போகாதே… தள்ளி போகாதே

போகாதே… தள்ளி போகாதே

அரசு மருத்துவமனைகள் எப்பொழுதும் பரப்பரப்பாகவே காணப்படும். ஆனால், இப்பொழுதெல்லாம் வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பு இருந்தாலும் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருந்தது. 

காரணம், மனதளவில் விலகி இருந்த மனித இனத்தை உடல் அளவிலும் பிரித்து வைத்து மனிதத்தை அதன் இனத்திற்கே கன்னத்தில் அறைந்தது போல் எடுத்து காட்டிய பெரும் நோய் தொற்று கொரோனா.
குடும்ப சூழல், பண பற்றாகுறை என குடும்பத்தை விட்டு பணத்தின் பின் ஓட துவங்கிய மனிதர்களை சற்று நிறுத்தி, குடும்பத்தை நோக்கி நடை பயணமாக ஓட வைத்த பெரும் பங்கு இந்த கொரோனாவை சாரும். ஆனால் இந்த சூழல் அனைவருக்கும் இன்பத்தை அளிக்காதது தான் நம் சமூகத்தின் சாபம்.
இப்படி பணத்தின் பின் ஓட துவங்கி, கிடைத்த விடுமுறையில் வீட்டிற்கும் செல்லாமல், அரசு சொன்ன பாதுகாப்பு வழிமுறைகளையும் பின் பற்றாமல் வேலியில் சென்ற வைரஸை வாய்க்குள் விட்டுக்கொண்டு இப்பொழுது மூச்சி விட சிரமமாக இருக்கிறது என்று மருத்துவரிடம் காய்ந்து கொண்டிருக்கிறான். அவன் பெங்களூரில் ஆர்கிடெக்ட் ஆக பணி புரியும் அஷ்வின்.
தமிழகத்தை சேர்ந்தவன். அந்த மாநிலத்திற்கே உறிய அத்தனை அழகையும் தன் புறத்தோற்றத்தில் அள்ளிக் கொண்டு பிறந்திருந்தான். ஆனால் அம்மாநிலத்திற்கு உறிய அன்பையும் அரவணைப்பையும் எப்பொழுமே சற்று அகற்றி வைத்தே பார்ப்பவன். அன்பான வார்த்தைகள் என்பது தான் அவன் அகராதியில் கெட்ட வார்த்தைகள்.
அன்னை அழைப்பேசியில் அழைத்து ‘கண்ணு’ என அழைக்கும் பொழுதே இவனுக்கு கன்னாபின்னாவென கோபம் வந்து வசை மாறி பொழிந்து விடுவான்.
ஒரே ஊரில் அடங்கியிருக்க சிரமப்பட்டுதான் ஆர்க்கிடெக்ட் இன்ஜினியரிங் முடித்து பெங்களூரில் பணியில் சேர்ந்திருந்தான். ஒரே இடத்தில் ஆறு மாதத்திற்கு மேல் அடங்காத இவனை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அடக்கி வைத்திருந்தது இந்த கொரோனா வைரஸ். அப்படியும் அடங்காமல் கிடைத்த தளர்வுகளில் எல்லாம் ஆடி திரிந்தவனை ஒரேடியாக அடைத்து வைத்திருந்தது. கொரோனா பாசிடிவ் எனும்‌ டெஸ்ட் ரிசல்ட்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பத்து நாட்கள் கடந்தும்,
இவனை விடாது விரட்டும் வைரஸின் மீது காட்ட முடியாத கோபத்தை எல்லாம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் மீதும் செவிலியர்கள் மீதும் காட்டிக் கொண்டிருந்தான்.
“என்ன சார் இல்லாத வைரஸை இருக்குன்னு புரளிய கெளப்பி மக்களை ஏமாத்திட்டு இருக்கீங்களா எனக்கு தான் ஒரு சிம்டம்ஸும் இல்லையே என்ன வெளியே விடலாமே எதுக்கு இப்படி அடைச்சு வெச்சு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க…?” என இவன் காட்டுக் கத்தலாக‌‌ கத்த இத்தனை நேரம் அவன் கத்திய அனைத்தையும் பொருமையாக நின்று கேட்டு கொண்ட மருத்துவர் அடுத்த பேஷண்ட்டை நோக்கி சென்று விட்டார்‌. இவன் வந்த பத்து நாட்களில் இவனின் கத்தல்கள் எல்லாம் அவருக்கு பழகி விட்டிருந்தது.
இன்று ஒரு நாள் இவனை சமாளித்தால் போதும் அடுத்த பதினைந்து நாட்களுக்கு அவர் ஐசோலேஷன் செய்ய படுவார். அதிலிருந்து அவர் வருவதற்குள் இவன் குணமாகி வீடு திரும்பி விட‌ வேண்டும் எனும் வேண்டுதலுடன் தான் அவர் விலகி சென்றார். பாவம் அந்த மனிதரை அத்தனைப் படுத்தி எடுத்திருந்தான் அஷ்வின்.
அந்த பாவப்பட்ட மருத்துவர்‌ அந்த பக்கம் நகர, இந்த பக்கம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் செவிலி பெண்ணொருத்தி.
அந்த நீல நிற கொரோனா பாதுகாப்பு உடையுடன் குட்டையான உருவம் அதனை பார்த்தவன் இத்தனை நேரம் மருத்துவரிடம் காய்ந்து கொண்டு இருந்தோம் என்பதை மறந்து, அந்த பெண்ணின் உருவத்தை வினோதமாக பார்த்தான்.குட்டையாக என்பதை விட பெண் மிகவும் குட்டியாக இருந்தது. 
இவன் அவளை பார்ப்பதை கவனித்த பெண் இவனைக் கண்டு தலை அசைத்தது. சினேகமாக சிரித்திருப்பாளோ? முழுவதும் மூடிய அந்த உடையில் கண்கள் கூட சரியாக வெளியே தெரியவில்லை. அந்த உடைக்குள் உள்ள உருவம் சிரித்தால் என்ன, அழுதால் கூட வெளியே உள்ளவர்களுக்கு தெரியப்போவதில்லை தானே…
இவனைப் பார்த்துக் கொண்டே மருத்துவரிடம் சென்றது அந்த பெண். அவர் அருகிலிருந்த வயதான நோயாளியைப் பார்த்து தலை அசைத்தாள். அந்த வயதானவரோ இவளின் கையை பிடித்து கொண்டார், அத்தனை நடுக்கம் அந்தக் கைகளில்.
கடந்த நாற்பத்தி எட்டு நாட்களாக அவர் அந்த மருத்துவமனையில் இருக்கிறார். நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்புடன் சேர்ந்து கொரோனாவும் தொற்றிக்கொள்ள பாவம் அந்த மனிதருக்கு கொடுக்கும், எந்த மருந்துகளும் பயனளிக்கவில்லை. அவர் உயிரை இழுத்துப் பிடிப்பதற்கே மருத்துவர்கள் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. ‘வயதாகி விட்டதே இனி இவர் இருந்து என்ன இல்லாமல் போனால்தான் என்ன’ என்ற எண்ணம் இன்றி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட மருத்துவர்களை இந்த வீணாப்போன‌ அரவேக்காடு அஷ்வின் போன்றவர்கள் மதித்து பேசாவிட்டாலும் மரியாதை இன்றி பேசாமல் இருந்தாலே, அவர்கள் அவர்களின் மருத்துவ கடமையை தொய்வின்றி ஆற்றுவார்கள். இவனைப் போன்ற சிலரால் அவர்கள் செய்யும் புனித தொழிலையே வெறுத்துப் போகும் நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.
அந்தப் பெரியவர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, இதோ இப்போது வரை அவளே இரண்டு முறை ஐசோலேஷன் செய்யப்பட்டு கடமையை ஆற்ற வந்துவிட்டாள். ஆனால் அவர் இன்னும் குணமாகி வீடு திரும்பவில்லை.
இவளுக்கே கவலையாக போயிற்று, அவர் அவரின் மனைவியை காண எத்தனை ஆசை கொண்டுள்ளார் என்று அவளுக்கு தெரியும். “கடைசியா ஆச்சும் அந்த மகராசி மொகத்தை பார்க்க விடுவீங்களா தாயீ.” என்று அவர் இவளின் கையைப்பிடித்து கதரும் போதெல்லாம் இவள் மொத்தமாக உடைந்து போவாள்.
ஆனாலும் அத்தனை வலிகளையும் தாண்டி அவரையும் தேற்றி, அவளும் தேறி வந்து விடுவாள். அஷ்வின் போன்ற அடங்காத பேய்களையும் என்ன செய்வாளோ தெரியாது ஆனால் இவளின் கட்டளைக்கு இணங்கி விடுவார்கள் அனைவரும். ஏதோ மாயம் இருக்கிறதோ அவளிடத்தில்!.
இப்பொழுது கூட அந்த மருத்துவர் சென்று அரை மணி நேரம் ஆகியும் அந்த முதியவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவரருகில் நின்றிருந்தாள். அவர் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தார். “ஏதோ புதிய மருந்து வந்திருக்கிறதாம் அதை உபயோகித்தால் நான் குணமாகி வீடு திரும்பி விடுவேன் இல்லையா.” என ஆனந்தமாக பேசிக்கொண்டிருந்தார்.
அஷ்வின் அந்த அறையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவரை பார்க்கிறான். அவர் மருத்துவர்களிடம் கூட, கேட்கும் கேள்விக்கு பதில் வழங்குவாரே தவிர பேசியதில்லை. ஏன் சிடுமூஞ்சி இவனே கூட அவரிடம் பேச முயற்சி செய்திருக்கிறான், அவர் பேசியது இல்லை. ‘இப்போது இவளிடம் மட்டும் என்ன இத்தனை நெறுக்கம்? உறவுக்கார பெண்ணாக இருக்கலாம்.’ என்று விட்டு விட்டான் அவன். மருத்துவருடன் மல்லுகட்டியதில் களைப்பாக இருந்திருக்கும் போலும் உறக்கத்திற்குச் சென்று விட்டான்.
அடுத்த நாள் காலை இவன் கண் விழிக்கும் போது, அந்த முதியவர் அருகில் நேற்று இவன் உறங்கும் போது பார்த்த அதே பொஷிசனில் பேசிக்கொண்டிருந்தது அதே குட்டிப்பெண்.
அதிர்ச்சியாக அவர்களையும், அறையில் இருந்த கடிகாரத்தையும் பார்த்தான். நல்லவேளையாக அது எலக்ட்ரிக் கடிகாரமாக இருக்கவும், இவனுக்கு இரவா? பகலா? என்ற சந்தேகம் இல்லை. இவன் உறங்கும் போது, பி.எம் இல் இருந்த நேரம் இப்போது ஏ.எம் இல் இருந்தது. 
‘டேய் இன்னுமாடா உங்க பஞ்சாயத்து முடியல!’ என இவன் அவர்களை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டே தன் காலை கடன்களை முடிக்க கழிவறை நோக்கி சென்று விட்டான்.
இவன் வெளியில் வரும்பொழுது அந்த குட்டி பெண் பெட்ஃபென்னை கையில் ஏந்தியபடி உள் நுழைந்தது. அந்த முதியவருக்கானது என்று புரிந்தது இவனுக்கு. அமைதியாக வந்து கண்களை மூடி படுத்து விட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் இவன் அருகில் அசைவு தெரியவே கண் திறந்து பார்த்தான். குட்டிப்பெண் அவனுக்கான உணவுடன் நின்றிருந்தது. அந்த பெரியவரை பார்த்தான் சோகமாக படுத்திருந்தார். உணவை கையில் வாங்கியவன், “அவருக்கு என்ன ஆச்சு நேத்தெல்லாம் நல்லாத்தான இருந்தாரு எதுவும் சீரியஸா?” என்று கேட்டான்.
அவள் இவனை அதிர்ந்து பார்த்தாள்! ‘தன்னிடம் தான் பேசுகிறானா என்பதை விட இத்தனை மென்மையாக இவன் பேசுவானா?’ என்றிருந்தது அவளுக்கு. நேற்று இருந்த டியூட்டி டாக்டர் அவனை காட்டான் என்றார். தாத்தா, “காண்டாமிருகம் தாயீ அவன் எந்நேரமும் காண்டாவே பேசறான். நீ அவன் கிட்ட எல்லாம் பேச்சுவார்த்தை வெச்சுக்காத.” என்றும் எச்சரித்திருந்தனர்.
கேள்வி கேட்டும் பதில் வராது தன் முகத்தையே பார்த்திருந்தவளை, இத்தனை நேரம் கால்ம் ஆக இருந்தவன் மீண்டும் காண்டாகி, “ஏய் உன்ன தானே கேக்குறேன் பதில் சொல்ல மாட்டியா.” என்று கத்தி விட, இவள் அசையாது நின்றிருந்தாள்.
இவன் கத்திய கத்தலில் கண்மூடிப் படுத்திருந்த தாத்தா, “ஏன் தம்பி அந்த புள்ளையால வாய் பேசமுடியாது. எதுக்கு அந்த புள்ள கிட்டயும் கத்திக்கிட்டு கெடக்க.” என்று கத்தவும், இப்போது இவன் அதிர்ச்சியாக அவள் முகத்தை பார்க்க அந்தத் தடுப்புக்கு அப்பால் இருந்த கண்கள் சுருங்கி இருந்தது. 
அவள் சோகமாக இருக்கிறாள் என இவன் கேள்வியாக அவள் முகத்தை காண, கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் உதட்டின் அருகே கொண்டு சென்று விரித்து காட்டினாள். இவன் மேலும் புரியாமல் பார்க்க அந்தப்புறம் இருந்து தாத்தா, “தம்பி சிரிப்பிங்கலாம்.” என்றார் புன்னகையுடன் அவளும் தலையசைத்து விட்டு நகர்ந்து விட்டாள். அந்த கண்கள் இப்போதும் சுருங்கி இருந்தது.
அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த பெரியவரிடம் பேச்சு கொடுத்தான். விஷயம் இதுதான் அந்த பெரியவருக்கான புதிய மருந்தை வாங்க மகன் பணம் இல்லை என்று சொல்லி விட்டான். அவரின் மனைவி தனியாக பணத்திற்கு சிரமப்படுகிறார். 
அவர் சொன்னதைக் கேட்டதும் இவனுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. இவனும் தான் தாய்க்கு பணம் அனுப்புவதோடு சரி அது அவருக்கு போதுமானதாக இருக்கிறதா?  நலமாக இருக்கிறாரா? என்று ஒருநாளும் கேட்டதில்லை. இப்போது ஏனோ அன்னையிடம் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால், மொபைலில் சார்ஜ் இல்லை.
இவன் இந்த யோசனையில் இருக்க மீண்டும் வந்தது அந்த குட்டிப்பெண். அந்த முதியவரை நோக்கி சென்றவளை, “ஓய் பொண்ணு” என்று அழைத்தான். ‘இப்போது என்ன?’ அதே சுருங்கிய கண்களுடன் இவனை நோக்கி வந்தாள். எதுவும் யோசிக்காது அவன் பர்ஸிலிருந்து பணத்தை தூக்கி கொடுத்திருந்தான் அஷ்வின். “இந்த பணத்தை வெச்சு அந்த தாத்தாவுக்கு மருந்து வாங்கி கொடுத்துடு” என்றவன், “இந்த புது மருந்து விஷயம் ஆச்சும் உண்மைதானா இல்லை இதுவும் ஏமாற்று வேலையா?” என கேட்டு அவளிடமிருந்து முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டு, வாயை மூடிவிட்டான்.
அந்தப் பெரியவருக்கான கடமையை முடித்துவிட்டு இவனிடம் வந்தவள், இவன் கையை பற்றிக்கொண்டு கண்களை ஆழ்ந்து பார்த்தாள் அந்தப் பார்வை, இவனை என்னவோ செய்தது. வாழ்க்கைச் சக்கரத்தில் அவசர அவசரமாக சுழன்று கொண்டிருப்பவன் அஷ்வின்.
இப்படி எல்லாம் ஒரு நாளும் அவன் யார் கண்களையும் பார்த்ததில்லை. அந்த கண்கள் அவனை ஏதோ செய்தது. பிறகு தன்னை மீட்டுக் கொண்டு, “என்ன?” என்றான் உறுமலான குரலில். அந்த கண்கள் சுருங்கி விரிந்தது. மீண்டும் இவன் கண்களையே அடித்து பார்த்தது. ‘அட என்னமா இப்படி எல்லாம் பாக்காத’ மனதிற்குள் புலம்பியவன், “என்ன வேணும் உனக்கு? எதுவும் கேட்கணுமா இல்ல மேல எதுவும் பணம் வேணுமா?” என்று கேட்கவும் அந்த கண்கள் காட்டிய பாவனை இவனுக்கு புரியவில்லை. 
“சரி எதுலயாச்சும் எழுதி காண்பி.” எனவும் வெளியில் ஓடியது குட்டிப்பெண். கையில் ஒரு காகிதத்துடன் திரும்பி வந்தது. இவன் அதை வாங்கி பார்க்க, ‘தாத்தாவுக்கு பணம் வழங்கியதற்கு நன்றி எனவும் தன்னிடமிருந்த பணத்திற்கு வேறு சில நோயாளிகளுக்கு மருந்து வாங்கி கொடுத்து விட்டதால் பணம் இல்லை. எனவும் இருந்திருந்தால் தாத்தாவிற்கு தானே மருந்து வாங்கி தந்து இருப்பேன்.’ எனவும் எழுதி இருந்தாள். “அப்போ உன் சாப்பாடு போன்ற செலவிற்கு உன் குடும்பத்துக்கு?” என இவன் கேட்கவும், அதே காகிதத்தில், ‘தனக்கு யாரும் இல்லை’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு அதே சுருங்கிய கண்களுடன் அவள் சென்று விட.
அவன் கையில் பிடித்திருந்த காகிதம் காற்றில் பறந்து வந்து அவன் கன்னத்தில் அறைந்தது. இந்த உலகில் அஷ்வின் போன்ற உள்ளாசிகள் பார்க்கவேண்டிய துன்பமான பக்கங்களும் இருக்கின்றன. இவர்களுக்குத்தான் அதனை நின்று பார்க்கவோ அல்லது திரும்பிப் பார்க்கவோ‌ நேரமில்லை. பார்த்தால் அது புரிவதும் இல்லை.
அதற்கு அடுத்து வந்த நாட்களில் எல்லாம் அந்த முதியவர் அஷ்வினுடன் நன்றாக பேசத் துவங்கியிருந்தார். இவன் வந்த புதிதில் இருந்தது போல் அல்லாமல் சற்று அமைதி காக்க பழகியிருந்தான். இப்போதெல்லாம் முதியவருடன் செலவழிப்பது போலவே அஷ்வின் உடனும் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருப்பாள். 
அந்தக் கண்கள் அவனிடம் ஆயிரம் கதை பேசும் இவனுக்குதான் அது புரியா மொழியானது. இப்படியே நாட்கள் கழிய அஷ்வின் குணமாகி வீடு திரும்பும் நாளும் வந்தது. அன்று அவள் கண்கள் கலங்கி குளமாகி இருந்தது.
எப்போதும் சுருங்கி இருக்கும் கண்களைப் பார்த்துப் பழகியவனுக்கு, அந்த கலங்கிய கண்களை பார்த்த பிறகு ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. அந்த கண்களை விட்டு பிரிய மனம் இல்லை. ‘அந்த கண்களை விட்டா அல்லது அந்த கண்ணிற்க்கு சொந்தக்காரியை விட்டா?’ என அவன் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டது. உடனே, “தாத்தாவ பார்த்துக்கோ பொண்ணே, அவரு வீட்டுக்குப் போய் அவர் பொண்டாட்டிய நான் பார்த்துக்குறேன்.” என்று கேலி பேசிவிட்டு கனத்த மனதுடன் நகர மறுத்த கால்களை சிரமப்பட்டு நகர்த்தி வந்துவிட்டான். மீண்டும் திரும்பி அந்த கண்களைப் பார்க்கும் தெம்பு அவனிடம் இல்லை.
எப்போதும் சுருங்கியே இருக்கும் அந்த கண்கள், அதனுள்ளே இவனை சுருட்டிக் கொண்டதை இதோ அவளை விட்டு வந்த நாட்களில் கண்டுகொண்டான். பாசமான பேச்சு என்றால் தான் இவனுக்கு கடுப்பு போல், பாசமான விழி வீச்சிற்கு ஏங்கி நிற்க்கிறான். 
இவன் வீடு வந்த சிறிது நாட்களிலேயே அந்த தாத்தாவும் வீடு வந்து சேர்ந்திருந்தார். அவரை எப்படியோ கரெக்ட் செய்து ஐசோலேஷன் முடிந்து டியூட்டிக்கு போகும் அவளை இன்று ஒரு நாள் விடுப்பு எடுக்க வைத்து, அவளை காண சர்ப்ரைஸாக மருத்துவமனை பின் வாசலில் காத்திருந்தான் அஷ்வின். 
அப்போது மருத்துவமனை வாயிலில் ஒரே பரபரப்பு, யாரையோ வெறும் கூடாக தூக்கி சென்று ஆம்புயுலன்சில் ஏற்றினர். மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் கூடி இருந்தனர், அருகில் இருந்தவரை விசாரித்தான். ‘ஏதோ செவிலி பெண்ணாம் ஐசோலேஷனில் இருந்தவள். திடீரென இறந்து விட்டாள்.
காரணம் தவறான டெஸ்ட் ரிசல்ட்.’ கடைசியாக அவர் சொன்னது, “பாவம் தம்பி வாய் பேச தெரியாத பொண்ணு.” அப்படியே சரிந்திருந்தான் அஷ்வின். அவள் கண்களை தவிர இப்பொழுது வரை ஒன்றும் தெரியாது. பாவம் இறுதியில் அந்த கண்களை கூட காண முடியாமல் போயிற்று. அந்த கோபத்தில் வண்டி பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த பூங்கொத்தை தூக்கி வீசி எறிந்தான். வெறி பிடித்தவன் போல அப்படி ஒரு கத்து கத்தினான்.
 
சில நொடிகளில் அதே பூங்கொத்து மண் கரையுடன் அவனை பார்த்து சிரித்தது. இவன் அதை பிடுங்க செல்ல ஒரு கரம் அதனை அழுத்தமாக பற்றி இருந்தது. இவன் கடுப்பாக நிமிர்ந்து பார்க்க அதே சுருங்கிய கண்களும் விரிந்த புன்னகையுமாக நின்றிருந்தாள் குட்டிப்பெண்.
பாய்ந்தெழுந்து அவளை அணைத்து இருந்தான். அத்தனை இறுகிய அணைப்பு ஒன்றும் இல்லை, அவனின் உடல் நடுக்கத்தை பார்த்து இவள் தான் அவனை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள். ஒரு சில நிமிடங்களில் இத்தனை நாட்கள் இவன் அன்னை பட்ட துன்பம், அந்த முதியவரின் மனைவி மீதான அன்பு, அந்த மனைவியின் போராட்டம், என அத்தனை வலிகளும் புரிந்திருந்தது. மெல்ல தன்னை சமன் படுத்தி கொண்டு அவள் முகத்தை பார்த்தான், அதே சுருங்கிய கண்கள் இதழ் விரிந்திருந்தது. ஆக அவள் சிரித்தாள் கண்கள் சுருங்கி விடுகிறது, பெண் மட்டுமல்ல கண்ணும் குட்டியாக தான் இருந்தது.
“ஹேய் பூச்சி கண்ணி உன் பேரென்ன?” இவள் அவனை முறைத்துப் பார்த்தாள். இப்போது அந்த கண்ணின் மொழி புரிந்தது இவனுக்கு. “உண்மையா பேர் தெரியாதுடா உன் தாத்தா கூட தாயீ… தாயீனு சொன்னாரே தவிர உன் பேர சொல்லல.” என்ன சோகமாக சொன்னான்.
தன் கைப்பையிலிருந்து அவளின் அடையாள அட்டையை எடுத்துக் காட்டியது பெண். நேம் என்ற இடத்தின் அருகில் அஷ்வினி என்ற அழகான பெயர் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.
“என் பேர் என்னனு தெரியுமா.” என கேட்டான் இவன் சிரிப்புடன். இவள் ‘தெரியும்’ என்பது போல் தலையை ஆட்ட, இப்பொழுது நிதானமாக அவளை நெருங்கி அணைத்துக்கொண்டான். ஆனால் இந்த முறை நெருக்கமாக மிகவும் இறுக்கமாக.
அவன் பேர் மட்டுமல்ல அவனையும் கூட அந்தப் குட்டிபெண் தன்னுள்ளே அடக்கி ஆள துவங்கியிருந்தது‌.
அஷ்வின் என்பவன் அஷ்வினிக்குள் அடங்கிப் போனான்.
அத்தனையும் அந்த மூன்றெழுத்தின் மாயம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!