தண்ணிலவு தேனிறைக்க… 15

TTIfii-1273f322

தண்ணிலவு தேனிறைக்க… 15

தண்ணிலவு தேனிறைக்க… 15

மறுநாள் வழக்கம்போல காலைநேர பரபரப்புகள் தொடங்கியிருக்க, தயானந்தன் குழந்தைகளை அதட்டிக் கொண்டிருந்தான். விடிந்தும் விடியாததுமாய் நந்துவும் விபுவும் தங்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி நிற்க, அவர்களோடு நைனிகாவும் சேர்ந்து கொள்ள, அதற்குத்தான் கண்டித்துக் கொண்டிருந்தான்.

சொல்பேச்சை கேட்க வைக்கத் தெரியாமல் வளர்த்திருப்பதாக மிதுனாவிற்கும் சிந்துவிற்கும் கண்டிப்பின் இடையில் பலமான கொட்டும் வைத்துவிட, பாஸ்கர் அந்த நேரத்தில் சமாதானப்படுத்த வந்து நின்றான்.

“குழந்தைகளும் என்ன செய்வாங்க மாமா? ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தா, ரெடி பண்ணிட்டு போகணும்னு தானா ஒரு பொறுப்பு வரும். இந்த ஆன்லைன் கிளாஸ்ல எல்லாமே தலைகீழாகி, பசங்களோட மெண்டாலிட்டியே டோட்டலா மாறிப்போகுது” அமைதிபடுத்தவென பாஸ்கர் பேச,

“அப்ப இவங்களை அதட்டகூடாதுன்னு சொல்றியா மாப்ளே? பெரியவங்க கேட்டாதானே… குழந்தைகளும் கேக்கும். இங்கே அதுக்கே வழியக் காணோம். நீ எல்லாருக்கும் சேர்த்து கொடிபிடிக்க வந்துட்ட…” அவனையும் சேர்த்தே தயா கடித்து வைக்க, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மரகதமும்,

“வீட்டு மாப்பிள்ளைகிட்ட இப்படியெல்லாம் பேசுறது சுத்தமா நல்லாயில்ல ஆனந்தா! அவர் சாதாரணமா நினைக்கிறதகூட வெளியே சொல்லக்கூடாதுன்னா எப்படி?” மகனை கண்டிக்க வந்துவிட்டார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் தயாவை கட்டுப்படுத்த அவரை விட்டால் வேறு யாரும் முன்வரமாட்டார்கள் என்பதை அறிந்தே பெண்கள் இருவரும் அமைதி காத்தனர். அம்மாவிற்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பேச்சில் என்றைக்கும் மருமகளாய் மூக்கை நுழைக்காமல் வேடிக்கை மட்டுமே பார்ப்பாள் மிதுனா.

நேற்றைய தினம் படிப்பு வேண்டாமென்று வீம்புடன் நின்ற தங்கையின் மீதிருந்த கோபத்திற்கு காய ஆரம்பித்த தயானந்தன், இப்போதுவரை எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறான்.

பல நடைமுறைகளை எடுத்துக் கூறியும் சினம் குறையாமல் நிற்கும் கணவனை அமைதிபடுத்தும் விதம் புரியாமல் மிதுனாவும் அப்படியே விட்டுவிட்டாள்.  

இதோ இப்போதும்கூட பெரியவர்கள், தன் பேச்சை கேட்பதில்லை என்று பூடகமாய் தங்கையை தாக்கிப் பேசிவிட, அனைவரின் முன்பும் கையை பிசைந்து கொண்டு நின்றாள் சிந்தாசினி.

இவளின் முடிவில் அனைவருக்கும் வருத்தம் இல்லாமல் இல்லை. அதை கோபமாய் தயா வெளிப்படுத்திவிட, சமயம் பார்த்து பாஸ்கர் அதற்கு தூபமிட்டான்.

“உங்க தங்கச்சிக்கு படிக்க முடியாதுன்னு பயம் வந்துடுச்சு மாமா! இவளை மனசுல வைச்சுட்டு குழந்தைங்க மேல கோபத்தை காட்டாதீங்க…” வேகமாய் பாஸ்கர் சொல்லியதும், விருட்டென்று அந்த இடத்தை காலிசெய்தான் தயா.

அங்கேயே நின்றால் இன்னும் அதிகப்படியான பேச்சுக்கள் வளர்ந்து விடுமோ என்று இவனுக்குதான் பயம் வந்திருந்தது.

“ஏழுகழுதை வயசாகியும் நல்லது புரிஞ்சுக்க தெரியலன்னா எந்த வகையில சேர்க்கிறது? கம்பெனிக்கு லேட்டாகுது, டிஃபன் எடுத்து வை மிது!” மனைவியிடம் விட்டெற்றியாக சொன்னவன் உணவை முடித்து கொண்டு கிளம்பி விட்டான்.

மிதுனாவிற்கும் கோபம், வருத்தம் என எல்லாமும் சேர்ந்து கொள்ள, அவளும் கடுப்புடன்தான் நடமாடிக் கொண்டிருந்தாள்.

“நீ இன்னும் எத்தனை பேர் மனச கஷ்டப்படுத்தப் போற சிந்து? புருஷன் மேலயும் நம்பிக்கையில்ல, உங்க அண்ணன் பார்த்துக்கறேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்ற… ஆனா, உன்மேலயாவது உனக்கு நம்பிக்கை வரணுமா இல்லையா?” கோபத்துடன் கேட்டே விட்டாள் மிதுனா.

தன்கணவனின் பேச்சை நிராகரித்து விட்டாளே என்று அவளுக்கும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. அத்துடன் வீட்டிலும் வெளியிலும் ஓயாத வேலையோடு சுற்றிக் கொண்டிருப்பவளுக்கு, அதற்குரிய அழுத்தத்தில் மன அமைதியும் குறையத் தொடங்கிவிட, ஆதங்கத்துடன் சிந்துவிடம் பேசி விட்டாள்.

“அது, அண்ணி…” மென்று முழுங்கிய சிந்துவும்,

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என் பொறுப்பை எடுத்துப்பீங்க? குழந்தைங்க வளர்ந்துட்டு வர்றாங்க… அவங்கள பார்க்கட்டுமேன்னுதான், நான் வேணாம்னு சொல்றேன்…” இறங்கிய குரலில் விளக்கம் கொடுத்தாள்.

“அதெல்லாம் நம்பாதக்கா! ஒரு வட்டத்துக்குள்ளயே இருந்துட்டு வெளியே வரத் தயங்குறா! அவ்வளவு பயம் இவளுக்கு… அதை சொல்லாம உங்க குடும்பத்த பாருங்க… நான் கிடைக்கிற வேலை பார்த்துட்டு இருக்குறேன்னு சீன் போட்டுட்டு இருக்கா!” மனைவியை விடாமல் வம்பிழுத்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

இவன் மனம் முழுவதும் நேற்றிலிருந்து வெறுமை மட்டுமே விரவிக் கிடக்கிறது. மனைவிக்குதான் நம்பிக்கையற்றவனாகிப் போய்விட்டேன் என்றால் மற்றவர்களுக்குமே அப்படியா?

கணவன் இருக்கும்போது உனக்கென்ன கவலையென்று சிந்துவிடம் சொல்லாமல், ஏன் தன்னை ஒரு பொருட்டாககூட எண்ணாமல் இவர்களாக அடுத்தடுத்து பேசிக்கொண்டே சென்றதில், இவனுள் இருந்த ஆற்றாமையும் கோபமாக வெளிப்பட்டது. 

“வேலைக்காகன்னு சொல்லித்தான் போனேன்… கோர்ஸ்ல சேரணும்னு சொல்லியிருந்தா போயிருக்க மாட்டேன்” அப்பொழுதும் தனது பிடிவாதத்தை தளரவிடாமல் சிந்தாசினி பேச,

“நாம சொல்றத கேட்டு படிப்பேன்னு, உன்னை நம்பி கூட்டிட்டு போனவர் முகத்துல கரியப் பூசியிருக்க சிந்து. வெளியாட்கள்கிட்ட பதில் சொல்ற நிலைமைக்கு உங்க அண்ணனை கொண்டுவந்து நிறுத்தியிருக்க நீ!

எப்படியும் புதுசா ஒண்ணு ஆரம்பிச்சுதானே ஆகணும். அது இந்த படிப்பா இருந்தா என்ன? என்தம்பி சொன்னான்னு ஒரே காரணத்தை வச்சுட்டு, நீ வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க….” மிதுனா வெகுவாக கடிந்து கொண்டதில் இவளுக்கு பெருத்த சங்கடம்தான்.

“உங்க அண்ணன் செலவு பண்ணினா, படிச்சு சம்பாத்தியம் பண்ணி திருப்பி கொடேன்! அப்ப யார் வேண்டாம்னு சொல்லப் போறா… எப்பவும் உன்னைபத்தி மட்டுமே நினைக்கிற பழக்கத்தை எப்போதான் விடப் போறியோ?” மனதிற்குள் இருந்த கோபத்தை எல்லாம் ஒரேடியாக வெளியே கொட்டிவிட்டாள் மிதுனா. 

“அண்ணன்கிட்ட அப்படியெல்லாம் கொடுக்க முடியாதுண்ணி… அப்படி செஞ்சா வாய்க்கு வந்தத திட்டி விட்டிடும்…” அப்பாவியாக சிந்து கூறிவிட, அதையே பாஸ்கர் பற்றிக் கொண்டான்.

“ரொம்ப நல்லவர், வல்லவர், ரோசக்காரர்தான் உங்க அண்ணன்… அதான் திருப்பி கொடுக்க நினைக்கிறவங்கள கழுவி ஊத்தியே கரையேத்துராரு! ஆனா, நான் அவ்வளவு பெரிய ஆளு கிடையாது. யார் எது திருப்பி குடுத்தாலும் மனமா வாங்கிப்பேன்! என்ன சிந்தா மேடம்? நான் செலவு பண்ணவா… அப்புறமா எனக்கு திருப்பி குடுக்கிறீங்களா?” பேச்சோடு பேச்சாக சீண்டலுடன், தன்மனதின் ஆசையை பாஸ்கர் வெளிபடுத்த, அடக்கப்பட்ட கோபத்துடன் பல்லைக் கடித்த சிந்தாசினி,

“நான் கட்டாயம் படிச்சே ஆகணும்னா, எங்க அண்ணன் தயவுல படிச்சு, திட்டு வாங்கியே திருப்பி குடுக்குறேன்… என்னை சீண்டிவிட்டு நீங்க அக்கறையா இருக்குற மாதிரி காமிச்சுக்க வேணாம்” கடுகடுத்துக் கொண்டே பெரிய கொட்டாக வைத்து கணவனை அடக்கினாள்.

எப்பாடுபட்டாவது மனைவியை தனக்குள் கொண்டுவந்து விடவேண்டும் என்று துடிப்பவனை தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் மனைவி.

“உப்பு குறைச்சு போட்டு சாப்பிடச் சொல்லுக்கா! ஷப்பா பேசியே சூடு வைக்கிறா!”

“கம்பெல் பண்ணாதே பாஸ்கி! அண்ணன்னு தூக்கி வைச்சு கொண்டாடுறது எல்லாம் வெறும் பேச்சுக்குதான். இப்போதானே தெரியுது! யார் எப்படின்னு…” மிதுனா வெகுவாக சலித்துக் கொள்ள, சிந்துவிற்கு தர்மசங்கடமாகிப் போனது.

“என்ன அண்ணி? நீங்களும் இவர்கூட சேர்ந்துட்டு இப்படி பேசுறீங்க?” 

“அப்ப உனக்கு படிக்க பயம்னு ஒத்துக்கோ! ஒருத்தருக்கு ரெண்டுபேர் உனக்காக செலவு பண்றதுக்கு இருந்தும் நீ ஏன் மாட்டேன்னு சொல்ற…” விட்டேனா பார் என்று அவளை துளைத்தெடுக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.

இவர்களின் பேச்சினைக் கேட்டுக் கொண்டிருந்த மரகதமும் ஓரளவிற்கு மேல் பொறுமையில்லாமல் இடை புகுந்துவிட, அந்த இடமே தர்க்கத்தில் களைகட்டியது.

“உன் அண்ணன எதிர்த்து பேசுற அளவுக்கு பெரிய மனுஷியாகிட்டியா நீ? அப்படி என்னடி உன்கிட்ட பணமில்லாம போச்சு? உன் சம்பளப்பணம் அப்படியேதானே இருக்கும்.

உன்னை வளர்த்த காரணத்துக்காகவே, என் அண்ணனும் அண்ணியும், உன் சம்மந்தபட்ட செலவு அத்தனையும் இதுவரைக்கும் செஞ்சு தங்கமா தாங்கியிருக்காங்க…

இப்ப பெருசா வந்த ஆஸ்பத்திரி செலவையும் மாப்பிள்ளை பொறுப்பெடுத்துக்கிட்டாரு… உன் கை காசை எப்போதான் வெளியே எடுக்கப் போற?” மரகதம் ஏகத்திற்கும் தாக்கிக் பேசியே மகளை கடிந்து கொண்டார்.

“எல்லாத்தையும் மகனுக்குன்னு இப்பவே பத்திரம் பண்ணி வைக்கிறா அத்தை… விபுக்காக நான் மாசமாசம் போடுற பணத்தைகூட, இப்பவரைக்கும் இவ தொட்டுப் பார்த்ததில்ல… இவ என்ன சம்பாதிக்கிறாளோ அதை மட்டும்தான் மகனுக்கு கொடுக்கணும்னு முடிவெடுத்துட்டா… அதான் தீயா வேலை செய்ய பிளான் பண்றா? அப்படிதானே சிந்தா!” பற்றவைக்காத குறையாக பாஸ்கரும் சேர்ந்து கொள்ள, மரகதம் அம்மாவிற்கு கோபம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

நடந்து முடிந்தவைகளை கெட்டகனவாக, ஓரமாக ஒதுக்கி விட்டு இனியாவது மகளின் வாழ்க்கை, நல்ல வழியில் திசைதிரும்பி விடாதா என என்னும் சராசரி தாயாகவே மரகதம் மாறிவிட்டிருந்தார்.

மன்னிப்பை வெளிப்படையாக கேட்டு நின்றால் மட்டுமே, செய்த தவறை உணர்ந்து, திருந்தியதாக அர்த்தமில்லையே… இதோ இன்றைக்கு வரையிலும் தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டும், மனைவியின் உற்றாரோடு உறவை வளர்த்துக் கொண்டும், இனியும் நீதான் வேண்டுமென்று மனைவியிடம் வந்து நிற்கிறானே அவனை மறுக்காமல், மனிதனாக பார்த்தாலே போதுமே… மெல்லமெல்ல அனைத்திற்கும் தீர்வு கிடைத்து விடுமே என்பதுதான் மரகதத்தின் எண்ணம்.

குடும்ப வாழ்வில் மறதி என்னும் அருபெரு மருந்தை அவ்வப்போது உட்கொண்டு வந்தால் மட்டுமே கோபம், வெறுப்பு, தண்டனைகளின் தாக்கத்தை, பின்விளைவுகளை தவிர்த்திட முடியும். 

மறதி என்னும் உரத்தில் மலரும் மன்னிப்பூக்களில் மணமும் அதிகம், மலர்ச்சியும் அதிகம். அதை உணர்ந்து கொண்டவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் பொற்காலமே!

இந்த நிதர்சனத்தை வாழ்ந்து உணரவேண்டும். சொன்னால் அதில் சுவையிருக்காது. அப்பேற்பட்ட வாழ்வை மகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே, மரகதத்தின் தற்போதைய ஆசையாக இருக்க, இத்தனை நாளும் அமைதிகாத்தவர் இன்றைக்கு ஆவேசப்பட்டு விட்டார்.

“மாப்பிள்ளை சொல்றது உண்மையா சிந்து? ஒரு பொண்ணுக்கு இவ்வளவு வெறுப்பும் வீம்பும் ஆகாதுடி! இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படியே முறுக்கிட்டு திரியப் போற? ஒரு அப்பாவா அவர் செய்ய வர்றத தடுக்க நீ யாரு? இனி சரிவராது… மாப்பிள்ளை கூட இப்பவே மூட்டைய கட்டு! சண்டையோ சச்சரவோ எதுனாலும் உங்களுக்குள்ள பேசி தீர்த்துட்டு ஒண்ணா வாழ முயற்சி பண்ணுங்க… கிளம்புற வழியப்பாரு! இனியும் உனக்கு பாவபுண்ணியம் பார்க்கிற மாதிரியில்ல…” தீர்மானமாகக் கூறி சிந்துவை கதிகலங்க வைத்தார்.

மாமியாரின் அதிரடி பேச்சினைக் கேட்ட பாஸ்கருக்கும் மிதுனாவிற்கும் பெரிய அதிர்ச்சிதான். யாரையும் வாயை திறக்க விடவில்லை மரகதம்.

“எனக்கு அவர் வேண்டாம். என்னால எதையும் மறக்க முடியாது…. நான் போக மாட்டேன்!” சிந்து எத்தனையோ முறை விதவிதமாக மறுப்பினை கூறிட முன்வந்தாலும், ‘என்காது கேட்காது’ என்கிற பாவனையில் வேலையை கவனிக்க தொடங்கி விட்டார்.

“இத்தனைநாள் அவரும் அமைதியா இருந்ததால, உன்னை யாரும் வற்புறுத்தல… ஆனா, இப்போதான் தன்குடும்பம் வேணும்னு வந்து நிக்கிறாரே… அப்பவும் வீம்பு பிடிச்சிட்டு நிக்கிறது மனுசத்தன்மையில்ல சிந்து… இன்னொரு வாய்ப்பு  குடுக்கமாட்டேன்னு சொல்றதைப் போல முட்டாள்தனம் வேற எதுவும் இல்ல. எப்பவும் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க!” மரகதம் அடித்துப்பேச, எதிர்த்து வினையாற்ற யாரும் முன்வரவில்லை. 

அதோடு மகன் மருமகளிடமும், தான் சொன்னதை செய்தே ஆகவேண்டுமென்று முடிவாக கூறிவிட, அன்றையதினம் மரகதத்தின் ஆட்டம் களைகட்டியது. தங்கையின் உடல்நிலையை எடுத்துக்கூறி, தயா மறுத்தாலும் மரகதம் அசரவில்லை.

“அவளை என்ன காட்டுக்கா அனுப்பி வைக்க சொல்றேன்? இந்த ஊரைவிட பெரியபெரிய ஆஸ்பத்திரி அங்கே இருக்கும். இவளை பார்த்துக்கிறத சாக்கா வைச்சு, நானும் கொஞ்சநாள் அங்கே போயி தங்கிட்டு வர்றேன்! உன் தங்கச்சிய கிளம்பி நிக்க சொல்லு!” ஒரே முடிவில் மரகதம் நின்றுவிட,

“ஏன்மா இவ்வளவு அவசரப்படுறே? கொஞ்சம் நிதானமா யோசிப்போம்” தயானந்தன் தணிந்து பேசினாலும் தன் முடிவில் நிலையாக நின்று விட்டார் மரகதம்.    

“யப்பா! இப்போ தெரியுது இவளோட வீம்பு எங்க இருந்து வந்ததுன்னு… எப்பவும் அமைதியா இருக்குற மரகதம் அம்மாவா, இந்த போடு போடுறாங்க! எப்படிக்கா சமாளிக்கிற?” மிதுனாவிடம் பாஸ்கர் கிசுகிசுக்க,

“அவங்களும் எவ்வளவு நாள்தான் பொறுமையா இருப்பாங்க பாஸ்கி! சாது மிரண்டால் காடு கொள்ளாது… ஆகமொத்தம் உனக்கு நிம்மதி போகப்போகுது. பொண்டாட்டியோட நித்தம் ஒரு சண்டை, திட்டு கொட்டுக்களுடன் புது வாழ்க்கை தொடங்குறதுக்கு வாழ்த்துக்கள்டா தம்பி!” மிதுனாவும் கேலியில் இறங்க,

“ஐயோ… இந்த சண்டைகோழிய என்கூட அனுப்பி வைக்கிறதா முடிவே பண்ணிட்டியாக்கா!”

“முடிவெடுத்தது நான் இல்ல… தி கிரேட் மரகதம் அத்தை… உன் மாமா முடிவை நான் மாத்திடுவேன்! ஆனா, மாமியார் முடிவை மாத்தணும்னு யோசனைகூட பண்ணமாட்டேன்!” மிதுனா சிரித்துக் கொண்டே சொல்ல, இவனுக்குதான் கலக்கமாகிப் போனது.

மாமியாரின் திடீர் முடிவில் மனம் மகிழ்ந்தாலும் மனைவியின் மனநிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தான் பாஸ்கர்.

மருத்துவர் கூறிய அறிவுரைகள் எல்லாம் மனதில் நிற்க, தற்போதைய சூழ்நிலையில் தன்னுடன் அவளை அழைத்து செல்வது தன்மேல் உள்ள வெறுப்பை அதிகப்படுத்துமே தவிர, குறைவதற்கு வாய்ப்பில்லை. இதை எப்படி சொல்லி புரிய வைப்பதென்று அவனுக்கும் தெரியவில்லை.

அத்தோடு அன்றைக்கு கோபத்தில் மனைவியின் கையால் கன்னம் பழுத்ததும் அந்த சமயத்தில் நினைவிற்குவர, அப்போதே பாஸ்கருக்கு மூச்சு மூட்டிப் போனது.

‘ம்ஹூம்… இவளுக்கு இருக்குற கோபத்துக்கு, இப்போ கூட்டிட்டு போனா, என்னை மாவுகட்டு போட வச்சுட்டுதான் வேற வேலை பார்ப்பா! அப்புறம் டிவோர்ஸ் கேட்டு ஸ்ட்ரைட்டா கோர்ட் வாசல்லதான் போயி நிக்கணும்! இன்னும் கொஞ்சநாள் அடக்கி வாசிச்சே பாலிஷ் பண்ணுவோம்’ மனைவியை உடன் அழைத்துச் செல்லாமல் இருப்பதற்கான காரணத்தை அலசி ஆராயத் தொடங்கினான்.      

“அக்கா, இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே! எப்படியாவது சிந்தா மெட்ரோவ, போஸ்ட்பாண்ட் பண்ண பாரேன்…” மெதுவாக மிதுனாவின் காதில் பாஸ்கர் மகுடி வாசிக்க,

“இவ்வளவு தானாடா உன்னோட வீரமெல்லாம்? உங்க ரெண்டுபேருக்கும் இடையில என்னை கோர்த்து விடாதே! உன் மாமாவை மலையிறக்குற பெரிய்ய்ய வேலை எனக்காக காத்துட்டு இருக்கு… நீயாச்சு உன் அருமை பொண்டாட்டியாச்சு…” தட்டிக் கழித்தபடியே அகன்று விட்டாள் மிதுனா.

‘சமயம் சந்தர்ப்பம் எல்லாம் கூட்டா சேர்ந்து சதி பண்ணுதே! சட்டம் போட்டவங்க கால்லயே போயி விழுந்துடுவோமா? குடும்பத்தை அழைச்சிட்டு போலாம்னு சந்தோசப்பட முடியுதா? இவளுக்காக, மாமியார காக்கா பிடிக்க வேண்டியதா இருக்கே’ மனதிற்குள் பல முறைப்பாடுகளை பாடியபடியே மரகதத்திடம் வந்து நின்றான் பாஸ்கர்.

வீட்டு மாப்பிள்ளை முதன்முறையாக தன்முன்னே பவ்யமாக வந்து நிற்கவும், ஒருநிமிடம் திகைத்த மரகதம்,

“என்ன வேணும் தம்பி?” பதைப்புடனே கேட்டார்.

மகளின் போக்கினை பிடிக்காமல் குறைகூறி, தட்டிக் கழிக்க வந்து விட்டானோ என்ற பதட்டத்திலேயே, பாஸ்கரின் பதிலைக் கூட கேட்காமல் பேச்சினை தொடர்ந்தார்.

“சிந்து அதிகமா பேசினத மனசுல வைச்சுக்காதீங்க! அங்கே போனதும், அவளோட வீடுங்கிற நினைப்பே, தானா பொறுப்பை கொடுத்துடும். அவளாவே சரியாகிடுவா…” மகளை விட்டுக் கொடுக்காமல் பேசினார் மரகதம்.

“அதுக்கெல்லாம் கவலைப்பட மாட்டேன் அத்தை! அவ பேசுறதெல்லாம் எனக்கான தண்டனைன்னு ஏத்துக்க பழகிட்டேன்! நானும் அவளுக்கு சரிக்குசரியா பேசத்தானே செய்றேன்! இப்ப உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன்.  

இத்தனை வருஷம் பராமுகமா இருந்தும், உங்க பொண்ணை இன்னைக்கும் என்னை நம்பி அனுப்பி வைக்கிறேன் சொன்னதுல ரொம்ப சந்தோசம் அத்தை! உங்களோட இந்த முடிவுக்காகவே இன்னும் அதிக அக்கறையோட அவளை பார்த்துக்கணும்னு தோணுது. உங்ககிட்ட இருந்து இப்படியொரு முடிவை நான் எதிர்பார்க்கல…” உண்மையான சிலிர்ப்புடன் கூறியவனின் வார்த்தைகளும் தழுதழுத்துக் கொண்டே வெளிவந்தது.

“இன்னும் எத்தனை நாள்தான் நடந்து முடிஞ்சத தொங்கிட்டு இருக்குறது தம்பி? ரெண்டுபேரும் வேற முடிவ எடுக்க நினைக்காதப்ப, மறுபடி சேர்ந்து வாழ முயற்சிக்கிறதுல தப்பேயில்ல…” தன்மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறிய மரகதம், சற்றே பெருமூச்சு விட்டு,

“இதை அவளுக்கு புரியவைக்க முடியல… யார் எடுத்து சொன்னாலும் கேக்க மாட்டேன்னு வீம்பு புடிச்சு நிக்கிறவள, அதட்டிதான் சொல்ல வேண்டியதா இருக்கு. இனிமேலாவது நீங்க நல்லபடியா ஊர்மெச்ச வாழ்ந்து காட்டுங்க” என்றவரின் குரலும் கரகரத்துவிட, முதியவரின் கண்ணீரும் சேர்ந்து ஆசி வழங்கியது.

“கண்டிப்பா சந்தோசமா இருப்போம் அத்தை… இனி எக்காரணத்தை கொண்டு என் குடும்பத்தை விட்டுக் கொடுக்குறதா இல்ல…”

“இப்போ எல்லாம் ரொம்ப வெடுக்கு வெடுக்குன்னு பேசிடுறா… அதையெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க தம்பி… அவளோட கோபம்தான் அப்பிடி பேச வைக்குதுன்னு உங்களுக்கு, நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சட்டுன்னு அவளை எதுவும் சொல்லிடாதீங்க! புஞ்சை மனசுக்காரி, உள்ளுக்குள்ளே போட்டு மருகிட்டு கெடப்பா… கொஞ்சம் சூதானமா பார்த்துக்கணும் தம்பி!” மகளின் மேலுள்ள கரிசனத்தில் மருமகனுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்தார் மரகதம்.

இதனைக் கேட்ட பாஸ்கர் தவித்து போனான். நான் வேண்டாமென்று நினைக்க இவர் அதையே பிடித்து வைத்து பேசுகிறாரே எனத் தயங்கியபடியே சற்றுநேரம் அமைதியாக இருந்தவன் ஒருவழியாக தன்மனதில் இருப்பதை சொல்லிவிட்டான்.

“ஒரு சின்ன மாற்றம் அத்தை! சொன்ன கோபப்படக்கூடாது” பாஸ்கர் ஆரம்பித்து தயங்கி நிற்க,

“என்ன சொல்லுங்க தம்பி? வீட்டு சமையலுக்கு புழங்குற மாதிரி எல்லாம் தயார் பண்ணிக் கொடுக்கணுமா? அங்கே போய் சேர்ந்ததும் சிந்துவ விட்டே என்னென்ன தேவைன்னு பார்த்து சொல்லச் சொல்லுங்க… முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் பார்சல் போட்டு அனுப்பி வைக்க சொல்றேன்! நீங்க நாளைக்கு கிளம்பும்போது அவளையும் தம்பியையும் மட்டும் கூட்டிட்டு போங்க…” என்று தானாகவே சொல்லிவிட,

“அதெல்லாம் வேண்டாம் அத்தை. அது வந்து… இப்போ நான் தங்கியிருக்குற குவாட்டர்ஸ்ல ஃபிரண்ட்ஸ் அடிக்கடி வந்து தங்குவாங்க… கம்பெனி குடுத்த வீடு அது. இன்னும் கொஞ்சநாள்ல எப்படியும் சென்னைக்கு மாற்றல் வாங்கிட்டு வந்துடுவேன். அதுவரைக்கும் சிந்தாசினியும் விபுவும் இங்கேயே இருக்கட்டும். அவளை மேற்கொண்டு படிக்க சொல்லுங்க… நான் அடிக்கடி வந்து பார்த்துட்டு போறேன்…” மெதுமெதுவாக தனது நிலையை தெளிவாக கூறினான் பாஸ்கர்.

“அப்போ அங்கே வேலை ஸ்திரம் இல்லையா? மாற்றல் வாங்கிட்டு வர எவ்வளவுநாள் ஆகும் தம்பி?”

“ஆறுமாசம் இல்லன்னா, ஒரு வருசத்துக்குள்ள இங்கே வந்திடுவேன். ஏற்கனவே சொல்லிதான் வைச்சுருக்கேன். இதுல மாற்றமில்ல… என்னை நம்புங்க!” மீண்டும் வலியுறுத்தி சொல்ல, மரகதத்திற்கும் மனம் சங்கடப்பட்டு விட்டது.

“உங்கமேல நம்பிக்கை இல்லாமயா? நாங்க எவ்வளவு பேச்சு பேசினாலும், இத்தனை வருசத்துக்கு பிறகும் என் பொண்ணோடதான் வாழ்வேன்னு வந்து நிக்கிறீங்களே… அந்த மனசுக்கே நான் எவ்வளவோ செய்யலாம். நீங்க சொல்ற மாதிரியே இங்கேயே இருக்கட்டும். அவள படிக்க சொல்றேன். நீங்க கவலபடாம கிளம்புற வழியப் பாருங்க…” என்றவர்,

“நாளைக்கு காலையில மொத காரியமா அவளை கூட்டிட்டு போயி அந்த படிப்புல சேர்த்து விட்டுட்டு வந்துடுங்க தம்பி.. நான் சத்தம் போட்டு அனுப்பி வைக்கிறேன்” என்று நிறைவாக கூறி முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!