தொலைந்தேன் 06 💜

eiIH8835272-efdaf833

தொலைந்தேன் 06 💜

ரிஷியும் சனாவும் சந்தித்து ஒருமாதம் கழிந்த நிலையில்,

தன் ஸ்டூடியோவில் இன்னும் பத்தே நாட்களில் நடக்கவிருக்கும் கான்செர்ட்டுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான் ரிஷி. அவனெதிரே ராகவனும் அமர்ந்திருக்க, அவரின் புருவங்களோ யோசனையில் சுருங்கியிருந்தன. அதற்கு காரணம் ரிஷியும், அவனின் பாடலில் உண்டாகும் தடுமாற்றமும்தான்.

கிட்டாரை கையில் வைத்திருந்தவன் இதோடு ஒரே பாடலை பத்தாவது தடவை தொடர்ந்து பயிற்சி எடுக்கிறான். ஆனாலும், நடுவில் தடுமாற்றம்.

“சோரி சார்.” என்று மீண்டும் மீண்டும் சொல்லி அவன் மறுபடியும் கிட்டாரை வாசித்தவாறு பாடிக் காட்ட, வரிகளை மாற்றி படித்ததில், “ஓ ஷீட்!” என்று ரிஷி நிறுத்தியதும், “பதினொராவது தடவை.” என்றார் ராகவன் முறைப்பாக.

ரிஷியோ சலிப்பாக நெற்றியை நீவிவிட்டுக்கொள்ள, “என்னாச்சு ரிஷி உனக்கு? ஒரு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் பாடிட்டு இருந்த. இப்போ கொஞ்சநாளா உன் பாட்டுல உன் வரியில ஒரு தடுமாற்றம். இஸ் எனிதிங் ரோங்?” அவர் சந்தேகமாகக் கேட்க, “நோ சார், எது..எதுவுமில்ல. ஐ அம் ஓகே.” என்றான் அவன் தடுமாற்றமாக.

பாடலில் மட்டுமல்ல அவனுடைய வார்த்தைகளிலும் தடுமாற்றமென உணர்ந்தார் ராகவன்.

“நோ ரிஷி. நீ முன்னாடி இப்படி கிடையாது. இப்போ ஏதோ இருக்கு. இப்படி இருந்தா எப்படி கான்செர்ட்ட பர்ஃபெக்டா பண்ண முடியும். அதுவும் நேரம் ரொம்பவே கம்மியா இருக்கு.” ராகவனின் வார்த்தைகள் கண்டிப்போடு வர, “சார், ட்ரஸ்ட் மீ. கான்செர்ட்ல எந்த பிரச்சினையும் வராது. லைட்டா தலைவலி அதான்… மத்தபடி எவ்ரிதிங் இஸ் ஃபைன்.” என்றபடி கிட்டாரை மீண்டும் கையிலெடுத்தான் ரிஷி.

அவரோ அவனை ஆழ்ந்து நோக்கியவர், “லுக் ரிஷ், இப்போ வரைக்கும் உனக்குன்னு கான்செர்ட் நான் கொடுக்கல. என் கான்செர்ட்ல ஒரு பார்ட்டாதான் நீ இருந்த. பட், இது உன்னோட கான்செர்ட். பர்ஃபெக்டா நடக்குறது உன் கையிலதான் இருக்கு.” என்ற ராகவன், அந்த அறை கதவு வரை சென்று, ஏதோ நெற்றியை தட்டி யோசித்தவாறு திரும்பிப் பார்த்தார்.

“ரிஷி கண்ணா…” அவர் அழைக்க, தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்தவன், அவரின் அழைப்பில் “சார்!” என்றவாறு நிமிர்ந்துப் பார்க்க, “இல்லை… ஒரு மாசத்துக்கு முன்னாடி ஏதோ காட்டுலபோய் மாட்டிக்கிட்டேன்னு சொன்னியே, நிஜமாவே அதுதான் நடந்ததா இல்லைன்னா, அந்த வைவா கம்பனியொட எம்.டீய காப்பாத்த நீ பொய் சொல்றியா?” ரிஷியை கூர்மையாகப் பார்த்தவாறுக் கேட்டார் அவர்.

அதில் விழிகளை சலிப்பாக உருட்டியவன், “எத்தனையோ முறை இதை பத்தி நான் சொல்லிட்டேன். அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான்தான் ஏதோ யோசனையில வண்டிய எடுத்துட்டு போய் அங்க மாட்டிக்கிட்டேன். சட்டுன்னு காரும் ரிபேயர் ஆகிட்டு திரும்பி வர கூட முடியல. அப்போ…” பேசிக்கொண்டே சென்ற ரிஷியின் வார்த்தைகள் அங்கு சனாவுடன் இருந்த தருணங்களை நினைத்ததும் அப்படியே ஏதோ ஒரு நினைப்பில் நின்றுவிட, தலையிலடித்துக்கொண்டார் ராகவன்.

“இதோட பல தடவை இந்தக் கதைய சொல்லிட்ட, நான் இல்லைன்னு சொல்லல்ல. பட், ஒவ்வொரு முறையும் அப்போன்னு ஆரம்பிச்சு அப்படியே கனவுலகத்துக்கு போயிடுற. நீ சரியில்லை மேன். கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற. நானே கண்டுபிடிக்கிறேன்.” என்றுவிட்டு அவர் விறுவிறுவென வெளியேற, கோபமாக பக்கத்திலிருந்த காகிதங்களை தூக்கியெறிந்தான் ரிஷி.

தன் மனநிலை அவனுக்கு புரிந்தால்தான் அதை அவன் மற்றவர்களிடம் உரைக்க! அவனுக்கே தன்னை புரிந்துக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் எப்படி தன் மனநிலையை அவரிடத்தில் புரிய வைப்பான்?

‘இவன் நடவடிக்கையே சரியில்லை. என்னாச்சு இவனுக்கு? பொசுக்கு பொசுக்குன்னு டிப்ரெஷனுக்கு போறான், அய்யோ அய்யோ!’ தனக்குள்ளேயே புலம்பியவாறு வராண்டாவில் நடந்து வந்துக்கொண்டிருந்த ராகவனுக்கு சரியாக ஒரு அழைப்பு.

அலைப்பேசியை எடுத்து திரையைப் பார்த்தவருக்கு, ‘கடவுளே! ஏன் இந்த சோதனை!’ என்றுதான் இருந்தது.

அழைப்பை ஏற்று காதில் வைத்தவர், “மேக்…” என்று பெயரை சொல்லி முடிக்கவில்லை, மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, “வாட்!” என்று அலறியவர், வேகவேகமாக மின்தூக்கியில் ஏறி கீழ் தளத்திற்குச் சென்றார்.

“இதுக்குதான் இந்தகாலத்து இளசுங்க கூட சவகாசமே வைச்சுக்க கூடாதுன்னு சொல்றது! சோதீக்காதீங்கடா என்னை…” வாய்விட்டே புலம்பியவாறு வந்து சேர்ந்தவர், அங்கு கீழ் தளத்தில் போடப்பட்டிருந்த பெரிய சோஃபாவில் கால்மேல் கால் போட்டு அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருந்த மேக்னாவை பார்த்து அதிர்ந்துத்தான் போனார்.

சலிப்பாகத் தலையாட்டியவாறு அவளெதிரேயிருந்த சோஃபாவில் அமர்ந்தவர், “என்ன இந்த பக்கம்?” என்று கேட்க, இது என்ன கேள்வி என்ற ரீதியில் அவரை ஒரு பார்வைப் பார்த்தாள் அவள்.

“சரியாதானே கேக்குறேன், இதோட மூனாவது தடவை. எப்படியும் அவன் உன்னை பார்க்க போறதில்லை. தேவையில்லாம இங்க வந்து டைம்  வேஸ்ட் பண்றியோன்னு தோனுது. சோ, எதுக்கு?” ராகவன் சொல்ல, “ஒருதடவையாச்சும் அவன பார்த்துற மாட்டோமான்னுதான் வர்றேன்.” என்று பதிலுக்குச் சொன்னாள் மேக்னா.

“வாய்ப்பில்லை.” என்று சலிப்பாகச் சொன்னவர், “லுக் மேக்னா, நீ பண்ணது சாதாரண விஷயமில்லை. உன்னால அவன் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கான். என்ட், ரிஷ் என் மகன் மாதிரிதான். அதுக்காக என்னால அவன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க முடியாது. அவன் உன்னை பார்த்தாலே ரொம்ப எமோஷனல் ஆகிடுறான். சோ, உனக்கு புரியும்னு நினைக்கிறேன். அவன விட்டு தள்ளியே இரு!” அழுத்தமாகச் சொல்ல, இருக்கையில் இன்னும் சாய்வாக அமர்ந்துக்கொண்டவள், “ரிஷியோட கான்செர்ட் நடக்கப் போகுதுன்னு கேள்விப்பட்டேன், என்னெல்லாம் இன்வைட் பண்ண மாட்டீங்களா?” என்று கேட்டாள் அவரை ஆழ்ந்துப் பார்த்துக்கொண்டே.

“ஏன் ஒருதடவை மொத்த மீடியா முன்னாடி அவன்கிட்ட திட்டு வாங்கி பேப்பர்ல வந்தது போதாதுன்னு அத்தனை ஆயிரம் பேர் முன்னாடி அறை வாங்கி ஃப்ளேஷ் நியூஸா வரணுமா உனக்கு?” ராகவன் கேலிக் கலந்த கடுப்போடுக் கேட்க, இருக்கையில் இரு கைகளை ஊன்றி எழுந்து நின்றுக்கொண்டவள், “உங்க பர்மிஷனுக்காக வெயிட் பண்ணா சரி வராது. நானே போய் அவன பார்த்துக்குறேன்.” என்றுவிட்டு ஹீல்ஸ் தரையோடு பதிந்து சத்தம் கேட்டக் கேட்க வேகநடையோடு மேல் தளத்திற்குச் சென்றாள் அவள்.

மின்தூக்கிக்காக காத்திருப்பது நேரவிரயமென நினைத்தால் போலும்! படிக்கட்டிலே அவள் வேகமாகச் செல்ல, ‘நமக்குன்னு வந்து வாய்ச்சிருக்குதுங்க!’ கடுப்பாக முணுமுணுத்தவாறு, “நீ போறதுன்னா போயிக்கோ, நான் லிஃப்ட்லதான் வருவேன். எனக்கென்ன? வயசான காலத்துல என்னை சோதிச்சிக்கிட்டு!” என்று கத்திவிட்டு அந்த கலவரத்திலும் மின்தூக்கிக்காக காத்திருந்து அதிலேறிக்கொண்டார் ராகவன்.

இங்கு வேகமாக மேலேறி வந்தவள், அங்கு கதவில் தென்பட்ட பெயரில் வெற்றிப் புன்னகை புரிந்தவாறு, அதை நோக்கி வேகமாகச் சென்று திறக்கப் போக, அதேநேரம் பாட முயற்சி செய்து முடியாமல் தன் மனநிலையை புரிந்துக்கொள்ள முடியாமல் அறையிலிருந்த மொத்தப் பொருட்களையும் கோபத்தில் தூக்கியெறிந்து வெறியேறவென உள்ளிருந்து கதவைத் திறந்தான் ரிஷி.

அடுத்தநொடி தன்னெதிரே நின்றிருந்தவளைப் பார்த்து அதிர்ந்தவனின் முகம் சில கணங்களிலே சிவந்து ஆத்திரத்திற்கு மாறியது. அவனுடைய முகமாற்றத்தை கவனித்துக்கொண்டிருந்த மேக்னாவுக்கு இது புரியாமல் போகுமா என்ன?

“ரிஷ்…” அவள் விழிகள் கலங்க ஏதோ பேச வர, “சார்ர்ர்…” என்று ரிஷி பெருங்குரலெடுத்து கத்துவதற்கும் மின்தூக்கியின் கதவுகள் திறக்கப்பட்டு பதட்டமாக ராகவன் அதிலிருந்து வெளியேறுவதற்கும் சரியாக இருந்தது. அவனுடைய குரலில் அவருக்கே தூக்கி வாரிப்போட்டது எனலாம்.

“ரிஷி, நான் சொன்னேன். அந்த பொண்ணுதான்…” தயக்கமாக இழுத்தவாறு ராகவன் வேகமாக ரிஷியை நெருங்க, மேக்னாவோ கொஞ்சமும் பொறுமையில்லாமல், “ரிஷ், ஏன்டா என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்குற. நான் தப்பு பண்ணிட்டேன்தான், எனக்கு புரியுது. பட், ஐ ஸ்டில் லவ் யூ ரிஷ். நான் பேசுறதை கொஞ்சம் கே…” அவள் பேசி முடிக்கவில்லை, அடுத்தநொடி நடந்த சம்பவத்தில் ஆடிப்போய்விட்டாள் மேக்னா.

அங்கு வராண்டாவில் அழகுக்காக தொடர்ந்து வைக்கப்பட்டிருந்த பூக்கன்றுகளை ரிஷி ஆக்ரோஷமாக தூக்கிப் போட்டு உடைக்க, அங்கிருந்த மொத்தப் பேருமே அந்த இடத்தில் கூடிவிட்டனர்.

இதில் ராகவனுக்கு அவனை எப்படி கட்டுப்படுத்துவதென்றே தெரியவில்லை என்றால், மேக்னாவோ உறைந்துப்போய் நின்றுவிட்டாள்.

ஆனால், உடனே தன்னைச் சுதாகரித்துக்கொண்டார் ராகவன். அவன் முன்னால் அவளிருக்கும் வரை  ரிஷியை கட்டுப்படுத்த முடியாதென்று உணர்ந்தவர், மேக்னாவை இழுத்துக்கொண்டு மின்தூக்கியில் தள்ளி தானும் ஏறிக்கொள்ள, கடைசியாக இருந்த பூக்கன்றை கோபமாக சுவற்றில் விட்டெறிந்தவன், அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டான்.

அவன் முகம் சிவந்து இறுகிப் போயிருந்தது. அதேநேரம் மின்தூக்கியிலிருந்த மேக்னாவிற்கோ ராகவனின் புலம்பல்கள் எதுவும் காதில் விழவில்லை. ரிஷியின் ஆக்ரோஷத்தை முதல்தடவை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே பல நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கான்செர்ட் நிகழ்ச்சிக்கான நாளும் வந்தது.

அன்று மாலை அரங்கம் முழுவதும் இரவு விளக்குகளால் மின்ன, அந்த அரங்கத்தைச் சுற்றி பலபேர் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ரிஷியின் ரசிகர்களென வருகைத் தந்து ஆரவாரம் செய்துக்கொண்டிருந்த கூட்டத்தில் பெண்கள்தான் அதிகப்படியோ என்று தோன்றுமளவிற்கு இருந்தது அங்கிருந்த பெண்களின் கூச்சல்.

கூடவே, சிறப்பு விருந்தினராக வருகைத் தந்திருக்கும் ராகவனினதும் ரிஷியினதும் தொழில்துறை நண்பர்கள். ஆனால், எப்போதும் ரிஷி எவ்வழியோ நானும் அவ்வழியென அவன் போகுமிடமெல்லாம் பின்னாலே செல்லும் மேக்னா அன்று ஏனோ வருகை தந்திருக்கவில்லை. அதற்கு காரணம் கூட ராகவன்தான். கெஞ்சி கூத்தாடி அவளை வராமல் செய்ய பட்டப்பாடை அந்த பெரியவர் மட்டுமே அறிவார்.

சுற்றி அத்தனை வேலைகளும் பரபரப்பாக நடக்க, தன் கோட்டை அணிந்து உதடுகளுக்கருகே நீட்டிக்கொண்டிருந்த மைக்கை சரிசெய்த ரிஷி, தனக்கென ஒதுக்கப்பட்ட அறையிலிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் தன்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனை பெண் ரசிகர்களை இவன் கொண்டிருப்பதற்கு சந்தேகமேயில்லை என்பது போலிருந்தது அவனின் தோற்றம்.

வெளியில் விறைப்பாக இருந்தாலும் அவனுக்குள் ஒரு பயம். அவனுக்குப் பிரச்சினை அவனேதான் என்பதை நன்கு அறிந்திருப்பானோ, என்னவோ? விழிகளை அழுந்த மூடித் திறந்து, அங்கிருந்த இளம்பெண் கொடுத்த தன் கிட்டாரை கையில் வாங்கிக்கொண்டான்.

“லெட்ஸ் கோ ஸ்பைக்! வீ கொய்ங் டூ ரோக் த கான்செர்ட்.” தன் கிட்டாருக்கு ஒரு முத்தத்தையிட்டு ஸ்டைலாக வேக நடையோடு மேடைக்குச் சென்றான். அவனைப் பார்த்ததுமே அத்தனை கத்தல்களும் கரகோஷங்களும்.

வசீகரப்புன்னகையை வீசியவன், “குட் ஈவினிங் காய்ஸ். தேங்க் யூ சோ மச் ஃபோர் யூவர் லவ் என்ட் சபோர்ட். உங்ககிட்டயிருந்து இத்தனை லவ் நான் எதிர்ப்பார்க்காத ஒன்னு. இப்போ நான் பார்க்கும் போது ரொம்ப ஹேப்பியா இருக்கு. இந்த சக்ஸஸ், திஸ் இயர் அவார்ட் எல்லாம் உங்களாலதான். சோ…. திஸ் இஸ் ஃபோர் யூ ஆல்.” என்றுவிட்டு அங்கு மேடையினோரமாக இசைக்கருவிகளோடு நின்றிருந்தவர்களுக்கு விழிகளால் சைகை செய்து தன் கிட்டாரை வாசிக்க ஆரம்பித்தான்.

அவன் வாசிக்க ஆரம்பித்ததுமே மீண்டும் கத்தத் துவங்கிவிட்டனர் ரசிகர்கள். இவ்வாறு இடையிடையே பேசிச் சிரித்து சில ரசிகர்களை மேடைக்கு அழைத்து விளையாடி என ரசிகர்களோடு அவன் உருவாக்கும் பிணைப்பைப் பார்த்து ராகவனுக்கே ஆச்சரியம்தான்.

இவ்வாறு ஒருபக்கம் தன் துறையில் நடந்த கதைகளை கேலியாகச் சொல்லிச் சிரித்து, இன்னொருபக்கம் தொடர்ந்து பாடல்களையும் பாடி உற்சாகப்படுத்தி ரிஷி நிகழ்ச்சியை நன்றாகவே கொண்டு செல்ல, நிகழ்ச்சியின் இறுதிக்கட்டமும் வந்தது.

“ஓகே காய்ஸ்… நான் நடுவுல என்னோட ஃபேன்ஸ்ஸுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குறதா சொல்லியிருந்தேன். அது என்னன்னு யாராச்சும் கெஸ் பண்ண முடியுமா?” அவன் கத்திக் கேட்க,

“ரிஷி கல்யாணம் பண்ண போறதா மட்டும் சொல்லிடாதீங்க.” என்று சில குரல்கள் வந்ததென்றால், “நெக்ஸ்ட் ஃப்லிம்ல கம்மிட் ஆகியிருக்கீங்களா?” என்று பல குரல்கள்.

காதில் விழுந்த பதிலில் கத்திச் சிரித்தவாறு, “யாஹ், கம்மிட் ஆகியிருக்கேன். பட் கல்யாணம் கிடையாது டியர்ஸ். கூடிய சீக்கிரம் வெளியாகப் போற ஒரு வெப்சீரீஸ்ல லீடிங் ரோல்ல ஆக்ட் பண்ண போறேன். சோ, வூ ஆல் ஆர் வெயிட்டிங்?” என்று கேட்டுச் சிரிக்க, அவ்வளவுதான்! கத்தி கூப்பாடு போட்டுவிட்டனர் மொத்தப்பேரும்.

“கண்டிப்பா இந்த சீரீஸ்ல என் சாங்க்ஸ் இருக்கும். முதல் பாட்டை என் கான்செர்ட்லயே ரிலீஸ் பண்ண போறேன். பாடிரலாமா?” ரசிகர்களிடமே கேட்டு அவன் காத்திருக்க, அவர்கள் வேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள்? “வீ ஆல் வெயிட்டிங்!” என்ற ஒருசேர குரல் கூட்டத்திலிருந்து.

அவனும் புன்னகையோடு மீண்டும் கிட்டாரை சரிசெய்து பாட ஆரம்பிக்க, அந்த வரிகளிலும் குரலிலும் மூழ்கித்தான் போனர் அனைவரும். ரிஷியின் வெற்றிக்கு காரணமும் இதுவே. முதல் பார்வையிலேயே கவரக் கூடியவன் மட்டுமல்ல அவனுடைய பாடலை முதல் கேட்கையிலேயே அதில் மயங்கச் செய்துவிடுவான்.

அவனும் விழிகளை மூடி பாடிமுடித்து நிமிர, சரியாக அவன் விழிகளில் சிக்கியது அந்த உருவம். அவன் கண்கள் சாரசர் போல் விரிய, சில கணங்கள் அந்த உருவத்தையே பார்த்திருந்தவன், அது கண்ணை விட்டு கூட்டத்தோடு கூட்டமாக மறைவதை உணர்ந்து கொஞ்சமும் யோசிக்காது மேடையிலிருந்து பாய்ந்திருந்தான் அவன்.

அங்கு ரசிகர்கள் உள்ளே வராது சுற்றி வேலி போல் அமைக்கப்பட்டிருக்க, அந்த உருவத்தை நோக்கி செல்லும் ஆர்வத்தில் இடம் பொருள் மறந்து அந்த வேலியையும் தாண்டி குதித்தவன், ரசிகர்களின் கூட்டத்திற்கு மத்தியில் எல்லோரையும் தள்ளிவிட்டுக்கொண்டு ஓட, அங்கிருந்த மக்களுக்கு அதிர்ச்சி என்றால், இதைப் பார்த்துக்கொண்டிருந்த ராகவனின் அதிர்ச்சியை சொல்லவா வேண்டும்?

“ரிஷ்…” தன்னை மீறி கத்தியவர், உடனே காவலர்களுக்கு அவனை பாதுகாக்கும்படிச் சொல்ல, அவர்களும் கூட்டத்திற்குள் புகுந்து ரிஷியின் பின்னால் ஓடி அவனை சுற்றி வளைப்பதற்குள் ஃபோட்டோ எடுப்பதற்கென ரிஷியைப் பிடித்திழுத்து ரசிகர்களுக்கிடையே பிரச்சினை வந்துவிட்டது.

கூட்டத்திற்கு நடுவே ஓடிக்கொண்டிருந்தவனுக்கு தன்னை சுற்றி நடக்கும் கலவரத்தில்தான் மூளை நிகழ்காலத்தை உரைத்தது. சட்டென்று நின்றவன், தன்னை நெருக்கும் கூட்டத்திற்கு நடுவே சுற்றிமுற்றி பார்த்து திருதிருவென விழிக்க, வேகமாக வந்து காவலர்கள் அவனை அங்கிருந்து மேடைக்கு பின்னே அழைத்துச் செல்வதற்குள் படாத பாடுபட்டுவிட்டனர்.

அடுத்து நடந்ததை சொல்லவே தேவையில்லை. நடந்த அரைமணி நேரத்திலேயே எல்லா வளைத்தளங்களிலும் ரசிகர் கூட்டத்திற்கு நடுவே பாயும் காட்சிகள் காணொளியோடு ட்ரெண்டிங்கில் இருந்தான் ரிஷி.

அதைப் பார்த்த ராகவன் கொஞ்சமும் யோசிக்காது அவனுக்கான அறைக்குள் இழுத்துச் சென்று கதவைச் சாத்திய மறுநொடி பளாரென அறைந்திருக்க, கொஞ்சமும் அதிரவில்லை ரிஷி. எதிர்ப்பார்த்திருந்தான் போலும்!

அவர் முன் முகம் இறுகிப்போய் தரையை வெறித்தவாறு நின்றிருந்தவன், “என்னாச்சுடா உனக்கு, புத்தி மலுங்கி போயிருச்சா என்ன? அறிவில்லை, நீ யாருன்னு உனக்கு தெரியுமா, தெரியாதா? ச்சே! அப்படி நீ குதிக்கிற அளவுக்கு என்னடா ஆச்சு, அறிவுக்கெட்டவனே?” என்ற ராகவனின் கத்தலில், “நான் அவள பார்த்தேன்.” என்றான் அவன் சிரிப்போடு.

புருவத்தை நெறித்தவர், “யாரு?” சந்தேகமாகக் கேட்க, “அதான் அந்த பொண்ணு. அவ..அவதான்.” என்று உளறியவனைப் பார்த்தவருக்கு தலைவலிதான் வந்தது.

அவனின் தோளைப் பிடித்து உலுக்கியவர், “தலையில டப்பா கிப்பா ஏதாச்சும் விழுந்திருச்சா, யாரைப் பத்திடா பேசிக்கிட்டு இருக்க?” ஒருகட்டத்திற்குமேல் முடியாமல் கத்திவிட, “சனா” என்றான் புன்னகையோடு.

அவரோ, “வூ இஷ் ஷீ?” வாய்விட்டே கேட்டு யோசனையில் மூழ்க, அதேநேரம் தனதறையில் அலைப்பேசியில் ரிஷியின் செயலைப் பார்த்துக்கொண்டிருந்த மேக்னாவிற்கு மனம் எச்சரிக்கை மணியை ஒலித்தது.

Leave a Reply

error: Content is protected !!