தோளொன்று தேளானது 16

TT copy-3b33430d

தோளொன்று தேளானது 16

தோளொன்று தேளானது! 16

       

          ஜேப்பி இம்மியளவும் இளகா மனம் படைத்தவன்.  அழைப்பை ஏற்று பேசியவனுக்கு, நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையோடு சம்பவ இடத்தை நோக்கி நேரில் விரைந்தான். 

நடந்ததை நேரில் கண்டதும், அதனை கிரகித்தவனுக்கு சகிக்க முடியாத உணர்வின் பிடியில் நின்றிருந்தான்.  அத்தனை கோபம், அவனுக்குள் எரிமலையாய் சீற்றத்தோடு வெளிவரத் துடித்தது.

          வேறு யாரேனும் நடந்த இந்த நிலைக்கு காரணமாக இருந்திருந்தால், அந்நபரை இல்லையென்று செய்திருப்பான். 

ஆனால், விவரமறிந்த நாள்முதலாய் வளர்த்து ஆளாக்கிய நபர் என்றெண்ணி விட்டு வைத்தது, தன்னை இந்நிலைக்கு கொணர்ந்திருக்கிறது என்பதை நினைத்து, தன் மீதே வெறுப்பு உண்டாயிற்று ஜேப்பிக்கு.

          சிறியதான விபத்தாக இருக்கும், உயிர்சேதங்கள் இருக்காது என எண்ணி வந்தவனுக்கு, ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.  எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும், இப்படியான தோல்வியை அவன் எதிர்பாராததால், ஏற்றுக்கொள்ள இயலாத மனம் அடுத்தடுத்து உத்தரவுகளை இயந்திரத்தனமாக பிறப்பித்ததே அன்றி, அதிலிருந்து மீள முடியாமல் அங்கேயே நின்றிருந்தான்.

          தேவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராதது, இதர பணியாளர்கள் கூடிக் கூடி தங்களுக்குள் கிசுகிசுப்பாக பேசிக் கொள்வது, சிலர் பரப்பரப்பாக பேசிக் கொண்டு, கிளம்பிச் செல்வது, வருவது என நடப்பவை அனைத்தும் சுமிக்கு ஏதோ நெருடலைத் தந்தது.

வீட்டிலிருந்து சுமி அடுத்தடுத்து ஜேப்பிக்கு அழைக்க, அழைப்பை நீண்ட நேரம் துண்டித்தவாறு இருந்தான். சுமியிடம் விசயத்தைக் கூறும் துணிச்சல் அறவே இல்லாமல், பேசியை எடுக்கவே தயங்கினான்.

காலை வேளை போய், மதியமும் வந்தது.  ஆனால் வீட்டில் சுமியும், வெளியே மிகவும் சொற்பமான நபர்கள் மட்டுமே இருந்தனர்.

டீசல் குண்டு மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்க, ஓடிக் கொண்டிருந்த வண்டி மீது அது விழுந்ததும், எரிந்த வண்ணம் நீண்ட தூரம் சென்றிருந்தது. 

தீயணைப்புபடை வந்து அணைக்குமுன், வண்டிக்குள் இருந்த மூவரும் அடையாளம் எனும் பேச்சிற்கு வழிவகுக்காமல் முற்றிலும் சாம்பலாகி இருந்தனர்.

இடையில் சாந்தன் அழைக்க, “ரொம்ப முக்கியமான விசயம்னா சொல்லு சாந்தன்.  இங்க சிச்சுவேசன் சரியில்ல” உயிர்ப்பில்லா குரலில் ஜேப்பி உரைக்க,

தயங்கியவன், “ப்ருத்விய வச்சிருந்த கண்டெய்னர் டேமேஜ் பண்ணி, அவனைக் கடத்தியிருக்காங்க சார். அலார்ட் சவுண்ட் வந்து நம்ம ஆளுங்க ஸ்பாட்டுக்கு வரதுக்கு முன்னயே, எல்லாம் பக்காவா பண்ணி ஆளைத் தூக்கியிருக்கானுங்க.  நம்ம ஆளுங்களை வச்சி தடயம் எதாவது கிடைக்குதானு பாத்திட்டுருக்கேன்” என்றதுமே பெருமூச்சொன்றை இழுத்து விட்ட ஜேப்பி,

“நீயே நிதானமா பாரு.  இன்னும் ரெண்டு நாளு என்னால இங்க இருந்து நகர முடியாதுன்னு நினைக்கிறேன். நைட் முடிஞ்சா கால் பண்றேன்” என

“இன்னொரு விசயம் சார்” என தயங்க, “சொல்லு” என ஜேப்பி வற்புறுத்த, “நம்ம வீட்ல இருந்த நம்பர்ல இருந்து ஒரே நாள்ல ப்ருத்வியோட நம்பருக்கும், இன்னொரு லேண்ட் லைன் நம்பருக்கும் கால் போயிருக்கு.  அந்த ஸ்டேட்மெண்ட்டை உங்க மெயில்கு போட்டுருக்கேன்” என்றதுமே அதனை உடனே எடுத்துப் பார்வையிட்டான் ஜேப்பி.

அது தேவியின் கையில் இருந்த அலைபேசி எண் என்பது புரிய வந்திட, ‘இவ்ளோ சீக்கிரமா எப்டி அந்த அயன் இவங்களை மோப்பம் பிடிச்சாருனு யோசிச்சேனே.  அப்போவே இந்த ஸ்டேட்மெண்ட்டை வாங்கிப் பாத்திருந்தா, இவ்ளோ தூரம் வரவிடாம பண்ணியிருக்கலாமே’ என தனக்குள் புலம்பியவன், விசயம் கைமீறிப் போனதற்கு, வீட்டிலிருந்து போன அழைப்பும் காரணமானதை எண்ணி நொந்துபோனான்.

 ஜேப்பியின் வீட்டில் பணிபுரிபவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கே குழுமி, காவல்துறையின் செயல்களுக்கு ஒத்துழைப்பு நல்கினர். 

“உடம்பு மொத்தமும் கருகி போயிருச்சு.  அதனால, ஜிஹச்கு கொண்டு போயிட்டு, பேருக்கு பதிவு பண்ணி ரிப்போட்டுக்கு ஏற்பாடு செய்துட்டு உங்ககிட்ட ஒப்படைச்சிறோம்” என ஜேப்பியிடம் காவல்துறை அதிகாரி கூற,

தலையசைத்து ஆமோதித்தவனின் கண்களில் சிவப்பேறிக் கிடந்தது.  வீரேந்திரன் பெரும்பான்மையான வேலைகளை தங்களின் ஆள்களைக் கொண்டு திறம்படச் செய்தாலும், அவ்வப்போது ஜேப்பியின் காதுகளில் வந்து கிசுகிசுத்துவிட்டுச் சென்றான்.

மாலையில் மூன்று உடல்களும் பெயருக்கு பொட்டலமாக அரசு மருத்துவனை நிர்வாகம் வெள்ளைத் துணியில் சுற்றித் தர, தேவியின் வீட்டார் கதறியவாறு அவளின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.  ஓட்டுநரின் குடும்பத்தார் வந்திருக்க, அவர்களிடம் அவனது உடல் ஒப்படைக்கப்பட்டது.

ஜேப்பிக்கு, ஷ்யாம் தனது குழந்தையில்லை என்கிற நிலையில் ஒதுக்கமாக இருந்தாலும், இதுபோன்றதொரு சூழலை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறினான்.  அவனால், நடந்த சம்பவத்தை இன்னும் நம்ப முடியவில்லை.

வீரேந்திரனை அழைத்து, “சுமிக்கு போன் பண்றேன்.  அவ ரெடியானதும் போயி அழைச்சிட்டு வா” என சுமிக்கு அழைத்தான்.  வேறு எந்த சிந்தனையுமின்றி, தொலைபேசி அருகிலேயே பதற்றத்தோடு இருந்தவள், “சொல்லி ஜேப்பி” என வறண்ட குரலில் பேசினாள்.

“வீரா வரான்.  கிளம்பி இரு.” என்றதோடு, சுமியிடம் எதுவும் பகிர முடியாத நிலையினால் உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

ஜேப்பியின் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்தவளுக்கு, இன்னும் பீதியாக உணர்ந்தாள்.

‘எப்பவும் தில்லா பேசுவான்.  ஏன் இப்டி டல்லா பேசுறான்னு தெரியலையே.  நான் எதாவது கேக்குறதுக்குள்ள கட் பண்ணிட்டான்.  சரி நேருல போயிப் பேசிக்கலாம்’ தன்னைச் சமாளித்தவாறு அறைக்குள் நுழைந்தாள் சுமித்ரா.

‘வீடே இன்னைக்கு ஏன் இப்டி இருக்கு.  கடவுளே என்னானு தெரியலை.  தேவியக் காலையில இருந்தே காணோம்.  இந்த ஷ்யாம் இன்னும் ஸ்கூல்ல இருந்து வரலை.’ தனக்குள் குழப்பத்தோடு கிளம்பினாள் சுமித்ரா.

வீராவிடம் பேச்சுக் கொடுத்தாலும், எதுவும் பேசாமல் தலையை ஆட்டி ஆட்டி ம்ஹ்ம்.  ம்ஹூம் என்பதோடு வாயைத் திறவாமல், எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல், வேறு பாதையில் சென்றான்.  சுமி அதனைக் கவனித்தாலும், அமைதியாகவே வந்தாள்.

அந்தப் பகுதிக்குள் வண்டி நுழையவும், ஜேப்பி தளர்ந்த நிலையில் வண்டியை நிறுத்தும்படி கூறுவதையும் கவனித்தவள், அவனது கலைந்த தலை, சிவப்பேறிய கண்களைக் கண்டு, கேள்வியோடும் பதற்றத்தோடும் வண்டியில் இருந்து இறங்கி கணவனது அருகே ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.

“என்னாச்சு ஜேப்பி.  ஏன் இங்க நிக்கற.  யாருக்கு என்னானு சொல்லு” என தழுதழுத்த குரலில் பயத்தோடு, ஜேப்பியின் சட்டையை சிறு குழந்தைபோல பிடித்துக் கொண்டு அவனது முகத்தையே பார்க்க, மூக்கை இழுத்து உறிஞ்சிக்கொண்டு தன்னை சமாளித்தவன்,

“சாரிடீ.  இப்டியாகும்னு நிச்சயமா எனக்குத் தெரியலை.  ஆனாலும், நிறைய பாதுகாப்பு ஏற்பாடு பண்ணியும், கைய மீறிப் போயிருச்சுடீ” சுமியின் தலையைத் தன் நெஞ்சோடு இழுத்து அணைத்தபடியே கரகரத்த குரலில் பேசினான் ஜேப்பி.

ஜேப்பியின் வார்த்தைகள் புரியாமல், “என்ன சொல்ற ஜேப்பி.  எனக்குச் சத்தியமா நீ என்ன சொல்றேன்னு புரியலை” என உயிர்போகும் வேதனையோடு கண்களில் அலைப்புறுதலோடு கணவனைப் பார்த்தாள் சுமி.

சுமியின் உடலில் தோன்றிய நடுக்கத்தை உணர்ந்த ஜேப்பி, அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவாறு,

“ஷ்யாம்…” என்றதற்குமேல் ஜேப்பியால் அதற்குமேல் எதுவும் பேச முடியாமல், கையை நீட்டிக் காட்ட, அவன் காட்டிய திசையில் அச்சத்தோடு பார்த்தவளின் கண்களுக்கு வெண்மை நிறத் துணியால் கட்டப்பட்டிருந்த பொதி போன்ற ஒன்று தென்பட,

“நோ…” கத்தியபடி, தலையைக் குனிந்தபடியே ஒரு கையால் ஜேப்பியின் சட்டையை இறுகப் பற்றியிருந்ததோடு, மறுகையால் அவனது நெஞ்சில் மடார் மடார் என அடித்தபடியே அழுதாள்.

அமைதியாக அவள் அழுது ஓயட்டும் என நின்றிருந்தான் ஜேப்பி.

நிமிர்ந்து ஜேப்பியை நோக்கியவாறு, “யாரு? என்ன பண்ணாங்க?  அவன் சின்னப்புள்ளைடா.  அவன் மேல இவ்வளவு துவேசம் வைக்கிற அளவுக்கு ஒருத்தன் இருக்கானா? ஏன்? இந்த அளவுக்கு ஏன் போச்சு!” ஜேப்பியின் சட்டையை இருகைகளாலும் பிடித்து இழுத்து ஆட்டியவாறு கேட்டாள் சுமி.

அவளின் கையின்மீது தனது கையை வைத்துக் கொண்டவனுக்கு, உயிர்போன வேதனை.  பச்சிளங் குழந்தை என விட்டுச் செல்லும் மனமில்லாத மிருகங்களை எண்ணியதும், கண்ட துண்டமாக வெட்டித் தள்ளும் வெறி எழுந்தது ஜேப்பிக்கு.

“சுமீ.  அதை இனி என்னானு பாத்துக்கலாம்” என்றபடியே, மீண்டும் உடல் வைக்கப்பட்டிருந்த பகுதியைத் திரும்பி நோக்கியவாறு, கை காட்டினான். அவன் காட்டிய திசையை நோக்கி, ஜேப்பியை விட்டுவிட்டு ஓடினாள் சுமி.

ஜேப்பியும் சுமியின் பின்னே வேகமாகச் சென்றான்.  சுமியோ, அதனைச் சுற்றிலும் வந்தபடியே பார்த்தாள்.  அவளால் நிச்சயமாக அப்படி நினைக்கவே மனம் ஒப்பவில்லை.

“இல்லை.  நான் நம்ப மாட்டேன்.  இது என்னோட ஷ்யாம் இல்லை” எனக் கத்தியபடியே, அந்த மூடிய உடலைப் பார்த்தபடியே, கைகள் நடுங்க, அருகே வந்து நின்றவனைத் திரும்பிப் பார்த்தவாறு, “இது ஷ்யாம் இல்லைனு சொல்லு ஜேப்பி” எனக் கதறினாள்.

சுமியின் கதறலைக் கண்டவன், “அப்டிச் சொல்ல எனக்கும் ஆசைதான்டீ.  ஆனா…” வார்த்தைகளை அத்தோடு நிறுத்திக் கொண்டவன்,

“நேரமாகுது.  நேரம் முடியறதுக்குள்ள செய்யறதைச் செஞ்சிட்டு கிளம்பணும்.  வா” அவளை தனதருகே நிறுத்தியபடியே, “ரொம்ப எமோசனல் ஆகாத.  நானே எல்லாம் பண்றேன்” கையில் தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டான்.

“வேணாம் ஜேப்பி.  அவன் சின்னக் குழந்தைடா.  பச்சைப் புள்ளைய என்னடா பண்ணப் போற” என அவனது கையில் இருந்த தீப்பந்தத்தை பிடுங்கி எறிந்தவள்,

“இதை நான் நம்ப மாட்டேன்.  எல்லாருமா சேந்து என்னை ஏமாத்தப் பாக்கறீங்க.  நான் போறேன்.  என்னோட ஷ்யாம், இப்ப ஸ்கூல் விட்டு வந்துருப்பான்.  அவனுக்குப் போயி பால் காய்ச்சிக் குடுக்கணும்.” ஜேப்பியை விட்டுவிட்டு நடந்தவளைப் பார்த்தபடியே, கீழே மண்ணில் விழுந்த தீப்பந்தத்தை எடுத்து, எரியூட்டிவிட்டு திரும்புமுன், சுமித்ரா வண்டியை நோக்கி சென்றிருந்தாள்.

மன பிறழ்வு நிலைக்கு தள்ளப்பட்டவளை அதற்குமேல் வற்புறுத்தாது, ஜேப்பியே முன்னின்று அனைத்தையும் செய்தான்.

ஜேப்பி அங்கிருந்த பணிகளை முடித்துக்கொண்டு வண்டியை நோக்கி வந்தவனுக்கு, சுமித்ராவின் நிலை வேதனை அளித்தது.

எது நடக்கக்கூடாது என்று பயந்து இத்தனையும் முன்னேற்பாடோடு செய்தானோ அது நடந்துவிட்டது.  தான், தோற்ற உணர்வைக் காட்டிலும், தனது இயலாமையை எண்ணி விரக்தியான மனோபாவம் உள்ளுக்குள் எழுந்தது.

அந்தஸ்து வெறிக்கு எத்தனையோ நபர்களைக் காவு கொடுத்திருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், இதுபோல ஒரு நிகழ்வை நிச்சயமாக ஜேப்பி எதிர்நோக்கவில்லை.

தனக்கு நேர்ந்த இழப்பை ஈடுகட்ட, அதாவது தனது மனைவியின் இந்நிலைக்கு காரணமானவர்களை அப்படியே விட்டுச் செல்லும் எண்ணமில்லை.  சம்பந்தப்பட்டவளை கண்டுகொண்டு, அவர்களை வதைக்க எந்த நிலைக்கும் செல்லும் மனோபாவத்தோடு வீட்டிற்கு திரும்பினான் ஜேப்பி.

வண்டிக்குள் அமர்ந்தபடியே சுமித்ரா, “என்னோட ஷ்யாம் என்னை விட்டுட்டு எங்கயும் போகமாட்டான்.  இந்த மீ இல்லாம, அவனால எங்கயும் போக முடியாது” பேசியவாறு இருந்தவளை எப்படித் தேற்றப் போகிறோம் என்பது புரியாமலேயே, வண்டியில் இருந்து இறங்காமல் அடம்பிடித்தவளை, மிகுந்த பொறுமையோடு வீட்டிற்குள் அழைத்து வந்தான் ஜேப்பி.

அன்று விபத்து நடந்த இடத்தில் நடந்த விசயங்கள் அனைத்தையும், இரண்டு அலைபேசி எண்களுக்கு அழைத்து பகிர்ந்து கொண்டிருக்க, அதனை கேட்ட இரு உள்ளங்கள் இறுமாப்போடு தங்களின் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததை எண்ணி மகிழ்ச்சியோடு வலம் வந்தனர்.

அரசு மருத்துவமனைக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டது வரையிலான படங்களும், ஜேப்பி மிகவும் சோகமாக இருந்த படத்தையும் பார்த்த எஸ்ப்பி, ‘இன்னும் ஒரு மாசத்துக்கு இப்டியே திரிவான்.  அப்புறம் நம்ம வழிக்கு வந்திருவான்’ எனும் எதிர்பார்ப்புடன் இருந்தவருக்கு தெரியவில்லை.

அப்படி அவன் தன் எண்ணத்திற்கு வளைய மாட்டான் என்று.

***

          “ஷ்யாம்…” சிறுவனின் பெயரைக் கூவி அழைத்தபடியே தேடித் திரிவதும் பிறகு, “ஸ்கூலுக்குப் போயிட்டு இன்னும் வரலையோ” அவளாகவே தன்னைத் தேற்றிக் கொண்டு இருப்பதுமாக இருந்தவளை, மறுநாளே நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் ஜேப்பி.

          மருத்துவரிடம் முழு விபரத்தையும் பகிர்ந்துகொண்ட ஜேப்பி, தனது மனையின் கர்ப்பகால ஆரம்ப நிலையினையும் எடுத்துக்கூறி, “அதிர்ச்சியில இப்படி ஆகிட்டா டாக்டர்.  அவளை சரி பண்ண என்ன செய்யணுமோ, சீக்கிரமாச் செய்யுங்க” கெஞ்சியவனை ஆறுதல் கூறிவிட்டு, சுமித்ராவிடம் பேச்சுக் கொடுத்தார் மருத்துவர்.

          நீண்ட நேரம் சுமியிடம் பேசிவிட்டு, பிறகு ஜேப்பியைத் தனியே அழைத்து விசயத்தைக் கூறியவர், “அவங்களுக்கு டேப்லட்ஸ் இப்ப குடுக்க முடியாது.  அவங்களை வேற எதாவது இடத்துக்கு மாத்திப் பாருங்க.  தனியா விடவேண்டாம்.  எதாவது ரெகுலரா வேலை இருக்கற மாதிரிப் பாத்துக்கங்க” என்று கூறியதைக் கேட்டவன், ஒரு வாரம் முழுவதுமாக சுமித்ராவோடு நேரத்தை செலவிட்டான்.

நடந்த நிகழ்வுகளை உள்வாங்க மறுத்தாலும், ஜேப்பியின் பொறுமையோடுடனான பேச்சின் வழியே நிதர்சனத்தை உணர்ந்து கொண்டவள், ஜேப்பியிடம் தனது இயலாமையை வார்த்தைகள் மூலம் காட்டத் துவங்கினாள்.  ஆனாலும், அவளின் போக்கில் விட்டவன், விரைவிலேயே சுமித்ராவோடு நாக்பூர் கிளைக்குச் சொந்தமான தனது அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றிருந்தான் ஜேப்பி.

“அதையே நினைச்சிட்டு இருந்தா போனவன் திரும்பி வரவா போறான்.  வா வயித்தில இருக்கற குழந்தைக்காகவாவது ரெண்டு வாயி சாப்பிடு” ஜேப்பி அழைக்க,

“இப்பத்தான் உனக்கு சந்தோசமா இருக்கு இல்லை ஜேப்பி” என்றபடியே ஜேப்பியைப் பார்த்தவள், “பிறக்காத குழந்தைக்கு எவ்வளவு மெனக்கெடற.  அவன் என்ன தப்புடா பண்ணான்.  இப்டி பண்ணிட்டீங்க” ஜேப்பியை குற்றம் சாட்டினாள் சுமி.

மனதளவில் மாறுபாடு வந்தது முதலே, ஜேப்பியை வார்த்தைகளால் கொன்றுபோடத் துவங்கியிருந்தாள் சுமி.  எஸ்ப்பியின் அந்தஸ்து பேதத்தால் உண்டான பழிவெறிக்கு ஷ்யாம் பலிகடா ஆனதை ஜேப்பி சுமியிடம் மறைக்காமல் கூறிவிட்டான்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டவள், “அதை நீ எங்கிட்ட சொல்லியிருந்தா, இன்னும் பத்திரமா நான் ஷ்யாமைப் பாத்துட்டு இருந்திருப்பேன்ல” குமுறலோடு கேட்டவள், 

“ஏன் நீ அதை சொல்லலைன்னா, உனக்கும் அவனைப் பிடிக்கலை.  அதான் எனக்கென்னானு இப்டி அம்போனு அவனை விட்டுட்ட.  ஆனா உனக்கு உண்மையிலேயே அவன் போனதுல சந்தோசம்னு எனக்கே தெரியுது” வார்த்தைகளாலேயே சவுக்கடி கொடுக்கத் துவங்கியிருந்தாள்.

கையில் இருந்த ஸ்டேட்மெண்ட் காப்பியை சுமியிடம் நீட்டி, “இது நீதான பண்ண?” எனக் கேட்க, நீண்ட நேர அமைதிக்குப்பின் அதனை ஆமோதித்தவள், “இப்ப எதுக்கு அதைப் பத்திக் கேக்கற?” என மிடுக்காகவே கேட்டாள்.

“இந்த ஒரு கால்னாலதான், இவ்ளோ சீக்கிரமா இந்த இடத்தை கண்டுபிடிச்சு, இவ்ளோ தூரம் வரமுடிஞ்சது.  ஒழுங்கா நான் சொன்னதைக் கேட்டிருந்தா, இப்டி ஆகியிருக்காது” ஜேப்பியும் சுமியின் தவறைச் சுட்டிக் காட்டியிருந்தான்.

ஆனாலும், சுமி ஜேப்பி விடாமல் வார்த்தைகளால் வதைத்தாள்.

சுமியின் பேச்சை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், ஜேப்பி பொறுமையோடு, தனது அடுத்தகட்ட நகர்விற்கான பணிகளை நேர்த்தியாகத் துவங்கி, அதனை திறம்படச் செயல்படுத்த ஆயத்தமாகியிருந்தான்.

சுமியை இனி மல்லிபட்டினத்தில் விடுவது அவளின் உயிருக்கு ஆபத்து. ஷ்யாமோடு, தேவி இருந்ததை அது வேலைக்காரப் பெண் எனத் தெரியாமல் சுமி என்றே எதிராளி எண்ணியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை யோசித்தவன், இனி எங்கு சென்றாலும் தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது, அவளை யாரென்று தெரியாத இடத்தில் விடவேண்டும் என்கிற முடிவிற்கு வந்திருந்தான் ஜேப்பி.

          நாக்பூர் அலுவலகத்திற்கு சுமித்ராவை அழைத்துச் சென்றவன், அங்கிருந்தவர்களிடம் சுமித்ராவை, “சுமித்ரா” என அறிமுகம் செய்ததோடு, அந்த அலுவலகப் பொறுப்புகள் அனைத்தையும் இனி சுமித்ராவே மேற்கொள்வார் என்பதையும் கூறிவிட்டு, தானும் சிறிதுநாள் உடனிருந்து அங்குள்ள நடப்பினை எடுத்துக் கூறினான்.

வேலையில் மிகவும் சிரத்தையோடு ஈடுபட்டவள், தனிமையில் சிக்கும் ஜேப்பியை வார்த்தைகளால் வதைப்பதை வாடிக்கையாக்கியிருந்தாள்.  சுமித்ராவைப் பழையபடி மீட்க முடிவு செய்திருந்தவன் அனைத்தையும் பொறுமையோடு கடந்தான்.

தற்போது அங்கு சுமித்ராவைத் தெரிந்தவர்கள் யாருமே இல்லாததால், பத்து நாள்கள் மட்டும் உடனிருந்துவிட்டு மற்ற கிளைகளைப் பார்வையிடப் போவதாகக் கூறிவிட்டு நாக்பூரிலிருந்து கிளம்பியிருந்தான் ஜேப்பி.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வேலையில் மூழ்கி, ஷ்யாமின் பிரிவை ஈடுகட்ட முயன்று தோற்றாள் சுமி.  இடையில் ப்ருத்விக்கு தனது புதிய அலைபேசி எண்ணிலிருந்து அழைத்துப் பார்த்தாள். 

அது இன்னும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவே செய்தி வர, ‘ப்ருத்வியக் காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருவோமா?’ சிந்திக்கத் துவங்கியவளின் மனநிலை புரியாமல், ஜேப்பி எஸ்ப்பிக்கு அழைத்து காரசாரமாகப் பேசியிருந்தான்.

***

Leave a Reply

error: Content is protected !!