பூவிதழ் – 4

பூவிதழ் – 4
அத்தியாயம் – 4
தேன்மொழி பெரிய தீப்பெட்டி தொழிற்சாலையில் அக்கௌண்ட் பார்க்கும் பெண்ணாக பணிபுரிகிறாள். அந்த தொழிற்சாலையில் பெண்கள் அதிகம் பணிபுரிகின்றனர். நாம் வெறும் ஒரு ரூபாய்தானே என்று கேவலமாக நினைக்கும் தீப்பெட்டி செய்து பிழைப்பை ஓட்டும் மக்கள் அங்கே ஏராளம்.
அவள் அன்றைய கணக்குகளை எழுதி முடித்துவிட்டு சாப்பிட அமரும்போது, மணி மதியம் ஒன்றைத் தாண்டி இருந்தது. அவளுடன் வேலை செய்யும் மற்றவர்களுடன் பேசியபடி சாப்பிட தொடங்கினாள்.
“காலையில ரோட்டில் யாருடன் நின்னு பேசிட்டு இருந்த மாதிரி இருந்ததே! ஆள் வேற நல்ல வாட்டசாட்டமாக பார்க்க கொஞ்சம் லட்சணமாக இருந்தான்” என்ற மல்லிகாவின் பார்வையில் பொறாமை அப்பட்டமாக தெரிந்தது.
மல்லிகா மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் ரகம். அவர் ஒரு விஷயத்தில் மூக்கை நுழைத்தால், அதில் வில்லங்கம் இருக்கும் என்று எப்போதும் சற்று விழிப்புடன் இருப்பாள் தேன்மொழி. அவரின் திடீர் கேள்வியில் சாப்பிட்ட சாப்பாடு புரையேறிட, வேகமாக தண்ணீரை எடுத்து பருகினாள்.
‘என்னை மட்டும் எப்படித்தான் கண்ணு தெரியுமோ இந்த மகராசிக்கு! இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களை மாதிரி ஆளுங்களைத் திருத்தவே முடியாது’ என்று மனதிற்குள் நொடித்துக்கொண்டு, அவரைப் பார்த்து சிரித்தாள்.
“என்னடி ஒரு மாதிரி சிரிக்கிற?” என்று அவர் கிடுக்குப்பிடி போட, “ஏன் அக்கா உங்களுக்கு எல்லாம் என்னை கவனிப்பது மட்டும்தான் வேலையா? எந்தநேரமும் நான் எங்கே போறேன், வர்றேன்னு எல்லா விவரங்களையும் சேகரித்து பி.ஹெச்.டி பண்ணலாம்னு முடிவில் இருக்கீங்களா?” என்றாள் நக்கலாக.
அவளது நேரடித் தாக்குதலில் மல்லிகாவின் முகம் கோபத்தில் இரத்தமென சிவந்தது. அதற்காக அவளிடம் தணிந்துபோக மனமின்றி, “எட்டாங்கிளாஸ் தாண்டல. இந்த இலட்சணத்தில் நான் எங்கிருந்து காலேஜு போயி பட்டம் வாங்கறது? அந்த பக்கம் கடைக்கு வந்தபோது ரொம்ப இயல்பாக பேசிட்டு இருந்தீயா? அதுதான் தெரிஞ்ச பையனான்னு கேட்டேன்” என்றார் சலிப்புடன்.
“ம்ஹும் நானும் நீங்க சொன்னதை நம்பிட்டேன் அக்கா” என்று அவள் வந்த சிரிப்பை அடக்க முயன்றாள். அதைக் கவனித்த மற்ற பெண்களின் முகத்தில் கேலி அப்பட்டமாக வெளிப்பட்டது.
மற்றவர்கள் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்தவர், “ஏண்டி ஒரு விஷயம் பேசிட்டு இருக்கும்போது இப்படிதான் சிரிப்பியா?” என்று இடைவெளிவிட, அவளின் விழிகள் கூர்மை பெற்றது.
“நீ ரொம்ப நல்ல பொண்ணு. யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பழக மாட்டே. ஆண்கள் இருக்கும் திசைப்பக்கம் தலைவைத்து படுக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுதான் என்ன சங்கதி என்று விசாரித்தேன்” என்று அவர் மூச்சுவிடாமல் பேச, அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழிக்கு மூச்சு முட்டியது.
‘யெப்பா! எவ்வளவு லேந்தாக பேசறாங்க. இதெல்லாம் அந்த வளந்து கெட்டவனால் வந்தது. இப்படி எல்லாம் பேசுவாங்கன்னு தெரிஞ்சிருந்தால் அவன் மேல் வண்டியை விட்டே ஏத்தி இருப்பேன், ச்சே நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டேன்’ என்று மனதிற்குள் வருந்திட, மல்லிகாவின் பார்வை அவள் மீது கேள்வியாக பதிந்ததில் சட்டென்று சுதாரித்தாள் சின்னவள்.
“அடிக்கடி ரோட்டில் பார்த்து பேசியதுதான் அக்கா. எந்தநேரமும் யாரோ ஒருத்தரை வம்புக்கு இழுப்பாரு. அதைப் பார்க்கும் எனக்கு வாய் கம்முனு இருக்காது.நானும் ஏதாவது எக்குத்தமாகச் சொல்லிடுவேன். இப்படி பேசி பழகியது தான்” என்றவள் சொல்லிக்கொண்டு இருக்க, “உண்மைதானா?” என்று நம்பாமல் கேட்டாள் மல்லிகா.
‘இவளுக்கு இப்போ என்னதான் பிரச்சனைன்னு தெரியல. மனுசனை கேள்வி கேட்டே சாகடிக்கிறாளே! உண்மை சொன்னாலும் நம்பவும் மாட்டேங்கற, எனக்கு வர கோபத்துக்கு!’ என்றவள் உதடுகளில் இதழ்கடையோரம் புன்னகை அரும்பியது.
“என்னக்கா நான் சொன்னால் நம்பவே மாட்டேங்கற?” என்று அவள் கேட்க, “இப்போ நம்பறேன் தேனு” என்றாள் மல்லிகா.
பாவம் அவள் சிரிப்பிற்கான பின்னணி தெரியாமல், “ம்ஹும் நீ மேல சொல்லு” என்று அவர் தொடங்கி வைக்க, ‘நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்’ தேன்மொழிக்கு அப்படியே பத்திக்கொண்டு வந்தது.
“இதுக்குமேல் என்ன சொல்றது? அவன் டிராக்டர் ஓட்டும் விஷயம் தவிர மத்த எதுவும் எனக்கு தெரியாது” என்றவள் வேகமாக சாப்பிட்டு முடித்தவள், டிப்பனை மூடிவைத்துவிட்டு கைகழுவ எழுந்து சென்றாள்.
அவள் மீண்டும் திரும்பி வரும்போது, “அது சரி! உங்க அம்மா உனக்கு வரன் பாக்குதா? அப்படி பார்க்கும் எண்ணம் இருந்தால் காலையில உன்கிட்ட பேசியவனை ஓகே பண்ண சொல்லுடி. உங்க இருவருக்கும் ஜோடி பொருத்தம் அம்பூட்டு அழகா இருக்கு” என்று சிரித்துக்கொண்டே விசயத்தைப் பட்டும்படாமல் சொல்லி அவள் மனதில் ஆசையைத் தூண்டினார் மல்லிகா.
அவரின் மறுபக்கம் அவளுக்கு அத்துபடி என்பதால், “என்னைக் கண்டாலே பூனையைத் தூக்கி நாய் மூஞ்சில வீசினது கனக்கா பேசுவான். இந்த லட்சணத்தில் அவனைக் கட்டிகிட்டு குடித்தனம் பண்ணிட்டா அவ்வளவுதான். அதுக்கு நான் காலம் முழுக்க இப்படியே இருப்பது எவ்வளவோ மேல்!” என்று அவரைக் கையெடுத்து கும்பிட்டுவிட்டு தன் வேலையைக் கவனிக்க சென்றாள்.
‘ம்ஹும்! கல்லைக் கூட கரைக்கலாம், இவ மனசை கரைக்க முடியாது போல.. எந்தநேரமும் ஜாக்கிரதையாகவே இருக்கிறாப்பா! நானும் தான் ஒன்னு பெத்தேனே! இன்னும் பத்தொன்பது வயசு தாண்டல, அதுக்குள் காதலித்து கல்யாணம் பண்ணி வாழாவெட்டியாக வந்து உட்கார்ந்து இருக்கு. எல்லாம் தலைவிதி’ என்று மனதிற்குள் நொந்துகொண்டு, டிப்பனை மூடி வைத்துவிட்டு கைகழுவ எழுந்து சென்றாள்.
மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இந்துமதி அவள் கண்ணில் விழுந்தாள். ஒரு சப்போட்டா மரத்திற்கு தண்ணீர் விட்ட வெட்டிவிட்ட பாத்திக்குள் கைவிட்டு எதையோ தேடுவதைக் கவனித்தாள்.
“இங்கே உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்கிற?” என்றதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த இந்துமதி, “நீங்கதானா?” என்றாள் ஒரு பெருமூச்சுடன்.
அவளது செய்கையைக் கவனித்தவள், “இப்படி பதறும் அளவுக்கு அப்படி என்ன செய்யற?” என்றவளின் பார்வை சந்தேகத்துடன் அவள் மீது படிந்தது.
“அதுவா அக்கா இந்த மரத்தில் இப்போதான் காய் பிடிக்க தொடங்கியிருக்கு. சீக்கிரம் பழுக்கும் பழத்தை வீட்டுக்காரங்க பறிச்சிட்டுப் போயிடுறாங்க. அதுதான் காயாகப்பறித்து ஈர மண்ணுக்குள் புதைத்து வச்சு ரெண்டு நாளாச்சு. இந்நேரம் நல்லா பழுத்திருக்கும், அதுதான் எங்கேன்னு தேடிட்டு இருக்கேன்” என்று அவள் விளக்கம் கொடுத்தாள் சின்னவள்.
அவள் சொன்னதைக் கேட்டு, “அடியே காய் தானாக கனியனும். அப்போதான் பழத்தின் சுவை நல்லா இருக்கும். நீ இப்படி பழுக்க வைத்தால் கடைசியில் கசப்பாகத்தான் இருக்கும்” என்று சொல்லி பின்னந்தலையில் செல்லமாக ஒரு அடி போட்டுவிட்டு வீடு நோக்கி சென்றாள்.
வீட்டின் தெருமுனை திரும்பும்போது, “மாமா அன்னைக்கே இதெல்லாம் வேணாம், வீட்டுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் சொன்னேன் கேட்டியா? உன்னாலே இப்போ இந்த கதிக்கு ஆள் ஆகிருக்கேன். நேத்து ராத்திரியில இருந்து ஒரே வாந்தி, காலையில தலையெல்லாம் சுத்துது” ஒரு பெண்ணின் குரல் அவளது கவனத்தை ஈர்த்தது.
தேன்மொழி பார்வை குரல் வந்த திசையை நோக்கிட, அங்கே கலைசெல்வனோடு மற்றொரு பெண்ணும் நின்றிருந்தாள். அவர்கள் பேச்சின் சாரம்சம் நொடியில் விளங்கிட, ‘இந்த காலத்தில் யாரைத்தான் நல்லவன்னு நம்பறது என்று ஒண்ணுமே புரியல’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
தங்களை ஒருத்தி கவனிப்பதை உணராத கலையோ, “இதுக்கெல்லாம் யாராவது புலம்புவாங்களா? நான் மெடிக்கலில் சொல்லி மாத்திரை வாங்கித்தரேன். அதை இரண்டுநாள் போடு எல்லாம் சரியாகிடும். அப்புறம் இந்த விஷயத்தை வெளியே சொல்லிட்டு திரியாதே!” என்ற எச்சரிக்கையுடன் அங்கிருந்து சென்றான்.
இருவரும் பேசுவதைக்கேட்ட தேன்மொழி, ‘ம்ஹும் இங்கே எவனும் நல்லவன் இல்ல. இவனிடம் இனிமேல் பேச்சைக் குறைக்கணும்’ என்று மனதினுள் முடிவெடுத்து வீட்டிற்கு சென்றாள்.
அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கைகட்டி பறக்க, அவனது சந்திப்புகள் வெகுவாக குறைந்து போனது. அதைப்பற்றி யோசிக்கும் நிலையிலும் அவள் இல்லை என்றே சொல்லலாம். தேன்மொழிக்கு வேலைக்கு செல்லவும், வீட்டினரைக் கவனிக்கவுமே நேரம் சரியாக இருந்தது. அதனால் கலைச்செல்வன் பற்றிய நினைவுகளைத் தற்காலிகமாக மறந்தாள்.
அவனின் நினைவலைகள் முழுவதிலும் அவள் மட்டுமே மையம்கொண்டு இருந்தாள். ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நிற்கும்போதும் அவள் கொடுத்த அரை நினைவிற்கு வந்து அவனின் வெறியைத் தூண்டிவிட்டது. இன்னொரு முறை அவளை நேரில் சந்தித்தால் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் இருந்தது.
அவன் வழக்கம்போல வேலைக்குத் தயாராகிக் கொண்டிருக்க, “ஏலே செல்வா எப்படி இருக்கிற?” என்ற கேள்வியுடன் வயதான பெண்மணி வீட்டிற்குள் நுழைந்தார்.
அவரைப் பார்த்ததும் அவன் முகம் பிரகாசமாகிட, “பாட்டி வாங்க. என்ன கொள்ளுப் பேரன் மோகம் இன்னும் தீரலயா? எப்போ ஊருக்குப் போனது இப்போதான் வரீங்க. பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கியதும் ஒரு போன் பண்ணிருந்தால் நான் வந்து கூப்பிட்டு வந்திருப்பேன் இல்ல” என்றான் அக்கறையுடன்.
“எனக்கு இன்னும் கால்நரம்பு செத்துப்போகல” என்றவருக்கு உட்கார சேர் எடுத்துப்போட்டு, அவர் குடிப்பதற்கு டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தான்.
அதுவரை அந்த வீட்டை வலம் வந்தது பாட்டியின் பார்வை. ஒரு படுக்கையறை, ஒரு ஹால் மற்றும் சமையலறை கொண்ட அந்த வீட்டில் எல்லாப்பொருட்களும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது. அவன் படிக்கும் புத்தகங்கள் ஒரு ரேக்கில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தது.
ஒரு பெண் இருந்து வீட்டைப் பராமரித்தால், எந்தளவு சுத்தமாக இருக்குமோ அந்தளவு சுத்தமாக இருந்த வீட்டைப் பார்த்து, “செல்வா பொண்ணுங்க தொத்து போயிடணும்டா உன்கிட்ட. எவ்வளவு அழகாக வீட்டை வச்சிருக்கிற என் ராசா. இந்த கிழவி ஊருக்குப் போயிருந்தாலும் மனசு முழுக்க இங்கதான் இருந்துச்சு” என்று சொன்னவரின் கையில் டீ டம்ளாரைக் கொடுக்க, மறுக்காமல் அதை வாங்கிப் பருகினார் ராமாத்தாள்.
“அதையெல்லாம் விடு. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி ஒண்டிக்கட்டையாக இருக்கப் போறே. முதலில் ஒரு நல்லா பொண்ணாப் பார்த்து கல்யாணம் முடி ராசா” என்று பரிவுடன் கூறிய பாட்டியில் பாதம் அருகே அமர்ந்து, அவரின் மடியில் தலைவைத்து படுத்தான்.
தாய் – தந்தை இழந்தபிறகு அவனை அக்கறையுடன் கவனித்துக் கொண்டவர் தான் ராமாத்தாள். இவர் மூத்த தலைமுறை என்பதால் ஒரு சில விஷயங்களை தவிர, மற்றவற்றை அவன் காதில் வாங்குவதில்லை. ஆனால் அவன் அதிகம் மதிக்கும், பாசம் வைத்திருக்கும் ஒரே ஜீவன் இந்த பாட்டி மட்டுமே!
“நீங்க இவ்வளவு ஈஸியாக சொல்லிட்டீங்க. ஆனால் அது எல்லாம் கனவிலும் நடக்காது பாட்டிம்மா. என்னை உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை என் கேரக்டர் தெரிந்தும் ஒரு நொடியில் தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டாள்” என்றவன் குரலில் இருந்த விரக்தி அந்த முதியவளின் மனதைத் தாக்கியது.
அவன் பக்கம் இருந்து பார்க்கும்போது பாவமாக தெரிந்தாலும், அந்த பெண்ணின் நிலையில் இருந்து சிந்திக்கும்போது அவள் செய்தது சரி என்றே தோன்றியது. எந்தவொரு பெண்ணும் இப்படியொரு ஆண்மகனை நேசிக்க மாட்டாள் என்பது அவரின் கருத்து.
ஆனால் வளர்த்த பாசம் அவரை என்னவோ செய்ய, “நீயும்தான் உன்னைக் கொஞ்சம் மாத்திக்கோ ராசா. நல்ல இரத்தம் இருக்கும் வரை எதுவுமே பிரச்சனை இல்ல. கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றாலும், நம்மள யாரும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாங்க” என்று அவனுக்கு புரியும்படி புத்திமதி சொல்ல, அவன் உதடுகளில் கசப்பான புன்னகை தோன்றி மறைந்தது.
“இப்போகூட அவ செய்தது சரின்னு சொல்றீங்களே பாட்டி” என்றவன் ஆதங்கத்துடன் கேட்க, அவரின் முகத்தில் தெளிவு வந்தது.
“நான் உன்னை வளர்த்தேன் என்பதற்காக உன்பக்கம் பேசணும்னு கட்டாயம் இல்லப்பா. என் மனசுக்கு எது நியாயம்னு தோணுதோ அதை மட்டும்தான் நான் பேசுவேன்” என்று அவர் விளக்கம் கொடுக்க, அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது.
கொஞ்சநேரம் அப்படியே அவன் மடியில் படுத்திருந்தவன், கோவில் திருவிழாவில் தன்னை ஒரு பெண் கைநீட்டி அடித்த விஷயத்தைக் கூற, அவரோ வாய்பொத்தி சிரித்தார்.
சட்டென்று அவரின் மடியில் இருந்து எழுந்து அவரின் முகம் நோக்கியவன், “பாட்டி” என்று மிரட்டினான்.
அவனின் மிரட்டலுக்கும் பயப்படாமல், “ஏன்டா உன்னைக் கோவிலுக்கு சாமி கும்பிட போ சொன்னா, நீ பொண்ணுங்க முடியை ஆராய்ச்சி பண்ணி அடியும் வாங்கிட்டு வந்திருக்கிற… அந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்திதான். ஒரு அடியெல்லாம் உனக்கு எந்த மூலைக்கு! இன்னும் நாலு போட்டு இருக்கணும் ” என்று சொல்ல, அவன் பொய்யாக அவரை முறைத்தான்.
அவனது தலையைப் பரிவுடன் வருடியவர், “அந்த பொண்ணு மேல் தேவையில்லாமல் வன்மம் வைக்காதே! நான் சொல்றதைக் கேளு. உன் மனசுக்குப் பிடித்த பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணுடா. இந்த கெட்ட பழக்கத்தை இத்தோடு விட்டு ஒழி!” என்று சொல்ல அவன் வேண்டாவெறுப்பாக தலையாட்டி வைத்தான்.
அவர் மனசுக்குப் பிடித்தப்பெண் என்றதும், தேன்மொழியின் முகம் மின்னலென அவன் நெஞ்சில் தோன்றி மறைய,’இந்த ராங்கி முகம் எதுக்காக நினைவு வருது’ என்று யோசிக்க தொடங்க, பாட்டியின் குரல் அவன் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தது.
“சரி ராசா! ஆத்தா இனி இங்கனதான் இருப்பேன்” என்று சொன்னதைக்கேட்டு அவன் முகம் மலர, “மறுபடியும் பூ விற்க போக போறீங்களா?” என்றான் ஆர்வமாக.
“நம்ம சுருக்குப்பையில் நாலு காசு இருந்தாதான் பேரம்பேத்திக்கு ஏதாவது வாங்கித்தர முடியும். அதுதான் நான் வூட்டுக்கே போறேன்னு சொல்லிபோட்டு வந்துட்டேன். இந்த தமிழு பையனை நெதமும் பூ வாங்கிட்டு வர சொல்லிடு. நான் பக்கத்தில் இருக்கும் ஆளுங்ககிட்ட கொடுத்து கட்டி வாங்கிக்கிறேன்” என்று சொல்ல அவனும் சரியென்று தலையசைத்தான்.
அதன்பிறகு அவனின் வேலை விஷயத்தைப் பற்றி விசாரித்துவிட்டு, பாட்டி அவரின் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார். பாட்டிக்காக சரியென்று சொன்னபோதும், ‘அவ மட்டும் கைக்கு சிக்கட்டும் இருக்கு’ என்று நினைத்தபடி தன்னுடைய வேலையைக் கவனிக்கச் சென்றான்.