தீங்கனியோ தீஞ்சுவையோ

தீங்கனியோ தீஞ்சுவையோ

கண்ணாடியின் முன்பு அரை மணி நேரமாக நின்று கொண்டு இருந்த உத்ராவுக்கு மனது திருப்திப்படவே இல்லை…

தன் உடலை இப்படியும் அப்படியுமாக திருப்பி பார்த்தாள். முகத்தில் இருந்த அந்த பொட்டை எடுத்துவிட்டு அவள் முதல் முதலாக தேர்வு செய்து, பிறகு வேண்டாம் என விலக்கி வைத்த அந்த பொட்டையே எடுத்து மீண்டும் நெற்றியில் சூடிக் கொண்டாள். இப்போது  கண்ணாடியில் தெரிந்த அவளது உருவம் அவளைத் திருப்திப்படுத்த தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள்.

வாசலில் நின்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்  கொண்டு இருந்த அவளின் தாய் மீனாட்சி அவள் வெளியே கிளம்பி கொண்டு இருப்பதைப் பார்த்து ” எங்கே கிளம்பிட்டற ” என்றுக்  கேட்க அவளோ திரும்பி ” ப்ரணவ்வைப் பார்க்க போறேன் மா… ஈவ்னிங் வர கொஞ்சம் லேட் ஆகும்… அவனே என்னை கூட்டிட்டு வந்து விட்டுடுவான்… நீ கவலைப்படாம இரு மா”  என்றபடி தனது செருப்பை மாட்ட திரும்பினாள்.

” சரி டி… பார்த்து போயிட்டு வா… அந்த ப்ரணவ் எனக்கு ஒரு வாரமா போன் பண்ணவே இல்லை… அவனைப் பார்த்ததும் இந்த அத்தையை மறந்துட்டானு கேளு….  போன் பண்ணி விசாரிக்கக் கூட நேரம் இல்லையானு நல்லா அவனைத் திட்டி விடு டி… ” என்றவரின் வார்த்தைகளிளோ தன் அண்ணன் மகன் தன்னை அழைத்துப் பேசவில்லையே என்ற ஆற்றாமை தான் வெளிப்பட்டது.

அதைக் கண்டு கொண்டவள் புன்முறுவலுடன் அன்னையைப் பார்த்தாள்.

” கேட்டுடலாம் மா கேட்டுடலாம்… அந்த வெண்ணெய் எனக்கு கூட ஒரு வாரமா போன் பண்ணல. இன்னைக்கு காலையிலே திடீர்னு போன் பண்ணி மீட் பண்ணனும்னு சொன்னான். அதான் கிளம்பினேன்… அங்கே போய் அவனை திட்டு திட்டுனு திட்டுறேன்… அதுக்கு முன்னாடி  இப்போ கிளம்புறேன் அம்மா.”

” சரி டி சரி பார்த்துப் போயிட்டு வா… நான் திட்டுனேன்னு மறக்காம அவன் கிட்டே சொல்லு… ”  என்று சொன்னவரைப் பார்த்து ” டன் அம்மா…பாய் ” என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்து சென்றாள், அவனைக் காண்பதற்காக…

அவன் சொன்ன பேருந்து நிறுத்தத்திற்கு வந்து  பத்து நிமிட நேரத்திற்கு மேலாக ஆகிவிட்டது. அவன் வரவுக்காய் சாலையிலேயே விழியை வைத்துக் கொண்டு இருந்த மனமோ லேசாக சலித்துக் கொண்டது.

இவனைப் பார்ப்பதற்காக ஒரு மணி நேரமாய் அவள் கண்ணாடியின் முன்பு செய்து கொண்டு இருந்த அலங்காரங்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்துக் கொண்டு இருந்தது.

இதற்கு தான் சொன்ன நேரத்திற்கு அவள் எப்போதும் வருவதே இல்லை.ஒரு அரை மணி நேரம் கழித்து தான் வருவாள்.அப்போது தான் அவனுக்காக செய்யப்பட்ட எல்லா முன்னேற்பாடும் அலங்காரமும் வீணாகாமல் அவன் முன்பு அழகு பதுமையாய் ஜொலிக்க முடியும்.

ஆனால் இந்த முறை ஒரு வாரம் பார்க்கவில்லையே என்ற பிரிவின் வேதனை உந்தியதாலோ என்னவோ சீக்கிரமாக வந்து தொலைத்துவிட்டாள்.

இதோ முழுதாய் பதினைந்து நிமிடம் முடிந்துவிட்டது.இன்னும் அவன் வரவில்லை. அவன் வருவதற்குள் தான் செய்த அலங்காரங்கள் எல்லாம் வீணாகிவிடுமோ என்ற தவிப்புடன் கைக்கடிகாரத்தை நோக்கிய நேரம்,  அவளின் முன்பு உருமிக் கொண்டு வந்து நின்றது ஒரு பைக்.

இவள் நிமிர்ந்து கண்களை கூர் அம்பாக்கி அவனை முறைத்தாள். அவனோ கண்களில் பரிதாபத்தை வரவழைத்துக் கொண்டு ” ட்ராபிக் டி… அதான் லேட் ஆகிடுச்சு ” என்றான்.

அவள் மீண்டும் அவனை உறுத்து பார்த்துவிட்டு பார்வையை விலக்கிக் கொண்டாள்…  அந்த பார்வையிலேயே அவன் புரிந்து கொண்டான்  இந்த விளக்கம் போதாது எனக்கு மேலும் விளக்கம் வேண்டும் என்பதை தான் அந்த பார்வை  உணர்த்தியது.

அதை உணர்ந்தவனாய் ” இல்லைடி கிளம்பும் போது அந்த விளங்காம போன விஸ்வா வந்து மேலே சாப்பாட்டைக் கொட்டிட்டான்… அதான் மறுபடியும் போய் குளிச்சுட்டு வேற ட்ரஸ் மாத்திக்கிட்டு ரெடியாகிட்டு வந்தேன்… ”

” என் விஸ்வா டார்லிங்கை விளங்காதவன்னு சொன்ன உன்னை விளக்கமாத்தால அடிப்பேன்… நீ தான் கவனமா நடந்து வந்து இருக்கணும்… சரி இந்த காரணத்தை முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்… எதுக்கு ட்ராபிக் அது இதுனு சொல்லி ரீல் விட்ட… ”

“அது இல்லைடி சும்மா தான்… நீ என்னை துருவி துருவி கேள்வி கேட்கிற அழகை ரசிக்கலாம்னு தான் பொய் சொன்னேன்… “

” நல்லா சமாளிக்கிற டா… சமாளி சமாளி… சரி எதுக்கு அவசரமா வர சொன்ன ??” என உதடுகளின் ஓரம் துளிர்த்த சிரிப்பை உதடுகளுக்குள்ளேயே அடக்கிய படியே பேசினாள்… அவள் முகத்தில் வெட்கத்தின் சாயல் மெல்ல மெல்ல அரும்ப அதை மறைக்கும் பொருட்டு அவள் கீழே குனிந்து கொண்டாள்.

அவளின் இந்த சிரிப்பையும்  வெட்கத்தையும் காண்பதற்காக தானே அவன் அத்தனை பொய்யை சொன்னான்.  அதன் பிரதிபலனால் விளைந்த அவள் முக உணர்ச்சிகளையும் அவள் செய்கையினுள்  எழும் மாற்றங்களையும் தன் பார்வையால் விழுங்கிக் கொண்டு இருந்தான் அந்தக் கள்வன்.

அவள் மீண்டும் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனின் பார்வையின் வீச்சு தாங்காமல் அவள் தலை மீண்டும் குனிந்துக் கொண்டது.  அடுத்த வார்த்தை பேச முடியாதவாறு தொண்டையின் இடையில் சக்கரம் ஒன்று குறுக்கே மாட்டி சுழன்றது.

என்ன இது நான் இப்படி எல்லாம் அமைதி ஆகுபவள் இல்லையே. இவனிடம் பட படவென்று பேசும் நான் ஏன் சில நாட்களாக இவன் கண்ணைப் பார்த்து பேச முடியாமல் தவிக்கிறேன்?

என்ன அவஸ்தை இது?

சிறு பிள்ளையில் இருந்து தெரிந்த ஒருவனிடம் ஏன் சில நாட்களாக மட்டும் ஒருவித தயக்கத்தை உணர்கிறேன்.இந்த தயக்கத்தின் பெயர் தான் என்ன?? என்று அவள் ஆழ்ந்து யோசித்துக் கொண்டு இருந்த நேரம் அவன் குரல் சிந்தனை ஓட்டத்தை தடை செய்தது.

“என்ன மேடம் ஏன் சிலை மாதிரி ஆகிட்டிங்க”

” ஒன்னும் இல்லைடா சும்மா சிலை மாதிரி நின்னா எப்படி இருக்கும்னு பண்ணி பார்த்தேன்… நல்லா தான் இருக்கு… “

” ஹ்ஹ்ஹ்ம் ஆமா ஆமா ரொம்ப நல்லா தான் இருக்கும்… சரி ஐயாவை ஒரு வாரம் பார்க்கவே இல்லையே… மிஸ் பண்ணியா என்னை??”

” ஆமாம் இந்த மூஞ்சை மிஸ் பண்றது தான் ஒரு கேடாக்கும்… அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை… உன் அத்தை மீனாட்சி தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணதா சொல்ல சொன்னாங்க… “

” அப்போ நீ என்னை மிஸ் பண்ணலயா டி” என மனதினில் ஏங்கிய தவிப்பை மறைத்தபடி அவன் கேட்க அவள் இல்லையென்று உதட்டைப் பிதுக்கினாள். அவளின் அந்த பதிலில் அவனது  மனம் பாரமானது.

இவளிடம் சிறிது விலகி இருந்தால் தன்னைத் தேடுவாள் என நினைத்த நினைப்பு எல்லாம் பொய்யாய் போனதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவள் எளிதில் மறக்க கூடிய நபர்களின் பட்டியலில் தன் பெயரும் இருப்பதை அவன் விரும்பவே இல்லை. அவள் தன்னை மறந்து போனாள் என்ற உணர்வே இதயம் வரை ஏதோ ஈட்டியை பாய்ச்சியது..

ஏனோ பிடித்தவர்களால் மறக்கப்படுவதை இதயம் ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறது. தனக்கான முக்கியத்துவத்தை எதிர்பார்த்து காத்து கிடக்கிறது. அந்த எதிர்பார்ப்பு பூரத்தியடையவில்லை என்றதும் மனம் கோபம் கொள்கிறது. அதே போல் தான் இப்போது ப்ரணவ்விற்கு உத்ராவின் மீது கோபம் வந்தது.

இவளிடம் பேசாமல் இருக்க இந்த ஒரு வாரம்  பட்ட வேதனையை அவன் மட்டும் தானே அறிவான். ஆனால் இவளோ எந்த மாற்றமும் இல்லாமல் நடந்துக் கொள்கிறாளே.

ஒரு வேளை எனக்குள் தோன்றிய காதல் இவளுக்குள் இன்னமும் தோன்றவில்லையோ??? என்ற கேள்வி அவன் முன் பெரியதாக விஸ்தாரம் எடுத்து நின்றது.

” ஹலோ மிஸ்டர் என்ன வானத்துல புதுசா எதுவும் தெரியுதானு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்களா??… அப்படியே வானத்தையே வெறிச்சு பார்த்துட்டு இருக்க… ”

” அதெல்லாம் ஒன்னும் இல்ல உத்ரா…. சரி நான் கிளம்புறேன்…. ” என்றவனது குரலும் முகமும் அவள் மனதை வருத்தியது

” டேய் என்னாடா.. இப்போ தானே வந்த அதுக்குள்ளே கிளம்புறேனு சொல்ற??” என்று தன்னை விட்டு கிளம்பும் அவனை இருக்க வைக்க முயற்சித்தாள்.

” இல்லை ஒன்னும் பேசத் தோணல எனக்கு. உனக்கு ஏதாவது பேசணும்னா பேசு… இல்லைனா நான் கிளம்புறேன்… ” என்ற ப்ரணவ்வின் பதில் இவளை கோபத்தின் உச்சத்திற்கே கூட்டி செல்ல படபடவென பொறிய துவங்கினாள்

” டேய் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற நீ… ஒரு வாரமா பேசாம இருந்துட்டு இப்போ நேர்ல பார்க்கும் போதும் சரியா பேசாம கிளம்புறேனு சொன்னா என்ன அர்த்தம்??.

நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்,,, நீ என்னை அவாய்ட் பண்றதை…

போன வாரம் சனிக்கிழமை நைட் 10 மணி வரைக்கும் ஆன்லைன்ல தான் இருந்த ஆனால் நீ எனக்கு மெசேஜ் பண்ணல…

அப்புறம் திங்கள்கிழமை நான் கால் பண்ணா என்னமோ பெரிய ஐடி கம்பெனி ஓனர் மாதிரி டைம்மே இல்லைனு சீன் போட்டுட்டு தெருக்கடையிலே உட்கார்ந்து டீ குடிச்சுட்டு இருந்த…

சரி நீயா மெசேஜ் பண்ணுவனு நான் உன் ப்ரொபைலையே பார்த்துட்டு இருந்தா ஐயா  நான் ஆன்லைன்ல இருக்குறதைப் பார்த்ததும்  ஆஃப்லைன் போயிடுறீங்க….

சொல்றா நாயே ஏன் ஒரு வாரமா என் கிட்டே பேசல.. இப்பவும் என் கிட்டே பேசாம கிளம்புற…   ” என்ற அவளது கோபத்தில் பாசம் தான் சிதறிக் கிடந்தது..

அதுவரை கவலையில் உழன்று கொண்டு இருந்த ப்ரணவ்வின் மனம் அவள் தன்னை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறாள் என்ற உண்மையை  அறிந்ததும் சந்தோஷப்பட்டது…

இந்த மனம் உண்மையிலேயே ஒரு சாத்தான் மனம் தான் இல்லையா??… தன் மனதுக்கு நெருக்கமானவரின் வருத்தத்தை எண்ணி கவலை கொள்வதற்கு மாறாய் சந்தோஷப்படுகிறது. அதுவும் அந்த வருத்தம் முக்கியமாக தன்னால் தான் விளைந்தது என்றால் ஆனந்த களியாட்டமே ஆடுகிறது. தன்னால் ஒருவரின் மனதிற்குள் புகுந்து அவரை வருந்த வைக்க  முடியும் என்பதில் தான் இந்த மனம் எத்தனை ஆனந்தம் கொள்கிறது.  அவர்கள் தன்னை நினைத்து வருத்தப்படுவதற்கு நான் தகுதியானவன் என்ற எண்ணத்தில் தான் எவ்வளவு மிதப்பு கொள்கிறது இந்த சுயநல மனம்.

அவனின் முகத்தில் கண்ட புன்னகையைக் கண்டு ” ஏன்டா எருமை மாடே நான் எவ்வளவு சோகமா உன்னை மிஸ் பண்ணேனு சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருந்தா நீ பாட்டுக்கு ஜாலியா சிரிச்சுட்டு இருக்க” என்று அவள் அவன் தலையினைப் பிடித்து அடித்துக் கொண்டு இருந்தாள்.

அவள் தரும் அடிகளை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு இருந்தவனுக்கு சிறிதாக வலிக்க தொடங்க அவள் கையை மடக்கி தடுத்துப் பிடித்ததில் அவள் இவனுக்கு மிக அருகில் வந்துவிட்டு இருந்தாள்.

அவனை அவ்வளவு அருகில் கண்டதும் கைகள் துவண்டு போய் அவனது கரங்களுக்குள்ளாகவே அடங்கிக் கொண்டது.

கண்கள் அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்க்க அவனும் அவளைப் பிடித்து இருந்த அவனது கைகள் துவள அவளைப் பார்க்க துவங்கி இருந்தான்.

இந்த பார்வைகள் எல்லாம் இருவருக்குமே புதியது… முன்பெல்லாம் மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருப்பவர்கள் இப்போதெல்லாம் ஓரிரு வார்த்தைகள் பேசிய பின்பு தயக்கம் கொள்கின்றனர்.

முன்பெல்லாம் அடித்து பிடித்து சண்டை போட்டவர்கள் இப்போதெல்லாம் சிறு கை தொடுதலிலே சிலிர்ப்பை உணர்கின்றனர்.

இயல்பாய் தொட தயங்கும் பொழுதுனிலே நட்பு என்ற நிலை காதல் என்னும் உறவாய் பரிணமித்து விடுகிறது.

இந்த பரிமாணத்தை இரண்டு பேரும் உணர்ந்து தான் விட்டு இருந்தனர். ஆனால் இருவருக்குள்ளும் ஒரு பயம்… எங்கே காதலை வெளிப்படுத்தினால் நட்பை இழந்துவிடுவோமே என…

ஆதலால் முதலில் காதல் இருக்கிறதா என தெரிந்துக் கொண்டு பின்பு காதலை சொல்ல இரண்டு உள்ளங்களும் காத்து கொண்டு இருந்தது.

ஆனால் இந்த விதிக்கு மட்டும் தானே தெரியும் காதலில் சொட்ட சொட்ட நனையப் போகும் இவர்கள் பிறகு ஒரு நாளில் வெறுப்பின் உச்சத்தை அடைந்து வேர்விட்டு வளர்ந்து நின்ற உறவை துடிக்க துடிக்க வெட்டப் போகிறார்கள் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!