தீங்கனியோ தீஞ்சுவையோ
தீங்கனியோ தீஞ்சுவையோ
“ஹே தூங்குமூஞ்சி இன்னுமா தூங்கிட்டு இருக்க.. எழுந்துடு டி.”
“டேய் நேத்து நைட்டு பேசிட்டு ஒரு மணிக்கு தானே போனை வெச்ச. இப்போ ஏன்டா காலங்காத்தாலேயே போன் பண்ணி எழுந்துக்க சொல்லி உயிரை வாங்குறே?” என்று பேசியபடியே படுக்கையில் மீண்டும் புரண்டு படுத்தாள்.
நல்ல உறக்கத்தை இழக்க அவள் மனதுக்கு விருப்பமே இல்லை. அந்த உறக்கத்தை தன்னை விட்டு செல்லவிடாதபடி இறுக்கமாய் கண்களை மூடிக் கொண்டு தூக்கத்தை இறுக்க பிடித்துக் கொண்டு அவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள். அவன் போனை வைத்ததும் மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து அந்த தூக்கத்தை தொடர்வதற்காக.
ஆனால் அவனுக்கு தான் அவளது தூக்கத்தை தொடரவிடும் எண்ணமில்லையே. அந்த எண்ணத்தோடு மீண்டும் பேசினான்.
“ஏன்டி மணி பதினொன்னரை ஆகுது. இது உனக்கு காலங்காத்தாலயா? நீ தூங்குவேனு தான் இவ்வளவு நேரம் எழுப்பாமா இருந்தேன். ஆனால் மணி பதினொன்னரை ஆகுது.ஒழுங்கா எழுந்துடு.”
“ப்ளீஸ் ப்ரணவ் எனக்கு தூக்கம் தூக்கமா வருது. அம்மாவே என்னை எழுப்பாமா தூங்கட்டும்னு விட்டுட்டாங்க. ஆனால் நீ ஏன் என்னை எழுந்துக்க சொல்லி தொல்லை பண்றே.” என்றபடி மீண்டும் போர்வையை இறுக்கப் போர்த்திக் கொண்டாள்.
“ஹே லூசு மேட்னி ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணி இருக்கேன். ஒழுங்கா படுக்கையில இருந்து எழுந்து கிளம்பி ரெடியா இரு. நான் வந்து கூட்டிட்டு போறேன். சரியா ” என அவன் சொன்னது தான் தாமதம் அதுவரை தூக்கத்தை விடாபிடியாக இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு இருந்தவள் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
“டேய் உண்மையாவா சொல்ற?”
“ஆமாம்டி… உனக்கு பிடிச்ச அஜித் படத்துக்கு தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்… சோ சீக்கிரமா கிளம்பி ரெடியா இரு… நான் வந்துட்டே இருக்கேன்..”
“ஆனால் உனக்கு விஜய் தானே பிடிக்கும் ப்ரணவ்.எனக்காக தான் அஜித் படம் புக் பண்ணியா?” என்றாள் கண்களில் ஆச்சர்யம் மின்ன.
“உனக்காக எல்லாம் இல்லை. அந்த பட ஹீரோயின்காக தான் புக் பண்ணேன். சே என்ன அழகு தெரியுமா அந்த ஹீரோயின். சீக்கிரமா கிளம்பு நான் ரொம்ப ஆவலா தியேட்டர்க்கு போய் அந்த ஹீரோயினை சைட் அடிக்கலாம்னு காத்துக்கிட்டு இருக்கேன்.”
“சரிங்க சரிங்க சார். உங்க ஹீரோயினை நீங்க சைட் அடிக்கிறதுக்காகவே நான் சீக்கிரமா கிளம்பி தொலைக்கிறேன். நீயும் ஒழுங்கா டைம்க்கு வந்து சேரு. போன வாட்டி மாதிரி நான் கோபப்படுற அழகை பார்த்து ரசிக்கணும்னு சொல்லி இந்த வாட்டியும் ஏமாத்தி தப்பிக்க முடியாது. லேட்டா வந்தா ஓட ஓட அடிப்பேன். என் தல படத்தை ஒரு சீன் கூட மிஸ் பண்ணாம நான் பார்க்கணும். காட் இட். ”
“காட் இட் காட் இட் தாயே. பாய்… சீ யூ… ” என்று அலைபேசியை வைத்தவனின் இதழ்களில் குறுநகை படர்ந்தது.
ஹே லூசு நான் அந்த ஹீரோயின் தரிசனத்துக்காக ஒன்னும் காத்திக்கிட்டு இல்லை. என் மனசை திருடிட்டு போன இந்த ஹீரோயின் தரிசனத்துக்காக தான் டி காத்துக்கிட்டு இருக்கேன் என்று மனதில் நினைத்தபடியே வண்டியை எடுத்தான்…
இங்கோ இவள் வழக்கத்துக்கு மாறாய் நான்கு உடைகளை எடுத்து வைத்து குழம்பி கொண்டு இருந்தாள். நான்கு உடைகளும் வெவ்வெறு வண்ணத்தில் இருந்தது. அந்த நான்கு வண்ணங்களும் அவனுக்கு பிடித்த நிறங்கள்.
இதில் எந்த வண்ணத்தில் அவன் உடை அணிந்து வந்து இருப்பான் என்பதே அவளது இப்போதைய தலையாய குழப்பம். அவன் அணிந்து வரும் நிறத்திலேயே தானும் உடையணிந்து அவனை அசத்த வேண்டும் என எண்ணியபடியே மூன்று உடைகளை ஒவ்வொன்றாக விலக்கிவிட்டு கடைசியாக அவனுக்கு மிகவும் பிடித்த நீல நிறத்தில் உடை அணிந்தாள்.
பின்பு தன்னை ஒப்பனை செய்துக் கொண்டு கண்ணாடியில் முகம் பார்க்க அவள் அழகின் கொள்ளளவு கூடிப் போய் இருந்தது.
அவள் பறக்கும் முத்தத்தை கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்திற்கு கொடுத்துவிட்டு திரும்பிய நேரமும் அவள் அறைக்குள் அவன் நுழைந்த நேரமும் சரியாய் இருந்தது.
அவள் வெட்கத்தில் பட்டென முகத்தை கீழே குனிந்து இதழ்களை கடித்து துளிர்த்த வெட்கத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாள். இந்த முக பாவனைகள் தான் அவனை இன்னும் அவள்பால் அதிகம் ஈர்த்தது.
“பச்சை மிளகாய்” என்றான் சிரித்துக் கொண்டே.
அவள் புரியாமல் அவனைப் பார்க்க அப்போது தான் மனதில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லி விட்டோம் என்பதை உணர்ந்தான்.
“அது ஒன்னும் இல்லை. எப்போ பார்த்தாலும் பச்சை மிளகாய் மாதிரியே திட்டிட்டே இருக்கியே எப்போ தான் தேன் மாதிரி பேச போறியோனு நினைச்சு பச்சை மிளாகாய்னு சொன்னேன். ” என்று ஒருவாறு சமாளிக்க முயன்றான்.
“என்னடா ப்ரணவ் உனக்கு என்ன பைத்தியம் ஏதாவது பிடிச்சுடுச்சா? நீ உள்ளே வந்த அப்போ நான் எங்கே உன்னை திட்டுனேன். நீயா வந்தே… என்னை பார்த்து பச்சை மிளகாய்னு சொன்னே… என்னடா ஆச்சு? ஏன் அப்படி சொன்ன? ”
“ஹே போன்ல என்னை திட்டுனேல. அதுக்காக தான் இப்போ அப்படி சொன்னேன்.”
“நான் அப்போ அப்படி சொன்னேனு இப்போ நீ இப்படி சொல்றேனு சொல்றது கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம இருக்கு.”
“சம்பந்தம் இல்லைனா சம்பந்தம் படுத்திக்கோ… ஏன் டி அதையே கேட்டு உசிரை வாங்கிறே.”
“சரி சரி எப்படியோ போய் தொலை ” என்று அவள் முன்னே நடக்க இவன் தன் தலையின் மீது தட்டிக் கொண்டான்.
அவள் வெட்கத்தைப் பார்த்தும் இவனுக்கு மிளகாய் செடியின் பூ தான் நியாபகத்துக்கு வந்தது. மிளகாய் பூ தன் அழகை யாருக்கும் காட்டாமல் தரையை நோக்கி கீழே குனிந்தபடி தான் வளரும் அதைப் போல தான் அவள் வெட்கப்பட்டு கீழே குனியும் போதும் இருந்தது. உடனே ஆர்வத்தில் பச்சை மிளகாய் என்று விட்டான். அந்த ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அவளின் ஓராயிரம் கேள்விகளுக்கு அகப்பட்டு கொண்டதை நினைத்து பெருமூச்சு விட்டான்.
“இனி அவள் கிட்டே கேர்ஃபுல்லா இருக்கணும் டா ப்ரணவ்… இப்படிலாம் உளறி கொட்டி அவள் கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்காதே டா.” என எண்ணிமிட்ட படியே ஹாலுக்கு வந்தான்.
இவர்கள் இருவரையும் கண்ட மீனாட்சி ஆச்சர்யமாய் விழி விரித்தார்.
“டேய் என்னடா ப்ரணவ் உனக்கு தான் லாவண்டர் கலரே பிடிக்காதே இன்னைக்கு என்னன்னா லாவண்டர் கலர்ல ஷர்ட் போட்டு இருக்கே? அடியே உனக்கு தான் நீல கலரே பிடிக்காதே.. அந்த சுடிதாரை நான் ஆசையா உனக்கு வாங்கிட்டு வந்த அப்போ எனக்கு இந்த கலர் பிடிக்கலைனு ஒதுக்கி வைச்சவ இன்னைக்கு என்னன்னா இந்த டிரஸ்ஸை போட்டு இருக்கே?”
“அது ஒன்னும் இல்லம்மா. இந்த சுடிதார் இன்னைக்கு கபோர்ட்ல பார்க்கும் போது நல்லா இருந்தது.அதான் போட்டேன்.”
“அத்தை இந்த லாவண்டர் ஷர்ட்டை தவிர மீதி எல்லா துணியையும் அம்மா துவைக்க போட்டாங்களா அதான் இந்த ஷர்ட் போட வேண்டியதா போச்சு.”
“ஓ அப்படியா… நீங்க ரெண்டு பேர் சொன்ன காரணத்தை நான் உண்மையாவே நம்பிட்டேன்… ” என்று அவர் சொன்ன பாவனையிலேயே நம்பாத தன்மை தெரிந்தது.கூடவே அந்த கேலி சிரிப்பு வேறு.
அவருக்கு தெரியாதா அவனைப் பற்றியும் அவளைப் பற்றியும்?..
சிறுவயதில் இருந்தே இங்கேயே சுற்றி வளர்ந்த தன் அண்ணன் மகனின் சின்ன சின்ன அசைவுகளும் மீனாட்சிக்கு அத்துப்படி. தான் வளர்த்து எடுத்த பிள்ளை தன்னிடமே எதையோ மறைப்பதை ஊகிக்க தெரியாதவரா அவர்?
தன் தாயின் கேலி பாவனையை தாங்க முடியாமல் உத்ரா இடையிட்டு பேசினாள்.
“அம்மா சரி போ. உன் குழந்தை வந்து இருக்கான் பாரு.போய் ஏதாவது திங்குறதுக்கு கொண்டு வா..”
“ஏன் டி உனக்கு சாப்பிட வேணும்னா நேரடியா கேளு. அதுக்கு ஏன் ப்ரணவ் பேரை சொல்லி கேட்கிற? ”
“சரிம்மா தாயே. எனக்கு பயங்கரமா பசிக்கிது. கொஞ்சம் சோத்தை கொண்டு வரியா. ”
“சரி சரி கொண்டு வரேன்” என்றபடி அவர் அங்கிருந்து நகர்ந்து உள்ளே சென்றார். அதைக் கண்டு பெருமூச்சுவிட்டவள் நேராக ப்ரணவ்விடம் திரும்பினாள்.
இ
ப்போது தான் நிமிர்ந்து அவனை முழுதாக கவனித்தாள். இவளுக்கு பிடித்த லாவண்டர் நிறத்தில் உடை அணிந்து இருந்தான்.
அவனுக்கு பிடித்த நிறத்தை எடுத்து இவள் உடை அணிந்து வர அவனோ இவளுக்கு பிடித்த நிறத்தில் உடை அணிந்து இருந்தான்.
இவள் அணிந்த அதே நிறத்திலேயே அவனும் உடையணிந்து வந்து இருந்தால் மனம் மகிழ்ந்து இருக்கும் உண்மை தான். ஆனால் இப்போதோ மனம் பேரானந்தத்தில் திளைத்து இருந்தது. உடை பொருத்தத்தை எண்ணி அல்ல… மன பொருத்தத்தை எண்ணி.
நான் அவனுக்காக யோசித்து இருக்கிறேன். இவன் எனக்காக யோசித்து இருக்கிறான். உதட்டில் பூத்த புன்முறுவலோடு இவள் அவனைப் பார்க்க அவனும் இவளைப் பார்த்தான்.
எனக்கு பிடித்த இந்த நீல நிற சுடிதாரில் அவள் அழகாய் இருக்கிறாள் என இவன் மனம் எண்ணமிட அவளோ லாவண்டர் கலர் இவனுக்கு இவ்வளவு பொருத்தமாய் இருக்கிறதே என எண்ணியபடியே அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளுக்கு ஏற்றவாறு இவனும், இவளுக்கு ஏற்றவாறு அவனும் தங்களை தகவமைத்து கொள்ளும் போதே அங்கே காதல் தகவல் சொல்லாமல் பிறந்துவிட்டதை எண்ணி இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் புன்னகைத்து கொண்டனர்.
💐💐💐💐💐💐💐
தியேட்டரின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு உத்ராவிடம் திரும்பி “அங்கே இருக்க என்ட்ரன்ஸ்ல நில்லு. நான் பைக் பார்க் பண்ணிட்டு வரேன். இந்தா டிக்கெட்டை வெச்சுக்கோ. ” என்று அவள் கையில் கொடுத்து விட்டு சென்றான்.
இவன் நேரமோ என்னவோ தெரியவில்லை அங்கே பார்க்கிங்கில் கூட்டம் அலைமோதியதால் வெகு நேரம் கழித்தே பார்க்கிங் ஏரியாவில் பைக்கை பார்க் செய்துவிட்டு வெளியே வந்தான்.
நல்லவேளை அவளிடம் டிக்கெட்டை கொடுத்தோம். இல்லை என்றால் என்னால் அவள் முதல் காட்சியை தவறவிட நேர்ந்து இருக்கும் என்று எண்ணியவாறே வந்தவனுக்கு அதிர்ச்சி.
அங்கே அவள் திரையரங்குக்குள் செல்லாமல் இவனது வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள். தனக்கு பிடித்த நாயகனின் தரிசனத்தைக் கூட காணாமல் தனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாளே என்று எண்ணிய போதே அவன் மனதில் காதல் சுரந்தது.
அவளருகே வந்தவன் “ஹே லூசு அதான் உன் கிட்டே தான் டிக்கெட் கொடுத்து வந்தேன் இல்லை. உள்ளே போய் இருந்து இருக்கலாம்ல. பாரு இப்போ என்னால என்ட்ரி சீனை மிஸ் பண்ணிட்டே. வா வா சீக்கிரமா போலாம்” என்று அவளை அவசரப்படுத்தியபடி அவளது கைகளை இறுகப் பற்றி உள்ளே அழைத்து சென்றான்.
அவர்கள் உள்ளே நுழைவதற்கும் ஹீரோயின் என்ட்ரிக்கும் சரியாக இருந்தது.
“ஹீரோயின் என்ட்ரியைப் பார்க்க உனக்கு கொடுத்து வெச்சு இருக்கு. ம்ம்ம் எனக்கு தான் ஹீரோ என்ட்ரிக்கு கொடுத்து வைக்கல. ” என அவள் சொல்ல அவள் தலையிலேயே செல்லமாக தட்டியவன்
“நீ எனக்கு வெயிட் பண்ணாம ஒழுங்கா உள்ளே வந்து இருக்கலாம்ல… அப்போ ஹீரோ என்ட்ரி சீனை மிஸ் பண்ணி இருக்க மாட்டே இல்லை… ” என்று கேட்டான்.
“அது எப்படி ப்ரணவ்… உன்னை விட்டுட்டு நான் மட்டும் தனியா வருவேன்? அதெல்லாம் எந்த ஜென்மத்துலயும் நடக்காது… நான் எப்பவும் உன் கூட தான் வருவேன், உன் கூட தான் இருப்பேன்… ” என்றவளின் வார்த்தைகளில் காதல் சாயல்.
அந்த சாயலைக் கண்டவன் நெகிழ்ந்துப் போய் அவளைப் பார்க்க அந்த பார்வை மாற்றத்தில் தன்னிலை அடைந்தவள்
“ஹே எருமை சீக்கிரமா உட்காரு… பின்னாடி உட்கார்ந்து இருக்கிறவங்க எல்லாரும் உட்கார சொல்லி கத்துறதுக்கு முன்னாடி ஒழுங்கா உட்கார்ந்து தொலை டா மெட்டல் மண்டையா” என்று அவள் சொல்ல உடனே சீட்டினில் அமர்ந்தான். ஆனால் வாய் மட்டும் தன் போக்கில் புலம்பிக் கொண்டு இருந்தது.
சே இவளுக்கு இதே வேலையா போச்சு… எப்போ நான் ரொமாண்டிக்கா லுக் விட்டாலும் இப்படியே ஏதாவது பேசி எனக்கு பல்ப் கொடுத்துடுறா..
எல்லாம் உன் நேரம்டா ப்ரணவ்.. என புலம்பிக் கொண்டு இருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்தவளது இதழ்களில் இளநகை துளிர்த்தது.
பின்பு அவள் மும்முரமாய் படத்தைப் பார்த்து கொண்டு இருக்க இங்கோ அவன் மொபைலை நோண்டிக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்து அவளுக்குள் லேசாக கோபம் எட்டிப் பார்த்தது.
“ஹே ப்ரணவ், உனக்கு பிடிக்கலைனா படத்தை புக் பண்ணாமயே இருந்து இருக்கலாம்ல… போனை நோண்டிக்கிட்டு இருக்கிறதுக்கு எதுக்கு நாம தியேட்டருக்கு வரணும்?”
“ஹே அதெல்லாம் எதும் இல்லைடி.. நீ படத்தைப் பாரு… எனக்கு இம்பார்டென்ட் வொர்க்… அதான்… “
“என்ன இம்பார்டென்ட் வொர்க் சார்க்கு? இதே விஜய் படமா இருந்து இருந்தா போனை வெளியே எடுத்து இருந்து இருப்பியா…. தலைவா தலைவானு எத்தனை தரம் கத்தி இருப்பே? போ… இதுக்கு நீ என்னை படத்துக்கு கூட்டிக்கிட்டு வராமயே இருந்து இருக்கலாம்.”
“ஹே லூசு… அதெல்லாம் எதுவும் இல்லை.. படத்தைப் பாரு டி… என் கிட்டே பேசுற டைம்ல அங்கே பாரு பாதி சீன் போயிடுச்சு.”
“சீ போ.. எக்கேடோ கெட்டு போ… ” என்று அவள் சொல்லிவிட்டு திரைப்படத்தில் கவனத்தை செலுத்தினாள். அவளை ஒரு தரம் திரும்பி பார்த்து புன்னகைத்தவன் மீண்டும் செல்போனில் ஆழ்ந்துப் போனான்.
“ஹே ப்ரணவ்… போன்ல கவுந்து கெடந்தது போதும்… இன்டர்வெல் விட்டாங்க… எனக்கு பசிக்கிது… வா வெளியில போலாம்… ”
“ஏன் டி காலையிலே தானே நல்லா கொட்டிக்கிட்டே… அதுக்குள்ளே மறுபடியும் பசிக்குதா? சரியான சோத்துமாடு… வா போலாம்..”
” ஓய் யாரை சோத்துமாடுனு சொல்ற?”
” காதும் போச்சா… உன்னை தான் டி சொன்னேன்… சரியா கேட்கலயா??… வேணும்னா இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லட்டுமா… ”
” ஒன்னும் வேணாம் மகா ராசா… ஒன்னும் வேணாம்… ” என பேசிய படியே வெளியே வந்தனர்.
அவளிடம் கேட்காமலேயே கடைக்காரரிடம் திரும்பி ஒரு black current ice cream, popcornஐ ஆர்டர் செய்தான்.
அவள் பெருமையாக திரும்பி அவளைப் பார்த்தாள். தனக்கு என்ன பிடிக்கும் என்பதை தன்னை விட தெளிவாக இன்னொருவர் அறிந்து வைத்து இருப்பதில் தான் மனதுக்கு எவ்வளவு பெரிய கர்வம்.
அவன் அவளைப் பார்த்து குறும்பாய் கண் சிமிட்ட பட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள்.
வேறு பக்கம் திரும்பிய அவள் முகத்திலும் புன்னகையின் தடம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த அவன் முகத்திலும் புன்னகை தடம்.
“ஓய் எவ்வளவு நேரம் தான் அந்த பக்கமாவே திரும்பி இருக்கிறதா உத்தேசம்… இங்கே பாரு ஐஸ்க்ரீம் உருகுது.” என்று அவன் சொல்ல வேகமாக திரும்பி ஐஸ்கீரிமை வாங்கிக் கொண்டவள் அப்போது தான் கவனித்தாள் தூரத்தில் ஒரு மங்கையர் கூட்டம் இவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்ப்பதை…
“டேய் ப்ரணவ் அங்கே பாரு டா… அந்த பொண்ணுங்க உன்னையே சைட் அடிக்கிறா மாதிரி தெரியுது…”
“மாதிரி எல்லாம் இல்லை… உண்மையாவே சைட் தான் அடிக்கிறாங்க… அதுவும் அந்த ப்ளூ சுடிதார் போட்டு இருக்கிற பொண்ணு செமயா இருக்கா இல்லை..”
“ஹஹ்ஹ்ம் செம சூப்பரா இருக்கா…. இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் செமயா இருக்கும்… சிம்பன்ஸி அப்புறம் கொரில்லா ரெண்டையும் சேர்ந்து பார்த்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்… ”
“அடிங்க கொழுப்பா… மேடம்க்கு லைட்டா பொறாமை மாதிரி தெரியுதே…. ”
“யாருக்கு பொறாமை அதெல்லாம் எதுவும் இல்லையே…” என்றபடி அவன் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
அந்த இறுகப் பற்றுதலில் பொறாமை மட்டும் அல்ல அவனை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாத விடாப்பிடி தன்மையும் தெரிந்தது.
எத்தனையோ படங்களில் பார்த்து இருக்கிறான் இந்த காட்சியை, நாயகி தன் நாயகனின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு அவன் தனக்கு சொந்தமானவன் என்ற கர்வ மிதப்போடு வேற்று பெண்களை கடந்து செல்வாளே அதை எல்லாம் வெறும் காட்சி என்று தான் நினைத்தான்.
ஆனால் இப்போது தான் புரிகிறது அது வெறும் காட்சி மட்டுமல்ல உண்மையான காதலின் சாட்சியும் கூட என்று.
அவளைத் திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தான் இவன். ஆனால் அவளோ அவன் பின்னே வரும் பெண்களை தான் அவன் பார்க்கிறான் என மாறாக நினைத்துக் கொண்டாள்.
“டேய் அந்த பொண்ணுங்களை சைட் அடிச்சா கண்ணை நோண்டிடுவேன்… ஒழுங்கா நேரா பார்த்து நட டா” என்று மிரட்டியவளைப் பார்த்து சிரிக்க தான் முடிந்தது அவனால்
அட பைத்தியக் கார பெண்ணே… நான் உன்னைத் தான் பார்க்கிறேன் என இன்னுமா உனக்கு தெரியவில்லை?
அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணும் இந்த குறுகிய கண்களுக்கு குளுமை தரும் அந்த நிலாவின் பிராகசம் நீ தானடி… உன் நிலையான பிரகாசம் தவிர்த்து என்னை கண்ணடித்து அருகில் ஈர்க்க நினைக்கும் நட்சத்திரங்கள் ஒன்றும் தெரியவில்லையடி இந்த பேதமை கண்களுக்கு. என்று காதல் பித்தில் மனதுக்குள் புலம்பிய படி மீண்டும் வந்து தனது இருக்கையில் அமர்ந்தான்.
படம் மீண்டும் துவங்கி ஒரு கட்டத்தில் இறுதிக் காட்சியும் முடிவுற்றதன் அறிவுப்பாக ஒளிர்விளக்குகளும் ஒளிர்ந்தது… உடனே எழுந்து வெளியே செல்ல முயன்றவளின் கைகளைப் பற்றித் தடுத்தவனை கேள்விக்குறியோடு திரும்பி பார்த்தாள்.
“உட்காரு உத்ரா… ”
“ஹே அதான் படம் முடிஞ்சு போச்சு இல்லைடா… வா போலாம்…. ”
“உட்காரு டி… அடுத்த ஷோவுக்கும் சேர்த்து இப்போ தான் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணேன்… என்னாலே ஹீரோ என்ட்ரி சீனை மிஸ் பண்ணிட்டே இல்லை… நானும் டிக்கெட் புக் பண்ண போனை பார்த்துட்டே படத்தை மிஸ் பண்ணிட்டேன்… அதனாலே மறுபடியும் முதலிலே இருந்து பார்க்கலாம்… ” என சொல்லியவனை ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடு பார்த்தாள் இவள்.