நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…20

தேஜஸ்வினி மருத்துவமனயில் இருந்து வீட்டிற்கு சென்ற பிறகு நகுலேஷும் ஏதேதோ காரணங்களைக் கூறி வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

அவனாகச் சென்றானா அல்லது கிளப்பி விடப்பட்டானா என்ற பெருத்த சந்தேகத்தை தனக்குள் மறைத்துக் கொண்டு குழப்பமாக அமர்ந்திருந்தாள் மனஷ்வினி.

அவளின் உள்மனம், ‘உனக்கு ஆப்பு வைக்க, சிங்கிளா சிக்க வைச்சுட்டான் உன்ற மச்சான்… தைரியமா இருந்துக்கோ மனுகுட்டி!’ அறிவுறுத்த, ஆனந்தனை நேர்கொண்டு பார்த்தாள்.

இவர்கள் இருவர் மட்டுமே தனித்திருக்கும் வேளைகளில் தேளாகக் கொட்டியே இவளுக்கு வெறுப்பையும் வெறுமையையும் கொடுப்பவன், இன்று ஏனோ அமைதியாக இருந்தான்.

‘ஷப்பா… அதிசயமா வாயை தொறக்காம இருக்கான். இவன் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கண்ணை மூடி தூங்க ஆரம்பிச்சுடுவோம்!’ தனக்குள் எண்ணியவளாக தலையை சாய்த்தாள் மனஷ்வினி.

இத்தனை நாட்கள் கண்ணை மூடியதும் வந்த உறக்கம், இன்று ஏனோ அவளிடம் கண்ணாமூச்சி ஆடியது. ‘நீ வரலைன்னா தூரம் போ! நான் பெர்ஃபார்ம் பண்ணிக்கறேன்!’ தூக்கத்திற்கு சவால் விட்டவளாக கண்களை மூடிக் கொண்டாள்.

சரியாக பதினைந்து நிமிடம் கழித்து, இவள் நூறு வரை எண்ணி முடித்தும் தூக்கம் வரவில்லை. அறைக்குள் சேர், டேபிளை நகர்த்தி வைக்கும் சத்தம், அடுத்தடுத்து ஸ்விட்சுகளை போட்டு விடும் சத்தம், கதவைத் திறந்து பார்க்கும் சத்தம் என பலவற்றை கேட்க முடிந்தது.

அப்போது மென்மையாக அவளது கன்னத்தை தட்டி, “கமான், கெட் அப்!” என்ற குரலைக் கேட்டு, கண்ணை மூடிக்கொண்டே முகம் சுழித்தாள்.

‘பாவி, இவன் வீட்டு நாய்க்குட்டிய கூப்பிடுற மாதிரியே எழுப்புறான்… போடா, நான் முழிக்க மாட்டேன்!’ தன்னை எழுப்பிய ஆனந்தனை மனதிற்குள் திட்டத் தொடங்கி விட்டாள் மனஷ்வினி.

“ஓவர் ஆக்சன் உடம்புக்கு ஒத்துக்காது செல்லாயி! எழுந்திருச்சு உக்காரு!” மாறாத கிண்டலுடன் மீண்டும் எழுப்ப, முறைப்புடன் விழித்துப் பார்த்தாள் மனைவி

“டேப்ளேட் போட்டுட்டேன்… தூக்கம் வருது, டிஸ்டர்ப் பண்ணாதீங்க!” உணர்ச்சியற்ற குரலில் கூறிவிட்டு போர்வையால் முகத்தை மூடிக்கொள்ள, அசரவே இல்லை ஆனந்தன்.

“எதுக்கு இத்தனை ஆன்சர் பண்ற? சொன்னதை செய்யப் பழகு!” என்றவன் அடுத்த நொடியே விடாப்பிடியாக அவளை எழுப்பி உட்கார வைத்தும் விட்டான்.

அவனுக்கு இவளை எழுப்புவது ஒன்றே குறியாக இருக்க, ஒருக்களித்து படுத்திருந்தவளின் முதுகோடு சேர்த்து கைகளையும் தூக்கி அமர வைத்து விட்டிருந்தான்.

இதனை எதிர்பார்த்திராதவளின் முகம் அவனது நெஞ்சிற்குள் மோதிவிட, என்ன நடக்கிறதென்று இவள் அறிவதற்கே நொடிநேரம் பிடித்தது.

‘இத்தனை மூர்க்கத்தனமா என் மீது!’ மனஷ்வினி எண்ணும் பொழுதே, தனது அடுத்த செயலில் அவளை திடுக்கிட வைத்தான்.

மனஷ்வினியின் தோள்பட்டை ஆனந்தனின் வயிற்றோடு உரசி நிற்க, இவளை இறுக்கி பிடித்தவனாக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இவனது இந்தச் செயலில் இருவரின் உடலும் சற்றும் இடைவெளி இல்லாமல் எக்குதப்பாக மிக நன்றாகவே உரசிக் கொண்டது.

அவனது பாவனைகள் எல்லாம் இயந்திரத்தனமாக வன்மையுடன் வெளிப்பட, பெண்ணிற்கு தான் பெரும் அவஸ்தையும் பயத்தையும் உண்டு பண்ணியது.

நிமிடத்தில் நடந்த செயலில் சுதாரித்து விருட்டென்று விலகிப் பார்வையால் எரிக்கத் தொடங்கினாள் மனஷ்வினி. “முறைக்காதே… நீ பிடிமானம் இல்லாம பின்னாடி விழுந்துடுவியோன்னு இறுக்கி பிடிச்சேன்!” தனது செயலுக்கு நியாயம் கூறி அமர்த்தலாகப் பார்த்தான் ஆனந்தன்.

‘அதானே, இவன் செஞ்சது தப்புன்னு எப்போ ஒத்துட்டு இருக்கான்? ஏதாவது ஒரு காரணம் சொல்ல இவனுக்கும் தோதா கிடைக்குது. நான்தான் மடச்சியா பேந்தப்பேந்த முழிச்சுட்டு நிக்கணும்!’ உள்ளுக்குள் சலித்துக் கொண்டே, அடுத்து என்ன என்ற பார்வையில் அவனைப் பார்த்தாள்.

“இங்கே வந்து உக்காரு!” ஆனந்தன் அறையில் இருக்கும் திவானைக் கைகாட்ட, அசையவில்லை அவள்.

“உன்னை கடிச்சு திங்க மாட்டேன்… வம்புக்கு இழுக்க மாட்டேன். இப்ப வந்து உக்கார்றியா?” உத்திரவாதம் கொடுத்த பிறகே அரைகுறை மனதோடு திவானில் வந்து அமர்ந்தாள்.

என்றுமில்லாத திருநாளாக அவளுக்கு அருகிலேயே வந்து அமர்ந்தவன், “இப்ப எதுக்காக உன்னை எழுப்பி இங்கே உக்கார வச்சுருக்கேன்னு கேக்க மாட்டியா?” அமைதியாக கேட்டவனின் பாவனையை இவளால்தான் நம்ப முடியவில்லை.

“வாயத் தொறந்து பதில் சொல்லேன்டி? ஒன்னும் இல்லாததுக்கு எல்லாம் சிலிர்த்துகிட்டு சிங்கப்பெண்ணா பேசுவியே! எங்கே போச்சு அதெல்லாம்?” கடுகடுப்புடன் கேட்க, ‘இந்தா ஆரம்பிச்சுட்டான்ல!’ என தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“வம்புக்கு இழுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, அதைத்தான் செய்றீங்க!” முணுமுணுப்போடு பதில் கூறி முகம் திருப்பிக் கொண்டாள்,

“கேள்வி கேளுன்னு சொன்னது தப்பா?”

“தூங்கினவளையும் எழுப்பி உக்கார வைச்சது தப்பு!”

“ஹப்பாடி… இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. உள்ளே போன டிரக்ஸ் எஃபக்டுல உன் மைன்ட் டைவர்ட் ஆகி, நீ அமைதியான நல்ல பொண்ணா மாறிட்டியோன்னு கவலைப்பட்டேன்! அப்படியெல்லாம் இல்ல… அதே அரைகுறை அல்டாப்பு மனஷ்வினின்னு ப்ரூப் பண்ணிட்டே…” நக்கலடித்தவனின் பேச்சில் இவளுக்கு கோபம் சுருசுருவென்று ஏறிப் போனது.

“என்னடா… நானும் போனப்போகுது அடக்கி வாசிக்கலாம்னு பார்க்கறேன். ஆனா, அடங்காம பேசிட்டே போற… நீ ரொம்ப ஒழுங்கோ! ஒருநாளாவது அடுத்தவங்க மனசை யோசிச்சு பார்த்திருக்கியா? இல்ல… உன்னை நம்பி வந்த என்னைத்தான் நீ நினைச்சு பார்த்திருக்கியா! இதுல நீ, என்னை மட்டம் தட்டிப் பேசுறியா?” மூச்சு வாங்கப் பேசியவள் அவனைக் கடித்து குதறாத குறையாக கேள்வி கேட்டு ஓய்ந்தாள்.

“மரியாதையா பேசுடி! இவ்வளவு லா பாயின்ட் எடுத்து பேசுற அளவுக்கு உனக்கு இங்கே சீன் இல்ல… நான் இப்படி பேசுறது புதுசா! இல்ல… நீ என்னை எதிர்த்து பேசுறது புதுசா? வாயை மூடிட்டு நான் சொல்றதை அமைதியா கேட்டா உனக்குத்தான் நல்லது!”

தான் நினைத்ததை மட்டுமே செயலாக்குபவனைப் பார்க்கப் பார்க்க இவளின் உள்ளக் கொதிப்பு கூடிக்கொண்டே போனது.

மனமும் உடலும் இவனோடு பதிலுக்கு பதில் வார்த்தையாடுவதற்கு இயலாமல் இருக்க, சட்டென்று திவானில் அமர்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினாள்.

“ட்ரஸ்ட் மீ செல்லாயி!” அவளின் கைகளில் அடித்து அவன் சத்தியம் செய்ய, கையை உதறித் தள்ளினாள்.

“பிராமிஸ் பண்றதுலயே தெரியுது, உங்க லட்சணம்!”

“ஏன்? அதுல என்ன குறையை கண்ட நீ!”

“என் பேரை சொல்லி கூப்பிடாம பட்டிக்காடுதனமா கூப்பிட்டே என்னை கிண்டல் பண்றீங்க!”

“எனக்கு எப்படி தோணுதோ அப்படிதான் கூப்பிடுவேன்!”

“இந்த நியாயம் எனக்கும் உண்டுதானே அனகோண்டா!”

“ஏன்டி இப்படி?”

“எனக்கும் எது வாயில வருதோ, அப்படிதான் கூப்பிடுவேன்!”

முடிவில்லா செயலியாக வாக்குவாதம் தொடர்ந்ததே தவிர அது முற்று பெறும் வழியைக் காணோம்!

சண்டை சுவாரஸ்சியத்தில் ஆனந்தன் அவளிடம் சொல்ல வேண்டியதை மறந்து போய்விட, அங்கே அவர்களின் அறையின் கதவு தட்டப்பட்டது.

சத்தம் கேட்டு பேச்சை நிறுத்தியவன் யாரென்று பார்த்து, தனது மறதியை நினைத்து பல்லைக் கடித்துக் கொண்டான்.

“உன்கூட பேச ஆரம்பிச்சாலே எனக்கு எல்லாமே மறந்து தொலைக்குது!” கிசுகிசுப்பாக கடுகடுத்தவன், அங்கு வந்து நின்றவரை மரியாதை நிமித்தமாக வரவேற்று அறைக்குள் அமரவைத்தான்.

“வெல்கம் சர்… மீட் மை வொஃய்ப் மனஷ்வினி!” என அவரிடம் கூறியவன்,

“மனு, இவர்தான் ஏசிபி நாகராஜ்…. நம்ம கேஸை இவர்தான் டீல் பண்றார்!” என அறிமுகம் செய்து வைக்க, கலக்கப் பார்வையோடு அவருக்கு வணக்கம் வைத்தாள் மனஷ்வினி.

“ஜஸ்ட் டூ மினிட்ஸ் சர்!” அவரிடம் கூறிவிட்டு, மனைவியிடம் வந்தவன்,

“சர், உன்னை விசாரிக்க வந்திருக்காரு… தனியா உன்னை ஸ்டேசன், கமிஷனர் ஆபீஸ்னு அலைய வைக்க எனக்கு விருப்பம் இல்லை.

அப்படி போயிட்டு வர்றது பல புரளிய கிளப்பும். வீணா உன் பேரும் அடிபட்டுப் போகும். இங்கே நடந்தா விசிட்டரா மட்டுமே பார்ப்பாங்க… யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

நானும் ஆதியும் ரிக்வஸ்ட் பண்ணி கேட்டதால சர் இங்கே வந்திருக்காரு! என்ன நடந்ததுன்னு ஒளிவு மறைவில்லாம சொல்லு, அது போதும். எந்த பயமோ தயக்கமோ உனக்கு தேவையில்ல!” என்றவனாக அவளது உள்ளங்கையில் தனது கையை அழுத்தி ஆதரவு கொடுத்தான் ஆனந்தன்.

‘இதை சொல்லத்தான் என்கிட்டே இத்தனை அலும்பு பண்ணினானா?’ உள்ளுக்குள் பெருமூச்செறிந்தவளுக்கு உண்மையைக் கூறி விடுவதும் நல்லது என்றே தோன்றியது.

இத்தோடு இன்னல்கள் தீர்ந்தால், தன்னைப் பற்றிய அடுத்த கட்ட யோசனைகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தனக்கு சம்மதமென தலையை அசைக்க, அவள் பேசுவது அலைபேசியில் குரல் வழி வாக்குமூலமாக பதிவு செய்யபட்டது.

மனஷ்வினி அதிகாரி கொடுத்த சிறிய மைக்கினை தனது டாப்ஸில் குத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள். “பிஎஸ்ஜி காலேஜ்ல சீட் கன்ஃபார்ம் பண்ணி பீஸ் கட்டியாச்சுன்னு ஒரே பேச்சை பலதடவை மாத்தி மாத்திப் பேசி, போன மாசம் அம்மா என்னை வம்படியா கோயம்புத்தூர் கூட்டிட்டு போனாங்க…

அங்கே போனதும் ஒரு புது ஆள் வந்து அம்மாகூட பேச்சுக் கொடுத்தாரு… இவர்தான் உன் சின்ன மாமனார், இங்கே சீட் வாங்கி உனக்கு பீஸ் கட்டினது வரை எல்லாமே இவரோட பொறுப்புலதான் நடந்திருக்குன்னு சொல்லி, அம்மா அந்த ஆளை என்கிட்டே அறிமுகப்படுத்தி வச்சாங்க!

கார்டியன் இடத்துல அவர் சைன் போடுறப்போ எதுக்குன்னு கேட்ட என்னையும் அம்மா தடுத்துட்டாங்க… படிப்புக்கே பொறுப்பு எடுத்திருக்கிறவர் சைன் போடக்கூடாதான்னு சொல்லி என்னை பேச விடாம பண்ணிட்டாங்க!

இந்த விஷயம் ஆனந்தன்கிட்டயும் சொல்லிட்டதா சொன்னதால நானும் சாதாரணமா எடுத்துட்டேன்! எங்களுக்குள்ள சகஜமான பேச்சு வார்த்தை இருந்திருந்தா, என்னாலயும் இந்த விஷயத்தை பத்தி இவர்கிட்ட அழுத்தி கேட்டிருக்க முடியும்!” ஆனந்தனை கைகாட்டி கூறியவளின் முகத்தில் அதீத வருத்தத்தின் சாயல் தென்பட்டது.

“எங்களுக்குள்ள பேச்சுவார்த்தை அதிகமா இல்லாத காரணத்தால இவர்கிட்ட கேக்கணும்னு எனக்கும் தோணல!” என்றவள் நொடிநேரம் மூச்செடுத்து விட்டுத் தொடர்ந்தாள்.

“காலேஜ்ல சேர்ந்த நாலுநாள் கழிச்சு கார்டியன்னு அந்த கதிரேசன் ஹாஸ்டலுக்கு வந்து நிக்கவும் எனக்கு ஒன்னும் புரியல… அம்மாக்கு சீரியஸ்னு டாக்டர் எழுதிக் கொடுத்த லெட்டர் அவன் கையில இருந்தது. அந்த நேரம் அக்காக்கு ஃபோன் பண்ணேன், அவ அட்டென்ட் பண்ணல…

அப்பா, தம்பிக்கும் ஃபோன் பண்ணேன்! என்ன காரணமோ அவங்களுக்கும் லைன் போகல… யோசிக்க நேரமில்லை சீக்கிரம் கிளம்பி வான்னு சொன்னதும் அம்மா நினைப்போட பதட்டத்துல நானும் கிளம்பிட்டேன்!

போற வழியில ஹோட்டல்ல சாப்பிட்டு போகலாம்னு அந்த ஆள் கம்பெல் பண்ணினான். நான் வேணாம்னு பிடிவாதமா மறுக்கவும், ஜூஸாவாது குடின்னு ஒரு கடையில இருந்து ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அப்போ நான் காருக்குள்ள உக்காந்திருந்தேன், அவன் மட்டும்தான் இறங்கிப் போய் ஜூஸ் வாங்கிட்டு வந்தான்.

அதை குடிச்ச பிறகு, நீங்க சாப்பிடலையான்னு அந்த ஆளை கேள்வி கேட்டது மட்டும்தான் ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் என்ன நடந்தது, என்னை எங்கே கூட்டிட்டு போனாங்கன்னும் சுத்தமா ஞபாகம் இல்லை.

கண்ணு முழிச்சு பாக்கிற நேரமெல்லாம் ஏதோ ஒரு இருட்டு அறையில இருக்கறது மட்டும் தெரிஞ்சது. தெளிவா என்னால யோசிக்க முடியல… மயக்க மருந்தோ அல்லது ட்ரக்ஸோ எனக்கு கொடுத்திருக்காங்கன்னு என்னால உணர முடிஞ்சது.

ஏதோ ஒரு நேரத்துல எனக்கு முழிப்பு வரும். எழுந்து நிக்க முடியாது. தள்ளட்டமாதான் இருக்கும். அப்படியும் அங்கே இருந்து தப்பிச்சு போயிடணும்னு பலதடவை முயற்சி செஞ்சேன். ஒவ்வொரு தடவையும் நாலஞ்சு ரவுடிங்க வந்து என்னை பிடிச்சு கட்டிப் போட்ருவாங்க…

மனசுக்குள்ள பெரிய பயம்… இவங்க என்னை இத்தனை நாளா சும்மா விட்டு வைச்சுருக்காங்களா, இல்ல இவங்களோட தேவைக்கு என்னை சிதைச்சுட்டாங்களா, இல்லையாங்கிற குழப்பம் என்னை மயக்கத்துலயும் அலைகழிச்சுட்டே இருந்தது!” என்றவள் தாளமுடியாமல் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகையை பார்க்க மனமில்லாதவனாக விரைந்து அவளுக்கு தண்ணீர் அருந்த வைத்து, தோளில் சாய்த்து ஆறுதல் கூறத் தொடங்கினான் ஆனந்தன்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமே நடக்கலடி! நீ மனசுல வீணா எதையும் போட்டு குழப்பிக்காதே!” கனிவுடன் கூறி தட்டிக் கொடுக்க, அந்த அன்பில் கரைந்தவளின் அழுகை இன்னும் தீவிரமடைந்தது.

“கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும் ஆனந்தன்… நான் சின்னதா ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வர்றேன்!” கூறிவிட்டு, வந்திருந்த காவல் அதிகாரியும் வெளியில் சென்று விட்டார்.

“போதும்டி… உனக்கு ஒன்னுமே ஆகல! மெடிக்கல் படிக்கிற உனக்கு, அந்த ஹெல்த் கண்டிசன் எப்படின்னு தெரியும் தானே! பின்ன எதுக்கு இத்தனை அழுகை? ஷியர்-அப் மை கேர்ள்!” எனக் கூறி அவளை தட்டிக் கொடுக்க, அப்போதும் அழுதவளாய் ஆறுதலுக்கு அவனது மார்பில் ஒன்றிக் கொண்டாள் மனஷ்வினி.

“அப்படி ஏதாவது நடந்திருந்தா என்னை நானே குத்தி கிழிச்சுட்டு செத்துப் போயிருப்பேன்!” அவன் மீது சாய்ந்து கொண்டே விசும்பலோடு கூறி முடித்தாள்.

இதைக் கேட்டவனுக்கும் உள்ளுக்குள் மெல்லிய அதிர்ச்சி தோன்றி அவனை அசைத்துப் பார்த்தது. ‘பேச்சில் இருக்கும் தைரியத்தை செயலில் காண்பிக்க மாட்டார்களா இந்தப் பெண்கள்? இன்னும் இவர்களை உசுப்பி விட பாரதிகள் வந்தேதான் ஆகவேண்டுமா? அதுவரை இவர்களின் கூட்டுக்குள் இருந்து வெளியில் வர மாட்டார்கள் போல!’ உள்ளுக்குள் வேதனையுடன் அலுத்துக் கொண்டான் ஆனந்தன்.

“இவ்வளவு சென்சிடிவா இருக்க நினைக்கிற நேரத்துல அங்கே இருக்கிறவனுங்களை குத்தி கிழிச்சு தொங்கப் போட யோசிச்சு இருக்கணும். எப்போ இதுக்கெல்லாம் நீங்க துணிஞ்சு இறங்கப் போறீங்க? எல்லா நேரத்துலயும் யாராவது ஒருத்தர் காப்பாத்த வருவாங்கன்னு எதிர்பார்க்க கூடாது.” அறிவுரையாக கூறியவனின் மார்பில் சட்டென்று அடித்தாள் மனஷ்வினி.

“நீங்க, என் இடத்துல இருந்து பார்த்திருந்தா என் நிலைமை தெரிஞ்சிருக்கும். நிதானம் இல்லாத நேரத்துல யாரை எப்படின்னு பார்த்து நான் எதிர்த்து நிக்க முடியும்? என் பக்கம் யோசிச்சு பேச டிரை பண்ணுங்க மச்சான்!” கடுப்புடன் கூற, அவளின் பேச்சில் தன்னை மறந்து சிரித்தான் ஆனந்தன்.

“என் கஷ்டம் உங்களுக்கு அத்தனை சந்தோசத்தை கொடுக்குதா?” வெகுண்டு கேட்டவள் இன்னும் அழுதுகொண்டே சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

தன்னை மறந்த செயலில் கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருப்பதும் அவளுக்கு சுத்தமாக மறந்து போயிற்று!

“உன்னோட கோழைத்தனத்துக்கு நீ சொன்ன காரணத்தை கேட்டு சிரிப்பு தன்னால வந்துடுச்சு! என்ன சொன்னாலும் உன்னை நீ மாத்திக்கவா போற? அதே சோம்பேறியாவே இரு!”

“அட போய்யா… அந்த நேரம் நான் பட்டபாடு எனக்குதானே தெரியும்!”

“இப்படி உக்காந்து பேசியே என்னை சூடாக்குற வேலைய ரொம்ப நல்லா பண்றடி!” கூறியவன் ஜாடையாக இவள் மார்பில் ஒன்றிக் கொண்டதைப் பார்க்க, சட்டென்று தன்னிலையை ஆராய்ந்து கொண்டு விலகி அமர்ந்தாள் மனஷ்வினி

“நான் இதை சொல்லல செல்லாயி! உன் கண்ணீர் பட்டு என் டி-சர்ட் சூடாகி, என்னையும் ஹாட்-பாய் ஆக்கிடுச்சுன்னு சொல்ல வந்தேன். கொஞ்சநேரம் போனா கசக்கி பிழிஞ்சு தண்ணி எடுக்கலாம்!” என சிரிக்காமல் வாரிவிட்டவன்,

“நீ வா… இன்னும் கொஞ்சம் அழுதுட்டு, மிச்சம் மீதி எல்லாம் சொல்வியாம்!” கேலி செய்தபடி அவளை தனக்குள் சாய்த்துக் கொள்ள இம்முறை சிலிர்த்துக் கொண்டு விலகினாள் மனஷ்வினி.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் இங்க இருந்தே சொல்றேன்!” தள்ளி அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட நேரத்தில், வெளியே சென்ற அதிகாரியும் வந்து சேர்ந்தார்.

“இப்ப ஓகேயா…. ஆரம்பிக்கலாமா மனஷ்வினி?” அவர் கேட்க, சம்மதமாக தலையசைத்து மேற்கொண்டு சொல்லத் தொடங்கினாள்.

“என் ரெண்டு கையையும் எந்த நேரமும் கட்டிப் போட்டு இருந்ததால முழிப்பு இருக்கும்போது யார் பக்கத்துல வந்தாலும் எட்டி உதைச்சே தூரமா போன்னு விரட்டி விடுவேன்! அதை தாங்கிக்க முடியாமதான் அன்னைக்கு ஒருநாள் என் காலுக்கு சூடு வச்சுட்டாங்க போல… அந்த வலியை சொல்லி கத்தவும் எனக்கு தெளிவில்ல!

ரெண்டு காலும் ரணமா இருக்குன்னு புத்திக்கு தெரிஞ்சது. அப்படி சூடுபட்ட பிறகு என்னோட பயம் அதிகமாயிடுச்சு… யார் வந்தாலும் குத்திக் கொன்னுட்டு என்னை சேஃப் பண்ணிக்கணும்ங்கிற முடிவுல இருந்தேன்!

நான் நிதானமில்லாம இருக்கற நேரத்துல, வந்தது இவர்தான்னு தெரியாம மிரட்டுறேன்னு ஆர்பாட்டம் பண்ணி, அங்கே இருக்கற கத்தியால கீறி என் கையை நானே காயப்படுத்திட்டேன்!

அதுக்கு அப்புறம் தெளிவா நான் கண்ணு முழிச்சு பார்க்கும்போது என் அக்கா பக்கத்துல நான் இருந்தேன். அதுக்கப்புறம் தான் எனக்குள்ள இருந்த பயம் விலகிப் போச்சு! நான் அமைதியா இருக்க ஆரம்பிச்சேன்!” என்றவள் கூறி முடிக்க பதிவு செய்வதும் நிறுத்தப்பட்டது.

“குட் மனஷ்வினி…. எந்த தயக்கமும் இல்லாம எல்லாத்தையும் சொல்லிட்டீங்க! இனி மேற்கொண்டு நாங்க பார்த்துக்கறோம். எல்லாம் முடிச்சிட்டு கால் பண்றேன் ஆனந்தன்… பாய்!” அதிகாரி கிளம்பிச் செல்ல, இருவருக்குள்ளும் கடுமையான அமைதி நிலவியது.

சற்று நேரங்கழித்து, “அடுத்து என்ன? தூங்கலாம் தானே!” என கேட்டவனை, அமைதியாக அழுத்தமாகப் பார்த்தாள் மனஷ்வினி.

“எனக்கு எப்போ டிஸ்சார்ஜ் சொல்லி இருக்காங்க?”

“மே பீ… வித் இன் டூ டேய்ஸ்ல இருக்கலாம்னு நினைக்கிறேன்!”

“நான் நேரா எங்க வீட்டுக்கே போயிடுறேன். அங்கே… உங்க வீட்டுக்கு நான் வரல!” உறுதியான முடிவாகக் கூறினாள்.

இவளது இந்த பதிலை ஆனந்தன் எதிர்பார்த்துதான் இருந்தான். ஏற்கனவே தன்னுடன் இருக்க விருப்பமில்லாமல் தானே படிப்பைக் காரணம் காட்டி இவள் சென்றது. அதனால் மனைவியின் முடிவில் இவன் அதிரவில்லை. ஏன் எதற்கு என்றும் விளக்கம் கேட்கவில்லை.

மாறாக அவளது முடிவிற்கு ஆதரவு தெரிவிப்பவனைப் போல, “நான் தடுக்கல… நீதான் உனக்கான நியாயத்தை சொல்லிட்டு உங்கப்பாவை கூட்டிட்டு உங்க வீட்டுக்கு போகணும். அவரும் உன் தம்பியும் நம்ம வீட்டுலதான் இருக்காங்க, தெரியும்தானே உனக்கு?” அமைதியாகக் கேட்க, ஆமென்று தலையசைத்தாள்.

“என்ன காரணம் சொல்லப்போற?”

“ஏற்கனவே இருக்கிறதை தான் சொல்லப் போறேன்! அதோட கிட்னாப் அதுஇதுன்னு என்னோட ஃபியூச்சருக்கே பிளாக் மார்க்கா என்னென்னவோ நடந்து போயிடுச்சு! அதையெல்லாம் மறக்கணும், மாறணும். நிம்மதியா எங்கேயாவது போயி எனக்கான ஒரு வேலையைத் தேடிட்டு வாழப்போறேன்!

கல்யாணம், குடும்பம், கௌரவம்னு எதுவும் எனக்கு தடையா இருக்கிறதை நான் விரும்பல… எல்லாமே அனுபவிச்ச வரைக்கும் போதும்!” அழுத்தமாக கரகரப்புடன் சொல்லி முடித்தவளின் குரலில் ஆற்றாமையும் வெறுமையும் மிஞ்சி நிற்க, ‘உன்னிஷ்டம்!’ என்பதைப் போல தோள்களைக் குலுக்கிக் கொண்டு அமைதியாக உறங்க ஆரம்பித்தான் ஆனந்தன்.

மறுநாள் காலையில் மனஷ்வினி எடுத்த முடிவினை ஆனந்தன், ஆதியிடம் தெரிவிக்க, “அவளுமா இந்த முடிவு எடுத்திருக்கா?” என அதிர்ந்தவன் தேஜுவின் முடிவினை தம்பியிடம் கூறி மேலும் குழம்பிப் போனான்.

“ஷப்பா… இந்த கல்யாண வாழ்க்கை, குடும்பம், ரிலேஷன் எல்லாம் போதும்னு தோணுது ஆதி! இந்த பொண்ணுங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து நம்ம நிம்மதியே போச்சு! ஒரேடியா பேசி முடிச்சு, தலை முழுகிடுவோம்!” பெண்களின் முடிவிற்கு ஆதரவு தெரிவிப்பவனாக தனது விருப்பத்தையும் முன்வைத்தான் ஆனந்தன்.

 ***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!