பொன்மகள் வந்தாள்.8.🌹

பொன்மகள் வந்தாள்.8.🌹

PMV.8.

மில்லில் இருந்த சாமிப்படங்களுக்கு முன் இருகரம் குவித்து ஒருமனதாக தெய்வத்தைத் தொழுது நின்றவளைப் பார்த்த பொழுது, முகத்தில் இருந்த குழந்தைத்தனம் எல்லாம், எங்கே போனது என்ற எண்ணம் வந்தது சக்திக்கு… ஒழிந்து கொண்டது போலும் என எண்ணிக் கொண்டான். தாவணி பாவாடையில் மங்களகரமாக தெய்வீகமாகக் காட்சியளித்தாள். இப்பொழுது அவளைப் பார்த்தவனுக்குக் கன்னம் கிள்ளிக் கொஞ்சத் தோன்றவில்லை. தெய்வீக அழகோடு செப்புச் சிலையென இருந்தவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கண்திறந்தவள்… எதிரில் நின்ற சக்தியைப் பார்த்து புன்னகைத்தாள். 

அவளது தந்தை கூறியது போல, மூட்டைகளின் வரிசையில் இருந்த ஐந்து கிலோ அரிசிப் பை ஒன்றைத் தூக்கியவள், அவனிடம் கொடுக்க… அவனோ வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, முழங்கை வலியில் தூக்கிக் கொடுக்க முடியாமல் பை நழுவப்பார்க்க… வேகமாகப் தாங்கிப் பிடித்தான். 

“தவறுறது நல்ல சகுணம்னு சொல்லுவாங்க. வாழ்த்துக்கள்.” என்றாள்.

“தாங்க்ஸ் மா.” என்றான் அவனும்.

“இது புது அரிசி. பொங்கலுக்கு நல்லா இருக்கும் தம்பி. பொங்கல் வச்சு சாமிக்குப் படைச்சுட்டு, வியாபாரம் ஆரம்பிக்கப்பா.” எனக் கூறிக்கொண்டே சிதம்பரமும் வந்தார்.

எப்பொழுதும் புதுப் பச்சரிசி தான் பொங்கலுக்கு உகந்தது. பழைய புழுங்கல் அரிசி தான் சோற்றுக்கு சரிப்பட்டு வரும். புது அரிசி சோறு உடையும், குழையும். பொன்னி அரிசி எப்பொழுதும் சுடுசோற்றுக்கு உகந்தது. பழைய கஞ்சிக்கு  ஐ.ஆர்.இருபது மாதிரியான அரிசி தான் சரிப்படும். (மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்புக்கு ரேஷன் கடை அரிசி மாதிரி பொன்னி அரிசிகூட சுவை கொடுக்காதுங்கோ…) வயசுக்கு வந்த பொண்ணுக்கு புட்டு அவிக்க கார அரிசி, புதுமாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை சம்பா, அவசர சமையலுக்கு அரைவேக்காட்டு அரிசி, பிரியாணிக்கு சீரகச்சம்பா. எவ்வளவுக்கு எவ்வளவு சோறு வேகத் தாமதமாகிறதோ அந்த அளவுக்கு அரிசி பழையது என அர்த்தம். 

“ரொம்ப நன்றிங்க…” என சிதம்பரத்திடமும் கூறிக்கொண்டே  சக்தி அரிசிப்பையை வாங்கிக் கொள்ள,

“அதெல்லாம் இருக்கட்டும். காசை எடுங்க.” எனக் கைநீட்டினாள் பொம்மி.

‘இதுல எல்லாம் விவரம் தான் போல.’ என எண்ணிக் கொண்டான்.

“என்ன அப்படிப் பாக்குறீங்க. இந்தக் காசைக் கொண்டுபோய் உங்க பேர்ல உண்டியல்ல போட்டுர்றே… கொடுங்க.” எனக் கேட்க,

“அதுக்கு பேரு தெரிய வேண்டாமா?”

“சொல்லுங்க… தெரிஞ்சுக்கிறே…”

“சக்திமாறன்…” என்றான் மந்தகாசமாய்.

“பொம்மி கையால வியாபாரம் பண்ற காசு உண்டியலுக்குத்தான் போகும். அதுக்குதான் விடாப்புடியாக் கேக்குதுப்பா.” என்றார் சிதம்பரமும்.

“இப்ப தெரியுது. ஏன் அஞ்சு கிலோ பைய எடுத்துத் தரச் சொன்னீங்கன்னு. இருபத்தஞ்சு கிலோவா இருந்தா அம்புட்டும்ல உண்டியலுக்குப் போகும்.” எனக் கூறிவிட்டு விஷ்ணு சிரித்தான்.

சக்தியும் ஐநூறு ரூபாய்த்தாளை எடுத்துக் கொடுக்க, கணக்குப் பார்த்து மீதியைக் கொடுத்தாள். 

“பரவாயில்லம்மா… இதையும் உண்டியல்ல போட்டுறு.” என சக்தி கூற,

“இது வியாபாரம். ரெண்டையும் போட்டுக் குழப்பக் கூடாது. கணக்குவழக்கு சரியா இருக்கணும். வேணும்னா உங்க சாமிக்கப் போய் இதைப் போடுங்க.” என்று கூறியவள் சில்லரையை சரிபார்த்துக் கொடுத்தாள்.

அவள் தொட்டுக் கொடுத்த நேரமோ என்னவோ இவன் தொட்டதெல்லாம் துலங்கியது. ஒருதளம் இரண்டாகியது. இரண்டு மூன்று தளமாகியது. காவேரி மளிகைக்கடை காவேரி ஸ்டோர்ஸ் என மாறியது. முதலாளியும் நானே தொழிலாளியும் நானே என இருந்தவன் முதலாளி அந்தஸ்த்திற்கு உயர்ந்தான். அவனை நம்பியும் பல குடும்பங்கள்

நாமக்காக யாரும் காத்திருக்கலாம். நாமும் யாருக்காக வேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால் நேரமும் காலமும் யாருக்காகவும், எதற்காகவும், எப்பொழுதும் காத்திருப்பதில்லை. கால ஓட்டத்தில் பல பின்தங்கிப்போவதும் உண்டு.

போன தலைமுறை வரைக்குமே ஆரம்ப கால கஷ்டங்கள் என்று ஒன்று இருந்தது. திருமணம் என்றதும் மாப்பிள்ளையின் குடும்பப் பிண்ணனி ஆராயப்பட்டது. குடும்பம்  எப்படிப்பட்டது. குடும்பத்தார் குணநலம் எப்படி. ஊருக்குள் அந்தக் குடும்பத்தினரின் மரியாதை எப்படி என வம்சாவழி ஆராயப்பட்டது. மானம் மரியாதையோடு நம்ம வீட்டுப் பெண்ணை கொண்டு செலுத்துவானா? என்றெல்லாம் பார்த்தனர். 

இன்றும் ஆராயப்படுகிறது… மாப்பிள்ளையின் பொருளாதாரப் பிண்ணனி மட்டுமே. வெல் செட்டில்டு மாப்பிள்ளை தேடப்படுகிறது. வீடு, கார், பேங்க் பேலன்ஸ், இல்லையெனில் ஐந்து அல்லது ஆறு லகரச் சம்பளம் எனப் பார்க்கும் பொழுது இளமை தொலைத்த ஆணும், இளமையோடு போராடி, சகித்து, வெறுத்து இனி என்ன வேண்டிக்கெடக்கு என எண்ணம் வந்த பெண்ணும் என இணை சேர்க்கப்படுகிறது. இளஞ்செடிதான் விரைவில் வேர் பிடிக்கும். முற்றல் மரம் பிடிங்கி நடுவதும் கடினம். வேர்பிடித்து தழைய ஆரம்பிப்பதற்குள், சில பட்டுப் போகிறது. பல சலித்து விடுகிறது.  

சென்ற தலைமுறையினர் வாழ்க்கை ஓட்டத்தில் வாழ்ந்து கொண்டே கஷ்டம் நஷ்டம் அனைத்தும் அனுபவித்து வாழ்க்கையில் செட்டில் ஆக, நாற்பதுகளைக் கடந்திருப்பர். குருவிசேக்குற மாதிரி சேத்து வச்சு நானும் உங்க அப்பாவும் இந்த வீட்டைக் கட்டினோம். உனக்கு நகை சேர்த்தோம். உங்க அண்ணனைப் படிக்க வைத்தோம்… என பிள்ளைகளிடம் கூறப்பட்டது. ஆனால் இன்று எல்லாம் சேர்த்து விட்டுதான் திருமணம் எனப் பார்க்கப்படுகிறது. தாங்கள் பட்ட ஆரம்பகாலக் கஷ்டங்களை, தமது பிள்ளைகள் படக்கூடாது என நினைக்கும் பெற்றோரின் மனப்பான்மைதான் இதற்கு எல்லாம் காரணம்.‌ தேவை ஒன்று இருந்து அதை நோக்கிப் பயணிக்கும் பொழுது ஒருவருக்கொருவர் கைகோர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. நிர்ப்பந்தம் பிணைப்பை ஏற்படுத்தியது. பிணைப்பு உனக்கு நான் எனக்கு நீ என்ற பிடிமானம் கொடுத்தது. அந்தப்பிடிமானமே இறுதிவரை இருவரையும் கொண்டு செலுத்தியது. யாருக்காக வாழ்ந்தோம் எனத் திரும்பிப் பார்க்கும் பொழுது, வளர்ந்து நிமிர்ந்து நிற்கும் மகனும், பூத்துக் காய்த்து, கனியும் கொப்புமாக இருக்கும் பெண்ணும் கண்முன் தெரிய மனதில் ஒரு திருப்தி ஏற்பட்டது.

இன்று எல்லாம் இருந்தும் எப்பொழுதும் ஒரு பற்றாக்குறை வாழ்க்கைதான். திருப்தியின்மைதான். நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை விளம்பரங்களும், மீடியாக்களும் தீர்மானிக்கின்றன. ப்ரெஸ்டீஜ் குக்கர் வேணாங்கறவன் பொண்டாட்டிய நேசிக்கத் தெரியாதவன்னு சொல்லிக் கொடுக்குது. 

அர்ஜுனனுக்கு பறவையின் கண் ஒன்றே  இலக்கு என்பது போல், உறவினரின் முன் தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு, சக்தியும் தனக்குதானே நடத்திக் கொண்ட ஓட்டப்பந்தயத்தில், எல்லைக்கோடு மட்டுமே ஒரே நோக்கம் எனக் கொண்டு ஓடினான். அது முடிவிலியாக இருந்தது. 

கடைசி ரேங்க் எடுக்கும் பிள்ளையை விட, முதல் ரேங்க் எடுக்கும் பிள்ளைதான் எப்பொழுதும், பதட்டமாகவே இருக்கும். கடைசி ரேங்க் எடுக்கும் மாணவனுக்கு தேர்ச்சி மட்டுமே குறி. முப்பத்தைந்து மார்க் எடுத்தும் தேர்ச்சி பெறலாம். எழுபது எடுத்தும் தேர்ச்சி பெறலாம். ஆனால் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராட  வேண்டுமே. நூற்றுக்கு நூறு எடுத்தே ஆக வேண்டும்.

சக்தியும் ஒவ்வொரு படியாக முன்னேற, அதைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதிலிருந்து அடுத்தபடிக்கு முன்னேற வேண்டும் என்ற உந்துதலும் அவனுக்கு, எல்லைக்கோட்டை நீட்டித்துக் கொண்டே சென்றது. 

வெற்றிக்காக சிலவற்றை காவு கொடுக்க வேண்டியிருந்தது. ஆசையை… விருப்பு வெறுப்புகளை… காதலை…

கால ஓட்டத்தில் அவனது, கண்டதும் காதல் கொஞ்சம் பின்தங்கி விட்டது. அவ்வப்பொழுது அலையடித்து மேலெழும்பும். முதன்முதலாகப் பார்த்த பெண்ணிடம் அன்று தான் நடந்து கொண்டதை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொள்வான். இதை அவள் நினைவில் வைத்திருப்பாளா என்ற எண்ணமும் கூடவே வரும்.

புதுப் பொருட்களை மேலே போடப்போட பழைய பொருள் அடிதங்கி விடுவது போல் அவளது நினைப்பும் மனதின் அடி ஆழத்திற்குச் சென்று விட்டது. வெளியேறிவிடவில்லை. 

எது ஒன்றுக்கும் காலநேரம் கூடிவர வேண்டும் என்பார்கள். ஒரு விதை உயிர் பிடித்து முளைவிட்டு வெளிவரும் வரைக்கும் தான் அதனுடைய செயல் மெதுவாக இருப்பதுபோல் தோன்றும். வேர்பிடித்து ஸ்திரமாக ஊன்றி நின்று விட்டால் அதன் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. 

ஏனோ இன்று வெகு நாட்கள் கழித்து அவள் நினைவாகவே இருந்தது சக்திக்கு. அவள் கண்மூடி வணங்கி நின்ற முகம் நினைவில் ஆடியது. கல்லாப் பெட்டியைத் திறந்தவனுக்கு மஞ்சள்துணியில் முடிந்து வைத்த காணிக்கைப் பணம் கண்ணில் பட்டது. அன்று அவள் கொடுத்த மீதிப்பணம்தான். அன்று வந்தவுடன் சாமிக்கென முடிந்து வைத்தான். அதன்பிறகு எத்தனையோமுறை குலதெய்வக் கோயிலுக்கு சென்று வந்திருப்பான். ஆனால் ஏனோ அதை எடுத்துச் செல்லமட்டும் மனம் வரவில்லை. நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது.

இன்று வங்கிக்குச் செல்ல வேண்டும். அம்மாவிற்கு வந்த மஞ்சக்காணி நிலத்தில் அரிசிமில் கட்டும் ஆசை வந்தது. அதற்கான திட்டம் தயாரித்து வேலையைத் துவங்கி விட்டான். வங்கிக் கடனிற்கு விண்ணப்பித்து இருக்கிறான். அதற்கு ஒப்புதல் வரவேண்டும். வங்கியில் அதிக கமிஷனுக்காக இழுத்தடிப்பதாகப் பட்டது.

மனம் சஞ்சலமாக இருக்க கோவிலுக்கு சென்று வரலாமெனக் கிளம்பினான். 

உலகிற்கே தாயுமானவர் சன்னதியில், கருவரை முன் கைகூப்பி கண்மூடி நின்றான். கண்திறந்தவன்… எதிர்வரிசையில் கண்மூடி நின்றிருந்தவளைப் பார்த்தவன்… ஒருகணம் நம்பமுடியாமல் புருவம் சுருக்க, சட்டென ஆச்சர்யமானான். அவள் தானா என ஒருகணம் சந்தேகம். அதே முகம். கண்மூடிக் கரம் குவித்து ஒருமனதாகத் தொழுது நின்றிருந்தாள். அன்று தாவணி பாவாடையில் இருந்தவளை இன்று சுடிதாரில் பார்க்கிறான். நினைத்துக் கொண்டே இருந்ததினால் வந்த மாயையோ என ஒருகணம் தோன்றியது. கொஞ்சம் மெலிந்து, சற்று பெரிய பெண்ணாக, வளத்தி கொஞ்சம் அதிகமாகி இருப்பது போல் தோன்றியது.  தஞ்சாவூரில் பார்த்தவளை நான்கு வருடங்கள் கழித்து திருச்சியில் சந்திப்போமென நினைக்கவில்லை. உற்றுக் கவனிக்கப்படுகிறோம் என உணர்ந்ததாலோ என்னவோ, கண்மூடிய நிலையிலும் புருவம் சுருக்கினாள். சக்தி பட்டென கண்களை மூடிக்கொண்டான். 

கண்திறந்தவளது பார்வையும் எதிரில் நின்றவனது மீது படிய எங்கேயோ பார்த்த ஞாபகம், நினைவில் தோன்றி, புருவம் சுருக்க… கேள்விக்குறிகாட்டி அடுத்த கணமே ஆச்சர்யக்குறியைத் தத்தெடுத்தது.

முன்னேற்றமும் ஆளுமையும் தந்த தோற்ற மாற்றம் அவனில். அன்றைவிட இன்னும் தோள்கள் அகன்று, வெற்றியின் தேஜஸோடு கம்பீரமாக இருப்பதாகப் பட்டது. ஆனால் இவனைக் கண்டு கொண்டதற்கான எந்த அறிகுறியையும் முகம் வெளிப்படுத்தவில்லை.

இவனது முகமும் அசைவதைப் பார்த்தவளும் கண்களை மூடிக் கொண்டாள். இருவரும் கண்மூடி நிற்க, “ஆரத்தி ஒத்திக்கோங்கோ.” ஐயரின் குரல்கேட்டு இருவரும் கண் திறக்க, 

இருவர் பார்வையும் ஒரே நேர் கோட்டில். இவனுக்கு விலக்க விருப்பமில்லை. அவளும் விலக்க முற்படவில்லை.

அவள் ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். இவனும் தட்டில் காசைப் போட்டுவிட்டு தொட்டுக் கும்பிட்டான். 

“இந்தாம்மா… காசுபோடு.” என சிதம்பரம் ஐம்பது ரூபாய்த்தாளை எடுத்துக் கொடுக்க அவளும் தட்சணை போட்டாள். அப்பொழுதுதான் அருகில் நின்ற சிதம்பரத்தைக் கவனித்தான். நான்கு வருடத்தில் வயோதிகம் கூடியிருப்பதாகப் பட்டது.

அர்ச்சனை செய்த தேங்காய் பழக் கவரை ஐயர் இருவரிடமும் கொடுக்க, வாங்கிக் கொண்டனர். பொம்மி குனிந்து தன தந்தையிடம் ஏதோ கூற,

“தம்பி அர்ச்சனைப் பை மாறிடுச்சு போல. இது தான் உங்க பை. அது எங்களோடது.” எனக்கூற, அவனும் பையை சரிபார்த்தான்.

“இந்தாங்க… ஐயர் மாத்திட்டார் போல.” என்றவாறு அவளிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்ததை வாங்க… பை தவறியது. 

“கவனமா கொடு பொம்மி.” என சிதம்பரம் கூற,

“தவறுறது நல்ல சகுனம் தாங்க.” என்றான்.‌.. வேகமாகப் பிடித்துக் கொண்டே.

“அதில்லப்பா… கீழே விழுந்திருந்தா உங்களுக்கும் சங்கட்டம் தானே?” என்க,

“இவங்க கையால வாங்குனதே நல்ல சகுனம் தாங்க.” என்றவன் வார்த்தைகளைக் கேட்டவளது முகமும், மனமும் ஒருசேரக்‌ கசங்கி தெளிந்தது.

“எப்படி இருக்கீங்க?” என்றான். அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை.

“உங்களுக்கு, என்னைய நினப்பு இல்ல போலிருக்கு. நானும், எங்க மாமாவும் ஒருதடவை உங்க மில்லுக்கு வந்திருக்கோம்.” என்றான். அவரும் யோசித்துப் பார்த்தார். நினைவுக்கு வரவில்லை. எத்தனேயோ பேர் வியாபாரம் செய்ய வந்திருப்பார்கள். அவர்களில் இவனும் ஒருவன். அதற்குப் பின் அவரது வாழ்வில் எத்தனையோ நடந்தேறிவிட்டது. இதில் இவன் எங்கே நினைவில் இருக்கப் போகிறான்.

‘அப்ப… இவளும் நம்மள மறந்திருப்பாளோ?’  சிறுபிள்ளையாய் மனம் சுணங்கியது.

“பேரு சக்திமாறன். நான் சைக்கிள்ல விழுந்து எந்திரிச்சு வந்தேன்ல, அன்னைக்கி வந்தாங்க.” என்றாள் அவள். 

“அவ்வளவுக்கா ஞாபகம் வரலை.” என்றார் சிதம்பரமும் சற்று யோசித்துவிட்டு. 

அவனுக்கு அது ஒன்றும் பெரிதாகப்படவில்லை. ஏனெனில் அவள் மறக்கவில்லை என்பதே அவனுக்குள் இன்பச்சாரல் வீசிக்கொண்டிருந்ததே. ஏதோ… விளையாட்டாய், முறைப் பெண்களிடம் விடலைப்பையன்கள், கட்டிக்கிறியா எனக்கேட்பது போல், அன்று ‘மறந்துறாதே’ எனக் கூறிவிட்டு வந்தான் தானே. நினைவிருக்குமா என யோசித்துக் கொண்டிருக்க, பெயரோடு நினைவில் வைத்திருக்கிறாள் என நினைக்கையிலேயே, சிறகில்லாமல் பறந்தான். இப்பொழுதும், அவனுக்கு ஆச்சர்யம்தான். அதென்ன இவளைப் பார்த்தால் மட்டும் தன்னையும் மறந்து, இருக்குமிடம் எல்லாம் மறந்து விடுகிறது. 

“திருச்சிக்கு என்ன வேலையா வந்தீங்க?” என்றான். அவர்கள் தஞ்சை என்பதுதான் இவனுக்குத் தெரியுமே. வேறு ஏதோ வேலையாக வந்திருப்பார்கள் என நினைத்தான்.

“பொம்மி இங்கதாம்ப்பா படிச்சுது” என்றார்.

“அப்ப… படிப்ப முடிச்சிருச்சா. எந்த காலேஜ்?”

“நேஷனல் காலேஜ்ல பி.காம். இந்த வருஷம் தான் முடிச்சுது.” என்றார். 

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இங்கு தான் இருந்திருக்கிறார்கள். ‘எப்படிப் பார்க்காமல் போனோம்.’ என நொந்து கொண்டான். 

“அப்படின்னா மறுபடியும் தஞ்சாவூர்க்கு போயிருவீங்களா?” என்றான். அவன் கவலை அவனுக்கு. படிப்பிற்காக இங்கு வந்திருப்பதாகத் தானாக ஊகித்துக் கொண்டான். பேத்திக்காக அவரும் வந்திருப்பார் போலும் என‌ நினைத்துக் கொண்டான். இல்லையெனில் அங்கிருந்து தோட்டம், மில்லை எல்லாம் விட்டுவிட்டு இங்கு எதற்கு வரவேண்டும். 

“இல்லப்பா… இங்கேயே பொம்மிக்கு ஏதாவது வேலை பாக்கலாம்னு இருக்கேன்.” என்று அவன் எண்ணத்தில் பால்வார்க்க, தானாக வந்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா என்ன?

“வெளியே எங்கேயும் தேட வேண்டாங்க. நம்ம ஸ்டோர்ஸுக்கு வேணும்னா அனுப்புங்க. அக்கவுண்ட்ஸ் பார்க்கட்டும்.” என்க,

“இப்ப தாம்ப்பா படிப்பு முடிச்சுருக்கு. இன்னும் அனுபவம் இல்ல. பரவாயில்லையா?”

“இதுல என்னங்க இருக்கு. எல்லாமே கத்துக்கறதுல தான் இருக்கு. அனுப்பி வைங்க.” என்றவன் தனது கார்டையும் எடுத்து அவரிடம் கொடுத்தான். 

“ரொம்ப சந்தோஷம்ப்பா… கோயில்ல வச்சு நல்லது சொல்லிருக்க. நானும் வீட்ல பேசிட்டு அனுப்பி‌வைக்கிறேன்.” என்றார்.

இன்று யோசிக்கிறான். அன்றே அவளை ஊன்றிக் கவனித்திருக்க வேண்டுமோ? பார்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவ்வளவு பேசியவள், அன்று இருவரும் பேசிக்கொண்டிருக்க, அவள் வெறும் பார்வையாளராக மட்டும்தான் நின்று கொண்டிருந்தாள். இவர்கள் சம்பாஷனையில் கலந்து கொள்ளவே இல்லை. நொடிக்கொரு பாவனை காட்டிய கோழிக்குண்டு கண்களின் பார்வையில் ஒரு நிதானம் இருந்தது. இவன் தான் அடிக்கடி அவள்மீது பார்வையைப் ஓட்டினானே ஒழிய, அவள் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதன்பிறகு சிதம்பரமும் ஒருதடவை வந்து கடையைப் பார்த்து விட்டு, நம்பிக்கையானவர்கள் எனத் தெரிந்து கொண்டு மகளை அனுப்பி வைத்தார். இங்கு வந்த பிறகும் தானுண்டு, தன்‌வேலையுண்டு என்று‌தான் இருந்தாள். முதலில் கடையில் இருப்பவர்களோடு பழகட்டும் என்று மேற்பார்வை‌ மட்டும் பார்க்கச் சொன்னான். மற்றவர்களிடம் சகஜமாகப் பழகவே நாட்கள் எடுத்துக் கொண்டாள். 

பரவாயில்லை… விபரம் புரிந்து பழகுகிறாள் என‌ நினைத்துக் கொண்டான். அவளது குழந்தைத் தனம் என்னவாயிற்று என யோசிக்க மறந்தான். ஆனால் இவனைப் பார்க்கும் பார்வையில் ஒரு தடுமாற்றம் அவளுக்குள் இருப்பது, புரிய… அத்தடுமாற்றம் பிடித்திருந்தது இவனுக்கும். அதனால் தான் தைரியமாகத் தன் காதலை வெளிப்படுத்த, அதற்கு அவளது எதிர்வினை இவன் காதலுக்கு செய்வினை வைத்து விட்டது. 

ஒன்றும் புரியாமல் தவிக்கிறான். இங்கே வருவதற்கு முன்தான்‌ ஏதோ நடந்திருக்க வேண்டும். அதனால் தான் அவ்வளவையும் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறார்கள். இவள் தந்தை எனக் கூறியபிறகு தான் அவனும் யோசித்துப் பார்க்கிறான்.‌ ஒருவேளை ரொம்ப நாள் கழித்துப் பிறந்த குழந்தையோ? அதனால் தான்‌ அன்று, “அவ்வளவு‌ செல்லமா?” எனக் கேட்டதற்கு, ‘ஆமா.” என்றாளா? 

அதனால் தான் தனியே எங்கேயும் விடாமல் பொத்தி வளர்த்தார்கள் போலும். அப்படியிருக்க, எவன் கையில் கொடுத்து இவள்‌ வாழ்க்கையை சீரழித்தார்கள் என நினைத்தவனுக்கு, தன் கைக்கு வந்ததை தவறவிட்ட தன் முட்டாள் தனத்தையும் நோகாமல் இல்லை. முதலில் என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்தான். 

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை

நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே…

 

 

 

error: Content is protected !!