பொன்மகள் வந்தாள்.2🌹
பொன்மகள் வந்தாள்.2🌹
பொன்மகள் வந்தாள்.2.
மூன்றாவது தளத்தில் பெரிதாக அவளுக்கு வேலை ஒன்றும் இருக்காது. இது ஃபர்னிச்சர் பிரிவு.
காலையிலேயே இங்கு கஸ்டமர்கள் வருவதும் குறைவு. தரைதளம் முழுதுமே டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர். முதல் தளம் முழுதும் எவர்சில்வர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள். இரண்டாம் தளம் ஸ்டேஷனரீஸ், காஸ்மெட்டிக்ஸ், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்களும், தற்சமயம் ஏற்பட்டுள்ள மண்பாண்ட மோகத்திற்கு ஏற்றாற்போல் சிலபல மண்பாண்டங்களும். மூன்றாம் தளம் ஃபர்னிச்சர்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும்.
வந்தவள் கையில் நோட்டும் பேனாவுமாகத் திரிந்தாளே ஒழிய, என்ன செய்யவேண்டுமென சிந்தனையற்று இருந்தாள். முகம் யோசனையின் பிடியில் ஆட்பட்டிருக்க…
இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்ததற்கே, முதல் நாள் சாதாரணமாகச் செல்ல… இரண்டாம் நாள் தன் முகம் ஊன்றி கவனிக்கப்படுவதை உணர்ந்தாள். அவளுக்கே தன் முகம் எதையும் காட்டிக் கொடுக்கிறதோ என சந்தேகம் வந்துவிட்டுது. அவர்களது முகமும் என்னமோ ஏதோவென சஞ்சலம் காட்ட இது சரிப்படாது என மூன்றாம் நாள் கிளம்பி வேலைக்கு வந்துவிட்டாள்.
காலம் போன கடைசியில், நான் அவர்களுக்கு வரமா… சாபமா? எனத் தெரியவில்லை என யோசனை மனதில் ஓட… இதிலென்ன சந்தேகம்… சாபம் தான் என்றது இவளது வாழ்வில் நடந்தவை அனைத்தும். எந்தளவிற்கு அவளது பிறப்பு கொண்டாடப்பட்டதோ அந்த அளவிற்கு, இப்பொழுது அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதை நினைக்கையில் உள்ளம் குமைந்தது.
எதற்கும் ஒரு காரணகாரியம் உள்ளதென்றால் என் வாழ்வில் நடந்தவைகளுக்கு யார் காரணம்? நடப்பதெல்லாம் நன்மைக்கே என சொன்னவர் யார்? விழைந்த நன்மைதான் என்ன?
துன்பம் வரும் வேளையில் சிரிக்கச் சொன்ன வள்ளுவர் தான், சொல்வது எளிது… சொன்னபடி வாழ்வது கஷ்டம்னும் சொல்லிட்டுப் போயிருக்காரு.
ஆனால் நமக்கு சந்தோஷம் வரும் வேளைகூட சிரிக்க மறுப்புத் தெரிவிக்கிறதே விதி. எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.
அரசாள ஆசை இருந்து என்ன பயன்… அதிர்ஷ்டம் என்னவோ கழுதை மேய்க்கும் அளவுக்கு தானே இருக்கிறது?
எத்தனை நாட்களுக்கு சிரிப்பு அரிதாரம் பூசுவது? எனக்கு மட்டும் ஏன்? என கேள்விகளின் பிடியில் சிக்கித் தவித்தவள்… தலையை உலுக்கித் தன்னை சமன் செய்தாள் பொம்மி.
இந்த தன்னிரக்கம் தனக்குக் கூடாது. இதுதான் என்னை அழிக்கும் ஆயுதம். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக வேண்டும். ஏன் சிறிது நாட்களாக வீட்டில் இருப்பவர்களுமே, “இப்படியே எத்தனை நாளைக்கு பொம்மு.” என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் தானே. காலம் வெளிக்காயத்தை வேண்டுமானால் ஆற்றியிருக்கலாம்.
எனக்காக என்று அவர்களும், அவர்களுக்காக என்று நானும் எத்தனை நாட்களுக்கு முகமூடியுடன் திரிவது. இப்பொழுதுதான் ஏதோ கொஞ்சம் பழைய மாதிரி மலர்ச்சி அவர்கள் முகத்தில். அதையும் கெடுப்பானேன்? இன்னும் என் வாழ்க்கை அவர்களுக்காக என்ன வைத்திருக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் அவர்களது வாழ்க்கையும்.
காலையில் இவள் கிளம்பும் வரைக்குமே அம்மா எழுந்திரிக்க வில்லை. அவருக்கு உடம்பு ஒத்துழைக்கவில்லை. தந்தையின் உதவியோடு இவள்தான் சமைத்து வைத்துவிட்டு வந்தாள். வயோதிகம் என்றாலும் எழுபது எல்லாம் ஒரு வயதா? மன உலைச்சல் தான் அவரை மேலும் மேலும் பலவீனமாக்குகிறது.
அவர்கள் மனநிம்மதியோடு வாழ தன்னாலானதைச் செய்ய வேண்டும் என எண்ணும் போதே, ‘மன நிம்மதியா? அது எங்க கிடைக்கும்?’ என்ற எண்ணமும் எழுந்தது. கூடவே அவர்களுக்குப் பின் தனக்கு யார் என்ற எண்ணமும், ஏக்கமும் எழாமல் இல்லை.
ஊரோடும் உற்றாரோடும் எவ்வளவு இனிமையான வாழ்க்கை. அதையெல்லாம் விட்டுவிட்டு, “என்னை யாருனே அடையாளம் தெரியாத இடத்துக்குப் கூட்டிட்டுப் போங்க. இங்க யாரையுமே பாக்கப் பிடிக்கல.” எனக் கூற, வழிவழியாக வாழ்ந்த பிறந்த மண்ணை விட்டுவிட்டு, எனக்காக வெளியேறி வந்தவர்கள். தன்னால் ஒருநிமிடமேனும் அவர்கள் முகம் கசங்கக் கூடாது. தன்னால் பெற்ற வயிறு பதறக்கூடாது என நினைத்துக் கொண்டாள். தன் வாழ்க்கையில் நடந்த பிரச்சினையால் பெற்ற வயிறே பற்றி எரிந்ததே.
“இந்த பீரோவைப் பாருங்கண்ணே. அக்கா கேட்ட மாதிரி கண்ணாடி, உள்ள ஹேங்கர் எல்லாம் இருக்கு பாருங்க.” வாடிக்கையாளர்களிடம் கருப்பட்டி பேசும் குரல் அவளது சிந்தனையைக் கலைக்க, சுயம் அடைந்தவள், அங்கு வந்தாள்.
வந்தவர்களும் ஒவ்வொரு மாடல் பீரோவாகத் திறந்து, மூடி என பல சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தனர். பீரோ பார்க்க வந்தவர்கள் கூடவே மற்ற ஃபர்னிச்சர்களையும் சோதித்துக் கொண்டிருந்நனர். எப்பொழுதும் நடப்பது தானே… வாங்க வந்த பொருளைவிடுத்து மற்ற அனைத்தையும் பார்வையிடுவது.
இறுதியாக முதலில் அவன் சுட்டிய பீரோவையே செலக்ட் செய்தவர்கள் விலை தள்ளுபடி பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்.
“நம்ம கடைல வெல எப்பவும் கட்டுபடியாத்தான் இருக்கும். பேரம் பேசவேண்டிய அவசியமே இருக்காது. வேணும்னா நாலுகடை விசாரிச்சுப் பாத்துக்கூட வாங்குங்க ண்ணா.”
“சக்தி கடையப் பத்தி தெரிஞ்சு தாம்ப்பா வந்திருக்கோம். இந்த பீரோவ டெலிவரிக்கு ஏற்பாடு பண்ணு. நான் வெலய சக்திகிட்டப் பேசிக்கறேன்.” வந்தவர்கள் கீழே சென்றனர். தெரிந்தவர்களிடம் வியாபாரம் செய்யும் பொழுது உள்ள சங்கட்டம் இது. ஆனால் அவர்களிடம் எப்படிப் பேசி விலையைக் குறைப்பதுபோல் காட்டி, டெலிவரி சார்ஜ் என ஏதாவது ஒன்றில் விலை ஏற்றி நாசுக்காக வியாபாரம் செய்வதில் சக்தி கில்லாடி. இல்லையெனில் இந்தளவிற்கு வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பது சிரமம்.
டெலிவரிக்கான ஆட்களை அழைத்து அதற்கான ஏற்பாட்டை செய்தான் கருப்பட்டி.
“அக்காவுக்கு யோசனை எல்லாம் பலமா இருக்கு போல?” மேலே வாடிக்கையாளர்களுடன் வந்தவுடன் பொம்மியைப் பார்த்தவன், அவன் வந்தது கூடத் தெரியாமல் யோசனையாக நின்றிருந்தவளைப் பார்த்தான்.
“என்ன கருப்பட்டி… இங்க வந்திருக்க. உனக்கு வேல கிரவுண்ட் ஃப்ளோர்தான?” அவன் கேள்விக்குப் பதில் கூறாமல் எதிர்கேள்வியோடு நிறுத்தினாள்.
“நான் தொழில் கத்துக்க வந்தவன்க்கா. எல்லா இடமும் தெரிஞ்சுக்கணும்.”
“ஓ… அப்ரன்டிஸ்ல.” எனக்கூறி சிரிக்க,
“இல்லக்கா… இன்டெர்ன்.”
“இப்ப… அப்படி மாத்திட்டாங்களா கருப்பட்டி?”
“ஆமா… நாமளும் அப்டேட் ஆகணும்ல க்கா.”
“அதெல்லாம் படிச்சவங்களுக்கு தான கருப்பட்டி.”
“என்னக்கா… நீங்களும் கருப்பட்டினே கூப்புடறீங்க?”
“சாரி… சாரி… சாக்லேட்னு கூப்பிட்டுருக்கணும்ல?” சிரிக்காமல் கேட்க,
“யக்கா… நீங்களுமா…?” என்று சினுங்கி காலை தரையில் உதைத்தான்.
“இந்த மாதிரி பட்டப்பேரு கெடைக்கறது எல்லாம் அபூர்வம் கார்த்தி.”
“எது… இந்த ராஜாதிராஜ… ராஜ குலோத்துங்க… ராஜகம்பீர… மாதிரியாக்கா இந்தக் கருப்பட்டிங்கறது? முதல்ல அந்தப்பேரு வச்ச டீச்சரைச் சொல்லணும்.” அவன் முகம் எரிச்சலைக் காமிக்க,
“நீ உங்க அப்பா கடையில இருந்த கருப்பட்டிய எடுத்துட்டுப் போயி… ஹோம் மேட் சாக்லேட்னு பிள்ளைகள ஏமாத்தி வித்தது தப்பில்ல. பேரு வச்ச டீச்சரக் கோவிக்கற.”
“இந்தக் கதை உங்களுக்கும் தெரிஞ்சுறுச்சா?”
“ஊருக்கே தெரியும்.”
“வெளிநாட்டுக்காரன் சிப்ஸ்ங்கற பேர்ல காத்தடைச்சு வித்தா, வாங்கித் திங்கறோம். நம்ம நாட்டுக் கருப்பட்டிய சாக்லேட்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க.”
“…..” அவன் கூறியதைக் கேட்டு சிரித்தவளிடம்,
“அப்பவே ஐயாவோட பிஸினஸ் மைன்ட்ட பாராட்டணும். அதைவிட்டுட்டு பட்டப்பேரு வச்சு விட்டுட்டாங்க. நான் ஒரு இளம் வியாபாரக் காந்தம் ஆகறது பொறுக்கல. பொறாமை புடிச்ச உலகமடா இது.”
“ஆமாமா… நீ பாட்டுக்கு பெரிய வியாபாரக் காந்தமாகி எல்லா கஸ்டமர்களையும் உன்பக்கம் இழுத்துட்டா என்ன பண்றதுன்னு, எல்லோரும் சேர்ந்து செஞ்ச உள்நாட்டு சதி கருப்பட்டி இது.”
“உங்களுக்குத் தெரியுது. இந்த உலகம் நம்ப மாட்டேங்குதே. இதை அப்படியே எங்க அப்பாகிட்ட வந்து சொல்லுங்கக்கா. எப்பப் பாரு வஞ்சுக்கிட்டே இருக்காரு. வெளியே தெரிஞ்சா என் இமேஜ் என்னாகுறது?”
அவன் சொன்னதைக் கேட்டு சிரித்தவளை, கம்ப்யூட்டர் திரையில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
பீரோ எடுத்தவர்கள் கீழே இறங்கி வர, அவனிடம் விலைபற்றி பேரம் பேசினர். அவர்கள் கேட்ட விலைக்குக் குறைக்காமலும், அதற்காக முற்றிலும் அப்படியே விலை வைக்காமல் அவர்கள் மனதிருப்திக்காக குறைப்பது போல் இறங்கி வந்தவன், அவர்கள் கூறிய விலாசம் தொலைவாக இருப்பதாகக் கூறி, டெலிவரி சார்ஜ் சற்று அதிகம் ஆகுமெனவும், அதில் கைவைக்க முடியாது எனவும் கறாராகக் கூறிவிட்டான்.
அவர்களுக்கு வாங்கிய பீரோவில் தாங்கள் கேட்ட விலையைக் குறைத்துக் கொடுத்தது மட்டுமே தெரிந்தது. இதை மட்டும் தான் வெளியே கூறுவார்கள். ஏனெனில் தினமும் வீட்டில் கண்ணில் படும் பீரோவின் விலைக்குறைப்பு தான் தெரியும். ஒருநாளில் முடிந்து போன டெலிவரி சார்ஜ் நினைவில் நிற்கப் போவதில்லை.
இதுதான் அவனது விளம்பரம். லட்சங்கள் செலவு செய்து செய்யப்படும் வண்ணமயமான விளம்பரங்களைவிட, வாடிக்கையாளர்களின் வாய் வார்த்தைகள், அவ்விளம்பரங்களுக்கு ஈடாக முடியாது.
பதினொரு மணிவாக்கில் கடையில் கூட்டம் சேர ஆரம்பிக்க… அதற்குமேல் அனைவருக்கும் சுறுசுறுப்பாக நேரம் கழிய ஆரம்பித்தது. பில் செக்செய்து பணம் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான்.
மதிய உணவு வேளை. வேலை பார்ப்பவர்கள் பகுதியாகப் பிரிந்து உணவு உண்ணச் சென்றனர். அவர்கள் வந்த பிறகு மற்றவர் செல்வர். மதியத்திற்கு மேல் சற்று ஐந்து மணிவரை மந்தம் காட்டும் வியாபாரம், அதற்குமேல் பழையபடி வியாபாரம் களையும் கட்டும். கல்லாவும் கட்டும்.
இன்றுமுழுதும் அவள் தரைதளம் வரவில்லை. மற்ற தளங்களையே சூப்பர்வைஸ் செய்து கொண்டிருந்தாள்.
மாலை ஏழு மணிக்கு மேல் கிளம்பிவிட்டாள். கடையை மூடிவிட்டு அவன் கிளம்ப எப்படியும் பத்து மணி ஆகிவிடும்.
“காவேரி… காவேரி… காவேரி…”
“ஏன்டா… கோர்ட்ல டவாலி மாதிரி கத்துற.”
“காவேரினு பேரு வச்சதுக்காக கூப்பிட்ட நேரத்துக்கு வர்றதில்ல. ஆடி அசைஞ்சு வர்றது.”
“நான் ஒன்னும் பதினாறு வயசு காவேரி இல்லடா சக்தி. துள்ளிக்கிட்டு வர்றதுக்கு.”
“யம்மோவ்… அப்ப வயசாயிருச்சுனு ஒத்துக்கோங்க.”
“இப்ப என்னடா வேணும் உனக்கு. எனக்கு வயசு அம்பதுக்கு மேல் ஆச்சுன்னு சொல்லிக் காட்டணும். அவ்ளோதானடா.”
“அம்புட்டுத்தே…”
“தெரியுதுல்ல… அப்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணி என்னைய பாட்டியாக்குற வழியப்பாரு. அதுக்குப் பின்னாடி ஒத்துக்கறேன்… எனக்கு வயசாகிப்போச்சுன்னு.”
“நான் அதனால தாம்மா கல்யாணத்தைத் தள்ளிப் போடுறே. எங்கம்மா சீக்கிரம் கெழவி ஆகக்கூடாதுனு.”
“டேய்… நான் ஏற்கனவே பாட்டி ஆயாச்சு. உங்க அக்கா ஏற்கனவே என்னை பாட்டியாக்கிட்டா. எனக்காகப் பாத்தா நீ கெழவனாயிருவியே. இப்பவே அங்கங்க ஒரு வெள்ளமுடி தெரியுது.”
“அது பித்த நரைமா.”
“ஏன்டா இப்ப தான் பொறந்து பல்லு மொளைக்கறதா நினைப்பா? வயசு முப்பதாச்சு. பித்த நரை மொத்த நரையா மாறுறதுக்குள்ள கல்யாணம் பண்ற வழியப்பாரு. நானும் நீயா வழிக்கு வருவேன்னு பாத்தா சரிக்கொடுக்க மாட்டேங்குற. இந்த வாரம் வீட்டுக்கு வந்த உங்க அக்கா கூட மாமா வகையில் பொண்ணு இருக்குனு சொன்னா. எப்பப் போயி பாக்கலாம்.” நீட்டி முழக்கியதில் மூச்சு வாங்க,
“யம்மோவ்… மொதல்ல சோத்தப்போடும்மா. மத்தத அப்பறம் பாக்கலாம். பசிக்குது. மில்லுக்கு வேற போகணும்.” பிடிகொடுக்காமல் பேசினான் மகன்.
“மில்லுக்குத் தாலி கட்டியவனாட்டம் ராத்திரியானா அங்க போயிர்ற. பகலெல்லாம் கடையே கதின்னு கெடக்குற. எப்ப தான்டா இதெல்லாம் பேசறது?”
அம்மாவின் வார்த்தைகளைப் கேட்டவன், வாய்விட்டு சிரிக்க, “ஏன்டா நான் ஒருத்தி வாய் ஓயாம பொலம்பிக்கிட்டே இருக்கே. உனக்கு சிரிப்பு வருதா?” சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைத்துக் கொண்டே கடிந்தார்.
“இல்லம்மா… மில்லு பொண்டாட்டினு சொன்னீங்களா. அப்ப அரிசி மூட்டையெல்லாம் புள்ள குட்டிகளானு நினச்சேன்… சிரிச்சேன்… நினைச்சுப் பாருங்க எப்படி இருக்கும்னு.”
மகன் கூறியதைக் கேட்டவர், “மொக்கையா இருக்கு… சிரிப்பு வரல.” என முகம் வெட்டினார்.
“இதுக்காக நாலுபேர் கொண்ட குழு வச்செல்லாம் ஜோக் ரெடிபண்ண முடியாதும்மா. எனக்கு இவ்வளவு தான் வரும். சிரிச்சுறுங்க.” எனக் கூறிய மகனின் முகத்தையே பார்த்தார். பிறந்ததிலிருந்து தரையில் கால் படாமல் வளர்ந்தவன். ஆனால் தந்தையின் மறைவிற்குப் பிறகு… உட்காரவும், உறங்கவும் மறந்து, மறுத்து ஓடிக்கொண்டிருக்கிறான். எத்தனை அலுப்பு என்றாலும், ஒருநாளும் பெற்றவளிடமும், பிறந்தவளிடமும் வெளிக்காட்டியதில்லை. எப்பொழுதும் சிரித்த முகம்தான். ஏதாவது மொக்கையாகப் பேசியாவது அன்னையையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்.
ஆனால் இப்பொழுதெல்லாம் சற்று வெளியே கடினம் காட்டுகிறான்.
“ஏன்டா சக்தி… இப்ப எல்லாம் கடையில உர்ருனு இருக்க. இப்பவே வெள்ளை சட்டையும் அதுவுமா வெரைப்பா வேற இருக்க.” என அன்னை குறைபட்டுக் கொள்ள,
“நம்ம என்ன கார்ப்பரேட் கம்பெனியாம்மா நடத்துறோம். டை கட்டிக்கிட்டு, ஷு போட்டு போறதுக்கு. வியாபாரிகள் கூட்டமெல்லாம் போறதுக்கு இதுதான் ம்மா மரியாதையா இருக்கும்.”
“அதுக்காக சிரிக்கக் கூடாதாடா?”
“ம்மா… பொம்பளப் பிள்ளைக வேலபாக்குற எடம்மா. நம்ம எப்படி நடந்துக்கறோமோ அப்படித்தான் வேல பாக்குற பையனுகளும் நடத்துக்குவாங்க. நாம சிரிச்சுப் பேசினா, அவனுகளும் சிரிச்சுப் பேசுவானுங்க.” எனக் கூறும் மகனை இவர் ஆசைதீரப் பார்ப்பார். அவன் சிரிக்காததன் காரணமும் அறிவார்.
கற்றை மீசைக்கடியில் சீரான வெள்ளைப்பற்கள் பளீரிட… கண்கள் மினுக்க அவன் சிரிக்கையில் யார் மனதையும் கொள்ளை கொள்வான் மாயக் கண்ணனாய். வாடிக்கையாளர்கள், பெண்கள் மத்தியில் இருக்கும் பொழுது அதனாலே அதிகம் சிரிப்பதில்லை.
“நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க.” கடைக்கு வரும் பலர் சொல்லக் கேட்டிருப்பதனால், அடக்கி வாசிக்கிறான் பொறுப்பான முதலாளியாக.
தனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அன்னையிடம், “ஏம்மா… அம்புட்டு அழகாவா இருக்கே?” எனக் கேட்க,
“ம்க்கும்…”என நொடித்துக் கொண்டவர்,
“எனக்குனு அடையாளத்தை உருவாக்கிட்டுத்தான் மத்ததைப் பத்தி யோசிப்பேன்னு சொன்ன. இப்ப ஒன்னுக்கு ரெண்டா உனக்குனு அடையாளம் இருக்கு. அந்தப் பேர் சொல்ல பிள்ளை வேண்டாமாடா சக்தி.” உள்ளிறங்கிய குரலில் அன்னை கேட்க, அதைப் பொருக்க மாட்டாதவனாய்,
“யம்மோவ்… நான் என்னமோ கல்யாணம் பண்ணாம காவி கட்டிக்கிட்டு சந்நியாசம் வாங்கப் போற மாதிரி புலம்புறீங்க. கொஞ்சம் டைம் தான கேக்குறே. சீக்கிரம் நானே உங்ககிட்ட சொல்றே. அதெல்லாம் பேர் சொல்ல மூட்டை மூட்டையா புள்ளைகளப் பெத்துக்குவேன்.”
“மூட்டை மூட்டையாப் பிள்ளைகளப் பெத்துக்கிட்டு பொன்னி, புழுங்கல், சீரகச்சம்பானு பேரு வைக்கப் போறியாடா?” என்றவாறு பரிமாற ஆரம்பித்தார் காவேரி.
அம்மா கூறியதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவன், “நீங்களும் நல்லா பேசக் கத்துக்கிட்டீங்க ம்மா.” என்க… மகனின் சிரிப்பில் மயங்கியவர், தானும் சிரித்தார்.
தாயின் முகம் கசங்க ஒருநொடியேனும் பொறுக்க மாட்டான் மகன். தந்தையின் இறப்பிற்குப் பின், “ரெண்டு புள்ளைகள வச்சுக்கிட்டு என்ன செய்யப்போறாளோ?” என சொந்தங்கள், வாயளவில் அக்கறை காட்ட, பிள்ளைகள் முகம்பார்த்து துக்கத்தை விழுங்கியவர்… துணிந்து வியாபாரம் ஆரம்பித்தார்.
கணவர் அலுவலகம் போட்டிருந்த, தற்போதைய காவேரி ஸ்டோர்ஸ் இடத்தில் தான் மளிகைக் கடையைத் தொடங்கினார். எவரிடமும் எதற்காகவும் கையேந்தக் கூடாதென்ற வீம்பு தான் அவரை வழிநடத்திச் சென்றது.
கணவனின் இறப்பிற்குப்பின் சாங்கியமாக பெண்கள் ஒருமுறை பிறந்த வீடு செல்வது வழக்கம். சாங்கியத்திற்காக பிள்ளைகளோடு பிறந்த வீடு சென்றவரை, உடன் பிறந்த சகோதரர்களின் மனைவிகள், “நல்லதங்காவாட்டம் புள்ளைகளோட வந்திருக்கா. புருஷன் தான் எல்லா சொத்தையும் அழிச்சுட்டு… மகராசன் போய்ச்சேந்துட்டாரு. இது தான் சாக்குனு இங்கயே செட்டில் ஆகிறப்போறா.” என சாடை பேச,
அதுதான் அவர் கடைசியாக பிறந்த வீட்டு வாசல் படியை மிதித்தது.
அப்பொழுதுதான் சக்தியும் கல்லூரி முதல் வருடம். கையிலிருந்த மிச்ச மீதி இருப்பு, மற்றும் மகளுக்கென சேர்த்ததில் மிஞ்சியது என அனைத்தையும் கொண்டு கடையைத் துவங்கினர். அதே இடத்தில் தான் பின்புறமாக் குடியிருக்கவென ஒரு அறையை ஒதுக்கிக் கொண்டு, மளிகை சாமான்களோடு சாமான்களாக அவர்கள் வாசம் சென்றது.
“சக்தி… எப்பவும் நம்ம குடும்ப தொழில் நம்மல கைவிடாதுடா. நானும் வியாபாரம் பாத்தவ தான்டா. நீ இருக்கும் போது எங்களுக்கென்னடா கவலை.” என்று மகனின் பொறுப்பையும் மறைமுகமாக உணர்த்தியவர், துணிந்து இறங்கினார்.
‘படிப்பை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் காலூன்றும் வழியைப் பார்ப்போம்.’ என வந்தவனை… தாய் எவ்வளவோ சொல்லியும் மறுத்துவிட்டு தொழிலில் இறங்கினான்.
ஊர்ப் பக்கம் ஒரு பழமொழி உண்டு. கணவனை இழந்த பெண்களைத் தேற்றுவதற்கு சொல்லப்படும். ‘கழுத்துப் புருஷன் இல்லைனா வயித்துப் புருஷன்… மகன் இருக்கையில உனக்கென்ன கவலைனு’ சொல்லுவதுண்டு. இங்கு புருஷன் என்பது குடும்பத்திற்கான ஆண் துணையைக் குறிக்கிறது. அதற்கேற்றார் போல் சக்தியும் இரவு பகலென பாராமல் உழைக்க ஓரளவிற்கு காவேரி மளிகைக்கடை வேரூன்ற ஆரம்பித்தது.
எப்பொழுதும் வழிவழியாக நடத்தப்படும் தொழிலானது, தொழிலின் சூட்சுமத்தை தனது பரம்பரைகளுக்குக் கடத்தவே செய்யும். காலநிலைக்கேற்ப மனிதன் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்து, குனிந்து நடந்த மனிதன் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தானோ அதே போல் தான், பரம்பரைத் தொழிலும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழிவழியாகக் கடத்தப்படும் பொழுது பரிணாம வளர்ச்சி அடைந்து, மேலும் விரிவு பெற்று… ஒரு தலைமுறையினரின் தொழில் சூட்சமத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறது. அதனால் தான் குலத்தொழில் எக்காரணம் கொண்டும் கைவிடாது என்று சொல்லப்படுவதுண்டு. இரத்தத்தில் ஊறியது எனக் கூறுவதன் அர்த்தமும் இதுதான். இங்கு பிரச்சினை குலத்தொழில் அல்ல. அது கொண்டு உருவாக்கப்பட்ட குலம்தான்.
“வைராக்கியம் புடிச்ச மனுஷி.” அவனுக்கு அவனது அம்மாவைப் பற்றிய கணிப்பு இது. அதே வைராக்கியத்தை மகனின் கல்யாணத்தில் காட்ட முற்படுகிறார். தற்பொழுது சிறிது காலமாகத் தான் அன்னைக்கு ஓய்வு கொடுத்து வீட்டில் இருக்க வைத்திருக்கிறான். இவர் தீவிரமாக இறங்குவதற்குள் தன் மனங்கொய்தவளிடம் விருப்பத்தைச் சொல்ல, அவளோ “இது ஒத்து வராது.” என ஒற்றை வரியில் மனம் முறித்தாள்.