தேன் பாண்டி தென்றல் _6

தேன் பாண்டி தென்றல் _6

 

 
6
 
அழகான இரண்டு மீன்களை ரங்கோலியாகப் போட்டிருந்தாள் தேன்மொழி. பொதுவாக மயில்களைத்தான் வரைவார்கள். மீன்களை வரைந்து அதை வாகாக வண்ணப்பொடி தூவி அலங்கரித்து இருக்க பார்க்க அத்தனை அழகாக இருந்தது.
 
தேன்மொழியின் கையில் வராத கலையா?
 
காதலிக்கும் கலைதான் இதுவரை கைவரவில்லை. அதற்கு நேரம் வரவில்லை.
 
ஆறு நடுவர்களும் அவள் வரைந்த கோலத்தைப் பார்த்து புருவங்களை உயர்த்திப் புன்னகைக்க பாண்டியன் மலர்ந்து போனான்.
 
மதுரையை ஆண்ட பாண்டியனின் சின்னம் அல்லவா அது? 
 
அதற்கும் இவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைதான். ஆனாலும் மனது சிறகடிக்கதான் செய்தது அழகிய வீர பாண்டியனுக்கு!
 
ஒருவழியாக பல்லைக் காட்டிக் கொண்டு இருந்த மனதை சமாதானப்படுத்திவிட்டு சுற்று முற்றும் பார்த்த போது மற்ற யுவதிகள் வரைந்த போலம் சுமாராகத்தான் இருந்தது.
 
நன்றாக இருந்திருந்தாலும் இவன் கண்களுக்கு சுமாராகத்தான்  தெரிந்து இருக்கும். தேன்மொழியின் கோலத்தைக் கண்டு இவர்கள் ஏழு பேரின் முகங்கள் பல்ப் போட்டதைப் பார்த்து முகம் சுணங்கினர் அவர்கள்.
 
 
அந்தக் கோலத்தைப் போட்டவர்கள்  எல்லாம் இந்தக் குடியிருப்பில் தங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே வசித்து வருபவர்கள். அவர்களின் முகச் சுணக்கம் இவனுக்கு வருத்தத்தைத் தந்தது.
 
நடுவர் என்னும் பதவி இருக்கிறதல்லவா? 
 
“இந்தக் கோலம் நல்லாத்தான் இருக்கு. ஆனா புள்ளி வச்சாத்தான் கோலம். இது படம்” என்ற கூறி அவள் ரங்கோலியை நிராகரித்து வேறொரு கோலத்தை நோக்க மற்றவர்கள் இவன் கூற்றை ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள்.
 
இருந்தாலும் –
 
“இது நம்ம காலனியில நம்ம புள்ளைங்களுக்கு நாம நடத்தற போட்டி. இதுல என்ன பெரிய டெபனிஷன்?” என்று ஒருவர் கேட்கத்தான் செய்தார். 
 
“ஆமா. நம்ம புள்ளைங்களுக்கு நாமதான்  சரியானதைச் சொல்லிக் குடுக்கனும். அப்பதான் அவங்க வேற இடத்துல போய் அடிபட மாட்டாங்க” என்று புன்னகை முகமாகச் சொல்ல அனைவரும் இவளை வருத்தமாக நோக்கினர்.
 
அவள் மனம் சற்று வாடினாலும் இத்தனை பேருக்குப் பிடித்துதானே இருக்கிறது அவளது ரங்கோலி?
 
 
எனவே பாண்டியனைப் பார்த்து “இது கோலப் போட்டினு சொன்னாங்க. ரங்கோலி கோலம் போடக் கூடாதுன்னு சொல்லலை. பட்…இட்ஸ் ஓ.கே” என்று மீண்டும் தோள்களைக் குலுக்க –
 
‘உன்னால கைய கால சும்மா வச்சிகிட்டு பேச முடியாதா தேனு. எவன் எவன் பார்த்தானோ’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.
 
சுற்றும் முற்றும் பார்த்தவரையில யாரும் அவளை இவனைப் போல கேப்மாரித்தன பார்வை பார்க்காமல் முகத்தைப் பார்த்துதான் பேசிக் கொண்டு இருந்தனர்.
 
‘ஹப்பாடா’என மூச்சுவிட்டுக் கொண்டான்.
 
‘இவகிட்ட ஒருநாள் பேசி இந்தப் பழக்கத்தை விடச் சொல்லனும்’ – தீர்மானித்துக் கொண்டான்.
 
‘மொதல்ல நீ இப்டி இப்டி இப்டி…இப்டி இப்டி இப்டினு பேசு ராசா. மத்தது அப்றம் பாரு’ அதே மனம்தான் அவனுக்கு கவுண்டர் கொடுத்தது.
 
எப்டி எப்டி எப்டி என்பது புரியாமல்தான் அவனே தடுமாறிக் கொண்டு இருக்கிறான்.
 
“அது வந்து பாப்பா… தம்பி சொன்ன கோட்பாடுலாம் சரிதான்னு வைப்போம். எங்க எல்லாருக்கும் இந்தக் கோலம் புடிச்சிருக்கு. அதால இதுக்கு ஸ்பெசல் ப்ரைஸ் உண்டு. நம்ம காலனிக்கு புதுசா வந்து முத தடவ கோலம் போடுற? சும்மா விட்ருவமா? சரி. சரி. நாங்க மத்தது பாத்துட்டு வாரோம். “என்று வயதான ஒரு நடுவர் சொல்ல அவர் வயதின் காரணமாக அனைவரும் அதற்கு சம்மதித்துவிட்டனர்.
 
 
இவனுக்கும் ஒருவழியாக நிம்மதியாகத்தான் இருந்தது. ஆனால் தேன்மொழியிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.
 
இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. சும்மா சைட் அடிக்கும் பொருட்டுதான் தயக்கத்துடன் வந்தான். நம்ம காலனி பொண்ணாச்சே? போட்டி நடக்கும் இடத்திற்கு அனுமதிப்பார்களா? என்று குழப்பம் வேறு.
 
ஆனால் இங்கே நடந்தது இவன் எதிர்பாராதது.
 
கோலப் போட்டிதான் முடிந்துவிட்டதே?  போய் தண்ணீh குடித்துவிட்டு வரலாம் என்று குடிநீர் வைத்திருந்த இடத்திற்குப போனவள் அங்கே குழந்தைகள் பலூனுடன் விளையாடுவதைப் பார்த்து குதூகலித்தாள். 
 
பலூன், பட்டம், பம்பரம் எல்லாம் பார்த்தால் பால்ய காலம் நினைவு வரத்தானே செய்யும்?
 
 
அவர்களிடம் போய் பலூனை கேட்டதற்கு “ நாங்களே கஷ்டப்பட்டு பாண்டியன் அண்ணா கடையில ஃப்ரியா வாங்கியிருக்கோம். உங்களுக்கு வேணும்னா நீங்க போய் கேளுங்க. ஆனா …” என்று இவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “உங்களுக்குத் தர்றது சந்தேகம்தான்” என்றான் அந்தப் பொடியன்.
 
“ஏன்? எனக்கு ஏன் தர மாட்டார்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் தேன்மொழி. 
 
பின்னே? கஷ்டப்பட்டு ஃப்ரியாக வாங்கினானாமா?
 
“ஏன்னா நீங்கதான் பெரிய பொண்ணாச்சே?”
 
‘இதுக்குத்தான் ஏற இறங்கப் பார்த்தானா இந்த வாண்டு?’
 
“பெரிய பொண்ணுனா தர மாட்டாரா உங்க அண்ணன்?” – சும்மா அந்தச் சிறுவனிடம் பேச்சை வளர்க்க என்று கேட்டவள் அவன் பதில் சொல்லும் முன்னமே தண்ணீரைக் குடித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.
 
ஆனால் இது எல்லாம் கேட்டுக் கொண்டு பக்கத்திலேயே சுற்றிக் கொண்டு இருந்த பாண்டியனுக்கு மனமே குளிர்ந்துவிட்டது.
 
 
‘இப்போது வந்து விடுகிறேன் ‘ என்று சொல்லிவிட்டு கோலப் போட்டி நடுவர் குழுமத்தில் இருந்து தப்பித்து வந்திருந்தான் பாண்டியன்.
 
அவனையும் மதித்து அவனைப் பற்றி ரெண்டு வார்த்தை சொல்லிவிட்டாளே? மனம் பூரித்தது அவனுக்கு.
 
இத்தனைக்கும் திருமணப் பேச்சு வேறு இழுபறியில் இருக்கிறது?
 
அதை ஒரு நல்ல முடிவக்கு கொண்டு வர அவனும் போராடத்தான் செய்கிறான்.
 
நேற்று கூட அம்மாவிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். 
 
 
மொட்டை மாடியில காயப் போட்டிருந்த துணிகளை கொடியில் இருந்து எடுத்து அவற்றைத் தோளில் போட்டவாறு  மாடிப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்த செண்பகத்தை கையோடுப் பிடித்தவன்-
 
“படி ஏறி இறங்கக் கஷ்டமா இருக்குதாம்மா?”  என்று தன் காதல் கதையை ஆரம்பிக்க முயன்றான்.
 
உடனே அவர் “ஒரு மருமக வந்தா எனக்கு ஓய்வு கிடைக்கும். நீ சொல்ற மாதிரி பொண்ணு அமைய மாட்டேங்குதே? ” என்று சொல்லுவார் என எதிர்பார்த்தான். அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் – 
 
“பரவாயில்லமா. உங்களுக்குத் தோதுபடற பொண்ணு பாருங்க. வீட்டுக்கு ஒரே பொண்ணா இருந்தா பரவாயில்ல” என்ற அவன் டயலாக்கை உருப்போட்டு வைத்திருக்க அவரோ –
 
“படி ஏறி இறங்க ஒன்னும் கஷ்டமில்ல. உங்க துணிமணியை அள்ளிக்கிட்டு வர்றதுதான் இம்சையா இருக்கு. கிடா மாதிரி வளர்ந்திருக்கியே ? அம்மா மாடிக்குத் துணி எடுக்கப் போகும் போது கூடப் போகனும்னு தோணுச்சா? எப்படித் தோணும்? நீ உங்க அப்பாவை விடப் பெரிய அடப்பாவியாச்சே?” என்று பொரிந்தார்.
 
அவர் பேச்சு அநியாயம் என்று அவருக்கேத் தெரியும்.
 
கூடவே வருவதாகச் சொன்ன தன் கணவரை காபி போட்டு வைக்கப் பணித்து விட்டு காலார நடப்பதாகச் சொல்லித்தான் அவரே வந்திருந்தார்.
 
இது தெரியாமல் – அப்போதுதான்   வெளியில் போய்விட்டு வீட்டிற்கு வந்திருந்த அழகுப் பையன் அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான்.
 
சும்மாதான்.  அவ்வப்போது இப்படி ஏதாவது சொல்லி தட்டி வைக்க வேண்டும் இதுகளை என்பது செண்பகத்தின்  கருத்து. 
 
மற்றபடி கூட்டுக் குடும்பத்தில் பெண் எடுத்தால் என்ன ? இவரது ஒரே மகனுக்கு மனைவியாக வரப் போகிறவளும் அவள் பிறந்த வீட்டில் ஒரே பெண்ணாக இருந்தால்தான் என்ன? என்ற மனநிலைக்கு அவர் எப்போதோ வந்துவிட்டார். 
 
பாவம் இது அறியாத பாண்டி அம்மா என்னவோ இவன் வாக்கை வேத வாக்காக எடுத்து இவன் சொன்ன அச்சுப் பிசகாமல் இவனுக்குப் பெணணைத் தேடிக் கொண்டிருப்பதாக பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறான். 
 
ஆனால் இந்த செண்பகமும்தான் இது விசயத்தை இந்தப் பயலுக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? 
 
அவர் மகன்  தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் அம்மாவான தன்னிடம் கேட்டுதான் எடுக்க வேண்டும் என்று அவரும் ஆசைப்பட்டார். 
 
சரியோ? தவறோ? பெண் பார்க்கும் விசயத்தில் அவனாக மூக்கை நுழைத்து ‘இந்த மாதிரிப் பெண் பார்’ என்று சொன்னதில் ஒரு சிறு வருத்தம். 
 
‘எங்க அம்மா ஒரு கழுதையைக் காட்டி தாலி கட்டச் சொன்னாலும் கட்டுவேன்’ என்று மகன் ஆர்ப்பரிக்க வேண்டும் என நினைத்திருப்பாரோ என்னவோ?
 
அவனும்தான் என்ன சொல்லிவிட்டான்? ‘ஜோசியர் சொல்லிவிட்டால் அது பலித்துவிடாது. அதனால் அதை முறியடிப்பதற்காக கூட்டுக் குடும்பத்தில் பெண் பாருங்கள்’ – என  அம்மா கவலைப்படுகிறாரே என்றுதானே சொன்னான்? அது ஒரு குத்தமா?
 
இருந்தாலும் அதுவும் குற்றம்தான்!
 
நெட்டையோ குட்டையோ நீங்க பாக்கிற பொண்ணை கட்டிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் விசயம் எப்போதோ முடிந்திருக்கும். யாகாவராயினும் நா காக்க என்று வள்ளுவர் சொல்லி வைத்ததைப் படித்து என்ன பயன் இந்த பாண்டிக்கு? வாழ்வில் பயன்படுத்தத் தெரியவில்லையே?
 
ஆக அவன் முன்னால் இருந்த சவால்களில் ஒன்றான அம்மாவை சமாளிப்பது ஒருவாறாக நிறைவேறிவிடும் போலத்தான் இருக்கிறது. அந்த விசயம் அவனுக்குத்தான் தெரியவில்லை. 
 
செண்பகமும் சும்மா இருக்கவில்லை. அவருக்கு நம்பகமான வட்டாரங்கள் மகன் காலனி ஆணடுவிழாவிற்குப் பணம் கொடுத்த விதத்தைப் புட்டு வைத்திருக்க விசயம் தானாக வரட்டும் என்று அந்த நாளுக்காக காத்துதான் இருக்கிறார்.
 
செண்பகம்  சொல்லி விட்டால் அதன்பின் இவன் அப்பாவிற்கு என்ன பிரச்சனை? அவரும் சம்மதித்து விடத்தான் போகிறார். 
 
பாண்டியனுக்கு பிராக்டீஸ் பற்றவில்லை.
 
இப்போது இப்படி இருந்தாலும் பினனாளில் அவன் பண்ணப் போகும் காரியங்கள் சாதாரணமானவை அல்ல. 
 
இப்போது …
 
 
மேலும் அவளை பின்தொடர விடாமல் அடுத்து ‘பாசிங்க் த பால்’ விளையாட்டிற்கு நடுவராக இழுத்துச் சென்றான் கூட இருந்த குமார்.
 
 
அது ஒன்றும் பெரிய பிரமாத விளையாட்டு அல்ல. பின்னணியில் பாடலை ஒலிக்கவிட்டு வட்டமாக நிற்கும் போட்டியாளர்கள் பந்தை ‘பாஸ்’ செய்வார்கள். யாரிடம் பந்து இருக்கும் போது பாடல் நிற்கிறதோ அவர் நடுவர் சொல்லும் செயலைச் செய்ய வேண்டும்.
 
 
இதற்கு தனியாக சீட்டுக் குலுக்கவெல்லாம் மாட்டார்கள் அங்கே. வரிசையாக எழுதி வைத்துக் கொண்டு விடுவார்கள். 
 
இந்த பேப்பரை  மிகவும் ரகசியமாக வைத்து இருப்பார்கள். குத்துமதிப்பாக ஐம்பது செயல்களை எழுதி இருப்பார்கள். உதாரணத்திற்கு பாடுவதுஇ கவிதை சொல்வதுஇ ஜோக் சொல்வது இப்படிப் போகும். 
 
 
போட்டியாளர்கள் நடுவர் சொன்ன மாதிரி செயலைச் செய்யாவிட்டால் அவுட். இந்தப் போட்டி விதிமுறைகளுக்காக இந்த விளையாட்டில் இதெல்லாம் தெரிந்தவர்கள்தான் சேருவார்கள்.
 
இப்படியே போனால் யாரும் அவுட் ஆகமாட்டார்கள் அல்லவா?  அதனால் குறிப்பிட்ட நேரம் கணக்கு வைத்திருப்பார்கள்.
 
அவர்கள் கணக்குப்படி அதிகபட்சம் முககால் மணிநேரத்தில் விளையாட்டு முடிந்துவிடும். 
 
அதில் பெஸ்ட் பெர்பார்மரை தேர்வு செய்வதுதான் கொஞ்சம் கடினமாக இருக்கும்.
 
இதில் நிச்சயம் ஏழு நடுவர்கள் இருந்தால் நல்லதுதான்.
 
இந்தப் போட்டியிலும் ஆடல் பாடல் கவிதை சொல்வது எல்லாம் இருக்கும் ஆதலால் இதுவும் ஓரமாகத்தான் நடத்துவார்கள். அந்த சமயம் சிறுவர்களுக்கான விளையாட்டுகள் பிரதான  இடத்தில் களை கட்டும். 
 
அதுக்குள்ள  கோலப் போட்டி முடிவு சொல்லிட்டாங்களா?
 
சிணுங்கிக் கொண்டே போனவன் இனிமையாக அதிர்ந்தான்.
 
அங்கே தேன்மொழி நின்றதைப் பார்த்து அவன் கண், வாய், மூக்கு எல்லாம் சொல் நீர்  ஊற்றியது.
 
 
எப்படி சட்டு புட்டுனு போட்டி நடத்துறாங்க?  எனக் குழப்பமாக இருந்தாலும் இவன் தான் அலேர்ட்டாக இல்லை என்பது புரியத்தான் செய்தது.
 
‘பாசிங்க் த பால’ போட்டி தொடங்க-
 
 வசந்த முல்லை போல வந்து 
ஆடிடும் வெண்புறா
வசந்த முல்லை போல வந்து 
ஆடிடும் வெண்புறா
உல்லுலாயி உல்லுலாயி 
குழந்தை போலவே போகோ சேனல் 
பாக்க வச்சா
 
என்ற பாடல் ஒலிக்க வட்டமாக நின்ற இளவட்டங்கள் பத்துபேரும் தங்களுக்குள் வரிசையாக பந்தை பாஸ் செய்தனர்.
 
‘நம்பியாரை போல் இருந்தேனே’
 
என்று சிடி ஒலிக்கும் போது பாடல் நின்றுவிட பந்து இப்போது தேன்மொழி கையில் இருந்தது.
 
“பாரதியார் கவிதை” என்ற மைக்கில் சொல்லவும் அவள்  –
 
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டினில்
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் தீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ”
 
என்று பாட கரகோசம் பறந்தது.
 
பாடல் அப்படி!
 
 
நடுவர்களில் ஒருவர் விசில் ஊத மறுபடி சினிமாப் பாடல் போடப்பட்டு மீண்டும் 
 
 
பந்து பாஸ் செய்யப்பட்டது.
 
இந்தமுறை இன்னொரு நடுத்தரப் பெண்ணுக்கு பந்து வர அவருக்குக் கொடுக்கப்ட்ட டாஸ்க் 
 
“ வைரமுத்துக் கவிதை”
 
 
“வரும் வழியில் பனிமழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்”
 
என்று முடிக்க அது எந்தப் பாட்டு என்று கண்டு ஆரவாரம் செய்தனர் 80ஸ் கிட்ஸ். 
 
 
அடுத்து பாடல் கவிதை நடனம் அதிலும் கும்மி கோலாட்டம் என்றெல்லாம் டாஸ்க்குள் வர அனைத்தையும்  நாகரீகமாகக் கையாண்டனர் போட்டி நடத்துபவர்களும் பங்கேற்பவர்களும்.
 
அவ்வப்போது அவுட் ஆனவர்கள் விலக அதில்  கோலாட்டம் ஆடத் தெரியாமல் அவுட் ஆனாள் தேன்மொழி. அதெல்லாம் கோல் தயாராக வைத்து இருப்பார்கள். டாஸ்க் சொன்னதும் எடுத்துக் கொடுப்பார்கள். 
 
தானும் ஒரு நடுவராக அவளது திறமைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் பாண்டியன். 
 
அவள் போட்டியில் இருந்து விலகியபோது அவனால் நடுவர் பதவியில் இருந்து விலக முடியவில்லை. அதனால் அவள் பின்னால் போகத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தி சீட்டின் பின்னே சாய்ந்து  விட்டேற்றியாக உட்கார்ந்தான்.
 
இனி யார் என்ன செய்தால் அவனுக்கு என்ன?
 
அப்படியே கொஞ்சம் கண்ணயரலாமா? என்று யோசனை வேறு வந்தது. 
 
அடுத்த இரண்டு நிமிடங்களில் ‘வீல்’ என்ற தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்டு உட்கார்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து அவள் குரல் வந்த திசை நோக்கி தெறித்து ஓடினான் பாண்டியன்.
————————————
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!