நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…11

அடுத்து, தான் என்ன செய்ய வேண்டுமென்று தேஜஸ்வினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. கணவனை கண்களால் அளந்திட முயன்றாள். அவனோ ஜீவனைத் தொலைத்து அமர்ந்திருந்தான்.

தன்னை நிந்திக்கிறான் எனத் தெரிந்தும் ஏனோ மனம் அவனை எதிர்த்து பேசத் துணியவில்லை. அதற்காக அவன் சொன்னபடி வீட்டை விட்டு வெளியேறவும் இவள் மனம் தயாராயில்லை.

நேரம் செல்லச்செல்ல அமைதியின் கனமும் மனதின் ரணமும் கூடிக் கொண்டேதான் போனது. கோபத்தில் கர்ஜித்தவன் மறுவார்த்தை பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தான்.

சிறுவயதில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் அடிக்கோடாக மனதில் நிலைத்து நின்றுவிட, ஆதித்யரூபன் இதுநாள் வரையில் யாரையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டதில்லை.

திருமணப் பேச்சினை ஆரம்பித்து, தேஜுவின் கள்ளம் கபடமற்ற முகத்தை புகைப்படத்தில் பார்த்ததும் மனைவியாக அவளை ஆராதித்து அன்பு செய்திட வேண்டுமென்று நினைத்தவனின் மனதில் அழியாக் களங்கமாய் தம்பியின் குற்றச்சாட்டு நிலைத்தே போனது.

‘ஊனோடு உயிராக தன்னைப் போல இவள் முழுமனதுடன் தன்னோடு உறவாடவில்லை. அவளுக்காக, அவளது குடும்பத்திற்காக பணயப்பொருளாக இந்த வீட்டில் அடியெடுத்து வைத்தவள்.’ என்ற உறுத்தலே அவனை மேலும் அழுத்தம் கொள்ள வைக்க வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

ஒருவருக்கொருவர் உரிமையுடன் ஆறுதல் சொல்லிக் கொள்ளவும் முடியாத நிலையை இருவருமே வெறுத்தனர். காதல், கத்திரிக்காயாக மலிந்து விலைபெறாமல் வீதியில் வீசி எறியப்பட்டது.

இரவு நேரம் தனது அறையில் என்ன செய்வதென்று புரியாமல் சிலையாக அமர்ந்திருந்தாள் தேஜஸ்வினி. மதியம் ஆத்திரங்களை கொட்டிவிட்டுப் சென்ற கணவன், மீண்டும் வந்து என்ன சொல்வானோ என்கிற பதட்டம் வேறு அவளை பயமுறுத்தியது.

‘பேசியதெல்லாம் பொல்லாக் கனவு… தர்க்கங்களை மறந்து விடு என்று கூறி, அன்போடு ஆசையாக அணைத்து விடமாட்டானா!’ தேஜுவின் உள்மனமும் பேராசை கொண்டது.

இவளது ஆசைகளை எல்லாம் நிராசைகளாக மாற்றி விட்டு மாறாத அழுத்தத்துடன் வந்து சேர்ந்தான் ஆதித்யரூபன்.

“உன்னை இங்கே இருந்து கிளம்பச் சொன்னதா ஞாபகம்!” பல்லிடுக்கில் அரைபட்ட வார்த்தைகள் அவளை நன்றாகவே பதம் பார்த்தன.

‘மணமான மறுநாளில் இருந்து தனது அன்றாடங்களை ஆசையுடன் ஒப்புவிப்பவனை, இத்தனை கடுமையானவனாக பார்க்கத்தான் வேண்டுமா!’ தேஜுவின் உள்மன அலறல் ஆதிக்கும் கேட்டதோ!

ஆழ பெருமூச்செடுத்துக் கொண்டவன் அலுவல் அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டான். ‘தன்னைத் தவிர்க்கத் தொடங்கி விட்டானா? அவ்வளவு தானா!’ மனதில் ஏக்கங்கள் அவளை அலைகழித்தன

‘இனி என்ன? எனக்கென்று ஒரு நியாயம் இருக்குமென்று அறிய மாட்டானா! இவன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து இங்கிருந்து சென்று விடத்தான் வேண்டுமா! அதெப்படி?’ பெண்மனம் பேதலித்து தனக்குதானே ஆறுதல் கூறிக்கொண்டு நிமிர்ந்து நின்றது.

***

விடியலை எந்தவித ஆராவாரமும் இன்றி எதிர் கொண்டவள் எப்பொழுதும் போல சுழல ஆரம்பித்தாள். ஆதி எழுந்து வந்ததும் அவனுக்குரிய தேநீரை வரவழைத்து கொடுக்க, ‘என்ன இதெல்லாம்? சொன்னது மறந்து போச்சா!’ கணவனின் பார்வைக் கேள்விகள் மனைவியை தழுவிக் கொள்ள, கொம்பைச் சுற்றிய கொடியாக வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தாள்.

“எனக்கு பிடிக்காத கல்யாணம், பணத்தேவை, இதெல்லாம் முன்கூட்டியே நான் உங்ககிட்ட சொல்லியிருக்கணும். ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையல! எதுக்கும் ஏங்க வைக்காத உங்களோட உரிமையான அன்பு எல்லாத்தையும் மறக்க வைச்சிடுச்சு அத்தான்! அதுதான் உண்மை!” உறுதியோடு கூறியவளின் குறுகுறுப்பில்லாத பார்வை கணவனை நேருக்குநேராக பார்க்க, அவனும் ‘உண்மைதானே!’ என்று பெருமையுடன் காரப்பார்வை பார்த்தான்.

“நான் யாரையும் நம்ப வச்சு ஏமாத்தல… அதுக்கான அவசியமும் எனக்கில்லை. இதுக்கும் மேல எனக்காக, நான் விளக்கம் கொடுக்க விரும்பல. எந்த உணர்வும் ஒரு கட்டத்துக்கு மேல வீரியத்தோட இருந்ததில்லை. உங்க கோபத்தோட வேகம் குறையுற வரைக்கும் அமைதியா இருப்போம். அதுக்கும் மேல நான் இங்கே இருக்கிறது உங்களுக்கு முள்ளா குத்தினா மொத்தமா பிரிஞ்சிடலாம் அத்தான்!” தேஜுவின் ஆணித்தரமான முடிவில் சட்டென்று மலைத்தான் ஆதித்யன்.

‘அழுது, அரற்றி, ஆர்ப்பாட்டம் செய்து தன்னிடம் மன்னிப்பை யாசிக்கப் போகிறாளோ!’ என வேண்டா வெறுப்பாக அவளின் முன் நின்றவனுக்குள் மெல்லிய அதிர்ச்சி, இனிய ஆச்சரியம்! உள்ளுக்குள் மனைவியை நினைத்து பெருமை பொங்கத்தான் செய்தது.

‘ஆனாலும் சிறிய கசிவு பெரிய விரிசலுக்கு அடித்தளம் அமைத்து விட்டதே! என்ன முட்டு கொடுத்து என்ன பயன்?’ என்ற ஆற்றாமைதான் அவனில் நிராசைகளை உற்பத்தி செய்தது.

“உங்களுக்கு உறுத்தலா இருக்கிற என்னுடைய, என் பிறந்த வீட்டோட தேவைகள் எதுக்கும் நீங்க பொறுப்பெடுத்துக்க வேண்டாம். நாம சேர்ந்து வாழ்ந்தாலும், பிரிந்து தனியா போனாலும் உங்க தயவை எதிர்ப்பார்த்து நான் எப்பவும் நிக்கமாட்டேன்!” என்றவளின் குரல் சற்றே ஆசுவாசம் கொண்டது.

“இதை நான் நம்பணுமா? பின்ன எதை எதிர்பார்த்து என்கூட சேர்ந்து குப்பை கொட்டுறேன்னு மூச்சு பிடிச்சு பேசிட்டு இருக்க… என் பிடிவாதம் உனக்கு தெரியாது தேஜு! நான் சொன்னா சொன்னதுதான்!” ஆதியின் குரல் ஓங்கியே ஒலித்தது.

“நம்பிக்கை… அது உங்க மனசு சம்மந்தப்பட்டது. ஆனா, உங்க மேல எனக்கிருக்கிற உரிமையை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாரா இல்லை. நான் கேக்குற இந்த உரிமைக்கு பணம், காசு தேவையில்லை. உங்களோட அன்பான பார்வை கூட எனக்கு வேண்டியதில்லை.

ஆனா, உங்க மனைவிங்கிற உரிமை வேணும் அத்தான். பணத்துக்காக வந்தியான்னு கேட்ட உங்க வார்த்தையை நீங்களே வாபஸ் வாங்கணும். இதுக்கெல்லாம் சாத்தியமில்லை, பிரிவுதான் நிரந்தரம்னு நீங்க சொன்னாலும் எனக்கு பாதகமில்லை.

பணம் கொடுத்து என்னை ஒதுக்கி வைக்கலாம்னு மட்டும் எப்பவும் நினைக்காதீங்க. அதுக்கு பதிலா என்னை கொன்னு புதைச்சிடுங்க!” கோபமும் கழிவிரக்கமும் கலந்து திடமாகப் பேசியவளின் குரல் சட்டென்று கரகரக்கத் தொடங்கியது.

“வலிக்குது அத்தான்… நீங்க கேட்ட வார்த்தையை என்னால ஈசியா எடுத்துக்க முடியல. அதை பொய்யின்னு நிரூபிக்க எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல!” சொல்லி முடிக்கும்போதே பெரும் கேவல் வெளிப்பட முழுதாய் உடைந்து அழ ஆரம்பித்தாள் தேஜஸ்வினி.

ஆதித்யனின் மனம் முழுதாய் குழப்பத்தை தத்தெடுத்துக் கொண்டது. ‘என்னதான் சொல்ல வர்றா இவ? இவளை நான் கேள்வி கேக்க கூடாதா? இவ என்கிட்டே இருந்து மறைச்சது அவ்வளவு சின்ன விஷயமா!” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டதை வெளியில் உடைத்துக் கேட்டிருந்தால் அப்பொழுதே ஊடல் ஒய்ந்து போயிருக்கும்.

ஈகோவில் முறுக்கிக் கொண்டவனாய், மாறாத கோபப்பார்வையில் முறைத்து விட்டு, “என்னமும் பண்ணிக்கோ! என் கண்ணு முன்னாடி மட்டும் விழுந்து தொலைக்காதே!” காறி உமிழாத குறையாக கடுகடுத்துவிட்டு சென்று விட்டான். அழுபவளின் முகத்தை பார்ப்பதற்கும் அத்தனை அவஸ்தை கொண்டான் கணவன்.

‘அவ்வளவுதான்… இனி இப்படிதான் போல!’ தன்னைத்தானே சமன் செய்து கொண்டவளாக தேஜு கீழிறங்கி வந்து அன்றாட வேலைகளில் ஈடுபட, அருணாச்சலம் கேள்வியாகப் பார்த்தார்.

“ஒன்னும் பிரச்சனை இல்லையே கண்ணு?” வாஞ்சையுடன் கேட்க,

“அதெல்லாம் சமாளிச்சுடுவேன் தாத்தா!” இலகுவாக கூறிய நேரத்தில் நகுலேஷ் தமக்கையை காண வந்தான்.

“எப்படி இருக்க தேஜுக்கா? ஏன் ஊருல இருந்து வந்த விஷயத்தை எங்களுக்கு சொல்லல? அப்பா ஒரே புலம்பல்… என்னால அவரை சமாளிக்க முடியல க்கா!” பெரிய முகாரியைப் பாடிவிட்டு தனது விசாரிப்பை முடித்தான் நகுல்.

அவனிடம் சிரிப்பை பூசி மொழுகிக் கொண்டவளாக, “நேத்து மார்னிங் வந்துட்டோம் நகுல்… கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். அதான், கால் பண்ண முடியலடா!” என்றவள்,

“வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? அப்பா எதுக்குடா புலம்புறார்!” வரிசையாக கேட்டாள்.

“நீ ஊருக்கு போயிட்ட… குட்டி அக்காவும் ஹாஸ்டல்ன்னு போயிட்டா…” நகுல் ஆரம்பிக்கவுமே, தேஜுவிற்கு தங்கையின் ஞாபகம் தலை தூக்கியது.

“இவளை எப்படி மறந்து போனேன்? மொதல்ல இவளை நாலு கேள்வி கேட்டு தலையில தட்டி வைக்கணும். அப்பதான் சரியா வருவா!” தனக்குள் முணுமுணுத்தவளாக,

“டாக்டரம்மா ரொம்ப பெரிய ஆளாகிட்டாங்கடா… அதான் எங்கிட்ட கூட சொல்லாம ஹாஸ்டல் போயிருக்கு இந்த பக்கி!” கோபத்துடன் கடிந்து கொண்டாள்.

“ஐயோ அக்கா, உனக்கு விசயமே தெரியாதா? அம்மாவோட கம்பெல்சன்ல தான் அக்கா ஹாஸ்டலுக்கு போயிருக்கா! காலேஜ் மாத்தினதுல கூட அவளுக்கு இஷ்டமில்லை.” எனக் கூறியவன் சற்றே நிறுத்திட, தேஜுவும் விளங்காமல் தம்பியைப் பார்த்தாள்.

“அவளுக்கு பிடிக்காத விஷயமா எல்லாமே செஞ்சதாலோ, என்னவோ குட்டி அக்கா வீட்டுக்கு கால் பண்ணி பேசுறதையே நிறுத்திட்டாக்கா!” நகுல் வருத்தமாக கூறவும்,

“இதென்னடா புது தலைவலி! நான், அவளையில்ல திட்டி வறுத்துட்டு இருக்கேன்!” அதிர்வுடன் கேட்டாள் தேஜூ.

“இல்லக்கா, அவளுக்கு நம்ம எல்லார் மேலயும் செம கோபம் போல… ஹாஸ்டல் நம்பருக்கு ஃபோன் பண்ணி கூப்பிடச் சொன்னாலும் அசைன்மென்ட் எழுதிட்டு இருக்கேன், இப்ப பிஸின்னு ஃப்ரண்ட்சை விட்டு சொல்ல வைக்கிறா!” அழமாட்டாத குறையாக சொல்லி முடிக்க கேட்டுக் கொண்டிருந்த அருணாசலத்தின் உள்ளமும் கவலை கொண்டது.

இங்கே இருந்தவரை தாத்தா என அன்போடு அழைத்து, இந்த மாளிகையை உயிர்ப்போடு சுழல வைத்தவள் மனஷ்வினி. தேஜு கூட வார்த்தைகளை அளந்து பேசுவாள். ஆனால் இளையவளோ அனைவரையும் உறவோடு அழைத்து தனது கூட்டுக்குள் இழுத்துக் கொள்வாள்.

‘அந்த குழந்தைப் பெண்ணிடம் எதற்காக அனைவரும் வஞ்சம் வைத்து இம்சை செய்கின்றனரோ!’ மனதோடு ஆதங்கம் கொண்டார் அருணாச்சலம். கணவனுக்கும் அவளுக்கும் இடையே போக்குவரத்து சரியில்லை என்று அறிந்தவரின் மனம் ஆனந்தனையும் உள்ளுக்குள் நிந்தித்தது.

“மனு அவ்வளவு கோபமா இருக்கிறவ இல்லையேடா? இரு… நான் பேசி பாக்கறேன்!” தேஜுவும் அலைபேசியில் தங்கையை அழைக்க, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

“மொபைல் சுவிட்ச் ஆஃப்னு வருதா? இப்படிதான் நாலு நாளா வந்துட்டே இருக்கு. மனசு கேக்காம ஹாஸ்டல் நம்பர்ல கூப்பிட்டாலும் இவ லைன்ல வந்து பேசாம அவாய்ட் பண்றா… இதுல மனசு உடைஞ்சு போயிதான் அப்பா புலம்பித் தள்ளுறாரு!” உள்ளதை உடைத்து சொல்லி முடித்தான் நகுலேஷ்.

தம்பி சொல்வதைக் கேட்ட தேஜூவின் மனம் பெரும் சஞ்சலம் கொண்டது. அவள் அறிந்த மனஷ்வினி அப்படிப்பட்டவள் அல்லவே!

‘என்னதான் திட்டி முறைத்தாலும் அடுத்த நிமிடம் தானாகவே ஒட்டிகொண்டு வந்து சிரித்து பேசி விடுவாள். இத்தனை அழுத்தமாக யாருடனும் பேசாமல் இருக்கிறாள் என்றால் என்ன நடந்தது இவளுக்கு?’ மனம் நினைத்ததை வெளிப்படையாகவே பெரியவரிடம் கூறி விட்டாள் தேஜு.

“எனக்கு ஏதோ சரியில்லன்னு தோணுது தாத்தா! இங்கே இருந்து போகும்போது மனு நார்மலா இருந்தாளா?” எனக் கேட்க, அருணாச்சலமோ இல்லையென்று தலையசைத்தார்.

“நீங்க ஊருக்கு போன பிறகு நாலுநாள் அவ ரொம்ப அமைதியா நடமாடிட்டு இருந்தா கண்ணு! சினேகிதப் பசங்க வீட்டுக்கு போயிட்டு வான்னு நான் சொன்னப்பவும் வேண்டாம்ன்னு மறுத்துட்டா…

அதுக்கு அடுத்தநாளே உங்கம்மா வந்து பொண்ணை ஹாஸ்டலுக்கு அனுப்பியே ஆகணும்னு சொல்லி, அவளை கிளப்பி கூட்டிட்டுப் போயிட்டாங்க… அதுக்கு பிறகு நானும் அவ கூட பேசலயே கண்ணு!” தேஜுவிடம் விரிவாக விளக்கம் கூறி முடித்தார் பெரியவர்.

“வீட்டுக்கு வந்து ரெண்டு நாளுக்கு அப்புறம்தான், அக்கா, அம்மா கூட கோயம்புத்தூர் ஹாஸ்டலுக்கு போனாங்க. போகமாட்டேன்னு எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணல… அதே சமயம் மனசுக்கு பிடிச்சும் போகல…” நகுலின் பதிலில், தேஜுவின் மனதில் புரியாத புதிராகவே நின்றாள் மனஷ்வினி.

தங்கையின் நிலையை தெரிந்து கொண்டே ஆக வேண்டிய அவசியத்தை மனம் உரைத்துச் சொல்லிவிட, தேஜூவால் நொடிநேரம் கூட அங்கே இருக்க முடியவில்லை.

“நேரா காலேஜுக்கே போயி பார்த்துட்டு வந்துடுவோம்டா தம்பி. அப்படி என்ன ரோசம் அவளுக்கு?” என்றவள் சட்டென தயங்கினாள்.

இவள் வெளியே செல்ல வேண்டுமென்றால் கணவனிடம் அனுமதி கேட்க வேண்டுமே! இப்போதிருக்கும் மனச் சுணக்கத்தில் ஆதித்யன் என்ன சொல்வானோ என்ற கவலையும் சேர்ந்து அழுத்திவிட, தளர்ந்து போய் சோபாவில் அமர்ந்து விட்டாள் தேஜு.

“நீ போயி தங்கச்சிய பாரு கண்ணு! நான் பெரியவர்கிட்ட எடுத்து சொல்றேன், அவர் கேட்டுப்பாரு!” அருணாச்சலம் தைரியம் கொடுக்க மறுநிமிடமே தம்பியுடன் கிளம்பி விட்டாள்.

‘வீட்டில் உள்ள காரில் செல்.’ என பெரியவர் எத்தனையோ முறை அறிவுறுத்தியும் தேஜுவின் மனம் ஏனோ அந்தச் சலுகையை ஏற்க முன்வரவில்லை.

‘தான் கணவனிடம் அளித்த உறுதிமொழிக்கு இது ஆரம்பப்புள்ளியாக இருக்கட்டுமே!’ உள்மனம் திடமாக உரைக்க, எப்பொழுதும் போல தம்பியை அழைத்துக் கொண்டு பேருந்தில் சென்றாள்.

இருவரின் மனமும் நிலைகொள்ளாமல் தவித்து அவளையே எண்ணியபடி இருக்க, ஒன்றரை மணிநேர பயணத்திற்கு பிறகு கல்லூரிக்கு வந்தடைந்தனர்.

மனஷ்வினி படிக்கும் பிரிவிற்கே சென்று அவளைப் பார்க்கவென காத்திருக்க, அவள் விடுமுறையில் இருக்கிறாள் என்ற செய்தி அவளது தோழிகளின் மூலமாக வந்தடைந்தது.

“என்னக்கா இது? இவளுக்கு இருக்கிற கோபத்துல கிளாஸ் கட் அடிச்சுட்டு ஹாஸ்டல் ரூம்லயே இருக்காளா!” நகுல் அதிர்ச்சியுடன் கேட்க, தேஜுவின் மனம் லேசாக பதைபதைத்துக் கொண்டது.

‘இத்தனை கோபம் ஏன் இவளுக்கு? என்னதான் நடந்தது? ஆனந்தனோடு ஏதும் பெரிய பிரச்சனை ஆகிப் போனதோ!’ உள்ளுக்குள் பல கேள்விகளை தனக்குள் கேட்ட வண்ணமே வேகநடை பயின்றாள் தேஜு.

மனஷ்வினி தங்கி இருக்கும் விடுதிக்கு வந்தடைந்தவர்கள் அவளை பார்க்க வேண்டுமென கூற, அங்கும் அவள் இல்லையென்ற பதிலைக் கூறி இருவரையும் அதிர்ச்சியடைய வைத்தார் அங்கிருந்த ஹாஸ்டல் வார்டன்.

“என்ன சொல்றீங்க மேம்? நல்லா விசாரிச்சு பார்த்துட்டு வந்து சொல்லுங்க… இல்லன்னா, அவ ரூமுக்கு போயி பார்க்க எங்களுக்கு பெர்மிசன் குடுங்க!” தேஜு பதட்டத்துடன் கேட்க, நகுலிற்கும் பொறுமை பறந்து போனது.

“நேத்து கூட நாங்க வீட்டுல இருந்து ஃபோன் பண்ணி கேட்கும் போது, அசைமெண்ட் எழுதுறதாலே பேச டைம் இல்லன்னு அவ ரூம் மேட் வந்து சொன்னாங்களே! கூப்பிடுங்க அந்த பொண்ண… நான் கேக்குறேன்!” கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டான் நகுலேஷ்.

“இங்கே பாருங்க தம்பி… உங்க அம்மாக்கு ரொம்ப சீரியஸா இருக்குன்னு சொல்லி டாக்டர் லெட்டரோட வந்து, போன வாரமே அவளோட கார்டியன் கூட்டிட்டு போயிட்டாங்க நீங்கதான் இப்ப வந்து புதுசா ஏதோதோ கதை சொல்றீங்க!” விடுதிக் காப்பாளர் அடுத்த அதிர்ச்சி முடிச்சை அவிழ்த்து விட மொத்த பலமும் குறைந்து போய் சோர்ந்து விட்டாள் தேஜஸ்வினி.

‘கார்டியனா! இதென்ன புது குழப்பம்? மனும்மா எங்கடா இருக்க? உன்னை பத்தி யோசிக்காம நான் சுயநலமா இருந்திட்டேன்னு எதுவும் ப்ளே பண்றியா? நான் தாங்கமாட்டேன். நேருல வந்து அடிச்சு கோபத்தை தீர்த்துக்கோ… இப்படி பயமுறுத்தி பார்க்காதேடி!’ தேஜுவிற்கு பொறுமை அழிந்து, கோபம் புகைந்து, அழுகையும் வெடித்து விடத் தயாராய் இருந்தது.

“அது யாருங்க, எங்களுக்கு தெரியாத கார்டியன்? லெட்டரோட யாரு வந்தாலும் அனுப்பிடுவீங்களா? நீங்க ஹாஸ்டல் நடத்துற லட்சணம் இதுதானா?” பரிதவிப்புடன் அடங்காமல் கேட்டான் நகுல்.

“எங்களுக்கு நீங்க ரூல்ஸ் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்ல தம்பி… அவளோட கார்டியன்னு சைன் போட்டவர்தான் அவளை வந்து கூட்டிட்டு போயிருக்காரு! அவளை ஹாஸ்டல்ல சேர்க்கும் போது உங்கம்மாவோட சைனும் அவளோட கார்டியன்னு அவளை கூட்டிட்டு போன ஆளோட சைனும் ஆபீஸ்ல இருக்கு. பிராப்பர் பெர்மிஷன் வாங்கி செக் பண்ணிகோங்க! புதுப்புது ரூட் போட்டு ஓடிப் போறாங்கப்பா இந்த காலத்து பொண்ணுங்க!” இகழ்ச்சியுடன் விளக்கம் கூறி சலித்துக் கொண்டார் ஹாஸ்டல் வார்டன்.

“எத்தனை நாட்களாக அவள் இங்கு இல்லை? எப்போது சென்றாள்?” போன்ற கேள்விகளுக்கு எல்லாம் ஏனோதானோ என்று பதில் அளித்த வார்டன், இன்னும் தனக்கு தெரிந்த நல்ல வார்த்தைகளில் மனஷ்வினியை அர்ச்சிக்கத் தொடங்க அக்காவும் தம்பியும் கேட்க கூசிப் போய் காதுகளை பொத்திக் கொண்டு வெளியே வந்தனர்.

“யாருடா அந்த கார்டியன்? அம்மாக்கு ஃபோன் போடு நகுல்!” தேஜு அவசரப்படுத்தும் போதே, அவனும் அம்மா சுலோச்சனாவை அழைத்து விட்டான்.

அம்மாவின் மனம் பதட்டப்படக் கூடாதென்ற எண்ணத்தில் விசயத்தை நேரடியாகக் கூறாமல், ”மனு அக்காவுக்கு கையெழுத்து போட்ட கார்டியன் யாரும்மா?” நகுல் கேட்க, சுலோச்சனாவின் குரல் இறங்கிப் போனது.

“உனக்கெப்படி தெரியும் நகுல்… நீ எங்கே இருக்க?”

“எங்களுக்கு தெரியாம இன்னும் என்னென்ன காரியம் பண்ணி வைச்சிருக்கீங்க சொல்லுங்கம்மா… அந்த கார்டியன் யாரு?” கோபத்தை அடக்கிக் கொண்டு நகுல் கேட்ட விதத்தில் உண்மையை கூறிவிட்டார் சுலோச்சனா.

“அக்காங்களோட சின்ன மாமனார் தான்டா கார்டியன் சைன் போட்டது!” சுலோச்சனா கூற, தேஜு இடையிட்டாள்.

“எங்களுக்கே அவர் யாருன்னு தெரியாதப்ப நீங்க எப்படி அவரை நம்புனீங்க? ஆனந்த் இருக்கிறப்போ அவர் எதுக்கு கையெழுத்து போட்டார்? யாரையும் கேக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு அப்படியென்ன அவரசம்?” தேஜுவின் கேள்விகளுக்கு அவரிடத்தில் ஒழுங்கான பதில் வரவில்லை.

“நல்லா படிக்கிற பொண்ணுக்கு வருஷம் போயிடக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல அவசரமா அவரே வந்து பேசி சேர்த்து விட்டாரு. தன்னோட மருமக பெரிய காலேஜ்ல படிச்சாதான் அவங்க குடும்பத்துக்கும் கௌரவமா இருக்குமுன்னு சொல்லி அவரே பணம் கட்டி காலேஜ் மாத்தி விட்டாரு! மாப்பிள்ளைங்க கிட்ட விவரமா சொல்லிட்டேன்னும் சொன்னாரே தேஜு!”

சுலோச்சனா அடுக்கிக்கொண்டே போக, கேட்டவர்களுக்கு மூளை மேலும் குழம்பி, பய உணர்வே மேலிட்டது. தேஜஸ்வினியால் அந்த கார்டியன் யாராக இருக்குமென்று சுத்தமாக அனுமானிக்க முடியவில்லை.

“இப்ப மனு அக்காவை காணோம்மா! கார்டியன் வந்து கூட்டிட்டு போனதா சொல்றாங்க. அவரை ஃபோன் பண்ணி கேட்டுச் சொல்லுங்கம்மா!” நகுல் விவரங்களைக் கூறி கேட்கவும் அதற்கும் கையை விரித்தார் சுலோச்சனா

“அவர் அவசர அவசரமா வந்து, காலேஜூல சேர்த்து விட்டுட்டுப் போயிட்டாருடா! அவரோட நம்பர் என்கிட்ட இல்ல. ஒருவேளை மனுகிட்ட இருக்கோ என்னமோ!” ஒன்றும் அறியாதவராய் கையை விரித்துவிட, நகுலேஷ் தனக்கு தெரிந்த விதத்தில் அம்மா என்றும் பாராமல் கோபத்தில் திட்டித் தீர்த்தான்.

மீண்டும் விடுதிக்கு வந்தவர்கள், வார்டனிடம் வற்புறுத்தி கேட்டு மன்றாடிய பிறகே, மனஷ்வினி தங்கியிருந்த அறையினை சென்று பார்க்க அனுமதி கிடைத்தது. அவளுடைய உடமைகள் எல்லாம் அப்படியே இருந்தன.

அறையில் தங்கியிருந்த பெண்களிடம், “நேத்து நான் கால் பண்ணப்போ அவ அசைன்மென்ட் எழுதிட்டு இருக்கான்னு யார் வந்து சொன்னா?” நகுல் கேட்க, அங்கிருந்த பெண்கள் ‘நான் இல்லை, நீ இல்லை.’ என்று கையை விரித்தனர்.

“அப்படி ஒரு ஃபோன் வரவே இல்லையே தம்பி!” வார்டனும் தனக்கு தெரிந்ததைக் கூற, நகுலேஷிற்கு நம்பிக்கை வரவல்லை.

அங்கிருத்தபடியே விடுதியின் தொலைபேசி எண்ணிற்கு நகுல் அழைக்க, எதிர்பக்கம் அழைப்பு எடுக்கப்பட்ட அதே சமயத்தில் விடுதியின் தொலைபேசி அமைதியாக அடங்கி இருந்தது.

பதட்டமும் பயமும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்ல, “நான் மனஷ்வினி தம்பி பேசுறேன்… அக்கா கூட பேச முடியுமா?” நகுல் கேட்க,

“அவங்க இப்பதான் ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு காலேஜுக்கு போனாங்க சர்! நீங்க ஈவ்னிங் பேசுங்க!” எதிர்முனையில் பேசிய பெண்குரல், அவனது மறுபதிலை எதிர்ப்பார்க்காமல் வைத்து விட்டது.

மீண்டும் ஒருமுறை முயற்சிக்கும் போது தொடர்பு எல்லைக்கு அப்பால் என்ற பதிவு செய்யயப்பட செய்தி வர, அவனுமே தளர்ந்து போனான்.

“ஏதோ பெருசா நடந்திருக்கும் போல ம்மா. நீங்க போலீஸ்ல கம்பிளையின்ட் குடுத்துட்டு ஃபர்தரா புராசஸ் பண்ணுங்க! ஃபர்ஸ்ட் உங்க மொபைல் இருக்குற கால் ஃபார்வேர்டிங் ஆப்சனை டி ஆக்டிவேட் பண்ணுங்க… உங்க வீட்டுல இருக்குற எல்லார் மொபைல்லயும் செக் பண்ணுங்க!” அறிவுறுத்திய வார்டன், அடுத்து செய்ய வேண்டிய நடைமுறைகளை விளக்கி கூறி துரிதப்படுத்தினார்.

“கம்பிளையின்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி வீட்டுல எல்லாகிட்டயும் சொல்லிடுவோம் க்கா!” என்ற நகுல், அலைபேசியில் தனது அப்பாவிற்கு முதலில் அழைப்பினை விடுத்தான்.

தேஜுவும் ஆதித்யனுக்கு முயற்சி செய்ய இரண்டு முறை அழைப்பு சென்று, மூன்றாம் முறை துண்டிக்கப்பட்டது. ‘இவருக்கு இவர் கோபம்தான் பெருசு!’ உள்ளுக்குள் கனன்றவள் ஆனந்தனுக்கு அழைத்து சொல்லி விடலாம் என நினைத்தாள்.

அவளிடத்தில் ஆனந்தனின் அலைபேசி எண் இல்லை என்பதே அவளிற்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது. உடனிருந்த தம்பியும் அவனிடத்திலும் ஆனந்தனின் அலைபேசி எண் இல்லையென சோர்வாகக் கூறினான்.

“நேர்ல போயி சொல்லுவோம் நகுல்… மனு எங்கே இருக்கான்னு ஆனந்தனுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!” நம்பிக்கையுடன் பேசியவளாக தம்பியை அழைத்துக் கொண்டு ரூபம் குருப்ஸ் அலுவலகத்திற்கு விரைந்தாள் தேஜஸ்வினி.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!