நிலா பெண் 16
நிலா பெண் 16
“குட் மார்னிங் மேடம்.” தனக்கு வெகு அருகில் கேட்ட குரலில் விழித்தாள் துளசி.
‘தன்னை யார் மேடம் என்று அழைப்பது? பாடசாலைக்குப் போக இன்னும் ஆரம்பிக்கவில்லையே நான்?!’ குழப்பத்தோடே கண்களைத் திறந்தாள். ஒரு நொடி தன் வகுப்பறையும் மாணவர்களும் நினைவுக்குள் வந்து போனார்கள்.
“காஃபி ரெடி துளசி.” மீண்டும் அதே குரல். தன் கணவனின் குரல்தான் அது என்பதை மூளை கொஞ்சம் தாமதமாக இனங்காட்டிக் கொடுத்தது.
முழுதாக கண்களைத் திறந்தது பெண். எதிரே புன்னகை முகமாக நின்றிருந்தான் ஆதி. கூச்சமாக உணர்ந்தவள் போர்வைக்குள் இன்னும் கொஞ்சம் புகுந்து கொண்டாள்.
“காஃபியை குடி துளசி.” கலைந்து கிடந்தவளின் கூச்சம் புரிந்தவன் போல அவளுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டான் கணவன்.
துளசி நேரத்தைப் பார்த்தாள். மணி பத்து என்றது சுவர் கடிகாரம்.
“ஐயையோ! பத்து மணியா?!” அலறி புடைத்துக்கொண்டு எழுந்தவள் பாத்ரூமிற்குள் ஓடினாள்.
மளமளவென்று பல்லைத் துலக்கிவிட்டு சூடு ஆறுமுன் காஃபியை முதலில் குடித்தாள். மீண்டும் மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்தவள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் குளியலை முடித்தாள்.
துளசி ரூமை விட்டு வெளியே வந்தபோது ஆதி கிணற்றிற்கு அருகில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு லேப்டாப்பில் மூழ்கி இருந்தான்.
“அதுக்குள்ள குளிச்சாச்சா துளசி?!”
“சாரி…” அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் மன்னிப்பு வேண்டியது பெண்.
“எதுக்கு?!”
“ரொம்ப நேரம் தூங்கிட்டேன்.” துளசிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
“ஸோ வாட்?”
“இல்லை…” அவள் கூந்தலிலிருந்து நீர்த்துளிகள் வழிந்த வண்ணம் இருந்தது.
“தலையைக் கூட ஒழுங்கா துவட்டலை நீ.” அவன் குறைப்படவும் அள்ளி முடிந்திருந்த கூந்தலை அவிழ்த்து விட்டாள்.
“பசிக்குது துளசி.”
“ஓ…” அவன் பேச்சில் அவள் விக்கித்துப் போனாள். சட்டென்று சமையலறைக்குள் நுழைந்தவள் ஆச்சரியப்பட்டும் போனாள்.
ஹோட்டலில் இருந்து ஏற்கனவே ஏதோ உணவுப்பொருட்களை வாங்கி வந்து வைத்திருந்தான் ஆதி. இவள் பின்னோடே எழுந்து வந்திருப்பான் போலும்.
“இன்னைக்கு சமைக்க வேணாம் துளசி, ஹோட்டல்ல பார்த்துக்கலாம்.”
“ம்…” அங்கிருந்த பொட்டலங்களைப் பிரித்தாள். பரோட்டா, குருமா என ஏதேதோ வாங்கி வைத்திருந்தான்.
“உனக்காகத்தான் வெயிட்டிங், செம பசி போ!” பேசிய படியே கைகளைக் கழுவியவனுக்காக உணவை பிளேட்டில் பரிமாறினாள்.
அம்மிக்குப் பக்கத்திலிருந்த மேடையில் ஆதி உட்கார்ந்து கொள்ள அவனிடம் பிளேட்டை கொடுத்தாள் துளசி.
“நீயும் சாப்பிடு துளசி, பசிக்கலை உனக்கு?”
“ரொம்ப நேரம் தூங்கிட்டனில்லை!” அப்போதும் துளசி லேசாக வருத்தப்பட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை… நீ சாப்பிடு முதல்ல.” அவள் பேச்சைப் பெரிது பண்ணாதவன் உண்ண ஆரம்பித்துவிட்டான்.
இவள் உணவு பாதி காலியாகி இருக்கும்போது தனது உணவை வேகமாக உண்டு முடித்தவன் இன்னுமொரு காஃபி தயாரிக்க ஆயத்தமானான்.
“நான் போடுறேங்க.” துளசி சட்டென்று எழுந்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நீ சாப்பிடு துளசி.” அவளைத் தடுத்துவிட்டு அவன் வேலையில் மும்முரமாகி விட்டான்.
கிச்சனில் இப்போது புதிதாக ஒன்றிரண்டு நவீன பொருட்கள் குடியேறி இருந்ததால் ஆதிக்கு எதுவும் சிரமமாக இருக்கவில்லை.
அவள் உணவை முடித்தபோது இன்னுமொரு கப் காஃபி அவளுக்காகக் காத்திருந்தது. கிச்சனை க்ளீன் பண்ணிவிட்டு திரும்பிய பெண்ணைப் பின்னாலிருந்து இரு கைகள் அணைத்தன.
“துளசி…” அவள் காதோரம் சரசமாக ஒரு அழைப்பு. துளசி வெட்கம் பொங்க தலையைக் குனிந்து கொண்டாள்.
“ஏய்! என்னைப் பாரு துளசி.” மனைவியைத் தன் புறமாக திருப்பி அவள் கண்களை உற்று நோக்கினான் ஆதி.
“மனசுல… சந்தோஷம் சும்மா பொங்கி வழியுது, உங்கிட்ட அதைக் கொட்டாம வேற யார்கிட்ட கொட்டுறது துளசி?” கணவனின் உள்ளத்து ஆதங்கத்தைப் புரிந்து கொண்டவள் போல அவன் கண்களை இப்போது பார்த்தாள் பெண்.
தன் கன்னங்களைப் பற்றியிருந்த அவன் வலது உள்ளங்கையைப் பிரித்து அதில் முத்தம் வைத்தாள். கண்களோடு இதழும் சேர்ந்து புன்னகைத்தது.
“தான்க் யூ டார்லிங்!”
“எதுக்கு?”
“தெரியலையே!”
“காரணமே இல்லாம யாராவது தான்க் யூ சொல்லுவாங்களா?”
“சொல்லணும்னு தோணிச்சு, சொல்லிட்டேன்.”
“அப்ப நானும் சொல்லணுமா?”
“தோணிச்சுன்னா சொல்லு.”
“எனக்குத் தோணலை.” சட்டென்று சொன்னாள்.
“ஐயையோ!” அவன் குரல் சிரித்தது.
“நமக்குள்ள எதுக்கு இதெல்லாம்னுதான் தோணுது.”
“ஹா… ஹா…” அவன் இப்போது வாய்விட்டுச் சிரித்தான்.
“ரொம்ப பேசுறேனா?”
“இல்லையில்லை… நீ இப்பிடி பேசுறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு துளசி.” சொல்லிவிட்டு அவன் சற்றே சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.
“என்னாச்சு?”
“ஒன்னுமில்லையே.”
“பொய் சொல்றீங்க.” அவன் இப்போது மீண்டும் சிரித்தான்.
‘அது என்ன எப்பப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு?! ஆளை மயக்குற மாதிரி!’ மனதுக்குள் வைது கொண்டது அவள் இளமை. ஆனால் அவன் வேறு பேசினான்.
“அம்மா,அப்பா, வீடு… எல்லாத்தையும் விட்டுட்டு இவ்வளவு நாள் தள்ளியிருந்தது இதுதான் ஃபர்ஸ்ட் டைம் துளசி.”
“ஓ…”
“ஃப்ளைட் ஏறும்போது… ரொம்ப கனத்த மனசோடதான் புறப்பட்டு வந்தேன்.” அவன் இந்திய வருகைக்கான காரணம் அவள் காதுகளுக்கும் எட்டி இருந்ததால் துளசி லேசாக புன்னகைத்தாள்.
அவள் கை கணவனின் தோள்களை லேசாக வருடிக் கொடுத்தது, ஆறுதல் சொல்வது போல.
“என்னடா இப்பிடி எல்லாத்தையும் தூக்கிக் குடுத்துட்டுப் போறோமே… இந்த நிலைமைக்கு வர எவ்வளவு உழைச்சிருப்போம்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சு… கடவுள் மேல செம கோபம் வந்துச்சு.”
“ஐயையோ!”
“தாமஸ் கூட அன்னைக்கு கேத்தரின் பத்தியெல்லாம் பேசி என்னோட மூடை மாத்தினான்னா பாரேன்.” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் ஆதி.
“அது யாரு கேத்தரின்?” கேள்வி படு நிதானமாக வந்தது.
“என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்.” குறும்புடன் வந்தது பதில்.
“ஓ… இந்த அழகுக்கு இதெல்லாம் வேற உண்டா அங்கே?!”
“அடிங்! என்னோட அழகுக்கு என்னடி குறைச்சல்?”
‘குறைச்சல்னு யாரு சொன்னா? எல்லாம் கூடுதலா இருக்குதேங்கிற பயம்தான்!’ மனதுக்குள் பெருமையோடு பயந்து கொண்டாலும் வெளியே வேறு பேசியது பெண்.
“சரி சரி, கேத்தரின் யாருன்னு உங்கம்மாக்கிட்ட நாங்க ஏற்கனவே போட்டு வாங்கியாச்சு, நீங்க மேட்டருக்கு வாங்க.”
“அடிப்பாவி!”
“அதுக்கப்புறம் என்ன ஆச்சு? ஆண்டவன் கூட சண்டைப் போட்டீங்களா இல்லையா?” அவள் விட்ட இடத்தை மீண்டும் ஆரம்பித்துக் கொடுத்தாள்.
“சண்டையெல்லாம் போடலை, ஆனா… ஒரு விரக்தியான சிந்தனைன்னு வெச்சுக்கோயேன், எதுக்கு இப்பிடியெல்லாம் நடக்குது? நடக்கிறதெல்லாம் நன்மைக்குன்னு சொல்லுறாங்களே… இதுல நமக்கென்ன நன்மை இருக்குன்னு பல மாதிரி சிந்தனை ஓடிச்சு.”
“ம்…” அவள் விளையாட்டுப் பேச்சு இப்போது காணாமல் போயிருக்க, அவன் கைகள் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டது.
“இங்க வந்ததுக்கு அப்புறமாத்தானே எல்லாம் புரிஞ்சுது!”
“என்ன புரிஞ்சுது?” அவன் அணைப்பில் சுகமாய் நொறுங்கிய படியே கேள்வி கேட்டாள் துளசி.
“ஆண்டவன் ஒன்னைத் தட்டிப் பறிச்சாலும் கூட அதுல எவ்வளவு நன்மை இருக்கும்னு.” நெகிழ்வோடு அவன் சொல்ல… துளசிக்கு தன் வாழ்க்கைத் தொலைந்து போன ஒரு வெள்ளிக்கிழமை ஞாபகம் வந்தது.
ஏனோ அருண்குமார் அவன் மனக்கண்ணில் வந்து போனான். அவனோடு அவள் வாழ்க்கை அமைந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும்?!
காதலோடு இங்கே ஒருவன் இப்போது கசிந்து உருகுகிறானே… இவன் போல அவனால் காதலித்திருக்க முடியுமா? சிந்தனையின் போக்கு தவறென்று புரிந்த போதும் துளசியால் அதைத் தவிர்க்க இயலவில்லை.
கல்யாண கனவுகள் அவளுக்குள்ளும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவை காணாமலும் போனது.
ஒரு கட்டத்தில் வயதுக்குரிய கனவுகள் சிதைந்தே போனது. வாழ்க்கை வெறும் சூனியமாக… ‘தந்தைக்காக’ என்ற அடைமொழியோடு மாத்திரம் நடைப்போட்டது.
துளசி அதற்குப் பழகியும் போனாள். ஜாதகம், சம்பிரதாயம் என்று வருபவர்கள் வந்த வேகத்தில் காணாமலும் போய்விடுவார்கள்.
அதனாலேயோ என்னவோ அருண்குமாரை நான்கோடு ஐந்தாக அவளால் பார்க்க முடிந்தது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி தூர நிறுத்த முடிந்தது.
“துளசி!” சட்டென்று கலைந்தாள் துளசி. ஆதி அவளையே பார்த்தபடி இருந்தான்.
“என்னாச்சு டா?”
“ம்ஹூம்… ஒன்னுமில்லை.”
“இப்போ நீ பொய் சொல்றே.” அவளைப் போலவே சொல்லிவிட்டு மீண்டும் அவன் சிரித்தான்.
“ஒன்னைத் தட்டிப் பறிச்சா அதுல நன்மை இருக்கும்னு சொன்னீங்களே… அதைப்பத்தி யோசிச்சேன்.”
“இதுல யோசிக்க என்ன இருக்கு?”
அதற்கு மேல் துளசி பேசவில்லை. அனைத்தையும் அங்கே இழந்துவிட்டாலும், இங்கே நீ கிடைத்திருப்பது எனக்குப் போதும் என்று சொல்பவனிடம் என்ன பேச?
மறந்தும் அருண்குமாரை பற்றி அவள் மூச்சு விடவில்லை. கெட்ட கனவாக தொலைந்து போனவனை எதற்கு நினைக்க வேண்டும்?
மனது இன்பத்தில் பொங்கித் திளைக்க… எம்பி கணவனின் கன்னத்தில் முத்தமிட்டாள் துளசி.
“அவ்வளவுதானா?” அவன் வெகுவாக குறைப்பட்டுக் கொள்ளவும் அவன் இதழ்களை நெருங்கினாள். சரியாக அப்போது ஆதியின் ஃபோன் சிணுங்கியது.
“மை காட்!” அவன் வாய்விட்டுக் காட்டமாக கத்த துளசி வாய்பொத்திச் சிரித்தாள். ஃபோனை எட்டிப் பார்க்க, அது பாட்டி அழைக்கிறார் என்றது.
“பாட்டி கூப்பிடுறாங்க.”
“என் லைஃப்ல முக்கியமான சந்தர்ப்பங்கள்ல எல்லாம் பாட்டி ஏன்தான் இப்பிடி தொல்லைப் பண்ணுறாங்களோ!” அங்கலாய்த்தாலும் அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்க பாட்டி.”
“ஆதீ… நாளைக்கே கிளம்பி வந்திடு.” பாட்டியின் குரல் துளசிக்கும் தெளிவாகவே கேட்டது.
“எதுக்கு பாட்டி? நேத்துத்தானே வந்தோம்?”
“டேய்! நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்.”
“நான் ஏற்கனவே பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணியாச்சு.”
“அட ஆண்டவா! நம்பிக்கு பொண்ணு பாராக்க போறோம், நீயும் துளசியும் கிளம்பி வந்துடுங்கோ.” அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“பாட்டி கொழுப்பைக் பார்த்தியா? ஒருத்தன் புதுப் பொண்டாட்டியோட கிளம்பி வந்திருக்கானே… அவனுக்கு இப்போ வர வசதிப்படுமா, அதெல்லாம் கிடையாது… நீ கிளம்பி வா, அவ்வளவுதான்… ஆர்டர் போட்டுட்டு ஃபோனை வெச்சாச்சு.”
“நாளைக்குக் காலைல கிளம்பலாங்க.”
“என்ன துளசி… நான் இன்னும் ரெண்டு நாள் தங்கலாம்னு ப்ளான் பண்ணி இருந்தேன்.”
“நம்பிண்ணாக்கு நடக்கிற முதல் விசேஷம், நாம கண்டிப்பா அங்க இருக்கணும், அதுக்கப்புறம் வேணும்னா திரும்பவும் இங்க வரலாமே.”
“ம்… அதுவும் சரிதான்.” அரை மனதாக ஒப்புக் கொண்டான் ஆத்ரேயன்.
***
அத்தனைப் பேரும் பெண் பார்க்கவென்று பெண் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அத்தனைப் பேரும் என்றால் ஒட்டுமொத்த பாரதி தெரு, மற்றும் நம்பியின் தாய்வழி தந்தைவழி உறவினர்கள்.
மாப்பிள்ளை வீட்டாரின் ஜனக்கட்டைப் பார்த்துப் பெண் வீட்டார் மிரண்டு போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தே நம்பி தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டான். சம்பிரதாயத்திற்காக ஒரு தடவைப் பெண்ணைப் பார்த்துவிட்டு கல்யாண தேதியைக் குறிக்கவே இப்போது அனைவரும் கிளம்பி வந்திருந்தார்கள்.
நம்பி அமர்ந்திருந்த தினுசைப் பார்த்தாலே புரிந்தது, பெண்ணை அவனுக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்று.
துளசியும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். இன்று காலையிலேயே சிதம்பரத்திலிருந்து கிளம்பி வந்துவிட்டார்கள்.
“பொண்ணாத்திலேர்ந்து என்ன எதிர்பார்க்கிறேள்?” பெண் வீட்டைச் சேர்ந்த ஒரு வயதானவர் பேச்சை ஆரம்பித்து வைத்தார்.
“பொண்ணைத்தான் எதிர்பார்க்கிறோம்.” அமைதியாக சொன்னார் தாத்தா. சட்டென்று அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள்.
“ஓய் அமுதவாணரே, அவா லௌகீகம் பத்தி கேக்குறா.” தாத்தாவின் உறவினர் ஒருவர் உரிமையாகச் சொன்னார்.
“நேக்கு அதெல்லாம் அம்பது வருஷத்துக்கு முன்னாடியே என்னன்னு தெரியலை, இப்போவா தெரியப்போறது?” தாத்தா அங்கலாய்க்க பெண் வீட்டார் முகம் மலர்ந்து போனது.
“பெரியவா அதையெல்லாம் கண்டுக்கப்படாது, எங்க பொண்ணுக்குன்னு நாங்க இத்தனை நாள் சேமிச்சதைப் பண்ண அனுமதிக்கணும்.” பெண்ணின் தந்தை சொல்ல,
“உங்க இஷ்டம்.” என்றார் தாத்தா.
பெண் ஸ்வாதி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.
இம்ரானின் தங்கை, ராபினின் தங்கை, துளசி மூவரும் சேர்ந்து பெண்ணைக் கேலி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
“நம்பி… பொண்ணு கூட பேசலையா நீ?” ஆதி வேண்டுமென்றே நம்பியை சீண்டினான்.
“டேய்! நீ கொஞ்சம் சும்மா இர்றா.”
“நீயெல்லாம் என்னத்தைக் கல்யாணம் பண்ணி… பாவம் அந்தப் பொண்ணு.” சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டென்று,
“மாப்பிள்ளைக்குப் பொண்ணு கூட ஏதோ தனியா பேசணுமாம்.” என்றான் சத்தமாக.
சபை அப்படியே அடங்கிப் போனது. நம்பி விறைத்துப் போனான்.
“டேய் ஆதி! சண்டாளா! ஏன்டா?” நண்பர்கள் இருவரும் வாய்க்குள் முணுமுணுக்க, பெண்ணின் அப்பா சிரித்துக் கொண்டார்.
“பெரியவாக்கு ஓகேன்னா தாராளமா பேசட்டும், வாழப்போறது அவா ரெண்டு பேரும்தானே.”
மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் தெரியும், இது ஆதியின் சதி என்று. நம்பி ஒரு களிமண் என்பது அவர்கள் அறியாததா?
“என்ஜாய் நம்பி, இதெல்லாம் லைஃப்ல ஒரு தரம்தான்டா.” முதலில் முறைத்த நம்பி இப்போது லேசாக சிரித்தான்.
“இங்கப்பாரு நம்பி, என்ன நடந்ததுன்னு அப்புறமா கேட்பேன், ரெண்டு வார்த்தைப் பேசிட்டு வந்தேன்னு மட்டும் சொன்னே…” மிரட்டினான் ஆதி.
“டேய்! வேற என்னடா பண்ணணும்?”
“ஒன்னை நம்பி ஒருத்தன் பொண்ணைக் குடுக்கிறான் பாரு… அந்த மடையனைச் சொல்லணும்!” தலையில் அடித்துக்கொண்டான் ஆதி.
“அதாலதான் பயமா இருக்கு ஆதி, ஒரு மனுஷன் என்னை நம்பி பொண்ணை அனுப்புறார் பாரு.”
“இவன் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே… டேட் ஃபிக்ஸ் பண்ணப் போறாங்கடா, ரோட்டுல போற பொண்ணுக்கிட்ட உன்னை ரொமான்ஸ் பண்ணச் சொல்லலை.”
இவர்கள் இப்படி அரட்டை அடித்துக் கொண்டிருக்க துளசி கணவனைக் கேள்வியாக பார்த்தாள். அவளைத் தன்னருகில் அழைத்தவன்,
“பாரதி தெருவுல இருக்கிற அத்தனைப் பொண்ணுங்களுக்கும் அவனை அண்ணனாக்கி கெடுத்து வெச்சிருக்கீங்கடி.” என்றான் காட்டமாக.
அதையேதான் அப்போது ஸ்வாதியிடமும் சொல்லிக் கொண்டிருந்தான் நம்பி. சிவப்பு நிற பட்டுடுத்தி வீட்டின் பின்கட்டில் நின்றிருந்தது பெண்.
“பொதுவா கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கிட்ட எங்கம்மாவைக் கொஞ்சம் சமாளிச்சுக்கோ, மன்னியைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… இப்பிடித்தான் சொல்லுவா.”
நம்பியின் பேச்சைக் கேட்டு அந்தப் பெண் சிரித்தது. பாரதி தெருவின் சங்கதி அவள் காதுகளையும் எட்டி இருக்கும் போலும்.
“நானும் கேள்விப்பட்டேன்.”
“ஒரு தெருவையே நீ சமாளிக்க வேண்டியிருக்கும் ஸ்வாதி.”
“பரவாயில்லைன்னா, அதான் நீங்க கூடவே இருப்பேளே.” அந்த வார்த்தைகளில் நம்பி உருகிப் போனான்.
“ஆனா எல்லாரும் ரொம்ப நல்லவா ஸ்வாதி, அங்க வந்தா அதை நீயே புரிஞ்சுப்பே, எனக்கு ஒரேயொரு விஷயம் மட்டுந்தான் உங்கிட்டச் சொல்லணும்.”
“என்ன அது?” விழி மலர்த்தித் தன்னிடம் பெண் கேள்வி கேட்ட அந்த நொடி நம்பி முழுதாக அவளிடம் வீழ்ந்து போனான்.
“அவா ஆத்துக்குப் போகும்போது நான் ரொம்ப ஆச்சாரமெல்லாம் பார்க்க மாட்டேன், நீயும் அதைக் கண்டுக்கப்படாது.”
“அப்போ அவா ஆத்துக்குப் போனா நீங்களும் நான் வெஜ் சாப்பிடுவேளா?” கண்களில் கிலியோடு கேட்டாள் ஸ்வாதி.
“இல்லையில்லை… அப்பிடியெல்லாம் இல்லை ஸ்வாதி, ஏதாவது ஃபங்ஷன்னா அவாளே நமக்கு ஏத்தா மாதிரி எல்லாம் பண்ணிடுவா.”
“ஓ…”
“ராபின் எங்கூட உக்கார்ந்து தேவாரம் பாடுவான், இம்ரான் நோன்பு வெக்கும்போது நானும் சேர்ந்துப்பேன்.”
“அதெல்லாம் பண்ணுவேளா? நீங்க சொல்றதெல்லாம் நேக்குப் புதுசா இருக்கு, ஆனா நன்னாருக்குன்னா, நானும் கத்துக்கிறேன்.” சிரித்துக்கொண்டே சொன்னது பெண். நம்பி அவள் கையைப் பிடித்து லேசாக அழுத்திக் கொடுத்தான், மகிழ்ச்சியாக உணர்ந்தான்.
“வரும்போது ஆதி ஒன்னு சொல்லி அனுப்பினான்.” இப்போது நம்பியின் முகம் முழுவதும் புன்னகை.
“யாரு? துளசி ஆத்துக்காரரா?”
“ஆமா, அந்தக் கடங்காரனேதான்.”
“ஐயையோ! என்னவாம்?” பெண் வாய்விட்டுச் சிரித்தது. ஆதி சொன்னதை நம்பி அவளிடம் சொல்ல இன்னும் பொங்கிச் சிரித்தது.
“ரொம்ப கலாட்டாப் பேர்வழியோ?”
“ரொம்ப…”
“பாவம்னா துளசி… உங்க ஃப்ரெண்ட் கிட்டச் சொல்லுங்கோ, நான் எதுவுமே பண்ணலை, என்னோட ஆத்துக்காரிதான் எல்லாம் பண்ணினான்னு.” சொல்லிவிட்டுத் தன் கையைப் பற்றியிருந்த நம்பியின் கையில் ஒரு முத்தம் வைத்துவிட்டு உள்ளே ஓடிவிட்டது பெண்.
நம்பி அப்படியே நின்று விட்டான். புறங்கையில் அவள் முத்தம் வைத்த இடம் குறுகுறுத்தது. சிரித்துக் கொண்டான்.
ஒன்றும் நடக்கவில்லை என்று ஆதியிடம் சொன்னால் கூட பரவாயில்லை. இப்போது நடந்ததைச் சொன்னால் அவ்வளவுதான்… கொன்று விடுவான்!
***
அடுத்து வந்த ஒரு வாரமும் எப்படிப் போனதென்று பாரதி தெருவில் இருந்த யாருக்குமே தெரியாது. பம்பரம் போல அனைவரும் சுழன்று கொண்டிருந்தார்கள்.
முதலில் அபிராமியும் ஷிவானியும் டெல்லி கிளம்பினார்கள். அவர்களோடு ஷாப்பிங் அது இதுவென்று அலைந்து திரிந்தாள் துளசி.
பிற்பாடு சுந்தரமூர்த்தியும் மார்க்ரெட்டும் யூகே கிளம்பினார்கள். அவர்களுக்கு வேண்டியதை வாங்குவது, இந்திய உணவுப் பொருட்களைக் தயாரித்து பாக்கெட் பண்ணுவது என்று பொழுது பறந்தது.
துளசி ஓய்ந்து போனாள். ஆதியோடு சரியாக பேசக்கூட அவளுக்குப் பொழுது கிடைக்கவில்லை. அடுத்த வாரம் நம்பியின் நிச்சயதார்த்தம்.
ஒரு மாதம் கழித்து திருமணம் என்று உறுதியாகி இருந்தது. பாட்டி இப்போதிருந்தே ஒவ்வொன்றாக திட்டம் போட ஆரம்பித்து விட்டார்.
அன்றைக்கு ஆதிக்கு வெளியே ஒரு வேலை இருந்தது. வீடு திரும்ப கொஞ்சம் தாமதமாகும் என்பதால் துளசியை கூட அவனோடு அழைத்துச் செல்லவில்லை.
“ரொம்ப டயர்டா தெரியுறே, நீ ரெஸ்ட் எடு துளசி.” என்று சொல்லிவிட்டு அவன் மாத்திரம் கிளம்பி போயிருந்தான்.
புதிதாக ஆரம்ப இருக்கும் பிஸினஸ் சம்பந்தமாக ஒருவரைப் பார்க்க வேண்டி இருந்தது.
பாரதி தெருவில் அந்த ப்ளாக் ஆடி நுழையும்போதே நம்பி நின்றிருந்தான். காரை கண்டதுதான் தாமதம், வேகமாக ஆதியிடம் வந்தான்.
“எங்கடா போய் தொலைஞ்ச? ஃபோனும் வேலை செய்ய மாட்டேங்குது?” நம்பியின் பரபரப்பைப் பார்த்த ஆதி சட்டென்று காரை நிறுத்தினான். எதுவோ சரியில்லை.
“என்னாச்சு நம்பி? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கே?”
“அந்த அருண்குமார் எதுக்குடா நம்ம வீட்டுக்கு வர்றான்?” நம்பி கொதித்தான்.
“அருண் குமாரா? எப்போ வந்தான்?” ஆதியின் தாடை இறுகியது.
“அவன் எப்பவோ வந்து போயாச்சு.”
“அவன் வந்து போகும் வரைக்கும் நீ என்ன பண்ணினே? மொளகா அரைச்சியா?” நண்பனின் குரல் காட்டமாக வர நம்பி திணறிப் போனான்.
“நான் என்னடா பண்ண முடியும்? துளசிக்கிட்ட நான் தனியா பேசணும்னு அவன் சொல்லுறான்.”
“அடி செருப்பால நாயை!” யூகே, நாகரிகம் எல்லாம் ஆடிக்காற்றில் இலவம் பஞ்சாக பறந்தது.
“துளசியும், பரவாயில்லை விடுங்கண்ணான்னு சாதாரணமா சொல்றா.” இதை நம்பி சொன்ன போது ஆதி சற்று நிதானித்தான்.
துளசிக்கு என்றுமே அருண்குமார் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அவனோடு திருமணம் நிச்சயமாகி இருந்த போது கூட அவனை அவள் பெரிது பண்ணியதில்லை. இப்போதும் அப்படித்தான் நினைத்திருப்பாள்.
“ஆதி… என்னடா ஆச்சு?”
“துளசி எங்க இப்போ?”
“அவன் கிளம்பினதுக்கு அப்புறமா வீட்டுக்குப் போனேன்.”
“ம்…”
“என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடுங்கண்ணான்னு துளசி சொன்னா, முகம் ஒரு மாதிரியா இருந்துச்சு ஆதி.”
“நான் பார்த்துக்கிறேன் விடு.”
“ஏதாவது பிரச்சனையா ஆதி? அவன் எதுக்கு இப்போ இங்க வர்றான்?”
நண்பனின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் ஆத்ரேயன் வீட்டை நோக்கிப் போனான். கீழே துளசியை காணவில்லை. மாடிப்படிகளில் கால் வைக்கப் போனவன் அப்படியே நின்றான்.
மாடிப்படிகளின் முடிவில் துளசி அமர்ந்திருந்தாள். முகம் இறுகி இருந்தது. அவள் பக்கத்தில்… அவன் டைரி!
ஆதிக்கு ஒரு கணம் மூச்சு நின்றது. தன்னைச் சமாளித்துக் கொண்டவன் படிகளில் ஏறினான்.
“இது எப்பிடி இங்க வந்துது துளசி?” டைரியை பார்த்த படி ஆதி கேட்க, கணவனைத் தீர்க்கமாக பார்த்தாள் பெண்.
“ஏன்? எனக்குத் தெரியக்கூடாத ரகசியம் ஏதாவது அதுல இருக்கா?”
“உனக்குத் தெரியக்கூடாததுன்னு எதுவும் எங்கிட்ட இல்லை, சில விஷயங்கள் உனக்குத் தேவை இல்லாததா இருக்கலாம்.”
“ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கா என்ன?”
“நிறையவே இருக்கு.”
“ஓ… அப்போ நான்தான் முட்டாளா?” துளசியின் குரல் இப்போது லேசாக உயர்ந்தது.
“அப்பிடி நான் சொல்லலையே.”
“அதுசரி… எப்பவுமே நீங்கதானே பேசி இருக்கீங்க, நீங்க நினைச்சதுதானே நடந்திருக்கு.”
“நான் நினைச்சதை நடத்தியிருந்தாலும் அது சரியான முடிவுதான்னு உனக்கும் தெரியும் துளசி.” இப்போது துளசி கண்களை ஒரு முறை இறுக மூடித்திறந்தாள். எதையோ விரும்பத்தகாததை விழுங்குவது போல இருந்தது அவள் செயல்.
“அன்னைக்கு அப்பாக்கு ஏதாவது ஆகி இருந்தா? அதைக் கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா?”
இப்போது ஆதிக்கு வாயடைத்துப் போனது. துளசிக்கும் அருண் குமாருக்கும் நடக்க இருந்த நிச்சயதார்த்தம் அவனால்தான் தடைப்பட்டது.
வேண்டுமென்றே ஆள் வைத்து மாப்பிள்ளை வீட்டார் வந்த வாகனத்தை ஆக்ஸிடென்ட் பண்ணி இருந்தான் ஆதி.
பிரச்சனை இலகுவாக தீர்ந்து போனது. எந்த சேதாரமும் இல்லாமல் நிச்சயதார்த்தம் நின்று போனது.
ஆனால் சங்கரபாணி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வீழ்வார் என்பது அவன் கூட எதிர்பாராதது.
“வாழ்ந்து முடிச்ச உங்கப்பாவை விட, வாழ வேண்டிய நீதான் எனக்குப் பெரிசா தெரிஞ்சே துளசி.” நிதானமாக வந்தது பதில்.
“என்னைப் பத்தி அவ்வளவு அக்கறைப்பட நீங்க யாரு?” கோபமாக கத்தினாள் துளசி. மாடிப்படிகளில் யாரோ மேலே ஏறி வரும் சத்தம் கேட்டது.
“நான் யாருன்னு உனக்குத் தெரியாது?” ஆதியின் குரலும் இப்போது கர்ஜித்தது.
“ஆதீ… என்னடா நடக்குது இங்க?” வந்தது நம்பி.
“நம்பிண்ணா!” அண்ணனைப் பார்த்த மாத்திரத்தில் அவனிடம் ஓடிப்போனாள் துளசி.
“துளசிம்மா என்னாச்சு? ஏன் அழறே? என்னதான் ஆச்சு ஆதி?”
“அவர்கிட்ட எதுவும் கேக்காதீங்க நம்பிண்ணா, சுயநலம் புடிச்ச மனுஷன்.”
“ஆமான்டீ…” ஆதியின் கோபம் இப்போது கரை கடந்திருந்தது. தன்னை இது நேரம் வரை உதாசீனம் செய்த மனைவி நம்பியிடம் அடைக்கலம் புகுந்தது வேறு அவனை இன்னும் சீண்டி இருந்தது.
“நான் சுயநலம் புடிச்ச மனுஷன்தான், பார்த்த நொடி உன்னை அவ்வளவு புடிச்சுது, என்ன ஏதுன்னு நிதானமா பார்க்கலாம்னா ஒருத்தன் உம்மேல அவ்வளவு லவ்வுங்கிறான்… போதாததுக்கு இன்னொருத்தன் கூட நிச்சயதார்த்தமாம்!” ஆதிக்கு இப்போது மூச்சு வாங்கியது.
“ரெண்டு பேரையும் ஸீன்ல இருந்து நான்தான் தூக்கினேன், திட்டம் போட்டுத்தான் தூக்கினேன், இப்போ அதுக்கு என்னாங்கிறே?!”
“டேய் ஆதி! என்னடா இதெல்லாம்?!” நம்பி எதையும் நம்பமுடியாமல் பதறினான்.
“நீ தங்கை தங்கைன்னு உருகின துளசி எனக்குத்தான் எங்கிறேன், இதோ நிக்கிறாளே இந்த துளசி… அவ எனக்கு மட்டுந்தாங்கிறேன்!”
கையை ஓங்கி சுவரில் குத்தியவன் தடதடவென படிகளில் இறங்கிப் போய்விட்டான். அந்த ப்ளாக் ஆடி சீறிப்பாய்ந்து போகும் சத்தம் இவர்கள் இருவருக்கும் கேட்டது.
திகைத்துப் போய் நின்றிருந்தார்கள் நம்பியும் துளசியும்!