நினைவு – 25 [Pre – Final]

நினைவு – 25 [Pre – Final]
மாணிக்கம் தன்னருகே நின்று கொண்டிருந்த தன் மனைவியையும், அவரிடமிருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்த தன் மகளையுமே மாறி மாறி பார்த்து கொண்டிருக்க அர்ஜுனின் பார்வை மாத்திரம் அவர் முகத்தின் மேலேயே நிலை குத்தி நின்றது.
அவர் மனதிற்குள் தன்னைப் பற்றி இன்று வரை என்ன வகையான எண்ணம் இருக்கிறது என்பது அவனுக்கு தெரியாது ஆனால் தன் திருமணம் அவர் சம்மதத்துடன் தான் நடக்க வேண்டும் என்கிற எண்ணம் மாத்திரம் அவனின் மனதிற்குள் உறுதியாக இருந்தது.
அர்ஜுன் எந்த நிலையிலும் அவர் செய்த விடயங்களை வருணைத் தவிர்த்து வேறு யாரிடமும் சொல்லி விடக் கூடாது என்கிற முடிவான எண்ணத்தோடு நின்று கொண்டிருக்க மறுபுறம் வருணின் மனமோ அவர் செய்த விடயங்களை இப்போதே எல்லோர் முன்னிலையிலும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று பிடிவாதமாக எண்ணியது.
மாணிக்கம் தன் வாய் திறந்து பேச தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் சுற்றி நின்ற அனைவருக்கும் பதட்டத்தை அதிகரிக்கும் நொடிகளாகவே நகர சிறிது நேரம் தன் கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு கொண்டவர் ஹரிணியின் புறம் திரும்பி அவளைத் தன்னருகே வருமாறு கை நீட்டி அழைத்தார்.
அவர் தன்னை அழைத்த அடுத்த கணமே அவரின் அருகில் வந்து நின்று கொண்டவள் அவரது கைகளை பிடித்து கொண்டு தயக்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்க்க
“இது உன்னோட வாழ்க்கை கண்ணா! நீ சொல்லப் போகும் பதிலில் தான் எங்களோட முடிவு இருக்கு! அதனால் நல்லா யோசிச்சு சொல்லு உனக்கு மனதில் என்ன எண்ணம் இருக்கோ அதை தயங்காமல் சொல்லு!” மாணிக்கம் ஹரிணியின் கண்களை பார்த்து கொண்டே கூறவும்
தன்னை சுற்றி நின்று கொண்டிருந்த தன் குடும்பத்தினர் மற்றும் அர்ஜுனின் குடும்பத்தினர் என அனைவரையும் ஒரு முறை சுற்றி நோட்டம் விட்டு கொண்டவள்
“நான்… நான் அர்ஜுனை விரும்புறேன் ப்பா! உங்களுக்கும் அவரை கண்டிப்பாக பிடிக்கும் ப்பா!” என்று கூற அவரின் மனமோ அன்றொரு நாள் அவளது விபத்து நடப்பதற்கு முதல் நாள் இரவு இதே மாதிரியான உணர்வை அவள் தன்னிடம் பகிர்ந்து கொண்டாளே என்று எண்ணி கலக்கம் கொண்டது.
அன்று தான் நினைத்தது வேறாக இருக்க அதற்கு அடுத்த நாள் தான் நடந்து கொண்டது வேறாக இருந்ததே என்பதை எண்ணி கவலை கொண்டவர் அர்ஜுனைத் திரும்பி பார்க்க அவனோ அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.
“எனக்கு என் பசங்க சந்தோஷம் தான் முக்கியம்! அவங்களுக்காகத் தான் இத்தனை நாட்களாக நான் வாழ்ந்துட்டு வர்றேன், இனியும் வாழுவேன் என் பொண்ணு இத்தனை தூரம் அவ மனதில் ஆசையை வளர்த்ததற்கு அப்புறம் அவளை கஷ்டப்படுத்தி நான் எந்தவொரு விடயத்தையும் செய்ய விரும்பல! என் பொண்ணு ஆசை எதுவோ அது தான் என் ஆசை!” என்று விட்டு மாணிக்கம் ஹரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு அர்ஜுனின் முன்னால் வந்து நின்று அவனது கையில் தன் பெண்ணின் கையை வைத்து விட்டு கலங்கிய கண்களுடன் அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.
“எனக்கு என்னோட சந்தோஷம், துக்கம், பயம் எல்லாமே என் பசங்க தான்! அவங்க ஒரு விடயம் வேணும்னு மனதிற்குள் நினைத்தாலே அதை அவங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தனும்னு தான் நான் நினைப்பேன் ஆனா ஏனோ தெரியல இந்த விடயத்தில் மாத்திரம் ஏதோ ஒரு தவறு இடையில் நடந்து போச்சு அதற்காக நான் மனதார இப்போ வரைக்கும் கவலைப்படுறேன் அந்த தவறுக்கு பிராயச்சித்தமாக கூட இப்போ நான் செய்யும் விடயத்தை நீங்க நினைத்துக் கொள்ளலாம் ஆனா எதுவும் நான் வேணும்னே செய்யல எந்த பெண் குழந்தையைப் பெற்ற அப்பாவுக்கும் வர்ற ஒரு தடுமாற்றம் தான் எனக்கும் வந்துடுச்சு அதோடு அன்னைக்கு…”
“மாமா! ரொம்ப தாங்க்ஸ் மாமா!” மாணிக்கம் அவர் சொல்ல வந்த விடயத்தை சொல்லி முடிப்பதற்குள்ளே அர்ஜுன் அவரை இறுக அணைத்து கொள்ள
அவனது செய்கையில் சிறிது தடுமாற்றம் கொண்டவர் அவனைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தி விட்டு அவனை ஏறிட்டுப் பார்க்க புன்னகை முகமாக அவரைப் பார்த்து கொண்டு நின்றவன்
“உங்க சம்மதம் கிடைத்ததே எனக்கு போதும் மாமா! வேறு எதுவும் சொல்ல வேண்டாம் இந்த சம்மதத்தை வாங்கத் தான் இத்தனை வருடங்களாக நான் காத்துட்டு இருந்தேன் இது போதும்!” என்று விட்டு மீண்டும் அவரை அணைத்துக் கொள்ள சுற்றி நின்ற அனைவரும் சந்தோஷம் பொங்க அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்றனர்.
“மாமா! நீங்களும் நானும் பேசியது நம்ம இரண்டு பேருக்கும், வருணுக்கும் தான் தெரியும்! அதனால் அது நம்மோடு போகட்டும் வீணாக அதை எல்லோரிடமும் சொல்லி இருக்கிற நல்ல உறவை கெடுத்துக் கொள்ள வேண்டாம் ப்ளீஸ்!” அர்ஜுன் மாணிக்கத்திற்கு மாத்திரம் கேட்கும் வகையில் மெல்லிய குரலில் கூறி விட்டு அவரை தன் அணைப்பில் இருந்து விலக்கி நிறுத்த அவருக்கோ மனம் முழுவதும் குற்றவுணர்வு சூழ்ந்து கொண்டு அவரைப் பாடாய்படுத்துவது போல இருந்தது.
தான் அன்று அத்தனை அவசர அவசரமாக ஹரிணியைப் பற்றிய விபரங்களை வெளியில் சொல்ல விடாமல் மறைத்திராவிட்டால் இத்தனை காலம் அர்ஜுன் அத்தனை பெரிய பிரச்சினையை முகம் கொடுக்க தேவையே ஏற்பட்டு இருக்காதே என்ற எண்ணமும் அவரது குற்றவுணர்வோடு சேர்ந்து கொண்டு அவரைத் தவிப்புறச் செய்ய தான் செய்த விடயங்களை இத்தனை எளிதாக அவன் எடுத்துக் கொண்டதை எண்ணி கலக்கம் கொண்டவர் மௌனமாக தன் கண்களின் ஓரம் துளிர்ந்த கண்ணீரை யாரும் கவனியாத வண்ணம் துடைத்து விட்டு கொண்டார்.
அர்ஜுனை ஆரம்பத்தில் பார்த்த போது கோபம் கொண்ட ஜெயலஷ்மி கூட இப்போது அவனது பேச்சில் தன் மனநிலையை மாற்றி இருந்தார் என்று தான் கூற வேண்டும்.
அவனது சித்த பிரமை நிலை தான் உண்மையில் அவருக்கு ஆரம்பத்தில் பிரச்சினையாக இருந்த விடயம் ஆனால் எப்போது அவன் அந்த நிலையில் இருந்து முழுமையாக வெளிவந்து ஆண் மகனுக்கே உரிய கம்பீரத்துடன் அவர்கள் முன்னால் தன் காதலைப் பற்றி பகிர்ந்து கொண்டானோ அப்போதே அவருக்கு அவன் மேல் பாதி அளவு பிடித்தம் வந்து விட்டது எனலாம்.
ஹரிணியும் அவனை விரும்புவதாக தன் மனம் திறந்து கூறிய பின்னர் அவனை ஏற்றுக் கொள்ளாமல் தன் மகளின் வாழ்க்கையை பணயம் வைக்க அவருக்கு உண்மையில் தைரியமில்லை.
ஏற்கனவே ஒரு தடவை மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு வந்த தன் மகளை இன்னுமொரு தடவை தங்கள் தவறான செய்கைகளினால் இழந்து விடக்கூடாது என்பது தான் அவரது எண்ணம்.
ஹரிணி இரண்டாம் தடவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதோ, அல்லது அவளது நிச்சயதார்த்தத்தின் போதோ அவளது விபத்தின் பிண்ணனியில் அர்ஜுனின் சித்த பிரமையும் தங்கியிருந்து என்று தெரிந்திருந்தால் அவர் நிதானமாக யோசித்து இருப்பாரோ என்னவோ தெரியாது.
ஆனால் அர்ஜுன் அவனாகவே முன் வந்து எல்லா விடயங்களையும் கூறிய பின்னர் அவருக்கு சிறிது நிதானம் வந்திருந்தது என்று தான் கூற வேண்டும்.
பெற்ற பிள்ளைகளின் சந்தோஷத்தை அழித்து வாழ்நாள் முழுவதும் அவர்களது மனநிம்மதியை தொலைத்து தமக்காக அவர்கள் அத்தனை தூரம் கஷ்டப்படத் தேவையில்லை என்ற எண்ணத்தோடு அர்ஜுன் மற்றும் ஹரிணிப்பிரியாவின் காதலை அவளது பெற்றோர்களும் ஏற்றிருக்க இந்த ஒரு நாளுக்காக அர்ஜுன் ஏழு வருடங்களை தியாகம் செய்திருக்கிறான் என்றால் மிகையாகாது.
தன் நண்பனின் தொலைந்து போன சந்தோஷம் மீண்டும் கிடைத்து விட்ட திருப்தியோடு வருண் அவனை அணைத்துக் கொள்ள சாவித்திரி மற்றும் ராமநாதனின் மனங்கள் அன்று தான் பரிபூரணமாக நிறைந்து போய் இருந்தது.
அதன் பிறகு வந்த நேரம் முழுவதும் இரு வீட்டு பெரியவர்களும் ஹரிணிப்பிரியா மற்றும் அர்ஜுனின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண ஏற்பாடுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க மாணிக்கமோ அந்த பேச்சில் முழுமையாக இணைந்து கொள்ளவும் முடியாமல் தன் மன சஞ்சலத்தை தன்னை விட்டு விலக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பு போன்ற ஒரு நிலையில் தவித்துக் கொண்டிருந்தார்.
இளையவர்கள் எல்லோரும் சற்று தள்ளி அமர்ந்து கொண்டு தங்களுக்குள் கலகலப்பாக பேசிக் கொண்டு இருக்க அர்ஜுனின் பார்வை என்னவோ மாணிக்கத்தையே சுற்றி சுற்றி வந்தது.
ஒரு நிலைக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமலும், தன் மன அழுத்தம் தாள முடியாமலும் தொலைபேசி அழைப்பு ஒன்று பேசி விட்டு வருவதாக சொல்லி விட்டு மாணிக்கம் எழுந்து சென்று விட சிறிது நேரம் கழித்து தன்னுடைய தொலைபேசியில் அழைப்பு ஒன்றில் பேசிக் கொள்வது போலவே அர்ஜுனும் எழுந்து கொண்டு அவர் சென்ற புறமாக அவரைத் தேடி சென்றான்.
அர்ஜுன் தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டபடியே நடந்து செல்ல அங்கே அவர்கள் வீட்டு தோட்டத்தில் இருந்த நாகலிங்க மரத்தின் மாணிக்கம் ஓய்ந்து போனவராக அமர்ந்திருந்தார்.
அவர் பார்வை எங்கோ ஒரு மூலையில் நிலை குத்தி நிற்க அவர் மனமோ அவரிடத்தில் இல்லை என்பது அர்ஜுனுக்கு வெகு தெளிவாகவே தென்பட்டது.
சிறு புன்னகையுடன் பெருமூச்சு விட்டபடியே அவரருகில் வந்து அமர்ந்து கொண்டவன்
“என்ன மாம்ஸ் இங்கே வந்து இருக்கீங்க? உள்ளே ரொம்ப புழுக்கமாக இருக்குதா? அதனால் வெளியில் காற்று வாங்க வந்தீங்களா?” அவரது மனநிலையை இயல்பாக மாற்றலாம் என்ற எண்ணத்தோடு கேட்க
அவனது கேள்வியில் சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தவர்
“ஆமா அர்ஜுன்! ரொம்ப ரொம்ப புழுக்கமாக இருக்கு ஆனா அது வீட்டுக்குள் இல்லை இங்கே!” தன் நெஞ்சில் கை வைத்து காட்டியவாறே கூறவும் அவனோ அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“சாரி மாமா நான் உங்களை கஷ்டப்படுத்தணும்னு நினைத்து அப்படி சொல்லல!”
“நீ கஷ்டப்படுத்தணும்னு நினைத்து சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை அர்ஜுன்! ஆனா நீ அப்படி பண்ணலயே!’
“மாமா!”
“ஏன் அர்ஜுன் இப்படி பண்ண? நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்தி இருக்கேன் இன்னும் சொல்லப்போனால் உன்னுடைய அந்த சித்த பிரமை நிலை இத்தனை வருடங்களாக உனக்கு இருக்க நானும் ஒரு வகையில் காரணமாக இருந்து இருக்கேன் அப்படி இருக்கும் போது நான் செய்த தவறுகளை எல்லாம் நீ வருணைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்லி என்னை ஏன் தடுத்த? நான் பண்ண தவறுகள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்து அவங்க என் மேல் கோபப்பட்டாலாவது எனக்கு நான் பண்ண தப்பிலிருந்து மன்னிப்பு கிடைத்த மாதிரி இருந்திருக்கும் ஆனா நீ அதைக் கூட பண்ண அனுமதிக்கல! சொல்லு அர்ஜுன் ஏன் இப்படி பண்ண?”
“வார்த்தைக்கு வார்த்தை நான் பண்ண தப்பு, நான் பண்ண தப்புன்னு நீங்க சொல்லுறீங்க பரவாயில்லை! ஒருத்தர் அவர் பண்ண விடயங்களை தப்புன்னு உணர்ந்து நான் பண்ண தப்பு நான் பண்ண தப்புன்னு மனதார உணர்ந்து சொல்லும் போது அதை மறுபடியும் மறுபடியும் சொல்லி காட்டி அவரை கலக்கப்படுத்திப் பார்க்க எனக்கு இஷ்டமில்லை!”
“அர்ஜுன்!”
“நீங்க உங்க மனதில் என்னை எந்த இடத்தில் வைத்து இருக்கீங்களோ தெரியல மாமா! ஆனா நான் உங்களை என் ராமுப்பாக்கு அடுத்த ஸ்தானத்தில் தான் வைத்திருக்கேன் நான் பிரியாகூட என் காதலை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளாமல் பேசிப் பழகியது வேணும்னா கொஞ்சமாக இருக்கலாம் ஆனா அந்த கொஞ்ச நாளில் கூட அவ வாயில் இருந்து வந்த விடயங்கள் எல்லாம் ‘என் அப்பா அப்படி பண்ணுவாங்க, என் அப்பா இப்படி பண்ணுவாங்க, என் அப்பா, என் அப்பா, என் அப்பான்னு தான் மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுவா!
அப்போதிலிருந்தே எனக்கு உங்க மேல உங்களைப் பார்க்காமலேயே ஒரு தனி மரியாதை வந்துடுச்சு அன்னைக்கு ஹோட்டலில் வைத்து நீங்களாக சொல்லும் வரைக்கும் நீங்கதான் பிரியாவோட அப்பான்னு எனக்குத் தெரியாது அன்னைக்கு நீங்க கோபப்பட்டது கூட எனக்கு உங்க மேல இருந்த மரியாதையை அதிகரிக்கத்தான் செய்ததே தவிர குறையச் செய்யல! தன் பொண்ணோட போட்டோ முன்ன பின்ன தெரியாத ஒரு பையனோட போனில் இருந்தால் எந்த அப்பாவுக்கும் கோபம் வரும் தான்! அது தான் உங்க கோபம் கூட உங்க பெருந்தன்மையைத் தான் எனக்கு காண்பித்தது
இருந்தாலும் நீங்க என்னைக் காயப்படுத்தணும்னு பேசிய வார்த்தைகள் எனக்கு ரொம்பவே கஷ்டம் கொடுத்தது அதனால் தான் அன்னைக்கு நான் உங்க கிட்ட சவால் விடுவது மாதிரி பேசிட்டு வந்தேன் ஆனாலும் எனக்கு அன்னைக்கு இராத்திரி பூராவும் தூக்கம் வரல உங்க மனதை ரொம்ப காயப்படுத்திட்டேனோன்னு தான் தோணுச்சு அது தான் அடுத்த நாள் பிரியாவை சந்திச்சுட்டு உங்க கிட்ட வந்து மனது விட்டு பேசலாம்னு நினைத்து இருந்தேன் அதற்கிடையில் என்னன்னவோ நடந்து போச்சு இருந்தாலும் பரவாயில்லை இப்போ அதை எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன் இல்லையா அது போதும்”
“ஆனா அர்ஜுன் நான் உன்னை அவ்வளவு கஷ்டப்படுத்தி பேசியும் நீ எனக்காக யோசித்து பேசுறியே! ஏன் அர்ஜுன் இப்படி?”
“ஏன்னா நீங்க என் சில்…பிரியாவோட ரொம்ப பாசமான அப்பா! பிரியாவுக்கு பிடித்த எல்லாம் எனக்கும் பிடிக்கும் ஒரு வேளை அந்த விடயம் என்னை பாதித்தாலும் பரவாயில்லை என் காதலுக்காக அதையும் நான் தாங்கிப்பேன்!”
“அர்ஜுன்!” மாணிக்கம் அர்ஜுன் இவ்வளவு நேரமாக பேசிய விடயங்களை எல்லாம் கேட்டு தனக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தது மட்டுமின்றி இறுதியாக அவன் சொன்ன விடயம் அவரை மொத்தமாக புரட்டிப் போட்டது என்று தான் கூற வேண்டும்.
தான் அவனை எந்தளவிற்கு தன்னை விட்டும் தன் குடும்பத்தை விட்டும் ஒதுக்கி வைக்க நினைத்திருந்தும் அவன் தன்னை இன்று வரை ஒரு உயர்ந்த இடத்தில் தான் தன்னை வைத்துப் பார்த்திருக்கிறான் என்ற உண்மை தன்மை அவரது மனதை சாட்டையாய் தாக்க தன் கண்களை மூடிக் கொண்டவர் தன் கலங்கிய தோற்றத்தை அவன் முன்னால் காட்டாமல் மறைக்க அரும்பாடுபட்டார்.
எவ்வளவு தூரம் முயன்றும் அவரால் தன் மனசாட்சியின் குமுறல்களுக்கு தீர்வு காண முடியாது போகவே மெல்ல தன் கண்களை திறந்து கொண்டவர்
“அர்ஜுன் என்னை மன்னிச்சிடு ப்பா!” என்றவாறே தன்னை மறந்து கதறி அழப் போக
அவசரமாக அவரைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்
“மாமா! என்ன இது? யாரும் பார்த்தால் அப்புறம் மாப்பிள்ளை இப்போவே மாமனாரை கொடுமைப்படுத்த பார்க்கிறான்னு சொல்லப் போறாங்க முதல்ல கண்ணைத் துடைங்க! அப்புறம் ‘மருமகன் கொடுமை! மாமனார் கண்ணீர்’ன்னு நியூஸ் போட்டுடுவாங்க” தன் முகத்தை வெகு தீவிரமாக வைத்துக் கொண்டு கூறவும் அவனது கேலியான பேச்சில் மாணிக்கம் தன் கவலையை மறந்து வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினார்.
“அர்ஜுன்! ஹரிணி சொன்னது நூறு சதவீதம் உண்மை! உன்னை பிடிக்காத ஆளே இருக்க முடியாது எல்லோருக்கும் உன்னை கண்டிப்பாக பிடிச்சுடும்!”
“பிடிக்க வேண்டிய ஆளுக்கு பிடித்ததா? இல்லையான்னு தெரியலையே!”
“பிடிக்க வேண்டிய ஆளா அது யாரு?”
“நீங்க தான் மாம்ஸ்!”
“நானா?”
“ஆமா! நான் அன்னைக்கு ஹோட்டலில் வைத்து உங்க கிட்ட போட்ட சபதத்தை மறந்துட்டீங்களா?”
“அதுவா?” மாணிக்கம் தன் தாடையை நீவி விட்டு கொண்டே யோசிக்கத் தொடங்க
“ஹலோ மாமா! நீங்க ரொம்ப நேரம் யோசிக்க வேண்டாம் நானே சொல்லுறேன்!” அர்ஜுன் அவரது முகத்தின் முன்னால் தன் கையை ஆட்டி அவரது சிந்தனையை கலைத்து விட்டு
அவர் முன்னால் எழுந்து நின்று கொண்டு “இன்னைக்கு எந்த வாயால் நீங்க என்னை இவ்வளவு மட்டமாக பேசிட்டு போறீங்கலோ நாளைக்கு அதே வாயால் உங்களை என்னை பாசமாக மாப்பிள்ளைன்னு கூப்பிட வைப்பேன்! உங்க பொண்ணை உங்க கையாலேயே என் கையில் பிடித்து கொடுக்கவும் வைப்பேன்! எல்லாவற்றுக்கும் தயாராக இருங்க மாமா! வரட்டா மாமா” அன்றைய நாளைப் போலவே பேசிக் காண்பிக்க மாணிக்கம் புன்னகை முகமாக அவனைப் பார்த்து கொண்டு இருந்தார்.
“என்ன மாம்ஸ் இது? நான் இவ்வளவு கெத்தா பேசிக் காண்பித்து இருக்கேன் நீங்க என்னடான்னா ஏதோ காமெடி சோ பார்க்குற மாதிரி இருக்கீங்க!”
“நீ பண்ணுற ஒவ்வொரு விடயமும் எனக்கு என் பொண்ணை பார்க்குற மாதிரியே இருக்கு! அவளும் இப்படி தான் ஏதாவது பேசி, சிரித்து விளையாடிட்டே இருப்பா! ஆரம்பத்தில் உன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் உன்னை புறக்கணித்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் அர்ஜுன்! என் பொண்ணுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான பையன் நீ தான்! அதோடு உன் ஆசைப்படியே நான் உன்னை என்…”
“என்னால முடியாது! முடியாது! முடியாது! நான் இதற்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்!” விஷ்ணுப்பிரியா அந்த வீட்டுக் காம்ப்வுண்டே அதிரும் படி சத்தமிட்டவாறே மாணிக்கத்தை நோக்கி ஓடி வந்து அவரைத் தாவி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட
அவளது கண்ணீரைக் கண்டதுமே பதட்டம் கொண்டவர்
“பிரியா என்னடா கண்ணா ஆச்சு? சொல்லுடா கண்ணா!” தவிப்பாக அவளைப் பார்த்து வினவ
“அவ எதற்காக இப்படி அழுது கூப்பாடு போடுறான்னு நான் சொல்லுறேன்” என்றவாறே ஜெயலஷ்மி விஷ்ணுப்பிரியாவை முறைத்து பார்த்து கொண்டு அவர்கள் முன்னால் வந்து நின்றார்…….