நெஞ்ச தாரகை 1

நெஞ்ச தாரகை 1

சாந்தி முகூர்த்த அறை!

சுற்றி எங்கும் இளமைப் பூக்களின் சுகந்தம்… அருகில் வண்ண வண்ண நிறங்களில் பழக்குவியல்.

கட்டில் முழுக்க ரோஜா வண்ண இதழ்கள்.
ஆனால் இதழ்களில் சிரிப்பே இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தான் அவன்.

காவ்ய நந்தன்!

இருபத்தெட்டு வயது இளைஞன். கண்களில் தீட்சண்யமான பார்வை.  இறுகிய தாடையில் அந்த எரிமலையே உருகிவிடும். அந்த அளவிற்கு ஆண்மை அழகை தத்தெடுத்து இருப்பவன்.

இன்று அவன் பருவத்திற்கு தேர்வு நாள்.

ஆனால் பரீட்சையே எழுத விருப்பமில்லாமல் அருகில் கேள்வித்தாளாய் படுத்திருந்த மனைவியையே வெறித்துப் பார்த்தான்.

எழில் மதி!

அழகு இலக்கணத்தில் பிறந்த புதுகவிதை. கவி பாடும் கருவிழிகள். பலா சுளையாய் உதடுகள். கார்மேக கூந்தல் அழகி. மொத்தத்தில் பிரம்மன் செய்து முடித்த எழிலோவிய சிலை.

அவளைப் பார்க்க பார்க்க அவன் கண்களில் அன்பிற்கு பதிலாய் அனல் ஏறியது.

குழந்தை வதனமாய் இருக்கும் இவள் அல்லவா அவன் வாழ்வை வதம் செய்ய வந்து இருக்கிறாள்.

துரோகம்.

எவ்வளவு பெரிய துரோகம்!

அத்தனை பெரிய விஷயத்தை செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல் தலையணையை அணைத்து படுத்து கிடந்த அவளை கண்டதும் அவன் கோபம் இருமடங்காய் எகிறியது.

ஜென்மத்திற்கும் தனக்கு தூக்கம் வராதபடி செய்த இவள் நிம்மதியாக தூங்குவதா?

ம்ம்ஹும் கூடாதே…

சட்டென்று அருகில் வைக்கப்பட்டு இருந்த பாலை எடுத்து அவள் மீது வேகமாக ஊற்றினான்.

அதுவரை அடித்துப் போட்டபடி படுத்து கிடந்தவளின் இமைகளிடையே சிறியதாய் ஓர் அசைவு. கிள்ளை மொழியாளின் விழிகள் சற்றே திறந்து உக்கிரமே உருவாக உருவெடுத்து நின்றிருந்த காவ்ய நந்தனை கண்டது.

“மாமா பாலிலே சுகர் கொஞ்சம் கம்மியா இருக்கு. அப்படியே என் மேலே சர்க்கரையை போட்டிங்கனா சூப்பரா இருக்கும்” என்றவளை வெட்டவா குத்தவா என்ற கணக்கில் பார்த்து வைத்தான்.

“ஏன்டி என் வாழ்க்கையிலே பால் ஊத்திட்டு உனக்கு பாலிலே சுகர் கேட்குதா?” என்று கத்தினான் வெறிபிடித்தவன் போல்.

“மாமா… ஒரு சுகர் கேட்டது குத்தமா… விடுங்க…  உங்களுக்காக பால்டாயிலே குடிப்பேன். சர்க்கரை இல்லாத பாலை குடிக்க மாட்டேனா?” எனக் கேட்டபடி திரும்பி படுக்க முயன்றாள். ஆனால் அவன் வலிய கரங்கள் விடவில்லை.

எத்தனை பெரிய செயலை செய்துவிட்டு இத்தனை எளிதாக பேசுகிறாள்.  அதுவும் தன்னுடைய கோப பேச்சு அவளை இம்மியளவும் பாதிக்கவில்லையே. எண்ண எண்ண அவனுக்கு ஆற்றாமையும் வன்மமும் இருமடங்காக பெருகியது.

“நீ செஞ்சது நினைச்சு உனக்கு அசிங்கமா இல்லையா?” என்றான் அவள் கன்னத்தை தன் கரங்களால் வன்மையாக பிடித்தபடி.

“நான் அசிங்கப்படுறா மாதிரி அப்படி ஒன்னும் பெரிய விஷயம் செஞ்சதா எனக்கு நியாபகம் இல்லையே” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“எதுடி அசிங்கமான காரியம் இல்லை. இல்லை எது அசிங்கம் இல்லைனு கேட்கிறேன். எவனோ ஒருத்தன் குழந்தைக்கு என்னை அப்பாவா ஊர் முன்னாடி கை காமிச்சுட்டியேடி” அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் வைகையாற்று வெள்ளப்பெருக்காய் எம்பி குதித்தது.

அவள் மார்பில் தொங்கிய தாலியை அவள் கழுத்து வலிக்கும் அளவிற்கு இழுத்துப் பிடித்தவன் “இதோ இந்த கயித்தை என் கையிலே வாங்குறதுகாக தானேடி அவ்வளவு பெரிய பொய்யை சொன்ன… இதே தாலியை உன் கையாலேயே கழட்டி கொடுத்துட்டு ஐயோ சாமி என்னை விட்டுடுங்கனு ஓட வைக்கலை நான் காவ்ய நந்தன் இல்லைடி” என்றான் மிரட்டலாக.

அவன் விட்ட விசையில் அவள் கழுத்திலிருந்த மங்களநாண் முன்னும் பின்னுமாய் பெண்டுலம் ஆட கலங்கிப் போன கண்களோடு கீழே குனிந்துப் பார்த்தாள் எழில் மதி.

இது நிலைக்குமா? இல்லை பறிக்கப்படுமா? என்ற கேள்வி அவள் மதிமுகத்தில்.

அரண்டு போய் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியையே கூர்மையாய் பார்த்தவன்”நீயா ஆழம் தெரியாம புலி வாலை பிடிச்சுட்டடி… இனி…” என மேலும் பேச வந்தவன் தான் நினைத்ததை சொல்லாமல் செய்து காட்டும் முடிவோடு அவளை வன்மமாக பார்த்து வைத்தான்.

அவளை அந்த வன்ம பார்வை பாதிக்கவில்லை. நிதானமாக அவனை ஏறிட்டவள், “உன்னை மதி மதினு உன் மதி கலங்கி போற அளவுக்கு பித்தனாக்கல நான் எழில்மதி இல்லை மாமா” என்றவள் கோபத்தில் கட்டிலை உதைக்க நான்கு கால்களில் ஒரு கால் முறிந்துவிழுந்தது.

இனி இதே போல் உறவுகள் முறியுமா? இல்லை துளிர்க்குமா?

அவன் நெஞ்சுக்குள் நீந்த துவங்குமா இந்த தாரகை?

விடை விரைவில்….

Leave a Reply

error: Content is protected !!