Neer Parukum Thagangal 10.1

NeerPArukum 1-e8917c81

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் – 10.1

சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்

செய்த பிரயத்தனங்களால் விழிகள் விழிநீரை விழுங்க, இதழ்கள் மென்னகை ஒன்றை வழங்க, “வீட்டுக்கு வந்ததும் அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனா விசாரிக்கிறதுக்குள்ள, அவன் பெயில் வாங்கிட்டான். ஒன்னும் செய்ய முடியலை. ஆனா எப்படியோ முட்டி மோதி டிவோர்ஸ் வாங்கிட்டேன்.

கொடுத்த டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் அப்படியே கிடக்கு. டெலிவரி டைம், இவன் பொறந்தது, அம்மா… இப்படினு கேஸ்-காக அலைய முடியலை. அவன் செஞ்ச கொடுமைக்கு, தண்டனை கிடைக்கலங்கிற ஒரு ஆதங்கம் இன்னுமே எனக்கு இருக்கு” என்றாள்.

செல்வியின் குரல் நியாயம் எனும் நீர் பருகிட மீண்டும் ஒரு வாய்ப்புண்டா என்ற தாகத்தில் ஒலித்தது!

மேலும், “எங்க ஊர்ல ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம் நடத்தினாங்க. அங்க கத்துக் கொடுத்ததை வச்சி பேப்பர் பேக், என்வலப் செய்றேன். இவனை வச்சுக்கிட்டு கொஞ்சம்தான் பண்ண முடியுது. இவன் வளர்ந்திட்டானா, இதைவிட நல்லா பண்ணலாம்” என்றாள் நம்பிக்கையோடு!

இழப்பின் பின்னால் இதயத்தைச் செலுத்தாமல், இருப்பின் பாதையில் அவள் மூளையைச் செலுத்துவதை வியந்து பார்த்தவன், “அம்மா இப்போ இல்லைனு அக்கா சொன்னாங்க. அவங்க எப்ப…?” என்று கேட்டான்.

மடியில் உறங்கும் மகனைப் பார்த்து, “இவன் பிறந்து மூணு மாசம் இருக்கும். அப்போதான்” என்று சொல்லிவிட்டு, மேல் நோக்கி கை காட்டினாள்.

“வீட்ல மத்தவங்க?”

“அம்மாக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நான்தான், என்னாலதான்… அதாவது என்னைப் பத்தி யோசிச்சு, கவலைப்பட்டு, சரியா சாப்பிடாம அழுதுக்கிட்டே இருந்ததால-ன்னு தாத்தா, பெரியம்மா நினைச்சாங்க”

“இதுல நீங்க என்ன பண்ணுவீங்க?”

“அவங்களுக்கு அம்மாவை பிடிக்கும்னு நான் முதல சொன்னேனே!? அவங்க சொல்றதைக் கேட்கலைனு கோபம். அப்படிக் கேட்டுருந்தா அம்மாக்கு எதும் ஆகியிருக்காதுனு நினைச்சாங்க”

“இப்போ பேச மாட்டாங்களா?”

“ம்கூம்! பக்கத்து வீடுதாங்க. ஆனா அம்மா போனப்புறம் பேச்சு வார்த்தையே இல்லாம போயிருச்சு. கண்டுக்கவே மாட்டாங்க. உடம்பு சரியில்லை-னா கூட எந்த உதவியும் பண்ண மாட்டாங்க. ப்ச், இப்ப எனக்கு எல்லாமே இவன்தான்!” என்று உறங்கும் மகனின் முன்னெற்றி குருமுடிகளை ஒதுக்கிவிட்டாள்.

அவளையும், சிறு குழந்தையையும் பார்த்தவனுக்கு, அப்போதைய அவளது அதிகபட்ச பயம் எதனால் என்று புரிந்தது.

அக்கணம் செல்வி, “இன்னொன்னு! அம்மா இல்லைனதும், அக்கா கொஞ்சம் ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சாங்க. அவங்க மாமியார், மாமனார், மாமா ‘உன் தலையில எதையும் இழுத்துப் போட்டுக்காத’-னு சொன்னாலும், முடிஞ்சளவு உதவி செய்வாங்க” என்றாள் சிறு சந்தோஷக் குரலில்!

செல்வியின் முகத்தையே சரவணன் பார்த்திருந்தான். என்னமோ அவனுக்கு அந்தக் கணத்திலிருந்து ஏற்பட்டிருந்த ப்ரியத்தின் விகிதம் கூடிக் கொண்டே போனது!

மீண்டும் அவளே, “மாமாக்கு சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்கு. அக்காவும் கூட போகப் போறாங்க. ‘நானும் இல்லைன்னா யாரு இருக்கிறாங்க உனக்கு? நாளைக்கே ஒரு கஷ்டம்-னா யார் வருவா?’-ன்னு அக்காக்கு ரொம்ப கவலை, பயம்” என்றாள் சிறு மென்னகையோடு!

“உங்களுக்கு அந்தப் பயம், கவலை இல்லையா?” என்று கேட்டான்.

எதிர்காலம் என்னென்ன வைத்திருக்கிறதோ என்ற பயம், கவலை இருந்தும், “பார்த்துக்கலாம்” என்றாள், நாளைய ஆச்சரிய கஷ்டங்களை நாளையிடமே விட்டுவிட்டேன் என்பதுபோல!

அதற்குமேல் உண்டான ப்ரியத்தை உள்ளுக்குள் பூட்டிவைக்க வேண்டாமென சரவணனுக்குத் தோன்றியதால், செல்வியிடம் அதை ‘எப்படி சொல்ல?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்!

அதன்பின் ஓர் நெடுமௌனம் இருவருக்கும் இடையே தடுப்பாய் நின்றது!

யோசித்து முடித்த சரவணன், “உங்க அக்காகிட்ட நான் பேசட்டுமா? அவங்க சிங்கப்பூர் போறப்போ, உங்களைப் பத்தின கவலை… பயம் இல்லாம போக சொல்லட்டுமா?” என்று செல்வியிடம் ப்ரியத்தைப் பிரகடனப்படுத்தினான்!

************************************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

அதிர்ச்சி அடைந்த கண்மணி, “நீ என்ன சொல்ற…? உனக்கு என்கேஜ்மென்ட் நடந்திருக்கா?” என சேது சொன்னதை திரும்ப முணுமுணுத்ததும், ‘ஆம்’ என பதில் சொல்வது போல் தலையசைத்தான்.

தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து கண்மணி மனம் உடனே மடை மாற்றப்பட்டது. திருமணம் நிச்சயமான ஒருவனிடம் எப்படியெல்லாம் பேசியிருக்கிறேன் என்ற எண்ணம் கண்மணிக்கு தன்னிலையை ஒருமாதிரி உணர வைத்திருந்தது!

அதனால், “சாரி… சாரி. எனக்குத் தெரியாது. நீ…” என்று அவனை ஒருமையில் விளித்தவள், “சாரி! நீங்க… உங்களுக்கு மேரேஜ் நடக்க போகுதுனு தெரியாம என்னென்னமோ பேசி… மறந்திடுங்க ப்ளீஸ்” என்றாள் தடுமாற்றத்துடன்!

மரியாதை விகுதியில் தன்னை அழைப்பது, தடுமாற்றத்துடன் அவளிருப்பது, சாந்தமாக பேசுவது என தன்னிடம் நடந்து கொள்ளும் முறையை கண்மணி உடனே மாற்றி கொண்டதும், சேர்ந்தார் போல் சொல்ல வேண்டியதை மறந்து சேது அவளையே பார்த்திருந்தான்.

“நீங்க முதலயே சொல்லியிருக்கணும். அப்படினா நான் இப்படிப் பேசியிருக்க மாட்டேன். சொல்லாதது உங்க தப்புதான்” என்று நிமிர்ந்து பார்த்தும்… பார்க்க முடியாமலும்… பேசியவளிடம், இதற்கு மேல் தாமதித்தால் நிச்சயம் கோபம் காட்டுவாளென்று, “கண்மணி!” என அழைத்தான்.

அதன் பின்னும் அவனைப் பார்க்க தயங்கியவளிடம், “இங்க பாரு கண்மணி! உன்கிட்ட ஒன்னு சொல்லணும். அதைக் கேட்டு கோபப்பட கூடாது” என்றதும், “ச்சே, ச்சே கண்டிப்பா மாட்டேன். அது… அது… முன்னாடி இப்ப… இப்படின்னு தெரியாது. நீங்க சொல்லுங்க” என்றாள் தயங்கித் தயங்கி!

உடனே, “எனக்கு என்கேஜ்மென்ட் நடந்திருக்கு-ன்னு சொன்னேன்-ல… பட் அது கேன்சலாயிடுச்சி” என முன்பு போல் எந்த இடைவெளி விடாமல்… முழுவதும் சொல்லி முடித்ததும், கண்மணி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவள் பார்வையில் அப்படியொரு கோபம் கொட்டிக் கிடந்தது!

கோபம் கட்டுக்கடங்காமல் வந்திருந்தாலும், அதுவரையில் கனம் கூடியிருந்த மனது, அந்தக் கணத்திலிருந்து லேசாவது போல் உணர்ந்தாள்!

‘அது ஏன்?’ என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கவில்லை!

“இதை முதலயே ஒழுங்கா சொல்ல வேண்டியதுதான? ப்ச், கொஞ்ச நேரத்தில என்னை எப்படியெல்லாம் யோசிக்க… என்னெல்லாம் பேச வச்சிட்ட… ச்சே!!” என தன்னிடம் கொட்டிக் கிடந்த கோபத்தை அவன்மேல் கொட்டிவிடுகின்ற வேகத்தில் கடுகடுத்தாள்.

“ஹேய்! கொஞ்சம் கேப் விட்டதும், நீயா…” என விளக்க வந்தவனிடம், “பேசாத! நீ பேசவே செய்யாத!” என்று அவள் எச்சரித்ததும், அவன் பேசவில்லை.

கண்மணி கோபத்தைக் கொட்டி முடிக்கட்டும் என விட்டுவிட்டான்! அதுவும் நன்றாகத்தான் இருப்பதனால்!!

சிலநொடிகள் கத்தினாள். அப்போதும் கோபம் குறையாததால் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன்மீது ஏறியப் பார்த்ததும், “ஹே கண்மணி!! நானெல்லாம் உன்மேல எறியலை. ஸோ நீயும் எறிய கூடாது” என்று ஒரு கேலி போல் சொல்லவும், உடனே பாட்டிலை நங்கென்று தரையில் வைத்தாள்.

இன்னமும் சிறுகோபம் இருக்க, “உன்னை அடிக்கணும் போல இருக்கு” என்று படபடத்துச் சொல்ல, “ம், அடிச்சிக்கோ” என்று அவன் கை நீட்டியதும், மெல்ல மெல்ல அவளது கோபம் குறைந்து போய் அவனைப் பார்த்தாள்.

சிரித்தபடியே அவன் இருப்பதைக் கண்டதும், ‘ச்சே! நான் ஏன் இப்படி?’ என்ற எண்ணம் வரவும், “சாரி” என்றாள் கொஞ்சமும் யோசிக்காமல்!

அதே சிரிப்பு மாறாமல், “போறதுக்குள்ள எத்தனை தடவை சாரி கேட்கிறேன்-னு பார்க்கலாம் கண்மணி” என்றான் நக்கல் தொனியில்!

“போறதுக்குள்ள நீ அடிவாங்காம போறியா-ன்னு பார்க்கலாம்” என அவளும் அதே தொனியில் சொல்ல, “நான்தான் சொல்றேனே… இப்பவே அடிச்சிக்கோ” என அவன் கை நீட்டியதும், சட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டாள்!

கூடவே கொட்டிக் கிடந்த அவள் கோபமும் தணிந்துவிட்டிருந்தது!!

அதற்கடுத்தே, அவனுக்கு நிச்சயம் நடந்து நிறுத்தப்பட்டிருக்கிறது! அது ஏன்? எதற்காக இருக்கும்? அதன் பாதிப்பு இல்லாமல் எப்படி இப்படிப் பேசுகிறான்? என்ற கேள்விகள் அவளுக்கு வந்தன.

அவளையே பார்த்திருந்தவன், சமநிலைக்கு வந்துவிட்டாள் என்று புரிந்ததும், “கண்மணி” என்று அழைக்க, ‘என்ன?’ என்று பார்த்தாள்.

“மனசில இருக்கிறதெல்லாம் சொல்லி அழுத்தாச்சா?” என கேட்டதும், “ம்ம்ம்” என்று தலையாட்டினாலும், மண்டைக்குள் ‘எதற்காக நிச்சயம் நின்றிருக்கும்?’ என்ற கேள்வி ஓடிக் கொண்டே இருந்தது.

“கண்மணி, என்கேஜ்மென்ட் ஏன் கேன்சலாச்சுனு தெரியணுமா?” என்று சேது கேட்கவும், “நீதான் ஏதாவது ப்ராப்ளம் பண்ணியிருப்ப-ன்னு நினைக்கிறேன். நினைக்கிறதென்ன அப்படித்தான் இருக்கும்” என பெரிதாக பேசினாள்.

மென்னகையுடன், “ரொம்பப் பேசற!! நான் ‘ஏன்-னு’ சொன்னா, அப்புறம் சாரி கேட்ப” என்று விளையாட்டாய் எச்சரித்தும், “நான் எதுக்குச் சாரி கேட்கணும்? ஆங்!!” என்று சத்தமாகக் கேட்டவள், “நான்…எது… எதுக்… சா…” என்று திரும்ப கேட்கும் பொழுது சத்தம் குறைந்து கொண்டே வந்தது.

அடுத்த நொடியே தலை குனிந்து, ‘அவன் என்ன சொல்ல வருகிறான்?’ என்று யோசிக்கையில், ஒருவேளை நிச்சயம் செய்யப்பட்ட பெண்தான் பிரச்சனை செய்திருக்குமோ? அதைத்தான் சொல்கிறானோ? என சந்தேகம் வந்தது.

‘ச்சே! ஏன் இப்படி யோசிக்காம பேசறேன்?’ என்று நொந்து, நெற்றியில் தட்டிக் கொண்டவளைப் பார்த்ததுமே, சேதுவின் மென்னகை புன்னைகையாக மாறி, “ஹலோ” என்றான்.

மெல்ல அவள் நிமிர்ந்தும், “ஏதோ உனக்குப் புரிஞ்சிருக்கு! அது என்னென்னு சொல்லு” என்றதும், “அந்தப் பொண்ணுதான் ப்ராபளம்-மா? என்கேஜ்மென்ட் கேன்சல் அதனாலயா?” என்று கேட்டதும், சேது சிரித்தான்.

அவன் சிரிப்பினில் சிடுசிடுத்த கண்மணி, “சிரிச்சது போதும். பதில் சொல்லு” என்று வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கேட்க, “ஏன் யார்மேலயாவது தப்பு இருந்தாதான் என்கேஜ்மென்ட் கேன்சல் பண்ணனுமா?” என்றான் சேது!

*****************************************