பூவுக்குள் பூகம்பம் 13

பூவுக்குள் பூகம்பம் 13

பூவுக்குள் பூகம்பம் – 13

 

சிபிக்கு அதன்பின் வந்த ஓய்வான நேரங்கள் அனைத்திலும் ரஞ்சன் கூறிச் சென்ற வார்த்தைகள் மட்டுமே மனதை அரித்தது.

கவி சௌமியா தற்போது எங்கிருக்கிறாள்? தான் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலேயே அவளைப் பெண் கேட்டு தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் சொன்னதை எண்ணி சிரிப்பும் வந்தது.

‘எந்த நம்பிக்கையில அவளைப் பெண் கேக்கச் சொன்னேன்.  ஒரு வேளை வேற யாருக்கும் இன்னேரம் பேசி முடிச்சிருந்தா… என்ன செய்திருப்பேன்?’ இப்படியான சிந்தனை.

‘போன தடவை பத்திரிக்கை குடுத்த மாதிரி, அடுத்த பத்திரிக்கை எதுவும் அவங்க வீட்ல இருந்து வந்த மாதிரித் தெரியலையே!’ இப்படிச் சமாதானச் சிந்தனைகள் அவனுக்குள்.

‘ஃபர்ஸ்ட் டைம் பிரச்சனையாயிட்டதால அடுத்த முறை சிம்பிளா செய்திருந்தாலும் பத்திரிக்கை வைக்கறதுக்கு வாய்ப்பில்லை’ எனும் அவனது எண்ணவோட்டத்தில் எங்கோ வலித்த உணர்வு.

அப்படி எதுவும் இல்லாததால்தானே குறிப்பிட்ட தினத்தில் வந்து பெண் பார்க்க வருமாறு கூறியிருக்கிறார்கள் என தன்னையே தேற்றிக்  கொண்டான் சிபி.

அடுத்ததாக, ஒரு வேளை கவி சௌமியா ஊரிலேயே இருந்திருந்தால்… இத்தனை நாள்கள் கழித்து நம்மை வரச் சொல்லியிருக்க மாட்டார்களோ என்கிற கேள்வியும் அவனுள் எழுந்தது.

‘அப்போ அவ இங்கதான் அந்த ரஞ்சன் சொன்ன மாதிரி இருக்காளா?  அப்டினா இங்க எங்க தங்கியிருந்து படிக்கிறா?’ இப்படிச் சிந்தனை நீண்டது.

ரஞ்சனை மீண்டும் சந்திக்க சிபியின் மனம் ஆவல் கொண்டது.  குணமாகிவிட்டால் வரமாட்டானே என்கிற ஏமாற்றம் வேறு.  மருத்துவ மனம் அதட்டியது. ‘க்யூராகி ஹெல்த்தியா இருக்கட்டும்’ என்று.

அந்த ரஞ்சன் மீண்டும் வந்தாலும்… என்னவென்று கேட்கலாம்? எனும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான் சிபி.  அவன் படிக்கும் கல்லூரியைப் பற்றி முன்பு கேட்டதுபோல இனி கேட்க முடியாது.  அப்படியென்றால் வேறு என்ன பேசி அவனிடம் தனது ஃபியான்சியைப் பற்றித் தெரிந்துகொள்வது?

அவன் குறிப்பிட்டது ஒரு வேளை உண்மையிலேயே அவளைத்தானா?  அல்லது வேறு எதாவது காரணத்திற்காக தன்னை திசைமாற்ற எண்ணிப் பேசிச் சென்றிருக்கிறானா? அப்படி என்றாலும் அதனால் இவனுக்கு என்ன லாபம்? இப்படியெல்லாம் எண்ணம் போனது சிபிக்கு.

தான் மட்டுமே அவளை எண்ணிக் கொண்டிருப்பதாக நினைத்திருக்க, அவள் எப்படி தன்னை… மற்றவர்களிடம் ஃபியான்சி என்று கூறியிருக்க முடியும்?

என்னை அவள் எங்கு சந்தித்திருக்க முடியும்? அவள் இராமேஸ்வரத்தில் இருப்பதாக தான் நினைத்திருக்க இது எப்படி சாத்தியமாகி இருக்க முடியும்?

அப்படியே கவி சௌமியா தனது மேல்படிப்பிற்காக சென்னை வந்திருந்தாலும், தன்னை இதுவரை வந்து ஒரு முறைகூட நேரில் சந்தித்திராத நிலையில்… அவளுக்கு தன்னைத் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.

பார்க்காமலேயே எப்படி அவள் தன்னை பிறரிடம் ஃபியான்சி என்று அறிமுகம் செய்திருக்கவோ, கூறியிருக்கவோ வாய்ப்பிருக்கும்?

தன்னை ஏதோ காரணத்திற்காக திசை திருப்புவதற்காகவே ரஞ்சனால் இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கக்கூடும் என்கிற முடிவுக்கு இறுதியாக வந்திருந்தான் சிபி.

அப்படி வந்த பிறகுதான் சிபியின் மனம் வேறு சிந்தனைக்கே சென்றது.

***

     செழியனுக்கு நம்பிக்கையில்லாத நிலையில்தான் துணிந்து பெண் கேட்டு வரக் கூறியிருந்தார்.

மனைவி வசுமதியிடம் செழியன் தனக்கு வந்த அழைப்பைப் பற்றிய விசயத்தைச் சொன்னதும், “வந்து பாக்கட்டுங்க.  நம்ம சௌமிய அவங்களுக்குப் பிடிச்சிருந்தா… பழைய விசயத்தைச் சொல்லி…

உங்களுக்கு விசயம் தெரிஞ்ச பின்னயும் எங்க பொண்ணைப் பிடிச்சிருந்தா… எங்களுக்கும் சரினு சொல்லிருவோம்” திடமாக உரைத்தார் மதி.

மனைவியின் இந்த அவதாரத்தை எதிர்பார்த்தாலும், உடனே அதனை ஆமோதிக்க முடியாமல் மனம் முரண்ட தயங்கினார் செழியன்.

     தயங்கிய செழியன், “அப்ப… தீர்த்தா…” என்றிட,

     “இந்த விசயமெல்லாம் நடக்குமுன்னயே அவ தீர்த்தாவை வேணானுதான் எங்கிட்ட சொல்லுவா… இப்ப அவ அமைதியா இருக்கறதுக்குக் காரணம்… அவ பண்ண தப்பு… அதுக்காக அவ சகிச்சிக்க தயாரா இருக்கா.

     ஆனா… அதுக்கும் கொஞ்ச நாள் போகட்டும்னு நாளைத் தள்ளிப் போடத்தான் இப்ப படிக்கிறேன்னு போயிருக்காளே தவிர… உண்மையிலேயே சௌமிக்கு தீர்த்தாவ கல்யாணம் பண்ணிக்கறதுல… ரொம்ப வருத்தம்தான்” கணவனிடம் உரைக்க,

     “இதை நீயா சொல்றியா?” செழியன் மனைவியை ஊடுருவிய பார்வையை வீசியபடி கேட்டார்.

     “நானா எதுக்குச் சொல்லணும்.  உங்க மகளை வரச்சொல்லியே கேளுங்க… ஆனா… அவளை பயமுறுத்தாம… உன்னோட எந்த விருப்பத்தையும் இந்த அப்பா மறுக்கமாட்டேன்னு அவளுக்கு நம்பிக்கையத் தந்திட்டுக் கேளுங்க… எல்லாத்தையும் உங்ககிட்டச் சொல்லுவா” என்றார் வசுமதி.

     “அப்ப இந்த மாப்பிள்ளை வீட்ட வந்து பாக்கச் சொல்லிருவோமா?” மனமில்லாமலேயே கேட்டார் செழியன்.

     “வந்து பாக்கட்டும்.  என்ன ஏதுன்னு பேசிட்டு… ஒத்து வந்தா… மேற்கொண்டு பேசுவோம்” மதி திடமாக உரைத்தார்.

     மனைவியிடம் தனது எண்ணத்தை செழியன் உரைத்திட, “அப்ப… இதுவரை வந்து கேட்டுட்டு விசயந் தெரிஞ்சதும் வேணானு போயிருவாங்கனுதான் இந்த வரனை வரச் சொன்னீங்களா?” கிடுக்குப்பிடியாக மதி வினவ,

     மனைவியிடமிருந்து இப்படியான நேரடிக் கேள்வியை எதிர்பார்த்திராத செழியன் சற்று தடுமாறி சமாளித்தார்.

     தேன்மொழி மற்றும் வானதி இருவருக்கும்  விசயத்தைக் கூறினாலே அவர்கள் நடக்கவிடாமல் செய்துவிடுவார்கள் என்பது தம்பதியருக்கு தெரிந்திருக்க, சகோதரிகளைப் பற்றித் தெரிந்தும் கணவன் விசயத்தை பகிர எண்ணுவதை அறிந்த மதி, “இதுவரை எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருந்தேன்.  இந்த ஒரு முறையாது என்னோட பேச்சைக் கேளுங்க” எனத் துவங்கி,

“மாப்பிள்ளை வீட்ல பொண்ணை வந்து பாக்கத்தான வரேன்னு சொல்லிருக்காங்க. வந்து பாத்துட்டு அடுத்து மேற்கொண்டு பேசினா உங்க அக்காமாறுகட்ட சொல்லிக்கலாம்” கண்டிப்போடு கூறியிருந்தார் மதி.

அன்று இரவு வானதியிடம் பேசிய செழியன், மனைவியின் பேச்சை மதித்து, “சௌமியையும், கனியையும் அடுத்த வாரம் ட்ரெயின்ல அனுப்பி வைக்கா” என்று மட்டும் பேசியிருந்தார்.

     செழியனுக்கு இதுவரை பெண் கேட்டு வருவதாகச் சொன்ன எவரும், அவளின் தற்கொலை முயற்சிக்குப்பின் வீடுவரை வந்திராத தைரியத்தில்தான் மனைவியிடம் கூற சம்மதம் தெரிவித்திருந்தார்.

     ‘வர்றவன் விசயம் தெரிஞ்சதும் வேணானுதான் போகப் போறான்.  அப்புறம் பாத்துக்கலாம’ இப்படித்தான் செழியனது மனமிருந்தது.

     “இப்ப எதுக்குடா?  சின்னவளுக்கு எக்சாம்னு சொல்லிக்கிட்டு இருந்தாளே?” வானதி கிடுக்குப்பிடியாய் கேள்விகளை தம்பியின் முன்வைக்க,

     “இங்க கோவில்ல ஒரு நேத்திக் கடனாம்.  அதான் சௌமிய மட்டும் தனியா அனுப்பிவைக்க முடியாதுல்ல.  துணைக்கு பெருசும் வந்துட்டுப் போகட்டும்னு சொன்னேன்கா” அப்போது வாய்க்கு வந்ததைக் கூறி சமாளித்திருந்தார் செழியன்.

     செழியன் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போய் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைதான் மாப்பிள்ளை வீட்டாரை வந்து பார்க்கக் கூறியிருந்தார்.

     அதனால் அடுத்த வாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை சேது எக்ஸ்பிரஸ்ஸில் தக்கலில் இரண்டு டிக்கெட்டுகளை எடுத்து மகள்களை அனுப்பிவைக்குமாறு தமக்கையிடம் கேட்டுக்கொண்டார்.

     வானதி, ‘இவனுக்கு எப்பவுமே அவனோடயே பொட்டைப் புள்ளைகளை கூட வச்சிப் பாக்கணும்னு நினைக்கிறதுக்கு, வேற வீட்டுல கட்டிக் குடுத்தா கஷ்டந்தான். 

நம்மளா இருக்கக்கண்டு எல்லாத்துக்கும் சரி… சரினு போறோம்.  அந்நியச் சம்பந்தமா இருந்துச்சு… இன்னேரம் சந்தி சிரிச்சிருக்கும்’ தனக்குத்தானே ஆனால் உரத்த குரலில் பேசியபடியே வலம் வந்தார் வானதி.

     செழியனின் மகள்கள் இருவரும் வீட்டில் இருந்தாலும், தனது பேச்சை தம்பியிடம் கூறிவிடுவார்களே என்கிற தயக்கம் எதுவும் எப்பொழுதுமே வானதிக்கு இருந்ததில்லை.

     ‘சொன்னா… சொல்லட்டுமே… நான் என்ன இல்லாத… பொல்லாததையா… சொல்லிட்டேன்.’ எனக் கேட்டு சமாளித்துவிடும் திறன் அவ்வாறெல்லாம் வானதியைப் பேசத் தூண்டியது.

     கனிக்கோ, சௌமியாவிற்கோ விசயம் எதுவும் தெரியாமல் பெரியவர்கள் வரச் சொன்னதற்கிணங்க இராமேஸ்வரம் கிளம்ப ஆயத்தமானார்கள்.

     சௌமியாவிடம் பேசிய மதி, “வந்துட்டு புதன்கிழமை காலேஜ் போகிற மாதிரி பிளான் பண்ணி வாம்மா”

     “ஏம்மா… ஏன் அத்தனை நாளு?” சலிப்பாக கேட்டாள் செளமி.

     “வந்ததும் உடனே கிளம்பிப் போறதுக்கா வரச் சொன்னோம்.  இங்க ஒரு வேலையிருக்கு.  அது முடிய ஞாயித்துக்கிழமை எவ்வளவு நேரமெடுக்கும்னு சொல்ல முடியாது.  அதனால திங்கக்கிழமை கிளம்பிப் போயி செவ்வாய் கிழமையோ, இல்லைன்னா புதன்கிழமையோ காலேஜ் போயிக்கோ”

     “என்ன வேலைம்மா?” கொஞ்சலாகவே தாயிடம் கேட்டாள் சௌமி.

     “அது… இங்க வந்தப்புறம் என்னானு நீயே தெரிஞ்சிப்ப…” மதியும் விசயத்தைக் கூறாமலேயே பேசினார்.

     மதி அவ்வாறு பேசுவதற்கும் நிறைய காரணங்கள் இருந்தது.  இதுபோல பேசிவிட்டு வராமல், அழைப்பை ஏற்காமல் இருந்த வரன்கள் எல்லாம் இருக்கிறார்கள்.  அதனால் விசயத்தைச் சொல்லி, சௌமியும் வேண்டாமென்று முரண்டு செய்வாள். பேசும்போது விசயம் நாத்தனாருக்கு தெரிய வந்தால் தன்னிடம் கூறாமல் செய்துவிட்டீர்கள் என்று அதற்கும் பிரச்சனை செய்வார் வானதி என்பதால் மகளிடம் கூறாமல் மறைத்தார்.

மேலும் மதியின் எண்ணப்படி நடக்காமல் எதிர்மறையாக விசயம் கைகூடாமல் போனால்… மகள் மனதிற்குள் குமைந்து போவாள் என்றுதான் மகளிடம் கூறாமல் மறைத்தார்.

     பிறகு, ‘அவ இருக்கற இம்சைல இதையெல்லாம் யோசிக்கவே பயப்படுவா’ என சௌமியைப் புரிந்து கொண்டிருந்த தாய் மனம் கூறியது.

     “எனக்கு அதுக்கடுத்த வாரத்தில இருந்து யுனிவர்சிட்டி எக்சாம்ஸ் ஸ்டார்ட் ஆகுது.  நீங்க வேற இந்த நேரத்தில வரச் சொல்றீங்க. 

அத்தை என்னனா… ஏதோ நேத்திக்கடனாம்.  அதனால போயிட்டு வான்னு சொன்னாங்க” என்றபோதுதான் வானதியிடம் தனது கணவன் இப்படிச் சொல்லி சமாளித்த விசயம் மதிக்குத் தெரிய வந்தது.

அதை ஒட்டியே பேசி சமாளித்து மகளிடம் விடைபெற்றார் மதி.

***

     குறிப்பிட்ட தினத்தில் சிபி அவனையறியாமலேயே அந்த ரஞ்சனை எதிர்பார்த்தான்.  என்னதான் அதைப்பற்றி இனி சிந்திக்கக்கூடாது என்று நினைத்தாலும் சிபியால் அது முடியவில்லை.

     நாள் நெருங்க நெருங்க பெண் வீட்டார் மறுப்பேதும் கூறாமல் தனக்கு அவர்களின் பெண்ணைக் கொடுக்க முன்வர வேண்டுமே என்கிற பதற்றமும் அவனுக்குள் எழுந்திருந்தது.

     வீட்டில், பொண்ணு பேரு என்ன?  எந்த ஊரு? என்ற எந்தக் கேள்விக்கும் பதில் கூறாமல் சிரித்து மழுப்பினான்.

     “சரி எப்ப கிளம்பிப் போகணும்னு சொல்லு.  அப்பத்தானே முறைப்படி எல்லாம் ரெடி பண்ணிட்டுப் போக முடியும்.  வெறும் கையும், வீசுன கையுமாப் போயி அங்க நிக்க முடியுமா?” என மாலினி சற்று கடினமாகக் கேட்டபின்பு,

     “சண்டே மார்னிங் இங்க இருந்து நம்ம காருலயே கிளம்பிரலாம்.  லெவன் ட்டூ ட்வல்வ் தேர்ட்டிக்குள்ள அங்க ரீச் ஆகிறலாம்” சமாதானமாகக் கூறினான் சிபி.

     “ட்ரைவர் கூப்பிட்டுப் போறமா?” மாலினி

     “நானே பண்றேன்மா” சிபி

     ஞானம் இடையிட்டு, “அம்மா சொல்ற மாதிரி ட்ரைவர் வச்சிப்போம் தம்பி.  அதுதான் உனக்கும் நல்லது.  இல்லைன்னா ரொம்ப டயர்டாத் தெரிவ…” என்றதும்,

“ஒரு நாளைக்கு நான் மேனேஜ் பண்ணிக்கறேனேப்பா” என்றான் சிபி.

     “உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன்.  பாத்துக்கோ” இதற்குமேல் இந்தக் காலத்து பிள்ளைகளிடம் எதுவும் பேச முடியாது என அத்தோடு விட்டுவிட்டார் ஞானம்.

     மாலினி பெண் பார்க்கும் படலத்திற்கு அவசியமான பொருள்கள் முன்பே வாங்கி தயாராக இருந்தார்.

***

கனி மற்றும் சௌமியா இருவரையும் ட்ரெயினில் ஏற்றிவிட்டதோடு வீட்டில் ஒரே புலம்பலாக வானதி இருந்தார்.

வானதியின் கணவர் மனைவியின் புலம்பல் தாளாமல், “நீ இந்தப் புலம்பு புலம்புறதுக்கு… அதுககூட நீயும் போயிருக்கலாம்” என்றிட,

“என்னை ஒரு வார்த்தை வான்னு சொல்லலை அவன்.  நான் மானம் ரோசம் கெட்டுப்போயா இருக்கேன். 

அப்டிப் போகணும்னு எனக்கொன்னும் இல்லை” இவ்வாறாக கணவன் மனைவிக்கு இடையே பேச்சுகள் நீண்டது.

வரட்டு கௌரவம், பிடிவாதம் என்றிருக்கும் வானதியை முப்பத்து ஐந்து ஆண்டுகால திருமண வாழ்க்கையில் புரியாமலா அவரின் கணவர் இருப்பார்.

வானதி பேசும்வரை பேசட்டும் என அங்கிருந்து அகன்றிருந்தார் அவரின் கணவர்.

சனிக்கிழமை காலையில் மகள்கள் இருவரையும் அழைத்துப்போக இராமேஸ்வரம் சந்திப்பிற்கு வந்திருந்தார் செழியன்.

வீட்டிற்கு மகள்கள் இருவரும் வந்திருப்பதால் அன்று சமையல் அமர்க்களப்பட்டது. அன்று சௌமியோடு தனித்திருக்கும் வாய்ப்பு அமைந்தபோது தீர்த்தாவைப் பற்றிய தனது சந்தேகத்தை மதி கேட்க, “ஒரே சந்தேகம்.  எப்பப் பாத்தாலும் அவங்கூட எங்க போன? எப்டி அவங்கூட பேசுன? அவன் உன்னை என்ன பண்ணான்?

எப்டியெல்லாம் இருந்தீங்கன்னு கேட்டு நச்சுப் பண்ணா அவங்களை எப்டிம்மா புடிக்கும். சின்ன வயசில இருந்தே அது அப்படித்தான்.  அப்டி இருந்தா அது மேல எப்டிம்மா அன்பு வரும். 

நான் பண்ண தப்புக்கு இதுதான் எனக்குத் தண்டனைன்னா… எனக்கு அப்டி ஒரு வாழ்க்கையே வேணாம்மா… அதை நான் சகிச்சிக்கத்தான வேணும்னு நீங்க சொன்னா… சாகறதே மேலுன்னு தோணுதும்மா” மறைக்காமல் அப்படியே தாயிடம் கூறிவிட்டாள் சௌமி.

தானாகவே சென்று அதைப்பற்றிப் பேசினால், ‘உனக்கு அவனை ஏற்கனவே ஆகாது.  அதுனால எதையாவது சொல்லி அவனை அவாய்ட் பண்ணப் பாக்குற’ என்று தாய் தன்னைக் கூறிவிடுவாரோ என்கிற தயக்கம்தான் இத்தனை நாள் அவளை அமைதியாக இருக்கச் சொன்னது.

ஆனால் இன்று மதியாகவே வழிய வந்து கேட்டதும், சௌமி தாயிடம் உள்ளபடி உரைத்துவிட்டாள்.

“படிச்சு எதாவது நல்ல வேலைக்குப் போயிட்டாக்கூட எனக்குக் கல்யாணம் எதுவும் வேணாம்மா.

நான் இப்டியே கூட இருந்துப்பேன்.  ஆனா… தீர்த்தா மச்சானை நினைச்சா எனக்குப் பயந்தான் வருதும்மா… அதான் அன்னைக்கு காலேஜ்ல அந்த சீனியர் கேட்டப்போகூட இவங்க போட்டோவைக் காமிக்கணும்னு எனக்குத் தோணலை” என்று தாயிடம் தனது எண்ணத்தை எடுத்துரைத்தாள் சௌமி.

மதி, “அந்த ஹவுஸ் ஓனர் வீட்ல எல்லாம் நல்லாயிருக்காங்களா?”

“இருக்காங்கன்னுதான் நினைக்கிறேன்” சௌமியின் விட்டேத்தியான பதிலில், “என்னம்மா இப்படிச் சொல்ற…”

“உண்மையத்தான் சொன்னேன்மா.  மகி காலேஜ்ல வந்து எதாவது கேட்டா… பதில் சொல்லுவேன். அவங்க வீட்டுல இருக்கற சின்ன பையன் ஒருத்தனை அத்தை வீட்டுப் பக்கமே வர விடாம விரட்டிருவாங்க. அதனால அந்தப் பையன் அவங்க வீட்டு வாசல்ல நின்னுட்டே குட்டிப் பையனைப் பாப்பான். ஆனா கிட்ட வரவே மாட்டான்.

மகி வீட்டுக்கு அவன் வரது அத்தைக்குப் பிடிக்கலை.  அதனால… நான் வெளிய போனாலும் அவங்க வீட்டுப் பக்கமா திரும்பிக்கூட பாக்கமாட்டேன்.

அந்த ஆண்ட்டி எதாவது வந்து பேசினா… பேசுவேன்.  அதுவும் ரொம்ப ரேராத்தான்” என்றாள் சௌமி.

மதி இந்தப் பேச்சை எடுத்ததே, மகள் அன்று அனுப்பிய போட்டோவில் இருந்தவனைப் பற்றிய அவளின் அபிப்ராயம் என்னவென்று தெரிந்தகொள்ளவே இந்தப் பேச்சை எடுத்திருந்தார்.

மதிக்கும் அந்த போட்டோவில் இருப்பது யாரென்று தெரிந்திருக்கவில்லை.

மகளின் பேச்சில் உண்மை தெரியவே, “நாளைக்கு ஒரு அலையன்ஸ் உன்னைப் பாக்க வராங்கன்னுதான் உன்னை வரச் சொன்னோம் சௌமி” விசயத்தைப் போட்டுடைக்க,

“அவங்களுக்கும் ப்ருத்வி விசயம் தெரிய வந்தா… ஒன்னு… இப்பவே வேணானு போயிருவாங்க. 

இல்லையா… கல்யாணம் பண்ணிக்கிட்டு தீர்த்தா மச்சான் மாதிரி சொல்லிக் காமிச்சா… ரொம்பக் கஷ்டம்மா… அதனால… எனக்கு இந்த மாதிரி விசயத்தைக் கேட்டாலே அலர்ஜி ஆகுது.

இதுக்குத்தான் என்னை வரச் சொன்னீங்கன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா… நான் வந்திருக்கவே மாட்டேன்” என்றுரைத்தாள் கண்களில் நீரோடு சௌமி.

“சரி… எங்க காலத்துக்குப் பின்ன தனியா நீ மட்டும் என்ன பண்ணுவ சௌமி.” மதி.

“அதுக்காக இந்த மாதிரிக் கொடுமைக்குள்ள எப்டிம்மா வாழ முடியும்.  நானே மறக்கணும்னு நினைக்கிறதை இவங்களே வந்து நியாபகப்படுத்தறாங்க. 

அப்படி நியாபகப்படுத்தினாலும் நான் சிவனேன்னு இருக்கத்தான் நினைக்கிறேன்.  ஆனா அதுக்கும் இவங்க விடாம… அவனைத்தானே நினைச்ச… எல்லாம் அவனோடதான்னு அவங்க பேசும்போது… சாகலாம்போல வருது.” கண்களில் நீரைத் தேக்கி அழுகையை அடக்கியபடி பேசிய மகளின் நிலை மதியைக் கரைத்தது.

மகளின் தலையை ஆதரவாக தடவிக்கொடுத்தபடியே, “அதுக்குத்தான் ஒரு நல்ல இடமா வந்தா… பேசி முடிச்சிருவோம்னு அம்மா உன்னை வரச் சொன்னேன்.

நான் வேண்டாத தெய்வம் கிடையாது. பாப்போம்… எல்லாம் நல்லதாவே நடக்கும்னு நம்புவோம்” மகளை சமாதானம் செய்தார் மதி.

தாய் கூறிய வார்த்தைகளை பெரிதாகக் கொள்ளாமல் இரவு படுத்ததும் உறங்கிவிட்டாள் சௌமி.  கனியிடமும் மேலோட்டமாக விசயத்தைக் கூறியிருந்தார் மதி.

வானதியிடம் சௌமி மாட்டிக்கொண்டு முழிப்பதை தீவிரமில்லாமல் இலேசாக தாயிடம் மட்டும் எடுத்துச் சொன்ன கனி, “தீர்த்தாவுக்குத்தான் சௌமின்னு சின்ன அத்தையைவிட, எங்க அத்தை ரொம்பத் தீவிரமா இருக்காங்க.  நீங்க இப்ப வேற எதாவது ஏற்பாடு பண்ணா… அத்தை எதாவது சொல்லுவாங்களேம்மா” என்று கலக்கத்தோடு கேட்டாள்.

“அவங்க கேக்குறாங்க… இவங்க கேக்குறாங்கங்கறதுக்காக… சௌமிய பாழுங் கிணத்துல போயித் தள்ளி விட முடியாதுல்ல கனி.”

“நீங்க சொல்றது சரிதாம்மா.  ஆனா இந்த விசயத்துல நீங்க எடுக்கற முடிவை வச்சி அத்தை என்னை எதாவது சொன்னா?” கனி உள்ளுக்குள் இருந்த உறுத்தலை மறைக்க முயன்றபடி தாயிடம் கேட்டாள்.

“அது உங்கப்பா பாத்துப்பாரு.  அதுக்காக சின்னவளை நான் காவு குடுக்க முடியாது” மதி உறுதியாகக் கூற,

“அப்ப என்னைக் காவு குடுக்கத் தயாரா இருக்கீங்க?” கனியின் கேள்வியில் மதி குழப்ப முகம் தரித்தார்.

அதை அன்று இரவு செழியனிடமும் பகிர்ந்துகொண்டிருந்தார் மதி.

***

     ஞானம், மாலினி, சிபி மூவருமாகக் கிளம்பி பதினொன்றரை மணியளவில் இராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

     இராமநாதபுரம் எல்லைக்குள் வண்டி நுழைந்ததுமே, மாலினி ஞானம் இருவரும் ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்.

     இராமநாதபுரத்தில் யாராக இருக்கும் என்பதை இருவருக்கும் யாரும் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில் இல்லை என்பதுபோல இருவரும் இருக்க, வண்டி இராமநாதபுரத்தைக் கடந்து இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க இருவருக்கும் மீண்டும் குழப்பம்.  ஒருவரையொருவர் புரியாமல் பார்த்திருந்தனர்.

     மாலினி, ஞானம் இருவரும் அந்த பூ பெண்ணைத்தான் மகன் கண்டுபிடித்துவிட்டான் என நினைத்துப் புன்முறுவல் பூத்திருந்தனர்.

     ஆனால் வண்டி ஈசிஆர் சாலையிலேயே அவுட்டரில் பயணித்தது.  இருவருக்கும் புரியவில்லை.  ஒருவேளை அருகே எங்கேனும் வீடுகட்டி குடியேறிவிட்டார்களோ என்று நினைத்தபடி அமைதியாகி இருந்தனர்.

     மாலினிக்கு வழுதூர் தாண்டி வண்டி செல்ல பொறுமையிழந்து போனார்.

     “இப்பவாவது சொல்லேன் சிபி.  பொண்ணு யாரு?  பொண்ணு பேரு என்ன?  பொண்ணோட அம்மா, அப்பா என்ன பண்றாங்க?  அவங்க நம்மளுக்குத் தெரிஞ்சவங்களா?” மாலினி வினவ,

     “தெரிஞ்சவங்கதான்.  அதாவது உங்களைத் தெரிஞ்சிருக்கும்” சிபியின் வார்த்தையில் இருவருக்கும் தெளிய முடியாத குழப்பம்.

     ஞானம், “இன்னம் கொஞ்ச நேரத்தில யாருனு தெரிஞ்சிரப் போகுது.  ரிலாக்ஸ் மாலி” மனைவியின் கையை ஆதரவாகப் பிடித்து அழுத்தினார்.

     சில்லிட்டிருந்த மனைவியின் கையைப் பிடித்தே, அவரின் மனநிலையைக் கணித்தார் ஞானம்.

     பதற்றமும், ஆர்வமுமாய்… பதற்றம் கூடி… ஆர்வம் குறைந்த நிலையில் மனைவி இருப்பதைப் புரிந்து கொண்டவர் உச்சிப்புளி அருகே வண்டி வந்ததும், “கொஞ்சம் வண்டிய ஓரங்கட்டு சிபி.  ரிலாக்ஸ் பண்ணிட்டுப் போகலாம்” என்றிட அதேபோல இறங்கி மனைவிக்கு வேண்டியதை ஆர்டர் செய்து வாங்கி தந்து அருந்தச் செய்தபின் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.

     ஞானத்தைப் பொறுத்தவரையில் அவருக்கு பணித் தொடர்பினாலான நண்பர்கள் யாரும் இராமேஸ்வரத்தில் தற்போது இல்லை.

அப்படி இருக்க வேறு தெரிந்த நபர்கள் என்று அவர் யோசிக்க யாரின் நினைவும் வரவில்லை.

     மாலினிக்கு ஏனோ வானதியின் வீட்டாரைத் தவிர இராமேஸ்வரத்தில் தங்களுக்குத் தெரிந்து யாரும் இருக்கிறார்களா என்கிற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

     பாம்பன் பாலத்தில் வண்டி செல்லும்போது அதனை ரசிக்கும் மனநிலை சிபியைத் தவிர மற்ற இருவருக்கும் இல்லை.

அதைத்தாண்டி, அக்காள்மடம் தங்கச்சிமடம் பேக்கரும்பு, இராமேஸ்வரம் என வண்டி முன்னேறிச் செல்லச் செல்ல மாலினியின் பீப்பி எகிறியது.

     சிபி தனது தந்தைக்கு கொடுத்திருந்த அதே எண்ணுக்கு அழைத்து வீட்டிற்குச் வரும் வழி கேட்டான்.  எதிர்முனையில் வழி சொல்லச் சொல்ல அந்தப் பகுதியில் மெதுவாக வண்டியைச் செலுத்தினான்.

     இருவரது சிந்தனையின் முடிவு அறியப்படுமுன், மாலினிக்கு சற்றுப் பரிச்சயமான பகுதியில் வண்டி மெதுவாகச் சென்றது.

மாலினி யூகிக்க விரும்பாத செழியனின் வீடு இருக்கும் பக்கமாக வண்டி செல்ல அவருக்குப் பதற்றம் கூடியது. ஆனால் அவரால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றைத் திணிக்க மகன் முயல்வதுபோலத் தோன்ற மூச்சையடைத்தது.

ஞானத்திற்கு அங்கு வந்த பரிச்சயம் எதுவும் இல்லாமையால், கூர்மையான பார்வையோடு மகன் சென்று நிறுத்திய வீட்டைப் பார்த்தார்.

அதற்குள் வாயிலுக்கு வந்து வரவேற்க நின்றவர்களைக் கண்ட இருபக்க வீட்டாருமே அதிர்ந்துபோய் நின்றிருந்தனர்.

***

error: Content is protected !!