Rose – 5

Rose – 5
அத்தியாயம் – 5
பூவின் மொழியை நிறமும், நறுமணமும் உணர்த்திவிடும். தன் உயிர் காதலை காந்த விழிகளின் வழியாக, அவனுக்குள் கடத்தி விடுவாள் யாழினி. அவனது உயிரைத் தீண்டும் பார்வையில், அவன் மனம் மயங்கி நின்ற தருணங்கள் நினைவில் வந்தது.
அதைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, “உங்க எந்த விளக்கமும் எனக்கு தேவை இல்ல. நீங்க சொன்ன பொய்யை நம்பி நான் ஏமாந்த காலம் எல்லாமே மலையேறிப் போச்சு” என்றாள் இறுகிய குரலில்.
அவளது குரலில் தன்னிலைக்கு மீண்டவன், “நான் பொய் சொல்லும்போது நம்பிய நீ, இப்போ உண்மையைச் சொல்ல வரும்போது அதை ஏற்க முடியாதுன்னு ஏன் அடம்பிடிக்கிற” என்றான் வலியுடன்.
“உண்மைதான்! என்னைக்கும் ஏமாற்றுபவனை விட, ஏமாறும் நபர்களுக்கு தான் முதலில் தண்டனைத் தரணும். அப்படிப் பார்த்தால் உன்னோட பொய்யான காதலை உண்மையென்று நம்பி ஏமாந்த என்னைத்தான் தண்டிச்சுக்கணும்” என்றவள் மண்டபத்திற்குள் செல்ல திரும்ப, அவளது கையைப் பிடித்து தடுத்தான் யாதவ்.
அவன் கரங்களில் சிறைபட்ட கையை விடுவித்துக் கொள்ள போராடிய யாழினி, “நீ உன் வழியில் போன்னு நான் விலகிவிட்டேன் இல்ல, அப்புறம் எதுக்காக என்னை இப்படி இம்சைப் பண்ற?” என்றாள் எரிச்சலோடு.
ஒரு விரலால் அவளது பளிங்கு முகத்தை நிமிர்த்தி, “என் இதயத்தில் நீ மட்டும்தான் இருக்கிற, அதனால் தான் உன்னை இம்சை செய்கிறேன்” ஆழ்ந்த குரலில் இருந்த காதல் திகைக்க வைக்க, அவனது பார்வை உயிர்வரை ஊடுருவிச் சென்றது.
அவள் மெளனமாக நின்றிருக்க, “என்னைவிட்டு நீ விலகிச் சென்றுவிட முடியுமா? உன்னை எப்படியோ போன்னு நானும் விட்டு விடுவேன்னு நினைச்சியா?” அவனின் பேச்சில் அவளுக்கு சுள்ளென்று சினம் தலைக்கேறியது.
“உன்னை நான் வெறுத்துவிட்டேன், இனி என் வாழ்க்கையில் உனக்கு இடம் கிடையாது” அவள் தீர்க்கமான பார்வையுடன் கூற, அதைகேட்டு வாய்விட்டுச் சிரித்தான்.
“உன் உதடுகள் பொய் சொல்லுது இனியா! என்னை எந்தளவு உயிராக நேசிக்கிறன்னு உனக்குள் துடிக்கும் இதயத்திடம் கேளு, அது சொல்லும் உண்மையை!” அவன் தொடர்ந்து ஏதோ சொல்ல வர, அதைக் கேட்கும் மனநிலை இல்லாததால் கையமர்த்தி தடுத்தாள்.
“உன்னோட உளறலைக் கேட்க நான் தயாராக இல்ல” தன் கரத்தை உருவிக்கொண்டு விறுவிறுவென்று மாடியைவிட்டுக் கீழிறங்கிச் சென்றவளைப் பின்தொடர்ந்தது அவனது பார்வை!
அவனிடம் தப்பித்து கீழே வந்த யாழினி, ‘இப்படி காதல் வசனம் பேசிதானே, தன் காரியத்தை எல்லாம் சாதித்துக் கொண்டான்’ என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, யாதவைத் தேடி வந்தான் ராம்குமார்.
தன் எதிரே வந்த யாழினியிடம், “மதுரா யாதவைப் பார்த்தாயா?” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றவளைக் கேள்வியாக நோக்கினான் ராம்குமார்.
அவளின் பின்னோடு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த யாதவ், “என்னடா பந்தி சரியாக நடக்கிறதான்னு பார்க்காமல் இங்க சிலையாட்ட நின்னுட்டு இருக்கிற? சீக்கிரம் போய் வேலையைக் கவனிக்கலாம், அப்போதான் மண்டபத்தைக் காலி செய்ய முடியும்” என்றவனின் பார்வை யாழினியின் பின்னோடு சென்றது.
அரவிந்தன் – கீர்த்தனாவிற்கு அனைத்து சீர்வரிசைகளையும் செய்து, அவளை வழியனுப்பும் வரை சாதாரணமாக நடமாடிய பெற்றோர்கள், தன் பெண்ணைப் பிரிந்து செல்வதை நினைத்து கண்ணீர் வடிக்க, “நான் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் அரவிந்தன்.
கீர்த்தனா அழுகையுடன் தமையனின் தோள் சாய, “இங்கே பாரு! அங்கே போய் பெரியவங்க சொல்ற மாதிரி நடந்துக்கணும் கீர்த்தி. எங்களைப் பார்க்கணும்னு தோன்றினால், ஒரு போன் போடு. அடுத்த நிமிஷம் அண்ணா அங்கே இருப்பேன்” தைரியம் சொன்ன ராம் கண்கலங்கினான்.
அவர்களின் அருகே வந்த யாதவ், “அவளுக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீயே உடைந்து அழுதால் என்னடா அர்த்தம்” அதட்டியவன் மற்றவர்கள் அறியாமல் கலக்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டு, கீர்த்தனாவை தலையைப்பிடித்து செல்லமாக ஆட்டினான்.
“நல்லநேரம் முடிவதற்குள் வீட்டுக்குப் போகணும்” பெரியவர் ஒருவர் குரல்கொடுக்க, அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறினர் மணமக்கள்.
அதுவரை அங்கே நடப்பதை நின்று வேடிக்கைப் பார்த்த யாழினியின் மனக்கண்ணில், “என் பெண்ணை இந்தியாவில் கட்டிக் கொடுத்துட்டு, என்னால் இங்கே எப்படி இருக்க முடியும்?! யாழினி எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கணும், அதனால் இங்கேயே இருக்கும் பசங்களாக பார்த்து தான் கட்டிக் கொடுப்பேன்” ரவீந்தரின் குரல் காதோரம் ஒழிக்க, அவளது விழிகளும் தானாகவே கலங்கியது.
தன்னை மறந்து சிலையாகி நின்ற யாழினியின் முகம் பார்த்த கீர்த்தனா காரை நிறுத்த சொல்லி, வேகமாக கிழிறங்கி ஓடி வந்தாள்.
மெல்ல யாழினியின் கரங்களைப் பிடித்துகொண்டு, “நீங்க அமெரிக்கா போகக்கூடாது. நீங்க இங்கேயே எங்களோடு தான் இருக்கணும். அப்பா – அம்மா, அண்ணா மூணு பேரையும் பார்த்துக்கோங்க அக்கா” அக்கறையுடன் கூறினாள் கீர்த்தனா.
பிறந்த வீட்டின் மீது கொண்ட பாசம் அவளைப் பேச வைக்கிறது என்று உணர்ந்து, “நான் இப்போதைக்கு அமெரிக்கா போக மாட்டேன், நீ தைரியமாகப் போயிட்டு வா” அவளின் கண்ணீரைத் துடைத்துவிட, சின்னவளின் முகத்தில் மலர்ச்சி வந்தது.
அனைவரிடமும் விடைபெற்ற கீர்த்தனா காரில் ஏற, அது சீரான வேகத்தில் அங்கிருந்து கிளம்பியது.
***
அடுத்தடுத்து வந்த நாட்களில் மகளைப் பிரிந்த சிவசந்திரன் – வைஜெயந்தி இருவரையும் ஓரளவுக்கு பழைய வாழ்க்கைக்கு பழக, ராம்குமார் மருத்துவமனை சென்று வர தொடங்கினான்.
அந்த வீட்டினரின் மனநிலையை மாற்ற நினைத்த யாழினி கலகலப்புடன் பேசி சிரிக்க, அவளது புன்னகை மீண்டும் அவர்களை உயிர்பித்தது.
அவளது செய்கைகளை தூரத்தில் இருந்தே கவனித்து வந்த மீனாவோ, ‘அன்னைக்கு ஏன் அப்படி சொன்னா?’ என்ற குழப்பத்துடன் வலம் வர தொடங்கினார்.
நீலவானில் மிதந்த மேகங்களின் நடுவே, அழகாக எட்டிப் பார்த்து ஒளிவீசும் வெண்ணிலவு. இருள் சூழ்ந்த வானில் தெரிந்த நட்சத்திரங்கள், வெண்ணிற பூக்களாக காட்சியளித்தன. சில்லென்று தென்றல் தன்னைத் தீண்டிச் செல்வதை உணராமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் யாழினி.
பால்கனியில் சிந்தனையுடன் நின்றிருந்தவளின் கவனம் தோட்டத்தின் பக்கம் சென்றது. கனல் போடுவதற்கு ஏதுவாக ஒரு வட்ட அமைப்பில் குழியோன்று இருக்க, அதில் சுருளிகளைப் பொறுக்கிப் போட்டு, அதை தீ வைத்தனர் யாதவும், ராம்குமாரும்!
அதைச்சுற்றி சிமிண்ட் பெஞ்ச் அமைக்கபட்டிருக்க, சிவசந்திரன் – வைஜெயந்தி இருவரும் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் இணைந்து பேசிச் சிரித்த தன்னவன் மீது பார்வையைப் படரவிட்டாள்.
தன்னவளின் ரசனைப் பார்வையைக் கவனித்த யாதவ், மற்றவர்கள் அறியாமல் உதடுகுவித்து பறக்கும் முத்தத்தை அவளுக்கு பரிசாக அனுப்பிவைக்க, அவனது திடீர் செயலைக் கண்டு விதிர்த்துத் திரும்பிச் செல்ல நினைத்தாள்.
அதற்குள், “மதுரா அங்கே தனியாக என்ன செய்யற? நீ முதலில் கீழே இறங்கி வா… கொஞ்சநேரம் பேசிட்டு இருக்கலாம்” ராம்குமார் குரல்கொடுக்க, சரியென்று தலையசைத்து அறையைவிட்டு வெளியேறினாள் யாழினி.
தன்னுடைய காட்டன் சுடிதாரின் மீது ஒரு பிக் நிற ஸ்வெட்டர் அணிந்துக்கொண்டு தோட்டத்திற்குச் செல்ல, “இங்கே வந்து உட்காரு வா” என்றழைத்த வைஜெயந்தியின் அருகே அமர்ந்தாள் யாழினி.
அந்த குளிருக்கு வெப்பத்தின் அருகே இருப்பது நிறைவாக இருக்க, கனல் முன்பு இரண்டு கரங்களையும் நீட்டி அதை கன்னத்தில் வைக்க, யாதவ் பார்வை அவளின் மீதே நிலைத்தது.
அவனது பார்வையைக் கவனித்த ராம்குமார் தொண்டையைச் செறுமிக்கொண்டு பேச தொடங்க, ‘இவன் வேற?’ எரிச்சலோடு நன்மணி மனதிற்குள் வறுத்தெடுத்தான் யாதவ்.
“சின்ன வயதில் அடிக்கடி இப்படிதான் செய்வோம். நான், யாதவ், கீர்த்தி மூவரும் இங்கே உட்கார்ந்து ஏதாவது பாட்டுப் போட்டி, விடுகதைன்னு ஏதாவது விளையாடுவோம்!” சிறுவயதின் ஞாபங்களை உற்சாகத்துடன் ராம்குமார் பகிர, யாதவ் மனம் அன்றைய நாட்களுக்கே சென்று திரும்பியது.
“உங்கப்பா அமெரிக்காவில் இருந்ததால், அம்மா மட்டும்தான் இருப்பாங்க. இப்போ கீர்த்திக்கு பதிலாக உன் தங்கை யாழினி இருக்கிறா” என்றவனை வெட்டுப் பார்வை பார்க்க, அவனோ கண்சிமிட்டிக் குறும்புடன் சிரித்தான்.
“அமெரிக்கா என்றதும் தான் ஞாபகம் வருது! நீ அங்கேயே போகும் முடிவில் இருக்கிறாயா?” சிவசந்திரன் அவளிடம் விசாரிக்க, அவளது பதிலை எதிர்பார்த்த யாதவ் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்தது.
ஏற்கனவே இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்த யாழினி, “அன்னைக்கு கீர்த்தி சொன்ன மாதிரி, எனக்கென்று அங்கே யார் இருக்காங்க. காலை முதல் மாலை வரை இயந்திரம் போல ஒரு வாழ்க்கை. அது எனக்கு சுத்தமாகப் பிடிக்கல” அவள் விரக்தியுடன் கூற, அந்த வார்த்தைகள் அவனது மனதை முள்ளென்று தைத்தது.
அவளைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்ல நெஞ்சம் நினைக்க, அதைச் செய்ய முடியாதபடி விதி அவன் கரங்களைக் கட்டிப் போட்டது. தான் சொன்ன வாக்கியமும், எடுத்த முடிவையும் நினைத்து மனம் வருந்திய யாதவ்,
“சந்தித்த நாள் முதலாய் என்
இதயம் லயம் மாறித் துடிக்க
சிந்திக்க மறந்தேனடி சகியே…
சித்தம் தெளிக்க மனம் நிகர்
செய்வாயோ…” தன்னை மன்னிக்கும்படி பார்வையால் அவளிடம் யாசித்த, அவனது விழிகளைச் சந்திக்க மறுத்து வேறு எங்கோ பார்த்தாள்.
மீனா மருத்துவமனைக்கு வந்தது ஞாபகம் வரவே, “உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன் யாதவ். இன்னைக்கு உங்கம்மா நம்ம ஹாஸ்பிட்டலுக்கு வந்தாங்க” என்றான் ராம்குமார்.
“அவங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா ராம்?” சிவசந்திரன் மகனிடம் விசாரிக்க, யாதவ் முகம் சட்டென்று இறுகியது.
“இல்லப்பா! சொந்தக்கார பெண்ணொருத்திக்கு குழந்தைப் பிரிந்திருப்பதாக சொன்னாங்க” யாதவ் இருப்பதை மறந்து தன்போக்கி சொல்ல, யாதவின் மனதில் கோபம் என்னும் கனல் நெஞ்சமெங்கும் காட்டுத்தீ போல பரவியது.
அவனது விழிகள் சிவப்பதைக் கவனித்த வைஜெயந்தி பார்வை கணவன் மீது கண்டிப்புடன் படிந்து மீள, “ஸாரி யாதவ்! ஏதோ நினைவில் கேட்டுவிட்டேன்” மன்னிப்புக் கேட்டார்.
அவனோ இயல்பாகப் பேச மனமின்றி சிறிதுநேரம் மெளனமாக இருக்க, வைஜெயந்தி கோபம் கணவனின் பக்கம் திரும்பியது. பெற்ற தாயை அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை என்ற உண்மையை மட்டும் உணர்ந்தாள் யாழினி.
“அவன் நம்மளோடு இருக்கும்போது தான் கொஞ்சம் இயல்பாக இருப்பான். அந்த சமயத்தில் அவனுக்குப் பிடிக்காத விஷயத்தை நீங்க எதுக்காக பேசினீங்க? அவனோட முகமே களையிழந்து போயிடுச்சு இப்போ உங்களுக்கு நிம்மதியா?” சிவசந்திரனை வசைபாடத் தொடங்கிவிட்டார்.
“நான் என்னவோ வேணும்னு பேசிய மாதிரி திட்டிட்டுற பாருடா!” ராம்குமாரிடம் குற்றப்பத்திரிகை வாசிக்க, அதுக்குமேல் அங்கே இருக்க மனமின்றி சட்டென்று எழுந்து சென்றுவிட்டான்.
அனைவரிடமும் விஷயத்தைச் சொல்ல இதுவே சரியான தருணம் என்ற முடிவிற்கு வந்த யாழினி, “அப்பா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றாள்.
மற்றவர்களின் கவனமும் அவளின் பக்கம் திரும்ப, “என்ன விஷயம்மா?” என்றார் சிவசந்திரன் கனிவான குரலில்.
“கோகுல் எஸ்டேட் அண்ட் பேக்டரி இரண்டையும் விலைக்கு வாங்கிட்டேன் அப்பா” அவள் உண்மையைப் போட்டு உடைக்க, மூவரும் அதிர்ந்து ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர்.
இத்தனை நாளாக தொழில் கவனித்து வந்த மீனலோட்சனி, திடீரென்று நிறுவனத்தை விற்றதை நினைத்து சந்தோசப்படுவதா? இல்லை யாதவ் வெறுக்கும் நிறுவனத்தை யாழினி வாங்கியதை நினைத்து வருத்தப்படுவதா என புரியாத மனநிலையில் சிலையாக அமர்ந்திருந்தான் ராம்குமார்.
யாதவ் கிருஷ்ணாவிற்கு மதுர யாழினியை மனம் முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. அதற்கு தடையாக இருந்தது, யாதவ் வைத்திருக்கும் கொள்கை மட்டுமே!
இனி அடுத்து என்ன செய்வது என்றவன் யோசிக்க, “என்னோட நிறுவனத்திற்கு பக்கத்திலேயே விலைக்கு வந்த வீட்டை வாங்கிட்டேன். நாளைக்கு பால்காய்ச்சிவிட்டு மற்ற பொருட்களை எல்லாம் வாங்கி ஒழுங்குபடுத்திவிட்டால் போதும்மா…” யாழினி இயல்பாகக் கூற, ராம்குமாரின் முகம் கோபத்தில் சிவந்தது.
அவனது பார்வையைக் கண்ட யாழினி உதட்டைக் கடித்து மெளனமாக, “நீ நினைக்கிற மாதிரி இந்தியா கிடையாது. இங்கே ஒரு பெண் தனியாக இருப்பது எவ்வளவு கஷ்டம்னு புரியாமல் எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவெடுத்துட்டு இருக்கிற” என்றான் ராம்குமார்.
தன் மகனின் பேச்சினில் இருக்கும் நியாயம் உணர்ந்து, “அவன் சொல்வதும் சரிதான்மா. நாங்க உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம்” அவளை தடுத்துவிடும் நோக்கத்துடன் வைஜெயந்தி கூற, அதை காதிலேயே வாங்காமல் இருந்தாள் யாழினி.
சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.
அதைக் கலைக்கும் விதமாக, “எனக்கு உறவென்று சொல்ல இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களையும் இழக்க நான் தயாராக இல்லம்மா. இப்போதைக்கு கொஞ்சம் தள்ளி இருக்க போறேன்” காரணத்தையே சொல்லாமல் அவரை சமாதானம் செய்தாள்.
ராம்குமாரிடம் பார்வையால் அவள் கெஞ்சிக் கேட்க, “அவளோட விருப்பம்போல செய்யட்டும் அம்மா” ராம்குமார் கோபத்துடன் எழுந்து செல்ல, அவனைத் தடுத்தது யாழினியின் கணீர் குரல்.
“தங்கச்சி புது வீட்டுக்குப் போறேன். எனக்கு தேவையான பொருளெல்லாம் கடையில் வாங்கணும் ராமண்ணா. பிளீஸ் நாளைக்கு ஒருநாள் மட்டும் லீவ் போடுங்க” என்றாள் குறும்புடன்.
அதுவரை இழுத்துப் பிடித்திருந்த பொறுமை காற்றில் பறக்கவிட்டு, “இதுக்கு மட்டும் நாங்க வேணுமா? நான் நாளைக்கு கண்டிப்பா ஹோஸ்பிடல் போகணும்” பிடிவாதத்துடன் கூறிய தமையனைப் பார்த்து பழிப்பு காட்டினாள்.
“அம்மா லீவ் நாட்களில் நான் இங்கே வந்துவிடுவேன். நீங்களும் டைம் கிடைக்கும்போது வீட்டுக்கு வாங்க” வைஜெயந்தியிடம் சமாதானம் செய்தபடி, வீட்டினுள் செல்ல எழுந்தாள்.
அதுவரை அவளைப் பேசவிட்டு அமைதியாக இருந்த சிவசந்திரனின் மீது வைஜெயந்தியின் பார்வை அழுத்தத்துடன் படிந்து மீள, “நீ கம்பெனிக்கு இங்கிருந்தே போ… தனிவீடு எல்லாம் சரிவராது” அவளுக்கு கட்டளையிட, “ஏன்” என்றாள் சின்னவள்.
“இது அமெரிக்கா கிடையாதும்மா. இங்கே பெண்கள் தனியாக இருப்பதைக் கண்டால், சில ஆண்கள் வரம்பு மீறி நடக்கும்போது, அவங்களைத் தடுக்க உன்னால் முடியாது. பிரச்சனை நிறைய வரும் சொன்னால் புரிஞ்சிக்கோ” கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல பொறுமையாக கூறினார் சிவசந்திரன்.
அவரது பேச்சில் இருந்த அக்கறை மனதைத் தொட, “அப்பா எனக்கு எந்த பிரச்சனையும் வராது” யாழினி எழுந்து வீட்டினுள் சென்றுவிட்டாள்.