தாழையாம் பூமுடித்து🌺20

தாழையாம் பூமுடித்து🌺20

20

“என்ன மாமா… ஏர்போர்ட்க்கே வந்துருக்கீங்க. அப்படி என்ன எமர்ஜென்சி.”

“போய்க்கிட்டே பேசலாம் வாடா.” என ஈஸ்வரனை ஏர்போர்ட்டுக்கே வந்து அழைத்து சென்றார் முத்துவேல். 

“உடனே கிளம்பி வா!” என மாமான் அழைப்பு விடுக்க, அவரது பேச்சில் இருந்த பதட்ட தொனி கண்டு, காரை விடுத்து ஃப்ளைட் புக் செய்திருந்தான். மதுரை டு சென்னை முக்கால் மணி நேரத்தில் வந்து இறங்கினான். 

ஏர்போர்ட் விட்டு வெளியே வர, மாமன் அவனுக்காக காத்திருக்க, இருவரும் காரில் ஏறினர்.

“இப்ப சொல்லுங்க.” என காரை கிளப்பவிடாமல் கேட்க,

“சொல்றேன்டா… அதுக்கு தானே வரச்சொல்லிருக்கே.” என காரில் ஏறப்போக, ஓட்டுனர் இருக்கைக்கு வந்தவன் சாவிக்கு கை நீட்ட, சாவியை மருமகன் கையில் கொடுத்தார் முத்துவேல். 

“*** ஹாஸ்பிடல் போ.” என்றார் சீட் பெல்ட்டைப் பொட்டவாறே.

“யாருக்கு என்னாச்சு மாமா.” என பதட்டம் கேள்வியில் இருந்தாலும் கண்கள் நிதானமாக சென்னையின் காலை நேர பரபரப்பில் காரை செலுத்திக் கொண்டு இருந்தது. மீனம்பாக்கத்தில் இருந்து கிண்டி சாலையில் பயணித்த கார், அங்கிருந்து போரூர் சாலை திரும்பியது. 

“அஸ்வின் குடும்பம் ஏதும் பிரச்சினை பண்ணாங்களா? அதனால பெரிய மாமா உடம்புக்கு ஏதும் சிக்கலா?” என தனது யூகத்திற்கு கேள்வி கேட்க,

“அதுவும் ஒரு பக்கம் இருக்குது டா. ஆனா இது வேற.” என சற்று நிறுத்தியவர்…

 ”ப்ரியா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி ஹாஸ்பிடல்ல இருக்கு.” எனக் கூற, சட்டென்று காரின் வேகம் குறைத்து ஓரம் கட்டினான். 

“டேய்… கார எடு… ஹாஸ்பிடல் போயி பேசலாம்.” என ட்ராஃபிக்கில் வேகம் குறைத்து நின்ற காரில் இருந்து மருமகனை அதட்ட, கார் மீண்டும் வேகமெடுத்தது.

“பிரச்சினை எதுவும் வேற மாதிரியா மாமா?” என சந்தேகமாகக் கேட்க, அவன் கேட்பதன் அர்த்தம் புரிந்தது மாமனுக்கு. இன்றைய காலகட்டங்களில் இளம்பெண் தற்கொலை முயற்சி என்றாலே, வேற மாதிரி தான் எண்ணத் தோன்றுகிறது.

“அப்படியும் வச்சுக்கலாம்.” என மாமன் கூற, அவனுக்கும் பதட்டம் அதிகமாகியது.

“என்ன மாமா சொல்றீங்க? பிரச்சினை பெருசா? அவ கிட்ட யாரவது மிஸ் பிகேவ் பண்ணாங்களா? உங்க பேச்சுல எதுவும் தெரியல?” என எதுவும் கணிக்க முடியாமல், அடுக்கடுக்காக காரை செலுத்திக் கொண்டே வினாக்களைத் தொடுத்தவன்,

காரை வழியில் இருந்த ரெஸ்ட்டாரன்டிற்குள் திருப்பினான். முதலில் பிரச்சினை என்னவென்று தெரிய வேண்டும் அவனுக்கு. 

காரை வாலட் பார்க்கிற்கு செக்யுரிட்டியிடம் கீ கொடுத்துவிட்டு உள்ளே சென்றவர்கள், ஓரமான இருக்கை பார்த்து அமர்ந்தனர்.

காலை நேரம் என்பதால் ரெஸ்ட்டாரன்ட் சற்று காற்றாடியது.

“நீயே பாரு!” என கைபேசியை இயக்கி மருமகனிடம் கொடுக்க, அதில் சில கணங்கள் பார்வையை ஓட்டியவன், 

“இது யாரு பாத்த வேல மாமா?” என்றான் கண்களில் கோபம் கொப்பளிக்க. 

“தெரியலடா… யாரு எவருன்னு விசாரிக்கறதுக்குள்ள தான், பிரியா கைய அறுத்துக்குச்சு. பார்ட்டி நடந்தது அஷ்வினோட ஹோட்டல்ல.” என பேச்சை நிறுத்தினார். 

அதில் இருந்த வீடியோவின் லிங்கை தனது ஃபோனிற்கு அனுப்பினான். 

தனது ஃபோனில் இருந்து தனது டீம் மெம்பர் ஒருவருக்கு அழைப்பு விடுத்தவன், அந்த லிங்கின் ஐ.பி. அட்ரஸ் உடனே வேண்டும் என ஆணை பிரப்பித்தவன், அந்த வீடியோவை சோஷியல் மீடியாக்களில் இருந்து நீக்குவதற்கான் ஏற்பாடுகளை அங்கு இருந்தவாறே மேற்கொண்டான். சற்று நேரம் கடந்தது.

“இதனால ஒரு யூஸ்ஸும் இல்லடா. அதுக்குள்ள எத்தன ஆயிரம் வியூவ்ஸ் பாரு. அதெப்படி இந்த மாதிரி வீடியோஸ் மட்டும் எப்படித்தான் உடனே வைரல் ஆகுதோ தெரியல. யாருன்னு மட்டும் தெரியட்டும். வகுந்துர்றே அவன.” என மாமன் பொருமித் தள்ள,

“வெளிச்சம் கம்மியா இருக்குறதால நம்ம பொண்ணுங்கறத உத்துப் பாத்தா தான் தெரியுது மாமா. ஆனா… நமக்கு தெரியனும்னே அனுப்பி வச்ச மாதிரி இருக்கு.” என யாரென்று தெரியாத அந்த நபர் மீது கழுத்தளவு கோபம் மாமனுக்கும் மருமகனிற்கும்.

அவர்களுக்கு மட்டுமல்ல… குடும்பமே கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் தான், தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டம், என வீட்டில் கெஞ்சி, கொஞ்சி, உண்ணாவிரதமெல்லாம் இருந்து அனுமதி வாங்கி இருந்தாள் பிரியா. சக்திவேல் மறுத்து விட, முத்துவேல் தான் அண்ணனிடம் அனுமதி வாங்கி கொடுத்தார். 

“நம்ம ஸ்ரீ யே கூட்டிப் போயிட்டு, அவனே கூட்டி வரட்டும் ண்ணே.” எனக் கூற,

“சித்தப்பா… நானென்ன கின்டர் கிளாஸா போறேன். பாடிகார்ட் மாதிரி இவனும் கூடவே இருந்தா, ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. ஏற்கனவே காலேஜ்லயே இவனும், சந்துருவும் என்னோட பாடி கார்ட்ஸ்னு கிண்டல் பண்றாங்க.” என சிணுங்க, 

“அப்ப நீ போகவே வேண்டாம்.” என சித்தப்பன் மறுதலிக்க, சரியென அரை மனதாக ஒப்புக் கொண்டாள். பெரிய மாமன் மகன் சந்துருவும், இவர்களும் ஒரே கல்லூரி என்றாலும் அவன் இவர்களுக்கு சீனியர். ப்ரியாவும், ஸ்ரீ யுமே வெவ்வேறு டிபார்ட்மெண்ட். இருந்தாலும் இவர்கள் மூவரும் கசின் என்பது தெரியும். 

சந்துரு தான் இவள் என்னுடைய மாமன் மகள் என, அவள் கல்லூரி சேர்ந்த முதல் வருடமே அனைவரிடமும் சொல்லி வைத்திருக்கிறான்.

 எனவே தான் முன் தினம் மாலை பார்ட்டிக்கு கிளம்பும் பொழுது, ”பார்ட்டி முடியவும் கால் பண்றே, வந்து கூப்புட்டுக்கோடா.” என அவனிடம் முரண்டு பண்ணி ஸ்ரீயை திருப்பி அனுப்பி விட்டாள்.

இரவு வெகு நேரமாகியும் அவள் அழைக்காமல் இருக்க, கயல்விழி புலம்ப ஆரம்பிக்க, காரை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹோட்டல் வந்தான் ஸ்ரீ. 

பார்ட்டி ஹால் சென்றவன் அங்கு கண்ட காட்சியில், கோபம் உச்சிக்கு ஏற, நடையை வேகப்படுத்தியவன், ஆண்கள் கும்பலின் நடுவில், நிதானமின்றி ஆடிக் கொண்டு இருந்தவளை இழுத்து ஓங்கி அறைய, அவளுக்கு ஏறியிருந்த முழு போதை அரை போதையாகி தலை கிறுகிறுத்தது. தள்ளாடி நிற்க முடியாமல் நின்றாள்.

“ஹேய்ய்ய்… யாரு நீ? பார்ட்டி மேனர்ஸ் தெரியாது? கமான் பேபி. லெட்ஸ் டான்ஸ்.” என அவள் அடிவாங்கியதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் ஒருவன் அவளது இடை அணைக்க வர,‌ அவனுக்கும் அதற்குள் கண்களில் பொறி பறந்தது. 

கூட்டம் ஒரு நொடி ஸ்தம்பிக்க…

பிரியாவின் கைபிடித்து வேகமாக வெளியே இழுத்து வந்தான் அவளது உடன்பிறப்பு. இப்படியே இவளை வீட்டிற்கு அழைத்துப் போக முடியாது என தெரிந்தது. நிற்க முடியாமல் கால்கள் துவண்டது பிரியாவிற்கு.‌ காரினுள் அவளைத் தள்ளியவன், தண்ணீர் பாட்டில் எடுத்து, நீரை முகத்தில் அடிக்க, கண்களை மூடி மூடித் திறந்து பார்த்தாள்.

“டேய்… ஸ்ஸ்ஸ்லிலி…” என சிரிப்போடு குழறலாக அழைக்க, கொஞ்சம் நிதானம் இருப்பது புரிந்தது. அப்பாவும், சித்தப்பாவும் இப்படியே பார்த்தால் இன்றைக்கு இவளுக்கு இது தான் இறுதி நாளாக இருக்கும் என்பது மட்டும் அப்பட்டமாகத் தெரிய, 

அம்மாவிற்கு கால் செய்து அப்பாவும், சித்தாப்பாவும் வந்து விட்டார்களா என விசாரிக்க, இன்னும் வரவில்லை என கயல்விழி பதில் கூறினார்.

வேகமாக காரை கிளப்பியவன், அவர்கள் வரும் முன் வீட்டிற்கு வந்து விட்டான். காரை நிறுத்தி அவளை இறக்குவதற்குள், படாதபாடு பட…. சத்தம் கேட்டு கயல்விழியும் வெளியே வர, இவளது நிலை பார்த்து, “என்னடா இது?” என அதிர்ச்சியானார். 

“ம்மா… அப்பா எல்லாம் வர்றதுக்குள்ள, இவள பெட்ரூமுக்கு கூட்டிப் போங்க. விடியட்டும் பேசிக்கலாம்.” என அவசரப்படுத்த,

“ஸ்ஸ்ஸ்ல்லி… நா…ன் வேள்டாம்னு தான்டா சொன்னே… ஃப்லன்ட்ஸ் தா…ன்டா… கம்பெ..ழ் பண்ணாங்க. அப்பால்ட்ட சொள்ளிழாத.” என அவனை தாஜா செய்தாள் அந்த நிலையிலும்.‌  

இருவரும் அவளை ஒருவழியாக படுக்கையில் தள்ளி கதவைச் சாத்தினர். கயல்விழிக்கு பயத்தில் முகம் வெளிறியது.

“டேய்… சாப்ட்டாளா என்னான்னு தெரியலியே?” என்றார் பயத்திலும். 

“ஒரு நேரம் சாப்பிடலைனா ஒன்னும் ஆகிறாது ம்மா. முதல்ல அப்பா எல்லாம் வர்றதுக்குள்ள தூங்கட்டும். காலையில பாத்துக்கலாம்.” என அறைக்குள் போட்டு பூட்டிவிட்டு சென்றான்.‌ 

வீட்டிற்கு வந்த அண்ணனும் தம்பியும் முதலில் விசாரித்தது பிரியா வந்தாச்சா என்பது தான். வந்துவிட்டாள் என கயல்விழியும் பயத்தை மறைத்துக் கொண்டு கூற, இருவரும் சாப்பிட்டு விட்டு படுக்க சென்றவுடன், மீண்டும் ஒருமுறை மகளைப் பார்த்து விட்டுத்தான், கயல்விழியும் படுக்க சென்றார். படுக்கையில் குப்புற‌ விழுந்து நிதானம் இல்லாமல் கிடந்தவளை, சரி செய்து போர்த்திவிட்டு தான் வெளியே சென்றார்.‌

காலையில் அவளை எழுப்புவதற்காக கோபத்தோடு, படுக்கையறை சென்ற கயல்விழி மகளின் கோலம் பார்த்து அலற, அனைவரும் வேகமாக ஓடி வந்தனர். கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட படுக்கையில் கிடந்தாள். 

அவளருகில் கிடந்த கைபேசியில் பதிவேற்றம் செய்து வைரலாகிய வீடியோ பதிவு ஓடிக் கொண்டு இருந்தது. அதில் பிரியா முழு போதையில் நிதானமில்லாமல் ஆண்களுடன் நடனமாடும் காட்சி ஓடிக் கொண்டு இருந்தது. 

அவளை அள்ளியெடுத்து காரில் போட்டுக் கொண்டு மருத்துவமனை சேர்த்தனர். முதல்கட்ட சிகிச்சைகள் தொடங்கப்பட,

அதன் பிறகே ஈஸ்வரனை அழைத்த முத்துவேல் விபரம் கூறாமல், உடனே கிளம்பி வரச் சொன்னார். 

விபரம் கேட்டறிந்த ஈஸ்வரன், 

“அஷ்வினா இருப்பான்னு சந்தேகப் படுறீங்களா மாமா? ஏன்னா… அவனோட ஹோட்டல்ல நடந்தத அவனே எடுத்துப் போடுவானா?” என சந்தேகமாகக் கேட்க, 

“யார சந்தேகப் படுறதுன்னே தெரியலடா. ஃப்ரெண்ட்ஸ்னும் நம்பி பொம்பள பிள்ளைகள வெளிய அனுப்ப முடியல. அண்ணே வேற ரொம்ப கோபமா இருக்காரு. பிரியா கைய அறுத்துக்கலைனா, இந்த வீடியோவப் பாத்துட்டு அண்ணனே பிள்ளைய வெட்டிப் போட்டுருப்பாரு.‌” எனக் கூற, 

“மொதல்ல பிரியாவப் போய் பாக்கலாம். அப்புறம் பேசிக்கலாம் மாமா.” என மாமனும் மருமகனும், வந்ததற்கு ஒரு காஃபியை குடித்துவிட்டு வெளியேறினர். 

மருத்துவமனை வர… அங்கு அதற்குள் இரண்டு மாமன்களும், மனைவிகளுடன் வந்திருந்தனர்… தங்கை மகள் மீது உள்ள அக்கறையில். 

இன்னும் பிரியா கண் விழிக்கவில்லை. இரத்த இழப்பு அதிகம் இல்லை எனினும், அவசர சிகிச்சை பிரிவில் தான் இருந்தாள். 

“வாங்க மாமா!” என ஸ்ரீ தான் அழைத்தான். 

“டாக்டர் என்னடா சொன்னாங்க.” என விசாரிக்க,

“இப்ப பிரச்சினை இல்ல மாமா. அப்ப தான் கைய கட் பண்ணி இருப்பானு நினைக்கிறே. அதுக்குள்ள அம்மா பாத்துட்டாங்க. அதால ப்ளட் லாஸ் அதிகம் இல்ல.‌ சீக்கிரம் கண்ணு முழிச்சிறும் மாமா.” எனக் கூற, அங்கு கூடியிருந்தவர்களை கவனித்தான் ஈஸ்வரன். கயல்விழி மிகவும் அரண்டு இருப்பது தெரிந்தது. 

பெண் பிள்ளையைப் பற்றிய வீடியோ ஒருபுறம், அவளது தற்கொலை முயற்சி ஒருபுறம் அவரை மிரட்ட, அடுத்து கணவனின் கோபத்தையும் சமாளிக்க வேண்டுமே. 

என்னதான் அப்பாக்கள் பிள்ளைகள் மீது கண்டிப்பு காட்டினாலும், பிள்ளைய வளர்த்த லட்சணம் இதுதானா என அம்மாக்கள் பக்கம் தானே கை நீளும். இப்பொழுதே சின்ன அண்ணன்‌ மனைவியின் பார்வையில் அத்தனை ஏளனம். அவர்கள் கவலைப்பட்டு வந்தது போல் தெரியவில்லை. வராவிட்டால் நாளை ஒரு சொல் வருமே என கடனே என வந்திருப்பது போல் இருந்தது‌. 

“ஸ்கூல் மீட்டிங் அப்ப எல்லாம் பெரிய மகாராணியாட்டம் என்னமா உங்க தங்கச்சி அலட்டுவாங்க… பிள்ளைய வளத்த லட்சணத்த பாருங்க?” என அருகில் இருந்த கணவனின் காதை கடித்து கொண்டு தான் இருந்தார்.  

பெரிய‌ மாமான் மனைவி சுந்தரிக்கு தான் மனது அடித்துக் கொண்டது. உடன் இருந்து வளர்த்தவராச்சே.

“அம்மாவையும், மத்தவங்களையும் கேன்டீன் கூட்டிப் போ ஸ்ரீ. ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடு.” என்றான் ஈஸ்வரன். 

கயல்விழி கொஞ்ச நேரத்திலேயே பயத்தால் வெளிறி இருப்பதைப் பார்க்க முடிந்தது.‌ இப்பொழுது மகளுக்கு ஆபத்து இல்லை எனத் தெரிந்து ஆசுவாசப் பட்டாலும், காலையில் மகளைக் கண்ட காட்சி இன்னும் கண்முன் நிழலாட, பெற்ற வயிறு பதறிப்போய் அமர்ந்து இருக்கிறார்.

மாமன் கூறவும் அம்மாவை ஸ்ரீ கேன்டீன் அழைக்க, அவரோ மறுத்து விட்டார். 

“அத்தை மொதல்ல போய் ஒரு காஃபியாவது குடுச்சுட்டு வாங்க. அதான் டாக்டர் பயமில்லைனு சொல்லிட்டாங்கள்ல. எதுனாலும் பாத்துக்கலாம். எந்திரிங்க…” என கண்டிப்பு கலந்த தொனியில் சொல்ல மறுக்கமாட்டாமல் எழுந்து மகனோடு செல்ல, ரெங்கநாயகியையும், அத்தைகளையும் உடன் அனுப்பி வைத்தான். 

பிரியாவும், மருந்தின் வீரியத்தில் கண் விழிக்க, அன்று மாலை ஆகிவிட்டது.‌ ஒரு சிலரை மட்டும் அனுமதிக்க, கயல்விழியும், சக்திவேலும் சென்று முதலில் மகளைப் பார்த்து வந்தனர். அப்பாவைப் பார்த்தவுடன் அரைமயக்க நிலையிலும், அவளது முகம் பயத்தில் வெளிறியது. 

“ஏன்டி இப்படி பண்ணின?” என கயல்விழி அழ ஆரம்பிக்க, சக்திவேலிற்கும் மகளின் நிலை கண்டு மனம் இளகினாலும், கோபம் அந்த பாசத்தை மறைத்தது. 

இதுவரை மகளுக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் இருந்தவருக்கு, ஆபத்து இல்லை எனத் தெரிந்ததும், ‘எதுனாலும் நம்ம கிட்ட சொல்லி இருக்கலாமே?’’ என்ற ஆதங்கம் தான்.

இத்தனை வருடங்கள் கண்ணுக்குள் வைத்து வளர்த்தது இப்படி பாதியில் தூக்கி கொடுப்பதற்கா. கண்டிப்பு காட்டி வளர்த்தது, அவரை பிள்ளைகளிடம் இருந்து சற்று ஒதுக்கி வைத்து விட்டது. எதுவும் பேசாமல் வெளியேறி விட்டார்.

அடுத்து ஈஸ்வரனும், ஸ்ரீ யும் உள்ளே செல்ல, இவர்களைப் பார்த்ததும் அழ ஆரம்பித்து விட்டாள்.‌ 

“ஷ்ஷ்ஷ்… என்னதிது. எங்க வீட்டு ஜான்சி ராணி இப்படி எல்லாம் அழலாமா?” என கேலியாக மாமன் கேட்க, 

“வர்ற கோபத்துக்கு… அப்படியே… அறையலாம்னு வருது மாமா.” என ஸ்ரீ அந்த நிலையிலும் உடன்பிறப்பின் மீது ஆத்திரத்தைக் காட்ட,

“டேய்… அவளே பயந்து போயிருக்கா. உன்னோட ஆத்திரத்தை காட்ட இதுதான் நேரமா?” என மச்சானை மாமன் கண்டித்தான்.

“அது இல்ல மாமா… நாம எல்லாம் இல்ல. எதுனாலும் நம்மகிட்ட சொல்றதுக்கு என்ன? எதுக்கு இப்படி ஒரு முடிவ எடுக்கணும்? அப்படியே அம்மா மாதிரி.” என ஒரு சகோதரனாக தனது ஆற்றாமையை தங்கைக்கு உணர்த்தினான். வீட்டில் இத்தனை ஆண்கள் இருந்தும் ஒரு பெண் தன்னுடைய பிரச்சினைக்கு தீர்வாக தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

ஈஸ்வரனுக்கும் அதுவே தோன்றியது. பிரச்சினை எனில் உடனே தற்கொலை மிரட்டல் விடுக்கும் கயல்விழியின் குணம் தெரிந்தது. இதை தன் வாயால் சொன்னால் நன்றாக இருக்காது என அவன் நாகரீகம் காக்க, அதையே மச்சான்காரன் சொல்கிறான்.

“நான் எதுவுமே பண்ணல… ஃப்ரெண்ட்ஸ் தான் கம்ப்பல் பண்ணாங்க.” என‌ மேலும் அழ ஆரம்பிக்க,

“லேசாத்தான் கைய கட் பண்ணியிருக்க. இது பயத்துல எங்கள மிரட்ட பண்ணினது தானே.’’ என ஸ்ரீ கேட்க,

“நெக்ஸ் டைம் ப்ராப்பரா பண்ணு பிரியா. இதக் கூட என் கொழுந்தியாளுக்கு ஒழுங்கா பண்ணத் தெரியலைனு ஒரு பேச்சு வந்துரும்.” என கேலி போல் கூறினாலும் அதில் அத்தனை கோபம் தொக்கி நின்றது… அவளது தற்கொலை முயற்சியால் மாமனுக்கு.

“மாமா…” என சலுகையாக, அழுகையோடு ஈஸ்வரனை அழைத்தவள்,

“என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நல்லவங்க. யாரும் இப்படி பண்ணி இருக்க மாட்டாங்க.” என்றாள்.

“பெர்த் டே பார்ட்டிக்கு கூட்டி போயி குடிக்க சொல்லி கட்டாயப் படுத்தறவங்க தான் நல்ல ஃப்ரெண்ட்ஸா?” என ஈஷ்வரனும் சற்று காட்டமாகவே கேட்க, பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தாள். அவன் கேட்ட விதமே இந்த விஷயத்தில் என் சப்போர்ட் உனக்கு கிடைக்காது என்ற தொனி இருந்தது. 

அவளும் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர் பார்த்தா பார்டிக்கு சென்றாள். 

கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கு வரைக்குமே, நண்பர்களுடன் கும்மாளமாக, எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அதன் பிறகு தான் குடியே ஆரம்பித்தது.

எல்லாருமே ராஜா வீட்டு கன்று குட்டிகள் என்பதை விட, அவிழ்த்து விடப்பட்ட கன்று குட்டிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். கல்லூரியின் கட்டுப்பாட்டிற்கு பயந்து, அவள் கல்லூரியில் பார்த்த நண்பர்களே கூட, இங்கு வேறு மாதிரி தோற்றம் அளித்தனர். 

மெல்ல மெல்ல வேகமெடுத்து காதை கிழிக்கும் டிஜே யின் இசையும், அதனோடு இயைந்த, தனை மறந்த ஆட்டமும் என அவளுக்கு எல்லாமே வியப்பாக இருந்தது.

பிரியாவிற்கு இதெல்லாம் சினிமாவில் பார்க்கும் ஒரு காட்சி. இப்படியெல்லாம் நடக்கும் என்ற கேள்வி அறிவோடு சரி. இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவளுக்கு இதெல்லாம், புதுவிதமாக இருக்க, கண்கள் விரிய ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அவளைப் பொருத்தவரை பிறந்த நாள் எனில், புது ட்ரெஸ் போடுவது, பெரியவர்களிடம் ஆசிர்வதம் வாங்குவது, கோயிலுக்கு போவது, வீட்டில் இனிப்பு செய்வது, அனைவரும் ஹோட்டலுக்கு சென்று பிரியாணி சாப்பிடுவது. அவ்வளவு தான். 

இந்த மாதிரி நண்பர்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து கூடி கும்மாளம் இடுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஸ்ரீ க்கே அந்த அனுமதி இல்லை எனும் பொழுது இவளுக்கு கேட்கவா வேண்டும். சாதாரணமாக ஏதாவது வாங்க வெளியே போக வேண்டும் என்றாலே, ஸ்ரீ யோ அல்லது சித்தப்பாவோ உடன் அழைத்து போய் தான் பழக்கம்.

அதனால் ஆர்வமாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவள் முன் ஒரு கண்ணாடி டம்ளர் நீட்டப்பட, பயத்தோடு பார்த்தாள்.

“இப்படியே பாத்துட்டே இருக்க போறியா? இந்த வயசுல இதெல்லாம் எஞ்சாய் பண்ணாம வேற எப்ப எஞ்சாய் பண்ணப் போற.” என ஸ்வேதா கேட்க, 

“இதெல்லாம் பாத்தேனு தெரிஞ்சாலே எங்க வீட்ல வெட்டி போட்டுருவாங்க.” என்றாள். 

“டோண்ட் பிஹேவ் அ கிட். எப்ப தான் நீயெல்லாம் வளரப் போறீயோ?” என கேட்க அது அவளை சீண்டி விட்டது. 

“நான் ஒன்னும் சின்னப் பிள்ளை இல்ல.‌ எது தப்பு எது சரின்னு எனக்கும் தெரியும்.” என மூக்கின் மேல் கோபம் வந்தது அவளுக்கு.

“அங்க சாக்‌ஷியப் பாத்தியா? உங்க வீட்ல விட அவங்க வீட்ல இன்னும் ஸ்ட்ரிக்ட். அவ எல்லாம் ட்ரின்க் பண்ணல? இது ஜஸ்ட் ஜூஸ் மாதிரி தான். சும்மா ட்ரை பண்ணு.” என ஸ்வேதா கட்டாயப் படுத்த, உள்ளுக்குள் பயம் இருந்தாலும் ட்ரை பண்ணி பாப்போமா என்ற துடுக்குத் தனமும் மெல்ல தலை நீட்டியது.

“வேணும்னா ஒயின் ட்ரை பண்ணு. அதெல்லாம் வீட்ல இருக்குற லேடீஸே கலர் மெயிண்டெய்ன் பண்ண டானிக் மாதிரி குடிக்கிறாங்க. ஸ்மெல் கூட வராது” என கூற,

கொஞ்சம் கொஞ்சமாக ஆசை எட்டிப் பார்த்தது. கூட்டத்துள் தான் மட்டும் தனித்து இருப்பதாகப் பட்டது. அந்த வயதிற்கே உரிய, எதையும் செய்து பார்க்கத் தூண்டும் ஆர்வமும், அசட்டு தைரியமும் கை கோர்க்க, ‘இன்று ஒரு நாள் தானே, இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி எப்ப கெடைக்கும். லைட்டா டச் பண்ணி தான் பாப்போமே.’ என தனக்கு தானே வாதம், பிரதி வாதம் எல்லாம் செய்து பார்த்தவள், நடுங்கியவாறே கண்ணாடி டம்ளரை கையில் வாங்கினாள். ஒரு நொடி அப்பாவின் முறைத்த தோற்றம் வந்து போனது. 

கையில் க்ளாஸை வாங்கும் வரைதான் எல்லாம் அவளது கட்டுப்பாட்டில் இருந்தது. இன்னாரென்று அறிய முடியாத மெல்லிய குருட்டு வெளிச்சம், குருட்டு தைரியத்தை கொடுத்தது. தொண்டையைத் தாண்டி மெல்லிதாக எரிச்சலோடு உள்ளே இறங்கிய வஸ்த்துவும் தன் பங்கிற்கு தைரியம் கொடுக்க, பிறகென்ன… ஊரிலொரு பழமொழி உண்டு. முங்கி குழிச்சுட்டா குளிர்விட்டு போகும்னு. 

அது போல் தான் இப்பொழுது பிரியாவின் நிலையும். மெதுவாக ரத்ததில் கலந்த போதை அவளை மிதக்க வைக்க, மீண்டும் வேண்டுமென செல்கள் தூண்டப்பட, முற்றிலும் நிதானம் இழந்தாள். நாடி நரம்புகளை தூண்டிவிட்ட இசையின் பின்னணியில் தன்னால் கால்கள் ஆட்டம் போட, கும்பல்களுக்கு மத்தியில் சென்று ஆட ஆரம்பித்தாள், தன்னை கைபேசி கேமரா ஒன்று படம் பிடிப்பது தெரியாமல்.

அதன் பிறகு தான் ஸ்ரீ வந்து, அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வீடு சேர்த்திருந்தான். 

காலையில் தொடர்ந்து விடாமல் அடித்துக் கொண்டு இருந்த கை பேசி சத்தத்தில் தான் கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தாள். தலைக்குள் சம்மட்டி கொண்டு அடித்தது போல் அப்படி ஒரு வலி, தலைவலி தாங்க மாட்டாமல் கண்களை திறந்தவள், அலை பேசி எடுத்துப் பார்க்க நண்பர்களின் ஏகப்பட்ட மிஸ்டு கால்ஸ். மெசேஜில் இருந்த லின்கை ஓபன் செய்ய, இதயம் வெளியே குதிக்காத குறை ஒன்று தான். 

இரவு சாப்பிடாமல் படுத்தது, இந்த வீடியோ பதிவேற்றம், அப்பாவிற்கு தெரிந்தால் என்னாகுமோ என்ற பயம் எல்லாம் ஒன்று சேர்ந்து கை கால்கள் வெலவெலத்தது. அறையின் அருகே யாரோ வரும் அரவம் கேட்க அவசரமாக மேஜை மீதிருந்த பேப்பர் கட்டரால் சற்றும் யோசிக்காமல் கையை கிழித்திருந்தாள். 

”காலேஜ்ல யார் கிட்டயாவது வம்பு வச்சுக்கிட்டியா?” என ஈஸ்வரன் கேட்க,

“அதெல்லாம் இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நல்லவுங்க. ஸ்ரீ க்கே தெரியும்.”என்றாள். 

அவர்கள் கண்ணோட்டம் எல்லாம், நண்பர்கள் யாராவது போதையில் இப்படி செய்திருப்பார்கள், இல்லை எனில் நிச்சயதார்த்தத்தில் ஏற்பட்ட அவமானத்தில் அஸ்வின் இப்படி செய்திருக்க வேண்டும் என்பது தான். 

நண்பர்களிடம் வம்பு வைத்துக் கொண்டாயா எனக் கேட்டவர்கள் சமீபத்தில் வேறு யாரிடமாவது வம்பு வளர்த்தாயா எனக் கேட்டிருக்காலாம். அப்பொழுதும் அவன் மீது சந்தேகம் வந்திருக்காது.

“சரி… ரெஸ்ட் எடு. இனிமே இப்படி ஒரு முட்டாள் தனமான முடிவ எடுக்காதே!” என எச்சரித்து விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

கயல்விழியை மட்டும் உடன் இருக்கச் சொல்லிவிட்டு, மற்றவர்களை வீட்டிற்கு அழைத்துப் போகுமாறு ஸ்ரீ யிடம் கூறினான். 

அப்பொழுது அவனது கைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வர, எடுத்துப் பார்த்தவன், ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்ந்தான். சின்ன மாமனை தனியே அழைத்து சென்றான். அவன் கூறிய தகவலைக் கேட்டவருக்கு இரத்தம் கொதித்தது. ஈஸ்வரனே அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தான்.

இரவு கயல்விழியும், சுந்தரியும் உடன் தங்கிக் கொள்ள, அனைவரும் வீடு திரும்பினர். ஈஸ்வரன் சென்னை வந்திருப்பது அறிந்து வருணும் வந்து சேர்ந்தான். வந்த பிறகே அவனுக்கும் விஷயம் தெரிந்தது. 

சின்ன மாமன் ஈஸ்வரனை வீட்டிற்கு அழைக்க… பெரிய மாமன் முகத்தை ஏறிட்டவன், எதுவும் பேசாமல் ஒப்புக் கொண்டான். 

முதன் முறையாக மாமன் வீடு வருகிறான் மருமகன். வரும் சூழ்நிலை தான் சரியில்லை. 

கோவில் யாத்திரை என சென்றிருந்த திலகவதியும் வீடு திரும்பி இருந்தார். 

மகனைப் பார்த்ததும் பேத்தியைப் பற்றி விசாரித்து விட்டு அழ ஆரம்பித்து விட்டார். கையோடு, பேத்தி பிழைத்ததில் குலதெய்வத்திற்கு இரட்டைக் கிடா வெட்டுவதாக வேண்டுதல் வைக்கவும் மறக்கவில்லை.

“நாளைக்கு ஹாஸ்பிடல் வர்றேன் மாமா. நாளைக்கே வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துறலாம்.” என ஈஸ்வரன் கிளம்ப எத்தனிக்க,

“இந்நேரத்துக்கு எங்கடா போற?” என மாமன் கோபமாக,

“நீங்க கூப்டீங்கனுதான், அப்படியே அம்மாச்சியையும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன் மாமா. சங்கரியோட முறைப்படி வந்து தங்குறேன் மாமா?” 

“அப்ப, இப்ப வந்ததுக்கு பேரு என்னடா? மாமன் வீட்டுக்கு வர்றதுக்கு எதுக்குடா முறை?” என சின்னமாமன் கடிய, 

“மருமகனா வர்றதுனா முறை பாக்கணும் மாமா. எம் பொண்டாட்டியோட முறைப்படி அழச்சா… நான் வர்றே.” எனக் கிளம்பினான். 

“மாமா… யாரோட மனசும் இப்ப சரியில்ல. மொதல்ல பிரியா விஷயம் முடியட்டும். நான் வருண் கூட கெளம்புறேன்.” என வெளியேற, மாமனும் கூடவே வெளியே வந்தார். 

“எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க மாமா. மொதல்ல ப்ரியா வீட்டுக்கு வரட்டும். மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.”

“எப்படிடா பொறுமையா போறது. கையில கெடைக்கட்டும். இருக்கு அவனுக்கு.”

“பிரியா வீடு வர்றதுக்குள்ள எங்க இருந்தாலும் அவன தூக்கிட்டு வந்துறலாம்.”

”சரிடா… இப்படி வெளிய தங்கறது எனக்கு மனசு ஒப்பல…” என மாமன் ஆதங்கப்பட,

“எனக்கும் வெளிவேல  இருக்கு மாமா. தங்கச்சி விஷயத்த அக்காகாரி கிட்ட சொல்லலைனு அவ வேற என்ன ஆட்டம் ஆடப் போறாளோ தெரியல.” என மனைவியை நினைத்தும் பயம் வந்தது புதிதாக கணவன் பதவியை வகிப்பவனுக்கு. 

“அங்க தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச மாதிரி. நேர்ல போய் சொல்லிக்கோ.”

“சரி மாமா… நாங்க கெளம்புறோம். ஏதாவது ஆர்டர் பண்ணி, வீட்ல இருக்குறவங்கள சாப்பிட வைங்க. பிரச்சினை வெடிக்கும் போது எல்லார்க்கும் தாங்குற சக்தி வேணும்.” என மாமனிடம் சொல்லிக் கொண்டு இருவரும் வருணுடைய வண்டியில் கிளம்பினர்.

         

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!