மது பிரியன் 15
மது பிரியன் 15
மது பிரியன் 15
“நான் அஞ்சனா” என்றதற்குமேல், எதுவும் பேசாமல், எதிரே வந்து நின்ற, மதுராகிணியை மேலும், கீழுமாகப் பார்த்தபடியே மதுவை அளவிட்டாள் அஞ்சனா.
அஞ்சனா, மதுவின் தோற்றத்தை தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். தன்னைவிட, நிறத்திலும், அழகிலும் அத்தனையொன்றும் உயர்வாக மது இல்லை எனக் கணக்கிட்டவளுக்கு, அத்தனை ஆசுவாசம்.
விஜய்யின் மேல் தான் தொடுக்கப்போகும் உறவுப் போராட்டத்தில், கடினமான போட்டியாக இல்லாமல், தன் முன் நிற்கவே மதுவிற்கு அருகதையில்லை எனக் கணக்கிட்டிருந்தது அஞ்சனாவின் குறுகிய மனம்.
தனக்கான மதிப்பீட்டை தானாகவே உயர்த்திக் கணக்கிட்டிருந்தாள் அஞ்சனா. ஆனாலும், மதுவின் அதிகாரத் தோரணையும், அதற்குமுன் வந்து தன்னை அறிந்து சென்றவரின் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டும், மதுவிடம் அவரின் பணிவான பேச்சைக் கண்டும், பஞ்சவர்ணத்தை வேலைக்காக வைக்கப்பட்ட பெண்மணி எனுமளவில் யூகித்திருந்தாள் அஞ்சனா.
‘என்னைவிட இவ எந்த விதத்துல உசத்தினு, ஒத்தாசைக்காக வேலைக்கு ஆளெல்லாம் வச்சிருக்காரு’ எனத் தோன்றியிருந்தது அஞ்சனாவிற்கு.
பொறாமைத் தீ மனதிற்குள் எழந்திட, தான் அப்போது என்ன மாதிரியான நிலையில் இங்கு வாழ்ந்தோம். தற்போது என்ன நிலையில் வந்திருக்கிறோம் என்பதை நினைக்கத் தவறியிருந்தாள் அஞ்சனா.
தன்னை அளவிட்டவாறு அசட்டையாகப் பார்த்தபடி நின்றவளைக் கண்டதும், சட்டென மூண்ட கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட மது, “அந்தப் பேருல எனக்கு யாரையும் தெரியாதே. யாரு வேணும் உங்களுக்கு?”
“உனக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை. நான் எக்ஸ் மிசஸ். விஜயரூபன்” என மதுவிடம் கெத்தான குரலில் உரைத்தாள் அஞ்சனா.
அவளின் குரலில், மறைந்திருந்த உணர்வைக் கண்டுகொண்ட மதுவிற்கு அத்தனை வெறுப்பு அவளறியாமலேயே அஞ்சனாமீது மூண்டது.
‘மானங்கெட்டவ! தன்னை எக்ஸுனு இன்ரோ பண்றதையே, யூ என் செகரட்டரி ரேஞ்சுக்கு கெத்தா நினைச்சுக்கிட்டுச் சொல்லுதுன்னா, எப்டிப்பட்டவளா இருப்பா! கேடு கெட்டது!’ என நினைத்துக் கொண்டே, “அதுக்கு இப்ப என்ன?” என பதிலுக்குக் கேட்டாள் மது.
“அவரைப் பாக்கணும்” தனது வருகைக்கான காரணத்தை மதுவிடம் மிகவும் தைரியமாகவே உரைத்தாள் அஞ்சனா.
மதுராவின் ஆழ்மனதில், விஜய் தனக்கு மட்டுமே உரியவன் என்கிற நினைப்பு இருப்பதோடு, அவனை, யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்கும் எண்ணமில்லை.
குறிப்பாக, கணவன் மூலம் அஞ்சனாவைப் பற்றி அறிந்து கொண்டதிலிருந்தே, இயல்பைத் தொலைத்து, எப்போதும் இதுபற்றிய சிந்தனையிலேயே இருந்தாள் மது.
கண்ட கனவு வேறு அவ்வப்போது நினைவில் நின்று, நிம்மதியைக் கெடுத்திருக்க, அஞ்சனா வந்ததும், ஆடு அதுவாகவே வழி தெரியாமல் சிங்கத்தின் குகையில் அகப்பட்டுக் கொண்டதுபோலவும், தன்னை சிங்கமாகவும் எண்ணி தனது கர்ஜனையைத் துவங்கியிருந்தாள் மது.
தனக்குத் தெரிந்தாலும், இதுவரை தெரியாததுபோல இருந்த மது, எதிரே நின்றவளின் பேச்சில் தாங்க இயலாத கோபத்தோடு, “நீ எதுக்கு அவரைப் பாக்கணும்?” என சட்டென ஒருமைக்குத் தாவியவள்,
“இங்க எதுக்கு வந்திருக்க?” வேண்டா வெறுப்பாக வந்தவளைப் பார்த்துக் கேட்டாள் மது.
அஞ்சனாவைக் காட்டிலும், மது வயதில் மூத்தவளாக இருந்தாலும், அது தெரியாததால், “ஏய், மரியாதையாப் பேசு” என அஞ்சனா மதுவை அதட்டினாள்.
“உனக்கெல்லாம் என்ன மரியாதை. நீ பண்ணிட்டுப் போன காரியத்துக்கு, ஆரத்தி எடுத்தா அழைப்பாங்க” என்றதோடு விடாமல், “அக்கம் பக்கம் பாத்தா எங்களுக்குத்தான் அசிங்கம். அவரைப் பாக்கல்லாம் முடியாது. முதல்ல இங்க இருந்து கிளம்பு?” மது பட்டெனப் பேசிவிட்டு, அங்கு நிற்காமல்,
வீட்டிற்குள் திரும்பியவள், “இந்த மாதிரி யாரும் வந்தா, எங்கிட்ட கூப்பிட்டுச் சொல்லாம, நீங்களே பேசி அனுப்பியிருங்க” என பஞ்சவர்ணத்திடம் கூறிவிட்டு, கொதிநிலையில் இருந்த மனதைக் குளிர வைக்கும் வழி தெரியாமல் அறைக்குள் நுழைந்துவிட்டாள் மது.
பஞ்சவர்ணத்திற்கு விசயம் ஓரளவு பிடிபட்டாலும், வெளி வாயிலுக்கும், வீட்டிற்கும் இடையில் நின்ற அஞ்சனாவை வெளியே அகற்றும் வழி புரியாமல் தயங்கி அஞ்சனாவைப் பார்த்தார்.
“எங்க அவரு?” அஞ்சனாவும் அங்கிருந்து நகராமல் உரிமையோடு பஞ்சவர்ணத்திடம் விஜய்யைப் பற்றிக் கேட்க, பதில் கூறாமல், மௌனமாக இருந்து, மதுவின் விசுவாசி என நிரூபித்தார்.
உள்ளே சென்றவளுக்கு, அஞ்சனா பேசியது கேட்டதும், வில்லிலிருந்து புறப்பட்ட நாணாக வெளியில் விரைந்து வந்தவள், “எதுக்கு இப்ப அவரு?” என்றாள் மது.
“அது உனக்குத் தேவையில்லாத விசயம்” அஞ்சனா சட்டென முகத்திலடித்தாற்போல மதுவிடம் பேசியிருந்தாள்.
அஞ்சனாவின் பேச்சில் முன்பைக் காட்டிலும் இன்னும் அதிகமான சீற்றத்தோடு, “எங்க வந்து யாரைப்பத்தி கேக்கற? என்ன நெஞ்சழுத்தம் இருந்தா, எம்புருசனைப் பத்தி, என் வீட்டுலயே வந்து கேட்டதுமில்லாம, அது எனக்குத் தேவையில்லாத விசயங்கிற.
முதல்ல இந்த இடத்தை விட்டு வெளிய போறீயா, இல்லை போலீஸுக்குப் போகவா. பொறம்போக்கு கணக்கா வருசக்கணக்கா தெருக்காட்டுல திரிஞ்சிட்டு வந்து, திடீர்னு உறவு கொண்டாட வந்துட்டா, விட்டுருவோமா?” மிரட்டலனா தொனியில் பேசினாள் மது.
உள்ளுக்குள் உதறல் டன்னளவிற்கு இருந்தாலும், அதையெல்லாம் வெளிக்காட்டாது எதிராளியிடம் எகிறியிருந்தாள் மது.
மதுவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், “ரொம்ப ஆடாத. எனக்கும் போலீசுக்குப் போகத் தெரியும்” என்றபடியே முறைக்க,
“அவரு வேணானு போனவதான நீ. இப்பத்தான் அவரு வேற கல்யாணம் பண்ணி, நிம்மதியா இருக்காரு. அது உனக்குப் பொறுக்கலையா?
திரும்ப வந்து எதுக்கு, இருக்கற நிம்மதியக் கெடுக்கற? உனக்குன்னு ஒருத்தன் இருக்கான்னுதான சட்டை பண்ணாம, கிளம்பிப் போன. இப்ப மட்டும் இங்க எந்த மூஞ்சிய வச்சிட்டு வந்த” என மதுவும் விடாமல் பேசினாள்.
மது பேசியதைக் கேட்டதும், சட்டெனத் தோன்றிய, தான் இன்னும் முறையான விவாகரத்து எதுவும் விஜய்யிக்கு கொடுக்காத நிலையில், எப்படி இரண்டாவது திருமணம் செய்தான் என்கிற ரீதியில் யோசித்த அஞ்சனா, “ரொம்பப் பேசாத. ஃபர்ஸ்ட் வயிஃப் நான் இருக்கும்போது, டிவோர்ஸ் எதுவும் என்னைப் பண்ணாம, உன்னை ரெண்டாவதா கல்யாணம் பண்ணதே தப்பு.
அது செல்லவும் செய்யாது. இதுல இவுக போலீஸ்கிட்ட போறாங்களாமுல்ல. நாந்தான் அவருக்கு முதல்ல பொண்டாட்டி. நான் பொண்டாட்டின்னா, உன்னை வேறல்ல சொல்லுவாங்க” என கிண்டலாகப் பேசி, சிரித்தபடியே மதுவை திரும்பித் திரும்பி பார்த்தபடியே, அருகே உள்ள வீடுகளில் முளைத்த தலைகளின் ஆராய்ச்சிப் பார்வையை கண்ணுற்று அங்கிருந்து அகன்றாள் அஞ்சனா.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்றுமே அமைதியாக இருந்த வீட்டில் திடீரென்று யார் வந்து உரக்கப் பேசுவது என எட்டிப் பார்க்க, அஞ்சனா மிகவும் மாறியிருந்தமையால் அடையாளம் தெரியாமல் திணறியபடி, நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு சிலரும், சிலர் வீட்டில் உள்ளவர்களிடம் மதுவின் வீடு வரை சென்று வருவதாகக் கூறிவிட்டு, மதுராவின் வீட்டு வாயிலை நோக்கி வரத் துவங்கியிருந்தனர்.
அஞ்சனா வெளியேறிச் செல்ல வாயிலுக்குச் செல்லவும், அவளையே உறுத்துப் பார்த்தபடியே அருகே வசிப்பவர்கள் உள்ளே நுழையவும், மது வாயிலில் நின்றபடியே முகமெங்கும் கோபத்தில் சிவந்திருந்தவளை அணுகினர்.
அஞ்சனாவிற்கு அருகே வசித்தவர்களின் வருகை ஆச்சர்யமாக இருந்தது. தான் அங்கு வசித்தவரை யாரையும் அண்டவிடாமல் இருந்தது நினைவிற்கு வந்தது.
தனக்கு முற்றிலும் மாறாக, மதுரா இருப்பதையும் உணர்ந்தாள். உருவத்திலும், தோற்றத்திலும் மட்டுமல்லாது, எல்லாவற்றிலும் மாறாக இருக்கிறாள் என்பதையும் அஞ்சனாவிற்குப் புரிந்தது.
தாமதிக்காமல், அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தாள் அஞ்சனா. மதுவிற்கு அஞ்சனாவின் இறுதி வார்த்தைகள் பெரும் பாதிப்பைத் தந்திருந்தது.
வந்தவர்களிடம், மது தயங்கியபடி விசயத்தைப் பகிர, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு, ஆளுக்கொரு விசயமாக அஞ்சனா சென்றபோது நடந்ததைப் பற்றி விவாதிக்கத் துவங்கியிருந்தனர். மது அறியாத பல விசயங்கள் அப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்தது.
அஞ்சனா செய்த அக்கிரமங்கள். விஜய்யின் பொறுமை. மதுவின் பிடியில் சிக்கியது. அஞ்சனா வெளிநடப்பு. அஞ்சனாவின் வீட்டார் விஜய் மீது சுமத்திய பழி. அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு.
காவல்நிலையத்தில் புகார். ஊர்த்தலைவர்களின் முன்னிலையில் திருமண முறிவு. அஞ்சனாவின் பெற்றோர் அவளை நிராகரித்தது.
விஜய்யின் தந்தையின் மரணம். மதுவிடம் தோற்றுப்போய் மனதை, உடலை அதன்பிடியில் அடகு வைத்திருந்த கணவன். அதிலிருந்து மீட்க, விஜய்யின் போராட்டம்.
பாரியின் மெனக்கெடல்கள். பாரி கணவரின், ஒத்துழைப்பு. பாரியின் மகன்களைக் கொண்டும், பஞ்சவர்ணத்தின் மூலம், பழைய விஜய்யை முற்றிலுமாக மீட்டது.
பெண் தேடல். மதுராகிணியைத் திருமணம் செய்தது. இதுவரை தாங்கள் அறிந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல், மதுவிடம் பகிர்ந்தவர்கள், “அவ கெடக்கிறா. இன்னிக்கு அவளைப் பாத்ததும், எங்களுக்கு எல்லாம் அடையாளம் தெரியலை.
அதுனால தப்பிச்சிட்டா. இனி ஒரு தடவை இந்தப் பக்கம் வந்தா, அப்புறம் என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பாரு” என மதுராகிணிக்கு தெம்பான வார்த்தைகள் கூறிக் கொண்டிருக்கும்போது, விளையாடச் சென்ற வசீகரன் உள்ளே வந்தான்.
அதற்குமேல் மதுவும் பேச்சை வளர்க்கப் பிரியப்படாமல், “வசீ, கைகால் கழுவிட்டு வா. அத்தை உனக்கு டீ தரேன். வந்து ஹோம் வர்க் ஸ்டார்ட் பண்ணு” என
அத்தையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு ஆமோதித்தபடியே உள்ளே சென்றவன், தனது வேலைகளை முடித்தவிட்டு, வருவதற்குள் அனைவரும் விடைபெற, அதேநேரம் விஜய் அருகே உள்ளவர்களின் திடீர் வருகைக்கான காரணத்தை அறியாமல் யோசனையோடு உள்ளே நுழைந்தான்.
***
எப்போதும், தான் வந்ததும் தனது தேவைகளைக் கவனித்து, தன்னோடு இருப்பவள், இன்று அமைதியாக தன்னிடமிருந்து ஒதுங்கிப் போவதைக் கண்டவன், “என்ன திடீர்னு, அக்கம் பக்கத்தில இருந்து வந்துருந்தாங்க” உடையை மாற்றியபடியே மதுவிடம் கேட்டான் விஜய்.
பதில் கூறாமல், கணவன் உள்ளே வந்ததும் நீர் கொடுக்கும் வழக்கத்தைச் செய்தாள். கையில் எப்போதும் தருபவள், தம்ளரை அங்கிருந்த மேசையின் மீது வைத்துவிட்டுச் செல்ல, நகர்ந்தவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன், “என்ன மது. என்ன பிரச்சனை?” எனக் கேட்டான்.
“ஏன் பிரச்சனைனாதான் பக்கத்தில இருந்து வருவாங்களா?” என மது வினவ
“அப்டியில்ல” என இழுத்தவன், “எதுக்கு வந்திருந்தாங்கனு கேட்டா நீ முறைக்கிற. அதான்” விஜய் புன்முறுவலோடுதான் மதுவிடம் பேசினான்.
மது, இதுபோன்ற விஜய்யின் புன்முறுவலோடுடனான நிகழ்வின்போது, நாணத்தோடு கணவனைப் பார்த்தபடியே தனது பணிகளைக் கவனிப்பாள். ஆனால் இன்றோ இறுகிக் காணப்பட்டாள்.
தன்னையே சுற்றி வரும்வரை உணராத விசயங்கள், எதிர்பார்த்திடாத நிகழ்வுகள் அனைத்தும், தன்னைவிட்டு விலகும்போதுதான் உணரப்படும், எதிர்பார்ப்பிற்கு ஆட்படுவோம்.
விஜய்யும், அப்போது முதலே அதனை உணரத் துவங்கினான். ஆனால் விசயம் என்ன? எதனால் தன்னை கண்டு கொள்ளாமல் மது இருக்கிறாள் என்பதே புரியவில்லை.
விஜய்யின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல், வசீகரனுக்கு வீட்டுப் பாடம் செய்வதற்கு உதவினாள். பிறகு அடுக்களைப் பகுதிக்குச் சென்று பஞ்சவர்ணத்திடம் ஏதோ பேசிவிட்டு வந்தாள்.
யோசனையோடு, தொலைக்காட்சியின் முன் சென்றமர்ந்தவன், அதில் வரும் காட்சிகளில் மனம் லயிக்காமல், அவ்வப்போது அடுக்களையிலோ, வேறு பணிகளையோ செய்தபடித் திரிந்த மதுவையே மனம் நாட, அவளின் தவிர்ப்பு விஜய்யிற்குள் பெரும் துயரமான உணர்வை உண்டு செய்தது.
இரவு உணவிற்குப்பின் அறைக்குள் நுழைந்தவளையே, ஆராய்ச்சியோடு பார்த்திருந்தான் விஜய்.
அருகே படுக்கையில் வந்து படுத்தவள், முதுகு காட்டிப் படுக்க, விஜய் அவனாகவே மனைவியை பின்னோடு அணைத்துக் கொண்டு, “என்ன மது. எங்கிட்ட சொன்னாத்தான தெரியும். எதுவும் சொல்லாம, இப்படி உம்முனு இருந்தா, எப்டித் தெரியும்?”
“தலைக்கு மேல வெள்ளம் போயிருச்சு. போயி தள்ளிப் படுங்க” என்று கணவனை உதறிவிட்டு எழுந்து, படுக்கை விரிப்புகளை எடுத்து கீழே விரித்துப் படுத்தாள் மது.
தலையைத் தாங்கியபடி வலக்கை இருக்க, ஒரு பக்கமாகப் படுத்தபடியே மனைவியின் செயலை யோசனையோடு பார்த்தவனுக்கு, ஏதும் பெரிய பிரச்சனையா? என நினைத்தாலும், அது என்னவென்பது தெரியாததால், “மது. இப்பவும் சொல்றேன். நீ தெளிவாச் சொல்லு. அப்பத்தான் எனக்குத் தெரியும்” என்றிட
“அது எனக்கும் தெரியும். நீங்க பேசாம படுத்துத் தூங்குங்க. இல்லைனா, நான் எதாவது உங்களைக் கேக்கற மாதிரியோ, பேசற மாதிரியோ ஆகும். அதனால, நான் சரியாகறவரை என்னை இப்படியே விடுங்க” என போர்வையால் தலையை மூடிக் கொண்டாள்.
இருண்டு போனது விஜய்யின் உலகம். மாலை வேளைக்குப்பின் வந்த நேரம் நீண்டதாக உணர்ந்தான். இதுநாள்வரை இப்படியொரு நிலையை உணர்ந்திராதவனுக்குள், அத்தனை சங்கடம்.
மதுவின் பாராமுகம் மட்டுமல்லாது, தான் வரும்போது இருந்த அக்கம் பக்கத்தினரின் வருகைவேறு. ஏதோ பெரியதாக நடந்திருக்கறது. ஆனால் அது என்னவென்று தெரியாமல் என்பதைவிட, மது பேசினால் அனைத்தும் சீராகும் எனத் தோன்றியது விஜய்யிக்கு.
சிறுவனான வசீகரனிடம் கேட்கத் துணிந்தவன், பிறகு தயக்கமாக உணர்ந்தான். இது எத்தகைய விசயம் என்று தெரியாமல், சிறுவனிடம் சென்று கேட்பது அபத்தமாகத் தோன்றியது. அதனால் மது அறைக்குள் வரும்வரை பொறுமை காத்திருந்தான் விஜய்.
அறைக்குள் நுழைந்தும் வீம்பாக தன்னிடமிருந்து விலகியவளைக் கண்டதும், ஏதோ தனது கையைவிட்டுப் போன உணர்வு விஜய்யிக்கு. விசயம் என்னவென்று தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மதுவின் நடவடிக்கை அவனுக்குள் பெரும் தொய்வை உண்டு செய்திருந்தது.
அவனால் மதுவின் விலகலை ஏற்றுக் கொள்ள இயலாமல், அவனே இறங்கி வர எண்ணி, உடனே படுக்கையைவிட்டு எழுந்து, கீழே படுத்திருந்தவளை அணுகினான்.
மனைவி எதிர்பாரா தருணத்தில் அலேக்காக தனது இரு கரங்களிலும் தூக்கிட, தனது நிலை புரிந்து சிறிது நேரம் கழித்தே சுதாரித்தவள், கணவனின் கைகளிலிருந்து இறங்க முற்பட, இறுக தன்னோடு அணைத்தபடியே மதுவைப் படுக்கையில் கிடத்தியவன், “உன்னை தொந்திரவு பண்ணலை. எதுவும் பேசலை. ஆனா, நீ கீழே படுக்காம, எங்கூட எப்பவும்போல பக்கத்திலயே படு” என அதன்பிறகு எந்தப் பேச்சையும் தொடராது அருகே வந்து படுத்தான் விஜய்.
விடியல்வரை உறங்கா இரவாகவே இருவருக்கும் சென்றது.
ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. விடிந்ததும், வெளியே செல்லப் போனவளைத் தடுத்து, தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன், “இவ்ளோ நேரம் உன் பேச்சை மதிச்சு, நான் பேசலை. ஆனா, இப்போ என்ன விசயம்னு சொல்லிட்டு வெளியே போ மது” திடமாக உரைத்தான்.
விஜய்யின் அணைப்பில் கட்டுண்டு இருந்தவளுக்கு, அவளையும் மீறி கணவனது செயலிலும், முந்தைய நாளின் தாக்கத்திலும், கண்ணீர் பெருகிட, அவனது மார்பில் முகம் புதைத்திருந்தமையால், அவனது நெஞ்சைத் தொட்டது அவளது கண்ணீரின் சூடான ஈரம்.
மனைவியின் நிலையை உணர்ந்தவன், பதறினாலும் மதுவை அணைப்பிலிருந்து விடாமல், “எதுனாலும் எங்கிட்டச் சொல்லுடா” மெதுவாகவே, மனைவியின் உச்சந்தலையில் முத்தமிட்டபடி அணைப்பை விலக்காமலேயே கேட்டான்.
நடந்த விசயங்களை மெதுவாக, கணவனது அணைப்பிலிருந்தபடியே, கூறத் துவங்கியவள், தேம்பலோடு அனைத்தையும் பேசி முடித்திருந்தாள்.
விஜய் என்ன செய்தான்?
***