பல்லவன் கவிதை
பல்லவன் கவிதை
- Posted on
- shanthinidoss
- December 19, 2020
- 0 comments
பல்லவன் கவிதை 18
வாதாபியின் அரச சபை அன்று மிக அமைதியாக இருந்தது. அந்த அமைதிக்கும் காரணம் இல்லாமல் போகவில்லை.
தங்கள் சக்கரவர்த்தி கொஞ்சம் கொடூர சித்தமுள்ளவர் என்று தெரிந்தாலும் அவரை இத்தனைக் கோபமாக இதுவரை யாரும் காணாததால் பேசவே அஞ்சி யாவரும் மௌனியாகவே இருந்தார்கள்.
வாதாபி சக்கரவர்த்தி புலிகேசி தன் தங்க சிம்மாசனத்தில் ஒரு முறை அசைந்து உட்கார்ந்து தன் பெரிய மீசையை மெதுவாக தடவிக்கொண்டார். முகம் சினத்தால் சிவந்திருந்தது.
“ஏன் எல்லோரும் அமைதியாக இருக்கிறீர்கள்? நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது? இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இப்படி கையைக் கட்டிக்கொண்டு காத்திருக்க வேண்டும்?” சிம்ம கர்ஜனையயாக ஒலித்த சக்கரவர்த்தியின் குரலில் வாதாபியின் சேனாதிபதி வாயைத் திறந்தார்.
“சக்கரவர்த்தி பெருமானே! வேங்கிக்கு ஓலையோடு தூதுவன் ஏற்கெனவே மூன்று நாட்களுக்கு முன் போயாகிவிட்டது, தங்கள் சகோதரர் விஷ்ணுவர்த்தன மகாராஜாவின் பதிலுக்காகத்தான் படையே இப்போது காத்திருக்கிறது.”
“ம்…” மூர்க்கத்தனமாக ஒலித்த சக்கரவர்த்தியின் குரலில் லேசான திருப்தி தெரியவும் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார் சேனாதிபதி.
“ஆமாம் ஆமாம்… இன்னும் எத்தனைக் காலம்தான் இப்படி காத்திருக்க வேண்டுமோ?!” குரலில் இப்போது அதிருப்தியைக் காட்டினார் சக்கரவர்த்தி.
“மன்னவா! நம்மிடம் இத்தனைப் படைப்பலம் இருக்கும் போது நாம் எதற்காக வேங்கியின் தயவை நாட வேண்டும்?” முதலமைச்சர் மிகவும் பணிவாக கேட்க அவரை உற்று நோக்கினார் சக்கரவர்த்தி.
“இல்லை முதலமைச்சரே, தெற்கே என் ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும் என்ற என் நெடுநாளைய கனவிற்குக் குறுக்கே நிற்பவன் அந்த மகேந்திர பல்லவன்! ஆடலிலும் பாடலிலும் சிலை வடிப்பதிலும் ஈடுபட்டிருக்கும் அவனை அத்தனைச் சொற்பமாக நினைக்க வேண்டாம்!”
“காஞ்சியின் நிலைமை இப்போது அத்தனை வலுவாக இல்லை சக்கரவர்த்தி.”
“அதை நானும் அறிவேன், இருந்தாலும் எந்த இடத்திலும் என் திட்டம் தோற்றுப்போக கூடாது.”
“தோற்பதற்கு வாய்ப்பே இல்லை சக்கரவர்த்தி, ஐந்து லட்சம் வீரர்கள், முப்பதாயிரம் குதிரைகள், பதினைந்தாயிரம் யானைகள் என நமது படை போருக்காக காத்திருக்கின்றன!” சேனாதிபதியின் ஆக்ரோஷமான குரலில் சபையே ஒரு கணம் ஆரவாரம் செய்தது.
“ஆஹா… ஆஹா…” சக்கரவர்த்தியும் இப்போது தனது திருப்தியை மலர்ந்த முகத்தோடு வெளியிட்டார்.
“இத்தனைப் படைப்பலம் இருக்கும் போது…” முதலமைச்சர் சொல்ல தயங்க அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அங்கிருந்த அனைவரும் புரிந்து கொண்டார்கள்.
“அந்த மகேந்திர பல்லவனை அத்தனைச் சாமான்யமாக நினைக்க வேண்டாம் முதலமைச்சரே! கலைகளில் எத்தனை ஆர்வம் இருக்கிறதோ அதேயளவு போரிலும் தந்திரத்திலும் கூட அவன் கெட்டிக்காரன்.”
“நம் சக்கரவர்த்தி கூட மகேந்திர பல்லவருக்கு எந்த வகையிலும் குறைந்தவர் அல்லவே!” சபையிலிருந்த அமைச்சர் ஒருவர் கூற தனது மீசையை மீண்டும் ஒருமுறை பெருமையுடன் தடவிக்கொண்டார் சாளுக்கிய சக்கரவர்த்தி.
“இருந்தாலும் கிழக்கே என் சகோதரன் விஷ்ணுவர்த்தனனும் தென்மேற்கே அவன் மாமன் துர்வீதனனும் நமக்குத் துணை இருப்பது பெரும் அனுகூலம்.”
“கங்க நாடும் வேங்கி நாடும் போருக்கு எந்த அளவில் தயாராக நிற்கின்றன?” சபையில் இருந்த இன்னுமொரு அமைச்சர் கேள்வி கேட்டார்.
“இரு நாடுகளும் நமக்குப் போரில் உதவுவதாக ஏற்கனவே வாக்களித்துவிட்டார்கள், போருக்கான அனைத்து ஏற்பாடுகளும் வேங்கியிலும் கங்க நாட்டிலும் நடைபெற்று வருகின்றன.” விளக்கினார் சேனாதிபதி.
“விஷ்ணுவர்த்தன மகாராஜா நம் சக்கரவர்த்தியின் உடன்பிறந்த சகோதரர், அவரை நாம் நூற்றுக்கு நூறு வீதம் நம்பலாம், ஆனால் அவருக்குப் பெண் கொடுத்த கங்க மன்னர் துர்வீதன மகாராஜாவை எப்படி நம்புவது?” மீண்டுமொரு கேள்வி எழ சபை அமைதியானது.
கேட்கப்பட்ட கேள்வியில் நியாயம் இருந்ததால் சேனாதிபதியோ முதலமைச்சரோ இப்போது வாயைத் திறக்கவில்லை. இந்த முடிவு சக்கரவர்த்தி எடுத்தது என்பதால் அவரே இதற்குப் பதில் சொல்லட்டும் என்று அமைதியாகி விட்டார்கள்.
“இல்லை இல்லை… நீங்கள் துர்வீதன மகாராஜாவைத் தவறாக நினைக்க வேண்டாம், ஆண்வாரிசுகள் அற்ற அவருக்கு அனைத்துமே அவர் மகள் வயிற்றுப் பேரன், அதாவது என் தம்பி மகன் மார்த்தாண்டன்தான்.”
“இளவரசர் மார்த்தாண்டன் சிறு பிள்ளை…” முதலமைச்சர் தொடங்கியதை முடிக்கவில்லை, அதற்குள்ளாக சக்கரவர்த்தி இடி இடியென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
“யாரைச் சொன்னீர்கள் முதலமைச்சரே, மார்த்தாண்டனையா? அவனா சிறு பிள்ளை?!” சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார் சக்கரவர்த்தி.
“இல்லை முதலமைச்சரே, அவன் வயதில்தான் சிறியவன், ஆனால் அவன் தந்தைக்கோ எனக்கோ எந்த வகையிலும் அவன் குறைந்தவன் அல்ல! மகா வீரன், தந்திரசாலி… எங்கள் தாத்தா சாளுக்கிய மகாராஜா அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்!” கற்பனை உலகில் மிதந்தபடி தன் தம்பி மகன் மார்த்தாண்டனை புகழ்ந்து கொண்டிருந்தார் புலிகேசி சக்கரவர்த்தி. மார்த்தாண்டன் பெயரை உச்சரிக்கும்போது மட்டும் அந்த வஜ்ர முகத்தில் அவ்வளவு கனிவு தோன்றியது.
“மந்திரி மண்டலத்தாரே! நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், வாதாபியின் ராஜ்ஜிய விஸ்தரிப்பு என்பது இன்றைக்கு நேற்றைக்கு என் மனத்தில் உதித்த ஆசையல்ல, என்றைக்கு இந்த சிம்மாசனத்தில் நான் உட்கார்ந்தேனோ அன்றைக்குத் தொடங்கிய கனவு அது, அதை நிறைவேற்றாமல் நான் ஓயப்போவது இல்லை!” சக்கரவர்த்தி தன் கணீர் குரலில் பேச மண்டபமே அதை அமைதியாக செவிமடுத்து கொண்டிருந்தது.
“ஆனால் போர் என்பது அத்தனைச் சாதாரணமான விஷயமல்ல, பெரும்படைக் கொண்ட பெரிய பெரிய ராஜ்ஜியங்களையெல்லாம் சிறு சைனியங்களைக் கொண்டிருந்த படைத்தலைவர்கள் வெற்றிபெற்ற சரித்திரங்கள் ஏராளம்! அதனால் வெறும் படையை மட்டும் நம்பாது நம் புத்தியையும் இங்கு நாம் உபயோகப்படுத்த வேண்டும்.”
“புரிகிறது மன்னவா! இதில் இளவரசர் மார்த்தாண்டன் நமக்கு எந்த வகையில் உதவி செய்கிறார்?”
“மார்த்தாண்டன் வெறும் வீரன் மட்டுமல்ல முதலமைச்சரே! அவன் பெரிய தந்திரசாலியும் கூட! பல்லவ சாம்ராஜ்யத்தை வீழ்த்த வெறும் நம் படைபலம் மட்டும் போதாது, பல்லவ சாம்ராஜ்யத்தின் முதுகெலும்பை உடைக்க வேண்டும்.”
“முதுகெலும்பா?”
“ஆமாம்! பல்லவ சாம்ராஜ்யத்தின் முதுகெலும்பு மகேந்திர பல்லவன்! அவன் மேல் மக்கள் வைத்திருக்கும் அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும்தான் அவன் ஆணிவேர், அதை வீழ்த்த வேண்டும்!”
“ஓஹோ! பல்லவ சாம்ராஜ்யத்தில் புரட்சிக்கொடியை உயர்த்த போகிறீர்களா மன்னவா?” முதலமைச்சர் தான் புத்திசாலி என்பதை நிரூபித்தார்.
“ஆமாம்… நாட்டு மக்கள் ஆதரவு ஒரு மன்னனுக்கு எத்தனை முக்கியம் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள், அதை முதலில் உடைத்துவிட்டால் மகேந்திரன் பாதி உடைந்து போவான், மீதி வேலையை நம் சைனியங்கள் பார்த்துக்கொள்ளட்டும்.”
“ஆனால் இளவரசரிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லையே மன்னவா?”
“அதுதான் எனக்கும் ஒன்றும் புரியவில்லை, கடந்த வாரம் வரை உடனுக்குடன் தகவல்களை அனுப்பியவன் இப்போது மட்டும் ஏன் தாமதிக்கின்றான் என்றுதான் புரியவில்லை!”
“புரட்சி ஆரம்பித்துவிட்டதா மன்னவா?”
“எனக்குத்தெரிந்து இன்னும் சிறிது நாட்களில் ஆரம்பிக்க வேண்டும்… அந்த தகவலைத்தான் நானும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.”
இங்கே இத்தனை விவாதம் தன்னைப்பற்றி நிகழ்வது தெரியாமல் அங்கே மார்த்தாண்டன் மைத்ரேயியின் மலர் முகத்தை வருடிக்கொண்டிருந்தான். அவள் கண்களில் வழிந்து உருண்டோடிய அந்த ஒற்றைக் கண்ணீர் துளியில் அவன் மனம் உருகிப்போனது.
“எதற்கு இப்போது இந்த அழுகை மைத்ரேயி?”
“உபாத்தியாயரே, என்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது?”
“எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கிறது மைத்ரேயி.”
“எதை நல்லதென்று சொல்கிறீர்கள்? எனக்கொரு தந்தை இருந்திருக்கிறார், ஆனால் நேற்று வரை எனக்கு அது தெரியாது.”
“அதை விதி என்று எடுத்துக்கொள்.”
“இல்லையே… இது சதியல்லவா?” இப்போது மார்த்தாண்டன் சிறிது மௌனம் காத்தான்.
“ஒரு ராஜ்ஜியத்திற்கே நான் சொந்தக்காரி என்று சித்தி ஓலையில் சொல்லி இருக்கிறார், ஆனால் நான்… தந்தை யாரென்றே தெரியாமல் எத்தனை அனாதரவாக இத்தனைக் காலம் வாழ்ந்திருக்கிறேன்!”
“மைத்ரேயி… உன் தாயைக் குறைக் கூறாதே.”
“வேண்டாம் உபாத்தியாயரே, என் தாயைப்பற்றி மட்டும் என்னிடம் பேசாதீர்கள்! இன்றைக்கு இந்த உலகில் நான் வெறுக்கும் ஒரு நபர் என்றால் அது என் தாயாகத்தான் இருக்கும்.”
“வேண்டாம் மைத்ரேயி, இப்படியெல்லாம் பேசாதே! சரித்திரத்தில் பல பெண்கள் நாட்டு நலனை முன்னிட்டு பல உண்மைகளை மறைத்திருக்கிறார்கள்.”
“அதில் என் பிறப்பு ரகசியமும் ஒன்றா?” மைத்ரேயியின் குரலில் இருந்த இகழ்ச்சியை மார்த்தாண்டனும் கவனித்தான். ஆனால் பதில் சொல்ல இயலவில்லை.
மகேந்திர பல்லவர்தான் உன் தந்தை என்பதை மட்டும்தான் ஓலையில் மகிழினி குறிப்பிட்டிருந்தார்.
பரிவாதனியின் பூர்வீகம் எதுவும் அதில் குறிப்பிட்டிருக்கப்படவில்லை. அந்த ரகசியம் இப்போது வெளியே வருவது நல்லதல்ல என்று மகிழினியே நினைக்கும் போது அதை உடைக்க மார்த்தாண்டன் துணியவில்லை.
மகிழினியின் வாயிலிருந்து அந்த ரகசியத்தை அறிந்துகொள்ள தான் எத்தனை சிரமப்பட்டேன் என்று நினைத்த போது மார்த்தாண்டனுக்கு தானாக பெருமூச்சு வந்தது.
“என்ன உபாத்தியாயரே? சிந்தனைப் பலமாக இருக்கிறது?”
“ஒன்றுமில்லை மைத்ரேயி… சில வேளைகளில் சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.”
“தந்தை யாரென்று எனக்குத் தெரியாது… நானொருத்தி இருப்பதே என் தந்தைக்குத் தெரியாது, எத்தனை விந்தையான உலகம் என்னுடையது!” சொல்லிவிட்டு கசப்பாக சிரித்தாள் மைத்ரேயி.
“கடந்த காலத்தை மறந்துவிடு மைத்ரேயி.”
“சரி உபாத்தியாயரே, கடந்த காலத்தை விட்டுவிடுங்கள்… நிகழ்காலமாவது எனக்குப் புரிகிறதா?” பெண் கேட்டபோது மார்த்தாண்டன் விஷமமாக புன்னகைத்தான்.
“ஏன்? நிகழ்காலத்தில் உனக்கு என்ன குறை வந்துவிட்டது?”
“நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது, பார்த்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கும், என் சித்தி உங்களை நம்பி என்னை உங்களோடு அனுப்பி இருக்கிறார், நானும் வந்திருக்கிறேன்.”
“என் மீது சந்தேகம் கொள்கிறாயா?” மார்த்தாண்டன் குரலில் இப்போது சிரிப்பிருந்தது.
“உங்களுக்கு என்னைப் பார்த்தால் கேலியாக இருக்கிறதா?” உரிமையாக அவள் கோபித்துக்கொள்ள மார்த்தாண்டன் இப்போது மெய்யாகவே சிரித்தான்.
“அப்படி இல்லை மைத்ரேயி… ஒரு சில விஷயங்கள் உன் வாழ்க்கையில் உன் தாயால் மறைக்கப்பட்டிருக்கின்றன, எனக்குத் தெரிந்து அதற்குப் பின்னால் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்!”
“அப்படியென்ன தலைப்போகின்ற காரணங்கள் உபாத்தியாயரே?”
“ஒரு தலையல்ல… பல தலைகளைக் காக்க வேண்டி இருந்ததோ என்னவோ?!”
“வெளிப்படையாக பேசலாமே.”
“வேண்டாம் மைத்ரேயி, உனக்கு எது தெரிய வேண்டுமோ அதை உன் சித்தியே ஓலையில் குறிப்பிட்டுள்ளார், அத்தோடு நிறுத்திக்கொள், ஆனால் இந்த மார்த்தாண்டன் விஷயத்தில் இனி உன்னிடம் மறைக்க ஏதுமில்லை, இன்னும் சிறிது நேரத்தில் உன்னை அலங்கரிக்க பணிப்பெண் வருவாள், ஆயத்தமாகி இரு, உன்னை அழைத்துப்போக நானே வருகிறேன், உன் குழப்பங்களுக்கெல்லாம் நானே விடை சொல்கிறேன்.”
சொல்லிவிட்டு மார்த்தாண்டன் சென்றுவிட்டான். அவன் போய் சற்று நேரத்திலெல்லாம் ஒரு பெண் பட்டோடும் ஆபரணங்களோடும் வந்து மைத்ரேயியை அலங்கரிக்க ஆரம்பித்து விட்டாள்.
பதுமையென உட்கார்ந்திருந்தாள் மைத்ரேயி.
***
மார்த்தாண்டன் திரும்ப வந்த போது மைத்ரேயி முழு அலங்காரத்தில் அத்தனை அழகாக இருந்தாள். ஒரு கணம் பேச மறந்து நின்றிருந்த இளவலைப் பார்த்த பணிப்பெண் ஒரு ரகசிய சிரிப்போடு அறையை விட்டு வெளியேறி விட்டாள்.
உபாத்தியாயரைப் பார்த்த மைத்ரேயி எழுந்து அவனருகில் வந்தாள்.
“உபாத்தியாயரே, இது என்ன புது வேஷம்?” அவள் கேள்வியில் அவன் சிரித்தான்.
“முக்கியமான ஒரு நபரைச் சந்திக்க போகிறோம் மைத்ரேயி.”
“ஏன்? அந்த நபரைப் பார்க்க நான் இந்த கோலத்தில்தான் வர வேண்டுமா?”
“வந்தால் நல்லது என்று எனக்குத் தோன்றியது.”
“யாரந்த நபர்?”
“வா சொல்கிறேன்.” அவளின் கைப்பிடித்து அவர்கள் தங்கியிருந்த மாளிகைக்கு அடுத்ததாக இருந்த பிரதான மாளிகைக்கு அவளை அழைத்து சென்றான் மார்த்தாண்டன்.
அந்த மாளிகையின் முதற்கட்டைத் தாண்டி உள்ளே சென்றதும் ஒரு பெரிய மண்டபம் இருந்தது. ஆலோசனை மண்டபம் போல தெரிந்த அந்த இடத்தில் பல ஆசனங்கள் போடப்பட்டிருந்தன.
அதில் நடுநாயகமாக இருந்த பெரிய தந்த சிம்மாசனத்தில் கங்க நாட்டு மன்னன் துர்வீதன மகாராஜா அமர்ந்திருந்தார்.
மைத்ரேயி ஒரு கணம் திடுக்கிட்டு போனாள்.
கங்க நாட்டு மன்னரை இதற்கு முன் அவள் பார்த்ததில்லை என்றாலும் அவர் தலையில் தரித்திருந்த வைரக்கிரீடம் அவர்தான் மகாராஜா என்று அவளுக்குச் சொல்லாமல்
சொல்லியது.
“வா மார்த்தாண்டா!” வெகு வாஞ்சையோடு அந்த குரல் உபாத்தியாயரை அழைக்கவும் சட்டென்று மார்த்தாண்டனை திரும்பி பார்த்தாள் மைத்ரேயி.
மன்னவர் முன் நின்றதால் சம்பிரதாய முறைப்படி தன் தலையைத் தாழ்த்தினான் மார்த்தாண்டன். அதன் பிறகுதான் தான் கல் போல நிற்பதை உணர்ந்த மைத்ரேயி தானும் தலைத் தாழ்த்தினாள்.
“வா மைத்ரேயி!” மன்னர் தன் பேரையும் உச்சரிக்கவும் ஆச்சரியத்தின் உச்சத்திற்குப் போனாள் பெண். அவள் கை இப்போது மார்த்தாண்டனின் கரத்தைக் கெட்டியாக பிடித்தது.
அதைக் கண்டும் காணாதவர் போல மன்னர் லேசாக புன்னகைத்தார்.
“இருவரும் அமருங்கள்.” அங்கிருந்த ஆசனங்களை மன்னர் காட்ட,
“இருக்கட்டும் தாத்தா.” என்றான் மார்த்தாண்டன்.
‘தாத்தாவா?!’ பூமி தன் காலடியில் நழுவுவது போல உணர்ந்தாள் மைத்ரேயி.
அவர்கள் தங்கியிருந்தது கங்க நாட்டின் அரச மாளிகை என்பது அவளுக்குத் தெரியும். தனது உபாத்தியாயர் இங்கே ஏதோ பெரிய அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறார் என்றுதான் இந்த இரண்டு நாட்களும் அவள் எண்ணி இருந்தாள். ஆனால் இது என்ன?! உபாத்தியாயர் மன்னவனைத் தாத்தா என்கிறாரே?!
“ஏன் அப்படி பார்க்கிறாய் மைத்ரேயி? மார்த்தாண்டன் தன்னை யாரென்று இன்னும் உன்னிடம் வெளிப்படுத்தி கொள்ளவில்லையா?” மன்னரின் குரலில் சிரிப்பிருந்தது.
அறுபதுகளில் இருந்தாலும் நல்ல வஜ்ர தேகத்தோடு இருந்தார் துர்வீதன மகாராஜா. ஊன்றி கவனித்தால் மார்த்தாண்டனின் முகச்சாயல் அவரிடம் அப்பட்டமாக தெரிந்தது.
முகத்தில் நெற்றியின் ஓரமாக தெரிந்த பெரிய தழும்பு போர்க்களங்கள் அவருக்குப் புதிதல்ல என்று பறைச் சாற்றின.
கண்களில் தெரிந்த கனிவிற்கும் அவர் உடம்பின் உறுதிக்கும் சம்பந்தமே இல்லை போல தோன்றியது. உதட்டில் சதா தவழ்ந்து கொண்டிருந்த குறும்பு புன்னகை மார்த்தாண்டன் எங்கிருந்து அதைப் பெற்றான் என்று கட்டியம் கூறியது.
“மைத்ரேயிக்கு நான் யாரென்று இன்னும் தெரியாது தாத்தா.” குறும்பாக சொன்னான் மார்த்தாண்டன்.
“அடடா! இது என்ன மார்த்தாண்டா இப்படி செய்துவிட்டாய்? அதுதான் குழந்தை என்னைப் பார்த்ததும் மலைத்துவிட்டாள்!” கனிவோடு சொன்ன மன்னர்,
“மைத்ரேயி… இங்கே வா!” என்று அழைத்தார். மைத்ரேயி உபாத்தியாயரைத் திரும்பி பார்க்க அவன் கண்களாலேயே அனுமதி வழங்கினான். மிகவும் மரியாதையாக மன்னரின் அருகே சென்ற பெண் அவருக்கு வணக்கம் வைத்தாள்.
“நீ அருமையாக வாள் சுழற்றுவாயாமே? மார்த்தாண்டன் சொன்னான்.”
“ஓரளவு… தெரியும் மன்னவா.” திக்கி திணறினாள் இளையவள்.
“எதற்கு என்னிடம் உனக்கு இத்தனைப் பயம் மைத்ரேயி? மார்த்தாண்டனுக்கு நான் தாத்தா என்றால் உனக்கும் நான் தாத்தாதானே?” அந்த நாட்டின் மன்னர் தன்னிடம் இத்தனை இயல்பாக பேச ஆச்சரிய மிகுதியில் மைத்ரேயியின் உடம்பு லேசாக நடுங்கியது.
“பயப்படாதே! பெண்கள் எதற்கும் பயப்பட கூடாது, என் பெண்ணை நீ பார்த்திருக்க நியாயமில்லை… அவள் என் ஒரே வாரிசு என்பதால் அவளை மிகவும் தைரியமானவளாகத்தான் நான் வளர்ந்தேன்.” அந்த பேச்சில் சற்றே உறுதியடைந்தாள் பெண்.
“உங்கள் பெண் இப்போது எங்கே?” லேசாக குரலைத் திடப்படுத்திக்கொண்டு கேட்டாள் மைத்ரேயி.
“திருமணம் செய்து கொண்டு வேங்கி மன்னரின் பட்டமகிஷியாகிவிட்டாள்.”
“ஓ…”
“அவளுக்கொரு மகன் இருக்கிறான்… பொல்லாத குறும்புக்காரன்.” சொல்லிவிட்டு மன்னர் மார்த்தாண்டனை பார்த்து சிரிக்க, அப்போதுதான் மன்னருக்கும் மார்த்தாண்டனுக்கும் இடையே உள்ள உறவு புரிந்தது மைத்ரேயிக்கு.
“அப்படியென்றால்… உபாத்தியாயர்…”
“என் மகள் வயிற்றுப் பேரன், நாளை இந்த கங்க நாட்டை எனக்குப் பிறகு ஆளப்போகும் மன்னன்!” துர்வீதன மகாராஜா பெரிய குரலில் தனது பேரனை அந்த இளம் பெண்ணிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“அது மட்டுமல்ல, வேங்கி நாட்டின் முடிக்குரிய இளவரசனும் அவன்தான்!” அந்த அறிவிப்புகளால் மைத்ரேயி நிலைகுலைந்து போனாள்.
சட்டென்று அவள் விழிகள் உபாத்தியாயரைத் திரும்பி பார்க்க, இது எதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ஒரு குறும்பு சிரிப்புடன் பெண்ணையே பார்த்தபடி நின்றிருந்தான் மார்த்தாண்டன்.
“நல்லது மைத்ரேயி, எனக்கு முதன் மந்திரியுடன் முக்கியமான ஒரு சந்திப்பு இருக்கிறது, உனக்கு இங்கே எந்த சௌகரிய குறைச்சலும் இருக்காது என்று நம்புகிறேன், ஆயுத பயிற்சிகளில் உனக்கு நிறையவே ஆர்வம் இருப்பதாக மார்த்தாண்டன் சொன்னான், அதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யச்சொல்லி இருக்கிறேன், இப்போது நான் சென்று வரட்டுமா?”
“சென்று வாருங்கள் மகாராஜா.” பணிவாக சொன்னாள் மைத்ரேயி.
“ம்ஹூம்… சென்று வாருங்கள் தாத்தா என்று சொல்ல வேண்டும்!” மன்னர் இயல்பாக திருத்தம் செய்ய,
“சரி தாத்தா.” என்றாள் பெண். மார்த்தாண்டன் இந்த நாடகத்தை அமைதியாக பார்த்தபடி இருந்தான்.
மைத்ரேயியின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் என்று அவனுக்குச் சிறிது கவலையாக இருந்தது. தான் யாரென்பதை அவளிடமிருந்து மறைக்கும் எண்ணம் அவனுக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை.
முதல் பார்வையிலேயே தன்னை அவள் புறமாக இழுத்துவிட்ட அந்த மாயக்காரி தான் யாரென்ற உண்மைத் தெரிந்தால் தன்னை நெருங்க பயப்படுவாளோ என்ற காரணத்தால்தான் அனைத்தையும் மறைத்தான்.
ஆனால் இப்போது அத்தனையும் தெட்ட தெளிவாக தெரிந்து விட்டது. மைத்ரேயியை பற்றி அனைத்து உண்மைகளையும் தன் தாத்தாவிடம் கூறிய மார்த்தாண்டன் மறந்தும் பரிவாதனி பற்றி உண்மையை யாரிடமும் சொல்லவில்லை.
அது மைத்ரேயிக்கும் இப்போது தெரிய வேண்டாம், வேறு யாரிடமும் சொல்லவும் வேண்டாம் என்று முடிவெடுத்து கொண்டான்.
“உபாத்தியாயரே!” இளையவள் அழைக்க தன் சிந்தனையிலிருந்து விடுபட்டான் மார்த்தாண்டன்.
“என்ன மைத்ரேயி?”
“இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் என்னை நோக்கி தாக்க ஆயத்தமாக இருக்கின்றன? ஒட்டுமொத்தமாக தாக்கி விடுங்கள், இந்த தவணை முறைத் தாக்குதலைத் தாங்க என் உடம்பிற்கும் மனதிற்கும் அவ்வளவு சக்தி இல்லை.”
நலிந்த குரலில் மைத்ரேயி சொல்ல இளவரசன் முகத்தில் கனிவு தோன்றியது.
“அப்படியல்ல மைத்ரேயி… நான் யாரென்று தெரிந்தால் நீ என்னை நெருங்க தயங்குவாய் என்று நினைத்துத்தான் அனைத்தையும் மறைத்தேன், அத்தோடு…”
“அத்தோடு?”
“நான் பல்லவ எல்லைக்குள் காலடி எடுத்து வைத்த நோக்கமும் வேறு.”
“அது என்ன நோக்கம்?”
“சொல்கிறேன், ஆனால் இப்போது இங்கே அதைப்பற்றி பேச வேண்டாம்.”
“ஏன்?”
“அதைப்பற்றி எல்லாம் பேச இது உகந்த இடமல்ல மைத்ரேயி.”
“சரி, அப்படியென்றால் வாருங்கள் போகலாம்.” தாங்கள் தங்கியிருந்த மாளிகைக்கு இருவரும் வந்து சேர இப்போது உபாத்தியாயரின் முகத்தைப் பார்த்தாள் பெண்.
இன்றைக்கு அவள் ஒரு முடிவோடுதான் இருக்கிறாள் என்று உணர்ந்த உபாத்தியாயனும் எப்படி ஆரம்பித்து இவளிடம் எல்லாவற்றையும் சொல்வது என்று திணறினான்.
“பேசுங்கள் உபாத்தியாயரே!” அவள் அவனை ஊக்குவிக்க அதற்கு மேலும் தாமதிக்கவில்லை மார்த்தாண்டன்.
“மைத்ரேயி… நான் சொல்வதை நீ நடுநிலைமையாக இருந்து புரிந்துகொள்ள வேண்டும்.”
“எதற்கு இத்தனைப் பூர்வ பீடிகை உபாத்தியாயரே?”
“தேவை இருக்கிறது மைத்ரேயி…” தன்னைச் சிறிது திடப்படுத்தி கொண்ட மார்த்தாண்டன் தொடர்ந்தான்.
“பல்லவ சாம்ராஜ்யத்தைச் சூழ பெரிய போர் மேகங்கள் திரண்டுள்ளன மைத்ரேயி.”
“ஓ…”
“வாதாபி பெரும் படையோடு பல்லவ சாம்ராஜ்யத்தைத் தாக்க ஆயத்தமாகிவிட்டது, அதற்கு வேங்கியும் துணை நிற்க ஏற்கனவே ஏற்பாடுகள் நடக்கின்றன.” மார்த்தாண்டன் நிதானமாக சொல்ல மைத்ரேயி அமைதியாக கேட்டிருந்தாள்.
“இப்போது கங்க நாடும் தன் ஆதரவை வாதாபிக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது.”
“புரிகிறது.”
“என்ன புரிகிறது?”
“உபாத்தியாயரின் வாள் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு எதிராக தன் உறையிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது.” கசப்போடு பெண் சொல்ல கவலையோடு கேட்டிருந்தான் இளவரசன்.