தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு -1

பொட்டிருக்க பூவிருக்க

பூத்த மலர் மணமிருக்க…

பொட்டிருக்க பூவிருக்க

பூத்த மலர் மணமிருக்க…

கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள்

இரு கண் விழியில் கவிதை

கண்டு நின்றாள்: கண்டு நின்றாள்…

தண்ணிலவு தேனிறைக்க

தாழை மரம் நீர் தெளிக்க

கன்னிமகள் நடை பயின்று சென்றாள்

இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

நாணி நின்றாள்…

 

சென்னைப் பண்பலையில் பாடல் முடிந்த நேரம் இரவு மணி 10:30. காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து விட்டு, சந்தோஷக் களைப்போடு சென்னை பெருநகரமே அடங்கிப் போயிருந்தது.

வீட்டுக் கதவினை திறந்து வைத்துக் கொண்டு, வாசலில் தவம் செய்யாத குறையாக அமர்ந்திருந்தாள் மிதுனா. அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த பழைய பாடல்களின் தாக்கத்தில் கண்களும் தூக்கத்தை யாசிக்கத் தொடங்கி இருந்தன.

“பனியில கூட்டிட்டு போகவேணாம்னு சொன்னா இவரும் கேட்கிறதில்ல… என்ன ஆட்டம் போட்டாலும் ரவுண்ட்ஸ் போகாம இந்த குட்டியும் தூங்குறதில்ல! அப்பாவும் பொண்ணும் சேர்ந்தா, ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சு ஊர் சுத்த கிளம்பிடுறாங்க!” முணுமுணுத்தவாறே கணவன் தயானந்தனையும், செல்லப்பெண் நைநிகாவையும் ஒருசேர கடிந்து கொண்ட வேளையில் ‘டப டப டப’ புல்லட் சத்தத்துடன் அப்பாவும் பெண்ணும் வந்து சேர்ந்தனர்.

“நைல்குட்டி… இப்போ சமத்தா தூங்கனும் சரியா? இதுக்கு மேல முழிச்சா அம்மா கடிச்சு வைச்சிடுவா!” சீண்டலுடன் ஓரப் பார்வையில் மனைவியைப் பார்க்க, முறைப்புடன் குழந்தையை பிடுங்கிக் கொண்டாள் மிதுனா.

“உங்கப்பாவுக்கு என்னை கோர்த்துவிட்டு பேசலன்னா பொழுது முடியாது. அவரை ஒருநாள் கடிச்சு வைச்சாதான் அடங்குவாரு! வாடி நாம தூங்கப் போகலாம்“ உதட்டை சுளித்துக் கொண்டு உள்ளே செல்ல, அவளைத் தொடர்ந்தான் தயா.

“நந்து தூங்கிட்டானா மிது?” ஐந்து வயது மகன் யதுநந்தனை கேட்டவாறே தன்னை சுத்தம் செய்து கொள்ள உள்ளறைக்கு சென்றான் தயா.

“இப்போதான் அத்தை கூட தூங்கப் போனான். உங்க இளவரசிக்காக தான் நான் வெயிட்டிங்…” என்றவள் மகளுக்காக ஷிப்பரில் பாலை எடுத்துக் கொண்டுவர,

“ம்மா… மம்மம் வேணாம்” தலையாட்டி மறுக்க, பின்னால் வந்த தயா, குழந்தையை வாங்கிக் கொண்டான்.

“நீ சாப்பாடு எடுத்துவை!” என்றவன், மகளிடம் திரும்பி,

“பால் குடிக்கலன்னா பாப்பா டம்மில பூச்சி கடிச்சிடும்டா செல்லம்! என் ஏஞ்சல் அழுவாளே… பாப்பா அழுதா தயாப்பாக்கும் அழுவாச்சி வருமே!” முகம் சுருக்கி கெஞ்சிப் பேசிய தயானந்தன் முற்றிலும் புதியவன்.

சம்சார சாகரத்தில் இவன் பெற்ற வெகுமதியான தகப்பன் ஸ்தானத்திற்கு நியாயம் செய்து கொண்டிருப்பவன். மகன் யதுநந்தனை அன்பால் அரவணைத்துக் கொள்பவன், தனது செல்லப்பெண்ணிடம் மட்டும் கொஞ்சல்களையும் கெஞ்சல்களையும் அரங்கேற்றம் செய்வான்.

இரண்டு வயது நைநிகாவிடம் இவன் அடங்கிப் போவதை பார்க்கவே அத்தனை வேடிக்கையாக இருக்கும். கண்டிப்பும் கராறுமாய் பணியிடத்திலும், குடும்பத்தாரிடமும் இருப்பவன், மகள் பார்க்கும் கொஞ்சல் பார்வையிலேயே தனது கடினத் தன்மையை தொலைத்து விடுவான்.

தாய், தமக்கை, தங்கை, மனைவி என பல உறவுகளின் பரிணாமத்தில் பெண்ணை அறிந்து கொண்டவன், மகளாக பெண்ணைத் தாங்கிக் கொள்ளும் போது தன்னையே மறந்து விடுகிறான். மகளதிகாரத்தில் தந்தைகளின் நிலைப்பாடுகள் எப்பொழுதும் இப்படிதான்…

அப்பாவின் முகவாட்டத்தை காணச் சகிக்காத குட்டிப் பெண்ணும் சமத்தாய் பாலை குடித்து முடிக்கும் நேரத்தில், மடியில் வைத்துக் கொண்டே உணவை முடித்திருந்தான் தயா. அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிதுனாவும் தங்கள் அறைக்குள் வர,

“இன்னைக்கு சரியான ஆட்டம் இல்ல, இந்த குட்டி?” உறங்கும் மகளை பார்வையால் காட்டி விசாரித்தான் தயா. இரவில் மகளை நெஞ்சில் போட்டு உறங்க வைக்கும் உன்னத பொறுப்பு அவனுடையது.

“நந்து மட்டும் குறைச்சலா… ரெண்டும் சேர்ந்து அநியாயசேட்டை பண்ணுது!” குறையாகச் சொன்னாலும் பெற்றோர்களாய் இருவரின் மனதிலும் நிறைவு நிரம்பியிருந்தது.

மகளை சரியாக கட்டிலில் படுக்க வைத்து, பத்து நிமிடங்கள் அப்படி இப்படியென்று அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டு முடிக்க, தயாவின் காதல் கிரகம் விழித்துக் கொண்டது.

“தலவலிக்குதுன்னு சொன்னியே, தைலம் போட்டுவிடவா? மிது!” கேட்டவனின் பார்வை மனைவியை கள்ளத்தனமாக ஆராய,

“வேணாம் சாமி! உங்க கரிசனம் எங்கே போயி நிக்குமுன்னு எனக்கு தெரியும். நல்ல பிள்ளையா படுங்க தயா!” கணவனின் எண்ணத்திற்கு தடைவிதித்தாள் மிதுனா.

“ஈவினிங் மொட்டைமாடியில பிள்ளைங்களோட கிரிக்கெட் விளையாடும் போது கால் வலிக்குதுன்னு சொன்னியே? பிடிச்சு விடவா?” என்றவனின் கைகள் மனைவியின் தளர்வான இரவு உடையில் அத்துமீறலை தொடர,

“ம்ப்ச்… இன்னக்கு செம்ம டயர்டுல இருக்கேன் தயா… எப்பவும் போல வீக் எண்டுல உங்க சேவை, தேவை எல்லாம் பார்த்துக்கலாம்” விலகிக் கொண்டு திரும்பிப் படுத்த மனைவியை பின்னோடு விடாமல் அணைத்தான் கணவன்.

“ஆபீசுக்கும் லயனுக்கும் போகாத நாள்லதான் ரிலாக்சா இருக்க விரும்புறேன். அதுக்கும் நாளும் கிழமையும் பார்த்து தடா போடுவியாடி?” என்றவனின் இதழ்கள் அவளிடம் காதல் பாடம் நடத்த ஆரம்பிக்க, மனைவியின் மறுப்பும் காற்றோடு கரைய ஆரம்பித்தது.

“பாப்பா சட்டுன்னு முழிச்சுக்க போறா..” காரணம் கூறி அவனிலிருந்து விடுபட நினைத்தாலும் மிதுனாவால் முடியவில்லை.

“அவ இன்னைக்கு ஆடின ஆட்டத்துக்கு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கணும்டி!” சரசம் பாடியவனின் கைகள் மனைவியின் இடையில் மந்திரவித்தை காட்ட ஆரம்பித்தன.

நரம்புகள் சூடேறியதில் முழுமையாக மனைவிக்குள் இவன் புதைந்து போக, இருவருமே தன்னிலை மறக்கத் தொடங்கினர்.

மனைவியை நெருங்கும் சந்தர்ப்பங்கள் இப்பொழுதெல்லாம் அவனுக்கு வெகுவாகக் குறைந்து வருகின்றன. அன்றாடம் தங்களின் தொழில் நிமித்தங்களைச் சார்ந்த பொறுப்புகள் எப்பொழுதும் இருவரையும் அலைகழித்துக் கொண்டே இருக்கும்.

அத்துடன் குடும்பம், குழந்தை என கடமைகளும் நீண்டு போய் விடுகின்றன. அந்த சமயத்தில் எல்லாம் சம்சாரத்தை மறந்து விட்டு சந்நியாசி ஆகிவிடலாமா என்றெல்லாம் புலம்பித் தள்ளி விடுகிறான் தயானந்தன். 

அவ்வப்பொழுது இப்படி அடாவடி வேஷம் கட்டினால்  மட்டுமே மனைவியிடத்திலும் காரியத்தை சாதித்துக் கொள்ள முடிகிறது. கிட்டதட்ட தண்ணீரை பார்த்ததும் தாகத்துடன் பாய்ந்து செல்லும் காட்டெருமை போலத்தான் அவனின் நிலமை.

“எப்படியோ பேசி, உன் காரியத்தை சாதிச்சிக்கிறடா தடியா!” அயர்ச்சியோடு தன்னை சீர்படுத்திக் கொண்ட மிதுனா பொய்க் கோபத்துடன் முறைக்க, அந்த பார்வை தந்த போதையில், மனவியை தன்மேல் இழுத்துப் போட்டுக் கொண்டான்.

“இந்த தடியன் பிடிவாதத்துலதான் என் சக்கரகட்டியும் அவளை மறந்து இருந்தா… அது தெரியுமா மிது?” என அப்பாவியாகக் கேட்க,

தன்னைக் கண்டு கொண்டானே என்கிற அவஸ்தையில் “போடா படவா!” ஒரெடியாக தள்ளிவிட்டாள் ஆசைமனைவி.

அவளை மீண்டும் சீண்டி சகஜமாக்கும் கொஞ்சலில் இவன் இறங்கிவிட, வழக்கம்போல் நேரம் நடுநிசியை தாண்டிக் கொண்டிருந்தது.

“சீக்கிரம் தூங்குங்க தயா… மூணுநாள் லீவு போயே போச்சு! நாளைக்கு நிறைய வேலை இருக்கு. அக்கா வீட்டுக்கு போயி விசேஷத்துக்கு எல்லா ஏற்பாடும் நடக்குதான்னு ஒருதடவ விசாரிச்சிட்டு வந்துருவோமா?” எனக் கேட்க,

“ஈவ்னிங் போயிட்டு வருவோம் மிது! சிந்து எப்போ வர்றேன்னு சொல்லியிருக்கா? உன் தம்பிதுரை எப்போ வந்து இறங்குறான்?” அடுத்தடுத்த கேள்விகளை கேட்டான் தயா.

மிதுனாவின் அக்கா சாந்தினியின் பெண் அஞ்சனா, இருபது நாட்களுக்கு முன் புஷ்பவதியாகி இருக்க, அந்த வாரமே அருகில் இருப்பவர்களை வைத்து சடங்கு சுற்றி எளிமையாக வேலையை முடித்திருந்தனர்.

நாள் பார்த்து, மண்டபம் பிடித்து, சுற்றம் அழைத்து விமரிசையாக விழா நடத்தவென வரும் வாரத்தில் நாள் குறித்திருக்க, விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.

அக்கா பெண்ணின் விசேஷத்திற்கு பாஸ்கரும் வருவதாக உறுதி அளித்திருந்தான். முதன்முதலாக தாய்மாமனாக சபையில் நின்று சீர்வரிசை செய்து, தமக்கைகளை பெருமைபடுத்த வரவிருக்கிறான்.  

ஐந்து வருடங்களுக்கு பிறகு, இப்பொழுதுதான் இவன் சென்னைக்கு வருகிறான். தந்தையாக மகனின் பொறுப்புகளை கையிலெடுத்துக் கொள்கிறேன் என மிதுனாவின் வளைகாப்பு தினத்தில் சொல்லிச் சென்றவன், அதன் பிறகு இங்கே வருவதையும் தள்ளி வைத்து விட்டான்.

தமக்கைகள், பிள்ளைகளுடன் சகஜமாய் உரையாடுபவன், ஒரு கட்டத்திற்கு மேல், தன்னை அவர்களுடன் பிணைத்துக் கொள்ளமாட்டான். தினமும் மகன் விபாகரனுடன் அலைபேசியில் காணொளி அழைப்பில்(வீடியோகால்) பேசுபவனிடம், இன்னமும் சிந்து பேச முயற்சி செய்திருக்கவில்லை.

அவளின் அந்தப் பாராமுகமே பாஸ்கருக்கு ஒருவித வெறுமையை தந்திருக்க, மனைவிக்கு குறையாத வீம்பில் இவனும் பேச முயற்சிப்பதில்லை.

இதன் காரணமே சொந்தஊர் பயணத்தை அறவே தவிர்த்திருந்தான் பாஸ்கர். இப்பொழுதும் மிதுனாவின் பிடிவாத மிரட்டலில் மட்டுமே வருவதாக சம்மதித்திருக்கிறான்.

“பாஸ்கர் நாலு நாள்ல வந்துடுவேன்னு சொல்லி இருக்கான். என் வளைகாப்பு முடிச்சிட்டு போனவன், இப்போதான் வர்றான்.

அஞ்சனா சடங்குக்கு வந்ததால, விசேஷத்துக்கு வரலன்னு காரணம் சொல்லிட்டு இருக்கா உங்க தங்கச்சி. நாளைக்கு என்னன்னு கேட்டு அவளை வரச் சொல்லுங்க தயா! விசேஷம் அன்னைக்கு சபையில தாய்மாமன் சீர்வரிசை செய்யும் போது புருஷன் பக்கத்துல பொண்டாட்டி இருக்க வேணாமா?” பெரும் குறையாக நீட்டி முழக்கினாள் மிதுனா.

“ஏன், உன் தம்பி, பொண்டாட்டிய கூப்பிட மாட்டானாமா? கௌரவம், மரியாதை எல்லாம் தப்பாம அவனுக்கு வேணும். ஆனா துரை இறங்கி வந்து பொண்டாட்டி கூட பேச மாட்டாரோ? இந்த வெட்டி ராஜாவுக்கு நான் மந்திரியா இருக்கணுமா?” வார்த்தைகள் கொஞ்சம் தடம் மாறியே கணவனிடமிருந்து காட்டமாக வந்து விழ, தலையிலடித்துக் கொண்டாள் மிதுனா.

“போதுமே… என் தம்பிய பேசணும்னா மட்டும் ரோசமா வந்துடுவீங்களே?” கோபத்துடன் கடிக்க,

“அவன் பொண்டாட்டி பக்கத்துல வந்து நிக்கணும்னா அவன்தான் எடுத்துச் சொல்லி கூப்பிடணும் மிது! நான் உன்னை, நேரடியா கூப்பிடமா, யார் மூலமாவது கூப்பிட்டா, நீ ஒத்துப்பியா?” சலிப்புடன் இவன் கேட்க, பதிலுக்கு அவளும் கடுகடுத்தாள்.

“நம்மளை அவங்க கூட சேர்த்து வைச்சு பேசுற வேலைய விடுங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்களா? எப்போதான் நீங்க மாறப் போறீங்களோ?

அப்படி இறங்கி வந்து பாஸ்கர் பேசினதும் உங்க தங்கச்சி பதில் சொல்லிட்டுதான் வேற வேலை பார்க்கிறாளா? இத்தனை வருசமாச்சு… இன்னும் ஒரு வார்த்தை பேசணும்னு நினைக்கிறாளா? அப்படியென்ன வீம்பு அவளுக்கு?” கடித்து வைக்காத குறையாக மிதுனாவும் வார்த்தைகளில் எகிறினாள்.

திருமணம் முடிந்த நாள் முதற்கொண்டு இவர்கள் முட்டிக் கொள்ள ஆரம்பித்த உடன் பிறப்புகளின் பிரச்சனை, இன்னும் முடிவு எட்டப்படாமல் கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்து, தர்க்கமாய் தொடர்வதில், இருவருக்கும் மனதளவில் ஆயாசம்தான். ஆனால் என்ன செய்ய முடியும்? உடன் பிறந்தவர்களை வெறுத்து ஒதுக்கவும் முடியாமல் இருவரும் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.  

“இவங்கள நினைச்சு, எனக்கு விசேஷம் நல்லபடியா நடந்து முடியனும்னு கூட நினைக்க முடியல தயா… அஞ்சு வருசம் கழிச்சு, இந்த விசேசத்துல தான் இவங்க ரெண்டு பேரும் பார்த்துக்கப் போறாங்க. இப்ப என்னென்ன பேசி இதுங்க ரெண்டும் விலகி நிக்கப் போறாங்களோன்னு தான் கவலையா இருக்கு.

மாத்தி மாத்திப் பேசியே சுத்தி இருக்கிறவங்கள ஊமையா நிக்க வைச்சுடுவாங்க… அந்த அக்கப்போரை நினைச்சா இப்பவே கண்ணைக்கட்டுது!” புலம்பல் பாதி, சலிப்பு மீதியாய் தனது ஆதங்கத்தை கொட்டி, கணவனின் தோள் சாய்ந்தாள் மிதுனா.

“நாளைக்கு வேலையிருக்குனு சொன்னியே மிது! பேசாம படு… நாளைக்கு நான் சிந்துகிட்ட பேசுறேன்!” மனைவியை சமாதானப்படுத்தி அவனும் கண்ணயர்ந்தான்.

அவ்வளவுதான்! முடிந்தது இவர்களின் சண்டை… இருவரிடையே நடக்கும் விவாதங்களை அந்த நேரமே தங்களுக்குள் தீர்த்துக் கொண்டு தெளிந்த மனதோடுதான் பயணித்து வருகின்றனர்.

தர்க்கரீதியாக முட்டி மோதிக் கொண்டாலும், இருவருக்குமான ஆறுதலையும் தேறுதலையும் அவர்களுக்குள்ளாகவே தேடிக் கொள்பவர்கள் இவர்கள்.

மறுநாள் காலை மகளை மடியில் வைத்துக் கொண்டே தங்கைக்கு அழைக்க, அலைபேசியை எடுத்தவன் விபாகரன். ஏழு வயது சிறுவன். சிந்து – பாஸ்கரின் தவப்புதல்வன். கொரானாவின் மகத்துவத்தால் இணையவழி கல்வியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதன் இவன்.

இவன் மனதைப் பொறுத்த வரையில் இவன் பெரிய மனிதன்தான். தனது தாய் தந்தைக்கு இடையே இருக்கும் ஒற்றைப் பாலம் இவன் மட்டுமே!

இவனைக் கொண்டே, இவன் பெற்றோர்களின் நாட்கள் ஓடிக் கொண்டிருக்க, இருவரையும் அழகாக தனது சொல்லால் செயலால் ஆட்டி வைப்பான் விபாகரன். காணொளி அழைப்பில் மலர்ந்த குட்டிபெண்ணின் முகத்தை கண்டதும்,

“ஹாய் நைல்நதி! பிரஷ் பண்ணியா? பிஸ்கி சாப்பிட்டியா?” பெரிய மனிதனாய், மாமா பெண்ணிடம் கேள்விகளை அதிகாரமாக கேட்க, அந்த சின்னச் சிட்டோ ‘ஆம், இல்லை’ என இருபக்கமும் தலையாட்டி வைத்தாள்.

“நீ சாப்பித்தியா விபூ… ஹூமக்(ஹோம்வொர்க்) பண்யா?” பதிலுக்கு அவளும் கேட்க, மேலும் பல கேள்வி பதில்கள் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்தன.

“என்னடா பெரிய மனுசா… இந்த நேரத்துக்கு உனக்கு கிளாஸ் இல்லையா? டிபன் முடிச்சியா? என்ன சாப்பிட்ட?” தயா விசாரிக்க,

“ஆஸ் யூஷ்வல் தோசை தான் மாமா! ஒண்ணும் இண்ட்ரெஸ்டா இல்ல…” சுரத்தில்லாமல் சொன்னவனின் குரலில் அத்தனை சலிப்பு.

“ஏன் பாஸ்? உங்களுக்கு வேணுங்கிறத சொன்னாத்தானே செஞ்சு குடுப்பாங்க?” அக்கறையுடன் மாமன் கேட்க,

“அலமு பாட்டி செய்றது அம்மாக்கு பிடிக்கல… அம்மாக்கு பிடிச்சா எனக்கு கசக்குது. நான் கேக்கிறது யாருக்கும் பிடிக்கல… நான் என்ன பண்ண? பெரிய மனசு பண்ணி எதையோ சாப்பிட்டு வைக்கிறேன்!” சிறியவன் அலுத்து சலித்து சொன்னதில், பெரிதாய் வாய்விட்டு சிரித்தான் தயானந்தன்.

“சத்தமா சிரிக்காதீங்க மாமா! அப்புறம் எனக்கு மூணு வேலையும் களி கிண்டி குடுப்பாங்க” அதிகப்படியான புகார் மனுவை வாசிக்கும் நேரத்தில் பின்னோடு வந்து நின்றாள் சிந்து.

“என்னடா சொல்ற? யார் பேசுறா?” கேட்டபடியே அங்கிருந்த பெரிய திரை கொண்ட டாப்(tap)பை பார்க்க, குட்டிப்பெண் “அத்த! நான் இங்கே இருக்கேன்!” கையுயர்த்தி அழகாகச் சிரித்தாள்.

“தங்கக்குட்டி உங்க டுயூட்டி பார்க்க நேரமே எழுந்துட்டீங்களா? பால் சாப்பிட்டீங்களா செல்லம்!” கொஞ்சிக் கேட்ட சிந்துவின் குரலில் அன்பும் பாசமும் இழைந்தே இருந்தது.

இருபத்தியேழு வயதையும் குறைத்துக் காண்பிக்கும் ஒல்லியான உடல்வாகு. வயதிற்கு மீறிய நேர்த்தியும் பக்குவமும் முகத்தில் அப்பட்டமாய் நிரம்பியிருக்க, கண்கள் எந்தநேரமும், எதையாவது ஒன்றை ஆராயும் பார்வையை தத்தெடுத்துக் கொண்டிருந்தது.

வாழ்வில் இன்னும் பல வெற்றிப்படிகளை சலனமின்றி கடக்க வேண்டும் என்ற வைராக்கியம் மூச்சுக் காற்றாய் மனனம் செய்து கொண்டிருக்க, பிள்ளைகள் தவிர்த்து மற்றவரிடத்தில் அளந்து பேசக் கற்றுக் கொண்டிருந்தாள் சிந்து.

தங்கையின் காலத்திற்கேற்ற மாற்றங்களை கண்டுகொண்டு வருபவனும் அனைத்தும் நன்மைக்கே என்று அவள் போக்கில் விட்டுவிட்டான். காலை அவசர நேரத்தில், காரணமின்றி அண்ணன் அழைக்க மாட்டான் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த சிந்து,

“சொல்லுண்ணே எதுக்கு கூப்பிட்ட?” என நேரடியாக கேட்க, அவனும் விசயத்திற்கு வந்து விட்டான்.

“விசேஷத்துக்கு எப்போ வரப்போற சிந்து? அத்தை மாமா எல்லாரையும் கையோட கூட்டிட்டு வந்துடு!” எடுத்த எடுப்பிலேயே கட்டளையாக கூற,

“இல்லண்ணே… அவங்க மட்டும்தான் வருவாங்க! இப்போதான் கொரானா முடிஞ்சு கடை தொறக்க ஆரம்பிச்சுருக்கோம். இந்த நேரத்துல திரும்பவும் கடைக்கு லீவு விட முடியாது. அதனால நான் வரல…” காரண காரியத்தோடு தான் வரவில்லை என்பதை விளக்கினாள் சிந்து.

“ரெண்டுநாள்ல வியாபாரம் அவ்வளவுக்கு நஷ்டமாகப் போறதில்ல… தமிழ் மாப்பிள்ளைகிட்ட நான் பேசுறேன்! நீ வரப்பாரு!”

“அது… மார்க்கெட்ல லோடு ஏத்துற வேலையும் இப்போதான் சகஜமாயிருக்கு. மாமாக்கும் வேலை ஜாஸ்திதான். அதான் அவருக்கு இன்னும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு நானா சொல்றேன்…” என போட்டுடைக்க, நிமிசத்தில் தங்கையிடம் கோபம் கொண்டான் தயா.

“இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப்போற சிந்து? உன் பொறுப்ப தட்டிக் கழிக்கிறதுல உனக்கென்ன என்ன லாபம்? நீ வீம்பா இருக்கயிருக்க, கெட்டபேர் உனக்கு மட்டுமில்ல, உன்னை பெத்து, வளர்த்த ரெண்டு குடும்பத்துக்கும் தான்!” என்று தீர்க்கமாக கூறியவனின் பேச்சில் வாயடைத்துப் நின்றாள் சிந்து.

“அதுவந்து… அப்படியில்லண்ணே!” இவள் மேற்கொண்டு ஏதோதோ பேச ஆரம்பிக்க,

“பிடிக்காத ஒருத்தனுக்காக, உன்னை சுத்தி இருக்குற உறவுகளை தள்ளி வைக்காதே சிந்து! உன் கடமையை வந்து செஞ்சுட்டு போ! உன்னை இங்கேயே இருன்னு யாரும் வற்புறுத்த மாட்டாங்க…

உன்னை உடனே அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடது. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம வந்து சேரப்பாரு!” அவளுக்கான பொறுப்புகளை உணர்த்தி, வந்தே ஆகவேண்டுமென்று உறுதியாகக் கூறி அழைப்பை துண்டித்தான் தயானந்தன்.

அண்ணனுக்கென்ன சொல்லிவிட்டான்! கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று கீதாபோதேசம்தான் அவளுக்கு…

பொறுப்புகளை தட்டிக் கழிக்கத் தயாரான இதயம், அண்ணனின் கட்டளைக்கு அடிபணிந்தே ஆகவேண்டுமென ஆணையிட்டு விட, சிந்துவின் மனம் ஓய்ந்து போனது.

சத்தமில்லாத சலனத்தில் மீண்டும் சறுக்கப் போகிறேனா? நிமிர்ந்து நிற்பேனா? சந்தேகத்தில் ஆழ்ந்தாள் சிந்து என்கிற சிந்தாசினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!