பல்லவன் கவிதை – 22

PKpic-e999e42e

பல்லவன் கவிதை – 22

காட்டின் மறு முகப்பில் இருந்த அந்த சிறு குடிசைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. பச்சை மூங்கில் கழிகளால் சாரம் போட்டு அதில் தென்னங்கீற்றுகளை முடைந்து குடிசை வேயப்பட்டிருந்தது.

காட்டின் ஒரு முகப்பில் பாசறை அமைத்திருந்த வீரர்களும் யானைகளும் குதிரைகளும் திமிலோகப்பட இந்த முகப்பு அதற்கு எதிர்மாறாக அமைதியைத் தத்தெடுத்திருந்தது.

குடிசை அமைந்திருந்த இடத்திற்குச் சற்று தொலைவிலேயே ஒரு சிறிய நீரோடையும் இருந்ததால் அந்த இடம் எல்லா வசதிகளோடும் அமைய பெற்றிருந்தது.

அந்த இடத்தை மைத்ரேயி தங்குவதற்காக மார்த்தாண்டன் தேர்ந்தெடுத்திருந்தான் என்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அந்த சிறிய குடிசையில் அவளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எந்த குறைவுமின்றி செய்திருந்தான் இளவல்.

குடிசைக்குப் பக்கத்தில் நின்றிருந்த வேப்ப மரத்திலிருந்து சிலுசிலுவென சதா இளங்காற்று வீசிக்கொண்டே இருந்தது. மரத்தில் பூத்திருந்த சின்னஞ்சிறு வெள்ளை நிற வேப்பம் பூக்களும் அந்த இளங்காற்றின் தாலாட்டில் உதிர்ந்து குடிசை மேலும் அதன் வாசலிலும் வீழ்ந்து அழகு சேர்த்தது.

அதற்குச் சற்று அப்பால் நின்றிருந்த கொன்றை மரமொன்று தன் பொன் மஞ்சள் நிற மலர்களைக் கொத்துக் கொத்தாக பூத்து அந்த இடத்தையே மஞ்சள் நிறமாக அடித்திருந்தது.

ஆனால் இந்த இயற்கையின் அழகை ரசிக்க மனமில்லாமல் தூரத்தே தெரிந்த காஞ்சி கோட்டையின் முகப்பையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் மைத்ரேயி. இமைக்காது அந்த அழகிய கோட்டையையே அவள் கண்கள் வெறித்திருந்தது.

மார்த்தாண்டன் எவ்வளவோ மறுத்திருந்தும் அது எதையும் பொருட்படுத்தாது படையோடு தானும் கிளம்பி காஞ்சிக்கு வந்திருந்தாள் பெண்.

தன் பேச்சைக் கேளாமல் அவள் படையோடு வந்ததில் மார்த்தாண்டனுக்கு வருத்தமிருப்பது புரிந்தாலும் மைத்ரேயி ஏனோ அதைக் கண்டுகொள்ளவில்லை. இன்று வரை அதன் காரணம் எதுவென்றும் அவளுக்குப் புரியவில்லை.

தான் எதிரியாக நினைக்கும் பல்லவ குலத்தை வீழ்த்துவதுதான் அவள் நோக்கமென்றால் போரின் முன்னணியில் நீ நிற்கக்கூடாது என்று மார்த்தாண்டன் கட்டளைப் போட்ட போது எப்படி அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது?!

இதெல்லாம் போதாதற்கு அந்த காஞ்சி மண்ணை மிதித்த நாளிலிருந்து அவள் மனம் சொல்லவொண்ணாத சஞ்சலங்களில் சிக்கித்தவித்தது.

கொற்கையை தவிர்த்து மைத்ரேயி வேறெங்கும் பிரயாணம் செய்ததில்லை. அவள் அறிந்ததெல்லாம் அந்த கொற்கையும் அதை அண்டிய பிரதேசங்களும்தான். முதன்முதலாக அவள் வெளியூர் சென்றதென்றால் அது மார்த்தாண்டனோடு கங்க நாட்டிற்குத்தான்.

ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பாக படைகளோடு இந்த காஞ்சி மாநகருக்குள் வந்த போது மைத்ரேயியின் மனம் மிகவும் கிளர்ச்சி அடைந்திருந்தது.

எத்தனைத் தூரம் தான் வெறுத்தாலும் இதுவரைப் பார்த்தறியாத தன் தந்தை அந்த காஞ்சி கோட்டைக்குள்தான் இருக்கிறார் என்று நினைத்த மாத்திரத்தில் அவள் மனதில் வலி ஒன்று தோன்றத்தான் செய்தது.

இந்த ஒரு வாரமாக படைகள் அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருக்க மைத்ரேயி இது எதிலும் கலந்து கொள்ளாமல் சதா சிந்தனையின் வசமே இருந்தாள். அவள் மனது புரிந்ததோ என்னவோ, மார்த்தாண்டனும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

காட்டின் ஒரு பகுதியில் சகல வசதிகளும் கொண்ட இடமாக தேர்வு செய்து அதில் வீரர்களைக் கொண்டு சிறிய குடிசை ஒன்றை அமைத்தான். அவள் துயில்வதற்காக அங்கே பஞ்சணை ஒன்றையும் தருவித்தவன், பணிப்பெண் ஒருத்தியையும் வேலைக்கு அமர்த்தினான்.

இரவில் காட்டில் சதா வீரர்களின் சஞ்சாரம் இருந்ததால் அவ்வப்போது வந்து பெண்ணின் தேவைகளைக் கவனித்து கொண்டான் மார்த்தாண்டன். அதுவே போதுமானதாகவும் இருந்தது.

“மைத்ரேயி!” குரல் வந்த திசையை நோக்கி சாவதானமாக திரும்பியது பெண். மார்த்தாண்டன் தன் புரவியிலிருந்து இறங்கி கொண்டிருந்தான்.

“வாருங்கள் உபாத்தியாயரே.” சம்பிரதாயத்திற்காக சொல்லிவிட்டு மீண்டும் கோட்டையின் பக்கம் கண்களைத் திருப்பினாள் மைத்ரேயி. பெண்ணின் பார்வைப் போன திக்கைப் பார்த்த மார்த்தாண்டன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

“அங்கே என்ன பார்க்கிறாய் மைத்ரேயி?”

“உபாத்தியாயரே, அந்த கோட்டையைப் பாருங்கள்.”

“அதில் புதிதாக பார்க்க என்ன இருக்கிறது மைத்ரேயி? எப்போதும் பார்ப்பதுதானே?”

“ஓ… நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள் இல்லையா?”

“ஏன்? நீ கூடத்தான் இந்த ஒரு வாரமாக பார்க்கிறாய்?”

“ஆமாம் ஆமாம்…” பெண்ணின் வாய் பேசினாலும் அவள் சிந்தனை அந்த கோட்டையையே வட்டமிடுவதை மார்த்தாண்டன் புரிந்து கொண்டான்.

“உபாத்தியாயரே!” பேச்சை இப்போது அவளே ஆரம்பித்தாள். அவள் மனதிலிருப்பது அவள் வாயாலேயே வரட்டும் என்று மார்த்தாண்டனும் அமைதியாக இருந்தான்.

“இந்த கோட்டைக்குள் நான் போக வேண்டும்.” மைத்ரேயியின் வார்த்தைகளில் மார்த்தாண்டனுக்கு தூக்கிவாரிப்போட்டது.

“என்ன?!” என்றான் அதிர்ச்சியாக. ஆனால் அந்த அதிர்ச்சியை மைத்ரேயி கண்டு கொள்ளவில்லை. அவள் கண்கள் கோட்டையைப் பார்த்தபடியே இருந்தன.

“அந்த கோட்டைக்குள் நான் போக வேண்டும் உபாத்தியாயரே.” என்றாள் மீண்டும்.

“ஏன்? எதற்காக?” அவசரமாக வந்தது கேள்வி.

“பார்க்க வேண்டும்.”

“எதைப் பார்க்க வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்?” மார்த்தாண்டன் பரபரத்தான்.

“எல்லாவற்றையும்… எல்லோரையும்…” நிதானமாக வந்தது பதில்.

ஒரு கணம் இப்போது மார்த்தாண்டன் யோசித்தான். மைத்ரேயியின் மனம் தனது தொலைந்து போன உறவுகளுக்காக ஏங்குவது அவனுக்கு லேசாக புரிந்தது.

பெண்ணின் அருகில் வந்தவன் அவள் தோள் தொட்டு அவளைத் தன் புறமாக திருப்பினான். அந்த கண்கள் அவனிடம் எப்போதும் பொய் சொன்னதில்லையே!

“மனதில் என்ன இருக்கிறது மைத்ரேயி? என்னிடம் மறைக்காமல் சொல்.” இதமாக கேட்டான் மார்த்தாண்டன்.

“நீங்கள் நினைப்பது போல எதுவுமே இல்லை உபாத்தியாயரே… பார்க்க வேண்டும் என்று தோன்றியது, அவ்வளவுதான்.”

“அதுதான் ஏனென்று நானும் கேட்கிறேன்? இத்தனை நாள் தோன்றாத உணர்வு இப்போது ஏன் தோன்றுகிறது?”

“தெரியவில்லை…‌ இந்த காட்டுக்குள் வந்ததிலிருந்து அந்த கோட்டை என்னை மிகவும் பாதிக்கிறது… அதைப் பார்க்கும் போதெல்லாம் அங்கே போக வேண்டும் என்று தோன்றுகிறது, அங்கிருப்பவர்களைப் பார்க்க வேண்டும், அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பார்க்க வேண்டும், அவர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி எங்கே போகிறார்கள், என்னென்ன காரியங்களில் ஈடுபடுகிறார்கள்…‌ அவர்களுக்கு என்னை… என்னை… யாரென்று…” மேலே பேச முடியாமல் பெண்ணின் குரல் கலங்கியது.

மார்த்தாண்டன் மெதுவாக மைத்ரேயியை தன் மார்போடு அணைத்துக்கொண்டான். உரிமையான அந்த ஸ்பரிசத்தில் அவள் கண்கள் கண்ணீரை உகுத்தது.

“அழாதே மைத்ரேயி!”

“முடியவில்லை உபாத்தியாயரே! என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, ஏதேதோ எண்ணங்களோடு போர்க்களத்திற்கு வந்தேன், ஆனால் நான் கோழை உபாத்தியாயரே.” அவள் புலம்பி தீர்க்க அவள் தலையை ஆதரவாக தடவி கொடுத்தான் அவள் உபாத்தியாயன்.

“உறவுகளுக்கு முன் அத்தனைப் பேரும் கோழைதானே? இப்போது என்னையே எடுத்துக்கொள்… இந்த போருக்காக எத்தனை ஏற்பாடுகளை முனைப்போடு செய்தவன் இப்போது பின்வாங்குகிறேன்.”

“என்ன? பின்வாங்குகிறீர்களா?”

“ஆமாம்.”

“ஏனப்படி?”

“ஏனென்றால் என் எதிரே நிற்பவர்கள் என் உறவினர்கள் அல்லவா?” அந்த பேச்சில் மைத்ரேயி ஸ்தம்பித்து போனாள். அவள் முகத்தை மெதுவாக நெருங்கி அவள் காதோடு கதைப் பேசினான் மார்தாண்டன்.

“மைத்ரேயி… என்னால் இயன்றவரை இரு சாராருக்கும் பாதிப்பு இல்லாமல் போரைத் தவிர்க்கவே முயலுகிறேன்.”

“உங்கள் பெரிய தந்தை…”

“அவர் எவ்வளவு முக்கியமோ அதேயளவு எனக்குப் பெண் கொடுப்பவரும் முக்கியம் அல்லவா?” ஒரு புன்சிரிப்போடு மார்த்தாண்டன் சொல்ல மைத்ரேயி எதுவும் பேசவில்லை.

இதுவே இந்த மண்ணை மிதிப்பதற்கு முன்பாக இதே வார்த்தைகளை அவன் சொல்லி இருந்தால் அவள் பதில் வேறாக இருந்திருக்கும். ஆனால் இப்போது அமைதியாக நின்றிருந்தாள்.

“முடியுமா உபாத்தியாயரே?”

“உன் உபாத்தியாயரால் முடியுமா முடியாதா என்று நீதான் சொல்ல வேண்டும்!”

“உபாத்தியாயரே.”

“ம்…”

“இங்கு ஏதோ ஒரு கடற்கரை ஓரமாக சிற்ப வேலைகள் நடக்கின்றதாமே?”

“அது உனக்கெப்படி தெரியும்?”

“இங்கு அக்கம் பக்கமுள்ள கிராம மக்களிடம் பேச்சு வளர்த்தேன், அவர்கள் சொன்னார்கள்.”

“ஓ… சிற்ப வேலைகளைப் பற்றி சொன்னவர்கள் அதைச் செய்ய சொன்ன கலா ரசிகரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையா?”

“………….”

“அவர் எத்தனை நல்லவர், ரசிகர், சிறப்பான சக்கரவர்த்தி, அத்தோடு… அன்பான தந்தை!”

“அந்த பாக்கியம்தான் எனக்குக் கிடைக்கவில்லையே!”

“நீ மனது வைத்தால் எல்லாமும் கிடைக்கும் மைத்ரேயி.”

“வேண்டாம் உபாத்தியாயரே! எனக்கு எதுவும் வேண்டாம்! என் தாய்க்கே நான் பாரமான உறவாகி போன பின்பு எனக்கு எதற்கு அவரால் வந்த உறவுகள்?”

“உறவுகளை அத்தனைச் சீக்கிரத்தில் முறித்துக்கொள்ள இயலாது மைத்ரேயி.”

“என்னை அத்தனைப் பேரும் தூக்கி வீசவில்லையா?”

“அதற்கு நியாயமான காரணம் இருக்கலாமில்லையா?” இப்போது மைத்ரேயி கசப்பாக சிரித்தாள்.

“சரி, உன் நியாயப்படி பார்த்தாலும் நீ தண்டிக்க வேண்டியது உன் தாயைத்தானே? உன் தந்தை என்ன பாவம் செய்தார்?”

“அவருக்கு நானொருத்தி இருப்பது கூட தெரியாதே?”

“அந்த உண்மை அவரிடம் மறைக்கப்பட்டிருக்கலாம்.”

“என்ன பேசுகிறீர்கள் உபாத்தியாயரே! ஒரு பெண்ணோடு அத்தனைத் தூரம் உறவாடிவிட்டு…” ஒரு வேகத்தில் பேச ஆரம்பித்தவள் அதற்கு மேல் பேச முடியாமல் சட்டென்று நிறுத்திவிட்டாள்.

முகத்தை அவள் அப்புறமாக திருப்பிக்கொள்ள இப்போது விடாப்பிடியாக அவளைத் தன் புறமாக திருப்பினான் மார்த்தாண்டன்.

“அது அவர் தவறல்லவே மைத்ரேயி! உண்மையான அன்போடு அவர் உன் தாயிடம் உறவாடி இருக்கலாம், உன் ஆரம்பத்தை அவரிடம் உன் தாய் மறைத்திருக்கலாம் அல்லவா?”

“இது மறைக்கக்கூடிய விஷயமா?”

“மறைத்தது மட்டுமல்லவே! உன் தாய் ஒளிந்து கொண்டாரே?”

“நாடாளும் சக்கரவர்த்தி, ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை!” எகத்தாளமாக அவள் சொன்ன போது மார்த்தாண்டனின் பிடி இறுகியது.

“கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது… கண்டுபிடிக்க பிரியப்படவில்லையா?” பெண் கேலியாக கேட்டது.

“மைத்ரேயி! காதல் என்று வந்துவிட்டால் பெண்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவதைகளோ, அதே போல காதலனைத் தண்டிப்பதென்று முடிவெடுத்துவிட்டால் அவ்வளவுக்கவ்வளவு ராட்சசிகள்!”

“அனுபவம் பலமாக இருக்கும் போல தெரிகிறதே!”

“பேச்சை மாற்றாதே, நீ தண்டிக்க நினைத்தால் உன் தாயைத் தண்டி, அதையும் தீர விசாரித்துவிட்டு செய்! ஆனால் உன் தந்தை மேல் பழி போடாதே, அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!”

“சக்கரவர்த்தி மேல் ஏது இத்தனை அக்கறை? ஆச்சரியமாக இருக்கிறதே?!”

“இது சக்கரவர்த்தி மேல் வந்த அக்கறை அல்ல! ஒரு காதலன் மேல், தந்தையின் மேல், எல்லாவற்றையும் தாண்டி ஒரு ஆண்மகன் மேல் வந்த அக்கறை மைத்ரேயி!”

“இருந்துவிட்டு போகட்டும்! அதில் நான் அக்கறைப் படவில்லை, பாதிக்கப்பட்டது நான்!”

“இங்கு பாதிக்கப்பட்டிருப்பது நீ மாத்திரமல்ல, உன் குடும்பம் மொத்தமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.”

“அம்மா…” தங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த இளையவர்கள் இருவரும் சுற்றுப்புறத்தை மறந்து போனார்கள். எப்போதும் உணர்ச்சிகளுக்கு அதிகம் இடம் கொடுக்காத மார்த்தாண்டன் கூட அன்று, அந்தப்பொழுது மாறி இருந்தான்.

சட்டென்று இருவரும் தங்கள் வாதத்தை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க அங்கே ஒரு துறவி நின்றிருந்தார்.

காவி வஸ்திரம் அணிந்து கழுத்தில் ருத்திராட்ச மாலையும் இழுத்து முடிந்த குடுமியுமாக நின்றிருந்தார். அவர் நெஞ்சு வரைத் தாடி நீண்டிருக்க நெற்றியைத் திருநீறு மறைத்திருந்தது.

“வாருங்கள் ஸ்வாமி!” அந்த அடிகளைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோவொரு உணர்வு உந்தித்தள்ள அழைத்தாள் மைத்ரேயி. மார்த்தாண்டன் கூட அதிசயப்பட்டு போனான்.

“ஆதரவாக அழைக்கிறாய் அம்மா, உனக்கு மங்களம் உண்டாகட்டும்!” சோர்வாக வந்தது அவர் குரல். மைத்ரேயி அவர் அருகில் போய் நமஸ்கரிக்க, தன் தோளில் தொங்கிய காவிப்பையிலிருந்து திருநீறை எடுத்து அவள் நெற்றியில் இட்டார் அடிகள்.

மைத்ரேயி சட்டென்று மார்த்தாண்டனையும் கண்களால் அழைக்க அதை அலட்சியம் செய்தவன் அப்படியே இடித்த புளி போல நின்றிருந்தான்.

“அம்மா! அடியேன் உணவருந்தி இரண்டு நாட்கள் ஆகின்றன, ஏதாவது போஜனம் கிடைக்குமா?” நலிந்து போன குரலில் ஸ்வாமி கேட்டபோது மைத்ரேயியின் முகம் சிவந்து போனது. கோபமாக மார்த்தாண்டனை திரும்பி பார்த்தவள்,

“நீங்கள் இத்தனை நேரமும் வக்காளத்து வாங்கிய சக்கரவர்த்தியின் லட்சணத்தைப் பார்த்தீர்களா? ஒரு அடிகளுக்கு உண்ண இங்கே உணவில்லை!” என்றாள் சூடாக.

“அம்மா, நான் தவறாக ஏதும் பேசிவிட்டேனா?” பதறியபடி கேட்டார் அந்த அடிகள்.

“இல்லை ஸ்வாமி… தாங்கள் எதுவும் தவறாக பேசவில்லை, இங்கே சிலருக்குப் புதிதாக சிலரின் மேல் அக்கறை ஏற்பட்டுள்ளது, அதைத்தான் நான் சொன்னேன், நீங்கள் உள்ளே வாருங்கள்.” மார்த்தாண்டனை ஓரக்கண்ணால் முறைத்தபடி சொன்னவள், அடிகளை அழைத்துக்கொண்டு குடிசைக்குள் போனாள்.

மார்த்தாண்டன் தானும் அவர்கள் பின்னோடு குடிசைக்கு அருகே சென்றவன் உள்ளே நுழையாமல் நடக்கும் நாடகத்தைப் பார்த்த படி நின்றிருந்தான்.

மைத்ரேயி அங்கிருந்த சிறிய பட்டு கம்பளம் ஒன்றை எடுத்து நிலத்தில் விரித்து,

“அமருங்கள் ஸ்வாமி.” என்றாள். இப்போது மார்த்தாண்டன் மட்டுமல்ல, அடிகள் கூட திகைத்து போனார்.

“அம்மா… இதற்கெல்லாம் நான் தகுதியானவன் அல்ல, ஏதாவது உண்பதற்கு இருந்தால் கொடு, அப்படியே போய் விடுகிறேன்.” என்றார் கண்கள் கலங்க. கலங்கிய அந்த விழிகளை பெண் கனிவோடு பார்க்க, இளையவன் சந்தேக பார்வைப் பார்த்தான்.

“ஆண்டவனை அனுதினமும் உள்ளத்தில் வைத்து பூஜிக்கிறீர்களே, இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் ஸ்வாமி? அமருங்கள், இதோ வருகிறேன்.” என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே போனாள்.

மார்த்தாண்டன் உதவிக்கு அமர்த்தியிருந்த பணிப்பெண் சமையலை ஏற்கனவே முடித்துவிட்டதால் வாழை இலையோடும் பதார்த்தங்களோடும் அவசரமாக வந்தாள் மைத்ரேயி. ஏனோ அந்த அடிகளின் பசியைப் போக்க வேண்டும் என்ற தவிப்பு அவளைத் துரிதப்படுத்தியது.

“கையை‌ அலம்பி கொள்ளுங்கள் ஸ்வாமி.” அடிகளுக்குப் பக்கத்தில் ஒரு தண்ணீர் பாத்திரத்தை வைத்தவள், அவர் கையை கழுவி கொண்டதும் இலையை விரித்து அதில் நீர் தெளித்து அன்னத்தைப் பரிமாறினாள்.

அடிகளின் கண்கள் இப்போது மீண்டும் கலங்க குடிசைக்கு வெளியே நின்றிருந்த மார்த்தாண்டனின் கண்கள் வந்திருந்த மனிதரைச் சந்தேக பார்வைப் பார்த்தது.

“இரண்டு நாட்களாக பசித்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆகாரத்தை உண்ணாமல் என்னையே பார்த்திருக்கிறீர்களே ஸ்வாமி?” ஒரு சிறு முறுவலோடு கேட்டாள் மைத்ரேயி.

“உன்னைப் பார்த்தால் எனக்குப் பசி கூட மறந்து போகுமே, அது போலத்தான் அடிகளுக்கும் போலிருக்கிறது!” வெளியே நின்றபடி அந்த ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி சொன்னான் மார்த்தாண்டன்.

“உபாத்தியாயரே, போதும் உங்கள் கேலி!” மைத்ரேயி அவனை அடக்க, இவர்கள் இருவரையும் பார்க்க வசதியாக வெளியே கிடந்த ஒரு பாறையில் அமர்ந்து கொண்டான் மார்த்தாண்டன்.

“அது யார் அம்மா?”

“அவர் எனது உபாத்தியாயர் ஸ்வாமி.”

“பேச்சு… அப்படி சொல்லவில்லையே அம்மா?” ஸ்வாமிகள் கேட்க, இப்போது மைத்ரேயியின் முகம் லேசாக சிவந்தது. அந்த காட்சியை ரசித்தபடி இளநகையோடு அமர்ந்திருந்தான் மார்த்தாண்டன்.

“அவர் வாள் சுழற்றுவதில் வல்லவர் ஸ்வாமி, எனக்குப் புதுவிதமாக வாள் சுழற்ற கற்றுக்கொடுத்ததே அவர்தான்.”

“ஓஹோ!”

“போர் நடக்க இருக்கும் இந்த சமயத்தில் நீங்கள் கோட்டைக்கு அருகில் இருப்பது ஆபத்து அல்லவா ஸ்வாமி?” அடிகளார் உணவை உண்ண ஆரம்பித்திருக்க லேசாக பேச்சு கொடுத்தாள் மைத்ரேயி.

“வேறு என்னதான் செய்வது அம்மா?”

“எங்கேயாவது தேசாந்திரம் போகலாமே.”

“பழகிய இடத்திலேயே வயிற்றைக் காப்பது பெரும்பாடாக இருக்கிறது, இதில் எங்கேயென்று போவது அம்மா? எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று ஆண்டவன் பாதத்தில் அனைத்தையும் போட்டுவிட்டேன்.”

“ஸ்வாமிகளுக்கு வயிற்றுப்பாடுதான் எப்போதும் பெரும் பிரச்சனைப் போல இருக்கிறது?” இப்போது கேலியாக கேட்டான் மார்த்தாண்டன்.

“அப்படியில்லை அப்பனே! என்னதான் ஆண்டவனுக்காக அனைத்தையும் அர்ப்பணித்தாலும் இந்த மண்ணை விட்டு செல்வது மட்டும் முடியாத காரியமாகவே இருக்கிறது.”

“அது சரி, காஞ்சி மண்ணை விட்டு நீங்கள் எப்படி போக முடியும்? நீங்கள் போனால் போர் என்னத்துக்கு ஆவது?” ஒரு தினுசாக மார்த்தாண்டன் கேட்க, உணவைத் தனது வாய்க்காக கொண்டு சென்ற அடிகளின் கை அந்தரத்தில் நின்றது.

மைத்ரேயியும் அதிசயமாக தன் உபாத்தியாயரைத் திரும்பி பார்த்தாள். அவள் முகம் குழப்பத்தைக் காட்டியது.

“உபாத்தியாயரே, என்ன சொல்கிறீர்கள்? அடிகளுக்கும் போருக்கும் என்ன சம்பந்தம்?” பெண் கேட்க சட்டென்று பதில் சொல்லாமல் சற்று தாமதித்தான் மார்த்தாண்டன்.

தன்னைக் குறுகுறுவென்று பார்த்த இளையவனைப் பார்க்க மறுத்த அடிகள் சட்டென்று பார்வையைத் தாழ்த்தி கொண்டார்.

“அப்படியல்ல மைத்ரேயி, அடிகளைப் போன்றவர்கள்தானே போருக்கான நல்ல நாள், நேரம் எல்லாம் குறித்து கொடுக்க வேண்டும், நான் அதைத்தான் சொன்னேன்.”

“ஓ… நீங்கள் அதைச் சொன்னீர்களா?” மைத்ரேயி சிரிக்க மார்த்தாண்டனும் சிரித்தான். ஆனால் அந்த சிரிப்பில் எதுவோ இருந்தது.

போஜனத்தை முடித்து விட்டு அடிகள் கையை அலம்பி கொண்டார். அப்போது மார்த்தாண்டன் எழுந்து மைத்ரேயியின் அருகில் வந்தவன் உரிமையாக அவள் தோளில் தன் கரத்தைப் போட்டு கொண்டான்.

இதை எதிர்பார்க்காத மைத்ரேயி லேசாக நெளிந்தாள். மார்த்தாண்டன் எப்போதும் மற்றவர் முன்பாக இப்படி நடப்பவன் அல்ல. இன்றைக்கு என்ன ஆனது இவருக்கு?!

“உபாத்தியாயரே… என்ன இது?” அவன் கரத்தை அவள் நாசூக்காக விலக்க முயன்றாள். ஆனால் அவன் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

“பொருத்தம் எப்படி இருக்கிறது அடிகளே?” என்றான் குறும்பாக. மைத்ரேயிக்கு தூக்கி வாரிப்போட்டது.

“உபாத்தியாயரே! என்ன பேச்சு இது? வருவோர் போவோரிடம் எல்லாம் இப்படித்தான் பேசுவீர்களா? உங்களுக்கு இன்றைக்கு என்ன ஆனது?”

“வருவோர் போவோரா? இந்த அடிகளைப் பார்த்தால் உனக்கு அப்படியா தோன்றுகிறது மைத்ரேயி? எனக்கென்னவோ அவருக்கும் நமக்கும் ஏதோ ஜென்ம ஜென்மமாக பந்தம் இருப்பது போலல்லவா தோன்றுகிறது.” மார்த்தாண்டனின் குரலில் குறும்பு இன்னும் குறையவில்லை.

“நீங்கள் சொல்வது சரிதான் உபாத்தியாயரே, அடிகளைப் பார்க்கும்போது எனக்கும் வேற்று மனிதர் போல தோன்றவில்லை.”

“ஆஹா! அடிகளே… நன்றாக கேட்டு கொண்டீரா? போர் ஒரு புறம் அதன் பாட்டில் கிடக்கட்டும், நீர் அடிக்கடி இங்கு தாராளமாக வந்து போகலாம், இனி பசித்துக்கிடக்க வேண்டிய அவசியமில்லை.” இரு பொருள் பட பேசினான் மார்த்தாண்டன்.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் மைத்ரேயி ஒரு புன்னகையுடன் உள்ளே போய்விட்டாள். மார்த்தாண்டனின் கண்கள் அடிகளை இப்போது நேரடியாக சந்தித்தது.

அடிகளும் இப்போது சளைக்காமல் இளையவனைப் பதில் பார்வைப் பார்த்தார்.

“வேஷம்… நன்றாக பொருந்துகிறது!” எகத்தாளமாக சொன்னான் மார்த்தாண்டன்.

“பலர் சொல்ல கேட்டிருக்கிறேன், இருந்தாலும் பாராட்டிற்கு நன்றி!” கணீரென்று வந்தது மகேந்திர வர்மரின் குரல்.

“தூரத்தில்தான் பார்த்திருக்கிறேன், அதனால்தான் சட்டென்று கண்டுபிடிக்க முடியவில்லை, இல்லாவிட்டால்…”

“இல்லாவிட்டால்…” இப்போது புன்னகைப்பது மகேந்திர வர்மரின் முறையாயிற்று. இளையவனும் அவரோடு இணைந்து கொண்டான்.

“சரி சரி… பரவாயில்லை விடுங்கள், இது என்ன இரண்டு நாள் பசியா, பதினெட்டு வருட பசியல்லவா? பசி தீர்ந்ததா?”

“மார்த்தாண்டா… திருமணம் முடித்து பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுப்பார், அப்போது தெரியும்… இது தீராத தாகமென்று.” கண்களில் நீர் துளிர்க்க மைத்ரேயி போன திசையையே பார்த்தபடி கூறினார் மகேந்திர வர்மர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!