தொலைந்தேன் 01 💜

eiR6PVJ4533-a560c3e8

தொலைந்தேன் 01 💜

குட் ஈவினிங் பெசன்ஜர்ஸ். திஸ் இஸ் த ப்ரீ போர்டிங் அன்னௌன்ஸ்மென்ட்…”

என்று அடுத்த விமானப் பயணங்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கி வழியாக அந்த விமானநிலையம் முழுவதுமுள்ள பயணிகளின் மத்தியில் ஓடிக்கொண்டிருக்க, தத்தமது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோரின் கவனம் சட்டென காதுகளில் கேட்ட பெயரிலும் உணர்ந்த சலசலப்பிலும் ஒரு திசை நோக்கித் திரும்பின.

அங்கு கூலிங் க்ளாஸை கழற்றியவாறு கூட்டம் சூழ்வதற்குள் இரண்டு பாதுகாவலர்களுக்கு மத்தியில் உடலை இறுக்கிப் பிடித்த ஆடையில் வேக நடையோடு விமானநிலையத்திலிருந்து வெளியே நிற்கும் காரை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தாள் மேக்னா சௌத்ரி. வளர்ந்து வரும் பாடகி. கூடவே, இரண்டு வெப் சீரீஸ்களில் நடிப்பதற்கு  ஒப்பந்தம் செய்துள்ளதாக சில தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளன.

“மேகா… மேகா…” அவளை அடையாளம் கண்டுக்கொண்ட சிலர் கூச்சலிட்டுக்கொண்டு அலைப்பேசியை அவளுக்கு நேரே நீட்டி படம் பிடிக்க முயற்சிக்க, விழிகளுக்கு எட்டாத புன்னகையை வரவழைத்துச் சிரித்தவாறு ஹீல்ஸ்ஸை போட்டுக்கொண்டு நடக்க முடியாமல் வேகமாக நடந்து எப்படியோ தன் உயர்ரக காரில் ஏறிக்கொண்டாள்.

இப்போது வெளிவந்தது அவளிடமிருந்து ‘அப்பாடா!’ என்ற பெருமூச்சு. மூன்று வருடத்திற்கு முன் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கைதான் இது. ஆனால், கர்வமெனும் போதையை கொடுக்கும் இந்த பிரபலமெனும் வாழ்க்கை சில சமயங்களில் ‘கடவுளே! ஏன் இந்த சோதனை?’ என்று நினைக்க வைக்கவும் செய்கிறது.

“குட் ஈவினிங் மேகா, ஹவ் வோஸ் யூவர் வெகேஷன்?” பக்கத்தில் ஒரு ஆண் குரல். சட்டென கேட்ட குரலில் திடுக்கிடலோடு திரும்பிப் பார்த்த மேக்னா, அப்போதுதான் பக்கத்திலமர்ந்திருந்த ஈஷ்வரை கவனித்து மீண்டும் ஆசுவாசமாக ஒரு பெருமூச்சு விட்டாள்.

“அங்கிள் நீங்களா? ஒருநிமிஷம் பயந்துட்டேன். ஸப்பாஹ்! ஏயார்போர்ட்ல இருந்து காருக்கு வார கேப்ல நடந்த கலவரத்துல உங்கள நான் கவனிக்கவே இல்லை. ” என்ற மேக்னா, “மேம், இரண்டு நாள்ல நாம மும்பை போறோம். ஒரு முக்கியமான…” என்று ஈஷ்வர் ஆரம்பித்ததைப் பார்த்ததும், “ஓ கோட்! மூச்சு விட டைம் கொடுங்க அங்கிள், என்ட் என்னை நீங்க மேகான்னுதான் கூப்பிடனும்னு பல தடவை சொல்லிட்டேன்” என்றாள் சலிப்பாக.

“ஒரு மாசம் நீ மூச்சு விட்டது போதாதா மேகா? இனி அதுக்கு கூட நேரம் இருக்குமான்னு தெரியல. உன்னோட செட்யூல் அவ்வளவு டைட்டா இருக்கு என்ட், என்னதான் நீ என் அக்கா மகளா இருந்தாலும் உன் மேனேஜரா என் பாஸுக்கு நான் கொடுக்க வேண்டிய மரியாதைய நான் கொடுத்தே ஆகணும். ரைட் மேம்?” என்ற ஈஷ்வரே மேக்னாவின் தனிப்பட்ட மேனேஜர்.

அவரில்லாமல் அவளுக்கு எதுவுமில்லை எனலாம். கூடவே, அவள் அம்மாவின் தம்பி வேறு. தன் மகளின் பாதுகாப்புக் கருதி தன் தம்பியையே அவளுக்கு மேனேஜராக்கிவிட்டார் மேக்னாவின் அம்மா அமுதா.

கார் வேகமாக வீட்டை நோக்கிச் செல்ல, கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே வெறித்தவாறு வந்தவளின் சிந்தனை வழக்கம் போல் இன்றைய தினத்தை நினைத்து அந்த ஒருவனிடத்தில் சென்று நின்றது. இப்போது அவளிருக்கும் நிலைக்கு காரணமானவன் அவன்.

இதுவே அவள் தனியாக இருந்திருந்தால் ஒருவேளை வாய்விட்டு அழுதாலும் அழுதிருப்பாள். ஆனால், இப்போது பக்கத்தில் ஈஷ்வர் இருப்பதை உணர்ந்து கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டு அமர்ந்திருக்கின்றாள்.

ஆனால், அவளின் மௌனத்தையும் சிந்தனையையும் கலைத்தது ஈஷ்வரின் அடுத்து கேட்ட கேள்வி.

“எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்க உன்னாலதான் முடியும் மேகா, அதை பத்தி தெரிஞ்சதாலதான் டூ மன்த்ஸ் எடுக்க முடிவு பண்ண வெகேஷன் லீவ்வ இவ்வளவு சீக்கிரம் முடிச்சு வன் மன்த்லயே கிளம்பி வந்தியா?” அவர் பொடி வைத்துப் பேச, திரும்பி அவரை விழிகளைச் சுருக்கி நோக்கியவளுக்கு நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை.

“அங்கிள்?” அவள் கேள்வியாக அழைக்க, அலைப்பேசியிலிருந்த சென்னையில் நடக்கவிருக்கும் கான்செர்ட்டுக்கான அழைப்பிதழைக் காண்பித்தவர், “இதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன் மேகா” என்றார் அழுத்தமாக.

அதை கேள்வியாக நோக்கியவளுக்கு விழிகள் அதிலிருந்த பெயரில் சற்று விரிய, அடுத்து ஈஷ்வர் போட்ட பாடலில் சாரசர் போல் விரிந்தன. அந்த பாடலில் கேட்ட குரலில்  ‘இது.. இது அதே குரல்’ அவள் மனம் படபடவென அடித்துக்கொண்டது.

“அங்கிள்!” இப்போது மேக்னாவின் குரல் அதிர்ந்து ஒலிக்க, அவளின் அதிர்ந்த முகத்தில் புருவத்தைச் சுருக்கி யோசித்தவர், இப்போது அவளின் மேனேஜராக “சாரி மேம், நீங்க வெகேஷன் போனா சோஷியல் மீடியாவுல அக்டிவ்வா இருக்க மாட்டீங்கன்னு மறந்துட்டேன். எனிவேய், நீங்க ஸ்பெய்ன் போன ஒரு வாரத்துல இந்த ஆல்பம் சோங் ரிலீஸ் ஆச்சு. மிஸ்டர் ராகவன்தான் ப்ரொடியூஸ் பண்ணியிருக்காரு. மூனே நாள்ல செம ஹிட். அடுத்த பத்தே நாள்ல அந்த பையனோட அடுத்த ஆல்பம் சோங். சொல்லப்போனா, இவ்வளவு சீக்கிரம் யாருக்கும் இப்படியொரு புகழ் கிடைச்சது கிடையாது. அந்த பையனோட குரல் அப்படி! கூடவே, அவனோட ஸ்மார்ட்னெஸ். இதுவே இரண்டே மாசத்துல பல பேரை அவனுக்கு ஃபேன் ஆக்கிருச்சு” என்க, அவளோ சிலையாகிவிட்டாள்.

“எனக்கென்னவோ இந்த பையனுக்கு முழு சபோர்ட்டும் ராகவன் சார் கொடுக்குற மாதிரி தெரியுது. யூ நோ வெல் மேம், ராகவன் சாருக்கு இந்த இன்டஸ்ட்ரியில இருக்குற மதிப்பும் மரியாதையும். அவரோட பாடல்களுக்கு மயங்காத ஆளுங்களே இல்லை. அவரோட சபோர்ட் இருக்கப்போய்தான் இந்த பையனால அவ்வளவு ஈஸியா இன்டஸ்ட்ரிகுள்ள வர முடிஞ்சிருக்கு. ஆனா, அது எப்படின்னுதான் எனக்கு தெரியல. இப்போ அவரோட கான்செர்ட்ல அவர் பக்கத்துல கிட்டார் வாசிக்க போறானாம். ஒருவேள, அவரோட கான்செர்ட்டுல பாடுறதுக்கு வாய்ப்பு கொடுத்திருந்திருந்தாலும் கொடுத்திருப்பாரு. அவர் இல்லைன்னா அவன் ஒன்னுமேயில்லை” என்ற ஈஷ்வரன்,  பற்களைக் கடித்து சட்டென திரும்பி மேக்னா பார்த்த பார்வையில் ஜெர்க்காகி, “என்னோட கருத்தை சொன்னேன்” என்றார் பம்மிய குரலில்.

அவளோ அலைப்பேசியிருந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் நேரத்தையும் பார்த்தவள், இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளதைக் கவனித்து, “அவன பத்தி தெரியாம குறைச்சு மதிப்பிடுறீங்க அங்கிள்” கேலிச் சிரிப்புடன் சொல்லி, “கான்செர்ட் நடக்குற இடத்துக்கு வண்டிய விடுங்க” என்றாள் இருக்கையில் இத்தனை நாள் தேடிய பொக்கிஷம் இன்று கிடைத்துவிட்ட மிதப்பில்.

அதில் திகைத்தவர், “மேகா, அக்காவுக்கு தெரிஞ்சுச்சுன்னா…” தயக்கமாக இழுக்க, “உங்க மருமகளா இல்லை, பாஸ்ஸா சொல்றேன். டூ வாட் ஐ சே” அழுத்தமாகச் சொல்லிவிட்டு விழிகளை மூடி சாய்ந்துக்கொள்ள, இதற்குமேல் பேசி வேலையில்லை என்பதை உணர்ந்தவராய் ஓட்டுனரிடம் இடத்தைச் சொன்னவர், அங்கு தனக்கு தெரிந்தவர்களிடம் மேக்னா வரும் விடயத்தையும் தகவல் தெரிவித்து பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்துக்கொண்டார்.

அடுத்த சில நிமிடங்களிலே பிரபலங்கள் வருகை தரவென கான்செர்ட் நடக்கும் மண்டபத்தின் பின் வழியே மேக்னாவின் கார் உள்ளே நுழைய, காரிலிருந்து இறங்கியவள், ஈஷ்வரை கண்டுக்கொள்ளாது வேக நடையோடு உள்ளே சென்று முதலில் சந்தித்தது ராகவனைதான்.

“ஹெலோ மிஸ்.மேக்னா என்ன இந்த பக்கம்? நீ இங்க வந்திருக்குறது உன் கம்பனிக்கு தெரியுமா, இப்படியெல்லாம் அவங்க விட மாட்டாங்களே!” என்று மேடைக்குச் செல்ல தயாராகிக்கொண்டு அவர் பேசிக்கொண்டுப் போக, “அது வந்து…” என்று பேச வந்தவளை அதன்பிறகும் அவர் பேச விட்டால்தானே!

“இரண்டு மாசத்துக்கு முன்னாடியே நீ அந்த கான்ட்ரேக்ட்ல இருந்து விலகினதா நியூஸ் வந்திச்சு. இனி சோலோவா எல்லாம் பண்ண போறதா கேள்விப்பட்டேன். இஸ் தட் ட்ரூ?” மைக்கை ஆடையில் பொருத்திக்கொண்டு அவளை பேச விடாது பேசிக்கொண்டே ராகவன் செல்ல, அவளுக்கு அய்யோ என்றிருந்தது.

அவரின் வளவளக்கும் பேச்சைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள். இன்றுதான் அதன் கஷ்டத்தை அனுபவிக்கிறாள்.

சுற்றிமுற்றி தான் தேடி வந்தவனை விழிகளால் தேடி அலசியவள், “எக்ஸ்ஸாக்ட்லி சார், அவங்களோட கம்பனிக்காக மட்டுமே நான் பாடுறதா மூனு வருஷம் போட்ட அக்ரீமென்ட்லயிருந்து நான் விலகினது உண்மைதான். இனி மேகாவோட சோலோ ஆல்பம் சோங்க்ஸ்ஸ நீங்க பார்க்கலாம். என்ட், இப்போ  நான் ஏன் வந்தேன்னா…” என்று கேட்க வர, அதற்குள் அவளின் அலைப்பேசி ஒலிக்க, ‘ச்சே!’ என்று சலித்தவாறு, “எக்ஸ்கியூஸ் மீ சார்!” என்றுவிட்டு அங்கிருந்து சற்று ஓரமாக வந்து அலைப்பேசித் திரையைப் பார்த்தாள்.

அவளின் அம்மா அமுதாதான். எதற்கு அழைக்கிறார் என்று அறியாதவளில்லை. இருந்தும் மூச்சை இழுத்துப் பிடித்து அழைப்பை ஏற்றவள், “இதுக்குமேல என் வாழ்க்கையில நீங்க தலையிட நான் அனுமதிக்க மாட்டேன். உங்களால நான் மூனு வருஷம் அவன இழந்து தவிச்சதே போதும். இதுக்கப்றம் அவன நான் இழக்க தயாரா இல்லை. என் ரிஷிய நான் இழக்க தயாரா இல்லை” என்று அழுத்தமாகக் கூறி முடிக்கவில்லை, “ரிஷி… ரிஷி…” என்ற ரசிகர்களின் கத்தல்.

அழைப்பை துண்டிக்கக் கூட செய்யாது மேடையின் ஒரு பக்க மூலையிலிருந்து மேடையில் நடப்பதைப் பார்த்தவளின் விழிகள் வருடங்கள் கழித்துப் பார்க்கும் அவனின் முகத்தில் அப்படியே நிலைத்தது.

“ரிஷ்…” மெதுவாக முணுமுணுத்தன அவளிதழ்கள்.

நெற்றியில் புரண்ட முடிக்கற்றைகளை அவன் வலக்கரம் ஒதுக்கிவிட, வாயிற்கருகே நீட்டிக்கொண்டிருந்த மைக்கை சரிசெய்து, கிட்டாரை ஸ்டைலாகப் பிடித்திருந்தது அவன் இடக்கரம். இதற்குதானே இத்தனைநாள் ஆசைப்பட்டேன் என்ற வெற்றிப்புன்னகை விழிகளில் மிதக்க, மயக்கும் சிரிப்போடு ராகவனின் பக்கத்தில் நின்றிருந்தான் அவன். ரிஷி வேதாந்த்.

ராகவனுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் கிடைக்கும் வரவேற்புக்கு குறையாது ஒன்றரை மாதத்தில் இரண்டே ஆல்பம் பாடங்களில் தனக்கான ரசிகர்களை சேர்த்துக்கொண்ட கர்வம் அவன் விழிகளில் தெரியத்தான் செய்தது. இருந்தும் ரசிகர்களுக்கு மத்தியில் குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் தனக்கான ஆரவாரத்தைப் பார்த்து அவன் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த பணிவு.

அவன் இன்னும் பாடவே ஆரம்பிக்கவில்லை. ஆனால், ராகவனின் பாடலுக்கு ஏற்ப அவன் இசைத்த கிட்டார் இசையிலும் அதை  அவன் அவனுக்கே உரிய ஸ்டைலில் பிடித்து வாசித்த விதத்திலும் மயங்கித்தான் போனர் அங்கிருந்த மங்கைகள். மற்ற பெண்கள் மட்டுமா, மேக்னாவும்தானே!

எத்தனை வருடங்கள் கழித்து அவனை நேரில் சந்திக்கிறாள்! அவள் செய்த தவறு இன்று அவனை இழந்து நிற்கிறாள். அவனுக்கு தன்னை ஞாபகம் இருக்குமா என்ற கேள்வி வேறு அவளுக்குள்.

‘அதெப்படி இல்லாம இருக்கும்? மேக்னா சௌத்ரிய தெரியாத ஆளுங்களா?’ மூளை தானிருக்கும் உயரத்தை எண்ணி நினைக்க, அவள் மனமோ, ‘ஆனாலும், அவனோட மேகாவா என்னை பார்ப்பானா?’ என்ற ஏக்கத்தில் தத்தளித்தது.

சரியாக, ராகவன் தன் பாடலை நிறுத்தி ரசிகர்களோடு கேளிக்கையாக பேச ஆரம்பிக்கவும், அடுத்து தான் பாட வேண்டியதை நினைவுப்படுத்தி தண்ணீர் அருந்தவென மேடைக்கு பின்னே அந்த நேரத்தைப் பயன்படுத்தி ஓடி வந்தான் ரிஷி.

அங்கிருந்தவர்களும் வேகமாக செயல்பட்டு அவனுக்கான தண்ணீர் போத்தலைக் கொடுக்க, சிறிது உதட்டில் படாமல் விழுங்கியவன், எதேர்ச்சையாகத் திரும்ப, இப்போது அதிர்ந்து விழிப்பது அவன் முறையானது.

அவன் விழிகள் தன்னெதிரே தன்னையே குற்றவுணர்ச்சி, ஏக்கம் என கலந்த பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்த மேக்னாவின் முகத்தில் நிலைக்க, அவனுடைய அதிர்ச்சியும் சில கணங்கள்தான். சுதாகரித்து தன்னை மீட்டுக்கொண்ட ரிஷியின் பார்வையில் தெரிந்த ஏளனத்தில் மேக்னாவே உள்ளுக்குள் சற்று கூசித்தான் போனாள்.

மைக்கை அவளைப் பார்த்தவாறே சரிசெய்து பாய்ந்து குதித்து மேடைக்கு ஏறியவனின் முகத்தில் இதற்குமுன் இல்லாத இறுக்கம். அதை ராகவனும் கவனிக்காமலில்லை.

அவரோ அத்தனை ரசிகர்களுக்கு மத்தியில் முகம் இறுக நின்றிருந்தவனை புரியாதுப் பார்த்துவிட்டு அவன் தோளில் கை வைக்க, விழிகளைத் திறந்து, பக்கவாட்டாகத் திரும்பி மென்மையாகப் புன்னகைத்தவன் ‘ஐ அம் ஓகே’ எனும் விதமாக விழிகளை மூடித் திறந்து கிட்டாரை இசைக்க ஆரம்பித்தான். கூடவே, அவனின் காந்தக் குரலோடு.

அந்தக் குரலில் மயங்கி மொத்தக் கூட்டமுமே ரிஷியோடு சேர்ந்து அந்த பாடலை பாட ஆரம்பிக்க, அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் விழிகளில் நிரப்பிக்கொண்டிருந்த மேக்னாவுக்கு அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை.

“மேகா, வா போகலாம். அக்கா கால் பண்ணிட்டே இருக்காங்க. ப்ளீஸ்” ஈஷ்வரன் சொல்ல, மனதில் ஒரு முடிவு எடுத்தவளாக அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

அதேநேரம் பாடி முடித்து ராகவனை விழிகள் கலங்க ரிஷி நோக்க, “இப்போ புரியுதா, நான் ஏன் உன்னை செலக்ட் பண்ணேன்னு?” என்று கேட்டவர், விழிகளால் ரிஷியின் பெயரைச் சொல்லிக் கத்தும் ரசிகர்களைக் காட்டினார்.

அதைப் பார்த்தவனின் மனம் ஒருபக்கம் அடைய வேண்டியதை அடைந்ததை நினைத்து சந்தோஷப்பட்டாலும் இன்னொருபுறம் சற்று நேரத்திற்கு முன் பார்த்த மேக்னாவின் முகத்தை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி ரணப்படுத்தியது

அதேநேரம், நிறைய சிறு வீடுகள் இணைக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கும் அந்த நடுத்தர வர்க்கத்தினர் வாழும் பகுதியில் ஒரு வீட்டின் முன் பட்டாசு சத்தம். ஆனால், அந்த வீட்டிலிருந்தவர்களோ அதை கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை. இது வழக்கமாக நடப்பதுதான் போலும்!

ஆனால், தலையைத் தாங்கியவாறு அமர்ந்திருந்த அந்த வீட்டிலிருந்த நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மூத்தவருக்கு மனம் இன்றைய தினத்தை நினைத்து கனத்துப் போயிருந்தது. அந்த பட்டாசு சத்தத்திற்கான காரணமும் அதேதான்.

எழுந்தவர், தன் இரண்டாவது மனைவி, “ஏங்க…” என்று அழைப்பதைக் கூட கேட்காது வெளியில் சென்றுப் பார்க்க, அங்கு பேன்ட் டீஷர்ட்டில் தலையில் முண்டாசுக் கட்டி பட்டாசை வெடிக்கவிட்டு தன் தோழன் இந்தருடன் ஆரவாரம் செய்தவாறு ஆடிக்கொண்டிருந்தாள் சாணக்கியா.

“சனா…” என்று குரல் கொடுத்த இந்தர், விழிகளால் வாசலில் நின்றிருந்த ராஜலிங்கத்தைக் காட்ட, ஸ்விங்கத்தை சப்பியவாறு தலையைச் சரித்துப் பார்த்தவள், ஏளனமாகச் சிரித்துக்கொண்டு “ஓஹோ! புது மாப்பிள்ளைய டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? சார்ரீ…” என்றாள் பொய்யாக அழுத்தி நிறுத்தி கேலியாக.

“எதே புது மாப்பிள்ளையா? கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகுது. இன்னும் அதே டயலாக்க வருஷா வருஷம் சொல்லிக்கிட்டு இருக்க” இந்தர் அதிர்ந்து சொல்வதிலேயே இந்த இருவரும் இன்று நேற்றல்ல தொடர்ந்து இரண்டு வருடங்கள் இந்த வீட்டின் முன் இதைதான் செய்கிறார்கள் என தெளிவாகத் தெரிகிறது.

அவனை ஒற்றைப் புருவத்தை தூக்கி முறைத்தவள், “இருக்கட்டும். நான் அப்படிதான்டா சொல்வேன். ஆமா… என்ன பண்றா உங்க பொண்டா…” என்று ராஜலிங்கத்தை பார்த்து கேட்க வந்து நிறுத்தி, “சாரி சாரி, என் சின்னம்மா” என்றுவிட்டு கத்திச் சிரிக்க, ராஜாவோ எதுவும் பேசவில்லை. அமைதியாக அவளையே பார்த்திருந்தார்.

அவருடைய அமைதியிலேயே அவளின் சிரிப்பு தானாக அடங்கியது. ஸ்விங்கத்தைச் சப்பியவாறு அவரை முறைத்துப் பார்த்தவள், “இந்தர் வாடா போகலாம்” என்று கோலரை தூக்கிவிட்டுக்கொண்டு முன்னே நடக்க ஆரம்பிக்க, இப்போது புரியாமல் திருதிருவென விழித்தான் அவன்.

இரண்டு வருடங்கள் தொடர்ந்து அவனும் கவனிக்கத்தானே செய்கிறான்!
ஒவ்வொரு வருடமும் அவள் அம்மாவின் நினைவு நாளன்று அவளின் தந்தை ராஜாவின் இரண்டாவது மனைவியின் வீட்டின் முன் பட்டாசை வெடிக்கவிட்டு சாணக்கியா ஆர்ப்பாட்டம் செய்வதையும், அவரும் எந்த எதிர்வினையுமின்றி அவளை அமைதியாக பார்த்து நிற்பதையும்.

ராஜாவோ விழிகளில் வலியுடன் போகும் தன் மகளை பாவமாக நோக்க, அவளுக்கும் அதே வலிதான், தன்னிலையை நினைத்து.

மூன்று வருடங்களுக்கு முன் அவளின் அம்மா இறக்க, அடுத்த ஒரே வருடத்தில் இரண்டாவது திருமணத்தை செய்துக்கொண்டார் அவளின் அப்பா ராஜா. அப்போதிலிருந்து தன் அம்மா வசித்த வீட்டில் தன்னை தனிமைப் படுத்தியவள், தன் தந்தையை அரவே வெறுத்திருந்தாள்.

ஏனோ ஒவ்வொரு வருடமும் அம்மாவின் நினைவு நாளன்று தந்தைமேல் உருவாகும் கோபத்தை மட்டும் இவ்வாறு பட்டாசை வெடிக்கவிட்டு ஆடி தீர்த்துக்கொள்வாள். 

அன்றிரவு, மூவரும் மூன்று விதமான மனநிலையில் தத்தளித்துக்கொண்டு இருந்தனர்.

மூன்று வருடங்கள் கழித்து தான் இழந்தவனை கண்டுவிட்ட திருப்தியிலும் அவனை சமாதானப்படுத்திவிடலாமென்ற நினைப்பிலும் இதன்பிறகு நடக்கப்போவதை அறியாது நிம்மதியாக மேக்னா உறங்கிக்கொண்டிருக்க, “சனா, கதவை திற!” என்ற இந்தரின் கத்தல்களை கேட்டும் கதவைத் திறக்காது சுவற்றில் மாட்டியிருந்த தன் அம்மாவின் படத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள் சாணக்கியா.

இந்த இருவரின் வாழ்விலும் தாக்கம் செலுத்தப் போறவனுக்கோ விழிகளில் வெற்றிக்கான வெறி மட்டுமே. கடந்தகால நிகழ்வுகள் அவன் மனதை கனக்கச் செய்து உடலை விறைக்கச் செய்தாலும் முயன்று தன்னை மீண்டும் மீண்டும் மீட்டி இசையெனும் போதையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டிருந்தான் ரிஷி வேதாந்த். 

Leave a Reply

error: Content is protected !!