தோளொன்று தேளானது 20(அ)

தோளொன்று தேளானது 20(அ)

தோளொன்று தேளானது! 20A

ஜெயதேவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்த்து, மெனக்கெட்டு திருச்சியில் உள்ள எஸ்ப்பியின் அலுவலகத்திற்கு நேரில் காணச் சென்ற ப்ருத்வியை வாயிலில் நிறுத்திய கேட் கீப்பர், “அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” எனக்கேட்டு அவனை எரிச்சல் உண்டாகச் செய்திருந்தான்.

ப்ருத்வி ஜெயதேவிற்கு அழைத்து, “உங்க தாத்தா வந்து பாக்கச் சொன்னாருன்னு நமுத்து(ஃபோர்ஸ் பண்ணி) திருச்சிக்கு போகச் சொன்ன.  சரி சொல்லிட்டே இருக்கியேனு வந்தாக்கா, இங்க அப்பாயிண்ட்மெண்ட் கேக்கறான் கேட் கீப்பர்?  என்னைப் பாத்தா உங்களுக்கெல்லாம் எப்டித் தெரியுதுடா?” எனக் கத்தியிருந்தான்.

கேட் கீப்பரிடம் போனைக் குடுக்குமாறு தேவ் கூறிட, ப்ருத்வி நண்பனின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து அவரிடம் தனது போனைக் குடுத்து, ஒரு வழியாக தேவ் பேசியபின் சிவபிரகாசத்தைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும், அதன்பின்பும் இரண்டு மணித் தியாலக் காத்திருப்பிற்குப் பின்னரே தேவின் தாத்தாவான சிவபிரகாசத்தைச் சந்திக்க முடிந்தது.  அந்தச் செய்கையில் முன்பைக் காட்டிலும் இன்னும் எரிச்சல் கூடிய நிலையில் ப்ருத்வி அமர்ந்திருந்தான்.

ப்ருத்வியைப் பொறுத்தவரையில், திறமைமிக்க உழைப்பாளி.

வெட்டியாக நேரத்தைச் செலவளிக்க என்றுமே விரும்பாதவன்.  அவனுண்டு, அவனது வேலையுண்டு என்றிருந்தவனை பிடிவாதமாக திருச்சிக்குப் போகக் கூறிவிட்டு, இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய நண்பன் மட்டுமல்லாது அவனது குடும்பத்தின் மீது அத்தனை வெறுப்பு உண்டாகியிருந்தது ப்ருத்விக்கு.

ஜெயதேவ் மற்றும் ரஞ்சித் இருவருமே பெரும்பாலும், வெளியிடங்களில் சென்று ஆர்டர் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, ஊர் சுற்றிக்கொண்டும், நண்பர்களோடு எங்காவது பொழுதுபோக்கிக் கொண்டும், உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்க, ப்ருத்வி ஒருவன் மட்டும் அலுவலகத்தையும், நேரில் வரும் கஸ்டமரையும் தனியொருவனாகவே சமாளித்து ஓரளவிற்கு நல்ல வருமானத்தை இதுவரை அந்த நிறுவனத்திற்கு தன்னால் இயன்றவகையில் ஈட்டித் தந்து கொண்டிருந்தான்.

முதல் ஆறு மாதங்களிலேயே நண்பர்களின் உல்லாச பொழுதுபோக்கில், பணத்தை தண்ணீராகக் செலவளிக்கும் செயலில், உடன்பாடு இல்லாமல் தனியே கிளம்ப எண்ணியபோது, இரண்டு நண்பர்களும் இனி அப்படியெல்லாம் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம், நீ இன்னொரு வாய்ப்பை மட்டும் எங்களுக்கு அளி என ப்ருத்வியிடம் மன்றாடியிருந்தனர். 

மூவருமாக இணைந்து இனி நல்லவிதமாகத் தொழில் செய்யலாம் என நம்பிக்கை வார்த்தைகூறி, கிளம்பிய ப்ருத்வியை அங்கிருந்து செல்லவிடாமல் நிறுத்தியிருந்தனர் நண்பர்கள் இருவரும்.

ஆனால் வார்த்தையில் இருந்தது, செயல்வடிவம் பெறாமலேயே அன்றுவரை சென்று கொண்டிருக்க, வருடங்கள் கடந்திருந்தது.  அதனால், ப்ருத்விக்கு வெளிநாடு செல்லும் எண்ணம் தீவிரமானது.

அந்நேரத்தில்தான் தேவ், “டேய் எங்க பெருசு என்னன்னமோ கேக்குதுடா!  நானும் எத்தனையோ சொல்லி சமாளிச்சிட்டேன்.  ஆனாலும் இனி என்னால முடியாது!” எரிச்சலோடு பகிர்ந்தவன், 

“கம்பெனியில வர்க்கர்ல இருந்து எல்லா டேபிள் வர்க்கும் ஒருத்தனாவே இதுநாள்வரை நீதான் பாத்திட்டுருக்க.  அதனால ஒரு எட்டு பெருசப் போயிப் பாத்து, எதாவது பேசிச் சமாளிச்சிட்டு வந்திட்டா, அடுத்த காலண்டர் இயர்ல இருந்து நாம நல்லவிதமா எல்லாத்தையும் கொண்டு வந்திரலாம்டா.  ப்ளீஸ்டா! இந்த நண்பனுக்காக ஒரே ஒரு தடவை மட்டும்” காலில் விழாத குறையாகக் கெஞ்சியிருந்தான் ஜெயதேவ்.

அப்படி நண்பன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவன் வார்த்தைகளை மதித்து வந்தமைக்கு, பொறுமையைச் சோதிக்கும் நிகழ்வுகளுக்கு உட்பட்டு உச்சகட்ட எரிச்சலில் சிவபிரகாசத்தின் அறைக்குள் இரண்டு மணி நேரக் காத்திருப்பிற்குப்பின் சென்றிருந்தான் ப்ருத்வி.

உள்ளே சென்றதும் தன்னை ஒருவழியாக சமாளித்துக் கொண்டு சிவபிரகாசத்தை நோக்கி கைகளைக் குவித்து வணக்கம் கூறிட, “ம்ஹ்ம்.  நீதான் நம்ம தேவோட கம்பெனி மொத்தமும் சுவாஹா பண்ணிக்கிட்டு இருக்கற பீடையா?” எடுத்ததும் கேட்டதும், ஏற்கனவே இருந்த மனநிலைக்கு இந்தப் பேச்சு எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தாற்போலிருக்க,

“வார்த்தைய அளந்து பேசுங்க தாத்தா!” என்றிருந்தான் ப்ருத்வி. இளங்கன்று பயமறியாது என்பது ஒரு புறம்.  ப்ருத்வியைப் பொறுத்தவரையில் எதற்கும் அஞ்ச வேண்டிய நிலையில் அவனில்லை.  ஆகையினால் துணிந்து பேசியிருந்தான்.

“யாரு யாருக்குத் தாத்தாடா?  ஆத்தா, அப்பன் தெரியாத அனாதைக்கு நான் தாத்தாவா?  மொதல்ல அந்த தேவச் சொல்லணும்.  படிச்சுப் படிச்சுச் சொன்னேன்.  கேட்டானா?  கேக்கலையே.  அதனால, நமக்கு முன்ன நிமிந்து நிக்கப் பயப்படற நாயெல்லாம் வந்து தாத்தானு உறவோட உரிமை கொண்டாடுது” எஸ்ப்பி மிகவும் தரக்குறைவாகப் ப்ருத்வியிடம் பேசியிருந்தார்.

பேச்சு இருவருக்கிடையே நீள இறுதியாக பொறுமை தாளாத ப்ருத்வி, “எங்களை மாதிரி ஆளுங்களை அனாதை ஆக்குன பெருமை உங்களை மாதிரி அந்தஸ்து, அந்தஸ்துனு வெறியா அலையறவங்களைத்தான் சேரும்.” என்றதோடு நிறுத்தாமல்,

“அதிகாரம், ஆணவம், அந்தஸ்து இப்டி பல வெறி புடிச்ச ஆளுங்களோட பழிவெறிக்கு ஆளாகாம என்னைப் பெத்தவங்க இருந்திருந்தா, இந்நேரம் குடும்பமா நாங்களும் உங்களைக் காட்டிலும் நல்லாவே வாழ்ந்திருப்போம்” பொறுமையில்லாமல் வாயை விட்டிருந்தான் ப்ருத்வி.

அதுவரை சண்டைக்கோழியாக இருந்த காட்சி சட்டென மாறி, அமைதியைக் குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த அறை. நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்தபடி நிற்கவைத்துப் பேசிக் கொண்டிருந்த சிவபிரகாசம், அதன்பின் மிகுந்த யோசனையோடு எழுந்து கைகளைப் பின்புறம் கட்டியவாறு, நின்றிருந்த ப்ருத்வியைச் சுற்றிப் பார்த்தபடியே, “ஒழுங்காச் சொல்லு, உங்கப்பன் ஆத்தா யாரு?  நீ எந்த ஊரு?” எனக் கேட்டார்.

“அதையெதுக்கு உங்ககிட்டச் சொல்லணும்?” என்றவன், “உங்க பேரன் என்ன பண்றான்னு மொதல்ல அவனைக் கூப்பிட்டுக் கேளுங்க.  அதைவிட்டுட்டு என்னைக் கூப்பிட்டு அசிங்கப்படுத்தறதா நினைச்சி, நீங்களே அசிங்கப்பட்டுறாதீங்க. அங்க என்ன நடக்குதுனே தெரியாம, அந்தஸ்து, அந்தஸ்துன்னு ஆணவமாப் பேசறதை முதல்ல விடுங்க” என்றதோடு, அதற்குமேல் வெளியேறி இருந்தவன், அதன்பின் அந்நிறுவனத்தைவிட்டு வெளியில் வந்திருந்தான் ப்ருத்வி.

          ப்ருத்வியின் ஊதியத் தொகை அவன் பணிபுரிந்த நிறுவனத்தில் நிலுவையில் இருக்க, அதற்குமேல் பொறுமை காக்க இயலாமல் அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

வேலையின்றி இருந்தவன், வெளிநாடு செல்ல வேண்டி அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் சுமியிடமிருந்து வாட்சப்பில் செய்தி வந்ததோடு, பூஜாவைப் பற்றிப் ப்ருத்வியிடம் பேசவும் செய்திருந்தாள்.

***

சிவபிரகாசத்திற்கு ப்ருத்வியின் பேச்சில் நிம்மதி பறிபோயிருக்க, அவரின் நிழலாக சமீப காலமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜேப்பிக்கு அழைத்து, “போனுல பேச முடியாதுடா.  முடிஞ்சா சீக்கிரம் நேருல வா” என வைத்திருந்தார்.

          எஸ்ப்பியின் சமீபகால செயல்பாடுகள் அனைத்தும் ஜேப்பிக்கு அத்துப்படி.  சில விசயங்களை ஜேப்பியே முன் நின்று கச்சிதமாகச் செய்து முடித்திருக்க, அவன்மீது தனித்துத் தொழில் துவங்கியதில் மன வருத்தங்கள் இருந்த போதிலும் ஜேப்பியை மட்டுமே நம்பி அழைத்திருந்தார்.

          திருச்சியைச் சுற்றிலும் உள்ள சில ஊர்களில் அந்தஸ்து வெறி பிடித்த சில குடும்பங்களில் தீர்த்து முடிக்க இயலாத சொத்து, உறவு, மற்றும் கலப்பு திருமணப் பிரச்சனைகளுக்கு, அமைதியாக காதும் காதும் வைத்தவாறு தீர்வு காண்பதற்கு எஸ்ப்பியே நம்பியிருந்தனர்.

அத்தகையை செயல்களினால், அவருக்கு தோழமையான உறவுகளைக் காட்டிலும் நிறைய மறைமுக எதிரிகள் இருந்தனர்.

வயோதிகம் காரணமாக, தன்னால் நேரில் சென்று தீர்வு காண முடியாத பிரச்சனைகளுக்கு ஜேப்பியை மட்டுமே நம்பி அனுப்பி வந்தார் எஸ்ப்பி.

ஜேப்பியும் எந்த பிரச்சனையிலும் சிறு பிசிறு இல்லாமல் கச்சிதமாகச் செய்து முடிப்பதில், எஸ்ப்பியைக் காட்டிலும் தேர்ந்தவனாக வளர்ந்திருந்தான். 

எஸ்ப்பியின் வலது கையாகக் செயல்பட்ட ஜேப்பியைப் பற்றி அவனது குடும்ப உறுப்பினர்களுக்குக்கூடத் தெரியாது.

          நேரில் வந்த ஜேப்பியிடம் ப்ருத்வியியைப் பற்றிக் கூறி, “அவம் பேசற தொனியே சரியில்லைடா ஜேப்பி.  எனக்கென்னமோ நம்ம எதையோ மிச்சம் வச்சு, அதுதான் இப்டி வளர்ந்து வந்து நம்மகிட்ட சரிக்குச் சமமா பேசற தைரியத்தைத் தந்திருக்குனு தோணுது. 

அவன் போட்டோ தரேன்.  விசாரி.  சந்தேகமா இருந்தா விட்டு வச்சிராத.  இந்த மாதிரிக் களைய வளரவிட்டா பின்னாடி நாமதான் இல்லாமப் போயிருவோம்” எனக் கூறியதோடு, தேவிடமிருந்து பெறப்பட்ட ப்ருத்வியைப் பற்றிய தகவல்களை ஜேப்பியின் கையில் தந்து அனுப்பி வைத்திருந்தார் எஸ்ப்பி.

விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்க, விசயத்தை எஸ்ப்பியின் வசம் தெரிவிக்குமுன்னே, அவர்களின் ஜேஜே பில்டர்ஸில் வேலைக்கு வந்து சேர்ந்திருந்தான் ப்ருத்வி.

கார்த்திக்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த ப்ருத்வியை சட்டென அணுகி தாத்தாவின் எண்ணத்தைச் செயலாக்க முடியாமல் தவித்திருந்தான் ஜேப்பி.

அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியான தொழில் திறமை மிகுந்தவனாக ப்ருத்வியை அடையாளம் கண்டுகொண்டு அவனது திறமைக்கேற்ற பொறுப்பில் ஜேகே ப்ருத்வியை அமர்த்தியபோது, சற்றே தாமதித்தான் ஜேப்பி.

ஆனாலும், தனது மனதில் மாற்றங்களைத் தந்து தூக்கத்தை குத்தகைக்கு எடுத்திருந்த சுமித்ராவை இயன்றவரை தவிர்க்க எண்ணியிருந்தவனுக்குள், அவளைத் தவிர்த்து தன்னால் வாழ இயலாது எனும் பேருண்மையை உயர்த்த ப்ருத்வி எனும் நபர் அங்கு வந்ததாகவே தோன்றியது ஜேப்பிக்கு. 

தன்னவளுடன் மிகவும் நெருங்கிக் காணப்பட்டவனைக் கண்கொத்திப் பாம்புபோல கவனிக்கத் துவங்கியிருந்தான் ஜேப்பி.

கவனத்தில் வந்த விசயங்கள் ஜேப்பிக்கு மிகுந்த மனஉளைச்சலைத் தந்ததோடு நிம்மதியைப் பறித்திருக்க நேரடியாகவே ப்ருத்வியிடம் பேச முடிவு செய்திருந்தான் ஜேப்பி.

***

“சொல்லு ப்ருத்வி!” தன்னை சொல்லுமாறு கூறிக்கொண்டு எதிரில் பதற்றம் மறைத்து நின்றவனை யோசனையோடு, ஆராய்ந்தான் ப்ருத்வி என அழைக்கப்பட்டவன்.

வளமையும், இளமையும் கொட்டிக் கிடந்ததோடு, ஆஜானுபாகுவான தோற்றம், மேலும் ஜேப்பியை மெருகூட்டிக் காட்டிட, கந்தர்வனை மிஞ்சும் ஆகர்சனம், அவனது தோற்றத்தில் மிளிர்ந்தது.

அதற்காக ப்ருத்வி அம்மாஞ்சியாக இருந்தான் என்று அர்த்தமில்லை.  அவனும் ஜேப்பிக்கு நிகராக இருந்தான். அதுதான் ஜேப்பியின் நிம்மதியைக் குழி தோண்டிப் பறித்திருந்தது.

‘இவனுக்கு இப்ப என்ன வேணுமாம்.  எதுக்கு வந்ததும், வராததுமா கூப்பிட்டுவிட்டு, தேவையில்லாத கேள்வியெல்லாம் கேக்குறான்’ என்பதாக ப்ருத்வியின் எண்ணம் இருந்தது.

ஆகையினால், “என்ன சொல்லணும்னு எதிர்பாக்கற ஜேப்பி” நிதானமாய் வார்த்தைகளை வெளியிட்டான் ப்ருத்வி.

முதலாளி, தொழிலாளி பாகுபாடின்றி, வயது வித்தியாசமின்றி, அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும், தற்கால நாகரிகம் அவ்வலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது.

“சுமீய்ய உனக்கு எப்டித் தெரியும்? எவ்வளவு நாள் பழக்கம் உங்களுக்குள்ள!” அதில் நீ பதில் கூறியே ஆகவேண்டும், என்கிற வற்புறுத்தல் ஒளிந்து கிடந்தது.

“அது எதுக்கு உனக்கு ஜேப்பி!” பதில் கூறும் விருப்பம் தனக்கில்லை என்பதை தனது வார்த்தைகளின் மூலம் மெய்ப்பித்தான் ப்ருத்வி.

“உங்களுக்குள்ள லவ்வா, க்ரஷ்ஷா, இல்லை வேற எதுவுமா?” விடாமல் தனது கேள்வியை மாற்றிக் கேட்டான் ஜேப்பி.

ப்ருத்வி, தானும் சுமித்ராவும் நண்பர்கள்தான் என்று கூறினாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஜேப்பி தற்போது இல்லை. ப்ருத்விக்கு ஜேப்பியிடம் விளக்கம் கூற விருப்பமுமில்லை.

“எதுவா இருந்தாலும், அது எங்க பர்சனல். அதனால இதுபோல இனி எங்கிட்ட எதுவும் கேக்காத ஜேப்பி. இந்த ஆபீஸ் சம்பந்தமான எந்த கேள்வினாலும் இனி கூப்பிட்டுக் கேளு.  பதில் சொல்லுறேன். சீட்ல தலைக்குமேல வேலை கிடக்கு.  இப்ப நான் கிளம்பறேன்” தாமதிக்காது, எழுந்து சென்று அவனது இருப்பிடத்தில் அமர்ந்தவன், தனது வேலையில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தான் ப்ருத்வி.

தட்டிக் கொடுத்து, தோழனைப்போல வந்தது முதல் சில வேலைகளை வாங்கிப் பழகிய காரணத்தைக் கொண்டே, இன்று இத்தனை உரிமையாக ப்ருத்வியிடம் கேட்க முனைந்திருந்தான் ஜேப்பி.

ப்ருத்வியின் செயலில் கோபமாக வந்தது.  ஆனால் சொல்ல மாட்டேன் என சாதிப்பவனை என்ன செய்ய முடியும்?  ஆரம்பத்தில் இருவரின் பரிபாசனைகளைக் கண்டு, மனம் சொல்லொணாத் துயருற்றிருந்தான் ஜேப்பி. நாள்கள் செல்லச் செல்ல அதனை காணச் சகிக்காதவன், இன்றுதான் அழைத்துக் கேட்டுவிட்டான்.

ப்ருத்வி இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் கடந்திருந்தது.  சுமீ என்று ஜேப்பியால் அழைக்கப்பட்டவள், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜேஜே பில்டர்ஸில் ஏற்கனவே பணியில் இருக்கிறாள்.

இதுவரை தனது கவனத்தில் சுமித்ரா வந்தாலும், அவளா? தானா? எனும் அகங்கார நிலையில், தான்தான் என தனக்குத்தானே நிரூபித்து வந்திருந்தான். ஆனால் ப்ருத்வி வந்தது முதலே, ஜேப்பியை உசுப்பேற்றி, அவனை ஒன்றிற்கும் உதவாதவனாக்கி, மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும், ஏதோ இனம் புரியாத உணர்வையும் அவனுக்குப் பரிசாகத் தந்து, அவளின் நினைவுகளில் ஜேப்பியை முழுகச் செய்திருந்தாள். 

இதைப்பற்றி எதுவும் தெரியாமலேயே, தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த சீட்டில், தனது பணியில் மூழ்கிப் போயிருக்கிறாள் சுமித்ரா.

சுமித்ராவிற்கு ஜேப்பியின் மனதைப் பற்றி, இன்றுவரை ஒன்றுமே தெளிவாகத் தெரியாது.  சுமித்ரா அவளுண்டு, அவள் வேலையுண்டு என்றிருப்பவள். தன்னைப்பற்றி எண்ணியே ஒருவன் அவனுக்குள் புழுங்கிக் களைக்கிறான் என்று தெரியாமலேயே அங்கு பணிபுரிகிறாள்.

ஆனால் ஜேக்கேவைவிட, ஜேப்பியை சுமித்ராவிற்கு அதிகம் பிடிக்கும்.  உண்மையில் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள இதுவரை அவள் மெனக்கெடவில்லை. அதற்குமேல் அவள் அதைப்பற்றி யோசித்ததும் இல்லை.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!