Rose – 13

eiZ3L9R86145-ImResizer-efa3b99e

அத்தியாயம் – 13

நீண்ட வருடங்களுக்குப் பிறகு, தன் மகனுக்குப் பிடித்த உணவுகளைக் கவனமாகப் பார்த்து சமைப்பது மீனாவின் மனதிற்கு நிறைவைக் கொடுத்தது. அத்துடன், கணவன் – மகன் என்று வாழ்ந்த அந்த நாட்கள் ஞாபகம் வந்தது.

“அம்மா” என்ற அழைப்புடன் சமையலறைக்குள் நுழைந்த யாதவ் முகத்தில் இருந்த உற்சாகம் கண்டு, “இன்னைக்கு என்ன குட் நியூஸ்…” அவன் சொல்லாமலே மகனது சந்தோசத்தைக் கண்டுபிடித்து கேட்டார் மீனா.

சமையல் மேடையின் மீது ஏறியமர்ந்து, “அதை நான் சொன்னால் சுவாரசியமாக இருக்காது. இந்தாங்க நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க” தன் கையில் இருந்த நியூஸ் பேப்பரை அவரிடம் கொடுக்க, திடீரென்று மனதில் தோன்றிய பரபரப்பில் கேஸை ஆப் செய்துவிட்டு அதை வாங்கி வாசித்தார் மீனா.

அவரின் விழிகளில் மெல்லிய நீர்படலம் கண்டு, “பேட்டி கொடுத்திருக்கிறாள் என்பது மட்டும்தான் பார்த்தேன். உங்க கண்கள் கலங்கும் அளவுக்கு என்ன சொல்லி இருக்கிறாள்?” ஆர்வத்துடன் அவரின் கையில் இருந்த பேப்பரைப் பிடுங்கி சற்று சத்தமாகவே வாசித்தான்.

“எனக்கு ரோல் மாடல் இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்த மீனலோட்சனி தான். தன் கணவனை இழந்து துவண்டு போகாமல், கடனில் இருந்த கம்பெனியை வளர்ச்சி நிலைக்கு கொண்டு வந்திருக்காங்க” சட்டென்று அவன் குரலில் இருந்த தடுமாற்றம் கண்டு குழம்பியது தாயுள்ளம்.

அவனின் தலையைக் கோதிய மீனாவோ, “அவ அப்படி சொன்னது உனக்கு பிடிக்கலயா யாதவ்?” என்ற தாயின் கரங்களைப் பற்றிக்கொண்டு, சிலநொடிகள் மௌனம் காத்தான்.

தந்தையின் திடீர் இறப்பு, அவ்வளவு கடன், தெரியாத தொழில் இதோட சேர்த்து என்னோட விலகல். இத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு அவர் கடந்து வந்த பாதையை நினைத்தவனின் மனமெங்கும் வலி பரவியது.

“யாழிக்கு தெரிந்த விஷயம் கூட எனக்கு தெரியல. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே அம்மா” நிஜமான வருத்தத்துடன் கூறிய மகனைக் கனிவுடன் ஏறிட்டார் மீனா.

“அப்படி சொல்லியிருந்தால்?” என்றவர் கேள்வியில் இருப்பது என்னவென்று அவனுக்கு புரியவில்லை.

அவரின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்து, “ஏதோவொரு டிகிரி வாங்கிட்டு, உங்களுக்கு பக்கபலமாக இங்கேயே இருந்திருப்பேன். இங்கிருந்து கடல்கடந்து போகும் எண்ணமும் வந்திருக்காது, என் வாழ்க்கையும் திசைமாறி போயிருக்காது” ஏதேதோ நினைவுகளின் பிடியில் நின்றபடி பதில் தந்தான் யாதவ்.

“அதுக்காக உன் கனவுகளைத் தியாகம் செய்ய தேவை இல்லையே…” என்ற தாயைக் கட்டியணைத்து கதறியவனின் உதடுகள், “ஸாரிம்மா! உங்களை  நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்” என்றது.

அவன் அழுது முடிக்கும் வரை அருகே நின்றிருந்த மீனாவின் மனமோ, ‘என் பிள்ளையை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டு, நீ விலகி நிற்க என்ன காரணம்னு புரியல’ யாழினியுடன் மனதில் உரையாடினார்.

சிறிதுநேரத்தில் தாயிடம் இருந்து விலகிய யாதவ், “அவளைப் போய் பார்த்து பேசிட்டு வரேன்ம்மா” அவனது மனமாற்றம் கண்டு, சரியென்று தலையசைத்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனத்தைத் திருப்பினான்.

சிறிதுநேரத்தில் ப்ளூ கலர் சர்ட், சாண்டில் கலர் பேண்ட் அணிந்து கம்பீரமாக கீழிறங்கி வந்தவன், “அம்மா யாழினி வீட்டுக்குப் போயிட்டு வந்துவிடுகிறேன்” பைக் சாவியை விரலில் மாட்டி சுழற்றியபடி வீட்டைவிட்டு வெளியேறினான்.

அடுத்து யாதவ் பைக்கை நிறுத்திய இடம் யாழினி வீடு.

முதல் முறை வந்தபோது வீட்டின் முன்பிருந்த காலியிடத்தில், ஏராளமான ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டு, அதில் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தது. அதன் நடுவே இரும்பில் ஆன ஊஞ்சல் ஒன்று அழகுற அமைக்கப்பட்டிருந்தது.

அவளது ரசனையை நினைத்து உதடுகளில் புன்னகை அரும்பியது. வீட்டின் காலிங்பெல்லை யாதவ் அடிக்க, உடனே வந்து கதவைத் திறந்தார் சௌந்தர்யா.

அவரை அங்கே எதிர்பார்க்காத சின்னவனோ, “ஆன்ட்டி நீங்க இங்கே என்ன செய்யறீங்க?” என்ற கேள்வியுடன் வீட்டினுள் நுழைந்தான்.

யாதவ் கேள்விக்கு பதில் சொல்ல வாய் திறக்கும் முன்பே,“சுடசுட மசால் தோசை ரெடி யாழி குட்டி…” தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு கையில் தோசையுடன் வந்த ஆனந்தனைக் கண்டு, “அங்கிள்” என்றான்  வியப்புடன்.

அவனது பார்வையைக் கவனித்த ஆனந்தன் அசடுவழிய சிரித்தபடி, “யாழிம்மா எனக்கு ஒரு களிமண் ஓவியம் செய்து தரேன்னு சொன்னால், அதுதான் அவளுக்கு ஸ்பெசலாக ஏதாவது சமைத்து தரலாம்னு” என்று இழுத்த கணவனைப் பொய்யாக முறைத்தார் சௌந்தர்யா.

“அவருக்கு இப்போ என்னைவிட அவரோட பொண்ணு தான் ரொம்ப முக்கியமா போயிட்டா! அவளுக்கு மட்டும் சமையல் செய்து கொடுப்பதை பாரு” பொய்யாக பொரிந்து தள்ளிய சௌந்தர்யாவைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தான் யாதவ்.

“அப்படியோ உங்களை இப்படி பார்த்து எவ்வளவு நாளாச்சு? உங்களை இப்படி தலைகீழாக மாற்றிய மதுராவைப் பாராட்டிய ஆகணும்” என்று சொன்ன யாதவ் அப்போதுதான் சுவற்றில் இருந்த ஓவியத்தைக் கண்டு மலைத்து நின்றான்.

மரத்தின் கிளையில் பெரிய தொகை கொண்ட இரு மயில்கள் ஒன்றின் முகத்தினை மற்றொன்று பார்ப்பதுபோல வடிவமைக்கபட்டு இருக்க, வேகமாக அதன் அருகே சென்று பார்த்தான்.

களிமண் சுவரோவியம் என்பது புரியவே, “இதை செய்தது யாரு?” என்ற கேள்வியுடன் பெரியவர்களின் பக்கம் திரும்பினான்.

“நம்ம யாழினி தான்” என்று சொல்லி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சௌந்தர்யா.

தன் மனைவியின் கருத்தை ஆமோதித்த ஆனந்தன், “சமையலறையில் திராட்சை பழக்கொத்து, அவளோட படுக்கையறையில் இதேபோல இன்னும் நிறைய பெயிண்டிங் செய்து வைத்திருக்கிறாள்” என்றார்.

களிமண் சுவரோவியம் செய்ய மிகுந்த பொறுமை வேண்டும். அத்துடன் அவளுக்குள் இப்படியொரு திறமை இருப்பது அவன் அறியாத ஒன்று. தன்னுடன் இருந்தவரை யாழினி எந்தநேரமும் கலகலவென்று ஏதோவொரு விஷயத்தைப் பற்றி பேசுவாள்.

ஆனால் இன்று இவைகளைப் பார்த்த யாதவ் மனமோ, ‘தன் மனதின் இறுக்கத்தைக் குறைக்க வெளிநாடுகளில் அதிகமாக இவை போன்ற சுவரோவியம் செய்யப்படும் விஷயத்தைக் கேள்விப்பட்டு இருக்கேன். அந்தளவுக்கு தனிமையை உணர்கிறாளா? இல்லை மனோவியாதியா?’ என்ற சந்தேகம் நெஞ்சினில் வர, சட்டென்று படுக்கையறையை நோக்கிச் சென்றான்.

அவன் அறையின் கதவுகளைத் தட்ட, “அப்பா சீக்கிரம் தோசை எடுத்துட்டு வாங்க செம பசி” ஆனந்தன் என்று நினைத்து பேசியவள் தன் வேலையைத் தொடர, சட்டென்று அறைக்குள் நுழைந்தான் யாதவ்.

அவனைக் கண்டவுடன் திடுக்கிட்டு இருக்கையைவிட்டு எழுந்தவள், “நீங்க இங்கே என்ன செய்யறீங்க?” என்றவளின் கையிலிருந்த பெயிண்டிங் மீது பார்வையைப் பதித்தான்.

ரோஜாப்பூக்கள் பூத்து குலுங்குவதுபோல களிமண்ணால் செய்யப்பட்ட புகைப்படம் பார்த்ததும் மனதின் சந்தேகம் அதிகரிக்க, அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் பார்வையைச் சுழற்றினான்.

படுக்கையறையின் ஒருபக்க சுவற்றில் ஒற்றை ரோஜா மலர்ந்திருக்க கடிகாரத்தில் முள் ஐந்தைத் தொட அதை பார்த்தபடி பியானோவின் கீ போர்டில் காலை வைக்கு பூனைக் குட்டியின் பிம்பத்தை வரைந்திருந்தாள்.

அடுத்ததாக மரத்தின் கிளையை நோக்கி பறந்து வரும் கிளி, சிறு இலையை உதட்டில் கவ்விச் செல்லும் புறா, பட்டாம்பூச்சியில் வயலின் மற்றும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பூங்கொத்து என்று சுவர் முழுவதும் சின்ன சின்னதாக நிறைய ஓவியம் வரிசையாக  இடம்பெற்றிருந்தது.

கடைசியாக அவள் நின்றிருந்த இடத்திற்கு சென்றது அவன் பார்வை. டேபிளில் வைக்கபட்டிருந்த பேனா ஸ்டேண்ட் முழுவதும் களிமண் ஓவியமே…

‘லவ்’ என்ற வார்த்தையை சுமக்கும் இதயத்தின் முன்பு ஒருவன் மண்டியிட்டவன் கையில் ரோஜாவுடன் காதலை வெளிபடுத்த அதை வாங்கும் பெண் என்று மரத்தில் செய்யப்பட்டு இருக்க, பக்கத்திலேயே இதயம் போன்ற வடிவமைப்பை உடைய பிளவர் வாஸில் சிவப்பு நிற ரோஜா பூவை நிரப்பி வைத்திருந்தாள்.

அவளுக்கு தனிமை பிடிக்கவில்லை என்பதை மட்டும் உணர்ந்தவனின் மூளை வேகமாக வேலை செய்ய, “யாதவ்” என்ற அழைப்புடன் அறைக்குள் நுழைந்தனர் ஆனந்தனும், சௌந்தர்யாவும்!

இருவரின் குரல்கேட்டு மனம் மெல்ல நடப்பிற்கு திரும்பிட, “சாரி ஆன்ட்டி! இவளிடம் இப்படியொரு திறமையை எதிர்பார்க்கல. அதுதான் உடனே அனைத்து பெயிண்டிங் பார்க்க வந்துவிட்டேன்” மன்னிப்பு கேட்ட யாதவ் பார்வை அவளின் மீது அழுத்தத்துடன் படிந்து மீண்டது.

“இல்ல நீங்க உள்ளே வந்ததும் நேராக யாழினியைப் பார்க்க வந்தது கொஞ்சம் மனதிற்கு நெருடலாக இருந்தது” சௌந்தர்யா வேண்டுமென்றே பதட்டத்தில் இழுக்க, அவர்களது மனநிலை அறிந்த யாழினி யாதவை முறைத்தாள்.

“இவ என்னோட மாமன் மகள் தான் ஆன்ட்டி” என்றவன் அறையைவிட்டு வெளியேற, “சீக்கிரம் கையைக் கழுவிட்டு சாப்பிட வாம்மா” என்ற பெரியவர்களும் அவனின் பின்னோடு அறையைவிட்டு வெளியே சென்றனர்.

தன்னவனின் பார்வையில் இருந்த ஏதோவொன்று மனதைப் பாதிக்க, ‘இவன் திடீரென்று இங்கே வர என்ன காரணம்?’ என்ற சிந்தனையுடன் கையைக் கழுவிவிட்டு அறையைவிட்டு வெளியே வர, ஆனந்தன் – சௌந்தர்யா இருவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

“திடீர்னு வரக்காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்ற கேள்வியுடன் அவனை எதிர்கொண்டாள் யாழினி. சட்டென்று நிமிர்ந்து அவளின் பார்வையை நேருக்கு நேராக சந்தித்தவனைக் கண்டவுடன், அவளுக்குள் ஏதோவொரு இனம்புரியாத தடுமாற்றம் வந்து போனது.

தங்களிடம் இருவரும் ஏதோ மறைப்பதைப் புரிந்துகொண்ட ஆனந்தன், “அவங்க தனியாகப் பேசட்டும் சௌந்தர்யா. நீ வா நம்ம வீட்டுக்குப் போலாம்” மனைவியை அழைத்துக்கொண்டு, யாழினியிடம் பார்வையால் விடைபெற்று கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் சென்றதை உறுதி செய்துக்கொண்ட யாதவ், “உனக்கு ஏதாவது பிரச்சனையா இனியா…” என்ற கேள்வியுடன் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, இரண்டடி பின்னே நகர்ந்தவளின் விழிகள் கலங்கியது.

“என்னோட சொந்த வீடு, நான் விரும்பிய வேலை. இதோ என்னோட திறமையைச் சொல்லும் இந்த களிமண் சுவரோவியம். என்னைச் சுற்றி எல்லாமே ரொம்ப அழகாக இருக்கும்போது, எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது சொல்லு?!” என்றவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இயல்பாக பேச முயன்றாள்.

அவளது கண்களில் தெரிந்த வெறுமையைக் கண்ட யாதவோ, “என்னிடம் எப்போது பொய் சொல்ல தொடங்கின இனியா?” என்றவனின் விழிகளை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல், சுவற்றில் சாய்ந்து விழிமூடி நின்றாள்.

“உன்னை வெறுக்கும்படி செய்துவிட்டு இப்போ எதுக்காக என்னைத் தேடி வருகிறாய்?” என்றாள் கோபத்துடன். 

“உன்னோட பேட்டியை பேப்பரில் பார்த்தேன். இன்னும் நீ மேலே வரணும்னு விஷ் பண்ண  வந்தேன்” அங்கு வந்த காரணத்தைக் கூற, பட்டென்று விழி திறந்து அவனைப் பார்த்தாள்.

யாதவ் விழிகள் வெளிபடுத்திய செய்தியை மனம் உணர்ந்தபோதும், “சீக்கிரம் விஷ் பண்ணிட்டு கிளம்புங்க. நீ இன்னும் கொஞ்சநேரம் இங்கே இருந்தால், என்னோட பெயரில் கதை கட்டி விட்டுடுவாங்க. அது என்னை அதிகம் பாதிக்காது பிகாஸ் நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள்”  அன்றுசொன்ன  வார்த்தைகளை வேறுவிதமாகக் கூற, அந்த வாக்கியம் அவனின் இதயத்தை இரண்டாகப் பிளந்தது.

தன் விழிகளை மூடி அவள் தந்த வலியை ஏற்றுக்கொண்ட யாதவ், “வீட்டைவிட்டு வெளியே போக மட்டும்தான் சொல்றீயா? இல்ல  ஒரேயடியாக உலகத்தைவிட்டே போக சொல்றீயா?” காரணம் புரியாமல் கேள்வி கேட்க, அவள் வலியுடன் அவனை பார்த்தாள்.

திடீரென்று கரண்ட் வந்ததில் பென்ரைவ் உதவியால் பாடல் ஒலிக்க,

இதயக்கூட்டை பூட்டிக் கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய்…

கதவைப் பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய்…

வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு…

வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வந்துண்டு…

பூவினை திறந்துக்கொண்டு போய் ஒளிந்த வாசமே…

பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே…

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்…

நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்…” அந்த பாடலின் வரிகள் இருவரின் மனதையும் அப்பட்டமாக பிரதிபலித்தது.

“பூவோட வாசனை காற்றுடன் கலந்து போகலாம், அதோட நிறம் என்றுமே மாறாது இனியா. அதுபோல தான் என் மனமும், குணமும். அதை நீயே சீக்கிரம் புரிஞ்சிக்குவே” என்றவன் விளக்கம் கொடுக்க, அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.

சட்டென்று அவனை நெருங்கிய யாழினி, அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “அப்புறம் எதுக்குடா என்னை தவிக்க விட்டுட்டு இந்தியா வந்தே? நீதான் என் உலகம்னு இருந்தேனே… நான் வெறுக்கும் தனிமை சூழலில் வாழ வச்சிட்ட இல்ல…” இரண்டு கைகளாலும் அவனை மார்பில் குத்த, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் யாதவ்.

“ஷ்! இனியா ப்ளீஸ் அழுகாதே… தப்பு செய்தவன் நான், எனக்கு என்ன தண்டனைவென கொடு” அவளின் முதுகினை வருடிக் கொடுக்க, அவன் குரல்கேட்டு சட்டென்று தன்னிலைக்கு மீண்டவள் படக்கென்று அவனிடமிருந்து விலகி நின்றாள்.

“அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பெண்கள் அழுகவே கூடாது இல்ல… சாரி மறந்தே போயிட்டேன்” கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தாள் யாழினி.

அவள் மனம் வெகுவாக காயம்பட்டு இருப்பதைக் கண்டுகொண்ட யாதவ், தன்னவளின் மறுபக்கத்தை அறிந்துகொள்ள ராம்குமாரைத் தேடி மருத்துவமனைக்குச் சென்றான்.

கிட்டத்தட்ட புயல் வேகத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த நண்பனின் முகத்தில் இருந்த துயரம் கண்டு, “என்னாச்சுடா? இவ்வளவு வேகமாக எங்கே போறே?” என்ற கேள்வியுடன் அவனது பாதையை மறித்தான்.

“வா உன்னிடம் கொஞ்சம் பேசணும்” அவனை அழைத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு பக்கத்தில் இருந்த ரோஸ் கார்டனுக்குச் சென்றான். மதிய நேரம் என்பதால் ஆள்நடமாட்டம் குறைவாக இருக்க, அங்கிருந்த ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தனர்.

“யாழினி பற்றி உனக்கு தெரிந்த விஷயத்தை சொல்லுடா” நண்பனிடம் யாதவ் உரிமையாக கேட்க, அதற்காகவே காத்திருந்த ராம்குமார் அவளை முதல் முதலாக சந்தித்த நாளில் இருந்து சொல்ல தொடங்கினான்.

அவனது நினைவலைகள் பின்னோக்கிச் சென்றது.