Kalangalil aval vasantham 27

Kalangalil aval vasantham 27

ஹாலிலிருந்த அந்த பழமை மாறாத பெரிய கடிகாரம் எட்டு முறை அடித்து, ஓய்ந்தது. மாடியிலிருந்து தெளிவான முகத்தோடு இறங்கி வந்து கொண்டிருந்தான் ஷான். சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாதேஸ்வரன் நிமிர்ந்து அவனைப் பார்த்தார்.

படிய வாரியிருந்தாலும் அடர்த்தியாக நெற்றியை மறைத்த சிகை, கிளீன் ஷேவ் செய்யப்பட்ட கன்னம், நிமிர்ந்த மார்பு, வெளிர் நீல நிற அரைக்கை சட்டை, சுருக்கம் கொஞ்சமும் இல்லாத அடர் நிற பேன்ட் என்று ரேமன்ட்ஸ் மாடலாக, இடக்கையில் ரோலக்ஸ் வாட்சை கட்டியபடி இறங்கி வந்து கொண்டிருந்தவனை கண்ணெடுக்காமல் பார்த்தார் மாதேஸ்வரன்.

இந்த ஷானை பார்த்து எத்தனை நாட்களாகி விட்டது? பழைய உற்சாகத்தோடு வந்தவனை பார்க்கையில் மனம் நிறைந்தது.

முந்தைய தினம் ஷான் வீடு திரும்ப வெகு நேரமாகி இருந்தது. வைபவ்வை உறங்க வைக்க வைஷ்ணவி முன்னரே கிளம்பி சென்றிருந்தாள். மாதேஸ்வரன் தான் மகன் வீடு திரும்பும் வரை விழித்திருந்தார். ப்ரீத்தி முன்னரே அழைத்து ஷான் வருவதை தெரிவித்திருந்தாள்.

“அப்பா… இங்க கொஞ்சம் வேலை இழுத்துட்டு இருக்கு. ஆனா கண்டிப்பா பாஸ் வந்துருவாங்கப்பா. நீங்க சாப்ட்டுட்டு தூங்குங்க…” என்று கூறியிருந்தாள். இப்போதெல்லாம் இது பழக்கமாகி இருந்தது. வேலை இல்லையென்றால் கட்டாயம் வீட்டுக்கு போக வேண்டும் என்பதை பழக்கமாக்கி இருந்தான் ஷான். அப்படி வரும் பொழுதெல்லாம் ப்ரீத்தி அழைத்து தெரிவித்து விடுவாள்.

“ஆஃபீஸ்ல வேலை முடிஞ்சுதா ப்ரீத்திம்மா?”

“அங்க வேலை ஆகிட்டு தான்ப்பா இருக்கு. வேற வேலையும் போயிட்டு இருக்குப்பா. அங்க இருக்கோம்.”

“சரிம்மா. சாப்ட்டுட்டீங்களா?”

“இனிமே தான்ப்பா…”

“இங்க ரெடி பண்ண சொல்லிரட்டா ப்ரீத்திம்மா…” என்றதும் யோசித்தவள், அருகிலிருந்த ஷானிடம்,

“டிபன் ரெடி பண்றதான்னு அப்பா கேக்கறாங்க ஷான்…” என்று கேட்க,

“உனக்கு இனிமே ஹாஸ்டல் போக முடியாதே.” என்று யோசித்தான். இதுவரை இரவு முழுவதும் வேலை பார்த்தபோதும் கூட அலுவலக வாசம் அல்லது ஹாரிங்க்டன் தான். இப்போது என்ன செய்வது என்று யோசித்தான்.

“ஆஃபீஸ்ல தான் ரூம் இருக்கே. எனக்கு அது போதும்…” என்றதும்,

“தனியா இருப்பியா? பேய் வந்து உன்னை கடிச்சு வெச்சுரும் பாப்பா…” என்று சிரிக்க,

“உனக்கு பேயே பெட்டர் மேன். அதுகூட கொஞ்சம் பாவம் பாக்கும்.” என்று பதிலுக்கு சிரித்தாள்.

“அப்படீன்னா வேற வழியே இல்ல. என் கூடவே வா. வீட்ல தங்கிக்க.” என்று கூற, அவசரமாக மறுத்தாள்.

“ஆளை விடுங்க தலைவரே. இருபத்தி நாலு மணி நேரமும் உங்க மூஞ்சியவே பார்த்துட்டு இருக்க முடியாது. நான் என்ன உங்க கொத்தடிமையா?” என்று அவள் கூறியதை கேட்ட மாதேஸ்வரன் சிரித்தார்.

இருவரும் இப்படித்தான் என்பதை பார்த்து பழகி இருந்தார். டாம் அன்ட் ஜெர்ரியாக அடித்துக் கொண்டாலும், இருவரது ஒற்றுமையும் வேறு விதம்!

“ஒழுங்கா அங்க வர்றியா? இல்லன்னா உங்க அம்மாவுக்கு கூப்பிட்டு உங்க பொண்ணு யார் கூடவோ சுத்திட்டு இருக்கான்னு வத்தி வைக்கட்டா?” என்று சிரிக்காமல் வாரினான்.

“அடப்பாவி… பழிகாரா… வீணா போனவனே, நான் யார் கூட சுத்திட்டு இருக்கேன்?”

“அப்படீன்னா சரண் டார்லிங் யாராம்?” என்று அவன் கேட்டது மாதேஸ்வரனுக்கு கேட்டுவிட, அதிர்ந்தார். அவர் ஏதேதோ கற்பனையில் இருக்க, அந்த கற்பனைகள் எல்லாம் வெறும் கற்பனையாகவே போய் விடுமோ என்று ஒரு நொடி தவித்து விட்டார்.

“சரணா? அது யார் ப்ரீத்திம்மா?” அவரது அதிர்ச்சியை உணர்ந்தவள்,

“அப்பா… இந்த பக்கி சொல்றதை நம்பாதீங்க. சரண் சிங்க்கு ரிட்டையராகற வயசு. ஏடிஜிபி ய சொல்றார் ப்பா…” அவசரமாக கூற, மாதேஸ்வரனுக்கு அப்போதுதான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

“இருக்கட்டும் ம்மா. ஷான் தான் சொல்றான்ல. இதுக்கும் மேல பொண்ணை தனியால்லாம் அனுப்பிட்டு இருக்க முடியாது ப்ரீத்திம்மா. அவனுக்குத்தான் விவஸ்த்தை இல்ல. பொம்பிளை பிள்ளைய இவ்வளவு நேரம் வரைக்கும் வெச்சுட்டு என்ன பண்றானோ? இனிமே இவ்வளவு நேரம் உன்னை இருக்க வைக்கக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடறேன். நீயும் தம்பி கூடவே இங்க வந்துடு. ரொம்ப லேட் ஆகிடுச்சு.”

“இல்லப்பா. ட்ரெஸ் இல்ல. எனக்கு கன்வீனியன்ட்டா இருக்காது.”

“பரவால்ல ப்ரீத்திம்மா. பழகிக்க. உனக்கில்லாம என்ன இருக்கு? உனக்கு ஒரு ரூமை கிளீன் பண்ணி வைக்க சொல்றேன். அப்பப்ப நீ யூஸ் பண்ணிக்கற மாதிரி…” என்று அவர் கூற, ப்ரீத்திக்கு நெகிழ்வாக இருந்தது.

“சரிப்பா…” அதற்கும் மேல் மறுத்துப் பேச முடியவில்லை. நிமிர்ந்து ஷானை பார்த்தவளின் கண்களில் லேசான ஈரம். அவனது முகத்தில் புன்னகை!

“ரெண்டு பேருக்கும் டிபன் ரெடி பண்ண சொல்லிடறேன். வந்துடுங்க…” என்று கூற,

“சரிப்பா…” என்று தலையாட்டினாள்.

இரவு இருவரும் வீடு திரும்பிய பின்னும் கூட வெகு பேசிக் கொண்டிருந்தார் பிரீத்தியிடம், உடன் ஷானுமிருக்க!

அவளது குடும்பத்தைப் பற்றி, அவளது பொறுப்புகளை பற்றி, அவளது பள்ளி, கல்லூரிகளை பற்றி, அவளது வேலையை பற்றி என பேசுவதற்கு நிறைய இருந்தது.

ஒவ்வொன்றுக்கும் அவளது காலை வாரிக்கொண்டிருந்த தன் மகனையும் கவனித்துக் கொண்டார். அவன் காலை வாரும் போதெல்லாம் திருப்பிக் கொடுக்கும் ப்ரீத்தியையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

“உன்னோட லட்சியம் என்ன ப்ரீத்திம்மா?” பேச்சுவாக்கில் கேட்டவரை புன்னகையோடு பார்த்தவள்,

“பெரிய பெரிய பில்டிங்க்ஸ் கட்டனும் ப்பா. ரொம்ப ஸ்பெஷலா. துபாய்ன்னா புர்ஜ் கலீபா மாதிரி, சென்னைன்னா அதுக்கு அடையாளமா ஜுபிட்டர் பில்டிங்க காட்டனும். அதுதான் என்னோட பெரிய பெரிய லட்சியம். அதுக்கு இன்னும் எவ்வளவு நாளாகும்ன்னு தெரியல.” அவளது கண்களில் கனவு.

உண்மையிலேயே அவளது மிகமிகப் பெரிய கனவு அது. அவளும் ஷானும் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கும் கனவும் அதுதான்.

“சீக்கிரம் பண்ணிடலாம். உனக்கு என்ன வேணுமோ அப்படி பண்ணு ப்ரீத்திம்மா…” என்று அலட்டிக் கொள்ளாமல் அவளது கனவுக்கான கடவுச்சீட்டை அவள் வசமளித்தார் மாதேஸ்வரன்.

அந்த நிமிடத்தை அவளால் நம்ப முடியவில்லை.

“என்னப்பா சொல்றீங்க?” ஆனந்தத்தில் திரும்பவும் கேட்க,

“உனக்கு என்ன தோணுதோ அதை எல்லாம் செய் ப்ரீத்திம்மா. அதோட ஆக்ஷன் பிளானை மட்டும் குடு. மத்ததை பார்த்துக்கலாம்.” என்று தெளிவாகக் கூறினார்.

“அப்பா… நிஜமாவா?” என்றவளின் குரலில் அத்தனை சந்தோஷம்.

“அதை என்ன மாதிரி பண்ணலாம்ன்னு நினைக்கற ப்ரீத்தி?” என்று அவர் கேட்க,

“ட்ரேட் செண்டர் மாதிரி பண்ணலாம்ன்னு ப்ளான் ப்பா…” ஷான் முந்திக் கொண்டு கூறினான்.

“உன்கிட்ட கேட்டேனா? பொம்பளை பிள்ளைய கிரெடிட் எடுத்துக்க விட மாட்டியே…” என்று சிரித்தபடி அவர் வார, அவன் கையை தூக்கி கொண்டான்.

“இனிமே இந்த விஷயத்துல தலையிட்டா ஏன்டான்னு கேளுங்க…” என்று அவன் சிரிக்க, கூடவே ப்ரீத்தியும் சிரித்தாள்.

“எனக்கு கனவு காண மட்டும் தான் ப்பா தெரியும். அதை ஷான் தான் நிஜமாக்கி தர்றது. அவரோட ஹெல்ப் இல்லாம நான் கனவு காண கூட ட்ரை பண்ணதில்லப்பா…” என்றவளின் குரலில் உண்மை மட்டுமே!

அருகே அமர்ந்திருந்தவன், அவளது தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டான்.

அவர்கள் இருவரையும் பார்த்தவருக்கு உள்ளுக்குள் சந்தோஷம் ஊற்றெடுத்தது. இது நட்போ அல்லது அதையும் தாண்டிய உறவோ, அவரை பொறுத்தவரை அது மிக மிக அழகாக இருந்தது. எதுவாக இருந்தாலும் அதை அங்கீகரிக்க அவர் தயார் தான்!

“ஓகே ப்ரீத்திம்மா. உனக்கென்ன தோணினாலும் என்கிட்ட வந்து பேசு. நாம பண்ணலாம்.”

“வாவ்… தேங்க்ஸ் ப்பா…” குதூகலித்தாள் ப்ரீத்தி.

“அதை தவிர உனக்கு அட்மின்ல விருப்பம் இல்லையா ப்ரீத்திம்மா?”

“அட்மினா?” அவளது முகம் விளக்கெண்ணை குடித்தது போல ஆகியது. “இவ்வளவு நாள்ல நான் என்னை பத்தி தெரிஞ்சுகிட்டது என்னன்னா, எனக்கு சுட்டு போட்டாலும் அக்கௌண்ட்ஸ் வராதுங்கறதுதான்ப்பா. ஷான் எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தாலும் எனக்கது ஏறாது. அதை விட, கல்லு மண்ணை தான் ரொம்ப லவ் பண்றேன். அதை தான் என்னால ரசிக்க முடியுது… இது கொஞ்சம் கஷ்டம் ப்பா…” என்று கூற, அதை ஷானும் ஆமோதித்தான்.

“ஆமாப்பா. எங்க போனாலும் கொஞ்சம் வித்தியாசமா எலிவேஷன் இருந்தா போதும், சாப்பாடே வேண்டாம்… அப்படி ஒரு பைத்தியம்…” என்று அவளது மண்டையில் தட்ட,

“தட்ஸ் மை பேஷன்…” உண்மையில் ரசித்துக் கூறினாள்.

“பேசாம ஜுபிடர் கன்ஸ்ட்ரக்ஷன் பொறுப்பை ப்ரீத்தி கிட்ட விட்டுட்டு, நீ ஹெட் ஆஃபீஸ் வந்துடேன் ஷான்…” என்று ஷானை பார்த்து மாதேஸ்வரன் கேட்க, ப்ரீத்தி அதிர்ந்து பார்த்தாள்.

“இல்லப்பா. ஜூனியர் கைல அட்மின் போனா சரியா இருக்காது. சீனியர்ஸ் அவங்க மரியாதை போச்சுன்னு நினைப்பாங்க. ப்ரீத்திய எல்லா டிப்பார்ட்மெண்ட்லையும் ட்ரைன் பண்ணிட்டு தான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.” ஷான் பொறுப்பாக கூற, அதை ஆமோதித்தாள் ப்ரீத்தி.

“இப்பவே நான் பைபாஸ் பண்றதா நிறைய பேருக்கு வருத்தமிருக்கு ப்பா. அது கண்டிப்பா சரியா இருக்காது. இப்ப போயிட்டு இருக்க பிரச்சனை முடியட்டும். கொஞ்சம் ரீவாம்ப் பண்ணிட்டு என்னோட சைட்ட பார்க்க போய்டுவேன். அப்பவும் ஏசில உட்கார்ந்து வேலை பார்க்கறது எல்லாம் எனக்கு சரியா வராதுப்பா. வெயில்ல காயனும்…” என்று அவள் சிரிக்க,

“நல்ல பொண்ணு போ. பையனா பொறக்க வேண்டியவன்…” என்று மாதேஸ்வரன் சிரித்தார்.

“இப்ப மட்டும் இவ பொண்ணுன்னு யார் சொன்னது?” என்று அவளது மண்டையை தட்டி சிரித்தவன், “நைட் எவ்வளவு நேரமானாலும், நான் ஆஃபீஸ்ல இருக்க வரைக்கும் கூடவே இருந்து வேலைய முடிச்சுட்டு தான் போவா. எதாவது பொண்ணு இந்த மாதிரி பண்ணுமா?

நான் இதுவரைக்கும் டிரைவர்ன்னு தனியா யூஸ் பண்ணதில்ல. முக்கால்வாசி நேரம் இவ தான் டிரைவ் பண்ணுவா. இல்லைன்னா நான். நைட் ரெண்டு மணிக்கு ஃபோன் பண்ணி எழுப்பி வண்டிய எடுன்னு சொன்னா கூட திட்டிகிட்டேவாவது வண்டிய எடுப்பா. எந்த பொண்ணாவது முகம் சுளிக்காம இதை பண்ணிடுமா?

அநியாயத்துக்கு தைரியம். ஆனா குருட்டு தைரியம் கிடையாதுப்பா, தெளிவா அடிப்பா. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அதை பாக்க மாட்டா. சொன்னா சொன்னதுதான். இந்த தைரியத்தை நான் இதுவரைக்கும் வெளிய யார்கிட்டயும் பார்த்ததே இல்ல. நான் கோபத்துல பிஸ்டலை நீட்டினப்ப கூட அசரலையே. சுடு பார்க்கலாம்ன்னு நின்னா பாருங்க…!

வெயில்ல காயறது, மழைல நனையறது, எந்த வேலையா இருந்தாலும் அதை முடிச்சே ஆகணும்ன்னு பிடிவாதம் பண்றது, எல்லாம் அவ்வளவு ஈசியா யாருக்கும் வராது. அதான் எதுவா இருந்தாலும் இந்த பையனையும் கூடவே வெச்சுட்டு சுத்திட்டு இருக்கேன்…”

நீளமாக கூறி முடித்த ஷானை மாதேஸ்வரன் எவ்வளவு ஆச்சரியமாக பார்த்தாரோ, அதை காட்டிலும் வியப்பாக பார்த்தாள் ப்ரீத்தி.

“நீளமா சொல்லிட்ட ஷான். ஆனா இது அத்தனைக்கும் காரணம் நீ மட்டும் தான். அது தெரியுமா உனக்கு? வெறும் களிமண்ணா, படிப்ப முடிச்சுட்டு உன் கிட்ட வந்தேன். நீ தான் என்னை தட்டி தட்டி உருவமாக்கிட்டு இருக்க…” என்று நிறுத்தியவள், “இதை நான் சும்மா சொல்லல. இட்ஸ் ப்ரம் பாட்டம் ஆப் மை ஹார்ட்…” என்று கூறியவள்,

மாதேஸ்வரனை பார்த்து, “நான் என்னை நம்பறதை விட ஷானை நம்பறேன்ப்பா. ஹீ இஸ் மை பெஸ்ட் ப்ரென்ட், பிலாசபர், கைட் அண்ட் ரோல் மாடல்… லேட் நைட்ல கூட வொர்க் பண்றேன்னா அதுக்கு காரணம் அவன் தான். அவ்வளவு டீசன்ட்.” என்றவள், சற்று நிறுத்தி, “இப்படிப்பட்டவன் எப்படி ஸ்வேதா கிட்ட சிக்கினான்ன்னு மட்டும் தான் எனக்கு தெரியவே இல்ல. அவ்ளோ ஈஸியா சிக்கற ஆளே இல்ல இவன்…” என்று கூற,

மாதேஸ்வரன் சங்கடமாக ஷானை பார்த்தார்.

“அதை விடு. பேசாத. எனக்கு கோபம் தான் வரும்.” என்றவன், “நான் கேட்டப்ப நீ அக்செப்ட் பண்ணிருந்தா நான் ஏன் அவ கிட்ட சிக்கிருக்க போறேன்?” என்று கடுப்படிக்க, ப்ரீத்தி அதிர்ந்த பார்வை பார்த்தாள், மாதேஸ்வரனையும், ‘இதென்னா, தந்தை இருக்கும் போதே இப்படி சொல்லிவிட்டான்?’ என்று பார்த்தபடி.

அவரோ சிரித்தபடி, “இதென்னா புதுசா இருக்கு தம்பி?” என்று கேட்க, லேசாக நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“ஆமாப்பா. ஒன்னரை வருஷத்துக்கு முன்னாடியே இந்த பக்கிகிட்ட ப்ரொபோஸ் பண்ணேன். முடியாதுன்னு சொல்லிட்டா பிசாசு.” சாதாரணமாக கூறி விட்டான்.

மாதேஸ்வரன் சிரிப்பை அடக்கியபடி, “ஏன் ப்ரீத்திம்மா முடியாதுன்னு சொல்லிட்டியாம்?” மகனுக்காக நியாயம் கேட்டார்.

“அப்ப எனக்கு அப்படி தோணவே இல்லப்பா…” பாவமாக கூறியவள், “ஆனா இப்ப இவன் முடியாதுன்னு சொல்லிட்டான் .” என்று உண்மையை கூறிவிட்டாள்.

இதென்ன இருவரும் இப்படி இருக்கிறார்கள் என்று மாதேஸ்வரனுக்கு தோன்றியதுதான் உண்மை!

“இப்ப ஏன் தம்பி வேண்டாம்ன?” என்று ப்ரீத்திக்காக அவனிடம் நியாயம் கேட்க,

“முடியாதுன்னு சொல்லலப்பா. இவ ஒன்னும் உருகி உருகி என்னை லவ் பண்ணி எல்லாம் சொல்லல. ‘நீ ஓகே சொல்லிருந்தா எனக்கு இந்த பிரச்சனை வந்திருக்குமா’ன்னு கேட்டுட்டேனாம். அதனால இப்ப ஓகே சொல்றாப்பா. அதான், ‘நீ நிஜமாவே லவ் பண்ணா சொல்லு’ன்னு சொல்லிருக்கேன்.” என்று கூற, அதுவும் நியாயம் தானே என்று தோன்றியது அவருக்கு.

“சரி ப்ரீத்திம்மா. உனக்கு நிஜமாவே தம்பி மேல லவ் வந்தா சொல்லிடுவியாம்…” என்று அவளிடம் கூற, ப்ரீத்தி தான் தலையிலடித்துக் கொண்டாள்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா. லவ் பண்றேன்னு எங்க வீட்ல தூக்கிட்டு போனாலே எனக்கு எங்கம்மா செருப்படி கொடுப்பாங்க. நீங்க என்னன்னா இவ்வளவு கேஷுவலா கேட்டுட்டு இருக்கீங்க?”

“ஸ்ரீமதி தான் ஒரே வார்த்தைல முடிப்பா ப்ரீத்திம்மா. என் பையன் தப்பு பண்ண மாட்டான்ன்னு. இப்ப அதே வார்த்தைய நான் உன்கிட்ட சொல்றேன். ஷான் தப்பு பண்ண மாட்டான். எனக்கென்னவோ உன்னை பார்க்கும் போதெல்லாம் எங்க ஸ்ரீமதியை பார்க்கற மாதிரி இருக்கு. அதான் உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு ப்ரீத்திம்மா.” என்றவர், மௌனமாகி விட்டார்.

அவர் அருகில் அமர்ந்து கொண்ட ஷான், “சாரி ப்பா…” என்று அவர் கையைப் பிடித்துக் கொள்ள, அவர் கண்களில் லேசான ஈரம்.

அவரால் பதில் பேச முடியவில்லை.

‘அப்பா… அப்பா…’ என்ற இந்த வார்த்தையை கேட்க முடியாமல் எத்தனை நாட்கள் கண்ணீரில் கரைந்திருக்கிறார். பழைய நாட்களை போல உடன் அமர்ந்து இப்படி சிரிப்பும் கிண்டலுமாக பேச முடியவில்லையே எத்தனை நாட்கள் மனம் குமைந்திருப்பார். மகனது ஒட்டாத போக்கை கண்டு மனம் வருந்தாத நாள் இல்லையே!

“இட்ஸ் ஓகே ஷான். ரெண்டு பேரும் போய் படுங்க. நான் சரியாகிடுவேன்…” என்று கூறினார். ப்ரீத்திக்காக கீழ் தளத்திலேயே ஒரு அறையை சுத்தம் செய்ய சொல்லியிருந்தார்.

“நான் பார்த்துக்கறேன்ப்பா. கவலைப் படாதீங்க…” என்று கூறிய மகனை பார்த்து பரிவாகப் புன்னகைத்தவர், அவனது தலையை தடவிக் கொடுக்க, அவரது முகம் பெரும் திருப்தியிலிருந்தது. அதில் தனது மகனைக் மீட்டெடுத்த மகிழ்ச்சியிருந்தது.

கண்ணில் மெல்லிய நீர்த்திரையோடு பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தியை சிறு புன்னகையோடு ஏறிட்டான் ஷான்.

பதிலுக்கு ஈர இனிப்புப் புன்னகை பூத்தாள்!

அவளது தலையை பிடித்து ஆட்டியவன், “சரி போய் படு ப்ரீத்தி. நாளைக்கு ஹெக்டிக் ப்ளான்ஸ் இருக்கு. ஒன்பது மணிக்கெல்லாம் ஷார்ப்பா கிளம்பினா தான் கரெக்டா இருக்கும்.” என்று கூற,

“ஓகே பாஸ்…” என்றவள், மாதேஸ்வரனிடமும் கூறிவிட்டு தனதறையை நோக்கிப் போக,

“ப்ரீத்திக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுக்க ஷான்.” என்று மகனிடம் கூறியவர், சற்று இடைவெளி விட்டு சற்று யோசித்து, “ப்ரீத்தி நல்ல சாய்ஸ் தம்பி. மிஸ் பண்ணிட கூடாத சாய்ஸ். புரிஞ்சிக்க..” என்று கூற,

ஷான் புன்னகைத்தான்!

error: Content is protected !!