தொலைந்தேன் 11💜

ei9CKLC90770-422e06f4

தொலைந்தேன் 11💜

“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று… உன்னிடம் உண்டு…”

என்று தன் கிட்டாரை மெல்ல இசைத்து மெல்லிய குரலில் பாடியவாறு தன்னறை பால்கனியில் நின்றிருந்தான் ரிஷி. அவன் நினைவு முழுவதும் சனாதான்.

அவள் ஒன்றும் அத்தனை அழகில்லை. வசதியுமில்லை. சேறும் சகதியும் நிரம்பியுள்ள இடத்தில் அவனுக்கே புரியாத வார்த்தைகள் பேசும் அவனுக்கு சற்றும் பொருந்தாத ஒரு வாழ்க்கையை வாழும் சாதாரணப் பெண். ஆனால், ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவள்மேல்.

அதுவும், காதலே வெறுக்குமளவிற்கு வாழ்வில் சம்பவம் நிகழ்ந்தும் மீண்டும் அதை நோக்கி மனம் செல்வது போன்ற பிரம்மை அவனுக்கு.

ஏதேதோ யோசனையில் உழன்றுக்கொண்டிருந்தவனின் விரல்கள் அவனையும் மீறி அலைப்பேசியில் அவளின் எண்ணிற்கு அழைத்துவிட்டன. அவள் குரலுக்காக அவன் காத்திருக்க, ஆனால் மறுமுனையில் அழைப்பை ஏற்றபாடில்லை.

அதுவும் ஓய்ந்துவிட, இப்போது அவனுடைய புருவங்கற் சந்தேகத்தீல் சுருங்கின. மீண்டும் வேகமாக அவன் அவளுக்கு அழைக்க, நீண்ட நேரத்திற்கு பின் அழைப்பு ஓயும் முன் அவனின் அழைப்பு மறுமனையில் ஏற்கப்பட்டது.

அழைப்பையேற்றதுமே, “வேது.. சோரி சோரி முக்கியமான வேலை, அதான்… நீ பாட்டுக்கு பொசுக்குன்னு கெளம்பி வந்துடாத!” என்று சனா படபடவென பேச, ரிஷிக்கோ பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.

“ஏன், ஏன் இத்தனை பதட்டம்? அம்புட்டு பயமா சாணி என்மேல?” என்று ரிஷி வேண்டுமென்றே கேலித்தொனியில் கேட்க, உதட்டைச் சுழித்தவள், “நீ இரண்டு தடவை வந்ததுக்கே என் ஏரியாவுல என்னை கண்டமேனிக்கு பேசுறாங்க. நான் அதையெல்லாம் கண்டுக்குற ஆளில்லைதான். இருந்தாலும்…” என்று தயக்கமாக இழுத்தாள்.

அதில் ரிஷிக்கு விழிகள் இடுங்க, “உன்னை தப்பா பேசுறாங்களா சனா?” என்று தீவிரமாக அவன் கேட்க, “ம்ம்… தனியா இருக்கேன். அதுவும் ஒரு பொண்ணு. ராத்திரி ஏரியாவுக்கு வெளியில நிக்குற காருல ஏறி போய் நேரமாகி வீட்டுக்கு வந்தா ஊர் உலகம் தப்பாதான் பேசும்.” என்று பாவமாக சொன்னவள், “இருந்தாலும்…” என்று இழுத்த ரிஷியை வேகமாக குறுக்கிட்டாள்.

“இருந்தாலும் நீ வருவ, அதானே!” என்று முறைப்பாக அவள் கேட்க, “ஹிஹிஹி… சரி விடு அரக்கி! இப்போ மீட் பண்ணலாமா? நான் வேணா அங்க வரவா?” என்று மீண்டும் அவன் ஆர்வமாகக் கேட்க, “ஏசப்பா…!” என்று விழிகளை உருட்டியவள், “வாய்ப்பேயில்லை.” என்றாள் வெடக்கென்று.

“ஏன், என்னாச்சு? ஊர் தப்பா பேசுறதுல பயப்படுறீங்களோ? நீ அதையெலாம் கண்டுக்குற ஆளில்லையே!” அவள் மறுத்ததில் உண்டான கோபத்தோடு அவன் பேச, ஏனோ அவனின் கோபம் சனாவுக்கு புரிந்தது போலும்!

“என்ன நீ, பொசுக்கு பொசுக்குன்னு டென்ஷன் ஆகுற. இதோ பாரு, இப்போ நான் வேலையா இருக்கேன். ஃபோட்டோவ எடிட் பண்ணி அதை ஃப்ரேம் பண்ணணும். அப்போதான் விக்குறதுக்கு போட முடியும். கை வேற ரொம்ப டைட்டா இருக்கு.” என்று சனா சொல்ல, “கை டைட்டா இருக்கா? ஏய் சனா, ஆர் யூ ஓகே? நாம வேணா டாக்டர்கிட்ட போலாமா?” என்று நிஜமான பதட்டத்தோடு கேட்டான் ரிஷி.

அதில், “அய்யோ!” என்று புலம்பியவள், “கை டாட்டா இருக்குன்னா என்கிட்ட இப்போ காசில்லைன்னு அர்த்தம். புரியுதா?” என்று சற்று கடுப்பாகவே சொல்ல, “ஓஹோ!” என்று யோசனையில் புருவத்தை நெறித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதை சனாவிடம் கேட்பதற்கு பயத்துடன் கூடிய பதட்டம் அவனுக்குள். இருந்தும் கடமையென நினைத்தவன், “அது.. அது வந்து… இஃப் யூ டோன்ட் மைன்ட், ஏதாச்சும் ஃபினான்ஷியல்லி ஹெல்ப் வேணுமா சனா?” என்று தயக்கமாகக் கேட்க, அவ்வளவுதான். அவளுக்கு சுள்ளென்று கோபம் உச்சத்தைத் தொட்டது.

விழிகளை அழுந்த மூடி கோபத்தை அடக்கியவள், “ரிஷி வேதாந்த், உன் பணத்தை நீயே வச்சிக்க. நான் உன் கூட பழகுறதுக்கு ஒரே காரணம், நீ எல்லார் மாதிரியும் சகஜமா பழகுறதுதான். பணம் நல்ல உறவையும் கெடுத்துரும். என்னை காப்பாதிக்க எனக்கு தெரியும். சார் உங்க வேலைய பார்த்தா போதும். அப்படி உனக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோனிச்சின்னா, ஏதாச்சும் ஈவென்ட் ஃபங்ஷனுக்கு ஃபோட்டோ எடுக்க என் நம்பர கொடுத்துவிடு!” என்று அழுத்தமாக கறாராக பேசிவிட, ரிஷிக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.

வார்த்தைகள் வராது, “அது சனா.. அது வந்து…” என்று அவன் தந்தியடிக்க, சனாவோ அழைப்பை துண்டித்தேவிட்டிருந்தாள்.

விழிகள் லேசாக கலங்க, அவள் பேசியதை யோசித்தவாறு அமர்ந்திருந்தவன், எப்போது உறங்கினானென்று அவனுக்கே தெரியாது.

அன்றைய நாள் முடிந்து அடுத்தநாளும் விடிய, அன்று…

“கேமரா… ரோலிங்… ஆக்ஷன்…” என்று கேமராவை பார்த்தவாறு குரல் கொடுக்கப்பட, ரிஷியின் காந்தக்குரலில் அவனின் புது ஆல்பம் பாடல் ஒலிக்கப்பட்டது.

கூடவே, ஷூட்டீங் ஸ்பாட்டில் தான் அணிந்திருந்த கோட்டை சரி செய்தவாறு பாடலுக்கேற்ப முகமூடி அணிந்திருந்த பெண்ணின் இடையை வளைத்தெடுத்து ஒரு சுழற்று சுழற்றி அணைத்துக்கொண்டான் ரிஷி.

அத்தோடு பாடல் நிறுத்தப்பட, சிறு சிரிப்போடு அவளிடமிருந்து விலகிக்கொண்டவன், அடுத்த காட்சிக்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை கேரவனில் சென்று அமர்ந்துக்கொண்டான். அவன் உள்ளே சென்று பத்து நிமிடம் கூட தாண்டியிருக்காது. அதற்குள் கேரவன் கதவு தட்டப்படும் சத்தம்.

ரிஷியும், “கம் இன்!” என்று சொல்லி சனா நேற்று பேசியதை எண்ணியவாறு யோசனையில் மூழ்கியிருக்க, அங்கோ இத்தனை நேரம் அவனுடன் நடித்தக்கொண்டிருந்த நடிகை ப்ரீத்தாதான்.

யோசனையில் புருவத்தை நெறித்து பின் வரவழைத்த சிரிப்போடு அவன் அங்கிருந்த சோஃபாவை விழிகளாலேயே காட்ட, முகத்தில் அணிந்திருந்த முகமூடியை கழற்றியவாறு அவனுக்கு பக்கத்தில் அவனை உரசிக்கொண்டே வந்தமர்ந்தாள் அவள்.

“ஊஃப்ஸ்… முடியல ரிஷ். ஏன் இந்த மாஸ்க்? இதை போட்டுக்கிட்டு உன் கூட நெருக்கமா நடிக்கவும் முடியல. இது மட்டும் இல்லைன்னா…” என்று ப்ரீத்தா வேறு எண்ணத்தோடு இழுக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று தொண்டையைச் செறுமி அவள் பேச்சை நிறுத்தியவன், “லுக் ப்ரீத்தா, என் பாட்டோட வரிகள் அப்படி. காதலி தன்னை காதலன்கிட்டயிருந்து மறைச்சிக்கிறா. சோ, ஷூட்டிங்ல நீ உன் முகத்தை காட்டணும்னு அவசியமில்லை.” என்க, அவளோ உதட்டைச் சுழித்துக்கொண்டாள்.

“வாட்எவர்!” என்று விழிகளை உருட்டி சலித்தவாறுச் சொன்னவள், “நான் உன்கிட்ட பேசணும் ரிஷ். ஐ ஹேட் திஸ் டிஸ்டன்ஸ்.” என்றுக்கொண்டே இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியை விழிகளால் காட்டி அவனை அவள் நெருங்க, சோஃபாவோடு பின்னால் சாய்ந்து ஒட்டிக்கொண்டவன், “யூ மே கோ ப்ரீத்தா, வெளியில பேசிக்கலாம். இது மீடியாவுக்கு தெரிஞ்சாலே அவ்வளவுதான்.” என்றான் இறுகிய குரலில்.

அவளுக்கு கோபம் சுள்ளென்று எகிறியது. வேகமாக எழுந்து ரிஷியின் மடியில் அமர்ந்துக்கொண்டவள், “ரிஷ், நான் சொல்றதை கொஞ்சம் கேளு. நான் உன்னை…” என்று அவனின் கன்னத்தைத் தாங்கி இதழை நெருங்கியவாறு ஏதேதோ பேச, நெற்றி நரம்புகள் புடைக்க உண்டான கோபத்தில் அவளை பிடித்து தள்ளியேவிட்டான் அவன்.

“இடியட், யூ க்ரோஸ் யுவர் லிமிட்!” கர்ஜிக்கும் குரலில் கத்திய ரிஷி, கேரவனிலிருந்து செல்லப் போக, அவனைப் போக விடாது பிடித்திழுத்து சுவற்றில் சாய்த்து முழுதாக அவன்மேல் உடலால் அழுத்தி சாய்ந்துக்கொண்டாள் ப்ரீத்தா. அவனுக்கோ அவள் உடல் உரசியதில் முகம் அஷ்டகோணலாகிவிட்டது.

“நான் பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன். உன்னை தொடக் கூடாதுன்னு பார்க்குறேன். நீயே விலகி போயிரு!” ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்தி அழுத்தி ரிஷி உச்சக்கட்ட கோபத்தில் பேச, அவளோ கேட்டபாடில்லை.

“ஓ கோட்! ரிஷ் உனக்கு புரியல்லையா? ஐ நோ, உனக்கும் அந்த மேக்னாவுக்கும் பாஸ்ட் லைஃப்ல ஏதோ இருக்குன்னு தெரியும். பட், ஐ டோன்ட் க்யார். இப்போ உனக்கு நான் இருக்கேன். நீ என்ன பண்ணாலும் நான் காப்ரேட் பண்றேன். எதை வேணாலும் அட்ஜஸ்ட் பண்ண ரெடியா இருக்கேன். நீயும் என் ஃபீலிங்க்ஸ்ஸ புரிஞ்சிக்கிட்டேன்னா…” என்று அவள் பேசி முடிக்கவில்லை, “வில் யூ ஷட் யுவர் *****…” என்று கெட்ட வார்த்தையில் உச்சஸ்தானியில் கத்தி ரிஷியோ அவளை  உதறித் தள்ளினான்.

மின்னல் வேகத்தில் அவளின் குரல்வளையை பிடித்துக்கொண்டவன், “உன் ஃபீலிங்க்ஸ்ஸ அடக்க நிறைய பேரு இந்த இன்டஸ்ட்ரீல இருக்காங்க. அதுக்கு நான் ஆளில்லை. இத்தோட என் கண்ணு முன்னாடி நீ வர கூடாது. மீறி வந்தேன்னா…” காட்டுக்கத்து கத்தி, ஒற்றை விரலை நீட்டி ஒரு மிரட்டலைவிட்டு அவன் வெளியேறியிருக்க, உதடு துடிக்க அவனை உக்கிரமாகப் பார்த்திருந்தவளுக்கோ அவமானத்தில் முகமே கறுத்துவிட்டது.

அடுத்தநொடி இந்த ஆல்பம் பாடலின் தயாரிப்பாளரான  ராகவனுக்கு அழைத்து என்ன பொய்யை உளறிக்கொட்டினாளோ, அடுத்த பத்தே நிமிடத்தில் ரிஷிக்கு அழைத்துவிட்டார் அவர்.

அங்கு ப்ரீத்தாவினால் உண்டான தலைவலியையும் எரிச்சலையும் அடக்க வெளியில் நின்று சிகரெட் புகையை ஊதித் தள்ளிக்கொண்டிருந்த ரிஷிக்கு, ராகவன் அழைத்ததுமே விடயம் புரிந்துவிட்டது.

துண்டிக்க மனமில்லாது அழைப்பையேற்று காதில் வைத்தவன், எதுவும் பேசாது அமைதியாக இருக்க, “உன் கோபத்தை கட்டுப்டுத்த பழகிக்க ரிஷ், என்ன காரியம் பண்ணியிருக்க!” என்று கடுகடுத்தார் ராகவன்.

அதில் மேலும் உக்கிரமானவன், “அப்போ, அவ உரசுவா கம்பனி கொடுக்க சொல்றீங்களா மிஸ்டர்.ராகவன்?” என்று கோபத்தில் பெயரை அழைத்தே அவன் பேசிவிட, இது ஒன்றும் அவருக்கு புதிதில்லை போலும்!

‘மிஸ்டர்.ராகவனா? இவன…’ உள்ளுக்குள் கடுகடுத்தவர், ஒரு பெருமூச்சுவிட்டு “லுக் ரிஷ், நான் அப்படி சொல்லல்ல. இதை நீ பொறுமையா ஹேன்டில் பண்ணிருக்கலாம். ப்ரீத்தா இந்த இன்டஸ்ட்ரீல டோப் ஹீரோயின். இப்போ இந்த கான்ட்ரேக்ட்ட அவ கேன்சல் பண்ணிட்டா. நீ நிதானமா பேசியிருந்தேன்னா…” என்று தயக்கமாக இழுக்க, “நான் பொறுமையா பேசினதாலதான் அவளால உங்களுக்கு கால் பண்ண முடிஞ்சிருக்கு. இல்லைன்னா…” என்று பதிலுக்கு ரிஷி கோபமாக இழுக்க, அவருக்கோ புரிந்துப் போனது.

‘ஸப்பாஹ்… முடியல’ ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவர், “இனாஃப், இப்போ என்ன பண்றது நீயே சொல்லு. மறுபடியும் ஒரு ஹீரோயின பிடிச்சு பேசி ப்ரோஜெக்ட் சைன் பண்ணி…” என்று ராகவன் சலித்தவாறு பேசிக்கொண்டேப் போக, சிகரெட்டை ஊதித் தள்ளிக்கொண்டிருந்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

நேற்று சனா பேசியது அவனுக்கு ஞாபகத்திற்கு வர, உடனே “சார், பேசாம சனாவ வைச்சு இதை பண்ணலாமா? கண்டிப்பா அவ சம்மதிப்பார” என்றான் ரிஷி பட்டென்று. இதைக் கேட்டு ராகவனுக்குதான் தலை சுற்றாத குறை.

ரிஷி யோசனையில் இருக்கும் சமயம் அவர் ஒரு திட்டத்தைத் தீட்டி அதை செயல்படுத்த எண்ணி மெதுவாக அந்த யோசனையை அவர் சொல்ல வர, அதற்குள் அவன் தன் இஷ்டத்திற்கு ஒன்றை சொல்லிவிட்டான்.

“ஆர் யூ மேட் ரிஷ், தெருவுல போறதுங்களையெல்லாம் இன்டஸ்ட்ரீல அதுவும் நம்ம வேலைக்கு எடுக்குற. இட்ஸ் டூ மச்.” ராகவன் கத்த, “சார்…” சற்று கண்டிப்பாகவே வந்தது ரிஷியின் குரல்.

அதில் கொஞ்சமும் மிரளாத ராகவன், “லுக் ரிஷி, இந்த இன்டஸ்ட்ரீல எல்லாருமே கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. முயற்சி இல்லாம ஒரு விஷயம் கிடைச்சிச்சுன்னா அதோட அருமை அவங்களுக்கு தெரியாது. அதுவும், போயும் போயும் அந்த பொண்ணுதான் கிடைச்சாளா உனக்கு? நீ பழகுறதா சொன்னதுமே அவள பத்தி விசாரிச்சேன். ஆளும், பேச்சும், அந்த குப்பத்தும். நம்ம ஸ்டேட்டஸுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லை. எனக்கு இதுல உடன்பாடு இல்லை.” என்று ஆத்திரத்தில் கத்த, ரிஷிக்கே அவரின் வார்த்தைகளில் கோபம் உச்சத்திற்கு எகிறியது.

கோபத்தோடு சிகரெட் புகையை ஒரு மூச்சு இழுத்தவன், “சார், நீங்க பேசுறதுல கொஞ்சமும் நியாயமில்லை. எனக்கு அவ ரொம்ப பொருத்தமா இருப்பான்னு தோனுது. என்ட், சனாக்கு நிறைய திறமை இருக்கு. ஐ நோ.” என்று ரிஷி சொல்ல, கடைசியாக அவனின் வார்த்தைகளிலிருந்த மென்மையை அவர் உணராமலில்லை.

“ரிஷ், இந்த மாதிரி பொண்ணுங்க பணத்துக்காக பழகுறதுதான் அதிகம். அதுவும், நீ யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும். உன்னை மறுக்குற மாதிரி மறுத்து உன்னை அவ பக்கம் ஈர்க்குறாளோன்னு எனக்கு தோனுது. என் முடிவ நான் சொல்லிட்டேன், மத்தபடி உன்னோட இஷ்டம்.” என்ற ராகவன் அவனின் பதிலுக்காக காத்திருக்க, “ஐ அம் டேம்ன் ஷுவர், அவ அப்படி கிடையாது. இன்னைக்கே அவக்கிட்ட நான் பேசிக்கிறேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் ரிஷி.

இதில் ராகவனுக்குதான் அய்யோ என்றிருந்தது.

‘இது திருந்தாத கழுசற’ மனதில் கடுப்பாக ராகவன் நினைத்துக்கொள்ள, அன்றே மதியம் சனாவை தேடி அவளின் இடத்துக்கு புறப்பட்டான் ரிஷி. அங்கு அவன் பார்த்த காட்சியில் அவனுக்கு ஒருபக்கம் சங்கடமாக இருந்தாலும் இன்னொருபுறம் சிரிப்பாக இருந்தது.

இவன் அவளின் வீட்டுக்கு போகும் வழியில் சென்றுக்கொண்டிருந்த ஒரு சாவு ஊர்வலத்தில் பிணத்திற்கு முன் நான்கைந்து பேர் ஆட, அவர்களோடு சேர்ந்து சாணக்கியாவும் தலையில் முண்டாசுக் கட்டி நாக்கை மடித்து கடித்துக்கொண்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டீருந்தாள்.

காரை சட்டென்று நிறுத்தி முதலில் பார்த்ததும் அத்தனை பேருக்கு நடுவில் கொஞ்சமும் கூச்சமில்லாமல் ஆடுகிறாளே என்று சங்கடமாக நினைத்தவன், பின் தலையை இருபக்கமும் அசைத்து ‘சரியான இம்சைடீ நீ!’ என்று நினைத்து சிரித்துக்கொண்டான்.

அன்றிரவு,

சனா எப்போதும் போல் புலம்பிக்கொண்டே தன் கேமராவை துடைத்துக்கொண்டிருக்க, சரியாக கதவு தட்டப்படும் சத்தம்.

கதவை திறப்பதற்கு பயம் கலந்த சங்கடம்தான். அவளுடைய அனுபவங்கள் அப்படி. இருந்தும் கதவுக்கருகில் சென்றவள், தைரியத்தை வரவழைத்து “யாரு?” என்று சத்தமாகவே கேட்க, எதிர்முனையில் பதில் வந்ததும்தான் தாமதம், வேகமாக கதவைத் திறந்து வெளியிலிருந்த நபரை உள்ளே இழுத்துக்கொண்டாள் அவள்.

Leave a Reply

error: Content is protected !!