தாழையாம் பூமுடித்து🌺15

தாழையாம் பூமுடித்து🌺15

15

சீர் வரிசை…

பெண்ணே! நீ பிறந்த வீட்டைவிட்டுப் பிரிந்து புகுந்த வீடு போனாலும், உனக்கும் பிறந்த வீட்டிற்குமான தொடர்பு என்றென்றும் விட்டுப் போகாது, உன்னுடைய நல்லதுக்கும் கெட்டதுக்கும் தோள் கொடுக்க, பிறந்த வீட்டு சொந்தங்களாகிய நாங்கள் இருக்கிறோம், எதற்கும் மருகாதே… என அன்பின் அடையாளமாக உருவாக்கப்பட்டது தான் இந்த சீர்வரிசைகளும் சம்பிரதாயங்களும், சாங்கியங்களும். வழிவழியாக சங்கிலித் தொடர் போல் காலமாற்றத்திற்கு தகுந்தவாறு பாரம்பரியமாகத் தொட்டுத் தொடர்பவை. இனத்திற்கு இனம், ஊருக்கு ஊர் செய்யும் முறைகள் வேண்டுமானால் மாறுபடுமே ஒழிய, சீர்வரிசைள் மாறாது. இந்த கொடுக்கல் வாங்கல் முறைகளே உறவுகளைப் பலப்படுத்துபவை. 

ஸ்ரீ ரெங்கநாதரிடம் இருந்து, சமயபுரத்தாளுக்கு… பட்டுப்புடவை, வளையல்கள், தாம்பூலம் உள்ளிட்டவையும், காளஹஸ்தி சிவனுக்கும், அம்பாளுக்கும்… வெங்கடாஜலபதியிடம் இருந்து, லட்டு, பட்டுப்புடவை, மாலை முதலியனவும், பழனிமலை முருகனுக்கு… பழங்குடி மக்களால் தேனும் தினை மாவும், மா, பலா, வாழை எனவும் சீர்வரிசை தெய்வங்களுக்கே வருடாவருடம் வழங்கப்படுகிறது. சீராக கொடுக்கும் பொருட்கள் நமது கலாச்சார அடையாளத்தின் மிச்சங்களாக இருக்கின்றன. 

அன்பின் வெளிப்பாடாக இருந்த சீர்வரிசைகள், எப்பொழுது அந்தஸ்த்தின் அடையாளமாக பார்க்கப்பட்டதோ, அங்கே துவங்குகிறது பிரச்சினைகளும், சண்டை சச்சரவுகளும். வரதட்சணை என்ற பெயரில், கட்டாயப்படுத்தும் பொழுது தான் குடும்பங்களில் பெண்கள் பெரும் சுமையாகிப் போகின்றனர். பாசத்தின் வெளிப்பாடாக இருந்தவை, நாகரீக காலத்தில் பகட்டின் அடையாளங்களாக மாற்றம் பெற்று உள்ளது.

“எங்களால இவ்வளவு தான் முடியும்னு முன்னமே சொல்லியிருந்தா, நானாவது காசு கொடுத்து இருப்பேன்ல. இப்ப பாரு ஊர் முன்னாடியும், பொண்ணெடுத்தவங்க முன்னாடியும் எவ்வளவு அசிங்கமாப் போச்சு. சித்தப்பா பொண்ணுக எப்படி அத்தைக சீர்னு கொண்டு வந்து சபை நெறச்சுருக்காங்க. ஆனா… சபை நிறக்க செய்ய வேண்டிய தாய்மாமன் சீரு, பேருக்கு ஒரு ஓரத்துல இருக்கு.” என‌ அறையினுள் மனைவியிடம் காய்ந்து கொண்டு இருந்தான் சக்திவேல். சப்தம் கேட்டு ரெங்கநாயகியும் அவரது கணவரும் வேகமாக உள்ளே வந்தனர்.

காலையில் தான் அவனது பிள்ளைகளுக்கு காதுகுத்து முடிந்திருந்தது.‌ சீரும் சிறப்புமாகத்தான் நடந்தேறியது. என்ன ஒன்று… தட்டு வரிசை, துணிமணி, நகை நட்டு, இரட்டைக் கிடா என அத்தைகள் சீர், தாய்மாமன்கள் சீரைவிட சபைநிறைந்து விட, அது சுப்பையாவிற்கு சற்று தலைகுனிவாகப் போயிற்று. 

பெரியவர் பொண்ணெடுத்த சம்பந்தம் இப்புட்டு தானா என அங்கேயே பேச்சு அடிப்பட்டது. 

எந்த ஒரு விசேஷம் என்றாலும், பெரிதாக சீர் செய்தும் வாங்கியும் பழக்கப்பட்டவர்கள். சபையில் தாய்மாமன் சீர்வரிசைகளை விட, அத்தைகள் சிவகாமியும், கீதாவும் அடுக்கிய சீர்வரிசைகள் சபையை நிறைத்து இருக்க, மாமன்மார்களின் சீர் ஒரு ஓரமாக போய்விட்டது. இது தம்பி பெண் கொடுத்து சம்பந்திகளை விட, தான் பெண் எடுத்து இடம் குறைந்துவிட்டதாகப் பட்டது சுப்பையாவிற்கு.

“ஏன்டா! அவங்களுக்கு தான் வழமை தெரியலைனா, ஊர்க்கட்டு என்னான்னு நம்ம கிட்ட கேக்கக் கூடாதா? செய்ய காசு இல்லைனா நாமலாவது கொடுத்து இருக்கலாம்ல. இப்படியா ஊர் முன்னாடி, ஆட்டுப் புழுக்கையாட்டம் சீர் செய்யறது.” என பெரிய‌ மகனைக் கடிய, அது… அங்கிருந்த மாமன்கள் காதிலும் விழுந்தது. அந்தக் கோபம் தான் விசேஷம் முடியவும் கயல்விழி மீது திரும்பியது.      

“எங்களுக்கு உங்க ஊர் வழமை என்ன தெரியும் தம்பி. எங்க ஊர் பழக்கத்துக்கு செஞ்சோம்.” என கோபமாக இருந்த மருமகனிடம் நயந்து கொண்டிருந்தார் ரெங்கநாயகி. 

“ஏன்… உங்க பொண்ணுக்கு தெரியாதா? சிவகாமி பிள்ளைகளுக்கு காது குத்தினப்ப எங்க சித்தப்பா சீர் செஞ்சதப் பாத்தீங்கள்ல. கீதா பிள்ளைக்கி பிறந்த முடி எடுக்கவே அவ்வளவு சீர் செஞ்சாரு எங்க சித்தப்பா. நீங்களும் தானே விசேஷத்துக்கு வந்து இருந்தீங்க. தாய்மாமன் முறைக்கி நானும், இவளும் தானே முன்னுக்கு நின்னோம்? அப்ப பாக்கலியா?” என மாமியாரிடமும் கோபமாகக் கேட்க,

“அதுக்கு எதுக்கு அம்மா மேல கோபத்தைக் காமிக்கிறீங்க. இப்ப… உங்க தங்கச்சிக மட்டும் அவங்களா செஞ்சு இருப்பாங்க. உங்க சித்தப்பாகிட்ட தான் வாங்கி செஞ்சுருப்பாங்க.” என கயல்விழி அம்மாவிற்காக பரிந்து கொண்டு வர,

“அவங்க ஒன்னும், வக்கத்தவங்க இல்ல. எங்க சித்தப்பா கிட்ட வாங்கி செய்யறதுக்கு.” என காட்டமாக கேட்க, அது கயல்விழிக்கு பெருத்த அவமானமாகப் போயிற்று. தன் பிறந்த வீட்டை வக்கத்தவீடு என்று சொன்னால், யாரு தான் பொறுத்துக் கொள்வார்கள்.

 ‘எல்லாம் இவளுகளால வந்தது. என்னமோ ஒட்டிட்டுப் பெறந்தவளுகளாட்டம், அப்படியே அண்ணே தம்பினு உருகுறாளுக. இதுல இவளுக பெருமைய காமிக்க சீர் செய்யலைனு யார் அழுதது.’ என நாத்தனார்களையும் உள்ளுக்குள் தாளித்துக் கொண்டு இருந்தாள் கயல்விழி. 

“அப்ப… எங்க அண்ணனுங்க  ஒன்னும் இல்லாதவங்களா? எங்க வசதி தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணுனீங்க. மூனு பிள்ளைகளைப் பெத்த பின்னாடி தான் எங்க வீடு வக்கத்த வீடுன்னு தெரியுதா? இப்ப வந்து அது செய்யல,‌ இது செய்யலைனா என்ன அர்த்தம்.” என கயல்விழி கண்ணைக் கசக்க, அதைப்பார்த்த, சக்திவேல்,

“அது இல்ல கயல்… நீ கொண்டு வந்து தான் இங்க நிறையனும்னு இல்ல. ஆனா… இப்ப பாரு ஊரு முன்னாடி அசிங்கமாப் போச்சுல்ல. ரெண்டு மச்சினங்க இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு. வெளிய அப்பா பார்த்த பார்வையே சரியில்ல. சும்மா பேருக்கு ரெண்டு தோடு. துணிமணி, நாலஞ்சு வரிசத்தட்டுனு அவ்வளவு தான். ஆனா… சித்தப்பா பொண்ணுக… குழந்தைகளுக்கு தோடு, செயினு, நமக்கெல்லாம் துணிமணி,‌ இருபத்தியொரு தட்டு வரிசைனு எத்தனைய செஞ்சு இருக்காங்க பாரு. சொந்தக்காரங்க முன்னாடி அசிங்கமாப் போச்சு.” என சற்று தணிந்து பேச, 

நம்ம மககிட்ட மருமகனுக்கு பிரியம் தான், அப்பாவுக்காக தான் கோபத்தை காட்டி இருக்கிறான் என்பது நன்கு புரிந்தது ரெங்கநாயகிக்கு.

சிலர் பூ வைக்க வேண்டிய இடத்தில் பொன் வைக்கலாம். சிலரால் பொன் வைக்க வேண்டிய இடத்திலே பூ தான் வைக்க முடியும். 

ரெங்கநாயகியும் அவரது பிள்ளைகளும் அதையே தான் செய்தனர், சென்ற வருடம் நடந்த  தனது பேரன் பேத்திகளின் காதுகுத்து விழாவிற்கு. அவருக்கு ஊரின் வழமை தெரியாமல் எல்லாம் இல்லை. இது போதும் என நினைத்தார். ஆனால் பெண்கள், பெரியப்பா பேரன் பேத்திகளுக்கு இவ்வளவு சீர் செய்வார்கள் என்றும், ஊரார் முன் மட்டம் தட்டப் படுவோம் என்றும் எதிர்பாக்கவில்லை.

சுப்பையாவின் பார்வையால் விசேஷ வீட்டிலேயே மனைவி மீது தனது கோபத்தை சாடைமாடையாகக் காமித்தவன், தனிமையில் கயல்விழியை காய்ச்சி எடுக்க,‌ மனைவியின் கண்ணீரைப் பார்த்துவிட்டு சற்று கோபம் தணிய, வெளியேறிவிட்டான்.

“இதுக்கு தான் பெரிய இடத்து சம்பந்தம் வேண்டாம்னு தலப்பாடா அடுச்சுக்கிட்டேன். அவங்களுக்கு நம்மால ஈடுகொடுக்க முடியாது. விரலுக்கு தக்கனதான் வீங்கனும்.” என அவளது தந்தை  வேதாந்தம் பேச, ‌ஏற்கனவே மருமகன் மீது காட்டமுடியாத கோபத்தை கணவன்‌ மீது திருப்பினார் ரெங்கநாயகி.

“இத மட்டும் நல்லா வக்கனையாப் பேசுங்க. என்னைய மாதிரியே, என் புள்ளைகளையும் மாச சம்பளத்துல, அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கு பாக்க சொல்றீங்களா? தானா‌ வலிய வந்த சம்பந்தம். தானா வர்ற சீதேவிய காலால எட்டி உதைக்க கூடாது. நங்கநாத்தனானு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம்னு நெனச்சுதான் பொண்ணு கொடுத்தேன். இங்க என்னடான்னா… ஒன்னுக்கு மூனுபேரா இருந்துகிட்டு, வருஷத்துக்கு நாலு விசேஷம் வச்சு சீர் வாங்குறாளுக.” என பொறிந்து தள்ளினார். 

இது அவரது தன்மானத்தை தூண்டிவிட, “இப்ப மாசச் சம்பளத்துல உங்களுக்கு எல்லாம் என்ன கொறைய‌ வச்சே. மூனு பிள்ளைகள படிக்க வச்சுருக்கே. பொண்ண சீர் செஞ்சு கட்டிக் கொடுத்துருக்கே.”

“நல்லாஆஆ செஞ்சீஈஈஈங்களே சீஈஈரு. இப்ப செஞ்ச மாதிரி தான் அப்பவும் செஞ்சீங்க.” என இவர்கள் இடம் பொருள் இல்லாமல் வழக்கம் போல் சண்டையை ஆரம்பிக்க, 

“அம்மாஆஆ!” என கயல்விழி அதட்டினாள்.

“உங்களுக்கு எங்க, எப்படிப் பேசனும்னே தெரியாதா? நம்ம வீட்ல மாதிரியே எங்க போனாலும் உங்க ரெண்டு பேரோட ரோதனை தாங்கல. சின்ன மாமியார் வேற நீங்க பேசனதெல்லாம் கேட்டுட்டுப் போறாங்க. இருக்குற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்காம தயவுசெஞ்சு வெளிய போங்க.” என கயல்விழியும் தனது ஆதங்கத்தை, கோபமாக கத்தி வெளிப்படுத்தினாள். 

அவளுக்கு இத்தனை நாட்களாக இல்லாமல், கணவன் திட்டியது ஒருபுறம்,‌ அதை கண்டு கொள்ளாமல் இவர்கள் சண்டை ஒருபுறம், இது எல்லாம் வந்த இடத்தில் சின்ன மாமனார் வீட்டார் முன் நடப்பது என அவமானமாய் இருக்க, அதன் கோபம் மொத்தமும் நாத்தனார்கள் மீது வெறுப்பாக மாறியது.

வீட்டிற்குள் வந்த அன்னபூரணி விவாதம் நடப்பதை பார்த்து விட்டு வேகமாகத் திரும்பி விட்டார்.

தன் குடும்பத்தில் பொறுப்பில்லாத பெரிய மகன், இன்னும் வேலைக்குப் போகாத சின்னமகன், மாதச்சம்பளம் வாங்கும் அரசாங்க வாத்தியார் என்ற ஆதங்கம் ரெங்கநாயகிக்கு. 

தன்னைவிட ஒருபடி கீழே இருக்கும் வீட்டில் பெண் எடுக்க வேண்டும். தன்னைவிட ஒருபடி மேலே இருக்கும் வீட்டில் பெண் கொடுக்க வேண்டும் என்ற கணக்கில் தான் சுப்பையா இவர்கள் வீட்டில் சம்பந்தம் எடுத்தது. அப்பொழுது தான், பெண்ணும், பெண் வீட்டாரும் நமக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள் என்பது அவர் கணக்கு. பெண் பார்த்துவிட்டு வந்த பிறகு வசதியைப் பார்த்து விட்டு திலகவதி கூட சற்றுத் தயங்க, 

“இந்த மாதிரி வீட்ல பொண்ணெடுத்தா தான் நமக்கு அடங்கி இருப்பாங்க. நல்ல ராசியான சாதகம். வாத்தியார் வீட்டுப் பிள்ளைக வேற. மரியாதை தெரிஞ்சவங்களா இருப்பாங்க. அதுவும் இல்லாம உன் பையனுக்கு பொண்ண ரொம்ப புடுச்சிருக்குனு அவன் பார்வையே சொல்லுது.” என்று மனைவியிடம் கூறிவிட்டார்.

ஆனால் ரெங்கநாயகி கணக்கு வேறாக இருந்தது. நல்ல பசை உள்ள இடம். எப்படியாவது மருமகனை வைத்தே மகன்களை மேல்நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பது.

சின்னவரின் குடும்பத்தோடும், பெண்களோடும் தொடர்பு இருக்கும் வரை, தன் பிள்ளைகளுக்கு இங்கு மரியாதை கிடைக்காது என்பது நன்கு புரிந்தது. ஏதொன்றுக்கும் அத்தைகள் என முன்னுக்கு வந்து நிற்பதும், சக்திவேலின் பிள்ளைகளை ஆசையாக மருமகளே, மருமகனே என அழைப்பதும், இவர்களும் அக்கா, தங்கைகள் என்றால் உருகுவதும்  அவருக்கு உறுத்த ஆரம்பித்தது.‌ இவர்கள் சம்மந்தம் இத்தோடு முடியாது போலவே. நாளைக்கு சம்மந்தமும் செய்து கொண்டால் தன் மகளுக்கே அங்கு மதிப்பு இருக்காது என மனம் கணக்குப் போட்டது. 

இதற்கிடையில் சுதா பள்ளிப்படிப்பை முடிக்கவும், ஆண் வாரிசு இல்லாத வீடு, நாளைக்கு சொத்து பெண்களுக்கு தானே என கணக்குப் போட்டு, சின்னமகனுக்கு பெண் கேட்க, சின்னவரோ, “சுதா, படிக்க ஆசப்படுது. இப்ப கல்யாணம் பண்ற எண்ணம் இல்ல ம்மா.” என படிப்பை காரணம் காட்டி நாசூக்காக மறுத்து விட்டார்.

அந்த ஒட்டு மொத்த வன்மமே இன்றும்… பெரியவரை தூண்டி விட்டு பேசிக் கொண்டு இருக்கிறார்.‌ சென்ற முறை வந்தபொழுது ஏற்பட்ட அவமானத்தாலே ரெங்கநாயகியின் மகன்களும், கணவரும் இந்த வருடம் வரவில்லை.

இரவு சாப்பாடு முடிந்து, பெரியவர்கள் அனைவரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு இருக்க, கீதாவிற்கு கைக்குழந்தை என்பதால் தூங்க வைக்க உள்ளே சென்று விட்டாள். சிவகாமியும், சுதாவும் அடுக்களையை ஒதுங்க வைத்தனர். 

கமிஷன் கடைக்கு சென்று விட்டு வந்த தவசியும், அனைவரும் முற்றத்தில் இருப்பதைப் பார்த்து விட்டு அங்கே வந்தான்.

சகளைகளும், மச்சான்களும் வெளியே அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பேச்சி வந்து மகனை சாப்பிட அழைத்தார்.

“என்னடா மாப்ள! இன்னும் சாப்டலியா?” என்றான் சக்திவேல் மச்சானிடம். 

“கொஞ்சம் வேல இருந்துச்சுடா. இப்ப தான் தேங்காயெல்லாம் மண்டிக்கு அனுப்பிட்டு வர்றே. மாமாவும் கோயில் வேலையா இருக்காருல்ல. அதான் நமக்கு கொஞ்சம் வேல அதிகம்.” என்றான் தவசி.

“உங்களுக்கு என்ன தம்பி? உங்க மாமா, பொண்ணையும் கொடுத்து, எல்லா பொறுப்பையும் உங்ககிட்ட விட்டுட்டாரு. வீட்டோட மாப்பிள்ளையா… உங்கள ராசா மாதிரில வச்சுருக்காரு.” என பக்கத்தில் பெண்களோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த ரெங்கநாயகியும் இவர்களது பேச்சிற்கு இடையில் வர, அன்னபூரணிக்கே… மருமகனை ரெங்கநாயகி கேட்டது ஒரு மாதிரியாக இருக்க, மகனின் அருகில் நின்றிருந்த பேச்சியம்மா வாயைத் திறக்கும் முன், 

“சரிடா சக்தி! நீங்க போய் படுங்க. காலையில வெள்ளன எந்திரிக்கனும்ல. நான் சாப்பிட போறேன்.” என்றவன் வேகமாக எழுந்து கொண்டான்.

“வாம்மா! வந்து சாப்பாடு எடுத்து வை!” என பேச்சியை அவ்விடத்தை விட்டு தள்ளாத குறையாக கடத்தினான்.

“ஏன்டா! வாயத் தொறக்குமுன்னே கூட்டியாந்துட்டே. மனசார நாலு கேள்வி கேட்டுருப்பேன்ல.” என சற்று தள்ளி வந்து மகனைக் கடிய,

“அது நம்ம சக்தி மாப்பிள்ளைக்கும், பெரிய மாமாவுக்கும் தாம்மா அசிங்கம். இப்ப அவங்க நம்ம வீட்டுக்கு வந்த சம்பந்தி மட்டுமில்ல, விருந்தாளியும் கூட. அதுவுமில்லாம அவங்களுக்கு உன்னப் பத்தி தெரியாதுல. மதுரை ஜில்லாவே கதிகலங்க அடிக்கிற ஆளு நீயிங்கற சங்கதி தெரியாம வாய விடுறாங்க அந்தம்மா. நீ யாருன்னு எனக்கு தானே தெரியும்.” என அம்மாவை கேலி பேசி சமாதானப்படுத்தியவன், சாப்பிட அமர்ந்தான்.

அவன் சாப்பிடும் பொழுது தான் மறுநாள்‌ ஆகவேண்டிய காரியங்களை பார்த்துவிட்டு சின்னவர் உள்ளே வந்தார். சாப்பிடுபவனையும், பரிமாறும் தங்கையையும் பார்த்தவர், உள்ளே சென்றுவிட்டார். 

பெரியவர்கள் அனைவரும் படுக்க பெரியவர் வீட்டிற்கு செல்ல, பிள்ளைகள் அனைவரும் சின்னவர் அறைக்கு ஓடி வந்து விட்டனர். பெரியவர், சின்னவர் பேரன் பேத்திகளோடு, பேச்சியின் பேரன் பேத்திகள் என கிட்டத்தட்ட ஏழெட்டு உருப்படிகளுக்கும் மேல். அனைவருக்கும் கீழே பாயை விரித்து படுக்க வைத்துக் கொண்டார் அன்னபூரணி.

அவர்களுக்கு ஊருக்கு வந்தால், அன்னபூரணி இரவு கதை சொல்ல வேண்டும். இன்றும் கதை கேட்டு நச்சரிக்க… 

“ஒரு கதை தான் சொல்லுவேன். எல்லாரும் கம்முனு தூங்கிறனும்.” என்ற ஒப்பந்தத்தோடு ஆரம்பித்தார் அன்னபூரணி. 

“ஒரு ஊர்ல…” என ஆரம்பிக்க, அனைத்தும் கோரசாக, ”ம்ம்ம்…” என உம் கொட்ட, 

“ஒரு புருசனும் பொண்டாட்டியும் இருந்தாங்களாம்.”

“ஹும்ம்.” என அனைத்தும் உம்ம் கொட்ட, “ஒரு புருஷனும் பொண்டாட்டியும் மட்டும் தான் இருந்தாங்களா… ஊர்ல வேற யாரும் இல்லியா அப்பத்தா?” என சிவசங்கரி சந்தேகம் கேட்க,

“கதை சொல்லும் போது ஊடால கேள்வி கேட்கக் கூடாது. கதைய மட்டும் தான் கேக்கணும். அப்படித்தானே அம்மாச்சி.” என ஈஸ்வரன் தினமும் கதை கேட்கும் வழமையில் பதில் கூற.

“ஆமாடா கண்ணு.” என கதையைத் தொடர,

“அந்த புருஷன் ஒரு நாள் மாமியா வீட்டுக்கு, விருந்துக்கு போனானாம்.”

“ஹும்ம்…”

”அவனுக்கு மாமியாக்காரி… கொழுக்கட்ட செஞ்சு கொடுத்தாளாம்.”

“ஹும்ம்…”

“அவனுக்கு அது ரொம்ப புடிச்சுப் போகவும்,‌ இது என்னான்னு கேட்டானாம்.”

“ஹூம்ம்…”

“இது கொழுக்கட்ட மருமகனே. எம் மகளுக்கும் செய்யத் தெரியும். அவள செஞ்சு தரச்சொல்லி சாப்புடுங்கனு சொல்லி அனுப்புச்சாளாம்.”

“ஹும்ம்…”

“அவனும் பேரு மறந்துரும்னுட்டு கொழுக்கட்ட… கொழுக்கட்டனு… வழி நெடுக சொல்லிக்கிட்டே வந்தானாம். ஒரு எடத்துல குறுக்கால ஓடை போகவும், அந்த ஓடைய… அத்த்த்திரிப்பச்ச்ச்சா…னு சொல்லிட்டு குதிச்சு தாண்டினானாம். அதுக்கு அப்பறமா கொழுக்கட்டைய மறந்துட்டு அத்திரிப்பச்சா… அத்திரிப்பச்சானு சொல்ல ஆரம்பிச்சுட்டானாம்.”

“ஹும்ம்…” இப்பொழுது ஹூம்ம் சத்தம் ஒன்றிரண்டு குறைந்திருந்தது. 

“வீட்டுக்கு வந்த புருஷன், பொண்டாட்டி கிட்ட அத்திரிப்பச்சா செஞ்சு கொடுன்னு கேட்க, அவ தெரியாதுன்னு சொல்ல, இது கூடத் தெரியாதா… உங்க அம்மா தெரியும்னு சொன்னாங்களேனு போட்டு அடிஅடின்னு அடிச்சானாம். உடம்பு பூரா வீங்கிப் போச்சாம்.”

“ஹும்ம்…”

“சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக் கெழவி, ஏன்டா பாவிப் பயலே… இப்படி போட்டு அடுச்சுருக்கே… கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கிப் போச்சேனு… புருஷன வஞ்சாளாம்.”

“ஹும்ம்…”

“அதே தான்னு துள்ளிக் குதிச்சானாம். கொழுக்கட்ட தான் செஞ்சு கொடுத்தாங்க இவளோட அம்மா. அது தான் வேணும்னானாம்.”

“அடப்போடா… பொசகெட்ட பயலேனு அவன வஞ்சுபுட்டு கெழவி போக, பொண்டாட்டியும் புருஷனுக்கு கொழுக்கட்டை செஞ்சு கொடுத்து சாப்பிட்டு சந்தோஷமா வாழ்ந்தாங்களாம்.”

இப்ப… ம்ம்ம் சத்தம் முற்றிலும் குறைந்து ஒருவர் மேல் ஒருவராக கால் கையைத் தூக்கிப் போட்டு தூங்கியிருந்தனர். 

சின்னவர்கள் உலகம் எப்பொழுதுமே எந்த வித சிந்தனைக்கும் ஆட்படாத சந்தோஷமும் குதூகலமும் நிறைந்தது தானே. 

மறுநாள் திருவிழாவும் சிறப்பாக நடக்க… பெரியவரை அழைத்து முதல் மரியாதை செய்தனர். அர்ச்சனை தேங்காய் பழத்தட்டோடு, துண்டும், மாலையும் போட்டு மரியாதை செய்ய… மரியாதையைப் பெற்றுக் கொண்டவர், அடுத்த வருடத்தில் இருந்து மரியாதையை சக்திவேலிற்கு வழங்குமாறு, பங்காளிகளிடம் கேட்டுக் கொண்டு,‌ அடுத்த தலைமுறையை முன்னிருத்த ஏற்பாடு செய்தார். எனக்கு அடுத்து, என் தம்பி இல்லை… என் மகன்கள்  இருக்கிறார்கள் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இருந்தது அவரது செயல்.‌

சின்னவர் எதையும் கண்டு கொள்ளவில்லை. எப்படியும் அண்ணனுக்கு அடுத்து மகன்கள் தான் எனத் தெரியும். ஆனால், இப்பொழுது அதற்கு என்ன அவசரம்? இயலாத காலத்தில் செய்ய வேண்டிய காரியத்தை இப்பவே செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது… என சற்றே மனம் சுணங்கியது. 

அண்ணே எப்ப சாவான்,‌ திண்ண எப்ப காலியாகும்னு, யாரும் இங்க காத்துக்கிட்டு இல்லையே. யாரோ தட்டிப் பறித்து விடுவது போல், யாரையும் கலந்து கொள்ளாமல் சபையில் சொல்ல வேண்டுமா? என்ன இருந்தாலும் எடுத்து செய்யும் தன்னிடமும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை. எப்பவும் போல் கோயில் வேலைகளை முடித்துவிட்டு,‌ கணக்கு வழக்குகளை பங்காளிகளிடம் ஒப்படைத்தார். அவர்களுக்கு சின்னவர் தானே எல்லாம்.‌ முதல் மரியாதை யாருக்குப் போனால் என்ன? மறுபடியும் இவரிடமே பொறுப்புகளை ஒப்படைத்தனர். கோயில் காரியம் என மறுக்காமல் வாங்கிக் கொண்டார்.‌ 

அனைவர் முன்னும் அப்பா செய்தது, முத்துவேலிற்கு தான் சற்று தர்மசங்கடமாக இருந்தது.‌ 

இதற்கு இடையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் சண்டை பிரச்சினையை உண்டு பண்ணியது. 

இரவு அம்மத்தாவிடம் கேட்ட கதையை மறுநாள் பிள்ளைகள், அம்மா அப்பா விளையாட்டாக விளையாட, அதில் ஈஸ்வரனும், சங்கரியுமே புருஷன் பொண்டாட்டியாக ஜோடி சேர… கொழுக்கட்டை கேட்டு அடிக்கும் காட்சியில் ஈஸ்வரன் சற்று வேகமாக அடித்துவிட,‌ சங்கரியும் அழுது கொண்டே தனது அம்மாச்சியிடம், “ஈஸ்வரன் அடுச்சுட்டான்.” என கண்ணைக் கசக்கிக் கொண்டே கூற, கோபமாக வந்து, ஈஸ்வரனின் காதைக் திருகி இருந்தார் ரெங்கநாயகி. அதைப் பார்த்த பேச்சிக்கும் கோபம் வர, இருவருக்கும் முட்டிக் கொண்டது. 

வார்த்தைகள் வளரும் முன், தவசி வந்து, “பிள்ளைக சண்டைய பெருசு பண்ணாதே ம்மா!” என அம்மாவைத்தான் சமாதானம் செய்து அழைத்துப் போனான். 

பேச்சிக்கு அப்பொழுது தான் மகனை வீட்டோடு மாப்பிள்ளையாக அனுப்பியது தவறோ என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பித்தது. ஏதொன்றுக்கும் மகன் தணிந்து போவது போலவே பட்டது. அண்ணன்களிடம் சரி… அண்ணன் சம்பந்தியிடமும் ஏன் பணிந்து போக வேண்டும் என்ற எண்ணம் உதயமாகியது.

 தவசியை வீட்டோடு மாப்பிள்ளையாக அனுப்ப சம்மதித்த பொழுதே, பேச்சியின் கணவர், மனைவியை எச்சரித்தார். 

“அண்ணே பாசத்துல மகன அனுப்புற. உனக்கு பின்னாடி இருக்குது புரட்டாசி.” என்று. 

அதற்கு அர்த்தம் சித்திரை, வைகாசி தான் அதிக வெயில் என அறிந்திருப்போம். ஆனால் புரட்டாசியும் அதேபோல் தான் வெயில் காயும். அதற்கு தான் சித்திரை வைகாசியோடு வெயில் முடியல, பின்னால புரட்டாசியும் இருக்குனு சொலவடை சொல்றது. அவரது பேச்சை அன்றே கேட்டிருக்க வேண்டுமோ என மனதினுள் மருகிக் கொண்டு இருந்தார் பேச்சி. என்னவோ அவர் கூறியது உண்மையாகி விடுவது போல் இதோடு முடியாது, என பேச்சிக்கு அசரீரியாக  ஒலித்தது.

சாமி கும்பிட்டு அனைவரும் ஊருக்குக் கிளம்ப முத்துவேல் மட்டும் கிளம்பவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகத் தன் சோடிப்புறாவைப் பார்த்தது.‌ சாமி கும்பிட ஊர் முதன்மைக்காரர்களில் ஒருவர் என்ற முறையில் நல்லசிவம் குடும்பத்தோடு வந்தார். தனது பால்ய சிநேகிதனிடம் சிறிது நேரம் நின்று பேசிவிட்டு சென்றார். 

அப்பொழுதும் அவள், சுப்பையாவின் அருகில் நின்றிருந்த முத்துவேலை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அவள் வரும் பொழுதே மனக் கதவுகளுக்கு பெரிய திண்டுக்கல் பூட்டாக போட்டு கொண்டு தான் வந்தாள். என்ன… சாவியை மட்டும் பத்திரமாக இதயக்கூட்டில் ஒழித்து வைத்தாள். 

இவனது பார்வை அவளை அளவெடுத்தது. தளரப் பின்னிய கூந்தலில், நெருக்கக்கட்டிய மல்லிச்சரம், பட்டுவண்ணத்தில் காதோரம் ஒற்றை ரோஜா, குடை ஜிமிக்கி, மூக்கில் மீன் மூக்குத்தி, ஜோடி அன்னப்பட்சி டாலரோடு கழுத்துச் சங்கிலி, பச்சை பட்டு பாவாடையும் சிவப்பு தாவணியும் என திருவிழாவிற்கு பச்சை மஞ்சக்கிழங்கில் செதுக்கிய சிலையாக  வந்திருந்தாள். 

ஆயிரம் பார்வையில் அவனது பார்வையை அறிந்தவளது பதட்டமானது, கைகளுக்குள் அடங்கியிருந்த தாவணி முந்தானையை, தண்ணீர் இல்லாமலே கசக்கி பிழிந்து கொண்டு இருந்தது. அதைப் பார்த்தவனுக்கோ இதழோரம் சிறு புன்னகை தோன்றி, உன்னைக் கண்டு கொண்டேன் என்றது. 

சித்தப்பா அழைக்கவும் கோவில் வேலையாக இரண்டு நாட்கள் முன்னே முத்துவேல் வந்து விட்டாலும், சாந்தியை தனியே சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை முத்துவேலிற்கு. இங்கே ஆட்கள் அதிகம் இருப்பார்கள் என டி.வி பார்க்கவும் அவளை சித்தி அனுப்பவில்லை. தம்பி மட்டும் தான் வந்து சென்றான். 

அனைவரும் சென்னைக்கு சென்றுவிட்ட மறுநாள் காலை, மாடிக்கு முத்துவேல்  வந்தான்.‌ சிறிது நேரம் அங்கும் இங்கும் உலாவ பார்வை மட்டும் எதிர்வீட்டு மாடியிலேயே இருக்க, எவ்வளவு நேரம் தான், அந்தத் தெருவில் இருக்கும்… ஒன்றிரண்டு காரை வீடுகளையும், நாலஞ்சு  கூரை வீடுகளையும், பத்து இருபது ஓட்டு வீடுகளையும், அஞ்சாறு காளை மாடுகளையும், வாசலில் குப்பையைக் கிண்டிக் கொண்டு இருக்கும் பத்து பதினைந்து கோழிக்குஞ்சுகளையும், அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் ரெண்டுமூனு நாய்களையுமே பார்த்துக் கொண்டு இருப்பது.  

சற்று நேரம் பொறுத்தவனுக்கு பொறுமை பறந்துவிட்டது.‌ கீழே அதற்குள் சித்தப்பா கத்தும் சத்தம் கேட்டது.‌ வேகமாக இறங்கி சித்தப்பா வீட்டிற்கு வந்தான்.

“வீட்ல யாரு சாப்புட்டாங்க… சாப்பிடலைனு பொம்பளைகளுக்கு கவனிக்கத் தெரியாதா?” என நடுக்கூடத்தில் நின்று கொண்டு அன்னபூரணியிடம் கத்திக் கொண்டு இருந்தார். அவரோ என்ன நடந்தது எனப் புரியாமல் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தார்.

 சின்னவருக்கு அண்ணன் செய்த செயலின் ஆதங்கம் வேறு, இரவு வெறும் ரசம் மட்டும் ஊத்தி சாப்பிட்டுக் கொண்டு இருந்த மருமகனைப் பார்த்த கோபம் வேறு. 

பேச்சியும், “காலா காலத்துல வந்து சாப்ட்டா என்னாடா. இப்ப பாரு‌ வெரும் ரசம் தான் மிஞ்சுச்சு.” என மகனை கடிந்து கொண்டே பரிமாற,

“கூட்டத்துக்குள்ள இதெல்லாம் கண்டுக்க கூடாதும்மா. வந்தவுக சாப்ட்டா போதும். இன்னைக்கி இல்லைனா நாளைக்கி கறி எடுத்து ஆக்கிக்கிட்டா போச்சு. நம்ம கூட்டம் என்ன சின்னக்கூட்டமா?” என தாயை சிரித்துக் கொண்டே சமாதானப்படுத்தினான் தவசி.‌ இருந்தாலும் பேச்சிக்கு தான் மனது ஆறவில்லை. 

“சின்னவளுக்கு இருக்குற கூறுவாரு உம்‌பொண்டாட்டிக்கி இல்லடா.‌ அவ எப்படி… புருஷன கூட்டமா இருந்தாலும் தனியா கவனிக்கிறா?” என மருமகளையும் குறை கூற மறக்கவில்லை.

“அவளும், அத்தையுமே சாப்புட்டிருக்க மாட்டாங்கம்மா. கூட்டத்துக்குள்ள வந்தவுகளுக்கு வேணுமேனு பாத்துருப்பாங்க.” என மனைவியைப் பற்றியும் அறிந்தவனாய் பேசினான்.

“நாளைக்கு ஊருக்கு கெளம்புறோம்டா. பிள்ளைகளக் கூட்டிக்கிட்டு ஒரு எட்டு ஊருக்கு வந்துட்டுப் போடா. சின்னவன் வீடு பால் காச்சுனப்ப வந்தது.” எனக் கூற,

“சரிம்மா…” என்றவன் ஊர் விவகாரங்களை தாயிடம் விசாரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.

அதைப் பார்த்தவர் தான் அனைவரும் கிளம்பவும் அன்னபூரணியிடமும், மகளிடமும் விளாசித் தள்ளிக் கொண்டு இருந்தார். 

“உங்க அம்மாவுக்கு தான் கூட்டம் வந்துட்டா நிதானம் இருக்காது‌‌. முன்னாடி வந்தவுங்களுக்கு போட்டு முடிச்சுருவா. உனக்கு எங்க போச்சு புத்தி. புருஷன் இன்னும் சாப்பிடலியேனு தனியா எடுத்து வைக்கத் தெரியாதா? அவ்ளோ எடுத்து செஞ்சும், ராத்திரி வெறும் ரசத்த ஊத்தி மாப்ள சாப்புட்டுட்டு இருக்காப்ல. இது தான் நீ புருஷன், பிள்ளைகள கவனிக்கிற லட்சணமா. அப்பன் வீட்லயே இருக்கவும் சொகுசு கண்டு போச்சா?” என மகளையும் கத்த, அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர, தாத்தாவின் கோபத்தைப் பார்த்த பிள்ளைகள் இரண்டும் ஓடிவந்து தாயின் காலைக் கட்டிக் கொள்ள, சின்னவருக்கு கோபம் சட்டென வடிந்தது. 

இவர் எப்பொழுதும் அப்படித்தானே. முன் கோபம் தான் வரும். பிள்ளைகள் இருக்கிறார்கள்‌ என்று கூட பார்க்காமல் அவர்களது அம்மாவைத் திட்டவும், வேகமாக அம்மாவிடம் ஓடி வந்தனர்.

மனம் தாளாமல் உடனே பிள்ளைகளை இழுத்து அள்ளிக் கொண்டார். 

“ஒன்னுமில்லடா கண்ணுகளா… சும்மா தான் தாத்தா பேசுனே. வாங்க, நம்ம கடைக்குப் போயி பிஸ்கட் வாங்கிட்டு வரலாம்.” என பிள்ளைகளை சமாதானப்படுத்த கடைக்கு அழைத்து சென்று விட்டார்.

கீழே வந்த முத்துவேலிற்கு சித்தப்பாவின் மனநிலை புரிந்தது. அவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக சென்று விட்டான்.

தனது சோடிப் புறாவை சந்திக்க சந்தர்ப்பம் பார்த்தவனுக்கு அதற்கான நேரம் மாலையே வாய்த்தது. 

பெண்கள் மட்டுமே கும்பிடும் செவ்வாய்க்கிழமை சாமி கும்பிட, பெரியவர் வீட்டை… இருவரும் சேர்ந்து சுத்தம் செய்யலாம் என சுதா, சாந்தியை வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தாள். சின்னவர் வீட்டில் தவசியும், சின்னவரும் என ஆண்கள் இருப்பதால், யாரும் இல்லாத பெரியவர் வீட்டிலேயே பெண்கள் சேர்ந்து சாமி கும்பிடுவது வழக்கம். மதுரைப் பக்கம் இது சிறப்பாக செய்யப்படும் கும்பிடு. ஆடி, தை, மாசி என வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் செவ்வாய்க் கிழமைகளில் பெண்களால் சேர்ந்து கும்பிடப்படும். அதற்கு தான் வீட்டை சுத்தம் செய்ய சாந்தியை உதவிக்கு அழைத்திருந்தார் சுதா.  

தாவணி முனையை கையில் பிடித்து சுற்றியவாறே,‌ “சுதா… சுதா…” என அழைத்துக் கொண்டே, சாந்தி வீட்டின் உள்ளே வர,‌ அறைக்குள் இருந்து வெளிவந்த முத்துவேலைப் பார்த்தவள்‌ நடை சட்டென வேகம் குறைந்தது. 

வந்தவர்கள்  ஊருக்கு சென்று விட்டார்கள் என்ற தைரியத்தில் தான் வேகமாக உள்ளே வந்தாள். ஒரு கணம் படபடப்பாக ஸ்தம்பித்தவள். சட்டென சுதாரித்து திரும்ப எத்தனிக்க, காலையில் இருந்து எதிர் பார்த்தவனோ… சென்று விடுவாளோ என்ற பதட்டத்தில்,

“சாந்தி…” என வேகமாக அழைக்க, அவன் வாயிலிருந்து தன் பெயரை உச்சரிக்க கேட்டவளுக்கு, உள்ளம் ஒருகணம் சில்லிட்டு தான் போனது. எனினும் மறுகணம் துள்ளிய மனதை அடக்கியவளாக, திரும்பி நின்றவள் தலை தரை‌ பார்த்தே இருக்க, 

“ஏன்… இன்னைக்கி மாடிக்கி‌ வரல.” என்றான் ஏதோ வரச் சொன்னவன் போல.

“எதுக்கு வரணும்?” என்றாள் தெரியாதவள் போல.

“எப்பவும் எதுக்கு வருவியோ… அதுக்கு தான்.” என்றான் இடக்காக. அவள் பதில் பேசவும் சற்று துணிச்சலாக வந்தது அடுத்து கேள்வி.

“நான் எதுக்கு வருவேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” பதில் கேட்டாள் அவளும். அவளுக்கும் பேச்சை வளர்க்க மனம் ஆவல் கொண்டது போலும். அதற்குள் அவளிடம் தாவணி முந்தானை படாதபாடு பட்டுவிட்டது பதட்டத்தில்.

“முந்தானையை விடு… பாவம். அதை ஏன் இந்தப் பாடு படுத்துற?” என இப்பொழுது இன்னும் கொஞ்சம் தைரியத்தோடு, புன்னகை முகமாகக் கூற, 

“நீங்க ஊருக்கு போலியா?” இப்பொழுது ஒரு கணம் நிமிர்ந்து முகம் பார்த்து சட்டென தாழ்ந்து கொண்டன கண்கள்.

“ஓ… நான் ஊருக்கு போயிட்டேன்னு‌ தான் நீ மாடிக்கு வரலியா?”

“அப்படி எல்லாம் இல்ல… நீங்க இருந்தா மாடி ரூம்ல டேப் ரெக்கர்டர்ல பாட்டு கேட்டுட்டே இருக்கும். அதான்…” என முடித்துக் கொண்டாள். 

அவனுக்கு இப்பொழுது தான் எதைக் கொண்டு அவள் மாடிக்கு வருகிறாள் எனப் புரிந்தது. இன்று அவனுக்கு பாவையின் பால் மனம் சென்றதால் பாடலின் பக்கம் செல்லவில்லை. அதனால் தான் இவன் இங்கேயே இருந்தது அவளுக்கு தெரியவில்லை. அதற்குள் அங்கு ஈஸ்வரன் சாந்தியை தேடிக் கொண்டு வந்தான். 

“சாந்தி சித்தி… உங்கள சுதா சித்தி அங்க வரச் சொன்னாங்க.” என்றான்.‌ 

சாந்தியும் வேகமாக விட்டால் போதும் என்ற நிலையில் ஓட்டமும் நடையுமாக வெளியேறி விட்டாள்.

“டேய்… ஈஸ்வரா இங்க வா!” என மருமகனை அருகே அழைத்தான்.

“என்னங்க மாமா?” என அருகில் வர,

“இனிமே சாந்தி சித்தினு கூப்பிடாதே. சாந்தி அத்தைனு கூப்பிடு.”

“ஏம் மாமா?” சுதா சித்தி தான் இப்படி கூப்பிட சொல்லுச்சு.” என்றான். 

“டேய்ய்ய்… முறை மாறிப் போகும்டா. இப்ப மாமா சொல்ற… நீ இப்ப இருந்து அத்தைனு கூப்பிடு. அப்ப தான் அடுத்து தடவ சென்னைல இருந்து வரும் போது, உனக்கு ரிமோட் கார் வாங்கிட்டு வருவேன்.” என மருமகனிடம் லஞ்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்தான்.

“அப்பனா சரி.” என அவனும் ஓடிவிட்டான். 

வைகைக் கரை காற்றே நில்லு

வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று

மங்கை தனைத் தேடுதென்று

காற்றே பூங்காற்றே

என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு…

அதிகாலையிலேயே மாடியில் டேப் ரெக்கார்டர் ஒலித்தது பெரியவர் வீட்டில்‌. 

ஆனால் இந்த வைகைக்கு கடலைச் சேரும் யோகம் இல்லை என்பது மறந்து போனது இருவருக்கும். 

error: Content is protected !!