டாத பேச்செல்லாம் எதுக்கு? யுனிகார்ன் ஈஸ் யுவர்ஸ்!”

“பட் ராபின்…”

“நன்றி கடன்பட்ருக்கேன்னு நீ அடிக்கடி சொல்றது மனசிலிருந்து தான் சொன்னியா?” கேட்டவரின் ஆழமான பார்வை அவனை ஈட்டியெனத் துளைக்க, 

“நான் பாத்துக்கறேன் ராபின். ஈவா இனிமே என்னோட பொறுப்பு!” என்றான் தீர்க்கமாய். 

“ஈவா?” சட்டென ராபினின் இறுகிய முகம் ஆச்சரிய புன்னகையில் விரிய,

“எஸ் யுனிகார்ன் இனிமே ஈவா!” என்றான் அவனும் அர்த்தம் பொதிந்த புன்முறுவலுடன். 

ராபினின் அந்த சந்தோஷ சிரிப்பு அவன் மன சுவரெங்கும் எதிரொலிக்க, 

“பாஸ்! ஹலோ பாஸ்! கண்ணை திறந்துகிட்டே தூங்கறீங்க!” ஈவாவின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தான் ஆதன். 

“சாரி ஐ…”

“இட்ஸ் ஓகே! ரொம்ப நேரமா சஹா கதவை தட்டுறா, திறக்கவா வேண்டாமா?” 

“ஹ்ம்ம்” என்றான் வெற்று பார்வையுடன். 

“கண்ணை துடைங்க பாஸ்” ஈவா சொல்லிக்கொண்டே கதவருகில் செல்ல, கண்களைத் துடைத்தவன் விரல்களில் ஈரம்!

சஹானா தழைய தழைய புடவைலயில். அலங்காரத்துடன் நிற்க, கண்களைக் கசக்கிக் கொண்டு தன் மனைவியை மறுபடி பார்த்தவன், குழப்பமாக, “என்ன சஹா எங்கயான ஃபங்ஷனுக்கு கிளம்பரியா என்ன?” என்று எழுந்தான். 

கோபத்துடன் உள்ளே நுழைந்தவளோ, “ம்ம் போறாங்க அர்த்தராத்திரி!…” கடுகடுத்துவிட்டுச் சட்டெனக்   குழைவுடனும் அசட்டு புன்னகையுடனும், “நான் எப்படி இருக்கேன்…” என்று இடம் வலமாக லேசாக நெளிந்தபடி கேட்க, 

“உனக்கென்ன? ஜுரமா?” அவன் நெற்றி கழுத்து என தொட்டவன், “நார்மலாதான இருக்கு” முகம் சுருக்கினான். 

“உஃப் ஆண்டவா!” அவனை முறைத்தவள், “நான் எப்படி இருக்கேன்? அழகா? கியூட்டா?” தேவையற்ற புன்னகையுடன் வழிய, 

“உனக்கென்ன கிழங்காட்டம் கிடக்க, ஆனா எதுக்கு நேரங்கெட்ட நேரத்துல அலங்காரம்?” 

“ம்ம் பொழுது போகல!” சலித்துக்கொண்டவளோ, “நிஜமா ஒண்ணுமே தோணலையா?” என்று பாவமாகக் கேட்க, 

சிலநொடி யோசித்தவன், “புரிஞ்சுது! எனக்கு பசிக்குது! சாப்பிட எடுத்துவை வந்துடறேன்” என்று லேபிலிருந்து தன் அறைக்குச் சென்றான்.  

சஹானா தலையில் அடித்துக்கொண்டு ஈவாவை பார்க்க, 

“உனக்கு கோபுலேட் பண்ணனும்னா, ஓப்பனா சொல்லணும் நீ. இன்டைரெக்ட்டா சொன்னா பாஸுக்கு புரியாது” என்றபடி மீண்டும் கம்ப்யூட்டரின் அருகில் செல்ல, 

“கோப்புலேட்ன்னா?” அவளோ தலையை சொரிய, 

அதுவோ “கூகுளை கேளு நான் பிசி!” என்று திரும்பிக்கொண்டது. 

“எல்லாத்துக்கும் திமிர்!” கடுகடுத்தவள் மொபைலில் அர்த்தம் தேடியபடி கீழே செல்ல, வழியில் அதன் அர்த்தம் படித்தவள், “அட கொடுமையே ரோபோட்டுக்கு புரிஞ்சுது இவனுக்கு புரியலையே!” கோவத்தைப் படிகளில் மிதிகளாக வெளியேற்றி நடந்தாள்.  

“என்னமா வந்துட்டே” வாரப் பத்திரிக்கை படித்துக்கொண்டிருந்த மீனாட்சி கேட்க, 

“போங்க ஆன்டி! உங்கப்பிள்ளை அர்த்தராத்திரி எதுக்கு புடவை, அலங்காரம், எங்கயான ஃபங்ஷனுக்கு போறியான்னு கேக்குறார்!” என்று முகத்தை அழுவது போல் வைத்துக்கொள்ள. 

நெற்றியைத் தேய்த்துக்கொண்டவர், பேசும் முன்னே ஆதன் இறங்கி வர, “அப்புறம்” என்று ஜாடை காட்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். 

சாப்பிட்டுவிட்டு மறுபடி லேபிற்குள் சென்றுவிட்ட ஆதன்,  அறைக்குத் திரும்பும்போது சஹானா இரவு உடையில் முட்டியை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். 

“ஹே தூங்கலையா டா?” அவள் அருகில் அமர்ந்தவன், அவள் முகத்தைப் பார்க்க, கண்கள் லேசாக கலங்கி இருப்பதைக் கண்டு, 

“மண்டு! இதான் விஷயம்னு நேரா சொல்லுறதுக்கு என்ன? ஈவா சொல்லித்தான் புரிஞ்சுது” என்றவன் அவள் முதுகை தட்டி சமாதானம் செய்ய, 

“எல்லாத்துக்கும் ஈவா தான் வரணுமா? இதெல்லாம் நான் எப்படி…சதாசர்வகாலமும் லேபையே கட்டிக்கிட்டு…பொண்டாட்டி நானா லேபா…” 

அவளை பக்கவாட்டில் அணைத்துக்கொண்டவன், “உனக்கு தெரியாததா சொல்லு, அவசியம் இல்லாம அப்படி இருப்பேனானு யோசிக்க மாட்டியா?”

“உங்களுக்கு என்மேல காதல் தர்மத்துக்காவது இருக்கா?” அவள் எறிந்துவிழ, 

“பாரு சஹா…காதலை தாண்டின அன்னோன்யம் தன் வேணும். இந்த புது கவர்ச்சி, பரபரப்பெல்லாம் கொஞ்ச நாள்ல தானா சாதாரண விஷயமா மாறிடும். என் தொடுகை கூட உனக்கு பழகிடும். உடம்பை தாண்டி என் மைண்ட் உன் மைண்ட்டோட கனெக்ட் ஆகணும். அப்போதான் எவ்ளோ வருஷமானாலும் நம்ம கனெக்ஷன் பலமா இருக்கும்…ஏண்டி அடிக்கிறே ஹே…ய்..” தன் மேல் அவள் எறிந்த தலையணையைப் பிடித்தவன் விழிக்க,

“நீ புருஷனா சயின்ஸ் ப்ரொபெஸரா? காதலை கவிதையா சொல்லுன்னா லெக்ச்சர் கொடுக்குறே!” அவள் ஏகத்திற்கும் முறைக்க,

சிரித்தவன், “கம்ப்யூட்டர் தெரிஞ்ச  அளவுக்கு கவிதை தெரியாது டி…ஒரு வார்த்தைல காதல்னு சொல்லுறது ஈஸி ஆனா ஒவ்வொரு நொடியும் என் அன்ப நீ உணரணும்னு நினைக்கிறேன். 

எனக்கு இது இக்கட்டான சிச்சுவேஷன் கொஞ்ச நாள் மட்டும் பொறுத்துக்கோ ப்ளீஸ். எப்போதும் நீ என்னோட பாதி,  நான் உன்னோட பாதின்னு உனக்கு மனசுல இருந்தா போதும்” என்றவன் ஒற்றை விரலால் அவள் நெற்றியைச் சுட்டிக்காட்டினான்.

அவ்விரலை தன் இதயத்தில் வைத்து, “மனசு இங்க இருக்கு” என்று சொல்ல,

“நோ! டெக்னீக்கலி மனசு இங்க இருக்கு” என்றவன் கையை அவள் தலைமீது வைக்க,

“போடா மடையா!” என்றவள் கோவமாக  திரும்பிப் படுத்துக்கொள்ள, சிரித்துக்கொண்டவன், அவள் காதருகில் குனிந்து, 

“சரி சரி நீ எங்க சொல்றியோ அங்க தான் மனசு இருக்கு. நீ சொன்னா சயின்ஸ் புக்குலயே மாத்திடலாம்” என்று அவள் கன்னத்தில் முத்தமிடவும், 

“பாஸ்! எமெர்ஜென்சி!” என்று ஈவா ரூமிற்க்கு வெளியே இருந்து கத்தவும் சரியாக இருந்தது!

பதறியடித்து கதவைத் திறந்த சஹானா குனிவதற்குள், அவள்மீது தாவிய ஈவா,  

“ஹே ஜுனியர் காப்பாத்து! ஹே ஷூ போ போ!” என்று கத்த,  

“என்ன ஈவா?” அதைத் தடவிக்கொடுத்தவள் சுற்றும் முற்றும் பயம் கலந்த பார்வையுடன் பார்க்க, 

“கீழ பாரு” என்றது ஈவா. சற்று தொலைவில் ஒரு அலங்கார மேஜையின் காலின் பின்னாலிருந்து ஈவாவை துருதுருவெனப் பார்த்திருந்தது அந்த அழகிய எலி! 

 “பார்றா! சார் தான் உன் சைட்டா? பையனுக்கு ஓகே சொல்லிட்டியா?” சஹானா சிரிக்க, 

“என்ன ஈவா எமெர்ஜென்சின்னு மெசேஜ்? ” ஆதன் சட்டைக்குப் பட்டன் மாட்டியபடி கேட்க, 

அவனை கிண்டல் பார்வை பார்த்தவள், “ம்ம் உங்க செல்லத்தின் பின்னாடி ஒருத்தன் சுத்துறான் அதான் மேடம் பதறி அடிச்சு என்மேல பாஞ்சு நிக்கிறாங்க!” என்றபடி  அந்த சுண்டெலியாய் காட்ட, 

“அட! என்ன ஈவா பையனை பிடிச்சிருக்கா பேசிடுவோமா? உன்கூட அப்க்ரேடுக்கு போட்டிப்போட மாட்டான் என்ன சொல்ற” என்று ஆதன் விடாமல் சிரிக்க. 

“யக்! நான் சும்மா பார்க்க போனேன் அது என்னடான்னா என் கிட்ட கிட்ட வருது! நீங்க வேற என் கேஸை கழட்டி வச்சிருக்கீங்க எதையாவது இது கடிச்சு கிடிச்சு வச்சா…” ஈவா பார்வையை அந்த நிஜ எலியின் மீதே வைத்தபடி சொல்ல, 

“பய உன்னை காதலிக்கிறான்! விடு உனக்காவது நல்ல லவ்வர் கிடைக்கட்டும் என்னை மாதிரி போர் அடிக்கிறவன் வேண்டாம்!” சஹானாவை பார்த்தபடி ஆதன் நக்கலாகச் சொல்ல, 

“பாஸ்!” கத்திய ஈவா, “எல்லாம் இதால தானே! உன்னை…”என்று அந்த எலியை நோக்கிப் பாய, அதுவோ அலறிச் சுருட்டிக்கொண்டு ஓட ஈவா துரத்திக்கொண்டு ஓடியது.  

“ரோபோவா இருந்தாலும் பொண்ணுங்க கோவத்துக்கு, பசங்க எப்படி பயப்பட வேண்டி இருக்கு!” முகத்தைப் பாவம்போல் வைத்துக்கொண்டு ஆதன் சொல்ல, 

“ஆஹா சாதுன்னு நெனப்பு!” சஹானா பழிக்க, 

“அஃப்கோர்ஸ்!” என்றவன், “சரி சரி போயி அந்த எலியை பிடிச்சு பெட் கேரியர்ல விடு” என்று உள்ளே செல்ல எத்தனிக்க, 

“ம்ம் நீங்கதான் வீரனாச்சே போய் எலி பிடிச்சு கேரியர்ல விடுங்க” அவன் கையை பிடித்து அவள் இழுக்க, 

“நான் எப்போமா வீரன்னு சொன்னேன்” ஆதன் விழிக்க, 

“அப்போ இல்லையா?” சஹானாவின் உதடுகள் ஏளனமாக வழிந்தன. 

“ஏன்டி எலி பிடிக்கவா நான் பீஹெச்டி படிச்சேன்?”  

“பீஹெச்டி படிச்சும் எலிபிடிக்க தெரியாட்டி…” கையைக் காட்டி அவளை நிறுத்தியவன், முறைத்துவிட்டு எலிகளைத் தொடர்ந்து கீழ்தளத்திற்கு ஓடினான். 

பெரிய வேட்டைக்கு பிறகே வெற்றியுடன் வியர்த்து விறுவிறுத்துத் திரும்பியவன், துண்டை எடுத்துக்கொண்டு குளியல் அறை நோக்கி நடக்க, 

“எலி பிடிக்கிறதென்ன இவ்வளவு கஷ்டமான வேலையா?” 

“ஏன் பேச மாட்டே” செல்லமாக அவளை முறைத்தவன், “வந்து வச்சுக்கறேன்”, சில்மிஷ பார்வையுடன் குளிக்க செல்ல, சிரித்துக்கொண்டவள் காத்திருக்க குளித்துவிட்டு வந்தவன், அவளை அணைத்துக்கொள்ள, அவன் தோளில் சாய்ந்துகொண்டு, 

“ப்ளீஸ் உண்மையை சொல்லுங்க… என்னை நீங்க காதலிக்கிறீங்களா இல்லையா?” ஏக்கமாகக் கேட்க, 

“காதலிக்கிறேன்னு சொல்லமுடியாது ஆனா காதலிக்க முடியும்!” என்றான் விஷம புன்னகையுடன் அவள் முதுகை வருடியபடி, 

கோபமாக விலகி, “வாவ் நான் எவ்ளோ பெரிய பாக்கியசாலி!” என்றவள் முகத்திலிருந்த புன்னகையை கவனத்திவன், 

“ஹேய் ஓட்டறியா?” என்று செல்லமாக முறைக்க, 

“பின்ன இவர் பெரிய இது…முயற்சி பண்ணுறாராம் முயற்சி” என்று அவன் சிகையைக் கலைக்க,  சிரித்தவன் அணைப்பை இறுக்கினான்.  

 

***

 

தன் கேபினில் பேப்பரில் பென்சிலால் கீறிக் கொண்டிருந்தாள் சஹானா.  

“எத்தனை வாட்டி பிங் பண்ணேன்” ஆதன் முறைப்புடன் அவள் கேபினுக்குள் நுழைந்து, “கான்பிரென்ஸ்காண அஜெண்டா லிஸ்ட் எங்க மா? நான் ஒருவாட்டி பாத்துக்கணும்னு சொன்னேன்ல?” கடுகடுத்தபடி அவள் லேப்டாப்பை திருப்பியவன் அந்தப்பக்கம் மறைந்திருந்த கரிய வட்டங்கள் படையெடுத்துக் கிழிபட்ட காகிதத்தைக் கவனித்தவன்,  

“என்ன ஆச்சு டா?” என்று புருவம் சுருக்க, 

“யாரையான தூக்கி போட்டு மிதி மிதின்னு மிதிக்கணும் போல இருக்கு! அந்த தருண் மட்டும் இப்போ என் கைல கிடைச்சான்…அவனை அப்படியே பிடிச்சு அவன் முதுகு எலும்பை ஒவ்வொண்ணா…”படக்கென்று பென்சிலை உடைத்து பல்லை கடித்தாள். 

“அவன் எங்க இங்க வந்தான்?” சிரிப்புடன் ஃபைலை தனக்கு ஈமெயில் செய்துகொண்டு அறைக்குச் சென்றவன், “இந்தா ஹெல்ப் பண்ணும்” என்று அவள் முன்னே கைநிறைய கொண்டுவந்த சாக்லேட்களை மேஜையில் இறைதான். 

“என்னது?” அவனை ஏனோ சஹானா முறைக்க, 

“சாக்கலேட் மா” 

“தெரியுது! எதுக்குன்னு கேட்டேன்!”    

“உனக்கு தேவையா இருக்கும்னு தோணிச்சு”

“…”

“பீரியட்ஸ் தானே?” என்றவன் ஒரு சாக்லேட்டை பிரித்து வலுக்கட்டாயமாக அவளுக்கு ஊட்ட, பாதி கடித்தவள் மீதியை வாங்கிக்கொண்டு, “எப்படி…” 

“ரெண்டு லேடீஸோட வளர்ந்தவன் இதுகூட தெரியாம எப்படிமா?  சரி நீ ரெஸ்ட் எடு”

“ஆனா…”

“நான் பாத்துக்கறேன் சஹா நீ லேடீஸ் ரூம்க்கு போயி ரெஸ்ட் எடு.  ஓடு!” 

“பட் இது எதுக்கு? கசக்குது பாஸ் டார்க் சாக்கலேட்டா?” லேசான கண்சிமிட்டலுடன் சாக்லேட்டை தின்றபடி கேட்க, 

“பீரியட்ஸ் டைம்ல பீஎம்எஸ்ல சாக்கலேட் ஹெல்ப் பண்ணும். ஆனா சர்க்கரை இல்லாத டைப். நீ பாட்டுக்கு இனிப்பான சாக்லேட்டை அள்ளித்தின்னுட்டு ஒண்ணுமே ஆகலைனு சொல்லக்கூடாது”

செல்லமாக மிரட்டியவனுக்கு உதட்டைக் குவித்து அவசர முத்தமொன்றை அனுப்பியவள். 

“தேங்க்ஸ்” என்றாள். 

“எனிடைம்” என்று கண்சிமிட்டியவன் தன் அறைக்குத் திரும்ப, நாற்காலியில் சாய்ந்துகொண்டவள் கண்களை மூடிக்கொள்ள,

ஆதன் கால் செய்து, “போக சொன்னேன்ல?” என்று மிரட்ட, 

“பயமா இருக்கு பா உங்களுக்கு தெரியாதா? யாரான இருப்பாங்க…” என்று இழுக்க, ஈவா விஹான் குழப்பத்தில் சஹானாவை ஃபோபியாவிற்காகக் கவுன்சிலிங்கிற்கு அழைத்துச் செல்ல மறந்ததை நினைத்துத் தன்னையே திட்டிக்கொண்டவன், சற்று முன்பாக ஆதிராவை வரவழைத்து சஹானாவை அவளுடன் அனுப்பிவைத்தான்.  

வந்ததும் வராததுமாக சஹானாவை தேடியவன், மீனாக்ஷியிடம், “மா அவ எங்க ரூம்ல காணுமே?” என்று மேல் தளத்திலிருந்து குரல், கொடுக்க, 

“அங்கே தானே டா இருந்தா?” ரகுநாத்துடன் டீவி பார்த்துக்கொண்டிருந்தவர் பதில் தர, 

“எங்க போனா இவ?” யோசித்தவன் லேபிற்கு செல்ல, அங்கே தரையில் நியூஸ் பேப்பர் விரித்து சின்ன சின்ன பெயிண்ட் டியூபிகள் ப்ரஷ்க்கள் என் பரப்பிவைத்து அமர்ந்திருந்தாள் சஹானா. 

“இங்க என்ன பண்றே?” என்றபடி அவளை நெருங்கியவள், “ஹே என்னடி பண்றே!” என்று அலற, 

திரும்பியவள், “எப்படி இருக்கு?” பெருமையாக காட்ட அங்கே பீ, பஞ்சவர்ண கலரில் அப்பாவியாய் படுத்திருக்க, 

அருகில் தானும் கையில் ஒரு ப்ரஷுடன் அவனை நிமிர்ந்து பார்த்த ஈவா “பீ 7.0!” என்றது.

“வாட் தி ஹெக்! என்ன கர்மம் இது! என் லேபுக்கு வராதே எதையும் தொடாதேன்னு சொன்னேன்ல?” 

அவன் பல்லைக்கடிக்க, 

“அப்பாவி பாஸ் நீங்க! உங்க பேச்சை அவ கேப்பான்னு எப்படி நம்பினீங்க?” ஈவா நக்கலாக சொல்ல, சஹானா அதன் தலையில் பெயிண்ட் தோய்ந்த ப்ரஷால் அடிக்க, அதிலிருந்த நீல துளி ஆதனின் பேண்டில் தெறிக்க, 

“இடியட்!” அதை டிஷ்யூ கொண்டு துடைத்தவன்,  “இவளுக்கு தான் அறிவில்லை, உனக்கெங்கே போச்சு! இதெல்லாம் விளையாட்ற சமாச்சாரமில்லைனு தெரியாத?” ஈவாவை அதட்ட, 

“அதை திட்டாதீங்க…அழகா இருக்குமேன்னு நான் தான்…” சஹானா உதட்டைச் சுழிக்க, 

“ஹோ காட் சஹானா! அதென்ன பொம்மையா கலரடிக்க?” நெற்றியில் வழிந்த முடியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். 

“பொம்மை மாறித்தானே…சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு…”

“அது இன்னும் பினிஷ் பண்ணாத…டெம்ப்ரரியா கேஸ் போட்டுவெச்சேன்…அதோட தனித்தன்மையே கண்ணனுக்கு தெரியாம மறைஞ்சு இருக்கணும்ன்றது தானே…இப்படி பெப்பரப்பேன்னு ஊருக்கெல்லாம் காட்டிகிட்டு பறக்க இதென்ன காத்தாடியா?” நெற்றியை பிடித்துக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தவன், பொறுமையாக அவளைக் கூர்ந்துபார்த்து, 

“நீ அசலே இப்படித்தான் அதிகப்பிரசங்கியா இல்ல என்னை வறுத்தெடுத்து இம்சிக்கவே மெனக்கெடுறியா?” பீயை பாவமாக பார்த்தவன், “எவ்ளோ நாள் கஷ்டப்பட்டு உருவாக்கிட்டு வரேன்…நீயெல்லாம் எப்படி டி எல்கெஜி பாஸ் பண்ணே?” அவளை முறைத்துவிட்டு பீயை எடுத்து பார்த்து உதட்டைப் பிதுக்க,   

திருதிருவென விழித்தவள். “இதுக்கே கோச்சுக்கறீங்களே…அப்போ…” இழுக்க, 

“அப்போ? என்ன அப்போ?” பதறித் திரும்பியவன் கண்கள் விரிய, எச்சிலை விழுங்கியவள் பார்வையால் துணைக்கு ஈவாவை அழைத்தாள். 

“இப்போ சொல்ல வேண்டாம் பாஸோட பீப்பி பயங்கரமா இருக்கு” அது குசுகுசுக்க, 

“என்ன செஞ்சு தொலைச்சீங்க?” அவன் இதயம் இரட்டிப்பாகத் துடிக்கத் துவங்க,  

ஈவா மெல்ல தன் மீதிருந்த துணியைக் கழட்ட, “ஆண்டவா!” தலையைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விட்டான் ஆதன். 

மெட்டாலிக் நீல பெயிண்டில், சில்வர் நிறத்தில் மிக மிக மெல்லியதாக ஈவா என்று டிசைனாக எழுதியிருந்த முதுகை சஹானாவிடம் காட்டிய ஈவா,

“நல்லா தானே இருக்கு? இதான் ட்ரெண்டி வெறும் வெள்ளை கேஸ் நல்ல இல்ல. சோ ஓல்ட் ஸ்கூல்… எப்படியும் மேல எலியா காட்ட சிந்தெடிக் ஃபைபர் போடத்தான போறீங்க பாஸ்?” என்றபடி ஆதனை பார்க்க. 

“கெட் அவுட் ஆஃப் மை லேப்!” அவன் கர்ஜித்ததில் பிரஷ்ஷை அப்படியே போட்டுவிட்டு ஈவாவுடன் ஓட்டம் பிடித்தாள் சஹானா.