தொலைந்தேன் 02 💜

eiVOMW533603-4dd9cce5

தொலைந்தேன் 02 💜

விழிகளை மெல்ல திறக்க முயற்சித்த ரிஷிக்கோ உண்டான தலைவலியில் விழிகளைத் திறப்பதே முடியாத காரியமாகிப் போனது. இருந்தும், முயன்று கண்களை விரித்து சுற்றிமுற்றிப் பார்த்தவனுக்கு எதிரில் தன்னையே முறைத்தவாறு நின்றுக்கொண்டிருந்த ராகவனைப் பார்த்ததும் தன்னிலை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.

கரத்தில் உண்டான அழுத்தத்திலும் வலியிலும் பக்கவாட்டாகத் திரும்பி பார்த்தவன், வலது கரத்தில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்ததைப் பார்த்து ஆழ்ந்த பெருமூச்சுடன் விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.

ராகவனின்  விடாத திட்டுக்கு தயாராகிவிட்டான் போலும்!

ஆனால், அவன் நினைத்தது போல இல்லை. “ப்ராக்டிஸ் பண்ணலாம். ஆனா, இது டூ மச் ரிஷி. நம்மளோட சக்ஸஸ்ஸ பார்க்க நாம உயிரோட இருக்கக் கூடாதா?” கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி அழுத்தமாக அவர் கேட்க, “இதுவே போதாது சார்.” என்றவனின் வார்த்தைகளில் தெரிந்த  வெறியில் அவருக்கே சற்று பயமாகத்தான் இருந்தது.

மெல்ல அவனருகில் அமர்ந்தவர், “லுக் ரிஷி, உன்னை முதல்முதலா பார்க்கும் போது ரோட்டோரமா கிட்டார் வாசிச்சிக்கிட்டு இருந்த. அப்போ நான் இருந்த வேதனைக்கு எனக்கு மருந்தா கிடைச்சவன் நீ. யூ நோ வெல், எனக்கு நீ எவ்வளவு முக்கியம்னு.” குரல் தழுதழுக்க அவர் சொன்னதிலேயே அவன் மனம் உருக, அவன் நினைவுகளோ அவரை சந்தித்த தருணங்களை நினைத்துப் பார்த்தது.

இருவருமே ஒருவரையொருவர் சந்திக்கையில் தமக்கான நெருங்கிய ஒன்றை இழந்த வேதனையிலேயே கிடந்தனர். இருவருக்குமே இருவரும் மருந்து.

பெங்ளூரில் வீதியோரமாக விழிகளில் கண்ணீரோடு கிட்டார் வாசித்துக்கொண்டிருந்தவனை, அதே கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தவர்தான் ராகவன். தானே இசையமைத்து அவன் பாடியிருக்க, அந்த புது இசையும் குரலும் இதுவரை அவர் கேட்காத ஒன்று.

கூடவே, இசையில் உணர்ச்சிகளைக் கொட்டி பாடிய ரிஷியின் குரலிலிருந்த ஏதோ ஒன்று அவர் இழந்த அவருடைய மகனை ஞாபகப்படுத்த மறுகணமே அவனை தன்னோடு மும்பைக்கு அழைத்து வந்துவிட்டார்.

என் காயத்துக்கான ட்ரீட்மென்ட் நீதான் ரிஷி. உன் வெற்றிதான் எனக்கான மருந்து.” அன்று அவர் சொன்ன வார்த்தைகளை இன்றும் அவன் மறக்கவில்லை.

அந்த நேரத்தில் தன் துறையில்  வீழ்ச்சி, தன் மகனின் இழப்பு என வேதனையில் கிடந்தவருக்கு இவன் மருந்தாகிப் போக, ரிஷிக்கோ தான் அடைய வேண்டியதை அடைவதற்கு ராகவன் வழிகாட்டியாகிப் போனார்.

ரிஷியின் விழிகள் கலங்கியிருக்க, “இரண்டு வருஷம் நீ பட்ட கஷ்டம்தான் இப்போ வெளியாகியிருக்க உன் இரண்டு பாட்டும். நீ சொன்ன மாதிரி இது மட்டும் போதாது. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” அவரின் அழுத்தமான வார்த்தைகளில் அவன் தலை தானாக புரிந்துக்கொண்டது போல் அசைந்துக்கொடுத்தாலும், அடுத்த இரண்டே நாளில் தன் வேலையை மீண்டும் ஆரம்பித்துவிட்டது அவன் மனமும் மூளையும்.

எப்போதும் மனம் ஒன்று சொல்ல, முளை ஒன்று சொல்ல என இருக்கும். ஆனால், இவன் விடயத்தில் இரண்டுமே ஒன்றை மட்டுமே சொன்னது. வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே.

கடந்த காலத்தை மறக்க மொத்தமாக இசையில் தன்னை மூழ்கடித்துக்கொள்வான் இல்லையேல் வியர்வை சொட்ட சொட்ட தன் உடலை ஜிம்மில் செதுக்க ஆரம்பித்துவிடுவான். இரண்டுமே நினைவுகளை மறக்க அவன் பயன்படுத்தும் போதைகள்.

அவன் கொடுத்த இரண்டு பாடல்களின் விளைவு அடுத்தடுத்ததென சில திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்க, ராகவனின் சம்மதத்தோடு அதை செய்துக் கொடுத்தவன், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை ராகவனின் இயக்கத்தில் தான் இசையமைத்து ஒரு ஆல்பம் பாடலை யூடியூப் காணொளியில் வெளியிடுவான்.

அதுவும் வெளியான ஒரேநாளில் பல மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கும். கூடவே, சில ஹிந்தி, தெலுங்கு பாடல்களும் அவனுடைய பட்டியலில் அடங்கும். எல்லா மொழி மக்களையும் ஒரே வருடத்தில் தன் இசையால் கட்டிப்போட்டான் ரிஷி வேதாந்த் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வருடம் ஓடியிருக்கும். இதற்கிடைப்பட்ட நாட்களில் தலையை பிய்த்துக்கொண்டது என்னவோ மேக்னாதான். அவனைப் பார்த்ததுமே தன்னவனை சந்தித்து இலகுவாக சமாதானப்படுத்திவிடலாமென ஒரு நினைப்பில் இருந்தவளுக்கு அத்தனையும் தலை கீழாக மாறிவிட்டது.

அவள் எவ்வளவு முயற்சித்தும் தன்னை நெருங்கவே விடவில்லை ரிஷி.

கூடவே, ஐந்து வருடங்களுக்கு முன் சினிமா துறையில் பிரபலமான நரேந்திரனின் வைவா எனப்படும் பாடல் கம்பனிக்காக மட்டுமே தன் பாடல்களென தான் செய்துக்கொண்ட கான்ட்ரெக்ட்டை ரிஷியை சந்திப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னே முறித்திருந்தாள் மேக்னா.

இப்போது ரிஷியை சந்தித்த பின்னரான

ஒரு வருடத்தில் தனியாக தானே இயக்கம் செய்து ஆல்பம் பாடல்களை அவள் வெளியிட, அதற்கு இடையூறாக நரேந்திரன் வேறு சில பிரச்சினைகளை ஏற்படுத்த, ரிஷியின் மறுப்போடுச் சேர்த்து இந்தப் பிரச்சினைகளும் அவளை பாடாய் படுத்தியது.

“இது கொஞ்சம் கூட சரியில்லை மேகா, அன்னைக்கு சொல்ல சொல்ல கேக்காம கான்ட்ரேக்ட்ட ப்ரேக் பண்ண இப்போ உன் வேலையில கவனம் செலுத்தாம அவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க. அவனுக்கு உன்னை கொஞ்சமும் நியாபகமில்லைடீ” அமுதா கத்த, சோஃபாவில் அமர்ந்திருந்தவளோ சிவந்த விழிகளோடு தன் அம்மாவை ஒரு பார்வைப் பார்த்தாள்.

அவருக்கோ குற்றம் சாட்டும் அந்த பார்வையில் ஒருமாதிரி ஆகிப்போனது. ஓரக்கண்ணால் எதுவும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்த தன் கணவர் விஷாலை அவர் நோக்க, அவரோ இதிலெதுவும் தலையிடவில்லை.

அன்று அவர் சொல்வதை அம்மா, மகள் இருவரும் கேட்காததின் விளைவே இது.

ரிஷி, மேக்னா இருவரின் வாழ்கை நாட்கள் வேகமாக நகர, இவ்வாறு ஒரு வருடம் கடந்துவிட்டது.

அன்று மாலை, சினிமா உட்பட எல்லா துறைகளிலும் பிரபலம் பெற்ற முண்ணனி நட்சத்திரங்கள், வியாபார அதிபர்கள் என பல பேர் மும்பையின் அந்த பிரம்மாண்ட அரங்கத்தில் கூடியிருக்க, சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் நட்சத்திரங்களுடன் கேளிக்கையாகப் பேசி உள்ளே வரவேற்றனர் அந்த விழாவை நடத்தவிருக்கும் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்.

இது போன்று விழாக்களில் சந்தித்துக்கொள்ளும் நட்சத்திரங்களும் கேலியாகச் சிரித்து பேசிக்கொண்டிருக்க, இன்றாவது ரிஷியை சந்தித்தே ஆக வேண்டுமென்ற உறுதியில் ஒரு பிரபலத்துடன் பேசிக்கொண்டிருந்தாலும் மேக்னாவின் விழிகளோ சுற்றிமுற்றி அவனையே தேடிக்கொண்டிருந்தது.

இதுவே சில வருடங்களுக்கு முன்னென்றால் விழாவுக்கு வந்ததிலிருந்து விருதுக்காக மட்டுமே அவள் மனம் அடித்துக்கொள்ளும். ஆனால், இன்று தனக்கு விருது கிடைக்கப் போகிறதோ, இல்லையோ அதையெல்லாம் கொஞ்சமும் கருத்திலே எடுத்துக்கொள்ளாமல் ரிஷியை சந்திக்கப்போவதை எண்ணி படபடத்துக்கொண்டது அவள் மனம்.

நிகழ்ச்சியும் ஆரம்பமாகிவிட்டது. ஆனால், ரிஷியோ வந்தபாடில்லை. மனம் சோர்ந்தாலும் கேமராக்களுக்கு பயந்து முகத்தை வரவழைத்த புன்னகையோடே வைத்திருந்தாள் மேக்னா. இத்துறையில் இருப்பவர்கள் பூசிக்கொள்ளும் அதே போலிப்புன்னகை. வலியில் புன்னகைக்கும் அந்த வலியை அவர்கள் மட்டுமே அறிவர்.

மேடையில் கவனத்தைச் செலுத்த முடியாது அலைப்பேசியை நோண்டுவதுபோல் அவள் பார்வையை தாழ்த்திக்கொள்ள, அடுத்தடுத்த சில நிகழ்ச்சிகள் முடிந்து அடுத்த விருதுக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.

பெஸ்ட் ப்ளேபெக் சிங்கர் மேல்” என்ற விருதுக்கான அறிவிப்பு.

அந்த விருதோடு சம்மந்தப்பட்ட இளம் பாடகர்கள் மேடையை ஆர்வமாக நோக்க,

இரண்டு முண்ணனி நடிகைகள் மேடைக்கு வந்து கேலியாக உரையாடிவிட்டு அந்த விருதுக்கான பெயரை அறிவித்தனர்.

“ரிஷி வேதாந்த்” என்று அவர்கள் சொன்ன பெயரில், அவன் வரவில்லையென நிமிராது அமர்ந்திருந்தாள் மேக்னா. எப்படியும் தன்னை சந்திப்பதைத் தவிர்க்க அவன் வர மாட்டானென ஏற்கனவே அவள் யூகித்து வைத்திருந்ததுதான்.

“ரிஷி வேதாந்த்… ரிஷி வேதாந்த்…” இரண்டு முறை பெயரை அழைத்தும் அவனை காணாது ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்ட பிரபலங்களுக்கு, வராததை முன்கூட்டியே அவன் அறிவிக்காததை நினைத்து அவனின் செயலில் ஒரு அதிருப்தி உண்டாக, அங்கிருந்த நிபுணர்களுக்கும் இது லட்டு போன்ற செய்தியாகவே தெரிந்தது.

ஆனால், அத்தனை பேரின் நினைப்புக்களையும் தகர்த்தெறிவதுபோல் வாசலில் ஒரு சலசலப்பு சத்தம். எல்லோர் பார்வையும் அங்கு திரும்ப, சலித்தவாறு சற்று எட்டிப் பார்த்தாள் மேக்னா. ஆனால், அவள் விழிகளை அவளாலே நம்ப முடியவில்லை.

அடர்நீல நிற கோட்சூட்டில் முகத்தில் ஒருபக்கம் பதற்றம், மறுபுறம் ஏதோ ஒரு கடுப்பு என அப்பட்டமாக உணர்ச்சிகளைக் காட்டியவாறு இரு பாதுகாவலர்களுக்கு நடுவில் வேகவேகமாக மேல்கோட் பட்டன்களை போட்டவாறு உள்ளே நுழைந்த ரிஷி, அதே வேகத்தோடு மேடையின் மீது ஏற, சுற்றியிருந்தவர்களே அவனின் வரவில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

சில கணங்களில் தங்களை சுதாகரித்துக்கொண்ட அறிவிப்பாளர்களோ இப்போது சிரிப்போடு பலத்த வரவேற்பைக் கொடுத்து, “வெல்கம் வெல்கம் ரிஷி சார், அகைன் அவார்ட் அன்னௌன்ஸ் பண்ணா நல்லாயிருக்கும்னு தோனுது. த பெஸ்ட் ப்ளேபெக் சிங்கர் மேல் கோஸ் டூ ரிஷி வேதாந்த்.” என்று ஆரவாரமாகச் சொல்ல, விருதை வைத்திருந்த அந்த நடிகைகளும் லேசான அணைப்பைக் கொடுத்து விருதை அவன் கையில் கொடுத்தனர்.

அதை வாங்கிக்கொண்டவனுக்கோ அப்போதுதான் மனதில் இதம் பரவியது. காலையிலிருந்து எத்தனை பதட்டம். மாலையே சென்னையில் தன் பாடலொன்றை பாடிக் கொடுத்துவிட்டு அவசரஅவசரமாக அடுத்த விமானத்தைப் பிடித்து மும்பைக்கு வந்து சேர்ந்தவனுக்கு தன் ஆடையை தயார் செய்து அணிந்து வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

அதுவும், மேக்னாவை தவிர்ப்பதற்காகவே அவன் விழாவை தவிர்க்க நினைத்திருக்க, ராகவன் விட்டால்தானே!

அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே அத்தனை வேலைகளுக்கு நடுவே ஓடி வந்து ‘அப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட ரிஷி, மைக்கை கையிலெடுத்து சுற்றிலும் ஒரு பார்வைப் பார்த்தான்.

ரசிகர்கள் அவன் பெரைச் சொல்லி கத்துவது கூட அத்தனை இன்ப போதையைக் கொடுத்தது. “தேங்க் யூ சோ மச் எவ்ரிவன், உங்க லவ் என்ட் சபோர்ட்டுக்கு எப்போவும் நான் கடமைபட்டிருக்கேன். என்ட், ஐ டெடிகேட் திஸ் அவார்ட் டூ மை சார்.” வளவள கொளகொளவென்று பேசாது சுருக்கமாகப் பேசிவிட்டு அவன் நகரப் போக, அவ்வளவு இலகுவாக தொகுப்பாளர்கள் விட்டுவிடுவார்களா என்ன?

“சார், ஒரு வரி உங்க ஃபேன்ஸ்காக பாடிட்டு போகலாமே!” அவர்கள் ஆர்வமாகக் கேட்க, ரசிகர்களும் அதை ஆமோதிக்கும் விதமாக மேலும் குரல் கொடுக்க, வெட்கத்தில் சிரித்தவனின் வசீகரச் சிரிப்பில் அங்கிருந்த நாயகிகளே சற்று தங்களை இழக்கத்தான் செய்தனர். இதில் மேக்னாவை சொல்லவா வேண்டும்?

அவனின் ஒவ்வொரு பாவனைகளையும் அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருந்தாள்.

ரிஷியும் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவன், விழிகளை மூடி தற்போது வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற அவனின் ஆல்பம் பாடலொன்றின் சில உருகும் வரிகளைப் பாட, அரங்கமோ அத்தனை அமைதி. அவன் பாடலில் அவனோடு சேர்த்து அங்கிருந்தவர்களும் லயிக்க, மேக்னாவுக்கோ விழிகள் சற்று கலங்கிவிட்டது.

அவனும் பாடி முடித்து, ஸ்டைலாக இறங்கி தனக்கான இருக்கையில் மற்ற முண்ணனி நடிகர் நடிகர்களோடு அமர்ந்துக்கொள்ள, அவனைக் காண தவியாய் தவித்தது மேக்னாதான். ஆனால், மேடையில் வைத்தே அவளை கவனித்திருந்த ரிஷி, திரும்பியும் அவளைப் பார்க்கவில்லை.

விழா முடிந்ததும் அரங்கத்திற்கு பின்னே விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கு கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்க, “இதெல்லாம் தவிர்க்க கூடாது ரிஷி கண்ணா, இந்த துறையில இருக்குற எல்லார் கூடவும் பழகு!” ராகவன் ஏற்கனவே சொல்லி அனுப்பியதில் குருவின் பேச்சை கடைப்பிடிக்கும் சிஷ்யனாக மற்ற பிரபலங்களோடும் சிரித்து பேசிப் பழக ஆரம்பித்தான் அவன்.

இதை தூரத்திலிருந்து மேக்னாவும் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் கவனிப்பதை இவனும் உணரத்தான் செய்தான். ஆனால், கொஞ்சமும் அவளை கண்டுக்கொள்ளவில்லை.

பொறுத்துப் பார்த்து முடியாமல் மெல்ல ரிஷியை அவள் நெருங்க, ரிஷியுடன் பேசிக்கொண்டிருந்த நடிகரொருவர், “ஹெலோ மிஸ்.மேக்னா, ஜொய்ன் வித் அஸ்.” என்று உற்சாகமாகச் சொல்ல, அவளும் சிறு தயக்கத்தோடு, “ஹாய்…” என்றவாறு அவர்களருகில் நின்றாள்.

இன்றுதான் அவன் பக்கத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அத்தனை வேகமாக அவளுடைய இதயம் படபடக்க, கீழுதட்டைக் கடித்து தடுமாற்றத்தை மறைக்க முயன்றவள், மெல்ல நிமிர்ந்து ரிஷியை பார்க்க, அடுத்தகணம் அதிர்ந்துவிட்டாள் அவள்.

முகமெல்லாம் சிவந்துப்போய் தரையை வெறித்தவாறு கையிலிருந்த வைன் க்ளாஸை விட்டால் நொறுக்கிவிடுவேன் என்ற ரீதியில் அவன் நின்றிருக்க, ஆடிப்போய்விட்டாள் மேக்னா.

“ரி..ரிஷி” மெல்ல அவள் அழைக்க, க்ளாசை தரையில் விட்டவன், வேகமாக அங்கிருந்து நகரப் போக, இப்போது பேசாவிட்டால் மீண்டும் வாய்ப்பு கிடைக்காதென பயந்தவள், உடனே அவன் கையைப் பிடித்துவிட்டாள். அவ்வளவுதான்!

“வில் யூ ஜஸ்ட் லீவ் மை ஹேன்ட் இடியட்?” ரிஷி ஆக்ரோஷமாகக் கத்திவிட, அந்தக் கத்தலில் சுற்றியிருந்த மொத்தப் பேருமே அவர்களிருவரை கேள்வியாக நோக்கினர். இது ரிஷியின் வளர்ச்சியின் மேல் கடுப்பிலிருந்த சில பிரபலங்களுக்கும் லட்டு போன்ற செய்தியாகிப் போக, உடனே காணொளி எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

நாளை வலைத்தளங்களில் பரப்ப வேண்டும் அல்லவா!

ரிஷி கத்தியதும் சட்டென கையை இழுத்துக்கொண்ட மேக்னா, வாயில் வார்த்தைகள் கூட வராது ஸ்தம்பித்து நின்றுவிட, சுற்றியிருந்தவர்களை சிவந்த விழிகளோடு ஒரு பார்வைப் பார்த்தவன், விறுவிறுவென அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

அன்றிரவு ஒரு மணியளவில், மும்பையில் பலர் வருகை தரும் சுற்றுலா தளமான அந்த மலைக் குன்றின் முனையில் நின்றிருந்தான் ரிஷி வேதாந்த் கையில் மதுபோத்தலுடன். முன்பெல்லாம் மனதின் அமைதியைத் தேடி அவன் வருகை தரும் இடமே காடுகளும் மலைகளும்.

ஆனால், மக்களுக்கிடையே பிரபலம் பெற்றதிலிருந்து இது போன்று சுதந்திரமாக அவனால் வர முடிந்தால்தானே! கூடவே, வேலைப்பழு வேறு.

ஆனால், இன்று ஆத்திரத்தை அடக்க அவனுக்கு வேறு வழித் தெரியவில்லை. இது போன்ற இடங்களுக்கு இரவு நேரம் வருவதிலுள்ள ஆபத்தைக் கூட உணராது அவன் பாட்டிற்கு அமைதியைத் தேடி வந்துவிட்டான். ஆனால், வந்தும் மனம் அடங்கியபாடில்லை.

கத்தி அழாவிட்டாலும் அவன் மனதின் கதறலை அவன் மட்டுமே அறிவான்.

“நீ செலக்ட் ஆகி பெரிய ஆளா வந்ததும் எனக்கு ஒரு கிட்டார் வாங்கி கொடுக்குறியா? இப்போ வாங்க முடியாம இல்லை, பட் நீ கொடுக்குறது ரொம்ப சென்டிமென்ட்டா இருக்கும்.” ரிஷி விழிகளில் காதலோடுக் கேட்க,

“உனக்கில்லாததா ரிஷ், நீ வேணா பாரு நான் செலக்ட் ஆகி வேற லெவல்ல சாங்க்ஸ் பண்ணி உனக்கு பிடிச்ச எல்லா இன்ட்ரூமென்ட்ஸ்ஸும் வாங்கி தரேன், ஆனா அதுக்கு முன்னாடி என்னை சீக்கிரமா கல்யாணம் பண்ணிடு.” என்றாள் அந்த இருபது வயது மேக்னா.

அன்று அந்த வார்த்தைகளால் வெட்கம் தோன்றிய ரிஷியின் விழிகளில் இப்போது வெறுப்பு மட்டுமே. அந்த குளிர்காற்று கூட அவன் மனதின் உஷ்ணத்தை அணைக்கவில்லை.

நினைவுகளில் மிதந்துக்கொண்டிருந்தவன், அதிலிருந்து தன்னை விடுவிக்கவென விழிகளை அழுந்த மூடித் திறக்க, அடுத்தகணம் அளவுக்கதிகமான போதை ஒரு மயக்கத்தை உண்டாக்கிவிட்டது.

மலைக்கு மறுபுறமோ பள்ளத்தாக்கு. விழுந்தால் உயிர் பிழைக்கவே வாய்ப்பில்லை. ஆனால், அதை உணரும் நிலையிலில்லை அவன்.

விழிகள் தானாக மூட, அப்படியே மறுபுறம் விழப் போன ரிஷியின் டீஷர்ட் கோலரை பிடித்தது ஒரு கரம்.

“ஆத்தாடி ஆத்தா, என்ன இம்புட்டு வெயிட்டா இருக்கான்! யோவ் நீ நின்னுக்கிட்டே தூங்குறதுக்கு இந்த இடம்தான் கிடைச்சதா? அறிவில்லாத முண்டம்!” தாறுமாறாகத் திட்டிய ஒரு பெண் குரல் அவனின் காதுகளில் நன்றாகவே கேட்டது.  அதுவும் இந்த குரல் இதற்குமுன் அவனறிந்த குரலே.

கஷ்டப்பட்டு விழச் சென்ற ரிஷியின் கோலரைப் பிடித்து அவள் பின்னால் இழுக்க, தடுமாற்றத்தோடு அவள் இழுத்த இழுப்பிற்கு வந்து நின்று ரிஷி கஷ்டப்பட்டு அரைக்கண்களை திறந்துப் பார்க்க, அவனெதிரே ஒற்றை புருவத்தை தூக்கிய தோரணையில் இடுப்பில் கைக்குற்றி முறைத்தவாறு நின்றிருந்தாள் சாணக்கியா.

“ஓஹோ! நீயா…” சலித்தவாறு அவள் வார்த்தைகள் வர, அவள் முகத்தை சில கணங்கள் அப்படியே பார்த்திருந்தவன், அப்படியே  அவள் மேலேயே வாந்தியை எடுத்து முழு மயக்கமாகிவிட, இதை எதிர்ப்பார்க்காததில் ரிஷியோடு சேர்ந்து தரையில் விழுந்துவிட்டாள் அவள்.

முதலில் ரிஷியை தாங்கியவாறு ஸ்தம்பித்து விழித்துக்கொண்டிருந்த சாணக்கியா, பின் சுதாகரித்து “அடக் கடவுளே! உன்னை காப்பாத்த வந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ, பண்ணிட்ட.” என்று தன்னிலையை நினைத்து ஆத்திரத்தில் அந்த மலையே அதிரும் வண்ணம் “ஆ…” என கத்திவிட்டாள்.

Leave a Reply

error: Content is protected !!