நீயில்லை நிஜமில்லை 8(1)

நீயில்லை நிஜமில்லை 8(1)

நீயில்லை நிஜமில்லை! 8(1)

 

விழியின்றி ஒளி நிஜமல்ல!

மொழியின்றி வார்த்தை நிஜமல்ல!

நீயின்றி நானும் நிஜமல்ல!

 

எஃப் எம் ரேடியோ பாடலோடு அரவிந்த் குரலும் சேர்ந்து ஒலித்தது.

 

“செந்தமிழ் தேன் மொழியாள்!

 

நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்!

 

நிலாவென சிரிக்கும் மலர் கொடியா…ள்!

 

ம்ம்ம்ம்…

 

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்!

 

பருகிட தலை குனிவாள்!”

 

அவன் பாடலோடு அவளை வேலை செய்ய விடாமல் இழுத்து பிடித்து ஆடவும், அர்ச்சனா தன் கையில் பிடித்திருந்த கரண்டியால் அவன் தலையில் தட்டி தூர நிறுத்தினாள். 

 

எனினும் அவள் முகம் முழுவதும் அடக்க முடியாத சிரிப்புகள் சிதறிக் கொண்டிருந்தன.

 

அரவிந்த் வீட்டின் சமையலறையில் தான் இவர்களின் டூயட் நடந்தேறிக் கொண்டிருந்தது.

 

இன்று தான் அரவிந்த், அர்ச்சனாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். 

 

அவன் வீட்டின் வெளித்தோற்றத்தை பார்த்ததுமே அர்ச்சனாவிற்கு வியப்பானது.

 

எந்த வகையிலும் அது சாதாரண வீடாக தெரியவில்லை. பிரம்மாண்டமாக இல்லாவிடினும் பங்களா அமைப்பில் பெரிதாக தெரிந்தது இவளுக்கு.

 

அரவிந்த் வாசல் கதவை திறந்து, தன் இரு கைகளையும் விரித்து தன்னவளை வரவேற்க,  இவள் புன்னகை தளும்பியபடி உள்ளே வந்து ஆர்வமாய் பார்வையை சுழற்றினாள். 

 

வீட்டின் கூடம் பெரிதாக அழகாக அமைந்திருந்தது. அங்கு போடப்பட்டிருந்த சோஃபா, மேஜை, தரையில் விரித்திருந்த கம்பளம், அலங்கார பொருட்கள் என எதுவும் சாதாரணமானவையாக தோன்றவில்லை அவளுக்கு. எல்லாமே விலைமதிப்பு மிக்கவை.

 

“நீ வெளிநாட்டில என்ன வேலை செஞ்ச இவ்வளவு பெரிய வீடு கட்டி வச்சிருக்க” அர்ச்சனா சந்தேகமாக கேட்டே விட்டாள். 

 

சாதாரண செயலர் வேலை செய்பவன் இப்படியொரு பங்களாவில் தங்கி இருந்தால் யாருக்கும் சந்தேகம் வரத்தானே செய்யும்.

 

“இது என் வெற்றிப்பா வீடு சனா” அரவிந்த் புன்னகைத்து பதில் தர,

 

“உங்க அப்பா என்ன வேலையில இருந்தாரு?” அர்ச்சனா விடாமல் கேட்டாள்.

 

“எல்லாத்தையும் சொல்றேன் முதல்ல வந்து உக்காரு” என்று அவள் தோள்பற்றி சோஃபாவில் அமர வைத்தவன், “சித்து சைக்கிள் கம்பெனி எங்கப்பாவோடது தான்” என்றான் சற்று தயக்கமாக.

 

அர்ச்சனா சட்டென எழுந்துவிட்டாள். “இதையேன் நீ முன்னாடியே சொல்லல? நீயும் என்னை போல சாதாரணமானவன்னு நினச்சேன், ஆனா இப்போ…” அவளுக்கு நெஞ்சை அடைத்தது.

 

முதல் முறை அர்ச்சனாவிற்குள் பயம் துளிர்த்தது. இல்லாதவர்களுக்கு இருப்பவர்களிடம் ஏற்படும் பயம் அது!

 

“ஹே ரிலாக்ஸ் பேபி, ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற?” என்றவன் அவள் வியர்த்த முகம் பார்த்து, பருக தண்ணீர் கொடுத்தான். 

 

கடகடவென தண்ணீரை வாங்கி பருகியவள், சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “நான் பட்டு தெரிஞ்சுக்கிட்ட ஒரே விசயம், இங்க வசதி இல்லாதவங்களும் பணம் படைச்சவங்களும் எப்பவும் சமமாக முடியாதுன்ற உண்மையை தான், நீ இப்படின்னு தெரிஞ்சு இருந்தா… நான் உன்கிட்ட இருந்து அப்பவே விலகி இருப்பேன்” அர்ச்சனா கலக்கத்தோடு பேச, அரவிந்த் தன் உச்சந்தலையில் கைவைத்துக் கொண்டான்.

 

“ஓய் ஓவர் சின்சியாரிட்டி உடம்புக்கு ஆகாது, நீ டையலாக் அடிக்கிற அளவுக்கு நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்ல, இப்போ எங்க கம்பெனியும் என் கையில இல்ல” என்று கையை விரித்து காட்டினான்.

 

அர்ச்சனா ஒவ்வொன்றாக கோர்த்து பார்க்க, அவளுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. “உங்க கம்பெனிய அவங்ககிட்ட இருந்து மீட்க தான், நீ அங்க வேலைக்கு சேர்ந்து இருக்கியா?” என்று ஆர்வம் மின்ன கேட்டாள்.

 

“நான் எதுக்கு மீட்கனும்?” என்று விளங்காமல் கேட்டவன் பின் புரிந்து, “இல்ல சனா, அப்பா சொந்த முயற்சியில ஆரம்பிச்ச கம்பெனி நஷ்டத்தில முழ்கி இல்லாம போயிடுமோன்ற மனவருத்தத்தில தவறி போயிட்டாரு. அவருக்கு தேவையான போது நான் அவர்கூட இல்லன்ற குற்றவுணர்ச்சி எனக்குள்ள உறுத்திட்டே இருக்கு. சித்து சைக்கிள் பேரை அப்படியே நிலைக்க வைக்கனும், அதுக்கு கம்பெனிய லாபத்துக்கு கொண்டு வரனும் அவ்வளவு தான் எனக்கு” என்று தான் இங்கு வந்த உண்மை காரணத்தை அரவிந்த் விளக்கினான்.

 

“அப்ப உங்க ஷேர்ஸ்ஸ நீ மீட்டு, கம்பெனி ரன் பண்ணலாம் இல்ல?”

 

“ம்ம் பண்ணலாம் தான். ஆனா எனக்கு பிஸ்னஸ்ல எல்லாம் அவ்வளவு இன்ரஸ்ட் கிடையாது சனா… இப்ப ஒரு வேகத்தில நான் அதை கையில எடுத்தாலும் என்னால முழு ஈடுபாட்டையும் காட்ட முடியும்னு தோனல… 

 

அப்பா இறந்த போது, எப்படியாவது முயற்சி செஞ்சு கம்பெனிய ரன்‌ பண்ணனும்னு ஒரு வேகம் வந்துச்சு. அப்புறம் ஷேர்ஸ் வித்திட்டாருன்னு தெரிய வந்ததும் எனக்குள்ள பெரிய குழப்பம்! நான் சொன்னது, ஷேர்ஸ் வித்தது, அப்பாவோட ஹார்ட் அட்டாக்… எல்லாத்துக்கும் நான் தான் காரணமோன்ற குற்றவுணர்வு என்னை அரிச்சிட்டே இருந்தது.

 

 எப்படியாவது அவர் கனவை நிறைவேத்தனும்னு தோனுச்சு வேற எதையும் யோசிக்காம வந்துட்டேன், பிரபா மாம்ஸ் சப்போட்ல இப்ப அந்த வேலைல தான் பிஸியா இருக்கேன்” என்று அரவிந்த் நீளமாக விளக்கம் தந்தான்.

 

“ஓ இதை நீ நேரடியாவே எடுத்து செய்யலாமே, ஏன் இப்படி?” அர்ச்சனா விடாமல் துருவி கேட்டாள்.

 

“எடுத்து செய்யலாம் தான். ஆனா, காதம்பரி ஆன்ட்டிக்கு நான் இதுல நேரடியா சம்பந்தபடுறது பிடிக்கல போல.”

 

“ஏன், இப்ப அது அவங்க கம்பெனி, நீங்க வொர்க்ரா உங்க பெஸ்ட் கொடுத்தா அவங்களுக்கு தான பெனிஃபிட், இன்னும் சொல்ல போனா எல்லா விதத்திலும் உனக்கு தான் இதுல லாஸ்” அர்ச்சனா தன் அறிவுக்கு எட்டிய வரையில் கேள்விகளை வீச,

 

“அவங்களை பொறுத்தவரைக்கும் இப்ப நான் அவங்களோட ஸ்டேடஸ்ல குறைஞ்சிட்டேன்னு ஃபீல் பண்றாங்க போல, அதான் என்னை ஒதுக்கி வைக்கனும்னு நினைக்கிறாங்க… அது அவங்க மைன்ட் செட், தப்புனு சொல்ல முடியாது” என்றவன்,

 

“அதோட வாழ்க்கையில லாப நஷ்டம் பார்த்து எதையும் செய்யறதுல எனக்கு உடன்பாடு இல்ல, இந்த வாழ்க்கை ஒரேயொரு முறை தான். நான் ஹேப்பீயா ஃபீல் பண்றதை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும். அவ்வளவு தான். இப்ப என் அப்பா ஆசபட்ட மாதிரி சித்து சைக்கிள் கம்பெனி லாபத்துக்கு கொண்டு வரனும், அதோட பேரை நிலைக்க வைக்கனும். அதை நான் ரன் பண்ணனும்னு ஆசை எல்லாம் எனக்கு இல்ல” சொல்லி முடித்தான்.

 

அர்ச்சனா அவனை வித்தியாசமாக பார்த்தாள். ‘என்ன டிசைனோ இவன்?!’ என்பது போல.

 

அதை கண்டு கொள்ளாது, அரவிந்த் தன் அம்மா, அப்பாவை நிழற்படத்தில் காட்டி அவர்களைப் பற்றி பேசினான். 

 

வீட்டை அவளுக்கு சுற்றி காட்டி குறும்பு பேச்சை வளர்த்து, அவளை இயல்பான மனநிலைக்கு கொண்டு வந்திருந்தான்.

 

“அஞ்சலி மேடமும் நீயும் அவ்வளவு திக் ஃப்ரண்ஸா என்ன?” அர்ச்சனா தயக்கத்துடன் கேட்டாள். அரவிந்தின் பேச்சில் அதிகம் அஞ்சலியின் பெயர் வந்து போவதை அவளும் கவனித்திருந்தாள்.

 

இவன் அழகாக சிரித்து, “ம்ம் என் சித்தும்மா, வெற்றிப்பாவுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அஞ்சலி தான்” அரவிந்த் உணர்ந்து சொல்ல,

 

அர்ச்சனாவின் முகம் வாடி சுருங்கி போனது. “அப்ப நானும் அஞ்சலிக்கு அப்புறம் தானா?”

 

“இதென்ன கேள்வி?” 

 

“முதல்ல நீ என்னை எந்த இடத்தில வச்சிருக்கனு சொல்லு”

 

“உனக்கு தனியா வேற இடம் எதுக்கு? நானும் நீயும் வேறயா… நான் தான் நீ! நீதான் நான்! நமக்குள்ள இந்த இடம், பொருள், ஏவல் எல்லாம் அவசியமா என்ன?” அரவிந்த் புருவங்கள் உயர கேட்க,

 

“சும்மா டையலாக் விடாத போ” அர்ச்சனா முகம் சுருங்கினாள். தன்னவனுக்கு தான் மட்டுமே முதலாக இருக்கவேண்டும் என்ற உரிமை குணம் அவளுள் தலையெடுத்தது.

 

“வேற என்ன செய்யனும்னு சொல்லு செய்றேன்…” என்றபடி அரவிந்த் அவளை நெருங்கி வர,

 

“உனக்கு நான் மட்டும் தான்! என்னை தாண்டி போன… மவனே உன்ன கொன்னுடுவேன் பார்த்துக்க” அர்ச்சனா தீவிரமாக மிரட்ட, அரவிந்திற்கு அவள் மிரட்டலில் சிரிப்பு பீரிட்டு வந்தது. 

 

“என் செல்ல பிசாசு டி நீ… உன்ன தாண்டி போற ஐடியா எல்லாம் எனக்கு இல்ல, உன்னோட ஒட்டியே வாழனும்ற பேராசை தான் எனக்கு” என்று அவளின் நெற்றியில் நெற்றி முட்டி காதலாக சொல்ல, அவளும் சிறு முறைப்போடு சிரித்தும் விட்டாள்.

 

ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருவரும் காரணமின்றி சிரித்து கொண்டே நின்றனர்.

 

அர்ச்சனா இன்று அவனுக்காக தான் சமைப்பதாக சொல்ல, அவனும் சந்தோசத்துடன் சரி என்றான்.

 

“உனக்கு என்ன பிடிக்கும்?” அவள் குளிர்சாதன பெட்டியை கிளறியபடி கேட்க,

 

“சிக்கன், மட்டன், ஃபிஷ்னு நீ எது செஞ்சாலும் அய்யாவுக்கு ஓகே” என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள், “நீ நான் வெஜ் சாப்பிடுவியா?” என்றாள்.

 

“ஹலோ நானெல்லாம் நான்வெஜ் இல்லாம சாப்பாடே தொட மாட்டேன்” என்று அரவிந்த் அலட்டலாக சொல்ல,

 

“நம்ம பசிக்காக எப்படி ஒரு உயிரை வெட்டி கொன்னு ருசிச்சு சாப்பிட முடியுது  உன்னால?” இவள் முகம் கசங்கியது.

 

“அடிப்பாவி… அப்ப நீ பியூர் வெஜ்ஜா? இது முதல்லையே தெரிஞ்சு இருந்தா தெறிச்சு ஓடி இருப்பேனே” என்று அவன் அலற, இவள் தன் இடையில் கையூன்றி அவனை முறைத்து நின்றாள்.

 

“எனக்கு சோறு தான் முக்கியம் பேபி, அப்புறம் தான் காதல், கத்திரிக்கா எல்லாம், என்னால காய்கறி, இலைதழை மட்டும் சாப்பிட்டு வாழ முடியாது டீ, எனக்காக கொஞ்சம் இறங்கி வாயேன்” அரவிந்த் நிஜமாகவே அவளிடம் கெஞ்சலானான்.

 

“உன்ன சாப்பிட வேணாம்னு சொன்னேனா? என்னால எப்பவுமே ஒரு உயிரை கொன்னு புசிக்க முடியாது. அதுக்காக நான் உன்ன எல்லாம் கன்ரோல் பண்ண மாட்டேன் போதுமா?” அர்ச்சனா தன் பிடியில் நிற்க,

 

“இன்னைக்கு சன்டே அதுவுமா, ஒரு பிரியாணி கூட இல்லனா எனக்கு சாப்பாடு இறங்காது சனா” அவள் எங்கே இப்போது சாம்பார், சாதம் வைத்து கொடுத்து சாப்பிட விடுவாளோ என்ற பயத்தில் அவன் அலற்றினான்.

 

“உனக்கு பிரியாணி தான வேணும், ஃப்ரிஜ்ல மஷ்ரூம் இருக்கு, மஷ்ரூம் பிரியாணி ஓகே தானே” அர்ச்சனா கேட்கவும், அரவிந்த் சற்று நிம்மதியாக வேகமாக தலையசைத்தான்.

 

இதோ இருவரும் சேர்ந்து எஃப் எம் பாடலோடு சமையலறையில் கலகலத்தப்படி காளான் பிரியாணி சமைத்து முடித்திருந்தனர்.

 

இப்போதும் பாடலோடு பாடி அரவிந்த், அர்ச்சனாவை வம்பிழுத்தபடி தான் இருந்தான்.

 

“அங்க கொஞ்சம் காட்டி, 

இங்க கொஞ்சம் கூட்டி, 

பாதி உயிர் எடுக்காதே…

 

என்னை கட்டி கட்டி பிடிக்க

கண்ட இடம் கடிக்க

உத்தரவு கேட்காதே…” 

 

அவளை ரசனையாக பார்த்து, தன் பார்வையில் குறும்பை கூட்டி ஒற்றை கண் சிமிட்டி அரவிந்த் உடன் பாடி சேட்டை செய்ய, அர்ச்சனா பாட்டை நிறுத்தினாள்.

 

“ஏன் சனா?” அவன் சிணுங்க,

 

“நாம தனியா இருக்கும்போது இதுமாதிரி பாட்டு கேட்டா மனசு அலைபாயும்,‌ அது தப்பு, வந்து சாப்பிடு” அர்ச்சனா கண்கள் உருட்டி சொல்ல, 

 

“ரொம்ப தான் டீ பண்ற நீ” என்று பேச்சில் அலுத்து கொண்டாலும், நிறைந்த உற்சாகத்துடன் அவளுடன் உணவை ருசித்து உண்டான்.

 

“சூப்பரா இருக்கு சனா, கல்யாணத்துக்கு அப்புறம் கூட இப்படி தானே சமைச்சு தருவ டேஸ்ட் மாறாதில்ல” அவன் ஏடாகூடமாக கேட்டு வைக்க, அவன் கையை அழுத்தி கிள்ளி விட்டாள்.

 

இருவரின் நாவிலும் மனதிலும் ருசித்தது அந்த உணவும் அவர்களின் காதலும்.

 

****

 

நிஜம் தேடி நகரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!