sippayinmanaivi 13

sippayinmanaivi 13

செங்கை
 
அலரியை காலையில் பார்த்துவிட்டு கூர்முகன் வேட்டைக்குச் சென்றான். அலரி நேற்று அலங்கரிக்கப்பட்ட கோலத்திலேயே இருந்தாள். 
 
கூர்முகன், முகத்தில் சிவப்புக் கோடுகள் இட்டுக்கொண்டு, கழுத்தில் பெரிய பவழ மாலை அணிந்துக் கொண்டிருந்தான். நரி பற்கள் கொண்ட சங்கிலி ஒன்றும் அணிந்திருந்தான். கையில் வெட்டருவா ஒன்றும் வைத்திருந்தான்.
 
இருளிர் தலைவன் மாரியிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு ஊர் மக்கள் சிறு பறை மற்றும் பெரும் பறை இசைத்து மூங்கில் குழாயில் ஊதியும் வழி அனுப்பி வைத்தனர். கூர்முகன் வேகமாக காட்டுக்குள் சென்றான். காட்டின் நடுவில் வந்துவிட்டிருந்தான். பெரிய ஒதிய மரம் இருந்தது. கிளைகள் பல விட்டு படர்ந்து ஐநூறு ஆண்டுகள் கதைகளுடன் வாழ்ந்துக் கொண்டு இருந்தது.  கூர்முகன் விறுவிறுவென மரத்தின் மேல் ஏறினான். பெரிய கிளை ஒன்றை வெட்ட ஆரம்பித்தான். மேலும் சில குச்சிகளை உடைத்தான். தரையில் குத்த வைத்து இருந்தான். ஒதிய மரத்தின் குச்சிகளை சீவ ஆரம்பித்தான். நன்றாக கூர் அடைந்தது. கனமான கட்டையில் கச்சையில் இருந்த விலங்கின் தசைநார்களை எடுத்தான். வில்லின் இரு முனைகளை இணைத்தான். மூன்று அம்புகள் செய்திருந்தான், அம்பு செய்வதில் நன்கு தேர்ச்சி அடைந்திருந்தான். 
 
காட்டின் உள் மேலும் ஆழ்ந்த இடத்திற்குச் சென்றான். இருள் காட்டின் கிழக்குப் பகுதி மான்கள், கரிகள் மற்றும் காட்டு எருமைகள் வாழ்கின்ற பகுதி. தெற்கில் இருளிர் இனத்தவர் இருக்கிறார்கள். மேற்கில் ஒரு பக்கத்தில் காட்டு நாய்கள் மற்றொரு பக்கத்தில் சிறுத்தை புலிகள் வாழ்கின்றது. வடக்கில் பாம்புகள், முயல்கள், மயில்கள் மற்றும் உடும்புகள் வாழ்கிறது. அவை தவிர மீதி விலங்குகள் வெவ்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டேயிருக்கும். 
 
கூர்முகன், சில சிறு பொழுதுகளுக்குள் ஆழ்ந்த காட்டு பகுதிக்குள் வந்தடைந்தான்.  அடர்ந்திருந்த மரங்களில் ஒரு மரத்தில் ஏறினான். அமைதியாக மரத்தின் மேல் சாய்ந்திருந்தான். கரிக் கூட்டம் சிறு குளம் ஒன்றில் இறங்கியது. அந்த அழகை பார்த்துக் கொண்டிருந்தான். அலரிக்கு  பெரிய கரி ஒன்றை தரலாமா என்று எண்ணினான். இந்த அம்பை சரியாக அதன் நெற்றியில் விட்டால் போதும் ஆனால் இதை தூக்கிச் செல்ல முடியாது . சிறுத்தை புலியை வேட்டையாடினால் அலரி மட்டுமில்லாமல் இருளிர் அனைவரும் குதியாட்டம் தான் என்று எண்ணிணான்.  சிறுத்தைகள் காட்டின் செழுமையான பகுதியில் தான் வாழும் அப்பொழுது தான் அவைகளுக்கு இறை கிடைக்கும்.
 
கூர்முகன் காட்டின் செழிப்பான பகுதிக்குச் சென்றான்.  இரு பாறைகளுக்கு இடையில் இருந்தான். சில மான் கூட்டங்கள்  மேற்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் ஓடை ஒன்றில் நீர் குடித்துக் கொண்டிருந்தது. 
 
கோரைப்புற்களின் நடுவில் ஏதோ அசைவு தெரிகிறது. கூர்முகன் அதை கண்டுவிட்டான். அதை உற்றுப் பார்த்தான் அசைவு மட்டும் தான் தெரிந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.  புற்களுக்கு நடுவில் சட்டென ஒரு தலை தெரிந்து மறைந்தது. அது சிறுத்தை தான் என்று உணர்ந்தான்.  
 
புற்களுக்கும் மான்கள் இருக்குமிடத்திற்கும் பெரிய இடைவெளி இருந்தது. சிறுத்தை தரையில் படுத்து மெதுவாக வந்து கொண்டிருந்தது.  புற்களின் முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் மான்களுக்கு தெரிந்துவிடும் அதன் இறைக்காக காத்திருந்தது. ஒரு மான் சிறுத்தைக்கு அருகில் வந்துவிட்டது, சிறுத்தை நிச்சயமாக மானை வேட்டையாடி விடும்.
 
கூர்முகன் அம்பை எடுத்து குறி வைத்தான். அமைதியாகக் காத்திருந்தான். ஒரே ஒரு நாடி துடிப்பின் நேரம் தான், அனைத்தும் நடந்துவிடும்.  சிறுத்தை புற்களுக்கு நடுவிலிருந்து பாய்ந்தது மானின் கழுத்தை கவ்வியது. அம்பை விடுவித்தான், அம்பு மானின் கழுத்தை நோக்கிச் சென்றது. 
 
கதிரவன் மறையும் நேரம், ஊர் மக்கள் காத்திருந்தார்கள். தூரத்தில் கூர்முகன் வருவது தெரிந்தது. பறைகள் அடிக்கப்பட்டன , நிலம் அதிர்ந்தது. 
 
கூர்முகன் தோள் மேல் மானை போட்டுக் கொண்டு வந்தான். 
 
‘மக்கா மானே!’ என்று ஒருவர் கூவினார்.
 
கூர்முகன் அருகில் வந்ததும் தெரிந்தது அவன் புலியை இழுத்துக் கொண்டு தோள் மேல் மானையும் கொண்டு வந்திருந்தான்.
 
ஊர் மக்கள் ஓலமாக கத்தினார்கள். 
 
‘மக்கா வேங்க !’ என்று சலசலத்தது. மாரி கூர்முகனை அழைத்துக் கொண்டு ஒரு குகைக்குள் சென்றாள். அவன் கையை புலியின் குறுதியில் நனைத்து பாறை மீது வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!