நீயில்லை! நிஜமில்லை! 1

நீயில்லை! நிஜமில்லை! 1

நீயில்லை! நிஜமில்லை! 1

 

இங்கே,

எதற்கும் நீ பொறுப்பானவன் அல்ல!

ஆனால்,

உனக்கான எல்லாவற்றிற்கும் 

நீயே காரணமானவன்!

                                         

வானில்‌ இருந்து கீழிறங்கிய அந்த எந்திர ராட்சத பறவை லாவகமாக தரையை அடைந்தது. சில நிமிடங்களில் அதன் வயிற்று பகுதியை பிளந்து கொண்டு பயணிகள் கூட்டம் இறங்கி வர, இந்த நள்ளிரவு வேளையில் தூக்க கலக்கத்தின் சோர்வையும் பயணம் முடிந்து விட்ட சந்தோசத்தையும் ஒவ்வொரு முகங்களும் பிரதிபலித்தன. 

 

அதில் ஒருவன் முகம் மட்டும் வெறுமையும் விரக்தியுமாய்…

 

அவன் அரவிந்த் வெற்றிமாறன்!

 

கிட்ட தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு தாய்நாடு திரும்பி இருக்கிறான். ஆனால் அதற்கான சந்தோசம் சிறிதும் அவனிடம் தென்படவில்லை.

 

மூன்று மாதங்களுக்கு முன்பும் இங்கு வந்திருந்தான் தான். தன் ஒரே உற்ற சொந்தமான தந்தையின் இறுதி சடங்கிற்காக அவசரமாக வந்து, அவருக்கு தன் இறுதி கடமைகளை செய்து முடித்து, சில நெறுக்கடி வேலைகளினால் தங்க முடியாமல் கிளம்பி இருந்தான்.

 

இப்போது மொத்தமாக வந்து விட்டான். இனி இங்கு தான் என்ற முடிவோடு வந்து விட்டான்.

 

விமான நிலையத்தில் இருந்து தன் உடைமைகளோடு வெளிவந்தவன், வாடகை டாக்ஸியை பேசிவிட்டு அதில் ஏறி அமர்ந்து கொள்ள, இரவின் வெற்று சாலையில் அந்த வாகனம் வேகமெடுத்தது.

 

அவனின் கல்லூரி காலத்தில் இருந்தே வெளிநாட்டு வாழ்க்கை மீது அப்படியொரு தீராத மோகத்தை வளர்த்துக் கொண்டிருந்தான். அதே உத்வேகத்தில் அவன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஆஸ்திரேலியாவில் தனக்கான வேலையும் கிடைத்துவிட, தாய் மண்ணிற்கு ஒரு பெரிய ‘குட் பை’ சொல்லிவிட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு வெளிநாடு பயணமாகி இருந்தான்.

 

அதன்பிறகு தாய்நாடு திரும்பும் எண்ணம் அவனுக்கு வந்ததில்லை. அந்த அயல்நாட்டு ஆடம்பர வாழ்க்கையில் அத்தனை ஒன்றிவிட்டிருந்தான். அவனது தந்தையும் மகனின் விருப்பத்திற்கு எப்போதும் தடை சொன்னவர் இல்லை. நேரம் கிடைக்கும் போது இவரே மகனிடம் சென்று அளாவி விட்டு வருவது என்று சந்தோஷமாகவே இத்தனை வருடங்கள் கழிந்தன அவர் இருந்த வரை.

 

தந்தையின் இழப்பு அவனை நிலைகுலையச் செய்து விட்டிருந்தது உண்மை. அத்தோடு இந்த வருடம், அவரின் தொழிலும் நஷ்டத்தில் இறங்கி செல்வதை இவனுக்கும் தெரிவித்தே இருந்தார். ஆனாலும் அதை இவன் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விட்டிருந்தான்.

 

இப்போது இவன் மனது கிடந்து அடித்துக் கொண்டது. தன்னை உயிராய் நேசித்த தந்தையின் இறுதி நேரத்தில் தான் இல்லாது போனது அவனை கலங்க வைத்திருந்தது. இத்தனை வருடம் சொர்க்கமாக இருந்த அவன் வெளிநாட்டு வாழ்க்கை, இந்த மூன்று மாதங்களில் நரகமாக மாறி போயிருந்தது அவனுக்கு.

 

”ஒரேயொருமுறை நம்ம கம்பெனிய வந்து பாருடா, நானும் உன் அம்மாவும் சின்னதா உருவாக்கி பெரிய அளவுல தூக்கி நிறுத்தின தொழில் டா அது. இப்ப என் கண் முன்னாலேயே சறியறதை என்னால தாங்க முடியல அரவிந்தா…” வெற்றிமாறன் கவலையாக அன்று சொன்னதை இவன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

 

”அப்பா, இப்ப யாரு அதிகமா சைக்கிள் லைக் பண்றாங்க, எல்லாரும் பைக், காருன்னு மாறி போயிட்டே இருக்காங்க. அதுவும் நம்ம சேல்ஸ் மந்தமானதுக்கு காரணம், நம்ம கம்பெனி டிஸைன்ஸ் ஓல்ட் மாடல் பா, அதால தான் இப்ப வந்திருக்க வெரைட்டி மாடல் சைக்கிள்ஸ் கம்பெனிஸோட நம்ம கம்பெனி போட்டி போட முடியல” தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு பொருள் விற்பனை மந்தமானதற்கான காரணத்தை இவன் ஓரளவு சரியாகவே கணித்து சொன்னான்.

 

”நீ சொல்றது எனக்கும் புரியுது‌ டா, இப்பவும் கொஞ்சம் முயற்சி செஞ்சா, நம்ம கம்பெனிய பழைய நிலைக்கு தூக்கி விடலாம். எப்பவும் நான் துவண்டு போற நேரத்துல சித்து சப்போட்டா இருந்தா, இப்ப எனக்கு சப்போட் தேவைபடுது டா, அவதான் என்கூட இல்ல, நீயாவது வாடா ப்ளீஸ்” வழக்கத்திற்கு மாறாக அப்பா, அம்மாவை நினைத்து உருக்கமாக பேசியும், இவன் அதை தட்டி கழிக்கவே செய்தான்.

 

“நோ வே ப்பா, நீங்க எவ்வளவு சென்டிய பிழிஞ்சாலும் என்னால இன்டியா வர முடியாது. நீங்க நம்ம கம்பெனி ஷேர்ஸ் சேல் பண்ணிட்டு என்னோட இங்க வந்திடுங்க, எந்த டென்ஷனும் இல்லாம லைஃபை ஃபுல்லா என்ஜாய் பண்ணலாம். இங்கேயே ஒரு செம்ம ஃபிகரா பார்த்து எனக்கு மேரேஜ் முடிச்சு வைச்சா, நெக்ஸ்ட் இயர் நாங்க உங்க கம்பெனிக்கு ஜூனியரை பிரசென்ட் பண்ணுவோமா, ஓகே தானே” தந்தையின் மனநிலை மாற்ற குறும்பாக முடித்திருந்தான்.

 

”படவா, அப்போ அங்க லவ் ட்ராக் ஓட்டிட்டு இருக்கியா, அதான் நான் இவ்ளோ கூப்பிட்டும் இங்க வர மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறியா?” வெற்றிமாறனும் மகனின் விளையாட்டு பேச்சில் கலந்துக் கொண்டார்.

 

அரவிந்திற்கு வெளிநாட்டு வாழ்வின் மீது இருக்கும் ஈடுபாடு தங்கள் தொழில் மீது இல்லை என்பது‌ அவருக்கு நன்றாகவே தெரியுமாதலால் மேலும் அவனை வற்புறுத்தி பயனில்லை என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டார்.

 

”நானும் தீவிரமா தேடிட்டு தான் இருக்கேன் டேட், பட், இங்க இருக்க பொண்ணுங்களை பார்த்தா சைட் அடிக்க, டேட் போக தான் தோனுதே தவிர, இவளோடதான் நம்ம லைஃப் ஷேர் பண்ணணும்னு… அந்த ஃபீல் வரல ப்ச்” இப்போது தந்தையும் மகனும் நண்பர்களாக மாறி இருந்தனர்.

 

”வரும் டா, இவ தான் எனக்கு எல்லாம்னு அந்த ஃபீல் ஒரேயொரு பொண்ணு மேல தான் வரும். அப்ப அவளுக்காக என்ன செஞ்சாலும் சரின்னு தோனும்… என்ன செஞ்சாலும்…!” அவர் உணர்ந்து சொல்ல, 

 

”என்னப்பா ஃபிளாஷ் பேக் போயிட்டிங்களா?” அன்று அரவிந்த் சொல்லி சிரிக்க, அவரும் சிரிப்புடனேயே அழைப்பை துண்டித்து இருந்தார்.

 

ஆனால் அடுத்த வாரமே தன் தந்தை இல்லாமல் போய் விடுவார் என்று அவன் எண்ணி இருக்கவே இல்லை. அவன் கண்கள் இப்போதும் கலங்கின.

 

தன் அப்பா அழைக்கும் போதே தான் வந்திருந்தால் ஒருவேளை அவர் இப்போது தன்னுடன் இருந்திருப்பார் என்று தோன்றுவதை அவனால் ஒதுக்க முடியவில்லை.

 

பிறப்பும் இறப்பும் இங்கே விதிக்கபட்டது. எதற்காகவும் யாருக்காகவும்‌ அது மாறாதது என்பது அவன் அறிவுக்கு புரிந்தும் மனம் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

 

தன் அப்பாவின் இறப்பிற்கு தானும் ஒருவித காரணம் என்ற குற்ற குறுகுறுப்பிலிருந்து அவனால் வெளிவரவும்‌ முடியவில்லை. அதனால் பழைய உற்சாத்தோடு அவனால் வேலையில் கவனம் பதிக்கவும் முடியவில்லை. 

 

தீராத மன சஞ்சலத்தில் உழன்றவன்,

ஒரு முடிவோடு தன் அப்பாவின் கடைசி ஆசையாக கருதி, தான் நேசித்த வேலையை உதறிவிட்டு இதோ இங்கே வந்து விட்டான்.

 

இனியாவது அவன் மன வேதனையின் குற்ற குறுகுறுப்பும் மன இறுக்கத்தின் வெறுமை நச்சரிப்பும் தீருமா? என்ற கேள்விக்கான பதில் இப்போதும் அவனிடம் இல்லை.

 

டேக்ஸியில் இருந்து இறங்கி நிமிர்ந்தவன் பார்வை தங்கள் வீட்டின் மீது படிந்தது. பார்வைக்கு இரண்டு அடுக்கில் அகன்ற அழகான குட்டி பங்களா தெரிந்தது. கேட்டை திறந்து நடக்க, முன்புறம் இருபக்கமும் சிறிய தோட்டம் அமைய பெற்று அழகு சேர்த்தது. தன் பையிலிருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்தான்.

 

கூடத்தின் இரவு விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில், சித்தாரா, வெற்றிமாறன் இருவரும் இணையாக புன்னகை விரிய, மகனை வரவேற்றனர், காய்ந்த பூமாலை ஆடிய சட்டத்தில் இருந்து. 

 

கூடத்தின் சுவரில் அவர்களின்  பெரிதாக்கப்பட்ட நிழற்படம் அமைந்திருந்தது. வீட்டின் விளக்கை ஒளிர செய்தவன், அவர்களின் நிழற்படத்தை வருடித் தந்தான்.

 

முன்பு அன்னை மட்டுமே இங்கே நிழற்படமாக தனித்திருந்தார். இப்போது தந்தையும் அவருடன் இணைந்து கொண்டார். அவர்களின் ஆத்மாக்கள் கூட இணைந்து இருக்கும் என்பன போன்ற விசித்திர சிந்தனைகள் அவனுள் வந்து போனது. சின்னதாய் புன்னகைக்க முயன்றான்.

 

“டேட்… எப்பவும் உங்களுக்கு என்னைவிட உங்க ஆளு தான் முக்கியம், அதான் என்னை இப்படி தனியா விட்டுட்டு சித்தும்மாகிட்ட போயிட்டீங்க இல்ல…”‌ என்றவன் குரல்‌ கரகரத்தது.

 

வெற்றிமாறனும் சித்தாராவும் காதல் பறவைகள். பார்வைகள் பரிமாறி, இதயங்கள் இடம்மாறி, காதல் வானில் சிறகடித்து பறந்து, இருவீட்டாரின் சம்மதம் பெற்று, திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.

 

தங்களுக்கான சுயதொழிலைத் தொடங்கி, தங்களின் வாழ்க்கையின் வெற்றிகளை தாங்களே செதுக்கி கொண்டவர்கள். அவர்களுக்கு குட்டி இளவரசனாக கிடைத்தவன் தான் அரவிந்த்.

 

திருமணமான சில வருடங்களில், சித்தாராவிற்கு கர்பப்பை புற்று உறுதியாக, அவரின் கர்பப்பை நீக்கப்பட்டது. பிள்ளைபேறு எட்டாகனியான வேதனையைப் போக்கவே, ஆசிரமத்தில் இருந்து நான்கு வயது குழந்தை அரவிந்தை முறைப்படி தத்தெடுத்துக் கொண்டனர் அவர்கள்.

 

தனக்கான அம்மா, அப்பா கிடைத்து விட்டதில் அந்த சிறுவனுக்கு அத்தனை கொண்டாட்டம். அதே மகிழ்ச்சி பெற்றவர்களையும் தொற்றிக் கொள்ள, அந்த சிறிய குடும்பத்தில் அன்பிற்கும் சந்தோசத்திற்கும் வம்படியான குறும்பு சண்டைகளுக்கும் குறைவின்றி நிறைவாகவே கழிந்தது. சித்தாரா இருக்கும் வரை.

 

அரவிந்த் பள்ளிகல்வி முடித்து, கல்லூரி படிப்பு தொடங்கிய நாட்களில், சித்தாரா மீண்டும் மார்பக புற்றுநோயின் தீவிர தாக்கத்தில் உயிர் துறந்து இருந்தார். அந்த இரு ஆண்களின் நாட்களும் ஒளிக்குன்றி போயின.

 

உயிரும் உடலுமாய் கலந்திருந்த காதல் மனைவியை இழந்து வெற்றிமாறன் விரக்தியின் பிடியில் சிக்கிக்கொள்ள, அம்மா மீது தீராத அன்பை வைத்திருந்த அரவிந்த் முற்றிலுமாக உடைந்து போயிருந்தான். பருவ வயதை தொட்டிருந்த அந்த இளைஞனுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் அறிவுரைகளும் தேவைப்பட்ட சமயம் அது.  

 

அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் அரவிந்திற்கு தன் சித்தும்மாவையே நினைவுபடுத்தின. உறங்கும் போதும் தன் கேசம் கோதும் அம்மாவின் விரல்களின் ஸ்பரிசம் வேண்டி அவனை வேதனைப்படுத்தின.

 

அவனால் அந்த வேதனையை தாங்குவது சிரமமாகவே இருக்க, அதிலிருந்து தப்பிக்கவே வெளிநாட்டு வாழ்க்கை மீது விருப்பத்தை வளர்த்துக் கொண்டான். முழு முயற்சியாக அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு தான் விரும்பிய வெளிநாட்டு வாழ்க்கையிலும் கலந்து இருந்தான்.

 

தாயின் இழப்பின் வேதனை துரத்த நாட்டைவிட்டே ஓடி போனவன், தந்தை இழப்பின் மன அழுத்தம் விரட்ட, தன் நாட்டிற்கே ஓடி வந்து இருக்கிறான்.

 

இவை எல்லாம் மனதில் உழன்று வெறுமையாக சிரித்து கொண்டவன், விடியற்காலை பொழுதில் தன் பெற்றோரின் அறைக்குள் சென்று அவர்கள் கட்டிலில் படுத்துக் கொண்டான். பயணகளைப்பு அவனை மெல்ல உறக்கத்தில் ஆழ்த்தியது.

 

உறக்கம் களைந்து‌ அவன் கண்விழித்த போது‌ மாலை நான்கு மணி காட்டியது. தற்போதைய பகல்இரவு நேர வேறுபாட்டை உணர்ந்தவன், சோர்வாக எழுந்து சென்று குளித்து, தயாராகி தன் பைக்கை தூசி தட்டி, உயிர்பித்து வெளியே பறந்தான்.

 

ஓட்டலில் பசியாறிவிட்டு, இத்தனை வருடங்கள் தவறவிட்டிருந்த தன் ஊரை ஒருமுறை சுற்றி வந்தான். இனி இங்குதான் என்பது முடிவாகிவிட்டது அடுத்தென்ன செய்ய?

 

அவன் யோசிக்க, தான் வந்துவிட்ட செய்தியை இன்னும் பிரபா மாமாவிடம் தெரிவிக்காமல் விட்டது நினைவு வர, தன் நெற்றியில் தட்டியபடி அவருக்கு உடனே கைப்பேசியில் அழைப்பை விடுத்தான்.

 

“ஹலோ நான் அர்விந்த் மாமா” என்றான். 

 

“எப்படி இருக்க அரவிந்த்? எப்ப இந்தியா வந்த?” மறுமுனையில் பிரபாகரன் குரல் பரிவாய் கேட்டது. அவன் இந்திய அலைப்பேசி இலக்கங்களை கவனித்து.

 

“நான் இங்க வந்துட்டேன் மாமா, லேட் நைட் தான் வந்தேன். அதான் உங்களை தொந்தரவு செய்யல… நாளைக்கு நான் ஆஃபிஸ்ல ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான் கூடுதல் தகவலாக.

 

“நாளைக்கேவா?” என்றவர் குரல் தேய, “அரவிந்த் இன்னொரு முறை யோசி, எனக்கென்னவோ நீ ஆஃபிஸ் வர்றது சரியா வரும்னு தோனல” நேரடியாகவே அவர் மறுப்பை சொல்ல,

 

“ஏன் மாமா? என்மேல‌ நம்பிக்கை இல்லையா? இல்ல, என் திறமை மேல நம்பிக்கை இல்லையா?” அவன் விடாமல் கேட்க, ஆழ மூச்செடுத்தவர், “சரி வா டா, பார்த்துக்கலாம்” என்றார் அரைமனதாய்.

 

# # #

 

இவன் அரவிந்த் வெற்றிமாறன். தனிமையை துணையாக பெற்ற சாதாரண ஆசாபாசங்கள் கொண்ட ஆண்மகன். தன் உறவானவர்களின் இழப்புக்களை ஈடு செய்ய, மீண்டும் தாயகம் திரும்பி இருக்கிறான். இங்கு, அவன் தனிமையை விரட்ட உற்ற துணைவந்து சேருமா? இல்லை அவன் இழப்புக்களின் எண்ணிக்கை கூடுமா? பல எதிர்பாராத திருப்புமுனைகள் கொண்ட அவன் வாழ்வின் சுவாரஸ்யமான கட்டத்தில் நாமும் இணைந்து பயணிக்கலாம்…

 

****

 

நிஜம் தேடி நகரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!