Uyir Vangum Rojave–EPI 1

rose-dc1ab489

“எப்படா இவ பேசுவா என்பதற்கும்

எப்படா இவ பேச்ச நிறுத்துவா என்பதற்கும்

இடைப்பட்ட காலம் தான் காதல்

(யாரோ ஒரு அனுபவஸ்தன் சொன்னது)

 

அத்தியாயம் 1

ரோசா இல்லம், ஈசிஆர் ரோட்

எப்பொழுதும் போல் காலை ஐந்து மணிக்கே முழிப்பு வந்து விட்டது ரோசாலியா தேவிக்கு. தன் அம்மாவை அக கண்முன் கொண்டு வந்து வணங்கியவள், போர்வையை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தாள். பாத்ரூம் சென்று பிரஸ்சாகி வந்தவள் தனது ஜோகிங் டீ சர்டையும், முட்டிக்கு கொஞ்சம் மேல் இருக்கும் யோகா பேண்டையும் மாட்டிக் கொண்டு கீழே இறங்கினாள்.

வீட்டில் வேலைக்காரர்களின் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. வீடு என்பதை விட மாளிகை என்பது தான் பொருந்தும். அதுவும் கடற்கரை ஏரியாவை வளைத்துப் போட்டு அவள் அப்பா கட்டியிருந்த வசந்த மாளிகை. வணக்கம் வைத்த வேலைக்காரர்களுக்கு தலை அசைப்பைக் கொடுத்தவள், வெளியே வந்து தனது ரிபோக் ஷுவை மாட்டினாள். வீட்டு தோட்டத்திலே கொஞ்சம் ஸ்ட்ரெச்சிங் செய்தவள், பின் ஜோக் செய்து கொண்டே கடற்கரையை நோக்கி ஓடினாள். அது அவர்கள் மட்டுமே பயன்படுத்த கூடிய ப்ரைவேட் பீச். மணலில் கால் புதைய ஓடிய தேவிக்கு வயது 23. சுண்டினால் ரத்தம் வரும் சருமம் என்பார்களே, இவளை சுண்டினால் ரத்த ஆறே ஓடும் அவ்வளவு வெள்ளை. இருக்காதா பின்னே, அவள் அம்மா ஒரு இத்தாலியன், அப்பா தமிழர். நிறம் அம்மாவை கொண்டிருந்தாலும், மூக்கும் முழியும் நமது தமிழ் பெண்களைப் போல் லட்சணமாக இருக்கும். மூக்கும் முழியும்னு சொல்லுறப்பே அவள் கண்ணாடி அணிபவள் என்பதை கண்டிப்பாக சொல்லி ஆகணும். தூர பார்வை மேடம்கு கொஞ்சம் அவுட் ஆப் போகஸ்தான். அவளது முடியும் டை போடாமலே சிவப்பு நிறத்தில் இருக்கும் அவள் அம்மாவைப்போல். அதை பாய் கட் செய்து வைத்திருந்தாள். தினந்தோரும் ஒடினாலும், வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் சாப்பிடுவதால் கொஞ்சம் கொலுக் மொலுக்கென தான் இருப்பாள். உயரமும் சராசரி தான். ஆள் அசத்தலாக இருந்தாலும் கேரேக்டர் படு டெரராக இருக்கும்.
தாயில்லாத ஒற்றைப் பெண், தான் பிடித்த முயலுக்கு அரை கால்தான் என சாதிக்கும் பிடிவாதக்காரி. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் இத்தாலியில் தான். பள்ளியில் வேற்று மொழி பாடமாக தந்தை மொழியை எடுத்து படித்திருந்ததால் ஓரளவு தமிழ் பேசவும், எழுத்துக் கூட்டி படிக்கவும் தெரியும். ஆனாலும் தமிழ் கொஞ்சி கொஞ்சி தான் நாக்கில் விளையாடும். அதனாலேயே ஆங்கிலத்தில் பேசுவதை தான் விரும்புவாள். தந்தை மண்ணுக்கு திரும்பி அவரது தொழிலை கையிலெடுத்து ஒரு வருடம் தான் ஆகிறது.

ஓடி முடித்து அப்படியே மணலில் அமர்ந்து கொண்டு சூரிய உதயத்தை ரசிக்க ஆரம்பித்தாள். தனக்கும் எப்பொழுது இப்படி வாழ்க்கை உதயமாகும் என எண்ணம் எழுந்தது அவளுக்கு. பின்பு கைகளில் உள்ள மணலை தட்டியபடி எழுந்தவள், நெஞ்சில் எழுந்த சுயபச்சாதாபத்தையும் சேர்த்தே மணல்போல் தட்டி விட்டு வீட்டிற்கு நடந்தாள்.

ஹாலில் அமர்ந்து நியுஸ் சென்னலை போட்டவள், கையில் ஆங்கில பத்திரிக்கையுடன் அமர்ந்தாள். சமையல் இன் சார்ஜ் முனிம்மா காபி கொண்டு வந்து காப்பி டேபிளில் வைத்து விட்டு அவள் குடிப்பதற்காக காத்து நின்றார். அவள் மெல்ல ரசித்து காப்பியை அருந்தி கப்பை மேஜைமேல் வைத்ததும், அதை மின்னலென எடுத்துக் கொண்டு உள்ளே சென்று மறைந்தார் அவர்.
திடீரென வந்த ஜிம்மி ச்சூ சென்ட் வாசத்தில், படித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையை முகத்தை மறைத்தவாறு பிடித்துக் கொண்டாள் தேவி. வந்தது அவள் அப்பா ராகவன் தான். அசப்பில் நடிகர் சரத்பாபு போல் இருப்பார் அவர். பார்ப்பவர்கள் எழுந்து நின்று மரியாதை தரும் தோற்றம், பணக்காரக் களை சொட்டும் முகம்.

“ஜோகிங் முடிச்சிட்டியா மா?”
“ஹ்ம்ம் “ என முனகியவள் , உன்னிடம் பேச விருப்பமில்லை என்பது போல் டிவி வோலுமை அதிகப்படுத்தினாள். எப்பொழுதும் நடப்பது தான். ராகவனும் விடாமல் முயற்சி செய்கிறார் மகளிடம் சகஜமாக பேச. ஆனால் பலன் தான் பூஜியமாக இருந்தது. அதற்குள் அவளது பி.ஏ கார்த்திக் வந்திருந்தான்.

கார்த்திக் 27 வயது நிரம்பிய யுவன். அந்த காலத்தில் அழகென்ற சொல்லுக்கு முருகான்னு பாடிய கவிஞர் இப்பொழுது இருந்திருந்தால் பியூட்டின்னு சொன்னாலே கார்த்திக்னு தங்கிலீஸ்ல பாடியிருப்பார். தோள்வரை புரளும் முடியை அள்ளி போனி டேயில் போட்டிருந்தான். சில சமயங்களில் அள்ளி முடித்து நதியா கொண்டையும் போட்டுக் கொள்வான். அவனைப் பார்க்கும் பெண்கள் கண்டிப்பாக நான்கு முறையாவது திரும்பி பார்த்து விட்டுதான் செல்வார்கள். அவனும் அவர்கள் மனம் நோகாமல் இருக்க அவனுடைய அக்மார்க் செக்சி சிரிப்பை கொடுத்து அனுப்பி வைப்பான். அவன் தாய் இறந்து சில வருடங்கள் ஆகி இருந்தது. தந்தை இருந்தார் ஆனால் அவன் வாழ்க்கையில் இல்லை. எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஹெப்பி கோ லக்கி என வாழ்பவன். அவன் சீரியசாக இருப்பது தேவியிடம் வேலை செய்யும் போது மட்டும் தான்.  அடக்கி வாசிப்பதும் தேவியிடம் மட்டும்தான்.

‘டிவி வோலுயும் இப்படி தெறிக்கிது. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா ரெண்டு பேரும். இந்த ஆளும் பேசறதை நிறுத்த மாட்டாரு. இவங்களும் ஒதுங்கறத நிறுத்தமாட்டாங்க. இவங்க ரெண்டு பேரு கிட்டயும் நான் படுற அவஸ்த்தை இருக்கே. அப்பப்பா’ மனதில் மட்டும் தான் நினைத்தான். முகம் அப்படியே நிர்மலமாக இருந்தது.

தேவியின் பக்கத்தில் சென்று நின்று கொண்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒற்றை புருவத்தை தூக்கி இறக்கினாள். தேவியின் கண்ணசைவிலே என்ன சொல்ல வருகிறாள் என்பதை கப்பென புரிந்து நடந்து கொள்வான் கார்த்திக். அதற்கு தான் அவனுக்கு ஆறு இலக்க சம்பளம் கொடுக்கிறாள் அவள். அவளது பி.ஏ , ட்ரைவர், கைட், அடியாள் எல்லாமே அவன் தான். டிவியை அணைத்தவன்,
“மேடம், இன்னிக்கு காலையில நிறைய மீட்டிங்ஸ் இருக்கு. ஆப்டர்நூன் ஒரு பிசினஸ் லன்ச். ஈவ்னிங் ஒரு பண்ட் ரேய்சிங் சேரிட்டி ப்ரோக்ரம்ல கலந்துக்கிறீங்க. அவ்வளவு தான் ஷெடுல். இப்ப நீங்க ரெடியாகி சாப்பிட்டு வந்தீங்கனா சரியா இருக்கும்”
அவன் பேசியதுக்கு எந்த ரியாக்சனும் கொடுக்காமல் எழுந்து அறைக்கு சென்றுவிட்டாள் அவள்.

‘இவங்க கிட்ட பேசறதும், சுவத்த பார்த்து பேசுறதும் ஒன்னுதான். ரெண்டுமே திருப்பி பதில் பேசாது.’ வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டான்.

தேவி சென்றவுடன்,
“கார்த்திக், உங்க மேடம் கிட்ட சொல்லி, எனக்கும் கொஞ்சம் டைம் ஒதுக்க சொல்லுய்யா. நான் பேச வந்தாலே பேய பார்த்தது போல ஓடி போயிருறா.“
புன்னகையை மட்டும் அவருக்கு பதிலாக கொடுத்தவன்,
‘வாயைக் கழுவுங்க சார். உங்கள போய் பேய்ன்னு நினைப்பாங்களா அவங்க. என்ன இருந்தாலும் பெத்தவரு. அதுக்கும் ஒரு படி மேல போய் கொள்ளிவாய் பிசாசு, காட்டேரி இப்படி தான் நினைச்சுக்குவாங்க. இருங்க, இருங்க. காட்டேரினா பொம்பளை தானே? அப்போ ஆம்பிளைய எப்படி கூப்புடுவாங்க? காட்டேரியன்? எனக்கு தெரியலையே. இப்ப யாரை போய் கேப்பேன்? காலையிலே அப்பனும் மகளும் என்னை இப்படி ஒரு ஆராய்ச்சில இறக்கிட்டீங்களே!’ என நொந்துக் கொண்டான் கார்த்திக்.

அப்படியே எஸ்சாகி டைனிங் ஹாலுக்குள் நுழைந்தவன் சாப்பிட என்ன இருக்கிறது என ஆராய்ந்தான். காலை உணவும் இரவு உணவும் அவனுக்கு தேவியின் வீட்டில்தான். இதுதான் வேலை நேரம் என அவனுக்கு கிடையாது. காலையில் வந்தால், சில சமயம் அவன் வீடு சேர இரவு பத்து கூட ஆகிவிடும்.

மேசையில் இருந்த பதார்த்தங்களைப் பார்த்தவன்,

“டார்லி முனிம்ஸ், இன்னிக்கு செம்ம ஜாலி மூட்ல இருக்க போல. இட்லி, பொங்கல், வடை, கேசரின்னு அசத்திபுட்ட போ. சமைச்ச கைக்கு ஒரு கிஸ்ச குடுத்துருவா?” என முனிம்மாவை வம்பிழுத்தான்.

“போப்பா கார்த்திக். உனக்கு எப்பவும் வெளையாட்டுதேன்” என அழகாக வெட்கப்பட்டார் ஐம்பது வயதான முனிம்மா.

வெள்ளை நிற பார்மல் ஷெர்ட் மற்றும் கருப்பு நிற பென்சில் ச்கிர்டுடன் இறங்கி வந்தாள் தேவி. ராகவன் அவள் உணவு அருந்தி விட்டு போனவுடன் தான் சாப்பிட அமர்வார். இல்லாவிட்டால் அவள் சாப்பிடாமலே சென்று விடுவாள்.

நேராக உணவு மேசைக்கு சென்றவளுக்கு தட்டு எடுத்து வைத்து இரண்டு இட்டிலிகளை வைத்தார் முனிம்மா. கரண்டியில் இட்டிலியை வெட்டி, தேங்காய் சட்னியைத் தொட்டுக் கொண்டு வாயில் வைத்தாள் தேவி. வாயிற்கு போனதை அப்படியே தட்டில் துப்பியவள், தட்டை தூக்கி விசிறி அடித்தாள். பறந்த பீங்கான் தட்டு சுவற்றில் மோதி சுக்கு நூறாக கீழே விழுந்தது.

தேவிக்கு அறவே காரம் ஒத்துக்கொள்ளாது. இத்தாலியின் போர்டிங் பள்ளியிலேயே வளர்ந்ததால் உணவு பழக்கமும் அந்த நாட்டையே ஒத்து இருக்கும். இட்டிலி, தோசை என சாப்பிட இப்பொழுதுதான் பழகி இருந்தாள். சாம்பார், உறைப்பில்லாத தேங்காய் சட்னி இப்படியே இருக்கும் அவளது உணவு முறை.

கண்கள், உதடெல்லாம் சிவந்திருக்க முனிம்மாவை முறைத்தாள் ஒரு முறை. சப்த நாடியும் நடுங்கியது அவருக்கு. கார்த்திக்கை பார்த்து என்னை காப்பாத்து என கண்களால் கெஞ்சினார் அவர்.

“என்ன முனிம்மாக்கா, மேடம்கு காரம் ஆகாதுன்னு தெரியுமில்ல. அப்புறம் எதுக்கு மிளகாய் போட்டீங்க. போங்க உள்ள போய் சீனி எடுத்துட்டு வாங்க. “ என அவரை விரட்டினான்.

‘புதுசா வந்த பொண்ணுகிட்ட சட்னியை அரைக்க சொல்லிட்டு காய்கறி வாங்க போய்ட்டேன். அவ வந்த அன்னிக்கே எனக்கு ஆப்பு வைப்பான்னு எனக்கு ஜோசியமா தெரியும்’ என மனதிற்குள்ளே அழுது கொண்டே உள்ளே விரைந்தார் அவர்.

அதற்குள் மூன்று கிளாஸ் தண்ணீர் குடித்திருந்தாள் தேவி. சீனி கொண்டு வந்து கார்த்திக்கிடம் கொடுத்தார் முனிம்மா.

“மேடம், சீனிய வாயில போட்டுக்குங்க. கொஞ்சம் எரிச்சல் அடங்கும்” என சொல்லி வாய் மூடுவதற்குள் சீனி டப்பா அவன் முகத்துக்கு நேராக பறந்து வந்தது. சட்டேன குனிந்து தாக்குதலை சமாளித்தான் அவன்.

‘கிரேட் எஸ்கேப்பு’ என தன்னையே பாராட்டிக் கொண்டவன், இன்னும் ஏதாவது பறக்கிறதா என உஷாராக நின்றிருந்தான்.

நாற்காலியில் இருந்து எழுந்து விடுவிடுவென ப்ரீப்கேசை தூக்கிக் கொண்டு வெளியே நடந்துவிட்டாள் தேவி.

‘இன்னிக்கு என் காலை சாப்பாட்டுல மண்ணை அள்ளிப் போட்டுருச்சே இந்த முனிம்ஸ்’ திரும்பி அவரை முறைத்தவன்,

“நீ முனிம்மா இல்ல, இன்னிக்கு என்னை பிடிச்ச சனிம்மா” என முனகிக் கொண்டே நடந்தான். பின்னாலே வந்த முனிம்மா அவன் கையில் எதையோ திணித்தார். திறந்து பார்த்தவன் பல்லெல்லாம் தெரிய புன்னகைத்தான். பேப்பர் நேப்கினில் நாலு வடையை மடித்து கொடுத்திருந்தார்.

“முனிம்மா, யூ ஆர் மை ஹனிம்மா” என பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு ஓடி சென்று காரை ஸ்டார்ட் செய்தான் அவன்.

அரை மணி நேர பயணத்துக்குப் பிறகு ரோசா கான்ஸ்ட்ரக்சன்ஸ் கட்டிடத்தின் முன் காரை நிறுத்தினான் கார்த்திக்.

“மேடம், உள்ள போங்க. நான் பார்க் பண்ணிட்டு வரேன்” என தேவியை வாசலிலே இறக்கி விட்டான். அவள் இறங்கவும் செக்குரிட்டி வந்து ப்ரீப்கேசை வாங்கவும் சரியாக இருந்தது. அந்த ஐந்து மாடி கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் தான் அவர்கள் ஆபீஸ் இருந்தது. கீழே நான்கு தளங்களையும் ஷாப்பிங் காம்ப்லேக்ஸாக மாற்றி இருந்தார்கள். ‘ரோசா கார்னர்’ ஷாப்பிங் காம்ப்லேக்ஸ் சென்னையில் மிகவும் பிரசித்தம். இவள் வந்த இந்த ஒரு வருடத்தில் தான் இந்த மாற்றத்தை செய்திருந்தாள். அதற்கு முன் ராகவன் சில்லைறை வியாபாரிகளுக்கு வாடகையாக அந்த இடத்தை விட்டிருந்தார். லிப்ட் வழியாக செக்குரிட்டியுடன் ஆபிஸ் தளத்தை அடைந்தவள், அவரை போக சொல்லி தலை அசைத்து விட்டு தன் கேபினுக்குள் நுழைந்தாள். உள்ளே நுழையும் போதே, ஆவி பறக்க ஓட்ஸ் மில்க் ஒரு கப்பில் காத்திருந்தது. கார்த்திக் தான் போன் செய்து டீ லேடியிடம் சொல்லி அதை ஏற்பாடு செய்திருந்தான். அவள் பட்டினியில் கிடந்தால், அவனை அல்லவா ஒரு பாடு படுத்திவிடுவாள். சீட்டில் உட்கார்ந்து கப்பை கையில் எடுத்தாள் தேவி. லேப்டாப்பை ஆன் செய்தபடியே பாலை உறிஞ்சி குடிக்கலானாள்.

அவள் குடித்து முடிக்க டைம் கொடுத்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் காபினுக்குள் கதவை தட்டி விட்டு நுழைந்தான் கார்த்திக். அவனும் பேன்ட்ரி சென்று டீ லேடியிடம் டீ வாங்கி, வடையையும் மொக்கி விட்டு தான் வந்திருந்தான்.

“மேடம், இன்னும் பத்து நிமிஷத்துல மீட்டிங் ஆரம்பிச்சுரும். நாம புதுசா ஆரம்பிக்கிற கவர்மென்ட் லைப்ரரி பில்டிங் ப்ரோஜக்ட் பத்திதான் இந்த மீட்டிங்.  நம்ப இஞ்சினியர்ஸ் எல்லாம் மீட்டிங் ரூம்ல அசெம்பள் ஆகிட்டாங்க. நீங்க பேச போற நோட்ஸ் எல்லாம் நேத்தே இமேயில் அனுப்பிட்டேன். ஒரு தடவை படிச்சு பார்த்துருங்க. சிரிச்ச முகமா ஒரு வணக்கத்தை வச்சிட்டு, நீங்க எல்லாரும் இத்தனை வருஷமா எங்கப்பாக்கு உங்க கடுமையான உழைப்பை குடுத்த மாதிரி எனக்கும் குடுப்பீங்கன்னு எதிர்பார்க்கிறேன். ஆனா அவர் காலம் மாதிரி இல்லாம, என் தலைமையில உண்மையா உழைக்கிறவங்களுக்கு கண்டிப்பா உயர்வு இருக்கும். அப்படின்னு பேசுங்க.இந்த தீபாவளிக்கு உங்க எல்லாருக்கும் ரெண்டு மாச போனஸ் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். பண்டிகைய சந்தோஷமா கொண்டாடுங்க, அப்படின்னு பேச்சை முடிச்சுருங்க. அப்புறமா பாருங்க, உங்கள தெய்வமா பார்க்க ஆரம்பிச்சுருவாங்க”

“யாரு அப்பன் காச யாருக்கு அள்ளி விட சொல்லுற?” கூர்மையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“நல்லா கணக்கு பண்ணிதான் இந்த ஸ்கிம் பிளான் செஞ்சேன் மேடம். இதை பத்தி விலாவாரியா உங்களுக்கு இமேயில் அனுப்பினேனே. நீங்களும் அப்ரூவ்ட்னு ரிப்ளை பண்ணீங்களே” என கேட்டான் கார்த்திக்.

கீழே ஸ்க்ரோல் செய்து அவன் சொன்ன இமேயிலை கண்டுபிடித்தாள் தேவி. கார்த்திக் சொன்னது போல் அவள்தான் சம்மதத்தைக் கொடுத்திருந்தாள். இமேயில் வந்த தேதியைக் கவனித்தாள். செப்டம்பர் 12, அவளது அம்மா இறந்த தினம். கண்ணை மூடி, மனதை ஒரு நிலைப்படுத்தியவள் மேலே பேசுமாறு சைகை செய்தாள்.

“இப்போ இவங்களுக்கு கொடுக்க போற பணத்தை நாம சீக்கிரமா ரிக்காவர் செஞ்சிறலாம் மேடம். இவங்க உழைப்பை நம்பிதான் நாம ஆறு மாசத்துக்குள்ள முடிச்சு குடுக்கறோம்னு இந்த டென்டர கைப்பற்றி இருக்கோம். போனஸ்ங்கிற சின்ன மீனைப் போட்டு தான், ராப்பகலா அவங்க குடுக்கப் போற உழைப்புங்கற பெரிய மீன பிடிக்க போறோம். நமக்கு இந்த ப்ரோஜேக்ட் மூலம் வர போற தொகைக்கு முன்னுக்கு இந்த போனஸ் எல்லாம் ஜுஜுபி தான் மேடம்”

‘ஸ்மார்ட் மூவ்’ என மனதில் அவனை மெச்சிக் கொண்டாலும் வெளியே எப்பொழுதும் போல் இருக்கமாகவே முகத்தை வைத்துக் கொண்டாள்.

பேச வேண்டியதை மறுபடியும் ஒரு முறைப் பார்த்தவள்,

“போகலாம்” என எழுந்தாள்.

‘இவ்வளவு கஸ்டப்பட்டு மூளைய பிழிஞ்சு மாஸ்சான திட்டம் போட்டு குடுத்துருக்கேன். ஒரு தேங்க்ஸ் சொல்ல வேணாம், ஒரு புன்னகையாச்சும் குடுக்கலாம்ல. இந்த அழகு முகத்துல ஒரு கீற்று புன்னகைய வரவைக்க நான் படுற பாடு இருக்கே. யம்மா, யம்மா,யம்மா, யப்பா, யப்பா, யப்பா !’ புலம்பியவாறே அவளை பின் தொடர்ந்தான் கார்த்திக்.

மீட்டிங்கில் அவள் பேச ஆரம்பித்து சரியாக பத்து நிமிடத்தில் கதவு தட்டப்படும் ஓசைக்கேட்டது. அவள் பேச்சில் இடையூரு ஏற்பட்ட ஆத்திரத்தில், கதவைத் திறந்த ஆள் மீது ஸ்டெப்ளரை விட்டு அடித்தாள் தேவி.

 

உயிரை வாங்குவாள்….