பொன்மகள் வந்தாள்.21🌹
பொன்மகள் வந்தாள்.21🌹
PMV.21
“அடியேஏஏஏய்ய்…”
பொம்மியைவிட்டு இரண்டடி நகர்ந்தவன், திரும்பிப் பார்த்து அடிக்குரலில் அழைத்தான்.
அவளும் என்னவென்று திரும்பிப் பார்க்க, “மூச்ச விடுடி… மூச்சு அடச்சுக்கப் போகுது.” என்க, அப்பொழுதுதான் இழுத்துப்பிடித்திருந்த மூச்சைவிட்டு ஆசுவாசப்பட்டாள்.
“லேசா உரசினதுக்கே, மூச்சு நின்னு போச்சு. இதுல எனக்கு எல்லாம் தெரியும்னு வாய்ச்சவடால் வேற… ம்ம்ம்…” என கேட்டுவிட்டு நகர்ந்தான்.
அடிவயிற்றில் இனம்புரியா உணர்வில், ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பரபரவென பிரசவிக்க, மூச்சு தட்டுத்தடுமாற, சென்றவன் முதுகையே தவிப்பாய்ப் பார்த்தவள்,
“ஐயோ!!! பொம்மி இப்படியா தத்தியா நின்னு மானத்தை வாங்குவ!” என தனக்குத்தானே தலையில் குட்டிக் கொண்டாள்.
திரும்பி நின்றவன்… சிரித்துக்கொண்டே, மெலிதாக விசிலடித்து அழைக்க, அவளும் பாவமாய் திரும்பி பார்க்க,
“இப்ப தான்டீ, என் லட்டூ கொஞ்சம் கொஞ்சமா எட்டிப்பாக்குறா.” என கதவு வரை சென்றவன், திரும்பிப் பார்த்து கூறிவிட்டு சென்றான்.
திருமணம் முடிந்து ஒருவாரத்திற்கு மேல் கடந்துவிட்டது. மறுவீட்டு விருந்து, மாமன் வீட்டு விருந்து என ஒரு சுற்று பெருத்தாற்போல் தான் இருந்தனர் இருவரும்.
அண்ணனோடு சொர்ணமும் திருச்சியில் வந்து தங்கிக் கொண்டார். மறுவீட்டு விருந்தெல்லாம் அங்குதான். தங்கள் சந்தோஷத்தை சிதம்பரமும், சொர்ணமும், புது ஜோடிகளுக்கு மட்டும் என்றில்லாமல், விஷ்ணு குடும்பத்தையும் அழைத்து, விருந்து, துணிமணி என காண்பித்து திக்குமுக்காட வைத்தனர்.
அடுத்து அக்காவீட்டு விருந்து… உனக்கு நான் விட்டவள் இல்லை எனும் விதமாக இருந்தது.
“இப்படியே மாத்தி மாத்தி விருந்துக்கு போயிட்டு இருந்தா அவ்வளவுதான். நாளையிலிருந்து எப்பவும் போல கடைக்கும், மில்லுக்கும் கிளம்புறே ம்மா.” என்றான்.
“டேய் இன்னும், நம்ம கோயிலுக்குப் போகலியே.” என காவேரி கேட்க,
“அதெல்லாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம் ம்மா. நாளைக்கி சன்டே. கடையில வாடிக்கை அதிகமா இருக்கும். போதும்… கல்யாணத்த சாக்கா வச்சு ஒருவாரமா வீட்ல இருந்தாச்சு.” என்றான்.
“ஏன்டா அப்பப்ப போய்ட்டு தான வந்த” என்றார் காவேரி. முழு நேரம் போகமுடியவில்லை எனினும் அவ்வப்பொழுது கடைக்கும், மில்லிற்கும் சென்று கொண்டுதானிருந்தான்.
“ஏன்டா மாப்ள? ஹனிமூன் மாதிரி எங்கயாவது போயிட்டு வரலாம்ல.” விருந்திற்கு வந்தவனிடம் மாமன் கேட்க,
“போலாம் மாமா. தீபாவளி வேற நெருங்குது. அதுக்கேத்த மாதிரி ஆர்டர் எல்லாம் போட வேண்டியது இருக்கு. வேல பாக்குறவங்களுக்கும் போனஸ் எல்லாம் போடணும். எதுனாலும் தீபாவளி முடிஞ்சுதான் பாக்கமுடியும்.” என்றான் பொறுப்பான முதலாளியாக.
“எப்ப தான்டா, உனக்கு நேரங் கெடைக்கும். இப்ப தான் ஆடிமாசம்னு, ஆஃபர் சேல் முடிஞ்சுது. அடுத்து தீபாவளி, பொங்கல்னு இருந்துகிட்டே தான் இருக்கும். நீதான் டைம் ஒதுக்கணும்.” என அக்காவும் கடிய,
“உங்கள மாதிரியா க்கா? ஒன்னாந்தேதியானா… டான்னு சம்பளம் வந்துரும். எந்த ராசா எந்த தேசம்போனா நமக்கென்னெனு, யாரையும் சட்டைபண்ணத் தேவையில்ல. ஆனா, நாங்க எல்லாம் அப்படியா? இன்னைக்கி நெலமைக்கு கொஞ்சம் அசந்தாலும் போதும். வாடிக்கை போயிரும் மாமா.” என இருவருக்கும் பொதுவாக பதில் கூறினான்.
“நானே ராஜா… நானே மந்திரினு நகர்வலம்வர்ற, காவேரி ஸ்டோர்ஸ் ஓனரோட தன்னடக்கத்தை மெச்சினோம் மாப்ள. இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் மா. நீதான் இவன வழிக்குக் கொண்டு வரணும்.” என மாமான், பொம்மியிடம் கூற…
“அதெல்லாம் பாத்துக்கலாம் ண்ணா.” என அவளும் சிரித்துக் கொண்டே பதில் கூறினாள்.
“அதெல்லாம் அவளுக்கு நல்லாவே தெரியும் மாமா. கூகுள் பாத்து கத்துப்பா. இல்ல பொம்மி.” எனக் கேலிசெய்து இவனும் சிரித்தான்.
“வீட்டுக்கு வாங்க, உங்களுக்கு இருக்கு.” என பொம்மி கணவனை கண்களால் மிரட்ட, மிரட்டியவளைப் பார்த்து, மாமனும் மச்சானுமே வாய்விட்டுச் சிரிக்க,
‘இப்ப என்ன சொல்லிட்டோம்னு ரெண்டு பேரும் இப்படி சிரிக்கறாங்க. தப்பா எதுவும் சொல்லிட்டோமோ.’ என சங்கோஜமாக யோசித்தாள். புதுஇடத்தில் பயந்து பயந்து யோசித்துப் பேசும் போது, எதைப் பேசினாலும் தாப்பாகிவிடுமோ என எண்ணும் புதுப்பெண்ணின் ஆரம்பகட்ட சின்ட்ரோம் இது.
ஒருவழியாக விருந்துகளை முடித்துக் கொண்டு வழமைக்குத் திரும்பினர்.
கடைக்கு செல்ல, காலை எழுந்து கீழே இறங்கி வந்தவன், “ம்மா. எம்பொண்டாட்டி எங்க?” என்றான்.
“அடுப்படியில.” என்றார் டைனிங் டேபிளில் அமர்ந்து ஃபோன் பார்த்துக்கொண்டே.
“என்னம்மா, எம்பொண்டாட்டிய வேலபாக்க விட்டுட்டு, ஜாலியா ஃபோன்பாக்க ஆரம்பிச்சாச்சு போல?” என அம்மாவை வம்பிழுக்க,
“ஆமான்டா, அப்படியே ஊஞ்சல் ஒன்னு வாங்கிப்போடு. அதுல ஆடிட்டே ரெஸ்ட் எடுத்துக்கிறே.” என்றார்.
“உங்களுக்கு இல்லாததாம்மா.” என பேசிக்கொண்டே மகன் அடுக்களை செல்ல, காவேரி எழுந்து வெளியே தோட்டத்துப் பக்கம் சென்று விட்டார்.
காலை எழுந்து குளித்துவிட்டு வந்தவள், அடுக்களையில் இருந்த மாமியாரிடம் தான் சமைப்பதாகக் கூற, “சமைக்கத் தெரியுமா?” என காவேரி கேட்டார்.
“ம்ம்ம்… சுடுதண்ணி எல்லாம், பக்காவா போடுவேனே.” என்றாள் சிரித்துக்கொண்டு.
“அத, உன் புருஷனுக்கு போட்டுக் கொடு. நமக்கு நல்லதா வேற சமையல் பண்ணு.” எனக்கூற,
“அதெல்லாம் நல்லாவே வரும் அத்தை. அம்மாவுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போகும். நானும் அப்பாவும் தான் சமையல்.” என்றவள், “என்ன டிஃபன் முடிவு பண்ணியிருக்கீங்க?” என பொறுப்பான மருமகளாக கேட்க,
“பூரியும் குருமாவும் தான். தோசமாவுகூட இருக்கு.” என்றார், மருமகளுக்கும் காஃபியை கொடுத்தவாறே.
“நீ குருமாவுக்கு ரெடி பண்ணு. ஊரவச்ச பட்டாணி ஃப்ரிஜ்ல இருக்கும். நான் மாவப் பிசைஞ்சு வைக்கிறே.” என்றவர், மாவை பிசைந்து, உருட்டிவைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.
“கல்யாணத்துக்கு வரமுடியாதவங்க யாராவது வரப்போக இருப்பாங்க. ஒரு வாரத்துக்கு சேலயே கட்டிக்க பொம்மி.” என மாமியார் கூறிவிட, இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பில் சேலை நிற்கும் அளவிற்கு கட்டிப் பழகியிருக்கிறாள். இன்றும் தழுவிய சேலை, நழுவும் நிலையில் தான் இருந்தது. காய் நறுக்கும் வேலையைவிட புடவையை ஏற்றிவிடும் வேலை மும்முரமாக நடந்தது. இந்த வேலை ஒத்துவராது என விட்டுவிட்டாள்.
சேலையுடனான அவளது போராட்டத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே, வந்தவன் எதுவும் பேசவில்லை.
காஃபியை கலந்து அவனிடம் நீட்ட, வாங்கிக் கொண்டவன், அங்கேயே மேடை மீது சாய்ந்து நின்று, பருக ஆரம்பித்தான்… காஃபியையும், கட்டினவளையும்.
உதிக்கும் சூரியனாய் உச்சித்திலகம்
குடையாய்த் தாழ்ந்த விசிறிஇமை
கவிழ்ந்த வினாக்குறியென நாசி
வெல்வெட்டாய் கன்னம்… வழுக்கியது பார்வை
அசையாமலே அழைப்புவிடுத்த கனிந்த கீழுதடு
புல்லின் நுனியாய் நீர்பூத்த மேலுதடு
புதுதாலிக்கயிறு தழுவிக்கிடந்த சங்கு கழுத்து,
புதைந்து கொள்ளத் தூதுவிடும் வஞ்சகமில்லா இளமையும் வஞ்சிக்கப்பட்ட இடையும்
எச்சரிக்கை!! இது விபத்துப்பகுதி!!! என தடைவிதிக்கப்பட்ட… நாபிப்பள்ளத்தாக்கில்
விரும்பியே விழுந்து, விருப்பமே இல்லாமல் எழுந்தது அவனது பார்வை.
மயிலிறகாய் வருடிய பார்வையில், மஞ்சள்பூசிய முகம் தாழம்பூ நிறத்திலிருந்து செந்தாமரை நிறத்தை பூசிக்கொண்டிருக்க, ஜிவ்வென அவளது காதோரம் சூடேறியது… அவனைத் திரும்பிப் பார்க்காமலே.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், குறுஞ்சிரிப்போடு அவளுக்கு இடப்புறமாக கைவிட்டு, இடையை உரசியவாறே தட்டில் இருந்த கேரட்டை எடுக்க,
‘அடப்பாவி! இத முன்னாடியே எடுக்கலாமேடா! எதுக்கு கை அங்க சுத்திகிட்டுப்போகுது.’ என மனசாட்சி கழுவி ஊற்றியது.
சாதாரணமாகத்தான் காட்டிக்கொண்டாள்… கேரட்டை எடுத்தவன், சுண்டுவிரல் கொண்டு, புடவை அவனுக்கு கரிசனம் காட்டிய இடத்தில், பட்டும் படாமல் கோலம் போடும்வரை.
நறுக்கிய காய் நழுவியது சட்டென, கத்தியை விட்டு. மூச்சுத் தடுமாற, சவாசிக்க மறந்து நின்றவளைத்தான், கேரட்டைக் கடித்துக்கொண்டே நையாண்டி செய்துவிட்டு வெளியேறினான்.
விருந்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் கன்னியமாக ஒதுங்கி இருக்கிறான். ஆனால் பார்க்காமல் பார்க்கிறான். குறுகுறுக்கிறது அவளுக்குள். தீண்டாமல் தீண்டுகிறது பார்வை… செல்கள் ஒவ்வொன்றும் சூடேறுகிறது. இரவில் சமத்துப் பிள்ளையாக தூங்கி விடுகிறான். இல்லையில்லை!! கண்மூடிப்படுத்துக் கொள்கிறான். இவள் தான் முன்பு போல் அவனருகில் சகஜமாக படுக்க முடியாமல் தவித்துப் போகிறாள். தவிக்கவிட்டு சிரித்துக் கொள்கிறான். கண் அசந்த பின்னிரவு நேரத்தில், பின்கழுத்தில் சூடாக மூச்சுபடர இடையணைத்து கொள்கிறான். தவித்தவள், கொதித்துப் போகிறாள். சுகமாக குளிர்காய்கிறான். எதுவும் செய்யாமல், ஏதோ செய்கிறான். என்னவென்று விளங்கவில்லை பேதைக்கு.
ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை
ஏதோ செய்கிறாய்…
அதன்பிறகு எங்கே சமையலில் கவனம் சென்றது. உப்பாவது, புளிப்பாவது. என்ன சமையல் செய்தோம் என்ற நினைப்பே இல்லாமல் முடித்து வைத்தாள். அவனும் குளித்துவிட்டு கிளம்ப, சாப்பிட அமர்ந்தனர் மூவரும்.
பூரியையும், வெஜிடபிள் குருமாவைம் பரிமாறிக்கொண்டு, மூவரும் சாப்பிட ஆரம்பிக்க, எதுவும் சொல்லாமல் சாப்பிடும் மகனையே வைத்தகண் வாங்காமல் பார்த்தார் காவேரி.
“என்னம்மா புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க?” என்றான் நிமிர்ந்தே பார்க்காமல்.
“ஏன்டா, குருட்டுக்கோழி தவிட்ட முழுங்குற மாதிரி ஒருநாள் முழுங்குவேன்னு சொன்னேன்ல. இன்னைக்கி அதுதான்டா நடக்குது. எத்தன வக்கனை சொல்லுவ… எஞ்சமையலுக்கு. இப்ப ஒன்னுமே சொல்லாம சாப்பிடுற?”
பொம்மியும் அதைதான் நினைத்துக் கொண்டிருந்தாள், தான் சமைத்ததை வாயில் வைத்துவிட்டு, துப்பவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல்.
“இன்னைக்கி சமையல் நல்லா வந்திருந்தா தான் கவலப்பட்டிருப்பே. என்னடா… ஒரு ரியாக்ஷனும் இல்லியேனு.” என அவன் சிரித்துக் கொண்டே மனையாளைப் பார்த்து கண்சிமிட்ட, பதட்டமாக அவளின் பார்வை மாமியாரை பார்த்தது.
காவேரியோ வண்டிசத்தம் கேட்டு, வாசல் பக்கம் பார்வையை பதித்திருந்தார். அவளது சமையல் ஒன்றும் அவ்வளவு மோசமாக இருக்காது. அம்மா தளர்ந்த பிறகு, அவளது சமையல் தான் அவளது வீட்டில். கைப்பக்குவம் நன்றாகவே வரும். ஆனால் இன்று அவளுக்கே வாயில் வைக்க முடியவில்லை.
அப்பொழுது பவானியும் உள்ளே வர,
“வாக்கா.” என்றான்.
“வாங்க அண்ணி. பிரித்வி வரலியா?” என பொம்மியும் நாத்தானாரை வரவேற்க,
“இன்னைக்கு லீவுங்கறதால இப்பதான் எந்திரிச்சான். அப்பாவும் மகனும் சாவகாசமா கெளம்பி வாங்கனுட்டு வந்துட்டே.” என்றாள்.
“சாப்பிடுக்கா.” என்க,
“வேண்டாம்.” என வேகமாக பொம்மி மறுக்க,
“ஆமா க்கா, எம்பொண்டாட்டி சமச்சது எனக்கே பத்தல… நீங்க வேற சமச்சு சாப்பிட்டுக்கோங்க.” என்றான்.
“என்னம்மா சொல்றா இவன்.” என்க,
“அவனவிடு. அதென்ன கையில?” என்றார் மகள் கையிலிருந்த பாத்திரத்தைப் பார்த்து.
“விரால்மீன் கொழம்பு ம்மா. இன்னைக்கி சன்டேங்கவும், மாமா காலையிலேயே மார்க்கெட் போய்ட்டு வந்துட்டாங்க. அதுதான் கொழம்புவச்சு எடுத்துட்டு வந்தே. சக்தியும் கடைக்குப் போறதுக்குள்ள சாப்பிட்டு போவான்ல.” என்ற மகளைப் பார்த்து,
“என் வயித்துல பால வாத்த. பொம்மி அத எடுத்து வச்சிட்டு வா. பவானி வேற தட்டு கொண்டா. நாம நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்.” என்றவர், மகனின் முகம் பார்த்தார் நக்கலாக.
“ஏம்மா… நீங்க என்ன செஞ்சீங்க?” என்றாள்.
“அக்கா, அம்மாவுக்கு வயசாச்சேனு எம்பொண்டாட்டி பத்திய சாப்பாடு செஞ்சுருக்கா. அது புடிக்கல அவங்களுக்கு.”
“வயசான காலத்துல தான்டா நல்லா சாப்பிடணும். அப்படி வாயக்கட்டி, வயித்தக்கட்டி நாள்கணக்க நீட்டிச்சு என்ன செய்யப்போறோம். எனக்கு எது ஒத்துக்கலன்னு, எப்ப என் உடம்பு சொல்லுதோ அதுவரைக்கும் நல்லா சாப்பிட வேண்டியதுதான.” என்றார்.
“சரி, நான் கெளம்புறே. நீங்க சாப்பிடுங்க. மதியத்துக்கு என்னம்மா வேணும்.” என எழுந்து கொண்டே கேட்க,
“அதான் அக்கா மீன் கொழம்பு கொண்டாந்துட்டாள்ல. நீ மட்டன் மட்டும் எடுத்துக் கொடுத்துவிடு சக்தி.” என்றார்.
“சரிம்மா, அப்படினா… ஒன்னு பண்ணுங்க. மீன்கொழம்ப இப்ப சாப்பிடுங்க. மதியத்துக்கு எல்லாரும் ஹோட்டல் போயிக்கலாம். பொம்மியோட அப்பாவையும் அத்தையையும் வரச்சொல்லிறலாம். அவங்களுக்கும் ஃபோன் பண்ணி சொல்லிர்றே.” என்றவன் கடைக்கு கிளம்பினான்.
****************************
மாமாவிடம் கேப் புக்பண்ணிக்கொண்டு, அப்படியே பொம்மியின் அத்தையையும், அப்பாவையும் உடன் அழைத்துக்கொண்டு வருமாரு கூறிவிட்டான். அவன் தனது ஜாவாவில் கிளம்பி ரெஸ்ட்டாரன்ட் வந்துவிட்டான்.
“டேய், பொண்ட்டாட்டியக் கூட்டிட்டு தனியா போவியா. அதவிட்டுட்டு, கும்பல் சேத்துட்டு இருக்க?” என மாமன் சற்று கடித்தான்.
“மாமா, இது பதில் விருந்து. வீட்ல சாப்டறதுக்கு பதிலா கொஞ்சம் வெளியே போலாமேனு தான் இந்த ஏற்பாடு. உங்களுக்கும் லீவு கெடைக்கணும்ல. உங்க தங்கச்சி தான் இன்னைக்கே போலாம்… அண்ணனுக்கும் இன்னைக்கு தான் லீவுன்னு சொன்னா.” என மனைவியையும் கூட்டு சேர்த்தான். அப்பொழுதுதான் அவளுக்கும் புரிந்தது. குடும்ப விஷயங்களில் தானும் எவ்வளவு முக்கியத்துவம் பெறவேண்டும் என்பது.
ரெஸ்ட்டாரென்டில் டேபிள் புக் செய்திருந்தான். பிரித்வி ஓடிவந்து அத்தை பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு புது அத்தை என்பதைவிட, கடைக்கு செல்லும் பொழுதெல்லாம் சாக்லேட் எடுத்துக் கொடுக்கும் அத்தை அவனுக்கு.
பிடித்த உணவு என அனைவரும் பிரியாணியே ஆர்டர் செய்ய, எப்பவும் பிரியாணி தானா என சலித்துக் கொண்டான்.
“ஏன்டா, இதுல இருக்குற பேரு தெரியாததை எல்லாம் ஆர்டர் பண்ணிட்டு, வந்தபின்னால… இதுதானான்னு இருக்கும்.” என அங்கலாய்ப்பாய் மெனுகார்டு காட்டி, காவேரி கூற,
“அதென்னமோ நெஜம்தான். நம்ம ஊரு மிளகு ரசத்தையே, என்னமோ லேப்ல உக்காந்து கண்டுபிடிச்சவனுக மாதிரி, வாயில நுழையாத பேர வச்சுட்டு, கேட்டா கான்டினன்டல் சூப்னு சொல்லுவானுக. அதான் தெரிஞ்ச கூட்டாஞ்சோறே போதும்.” என்றாள் பவானியும்.
ஆர்டர் செய்த உணவுகளோடு வறுத்த, பொறித்த… பறப்பனவும், நீந்துவனவும் வந்தது.
“ஸ்வீட், ஐஸ்கிரீம், காஃபி யாருக்கெல்லாம் வேணும்.” என சாப்பிட்டு முடித்து கேட்க,
“எனக்கு சாக்லேட் ஐஸ்க்ரீம்.” என ப்ரித்வி குரல் கொடுத்தான்.
“எங்களுக்கு காஃபி.” என மூத்தவர்கள் சொல்லிவிட,
“உனக்கு க்கா…” என்றவனிடம்,
“உங்க அக்காவுக்கு ரசமலாய் சக்தி.” என்றான் விஷ்ணு.
சர்வரை அழைத்தவன், பிடித்தங்களைக் கூற ஆரம்பிக்க, “டேய், தங்கச்சியக் கேக்கல?” என்க,
“இப்ப அக்காவ கேட்டப்ப, அக்காவா சொல்லுச்சு. நீங்க தான சொன்னீங்க?” என்றவன், ஸ்வீட் வகைகளில் ரசகுல்லாவையும் சேர்த்து ஆர்டர் செய்தான்.
“ஏன்டா டேய்! சோறு போட கூட்டியாந்தியா? இல்ல… குடும்பத்துல கும்மியடிக்க கூட்டியாந்தியாடா.” என்றான் விஷ்ணு அப்பாவியாக.
“என்னாச்சு மாமா?” என்றான், பதறாமல் மாமனைப்பற்றி அறிந்தவனாக.
“எனக்கு, உங்க அக்காவுக்கு மில்க் ஸ்வீட் புடிக்கும்னு தெரிஞ்சுக்க ஒருவருஷம் ஆச்சுடா. நீ என்னடான்னா ஒருவாரத்துல சொல்ற.”
“எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும் மாமா.” என்று சிரிக்க,
“போதும்! இதோட நிறுத்திக்க. நானும் என் பொண்டாட்டிக்குப் புடிச்சத சொல்லி கெத்து காமிக்கலாம்னு நெனச்சே. ஆனா… இப்பவே உங்க அக்கா பார்வை, உங்களுக்கு இன்னைக்கி வீட்ல இருக்குனு சொல்லுதேடா.” என புலம்பியவனைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட்டனர்.
பொம்மி அன்று விருந்தில் இதே வார்த்தையைக் கூறியபொழுது ஏன் மச்சான்கள் இருவரும் அப்படி சிரித்தனர் எனப்புரிய, அவளுக்கும் சிரிப்பு அடங்க வெகுநேரமாயிற்று. கண்ணில் நீர் வடிய, கண்ணங்கள் சிவப்பேறச் சிரித்தவளையே சொர்ணமும், சிதம்பரமும் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்கள் கண்ணே பட்டுவிடுமோ என பார்வையைத் திருப்பிக் கொண்டனர்.
“மாமா, எங்கேயாவது வெளில போலாம் மாமா.” என ப்ரித்வி கேட்க, சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவர்கள், கல்லணை செல்ல முடிவு செய்தனர். அவனது வண்டியை அங்கேயே விட்டுவிட்டு, கார் அமர்த்திக் கொண்டனர்.
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும், கட்டியவனின் பெயரைக் கம்பீரமாகக் கட்டியம் கூறிநிற்கும் கல்லணை. கங்கை நீரை கமண்டலத்தில் அடக்கி, காவிரியாய் விரியவிட்ட அகத்தியரைப் போல, புதுப்புனல் காலத்தில் ஆர்ப்பரிக்கும் அகண்ட காவேரியை, கல்லணை கட்டி நீர்மேலாண்மையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவன் நமது கரிகாலச்சோழன்.
இன்றும் பருவப் பெண்ணாய் பொங்கி நுரைக்கிறாள் காவேரி.
கல்லணையின் பிரமிப்பை கண்டுவிட்டு, முக்கொம்பு திரும்பினர். சொர்ணமும், சிதம்பரமும் நடக்க முடியாது என்று கூறிவிட பூங்காவிற்கு சென்றனர். அங்கு வருவதற்குள் பொழுதுசாய்ந்து இருள்கவிழ ஆரம்பித்தது. எனவே சிறிது நேரம் பிரித்வியை விளையாடவிட்டு கிளம்பிவிடலாம் என பூங்காவிற்குள் நுழைந்தனர்.
பூங்காவில் பிரித்வியோடு சிறுபிள்ளையாக விளையாடிக் கொண்டிருந்தவளை சொர்ணம் பூங்கா பென்ச்சில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவளை கைக்குள்ளேயே வைத்து வளர்க்காதே… என அண்ணியை கடிந்து கொண்ட சொர்ணம் தான், கடந்த நான்கைந்து வருடங்களாக இவள் மறுபடியும் சிறு பிள்ளையாக மாறமாட்டாளா… என ஏங்கினார். இத்தனை நாட்களாக அவளும் சிரித்தாள். அது அவளது அப்பாவிற்காகவும். அம்மாவிற்காகவும் மட்டும் தான். ஆனால் இன்று அவள் ரெஸ்ட்டாரென்டில் சிரித்ததைப் பார்த்தவருக்கு, அவளது பழைய பண்டு மீண்டு வந்தது போல் இருந்தது. அவள் சிரிக்கும் போது முகம்சிவந்து, அவ்வளவு அழகாக இருப்பாள், பார்ப்பவர்கள் கண்களுக்கு.
முதலில் செல்லத் தயங்கியவள், பிரித்வியின் அடத்தினால்தான் அவனோடு விளையாடச் சென்றாள்.
“ஏம் பவானி… ஒன்னோட நிறுத்திட்ட. இப்ப பாரு. விளையாட ஆளில்லாம, அத்தையப் புடிச்சு இழுத்துட்டு போறான்.” என சொர்ணம் கேட்க, பவானி முகம் வாடிவிட்டது.
“ஏம்மா! நான் ஏதாவது தப்பா கேட்டேனா?” என பதறிப்போனார்.
“அதெல்லாம் இல்லக்கா. பிரித்வி பிறந்தப்பவே தாயா, பிள்ளையானு ஆகிப்போச்சு. அதனால தம்பி ஒரேயடியா இன்னொன்னுக்கு சம்மதிக்கல. இவளும் எவ்வளவோ கேட்டுப் பாத்துட்டா.” என காவேரி கூற,
“அதனால என்னம்மா. இது ஒன்னு கைகால் சுகத்தோட இருந்தா போதும். இப்ப எங்க பொம்மி இல்ல. இவளும் அப்படிதான் பொறந்தா. அதனாலயே எங்க அண்ணிக்கு உடம்பு போச்சு.” என பெண்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“விஷ்ணுவுக்கும் பொண்டாட்டினா உசிரு. என்ன… இவளுக்கு தான் கொஞ்சம் வாய் நீளும்.” என மகளை காவேரி தாக்கிப்பேச,
“மருமகனுக்கு குடை பிடிக்க சொன்னாமட்டும் எங்க அம்மாவும், தம்பியும் அடைமழையிலும் அசராம புடிப்பாங்க பெரியம்மா.” என்றவள், மகன் அழைக்க எழுந்து சென்று அவர்களோடு ஐக்கியமாகிவிட்டாள்.
“எனக்கு இன்னைக்கி தாம்மா மனசு நெறஞ்சு இருக்கு. எங்க அண்ணே முகத்துல சந்தோஷத்தப் பாத்து பலவருஷமாச்சு. இன்னைக்கி பாத்தே. என்னதான் சக்தி பிடிவாதத்துல பொண்ணு கொடுத்தாலும் நீங்க எல்லாம் அவள ஏத்துக்கணுமேன்னு மனசு கெடந்து அடிச்சுக்குச்சு.” எனத் தனிமையில் தன் ஆதங்கத்தை, காவேரியிடம் கொட்டத் தொடங்கினார்.
“ஏன் க்கா அப்படி சொல்றீங்க? என் மகன் முடிவு பண்ணினா அது நல்ல பொண்ணா தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கை தான்.” என்றார்.
“அப்படி இல்லம்மா. இவளுக்கு விதவைங்கற பச்சாதாபம் கூட இல்லியே. கட்டுனவன் இன்னும் உசுரோட இருக்கானே. அவனுக்கு ஒரு கேடும் வரலியே.” என ஆத்திரத்தில் சபிக்க,
“அதப்பத்தி பேச வேண்டாம் க்கா.” என்றார் காவேரி. ஏனோ அப்பேச்சு ஒப்பவில்லை அவருக்கு. என்னதான் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும், தன் மகனின் மனைவி என வந்தபிறகு, அவளது பழைய வாழ்க்கையை அசைபோட மனம் ஒப்புவதில்லை.
“அப்படி இல்லம்மா. இவளப்பத்தி எந்த அளவுக்கு உங்களுக்கு தெரியும்னு தெரியல.” என்றவர் அவளைப் பற்றிய விவரங்களைக் கூற ஆரம்பித்தார். மேம்போக்காக மகன் கூறியதுதான். ஆனால் சொர்ணம் கூறியதைக் கேட்டவருக்கு, ஒரு பெண்ணாக, பெண்ணைப் பெற்ற தாயாக உள்ளம் பதறியது. அதில் சக்தி கூறாத உண்மையும் அடங்கி இருந்தது. அது அவனுக்கே தெரியாதே.
“நானும், சக்தி தம்பிகிட்ட நானே எல்லா உண்மையும் சொல்லி பேசறேன்னு சொன்னேன். வீம்பா இவதான் வேண்டாம்னுட்டா.” எனக் கூறினார்.
காவேரியும் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க, விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு, நொருக்குத்தீனி வாங்கிக் கொடுத்துவிட்டு, இவர்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்க, தண்ணீர் பாட்டிலோடு வந்தவன் காதுகளில் அத்தனையும் விழுந்தது.
அவள் கூறியது பாதி. கூறாமல் விட்டது மீதி எனத் தெரிந்தது.
என்றோ அவள் காலில் குத்திய முள்ளிற்கு, இன்று இவன் கண்கள் கரித்தன.
என்னதான் பலவருடங்களாக குடும்பம் நடத்திய கணவனே ஆனாலும் பெண்கள் சிலவிஷயங்களை மனம் திறப்பதில்லை. அன்றைய நிலமைக்கு, தன்னிடம் அந்த அளவுக்கு, அவளது கடந்த காலத்தைப்பற்றி பொம்மி மனம் திறந்ததே பெரியவிஷயம். அதுவே அவள் கொண்ட காதலையும், நம்பிக்கையையும் சக்திக்கு பறைசாற்றியதே.