சூரியநிலவு 28 final

சூரியநிலவு 28 final

அத்தியாயம் 28

செல்வன் ஜூவல்லர்ஸ் 

ராஜாராம் அனைவரையும் தங்கள் கடைக்கே அழைத்து சென்றார். பாட்டி தன்னுடைய மாங்கல்யத்தை காட்டி அது மாதிரி இருவருக்கும் செய்ய கூறினார். அவர்களும் அதை குறிப்பு எடுத்து கொண்டு, விரைவில் தருவதாக வாக்களித்தனர்.

அந்த நேரம் மது ஆகாஷுக்கு கண்ணை காட்ட அவன் வெற்றியை அழைத்து பேசினான். தொலைப்பேசியை அணைக்கவும் ‘என்ன வாகிற்று?’ என்ற பார்வைக்கு,’சக்சஸ்’ தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான். நிம்மதி பெருமூச்சுடன் மேகாவுடன் இணைந்தாள். அவர்கள் சம்பாஷனையை கவனித்த பெண்கள் மகிழ்ச்சியுடன் நகை தேர்வில் இறங்கிவிட்டனர்.

அடுத்து துணிக்கடைக்குள் நுழைந்தனர். தங்கள் முகூர்த்த புடவையை தாங்களே டிசைன் செய்வோம் என மதுவும் மேகாவும் உறுதியுடன் தெரிவித்துவிட, அடுத்து மற்ற சடங்குகளுக்கும், வெளியே அணிய சாதாரண உடைகளும் தேர்ந்தெடுக்க அனைவரும் முதலில் புடவை பிரிவிற்குள் நுழைந்தனர்.

‘தான் வளர்த்த பெண்ணின் வாழ்வு என்ன ஆகுமோ?’ என்று பயந்து கொண்டிருந்த ராஜாராமும் கற்பகமும், மதுவின் உயிர்ப்பான முகத்தை பார்த்து மகிழ்ச்சியுடன் சுற்றி திரிந்தனர்.

பிரதாப்பும் ஆகாஷும் யாரையும் அருகில் விடாமல், தங்களின் வாழ்க்கைத் துணைக்கான உடைத்தேர்வில் தாங்களே இறங்கினர். பெண்களின் கண்களை பார்த்தே அவர்களின் விருப்பத்தை உணர்ந்து, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்வு செய்தனர். அதில் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ந்தாலும், சுமித்ரா மனதில் பெரும் மாற்றம். தான் இதுவரை மதுக்கு இழைத்த தீங்கை நினைத்து வருந்தினார். 

காலம் கடந்து உணர்ந்தும் வருந்தியும் என்ன பிரயோஜனம்?  மதுதான் அவர்களை விட்டு மனதளவில் வெகுதூரம் சென்றிருந்தாளே.

தேவையான அனைத்தையும் வாங்கி முடித்து இல்லம் திரும்பினர். ஓவியா முகத்திலிருந்த வெட்க புன்னகையும், வெற்றி முகத்திலிருந்த பிரகாசத்தையும் கண்ட அனைவரும்,’அவர்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டது’ என்றதை உணர்ந்து, அவர்களை சீண்டி  சங்கடத்தை ஏற்படுத்தாமல், ஒரு புன்சிரிப்புடன் விலகினர்.

மறுநாள் காலை “நிலா” என பிரதாப் அவளின் அறையில் நுழைந்தான். அவள் மடிக்கணினியுடன் கட்டிலில் அமர்ந்து மிகவும் மும்முரமாக முகூர்த்த புடவை வடிவமைப்பதில் ஈடுபட்டு கொண்டிருந்தாள். அவளின் அருகில் அமர்ந்தவன், அவள் மடிக்கணினியில் பார்வையை ஓட விட்டான். 

இரண்டு நிமிடங்களுக்கு மேல் மடிக்கணினியில் பார்வையை செலுத்த முடியாமல், காந்த ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் இரும்பைப் போல், அவன் பார்வை நிலாவை நோக்கி ஈர்த்தது. அவளது கண், காது, மூக்கு என ஒவ்வொரு இடமாக  பயணம் செய்த பிரதாப்பின் பார்வை இதழ்களில் வந்து முடிந்தது. அவள் அருகாமைக்காக மனம் ஏங்க, அவளை மிகவும் நெருங்கி அமர்ந்தான். 

அவன் பார்வை தீண்டலை உணராமல், வெகு தீவிரமாக புடவை வடிவமைப்பதில் ஈடுபட்டிருந்த நிலா, அவனது உடல் நெருக்கத்தை உணர்ந்து அவனை நோக்கி ‘என்ன?’ என புருவம் உயர்த்தினாள்.

அதன் அழகில் மயங்கியது அவன் இதயம். அதை மறைத்து மடிக்கணினியை கண்களால் சுட்டிக்காட்ட, நிலாவும் ‘அவன் புடவை வடிவமைப்பில் கவனம் செலுத்துகிறான்’ என நினைத்து, தன் வேலையை தொடர்ந்தாள். சிறிதுநேரம் பொறுத்தவன்,”நிலா” குழைந்து அழைத்தான்.

அவன் குழைந்ததை உணராமல்,”ம்” என மட்டும் கேட்டிருந்தாள். “கொஞ்சம் பக்கத்துல வந்து உட்காரு. எனக்கு லேப்டாப் தெரிய மாட்டேங்குது” என்றான் ஹஸ்கி வாய்ஸில். 

இப்போது அவன் குரலிலிருந்த மாற்றத்தை உணர்ந்தவள், தங்களுக்கு நடுவே இருந்த இடைவெளியை சுட்டிக்காட்டினாள், உரசிக் கொண்டு அமர்ந்திருந்தான். “இதுக்கு மேல நான் உன்கிட்ட நெருங்கி உட்காரனுமென்றால் உன் மடியில்தான் உட்காரனும்” கிண்டலாக.

“ஏய் இது கூட நல்ல ஐடியாவா இருக்கே? நீ என் மடியில் உட்கார்ந்து வேலை பார்ப்பியாம், நான் டிஸ்டர்ப் பண்ணாம குட் பாயா இருப்பேனாம்.”

“நீ குட் பாயா?” என்னை நம்பச் சொல்ற என்ற பார்வையை வீசினாள்.

“ம்ம்ம்” என அவனும் கள்ளத் தனத்துடன் மண்டையை மேலும் கீழும் ஆட்டினான். அதில் சிரிப்பு வர, அதை அடக்கி கொண்டு கணினியில் பார்வையை ஓட்டினாள். 

அவள் சுதாரிக்கும் முன் அவளை தூக்கி தன் மடியில் அமர்த்தி, வயிற்றோடு கட்டிக்கொண்டு, “இப்ப நீ உன் வேலையை பார்ப்பியாம், நான் என் வேலையை பார்ப்பேனாம்.”

ஒரு நம்பாத பார்வையை அவனை நோக்கி செலுத்த, அவள் முகத்தைப் பற்றி கணினி பக்கம் திருப்பினான். ஆனால் அவளால் அதில் கவனத்தைச் செலுத்த முடியாமல், அவளின் பின்னங்கழுத்தில் தன் சில்மிஷத்தை தொடங்கினான். 

“சூரியா கம்முனு இரு?” என வார்த்தை தெளிவாகவே வந்தது.

“நான் ஒண்ணுமே பண்ணலை ஸ்வீட்டி, நீ உன் வேலையை பாரு” என அவன் மீசை அவள் செவிமடலை உரச கூறினான். 

அவன் நெருக்கத்தில் நிலா கொஞ்சம், கொஞ்சமாக தன்னிலை இழக்க ஆரம்பித்தாள். “இப்படி டிஸ்ட..ப். பண்… நா.. எப்..படி வே…லை பார்க்…க?” வார்த்தைகளிலும் தடுமாற்றம். மடிக்கணினி ஒரு மூலையில் அனாமத்தா கிடந்தது.

“நான் எங்க டிஸ்டர்ப் பண்றேன்? நீ என் பக்கத்தில் இருந்தாலே என் மூளை வேலை செய்ய மாட்டேங்குது. நான் என்ன செய்ய?” என தன் வேலையை தொடர்ந்தான்.

சரியாக அந்த நேரம் கதவு தட்டும் ஓசை. மயக்கத்திலிருந்த நிலா அவசரமாக கீழே இறங்கி அமர்ந்தாள். 

கதவை தட்டி உள்ளே நுழைந்தது சாட்சாத் நம்ம கரடி ச்ச ச்ச இல்லை இல்லை ஆகாஷும் மேகாவும்.

“நெனச்சேன் இவனா தான் இருக்கும்னு. நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா, மூக்கு வேர்த்த மாதிரி வந்துருவான்.” நிலா காதில் ரகசியமாக கூறி ஆகாஷை முறைத்தான்.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற ஆகாஷின் கேள்விக்கு, “பார்த்தா தெரியலை முகூர்த்த புடவை டிசைன் பண்ணிட்டு இருக்கோம்”

“நீ புடவை டிசைன் பண்ற? எதில் ராஸா டிசைன் பண்ற?” 

“நீ என்ன லூசா? லேப்டாப்ல தான்.”

“எங்க நீ டிசைன் பண்ணத காமி?” என கேட்க

அப்போதுதான் மடிக்கணினியை எங்கே என தேடினான்.

“லேப்டாப் இல்லாமல் டிசைன் பண்ற, ஒரே ஆள் நீயா தாண்டா இருப்ப.”

“அது சும்மா பேசிகிட்டு இருந்தோம்” வார்த்தைகளில் தடுமாற்றம்.

“சும்மா பேசறேன், சும்மா பேசறேன்னு அவளை அம்மா ஆக்கினாலும் ஆக்கிடுவ. உன்ன நிலா பக்கத்துல விடக்கூடாதுன்னு பாட்டி ஆர்டர். கல்யாணம் முடியிற வரைக்கும் நீ நிலா பக்கத்தில் வரவே கூடாது ஓடிப்போ.”

“முடியாது என்னடா பண்ணுவ?”

“பாட்டி” என கத்தி ஆகாஷ் அழைத்தான். அவன் வாயை அடைக்க பிரதாப் போராட அந்தக் கரத்தை விலக்கி இரண்டு, மூன்றுமுறை”பாட்டி” என அழைத்திருந்தான். அவன் குரல் பாட்டியை அடைய,”அங்க என்னடா சத்தம்?” என்ற பாட்டியின் கேள்விக்கு,

“ஒன்னும் இல்லை பாட்டி. சும்மா பேசிகிட்டு இருந்தோம்” என பிரதாப் பதிலளித்தான்.

“இன்னமும் ஒரு வாரத்தில கல்யாணத்தை வச்சுக்கிட்டு, ரெண்டு பேரும் சின்ன புள்ள மாதிரி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க. உங்க மனசுல என்ன குழந்தை என்று நினைப்பா? போய் ஆக வேண்டிய வேலையை பாருங்கடா.” என பாட்டி சத்தம் போட்டார்.

அதில் அடங்கிய அவர்கள் தங்கள் துணையை பார்க்க, அவர்கள் கண்ணும் கருத்துமாக தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.  ஆண்கள் இருவரும் புஸ் புஸ் என பெருமூச்சுடன், அவர்களின் அருகில் சென்று உண்மையில் உதவி செய்ய ஆரம்பித்தனர்.

கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில், அவர்கள் இரண்டு புடவை டிசைன்களை உருவாக்கியிருந்தனர். அதில் ஆகாஷ் ஒன்றை காட்ட, பிரதாப் வேறொன்றை காட்டி,”இதுதான் என் நிலாவுக்கு பொருந்தும்” என இருவரும் தங்கள் உரிமை கொடியை தூங்கினர்.

பெண்கள் அவர்கள் இருவரையும் மாறி மாறி கடனேயென பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது அவர்கள் நிலாவிடம்,”நிலா நீயே சொல்லு எது நல்லா இருக்கு?” இருவரும் ஆர்வமாக அவள் முகம் நோக்கி.

இருவர் முகத்தையும் பார்த்த நிலா, ஆகாஷ் தேர்ந்தெடுத்த புடவையை எடுத்தாள். அதில் ஆகாஷுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பிரதாப்புக்கும் ஆனந்தமே ஆனால் பொய்யாக கோபம்போல் முகத்தை வைத்துக்கொண்டான்.

அவர்கள் டிசைன் செய்த இரண்டு புடவையும் வடிவம் எடுத்தது நிலாவுக்கு தெரியாது. 

தனிமையில் சந்திக்கும்போது பிரதாப் நிலாவிடம் கோபம்போல்,”நான் தேர்ந்தெடுத்த புடவையை நீ எடுக்கலைல. நான் உன் மேல் கோபமா இருக்கேன்.” என பிரதாப் முகத்தைத் திருப்பினான்.

நிலா அவனது முகத்தை தன்னை நோக்கி திருப்பி,”எங்க என் கண்ணை பார்த்து சொல்லு. நான் அஷ் எடுத்த புடவையை எடுத்தது உனக்கு வருத்தம் என்று.”

“போ பேபி. நான் என்ன நெனச்சாலும் என் கண்ணை பார்த்து கண்டுபிடிச்சுடுற. நான் எப்படி உன் கிட்ட பொய் சொல்றது?” சலிப்பதுபோல் பெருமை கொண்டான்.

“நீ தேர்ந்தெடுத்த புடவையை நான் எடுக்கல, உனக்கு வருத்தம் இல்லையே?” என உண்மையில் வருந்தினாள்.

“என்ன பேபி? இதுக்கு போய் வருத்தப்பட்டுட்டு? நான் எடுத்த புடவையை நீ எடுத்து இருந்தால்தான் எனக்கு வருத்தம். அஷ் உன்னை அவனது அம்மா மாதிரி நெனச்சு இருக்கான். உனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்யணும்னு ஆசைப்படுறான்.  அதபோய் நான் தப்பா நினைப்பேனா?” என அவளை அனைத்து கொண்டான். 

தற்செயலாக அந்தபுரம் வந்த ஆகாஷ், அவர்கள் பேச்சை கேட்டு மனம் நெகிழ,”தேங்க்ஸ்டா பிரது.” என பிரதாப்புடன் இனைந்த நிலாவையுமும் அனைத்து கொண்டான்.

இந்த காட்சியை கண்ட குடும்ப உறுப்பினர்கள் ஆனந்த கண்ணீரில். 

பாட்டி மனதில்,’நூறு வருஷம் இதே ஒற்றுமையுடன் இவர்கள் சந்தோஷமாக வாழனும். யார் கண்ணும் படாமல் இருக்க முதலில் இவர்களுக்கு சுத்தி போடனும்.’

********

அன்று மாலையே பெண்களை மதுரையில் சுமித்ரா வீட்டில் விட்டுவிட்டு, ஆண்கள் பாட்டியுடன் அவர்கள் கிராமத்திற்கு சென்று திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டனர். வர மறுத்த ஆண்களை,”நீங்க வரலேன்னா கல்யாணத்தை ரெண்டு மாசம் தள்ளி வச்சுடுவேன்” என மிரட்டி, தாத்தாவும் பாட்டியும் அவர்களை இழுத்துச் சென்றனர்.

திருமணத்திற்கு காத்திருந்த ஜோடிகளை தவிர அனைவருக்கும், மின்னல் வேகத்தில் நாட்கள் பறந்தது. கல்யாணத்திற்கு முதல் நாள் காலையிலேயே நிலாவையும் மேகாவையும் சூரிய நல்லூர் கிராமத்தை அடைந்தனர். அப்போதும் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அதில் ஆண்கள் ஏக கடுப்பில் இருந்தனர், ஒரு வாரமாக தன் துணைகளை பார்க்கவில்லை அல்லவா? ஆகாஷை கூட சமாளித்துவிடலாம், பிரதாப் கோபத்தில் அனைவரையும் கடித்து கொண்டிருந்தான்.

மேகவும் நிலாவும் வந்ததை தெரிந்து கொண்ட ஆண்கள் அவர்களை சந்திக்க கிளம்ப, வீட்டில் பயங்கர எதிர்ப்பு ‘கல்யாண மாப்பிள்ளை திருமணத்திற்கு முன் மணமகளை பார்க்க கூடாது’ என தடைவிதிக்கப்பட்டது. அவர்களுக்குக் வெற்றியையும் சூர்யதேவையும் காவல் வைத்தனர்.

முதல்முறையாக தன் கிராமத்திற்கு வந்த சூர்யதேவ்விற்கு, மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு வந்த சுமித்ராவிற்கு மனம் நெகிழ்ந்திருந்தது. அதே நிலைதான் சூர்யதேவின் தந்தைக்கும். நீண்ட வருடங்களுக்கு பிறகு தன் உற்றார், உறவினர்களை சந்தித்த மகிழ்ச்சி.

பிரதாப் தன் நிலாவைப் பார்க்க விடாமல் சதி செய்த அனைவரையும் கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தான்.  

மாலையில் நிச்சய விழா ஆரம்பித்தது. கம்பீரமாக நின்ற மணமகன்களுக்கு, இணையாக அழகு ஓவியமாக மணமகள்கள். அங்கு கூடியிருந்த அனைவரும் மணமக்களை வைத்த கண் வாங்காமல் ரசித்தனர். 

பிரதாப் தன் நிலாவிடம் பேசிவிட மாட்டோமா? என ஆவலாக அவள் முகத்தையும் கூட்டத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். கூட்டம் குறையவும் அவளிடம் பேசலாம் என்று திரும்ப, புகைப்படக்காரர்கள் பிடித்துக்கொண்டனர்.

அதில் கோவம் வரப்பெற்ற பிரதாப், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தான். முதல் புகைப்படத்திலேயே அவளை தோளோடு அணைத்த மாதிரி புகைப்படம் எடுக்க, அந்த டீலிங் பிடித்துப்போன பிரதாப்பின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம். 

நிலாவை தீண்டி, சீண்டி, வெட்கப்பட வைத்துக்கொண்டே போஸ் கொடுக்க, வெட்கத்தால் சிவந்த நிலாவின் முகத்தை அழகாக கேமரா கண்கள் உள்வாங்கி கொண்டது. 

மேகாவின் நிலையும் இதுவே ஆகாஷ் அவளை சீண்டிக் கொண்டிருந்தான். 

புகைப்படம் எடுத்து மணப்பெண்கள் சோர்ந்து போக, உறவினர் ஒருவர்,”ஏம்பா எவ்வளவு நேரம்தான் போட்டோ எடுப்ப,  போதும் நாளைக்கு காலையில எடுத்துக்கலாம்.” குரல் வர, அதற்குப்பின் புகைப்படக்காரர் தன் முட்டை முடிச்சுகளை கட்டினார்.

******

மண்டபத்தில் தனக்கிருந்த தனியறையில் சோர்வுடன் படுத்த நிலா, உடனே உறங்கி விட்டாள். பிரதாப்பிற்கு உறக்கம் வர மறுத்து விட,’என்ன செய்வது’ என தெரியாமல் நடு இரவு ஒரு மணிவரை நேரத்தை ஓட்டியவன், அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் நிலாவின் அறைக்கு சென்று, அவளைத் தன் கரங்களில் ஏந்தி அவனது அறைக்கு சென்றான். 

படுக்கையில் அவளை கிடத்தி அவளை அணைத்தவாறு படுத்து உறக்கத்தை தழுவினான். இதை அறியாத சுமித்ரா, காலை விடிந்ததும் மதுவை எழுப்ப அவள் அறைக்கு செல்ல அவளைக் காணவில்லை.

பயந்துபோன அவர் தன் குடும்பத்தாரை அழைத்து விவரம் தெரிவிக்க, அனைவரும் பதறி மதுவை தேடிக் கொண்டிருந்தனர்.

மேகா சந்தேகம் கொண்டு சுற்றுமுற்றும் யாரையோ தேட, ஆகாஷ் அவளின் அருகில் வந்து,”யாரை தேடுற?”

“எல்லாம் உன் ஆருயிர் தோழனை தான். அவன் உயிர் நிலாவை காணோம். பதறிப்போய் தேடாமல் எங்க போனான்?”

ஆகாஷின் முகம் பளிச்சிட மேகாவின் முகத்தை பார்த்து,”அப்படிங்கிற?”

“ஆமாங்கறேன்” என கண்ணடித்தாள்.

இப்போது அனைவரும் பிரதாப்பின் அறைக்கு படையெடுத்தனர். கதவை தட்ட நல்ல உறக்கத்தின் பிடியிலிருந்த பிரதாப், சாவகாசமாக எழுந்து வந்து கதவை திறந்தான். 

“பிரது, நிலாவை அவள் ரூம்ல காணோம். எங்க அவ?” ஆகாஷின் கேள்விக்கு

பிரதாப் அசட்டு சிரிப்புடன் உள்ளே கண்னை காண்பிக்க, அனைவரின் பார்வையும் அங்கு சென்றது. அங்கே உறங்கிக்கொண்டிருந்த நிலாவை பார்த்த பின்பே அவர்களுக்கு மூச்சு வந்தது. 

அனைவரும் பிரதாப்பை முறைக்க. அசட்டு சிரிப்புடன்,”இன்னைக்கி எங்களுக்கு ஸ்பெஷல் டே. நிலா என் முகத்துல முழிக்கனும்ன்னு ஒரு ஆசை. அதுதான் அவள் தூங்கும்போது தூக்கிட்டு வந்துட்டேன்.”

தாங்களும் இந்த மாதிரி ஆசைப்பட்டு, அது நிறைவேறாமல் கடந்து வந்த பெரியவர்கள் சிரிப்புடன் நகர்ந்தனர். கொலைவெறியான ஆகாஷ்,”டேய் உன் அக்கப்போர் தாங்கல. வழி விடு நிலாவை எழுப்பனும் மணி ஆகுது.”

“எனக்கு தெரியும் நான் எழுப்பி கூப்பிட்டு வரேன். நீ போயி ரெடியாகு.” என அனைவரையும் விரட்டி விட்டு, உறங்கும் நிலாவை கண்களால் படம் பிடித்துக் கொண்டே அவளை மென்மையாக எழுப்பினான்.

உறக்கம் கலைந்த நிலாவும்,”குட்மர்னிங் சூரியா.” புன்னகையுடன் எழுந்தாள். அவளுக்குதான் சூரியா எழுப்பி பழக்கம் இருப்பதால் பயமில்லை.

“குட்மார்னிங் நிலா. இந்த நாள் நமக்கு இனிமையான நாளாக அமையட்டும். மை பெட்டர் ஹாஃப்.” அவனின் வாழ்த்திற்கு பிறகே இன்றைய தினத்தை உணர்ந்த நிலா, அந்த அறையை சுற்றும் முற்றும் பார்க்க, அவன் அறையிலிருப்பது புரிந்தது. பதறிப்போய் எழுந்து செல்ல பார்க்க, அவள் கரம் பற்றி தடுத்து,”என் கூட தான இருக்க அப்புறம் என்ன பயம்?”

“உன் கூட இருக்க எனக்கு என்ன பயம். அங்க ரூமுக்கு போனா என்னை ஒட்டியே ஒரு வழி பண்ணிடுவாங்க.” என செல்ல பார்த்த அவளை தடுத்து, அவள் நெற்றியில் இதழ் பதித்து,”எப்பவும் உன்னை இதே சந்தோஷத்தோட வச்சுப்பேன்.” என உறுதி கொடுத்தான்.

தனது அறைக்குச் சென்ற பெண்ணை, ஓவியா, மேகா, ஆரா ஓட்டியே ஒருவழி செய்து அலங்கரித்தனர்.

******

மணப்பெண்கள் ஆகாஷ் தேர்வு செய்த, ஒரே மாதிரி டிசைனில், வேறு நிறத்தில் புடவை அணிந்திருந்தனர். 

அழகோவியமாக தங்களின் அருகே வந்த மணப்பெண்ணை, கண்களால் கொள்ளையிட்டு கொண்டனர் மணமகன்கள்.

பெரியோர்களின் மனம் நிறைந்த ஆசிர்வாதத்துடன், அனைவரின் வாழ்த்துகளோடு தங்கள் துணைகளின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து, தங்களின் சரிபாதி ஆக்கிக் கொண்டனர். 

இதை மனநிறைவோடு ஒரு புறமிருந்து வெற்றி ஓவியா கண்டுகளிக்க. ஒருபுறம் இருந்து சூரியதேவ் ஆரா கண்டு மகிழ்ந்தனர். 

குடும்ப புகைப்படம் எடுக்க அனைவரையும் அழைக்க, நடு நாயகமாக தாத்தா-பாட்டி அமர்ந்துக்கொள்ள. மூத்த தம்பதிகள் அவர்கள் அருகில் அமர்ந்தும், இளைய தம்பதிகள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டும், அவர்களுடன் சென்னையில் சந்தித்த கண்ணப்பன், பார்வதி இருவரும் இணைந்த குடும்ப உறுப்பினர்களை, அழகாக கேமரா கண்கள் உள்வாங்கிக்கொண்டது.

வெற்றி ஓவியாவின் வசந்தகாலம் தொடர

சூரியதேவ் ஆராதனா கனவுகளுடன் காத்திருக்க

ஆகாஷ மேகத்தோடு, சூரிய நிலவு ஊடலும் கூடலுமாக பயணத்தை தொடரும்.

நாமும் அவர்களுடன் மகிழ்ச்சியோடு விடை பெறுவோம்.

சுபம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!