பொன்மகள் வந்தாள்.5.🌹

பொன்மகள் வந்தாள்.5.🌹

PMV.5.

சேலை கட்டும்

பெண்ணுகொரு வாசம்

உண்டு கண்டதுண்டா

கண்டவர்கள் சொன்னதுண்டா

..………….

வானத்து

இந்திரரே வாருங்கள்

வாருங்கள்

பெண்ணுக்குள்

என்ன இன்பம் கூறுங்கள்

கூறுங்கள்

இதுபோல்

இதமோ சுகமோ

உலகத்தில் இல்லை…

ஸ்டோர்சில் எப்பொழுதும் ஒலிக்கும் பாடல்கள் இன்று இவனுக்காகவே ஒலித்தது போல் தோன்றியது சக்திக்கு. 

தாழம்பூ நிறத்து மேனியில், செவ்வரளி நிறத்து மைசூர் சில்க் புடவைப் பாந்தமாகத் தழுவியிருக்க, அப்பொழுதுதான் முகம் கழுவியதால் சிறு பொட்டோடு ஒப்பனையற்ற முகமே  பளிச்சென்றிருக்க, மன்மதன் வில்லாய் புருவமும், கூர்தீட்டிய அம்புகளாய் விழிகளும், அவனைத் தாக்க, வாடிக்கையாளர்கள் கவனமும் சிலகணங்கள் அவள் மீது படிவதை தடுக்க முடியவில்லை அவனால். 

“அக்கா… இப்பதான் தெரியுது. நீங்க ஏன் காலையிலேயே சேலை கட்டலைனு. ஒரு கஸ்டமர் வெளிய போயிருக்க மாட்டான். செமயா இருக்கீங்க போங்க.” உடன் வேலை பார்க்கும் பெண் அவளின் அழகை ஆராதிக்க, ஆராதிக்க ஆசைப்பட்டவனோ அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றான். அவள்மீது பார்வையைப் பதியவைக்க முடியாமலும், விலக்க முடியாமலும், ‘என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை.’ எனும்படி சோழ நாட்டுக்காரனும் தவித்துக் கொண்டிருந்தான். 

“அப்படியெல்லாம் இல்ல சுமதி. வண்டியோட்டப் பயந்துட்டு தான் சேலகட்டல.” அப்பெண்ணிடம் பொம்மி பதிலுரைக்க,

“ஏங்க்கா… அந்தக் காலத்துல எல்லாம் சொல்ற மாதிரி கழுதைப்பால்லயே  குளிப்பீங்களோ?” எனக் கேட்டவளைப் பார்த்து புன்னகை பூத்தாள் பூவை.

“இந்தக் கலரு எங்கம்மாகிட்டே இருந்து வந்தது. இதுக்கு நான் பொறுப்பில்ல ப்பா.”

“அப்ப… நம்ம விக்கிற பவுடர், க்ரீம், காஸ்மெடிக்ஸ் எல்லாம் வேஸ்ட்டுனு சொல்றீங்களா க்கா?” என மெதுவாகக் குனிந்து அவளது காதருகினில் கேட்க,

“பொழப்பைக் கெடுத்த போ. ஒழுங்கா போய் கஸ்டமரைக் கவனி.” என அவளை விரட்டினாள். 

என்னதான் நாம் மெனக்கெட்டாலும், பிறப்பு என்று ஒன்று உண்டு. இன்று எத்தனையோ அழகு சாதனப் பொருட்களும், தோலை வெளுக்க வைக்கும் லேசர் சிகிச்சைகளும் என பல வந்தாலும், அவை நிரந்தரமானவை அல்ல என்பது நிதர்சனமான உண்மை. பத்து நாள் எந்த சன்ஸ்கிரீன் லோஷனும் போடாமல் வெயிலில் சுத்தினால் ஹன்சிகாவும், கருப்பாயி தான். காஸ்மெட்டிக் கம்பெனிகள் உருவாக்கிய மாயைதான் வெள்ளைத்தோலுதான் அழகு என்பது. அவன் தாயாரித்த அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ய, மிகப்பெரிய சந்தையான இந்தியாவைத் தேர்ந்தெடுத்தவன், இங்கே ஒரு உலக அழகியையும் இருபத்தியெட்டு வருஷத்திற்கு முன்னால் உருவாக்கினான். மார்க்கெட்டிங் பண்ண வந்தவனுக்கு வேலை முடிந்தது.‌ அவன் அடுத்த நாட்டிற்கு பொட்டியைக் கட்டிவிட்டான். நாமும் வெள்ளத்தோலுதான் அழகு என்ற மாயையில் சிக்கி அவன் விற்பனை செய்த அனைத்தையும் வாங்கினோம்.

ஆனால் திராவிடனின் கறுப்பு தான் ஆரோக்கியம் என்பது பலருக்குப் புரிவதில்லை. இங்கே அடிக்கிற வெயிலுக்கு கறுத்த தோலுதான் உனக்கு பாதுகாப்பு என்று இயற்கை வழங்கிய கொடை இது. தேங்காஎண்ணெயைத் தடவிக்கொண்டு வெயிலில் காட்டிலும் மேட்டிலும் உழைத்தவனுக்கு வந்ததில்லை எந்நாளும் ஸ்கின் ப்ராப்ளம். கிழங்கு மஞ்சள் தேய்த்துக் குளித்த பெண்ணின் முகத்தில் என்றும் வந்ததில்லை பருக்களின் தடயம்.

மூன்றடுக்குத் தோலில் மேல்தோலின் நிறத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கை, கால், முகம் என முக்காடு போட்டு, சூரியனின் அரவணைப்பிலிருந்து என்று தப்பிக்க ஆரம்பித்தோமோ அன்று துவங்கியது தோல்வியாதிகளின் ஆதிக்கம், அந்நிய பொருட்களைப்போல. கருத்த தோலை வெளுக்க வைக்கவும், வெளுத்த முடியை கருமையாக்கவும் மெனக்கெடுகிறோம். (கொஞ்சம் பொறுங்க… எம்புள்ள ஃபேர்னஸ் க்ரீமை எங்க வச்சேண்னு தெரியாம தேடிட்டு வருது. எடுத்துக் கொடுத்துட்டு வர்றே. ஹி…ஹி… நாங்க மட்டும் விதிவிலக்கா என்ன? ஊரோட ஒத்து வாழணுமாக்கும்… 

எங்க விட்டுட்டுப் போனேன்… ஆங்…)

சுமதி கேட்டதில், அவளை விரட்டிவிட்டு சிரித்துக்கொண்டே திரும்பியவள், சக்தியின் பார்வை தன்மீதே இருப்பதை உணர்ந்து, சுதாரித்தாள். பார்வையை அங்காடியைச் சுற்றி சுழற்றினாள். இன்று முதலாளி கண்டிப்பு காட்டமாட்டார் என அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருக்க, அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இவளும் சற்று ஆசுவாசப்பட்டாள்.‌ கடையில் வேலை பார்ப்பவர்களிடம் கண்டிப்பு காட்டுபவன், எங்கே தன்னால் அவர்கள்‌ பார்வையில் குறைந்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு.

அவனுக்கு அந்த அச்சமெல்லாம் இன்று இல்லை போலும். கருமமே கண்ணாக இருந்தான். இவள் தான் நெருப்பின் மீது நிற்பது போல் உணர்ந்தாள். எக்குத்தப்பாக எவரது கண்ணிலாவது பட்டுவிட்டால் என்னாவது?  

அதற்குள் அவனது அம்மாவும், அக்கா குடும்பமும் வர… அவனது‌ கவனம் அவர்கள்‌ பக்கம் திரும்பியது.

“வாக்கா, வாங்க மாமா… என வரவேற்றவன், கடையில் வேலை பார்க்கும் பையனை அழைத்து அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வாங்கி வைக்கச் சொன்னான்.

“டேய் மருமகனே! வாடா…” என அக்கா மகனைத் தூக்கிக் கொள்ள,

“மாமா… சாக்லேட் எடுத்துக்கவா. வீட்ல அம்மாச்சியும் அம்மாவும் கொழுக்கட்டை செஞ்சாங்க. சாமி கும்பிடாம எடுக்கக் கூடாதுனு தரல?” என வந்தவுடன், மாமனிடம்‌ புகார் வாசித்தான் பிரித்வி.

எப்பொழுதும் பூஜைக்கு வீட்டிலிருந்தே கொழுக்கட்டையும், சுண்டலும் தயார் செய்து எடுத்து வருவார் காவேரி. மகளோடு சேர்ந்து அவற்றையெல்லாம் தயார் செய்ய, கொழுக்கட்டை கேட்டு அழுத பேரனை, “நம்ம கடையில போய் சாக்லேட் எடுத்துக்கலாம்டா. கொழுக்கட்டை சாமி கும்பிட்டுதான் சாப்பிடணும்.” என சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.

“உனக்கு இல்லாததாடா மாப்ளே. போய் எடுத்துக்கோடா.” என அக்கா மகன் பிரித்வியை இறக்கிவிட,

“ஆமாடா, என்னமோ பொண்ணுப் பெத்து வச்சிருக்கவனாட்டம் ஆசையா வாய்க்குவாய் மாப்பிள்ளைனு கூப்பிடுற.” என்றாள் வந்ததும் வராததுமாக.

“என்ன மாமா, அக்கா சூடா இருக்கு போலயே?” என மாமனின் பக்கம் சாய்ந்து காதைக் கடிக்க,

“போனவாரம் சொன்ன பொண்ணுக்கும் நீ இன்னும் எந்த பதிலும் சொல்லலையாம். வீட்ல இருந்தே பொறிஞ்சுட்டு தான் வர்றா.”

“நேரங்காலம் கூடிவந்தா தன்னால நடக்கும் க்கா.”

“அது எப்ப தான்டா கூடிவர்றது.”

“எக்கா… இப்ப எதுக்கு வந்தே, எதைப்பேசிக்கிட்டு இருக்கே.” என்றவன் பூஜை வேலையைப் பார்க்கச் சொன்னான். 

“அதில்லடா மாப்ளே… அதைச் சாக்காவச்சு ரெண்டு பட்டுப் புடவை உங்கிட்ட வாங்கலாம்ல.” எனக் கூறிய மாமனைப் பார்த்து,

“மாமா… இது ஏதோ பக்கத்து இலைக்கி பாயாசம் கேக்குற மாதிரி இருக்கே.”

“ஆமா… நெல்லுக்குப் பாயுறது கொஞ்சம் புல்லுக்கும் பாயுமில்ல.”

“அதுக்கு எதுக்கு மாமா எங்கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ணனும். இப்பவே வாங்க சாரதாஸ் போலாம்.” என மாமனை அழைக்க,

“நீங்க வீட்டுக்கு வாங்க… உங்களுக்கு இருக்கு.” என பவானி கணவன் பக்கம் கவனத்தைத் திருப்ப, சக்தி நைசாக இடத்தைக் காலி செய்தான்.

“அது என்னைக்கும் இருக்கறதுதானே பவானி. வேற ஏதாவது புதுசா சொல்லு.” என்றவன், அவளது முறைப்பில்,

“டேய் சக்தி… பூஜைக்கு எல்லாம் ரெடியாடா?” எனக் கேட்டவாறே அவன் பின்னே சென்றான் விஷ்ணு.

வீட்டிலிருந்து கொழுக்கட்டையும் சுண்டலும், காவேரியும் பவானியும் சேர்ந்து தயார் செய்து கொண்டு வந்திருக்க, மற்ற இனிப்புகள், பழம் எல்லாம் சக்தி வாங்கி வைத்திருந்தான். 

“ம்மா… கருப்பட்டியோட சேந்து எல்லாம் எடுத்து வைங்க. நான் போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வந்துர்றே.” எனக் கிளம்பியவனை அழைத்து, காவேரி ஒரு பையைக் கொடுக்க, 

“என்னம்மா இது?” என்றான். 

“உனக்கு மாத்த வேண்டிய ட்ரெஸ் டா. காலையிலிருந்து இதே ட்ரெஸ்லயே வேல பாத்திருப்பே. குளிச்சிட்டு மாத்திட்டு வா.”

“இங்கேயே ட்ரெஸ் இருக்கே ம்மா?”

“அது எந்த மாதிரி இருக்கும்னு எனக்கும் தெரியும். சாமி கும்பிடுறாளுகளோ இல்லையோ விதவிதமா ஃபோட்டோ எடுத்து வாட்சப்பு, ஃபேஸ்புக்கு, இன்ஸ்டானு ஸ்டேட்டஸ் போடுவாளுக. அதுல எம்புள்ள மட்டும் அரசியல்வாதி மாதிரி இருக்கணுமா?”

“இதெல்லாம் உனக்கு எப்படிம்மா தெரியும்?” மகன் ஆச்சர்யம் காட்ட,

“நீதான் ரெஸ்ட் எடுங்கேனு வீட்ல உக்கார வச்சுட்ட. எனக்கும் வீட்ல பொழுது போக வேண்டாமா?”

“அதுக்கு சினிமா, சீரியல்னு தானே பாப்பாங்க. நீங்க என்னடான்னா ரொம்ப அட்வான்சா இருக்கீங்களே?”

“அந்தக் கண்றாவியெல்லாம் யாருடா பாக்குறது? என்னமோ கொரியன் சீரியலாமே? அதைத்தான் பாக்கலாம்னு‌ இருக்கேன்டா.”

“யம்மா… தாயே! இது அட்வான்ஸுக்கும் அட்வான்சால்ல இருக்கு. நாடு தாங்காதும்மா. ஆமா… இதெல்லாம் உனக்கு யாரு சொல்றா.” என்று மகன் அலற,

“இங்க இருக்கிறவளுக தான் என்‌னோட வாட்சப் க்ரூப்ல இருக்காளுக. அவளுக தான் சொன்னாளுக.”

“மொதல்ல எல்லாரையும் ப்ளாக் பண்ணும்மா. உன்னையக் கெடுத்து வச்சிருக்குதுக.” என்றவாறு, சிரித்துக் கொண்டே பையை வாங்கிச் சென்றான்.

“வாங்கம்மா… எப்படி இருக்கீங்க?” என அங்கே வேலை பார்ப்பவர்கள், காவேரியை நலம் விசாரித்தவாறே, பூஜைக்கான ஏற்பாட்டை செய்தனர்.

கருப்பட்டி, சக்தியின் கைபேசியிலிருந்து ப்ளுடூத் மூலமாக ஸ்பீக்கரில் பாடல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தான். 

தனது அறைக்கு வந்தவன், சிறுகுளியல் போட்டுவிட்டு, காவேரி கொண்டு வந்திருந்த உடையை மாற்றியவன், கவரைக் குப்பைக் கூடையில் போட, அதில் வாடிய சாதிமல்லிச்சரம் கிடக்க, பெண்ணவள் நினைவில் சிரித்துக் கொண்டான். 

அவளது வாசம் முழுதும் அறைக்குள் வியாபித்திருப்பது போல் ஒரு‌பிரமை. 

“கருப்பட்டி… என் ஃபோனுக்கு ஒரு கால் பண்ணு. எங்கே வச்சேன்னு தெரியல.” என பொம்மி அவ்விடம் வந்தாள். 

“இந்தக் கூட்டத்துல எங்கக்கா இருக்கப் போகுது. கவனமா வச்சிருக்கக் கூடாதா?”

“இல்ல கருப்பட்டி, சேல மாத்துற வரைக்கும் கையிலதான் இருந்துச்சு.”

“அப்ப… ட்ரெஸ் கொண்டு வந்த பையில பாருங்க க்கா.”

“அதெல்லாம் பாத்தாச்சு… இல்ல. வீட்ல இருந்து ஃபோன் வரும். வர கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லணும்.” என்க,

“நம்பர் சொல்லுங்க. கால் பண்றே. ஃபோன் கிடைச்சா உங்க லக்கு. கிடைக்கலனாலும் உங்க லக்குதான்.”

“அதெப்படி…” யோசனையாக பொம்மி கேட்க,

“ம்ம்ம்… கிடைக்கலைனா புது ஃபோன் வாங்கிக்கலாம்ல க்கா. லேட்டஸ்ட் மாடல்ல.” என சிரித்தவாறே,

பொம்மி ஃபோன் நம்பரைக் கூற, கையிலிருந்த சக்தியின் ஃபோனில் இருந்து அழைப்பு விடுத்தான்.

உடை மாற்றிக் கொண்டு வெளியேற எத்தனித்தவன், திடீரென ஒலித்த பாடலில் நிதானித்தான்.

கண்ணுக்குள் நூறு

நிலவா இது ஒரு கனவா

கைக்குட்டை காதல் கடிதம்

எழுதிய உறவா 

என பாடல்வரிகள் ரிங்டோனாக ஒலிக்க,‌ அவனது படுக்கையில் கிடந்தது பொம்மியின் கைபேசி. முகம் கழுவச்சென்றவள், ஃபோனை படுக்கையில் போட்டுவிட்டு உடை மாற்றியவள், மாற்றுடையை மட்டும் எடுத்துக் கொண்டு அப்படியே மறந்து வெளியேறி விட்டாள். 

எடுத்துப் பார்த்தவன்,‌ அதில் அவனது கைபேசியிலிருந்து தான் அழைப்பு வந்து கொண்டிருந்தது.

அழைப்பை ஏற்க நினைத்தவன், திரையில் தெரிந்த தனது பெயரில் ஒருகணம் நிதானித்தான். 

இவ்வளவு நாட்களாக அவளுக்கும் தன்மீது ஆர்வம் இருக்குமா என்ற எண்ணம் அவனைக் கொஞ்சம் குழப்பியது. தனது காதல் ஒருதலை ராகம் ஆகிவிடுமோ என எண்ணிக் கொண்டிருந்தான். அவளது முகம் எந்த உணர்வையும் காட்டாது கல்லென இருக்கும். ஆனால் அவளுக்கும் ஆசை இருக்கு என்றது ரிங்டோனும், அந்தப்பெயரும்.

சிரித்துக் கொண்டே அதை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன், கருப்பட்டி இருக்குமிடம் வந்தான். சக்தியின் கையில் தனது ஃபோனைப் பார்த்தவள், “ரூம்லயே விட்டுட்டு வந்துட்டேன்  போல.” என்றவாறு, கையை நீட்டினாள்.

அவனும் கைநீட்ட, கைபேசியை வாங்கிக்கொண்டே அவனது கைமீது பார்வையை ஓட்ட, மேலே ஏற்றிய யானைமுடிக் காப்போடு, முழங்கைக்கு சற்று கீழ்வரை மடித்துவிடப்பட்ட க்ரேகலர் லினன் முழுக்கைச் சட்டையும், அதே கலர்பார்டர்‌ வைத்த வேஷ்ட்டியும் என கம்பீரமாகக் தோற்றமளித்தவன் முகத்தில் பாவையின் பார்வை நிலைக்க, குறும்புப் பார்வையும், கள்ளச்சிரிப்புமாக அவனது பார்வையும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது. 

“என்ன… ஓகே வா. கொஞ்சமாச்சும் தேருவேனா?” எனப் புருவம்‌ உயர்த்திக் கேட்க, பட்டென சுற்றி முற்றியும்‌ பார்த்தவள், ஃபோனை கிட்டத்தட்ட பிடிங்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்.

“என்ன ண்ணே? தடால்னு இப்படி கேட்டுட்டீங்க?” என அருகே இருந்த கருப்பட்டி ஆச்சர்யம் காட்டினான். ஏனெனில் வேலை பார்க்கும் பெண்களிடம் அளவாகப் பேசுபவன், பொம்மியிடம் இப்படிக் கேட்டது அவனுக்கும் ஆச்சர்யமே. 

“இது ஒரு பழைய கதைடா.” என்க,

“அக்காவ முன்னாடியே தெரியுமா?” என்றான் கருப்பட்டி.

“தெரியும்டா, ஆனா அவளுக்கு அது‌ நினைப்பு இருக்கானு கூடத் தெரியலடா?” என்றவன், மென்சிரிப்போடு பூஜை செய்யும் இடத்திற்கு சென்றான். அங்காடியின் நுழைவாயில் பகுதியிலேயே சிறுமேடை போட்டு பிள்ளையாரை வைத்திருந்தனர். அவர்முன் கொழுக்கட்டை, சுண்டல், லட்டு, மற்ற ஸ்வீட்களும், தேங்காய் பழம் என அனைத்து பழங்களும் படைக்கப் பட்டிருந்தது. 

“என்னம்மா, கொரியன் சீரியல் லெவலுக்கெல்லாம் பேசிட்டு, வேட்டி சட்டை தான் எடுத்துட்டு வந்திருக்கீங்க. நாங்கூட ஷார்ட்ஸும் டீசர்ட்டும் எடுத்துட்டு வந்திருப்பீங்கன்ல நினச்சே.”

“க்க்கும்… இப்படியாவது எம்பையன மாப்பிள்ளைக் கோலத்துல பாக்கலாம்னுதான்.” என்று காவேரி நொடித்துக் கொள்ள,

“அதெல்லாம் கூடிய சீக்கிரம் நடக்கும்மா.” என்றான் பொம்மியைப் பார்த்தவாறே. அவளும் இவனைத்தான் எல்லாருக்கும் பின்னால் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.‌ ஏனோ அவனை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை இன்று அவளுக்கும். சொல்பேச்சு கேட்க மனம் மறுத்தது. கொஞ்சம் மனதின் இறுக்கங்களை எல்லாம் தள்ளிவைத்து விட்டு, அவளுக்காய், அவனை ரசிக்கத் தொடங்கிவிட்டாள் பொம்மி.

“என்னமோ பிள்ளையார் முன்னாடி நின்னு வாக்கு சொல்ற மாதிரி சொல்றே. பாக்கலாம் டா சக்தி.” என காவேரி சிலாகித்தார்.

கற்பூர ஆராதனை காண்பித்து அனைவருக்கும் சூடத்தட்டைக் காண்பிக்க, அனைவரும் ஆர்த்தி எடுத்து‌ கண்ணில் ஒற்றிக் கொண்டு விபூதி எடுத்துப் பூசிக்கொண்டனர். பவானி அனைத்துப் பெண்களுக்கும் பூவை எடுத்துக் கொடுக்க, பொம்மியும் வாங்கி தலையில் சொறுகிக் கொண்டாள். 

விஷ்ணுவின் அருகில் வந்தவள், தன் கணவனது கவனம் எங்கோ இருப்பதை உணர்ந்து, பார்வை சென்ற திசையைக் கவனித்தாள். பொம்மி மீதே விஷ்ணுவின் பார்வை இருக்க, முழங்கையால் அவனது விலாவில் இடிக்க,

“என்னடீ…” என்றான் எரிச்சலாய் யோசனை தடைபட்டதில்.

“பார்வையே சரியில்லையே… என்னதிது புதுசா?” என முறைக்க.

“ச்சீச்ச்சீ, ஏன்டி உன்புத்தி இப்படிப் போகுது? இந்தப்புள்ள இங்க வேலைக்கி சேர்ந்ததுல இருந்து பாக்குறேன். எங்கேயோ பாத்திருக்கேன். எங்கேனு தான் தெரியல. அதைத்தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.” என்க, 

“நானே ரெண்டு நாள் எங்கம்மா‌ வீட்டுக்குப் போய்ட்டு வந்தா யாருன்னு கேக்குற ஆளு நீங்க.” என்றவாறு, பவானியும் அவளை நன்கு கவனித்தாள். 

“எனக்கு எங்கேயும் பாத்த ஞாபகம் இல்ல ப்பா. ஆனா நல்லா‌ லட்சணமா, அம்சமா இருக்கா. யாரு எவருன்னு விசாரிங்க மாமா.” என்று கூறிவிட்டு, அடுத்து பிரசாதம் கொடுக்க சென்று விட்டாள்.

கருப்பட்டி லட்டு பாக்சையும், ரசகுல்லா பாக்சையும் இரண்டு கைகளில் ஏந்திக் கொண்டு அனைவருக்கும் விநியோகிக்க, ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டனர். 

பொம்மியிடம் வந்தவன் அவளிடமும் பாக்சை நீட்ட, லட்டை எடுக்கப் போனவள் கை ஒருகணம் நின்றது.

‘லட்டு மாதிரி இருக்க. விட்டுட்டுப் போகவே மனசில்ல.’ நினைவில் ஒலிக்க, லட்டுவை தவிர்த்து விட்டு ரசகுல்லா வை எடுத்துக் கொண்டாள். 

ஜீரா உதட்டில் படிய, ரசகுல்லா உண்பவளைப் பார்த்து, அவனும் பார்வையால் பசியாற, ‘இவ லட்டையே எடுத்திருக்கலாம். சாவடிக்கிறா.’ என்றது அவனது மனம். 

இதழில் கதை எழுதும் நேரமிது

இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆ….

மனதில் சுகம் மலரும் மாலையிது

மான் விழி மயங்குது ஆ…..

மனதில் சுகம் மலரும் மாலையிது

‘இவன்‌வேற‌ டைமிங்ல பாட்டு போட்டுக் கொல்றானே.’ எனத் தவித்து தான்‌ போனான்.

இத்தனை வருடம் கட்டிக்காத்த கட்டுப்பாடுகள் எல்லாம், கட்டுத்தறி அறுத்த காளையாய் வாடிவாசல் தாண்ட எத்தனிக்க,

“ஊஃப்ப்.” என ஊதியவன், மீசைதடவி கழுத்து நீவியவன், சுற்றம் உணர்ந்து ஆசைக்கு அணைகட்டினான் கல்லணைக்காரனாய்.

ராஜ ராஜ

சோழன் நான் எனை

ஆளும் காதல் தேசம்

நீ தான் பூவே காதல்

தீவே மண் மீது சொர்க்கம்

வந்து பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு

உண்டானதே

கள்ளூர பார்க்கும்

பார்வை உள்ளூர பாயுமே

துள்ளாமல் துள்ளும்

உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு

கொல்லாமல் கொல்லுதே

பெண் பாவை கண்கள் என்று

பொய் சொல்லுதே

முந்தானை மூடும்

ராணி செல்வாக்கிலே என்

காதல் கண்கள் போகும்

பல்லாக்கிலே தேனோடை

ஓரமே நீராடும் நேரமே

புல்லாங்குழல் தள்ளாடுமே

பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ

சோழன் நான் எனை

ஆளும் காதல் தேசம்

நீ தான்

பாடலின் வரிகளில், பொம்மியின் பார்வையும், சக்தியின் பார்வையும் சந்திக்க, அங்கே கள்ளூர பார்த்த பார்வை உள்ளூர ஊடுறுவி, அவளது மனச்சிறையையும் சற்று நேரம்‌ தகர்த்து எறிந்தது. கூடுவிட்டு சிறிது நேரம் உல்லாசமாக பறக்க எண்ணினாள் அவனது பைங்கிளி. இது நிலைக்காது, கிடைக்காது எனத் தெரிந்தும் அதை அனுபவிக்க ஆசை கொண்டது மனம். 

ஏனோ அன்று அவளும் சற்று மனம் இளகித்தான் இருந்தாள்… கைபேசி ஒலிக்கும் வரை.

இதுவரைத் தனக்கெனத் தனி உலகில் தன்னைமறந்து சஞ்சரித்தவள், தந்தையின் அழைப்பைப் பார்த்தவுடன், தனது நிதர்சனம் உரைக்க, சட்டென நீர் தெளித்த பொங்கிய பாலாய், உணர்வுகள் அடங்க, நிதானத்திற்கு வந்தவள், ஃபோனோடு ஓரமாக ஒதுங்கியவள், “ஹலோ… அப்பா, இதோ கெளம்பிட்டேன். பூஜை முடிஞ்சது. வர்றேம் ப்பா. அம்மாகிட்ட சொல்லிடுங்க.” என்றவள், 

‘சேலையை மாற்றினால் தான் வண்டியோட்ட முடியும்.’ என எண்ணிக்கொண்டு மாற்றுடையை எடுத்துக் கொண்டு வேகமாகப் பின்னறைக்குச் சென்றாள். அவளுக்கு இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டுமெனத் தோன்றியது. அவன் முகம் பார்க்கப்பார்க்க தான் நிலை தடுமாறுவது நன்கு தெரிந்தது.

“கருப்பட்டி எல்லாருக்கும் ஸ்வீட் பாக்ஸும், கிஃப்ட்டும் எடுத்துக் கொடுங்க டா. இதோ வந்துர்றேன்,” என்றான். வருடாவருடம் விநாயகர் சதுர்த்தி அன்று வழக்கமாக வழங்குவது தான். அனைவரும் அதில் கவனமாக, அவள் தனது அறைக்குச் செல்வதைத் பார்த்துவிட்டு வேகமாகப் பின்தொடர்ந்தான்.

இன்று ஏதோ ஒரு அவசரம், அவளிடம் தனது மனதைத் திறக்க வேண்டும் என்றது. அக்காவின் கோபமோ, அன்னையின் ஆசையோ, அல்லது அவளைப்பார்த்து மயங்கிய மயக்கமோ, ஏதோ ஒன்று உந்த, அவளைப் பின்தொடர்ந்தான்.

அறைக்குள் சென்றவள், தாழ்போட திரும்ப, அவனும் பின்தொடர்ந்ததைப் பார்த்து, மனம் பதைபதைத்தாலும், பதட்டப்படவில்லை. எதையும் சமாளிக்கும் நிலைக்கு நிதானித்து விட்டாள்.

“என்ன சார், ஏதாவது எடுக்கணுமா?” என்றாள் இயல்பாக. அவன்தான் குழம்பிப் போனான். இப்பொழுது இவளது பார்வையில் எதுவும் தெரியவில்லை. ஒரு முதலாளியாகத் தன்னைப் பார்ப்பவளிடம் என்ன பேசுவது என யோசித்தவன், ‘இன்னும் எத்தனை‌ நாளைக்கி வானத்தைப் பார்த்து கனவு காண்பது.’ என எண்ணியவன்,

“உன்கிட்ட பேசணும்.” என்றான்.

“சார் லேட்டாகிருச்சு. வீட்ல பயப்படுவாங்க. எதுனாலும் நாளைக்கிப் பேசிக்கலாம்.” என்றாள். அவன் என்ன‌ கேட்பான் என யூகித்து அதைத் தவிர்க்க நினைத்தவளாய்.

“இல்ல… இன்னைக்கே பேசியாகணும். ஒரு நேரம் இருக்கிறமாதிரி இன்னொரு நேரம் நீ இருக்க மாட்டேங்கிற. என்னாலயும் இன்னும் எத்தனை நாளைக்கு விட்டத்தைப்  பாத்துட்டு கனவு காண முடியும். அந்த வயசெல்லாம் வேற தாண்டியாச்சு.” என்க,

“அதுக்கு நான் என்ன சார் பண்ணமுடியும்.” என்றாள்.

“நானென்ன இவ்ளோ நேரம், காக்கா கதையா சொல்லிட்டிருந்தே. நீ யாரு எவருன்னு உன் பேருகூடத் தெரியாதப்பவே உன்னையப் பிடிச்சுருக்குனு சொன்னவன். இப்ப என்ன சொல்ல வர்றேன்னு தெரியலியா?” எனக் கோபமாகக் கேட்க,

“எப்ப… என்ன… சொன்னீங்க சார். இப்ப மட்டும் என்னையப் பத்தி என்ன தெரியும்?”

“உன் பேரு, உன் படிப்புக்காக இங்க வந்தது, நீ உங்க தாத்தா பாட்டியோட தங்கியிருக்கிறது எல்லாம் தெரியும்.”

அவன் கூறியதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என எண்ணினாள். அவனது யூகம் படிப்பிற்காக ஊரைவிட்டு வந்திருப்பதாகத் தான்.

“ஆரம்பமே தப்பா இருக்கே சார். அவங்க‌ என்னோட தாத்தா பாட்டி இல்ல. அவங்க தான் என்னைப் பெத்தவங்க. புதுசா பாக்குறவங்களுக்கு அப்படித்தான் தோணும். உங்களுக்கும் அதுமாதிரி தெரிஞ்சதுல தப்பில்ல.” என்க,

“ஹேஏ… நீ தானே ஃபர்ஸ்ட்டைம் நான் உன்னைப் பாத்தப்ப தாத்தானு சொன்னே.” என்றான்.

விரக்தியாகச் சிரித்தவள், “அதெல்லாம் இப்ப எதுக்கு சார். நீங்க ஏதோ மனசுல நினைச்சுட்டு இருக்கீங்கனு தெரியுது. அதெல்லாம் சரிப்பட்டு வராது சார்.” என்றவள் புடவையைக் கூட மாற்றாமல் வேகமாக வெளியேறிவிட்டாள்.

‘நான் என்ன பண்ணமுடியும்னு கேட்டவதான், நீங்க ஏதோ மனசுல நினச்சிட்டு இருக்கீங்கனு வேற கரெக்டா கண்டுபிடிச்சு சொல்லிட்டுப்போறா. யாரைக் கேணயனாக்குறா.’ என‌ நினைத்து கோபம் தலைக்கேறியது.

வந்தவள் காவேரியிடமும், பவானியிடமும் மரியாதை நிமித்தமாக‌ சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள். நேரமும் கடந்திருக்க, புடவையில் வண்டி ஓட்டிச் சென்றவளைப் பார்த்தவனது கோபம் தனிய, கருப்பட்டியை அழைத்து, யாருக்கும் தெரியாமல் அவளை ஃபாலோ செய்து வீடுவரை விட்டு வரச் சொன்னான். 

அன்றைய நினைவில் இருந்தவர்களுக்கு, இது கடை என உரைக்க, அவளை விட்டு விலகி பக்கத்து ஷோபாவில் அமர்ந்தவன், 

“உனக்கும் என்னைப் பிடிச்சிருக்குனு நல்லாத் தெரியுது. அப்புறம் ஏன் மறுக்கற.” என்றான்.

“நான் சொன்னேனா சார் உங்களைப் பிடிச்சிருக்குனு. நீங்களா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா நானா பொறுப்பு?’ என்று எகிறினாள். 

“ஒத்துக்க மாட்டேல்ல?” என்றவன்,

தனது கைபேசியில் இருந்து இவளுக்கு அழைப்பு விட… அதில் அவனது பெயரில் அழைப்பு வந்தது.

“என்னதிது.” என்றான், அவளது கையிலிருந்த ஃபோனைக் கண்ணால் காட்டி.

“எது‌‌ சார்?” என்றாள்‌ அவளும்.

“மொதல்ல சார் னு கூப்புடறதை நிப்பாட்டு. நீ எப்படிக் கூப்பிட ஆசைப்பட்டியோ அப்படியே கூப்பிடு.” என்க.

“நான் எப்படிக் கூப்பிட ஆசைப்படுறேன்னு, உங்களுக்கு எப்படி சார் தெரியும்? எல்லாம் தெரிஞ்சவராட்டம் பேசுறீங்க.”

“உன் ஃபோன்ல பாரு தெரியும். எல்லாரும் என்‌‌பேர சக்தினோ, இல்ல வேலபாக்குற பிள்ளைக சக்தி அண்ணானு தான்‌ பதிஞ்சு வச்சிருப்பாங்க. ஆனா‌ உனக்கு மட்டும் தான் நான் மாரனாத் தெரிஞ்சிருக்கே… அதாவது மன்மதனா.” என்றான் சிரித்தவாறே. அன்றும் இந்தப் பெயரைப் பார்த்துதான் அவள் மனதில் அவன் இருப்பதையும் உறுதி செய்தான். 

அவளும் அவன் பெயரை‌ மாரன் என்றுதான் பதிந்து வைத்திருந்தாள். 

“இதுவும் எதேச்சையா பதிஞ்சு வச்சதுனு சொல்லப்போறீயா. அப்ப அந்த ரிங்டோன்… கைக்குட்டை காதல்கடிதம்னு… அதுவும் எதேச்சையா செட் பண்ணது… ம்ம்ம்… அந்த கர்சீஃப் ஞாபகமாத்தானே அந்தப்பாட்டும்.” எனக் கேட்பவனிடம் என்ன சொல்லுவாள் பேதை. 

அமர்ந்திருந்தவள் எழுந்து கொண்டாள். ‘இதை இப்படியே வளறவிடுவது இருவருக்குமே நல்லதுக்கில்லை.’ என எண்ணியவள், கைகளைக் கட்டிக் கொண்டு அவனை நேருக்கு நேராகப் பார்த்து நின்றாள்.

“தனக்குத் தோணுற மாதிரி எப்படி‌வேணும்னாலும் பதிஞ்சு வச்சுக்கலாம் சார். இந்த தல, தளபதின்னு எல்லாம் சொல்றதில்லையா. அந்த மாதிரித்தான் இதுவும். இதைப்‌ போய் நீங்க‌ வேற‌மாதிரி நினச்சுட்டீங்க போல. ஒரு ரிங்டோனையும், பேரையும்‌வச்சே லவ் பண்றேனு முடிவுக்கு வர்ற அளவுக்கு, நீங்க விவரம் இல்லாதவங்களா சார்.” என்க,

“இதுக்கு நீ முட்டாளான்னு  நேரடியாகவே கேட்டிருக்கலாம். அப்ப… இது காதல் இல்ல.”

“கண்டிப்பா இல்ல சார். அப்படியே நாம ரெண்டு பெரும் லவ்‌ பண்ணினாலும், அது காதல் லிஸ்ட்டுல வராது சார்.” என்றவளை சக்தி புருவம் சுருக்கிப் பார்க்க,

அவனைப் போலவே ஷோஃபாவின் இருபுறமும்‌ கைகளை ஊன்றியவள், அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். ஒருகணம் கண்களை இறுக மூடி, உதடு மடித்தவள், அவனது காதருகில் குனிந்து,

“அது கள்… கள்ளக்காதல் லிஸ்ட்டுல வந்திரும் மாறன்.” என்றாள்‌ கிசுகிசுப்பாக.

 

error: Content is protected !!